வியாழன், 30 ஜூன், 2011

Chinna chinna...

பட்டாணிக்குருவி ஞாபகங்கள்

சொல்லித் தந்ததை விடவும், பள்ளிக்கூடம், சொல்லித் தராதவை அதிகம். தூக்கணாங்குருவிகள் படபடக்கும் மரங்களடர்ந்த பள்ளிக்கு காலையில் சீக்கிரமே வருவது, பறவைகளின் மொழி படிக்க. ஸ்டாண்டில் சைக்கிளை நிறுத்திவிட்டு வந்தால் பெரிய அரச மரம். அதன் அருகிலேயே வாதமடக்கி மரங்களும் வேப்ப மரங்களும். கீழே சிமெண்ட் பெஞ்ச்கள். நிழல்கள் அடர்ந்திருக்கும் இந்த மரங்களில் படபடக்கும் பறவைகளின் பேச்சுக் கேட்டால் பரவசமாக இருக்கும். என்னுடன் வரும் பச்சைமுத்துவுக்கு பறவைகள் மீது பிரியம் அதிகம். குருவிகளுக்குண்டான சிறு சிறு வித்தியாசங்களும் அதன் பெயர்களும் அவனுக்கு அத்துப்படியாகி இருந்தது.


‘லேசா மஞ்சளும் செவப்புமா கம்பில இருக்கு பாரு ஒரு குருவி’ என்பேன். ‘அது பட்டாணிக்குருவிடா’ என்பான். அவனுடன் எனக்கும் பறவைகளின் மீதான ஆர்வம் அதிகமானது. ஆனால் எனக்கு கொக்கு மற்றும் கருவாலி, கோழி போன்ற வகையறாக்களின் மீது அதிகமானது ஆர்வம். இதையடுத்து, பள்ளிக்கூடத்துக்கு அவனுக்காக காலையில் சீக்கிரமும் மாலையில் ஆற்றுபாலத் தோப்பருகே ரிட்டர்ன் ஆகும் கொக்குக்களைப் பார்க்க, எனக்காக காத்திருப்பது எனவும் முடிவாகி இருந்தது.

பள்ளியில் பெண்களுக்கான யூனிபார்ம் இளஞ்சிவப்பு தாவணி மற்றும் ஊதா பாவாடை, வெள்ளை சட்டை. இதில் ஏதோ ஒரு காரணத்தை வைத்து பச்சைமுத்துவால் பள்ளி மாணவிகளுக்கு சூட்டப்பட்டப் பெயர், பட்டாணிக்குருவிகள். பத்தாம் வகுப்பில் பெயிலானதால் பச்சைமுத்துவின் நட்பு அத்தோடு முடிந்துவிட்டது. ஆனால், அவனால் உருவாக்கி வைத்திருந்த ‘பட்டாணிக்குருவிகள்’ மட்டும் மனதில் பதிந்துவிட்டது.

ப்ளஸ் ஒன் வகுப்பில் நட்புகள் அதிகம் இல்லாமல் அனாதரவாக இருந்த வேளையில் வந்து சேர்ந்தான் கணபதி. வலது ஓரம் பெண்களுக்கான கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்த அந்த உயரமான பட்டாணிக்குருவிகள், சதா ஏதோ பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டுமாக இருந்ததை அடுத்து, கணபதி அவர்களில் ஒருத்தியை தோழியாக்கி கொண்டான். (அப்போது மாணவிகளிடம் பேசுவது மகா தப்பு). இவனைப்போலவே, வழு வழு பேண்ட்டும் பிரவுண் கலர் ஷூவும் போட்டு வரும் மாரியப்பனும், மூன்றாவது பெஞ்சில் இருந்த உமா மகேஸ்வரியுடன் நட்பை வளர்த்தான். இவன்களுக்கு ஏற்பட்ட பெண்கள் மீதான் நட்புக்குப் பிறகு நமக்கொரு தோழி கிடைக்க மட்டாளா என்கிற ஆசை அலைபாயத் தொடங்கியது. வலப்பக்கம் முதல் பெஞ்சில் இருந்து கடைசி பெஞ்ச் வரை தேடித் தேடி தினமும் பார்த்துக் கொண்டிருந்ததில் இரண்டு மூன்று, ...த்தூகளும், ‘மூஞ்சைப் பாரு, ஓ...ன்னு இங்கயே பாத்துக்கிட்டு’ என்கிற வசவுகளும் வந்து சேர்ந்ததையடுத்து நமக்கும் பெண்களுக்குமான நட்பு, எந்த ராகு, கேது கட்டத்துக்குள்ளும் வரவில்லை என முடிவு செய்தேன்.


ஒரு திங்கட்கிழமை, காலை வாய்க்காலுக்கு குளிக்கப் போகும்போது, ராசம்மா சித்தி, ‘ஏல இங்க வா’ என்று அழைத்தாள். அவள் சத்தம் வந்த திசையில் பார்த்தால், அது என்னுடன் படிக்கும் பகவதியின் வீடு. போனேன்.

