புதன், 22 ஜூன், 2011

Kanmani gunasekaran.

முந்திரிக்காட்டின் பாடல் : கண்மணி குணசேகரன்






சென்னை ஓவியக் கல்லூரி முதல்வராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓவியக் கலைஞர் சந்ரூ அற்புதமான ஆசான். அவருடனான ஒவ்வொரு சந்திப்பிலும் புதிதாக எதையேனும் கற்றே வந்திருக்கிறேன். நேர்மறையாக, வெளிப்பார்வைக்கு அழகான நாயகர்காலச் சிற்பங்களைவிட முற்காலச் சோழர்கள், பல்லவர்களின் கலைப் படைப்புகள் எவ்வாறு கலையழகும், கலையமைதியும் கூடிவரப் பெற்றிருக்கின்றன என்பதை விளக்குவதானாலும், அல்லது எதிர்மறையாக நவீன ஓவியத்தில் இரண்டரக் கலந்திருக்கும் போலிகளைச் சாடி, நையாண்டிச் செய்வதானாலும், அல்லது ஓவியத்தின் தொழில் நுட்பக் கூறுகளைச் சொல்லித் தருவதானாலும் முற்றிலும் செயல்முறையாய் வரைந்தே விளக்கி விடுவார். தாளில் சரசரவென வந்திறங்கும் கோடுகளையும், பரவும் வண்ணங்களையும் கவனிப்பது ஒரு அற்புதமான அனுபவம்!



ஒருமுறை நாற்று நடும் பெண்களைப் பற்றிய ஒரு புகழ் பெற்ற ஓவியத்தைக் காட்டி, ”இதை வரைஞ்ச ஆளைப் பற்றி என்னப்பா நினைக்கிறே?” என்றார். ஓவியத்தைக் கவனித்தேன். வண்ணங்கள் இசைவாயும், கோடுகள் அழகாகவும் இருந்ததன. “எனக்குப் பிடித்திருக்கிறது” என்றேன். ஏனென அவர் வினவியபோது எனக்குத் தோன்றிய காரணங்களைச் சொன்னேன். சிரித்துவிட்டுச் சொன்னார், “யேயப்பா! அழகு, இசைவு, எந்தப் பாணி ஓவியம், எல்லாம் பெரிய வார்த்தைகளா இருக்கேப்பா! போகட்டும் புத்தகத்தில இந்த விமர்சனப் பய என்னவெல்லாம் பினாத்தி இருக்கான் பாரு! எல்லாம் கெடக்கட்டும்ல, கிராமத்தான் இல்லையாப்பா நீ! சரி கெடக்கட்டும், நாத்து நடும்போது அவங்க கால்களைக் கவனிச்சிருக்கியாப்பா நீயி?” ஆமாம் எனத் தலையசைத்தேன். “எப்படி? ”என்றார். கொஞ்சம் பதற்றமாகி, “புரியலை ஸார்!” என்றேன். ”நடவுக்குப் போற பொம்பளைங்க சேலை முட்டிக்கு மேல இருக்கும் ஏன் தெரியுமா? கால்கள் முழங்கால் வரை சேத்தில முங்கி இருக்குமப்பா! கறைபடியாத, அக்குள்ள வேர்த்து ஜாக்கெட்டு நனைஞ்சி, முள்ளு கெளயில மாட்டிச் சேலைக் கிழியாத, எண்ணை இல்லாம காய்ஞ்ச தலையோட, இல்லாத வயக்காட்டுப், பொண்ணையேப் பார்க்க முடியாது. வான்காவோட ’உருளைக் கிழங்கு தின்பவர்கள்’ படத்தைப் பார்த்திருக்கியாப்பா, அவங்க நிஜமான மனிஷங்க. இது கட் அவுட்டு. பெரிய ஓவியர்ன்னா ஏழைங்கள வரையறதுதானப்பா பேஷன்! அதான் வரைஞ்சிருக்கார்! ஆனா என்ன பண்ணார்? தனக்குத் தெரிஞ்ச பொண்ணுங்களை, தான் வயல்லுன்னு நெனைச்சிக்கிட்டதில வரிசையா நிக்க வைச்சிட்டாரு!- பெரிய்ய ஓவியரு இல்ல அதான் பொலிவான பொண்ணுங்க புது சேலையில, கால் கொலுசோட பார்க் மாதிரி இடத்தில குனிஞ்சிகிட்டிருக்கு, நாத்து நடனும் இல்ல... அதான் கையில பாரு நாத்துக் கட்டு திணிச்சிருக்கு!” நான் குறுக்கிட்டு ”ஆனா படம் செய்நேர்த்தியோட நளினமாத்தானே இருக்குது” என்றேன் குழப்பத்தோடு. “பொணத்துக்கு கல்யாணப் பொண்ணு போல அலங்காரம் பண்ணினா ரமேஷு கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்றாம்பா ஹரி! என்னான்னு கேளேன்!” என்றார்.



வேனிற்கால சிறப்பிதழாக வந்துள்ள கல்குதிரையில் ஜப்பானிய எழுத்தாளரும், நாவலாசிரியருமான ஹாருகி முரகாமியின் (Haruki Murakami) பேட்டியில் வாசித்த விஷயம் என்னைக் கவர்ந்தது. ஆலன் ஸில்லிடொவின் (Alan Silitoe) “The Loneliness of the Long distance runner” பற்றிக் கருத்து கேட்கிறார் பேட்டியாளர். அதற்கு அவர் அந்தப் படைப்புத் தனக்குப் பிடிக்கவில்லை என்றும், மிகவும் சலிப்பாக இருந்ததென்றும் கூறுகிறார். அதற்கான காரணமாக அவர் கூறியது, “ஸில்லிடொ ஓட்டக்காரர் அல்ல என்பதை நீங்கள் உடனே அறிந்து கொள்ளலாம்.” என்பதுதான். ஹாருகி முரகாமி ஒரு மாரத்தான் ஓட்டப் பந்தய வீரர் என்பதை நாம் இச் சமயத்தில் நினைவிற் கொள்ள வேண்டும்.!



எண்பதுகளின் இறுதியில் என்னுடைய நண்பன் உதயகுமார் ஒரு சிறுகதை எழுதியிருந்தான். ஒரு தோழியின் தந்தைக்கு திடீரென இதய வலி வந்து அவரை மருத்துவ மனையில் சேர்ப்பதைக் குறித்த கதை. முற்றிலும் தான் பார்த்த புற சித்தரிப்புகளைக் கொண்டே அக் கதையை நிகழ்த்தியிருந்தான். ஆசிரியர் குறுக்கீடு எங்குமே நிகழவில்லை. நுணுக்கமாக கதாபாத்திரங்களின் செயல்கள், பேச்சுகள் ஆகியவற்றைப் பதிவு செய்திருந்தான். ”பெரிய அபாயம் தவிர்க்கப் பட்டுள்ளது, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என மருத்துவர் கூற ஆசுவாசம் பெற்று நாயகனும், அவனது தோழியும் வெளியே வருவதாகக் கதையை முடித்திருந்தான். அகவுலக சித்தரிப்புகளின்றியே நாயகியின் மன நெருக்கடியும், பின் அடையும் ஆசுவாசமும் சொல்லப்பட்டிருந்த விதம் புதுமையாக இருந்தது. அக்கதை குமுதத்தின் சிறுகதைக்கான போட்டியில் பரிசு பெற்றபோது, இதே அம்சத்தைச் சிலாகித்திருந்தார்கள்.



தமிழில் இத்தகைய இலக்கியப் படைப்புகளை யதார்த்த வகைப் படைப்புகள் என்றோ அல்லது இயல்புவாதப் படைப்புகள் என்றோ வகைப்படுத்துகின்றனர். ஆசிரியர் புறச் சித்தரிப்புகள் மற்றும் பாத்திரங்களின் பேச்சு மொழியின் ஊடாக கதையை நகர்த்துவதையும், இலக்கிய ஆழங்களையும், கலாபூர்வமான வெற்றிகளையும் கண்டடைகிறார். மிகக் குறைந்த அளவிலேயே ஆசிரியரின் குறுக்கீடு நிகழ்கிறது. ஆசிரியர் எந்த நிலையிலும் சார்பு நிலை எடுப்பதில்லை. கதாபாத்திரங்களின் வாழ்வினை இயக்க ஆளில்லாமல், தானே இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படக் கேமராவைப்போல புனைவு பதியப்படுகிறது.