‘இந்தா காபி குடி’.

ஐயமார் வீட்டு பில்டர் காபி. சூப்பராக இருந்தது. ‘சித்தி, இன்னும் கொஞ்சம் இருக்கா?’,

‘இந்தா..’

சித்தி, அந்த வீட்டில் வேலை பார்த்தாள். காலையில் பாத்திரங்கள் கழுவுவது மற்றும் துணிகள் துவைப்பது அவள் வேலையாக இருந்தது.

நான் காபி குடித்துக்கொண்டிருக்கும்போது பகவதி, முகத்தை துடைத்துக்கொண்டே வெளியே வந்தாள். என்னை பார்த்ததும் திரும்பிக்கொண்டாள். நான் எனக்கொரு தோழி கிடைத்துவிட்டாள் என்கிற ரீதியில் சந்தோஷமாக வந்தேன். தினமும் காலையில் இங்கு காபி குடிப்பது வழக்கமாகி விட்டது. சில நேரங்களில் பகவதியை பார்க்க நேரிடலாம். சில நேரங்களில் இல்லை.

இந்த நட்பின் மூலமாக, பள்ளியில் வைத்து அவளிடம் ஏதாவது சாக்கில் பேசலாம் என்று சென்றால், டமாரென்று முகத்தை திருப்பி, அருகில் இப்படியொரு உருவம் நிற்பதை கண்டுகொள்ளாமலேயே சென்றுவிடுவாள். இதையடுத்து என நட்பு டமாரானது. இதற்குள் கணபதி மற்றும் இன்ன பிற சக தோழர்கள் பள்ளிக்கூடத்தில் காதலர்களாக அறியப்பட்டார்கள். அவர்களுக்கான மரியாதை சக மாணவ, மாணவிகளிடத்தில் அதிகமாகி இருந்தது. இந்த கவலையில், நான் பாடத்திலும் கவனத்தை செலுத்தாமல் இருந்தேன்.

இந்த நிலையில் சித்தியிடம் இருந்து வந்தது அந்த குண்டு.


‘ஏல பள்ளிக்கூடத்துல பொம்பளை பிள்ளைலுவோட்ட ரொம்ப சொரணாவிட்டே இருக்கியாம்... நம்ம கெடக்க கெடப்புக்கு அதெல்லாம் ஆவாதய்யா... ஒழுங்கா படிக்க மட்டும் செய்யி’ என்றாள்.

சித்தியின் இந்தப் புகாரை என்னால் தாங்கிகொள்ள முடியவில்லை. அவள் சொன்ன மாதிரி எந்த தவறும் நடக்கவில்லை என்றாலும், ‘நமக்கு மட்டும் ஏண்டா இப்படியெல்லாம் சோதனை’ என்று நொந்துகொண்டு, வகுப்பில் இடத்தை மாற்றிக்கொண்டேன். இந்த புகாருக்குப் பிறகு காலையில் காபி குடிக்க செல்வது ரத்தாகியிருந்தது.

இத்தனைக்கு பிறகும், வகுப்பில் எந்த மாணவியாவது, என்னை பார்க்க நேர்ந்தால் அது ஏதோ சவலப்பிள்ளையை பார்ப்பது போலவே தெரிந்தது.

கல்லூரிக்குப் போனதிலிருந்து நிலைமை மாறியிருந்தது. வேறு ஊர். ஒரே பஸ், முன் பின் அறிமுகமில்லாத, புதுமுகங்கள் என தோழிகளிடம் காரணமே இல்லாமல் தொடர்ந்தது நட்பு. பிறகு, பிழைப்புக்கு வெவ்வேறு இடம் பறந்து, கல்யாணம் ஆகி, குழந்தைகள் பிறந்து, 20 வருடத்துக்குப் பிறகு ஒரு விழாவுக்கு ஊருக்குப் போனால்... அதே பட்டாணிக்குருவிகள்!

நான்கு பேர் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் என்னுடன் படித்த எல்லாரது முக ஜாடையும் தெரிகிறது. இரண்டு பேர் குண்டாகியிருந்தார்கள். ஒருத்தி மட்டும் அடையாளம் கண்டுகொண்டு கேட்டாள்.

‘ஹலோ... எப்படியிருக்கீங்க? எங்களை தெரியுதா?’

‘தெரியுதுங்க... நல்லாயிருக்கீங்களா?’-விசாரிப்புகளுக்குப் பிறகு பகவதியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் இன்னொருத்தி, ‘ஏண்டி இவனை தெரியலை. கவிதை, கதைன்னு எழுதிட்டிருப்பானே...’

‘ஓ... எங்க வீட்டுல வேலை செய்தாளே ராசம்மா... அவளோட அக்கா மகன்தானே...’ என்ற பகவதி என்னை திரும்பி பார்த்தாள்.

எனக்கு சந்திக்காமலேயே இருந்திருக்கலாம் போலிருந்தது.