ஜி. நாகராஜனின் இலக்கியச் செயல்பாடு இத்தகைய வகைப்பாட்டின் கலாபூர்வமான வெற்றிகள் எனலாம். கண்மணி குணசேகரன் ஒரு இயல்புவாதப் படைப்பாளி. அவரது பிரக்ஞைபூர்வமான தேர்வு அதை உறுதிபடுத்துகிறது. சாதாரணமாகச் சொல்ல, சிறிய அளவிலான அழகுகளைக்கூட முற்றிலும் தவிர்த்து, வட்டார வழக்குடன் கூடிய மொழி நடையை உருவாக்குகிறார். அரிதாக குறுக்கிடும் ஆசிரியரின் சித்தரிப்புகளிலும் வட்டார மொழியையேக் கையாள்கிறார். தலித்திய நிலைப்பாடோ, பெண்ணிய நிலைப்பாடோ, முற்போக்கு இலக்கியமோ சார்பு, சார்புகளற்று தம் மக்களின் வாழ்வினை சிரத்தையுடன் பதிவு செய்கிறது கண்மணியின் கவனிப்பு.



அசலான எந்த மண்சார்ந்த இலக்கியப் படைப்பும், அந்த மக்களின் மூச்சுக்காற்றை எந்த அளவில் படைப்பாளி சுவாசித்திருக்கிறான், அந்த மக்களின் வாழ்வையும், சாவையும் எந்த வழிகளில் வாழ்ந்து பார்த்திருக்கிறான், அவர்களாக அவன் எவ்வளவு உருமாறி இருக்கிறான் என்பதைப் பொறுத்தது. அது கரும்புக் கொல்லையாகட்டும், முந்திரிக் காடாகட்டும், தேயிலைத்தோட்டமாகட்டும், அல்லது ரப்பர் மரக் காடாகட்டும், ஒவ்வொரு தோட்டப்பூவைப் போல ஒவ்வொரு மண்ணுக்குமான வாசம் போல ஒவ்வொரு மண்பூசிய மனிதருக்குமான வீச்சத்தை ஒரு கலைஞனால் மட்டுமே பதியவைக்க இயலும். முந்திரியும், பலாப்பழமும் விளையும் கடலூர், வடலூர், விழுப்புரம், நெய்வேலி, பண்ருட்டி, விருதாச்சலம் சார்ந்த நடு நாடு எனப்படும் தென்னார்க்காடு விளைவிக்கும் மனிதர்களின் மீதான அக்கறை கொண்ட படைப்புகளைக் கண்மணி குணசேகரன் படைக்கிறார். நுண்மையான சித்தரிப்பும், இயல்பான கதாப்பாத்திரங்களும், சாதாரணமான நடு நாட்டு வட்டார வழக்கிலான பேச்சு மொழியும், புறவுலகச் சித்தரிப்புகளையும் கொண்டவை இவரது கதையுலகு.



எழுத்தாளர் கண்மணி குணசேகரனின் இயர்பெயர் குணசேகரன். போக்குவரத்து துறையில் தொழிலாளராக உள்ளார். விருதாச்சலத்திலுள்ள மணக்கொல்லையில் வசிக்கிறார். யதார்த்தவாத படைப்புகளுக்குச் சொந்தக்காரர். உயிர்த்தண்ணீர் இவரது முதல் சிறுகதை தொகுதி. இதை கவிதாசரண் பதிப்பகம் வெளியிட்டது.



தமிழினி பதிப்பக வெளியீடுகளாக இவரது நூல்கள் வந்துள்ளன. ஒரு அடித்தள சமூகப்பெண்ணின் வாழ்க்கையை சித்தரிக்கும் “அஞ்சலை” “கோரை” இவரது முக்கியமான நாவல்கள். இவர் ’நடு நாட்டுச் சொல்லகராதி’ என்ற கடலூர் வட்டார வழக்கு அகராதி ஒன்றையும் தயாரித்திருக்கிறார். சுந்தர ராமசாமி நினைவாக வழங்கப்படும் நெய்தல் விருதினைப் பெற்றுள்ளார்.



பூரணி பொற்கலை, ஆதண்டார் கோயில் குதிரை, உயிர்த்தண்ணீர், வெள்ளெருக்கு, ஆகியவை இவரது சிறுகதைத் தொகுப்புகள்.



அஞ்சலை , கோரை , நெடுஞ்சாலை ஆகியவை இவரது நாவல்கள்.



தலைமுறைக் கோபம், காட்டின் பாடல் ஆகியன கவிதை நூல்கள்