செவ்வாய், 26 ஜூலை, 2011

Manam kotthi paravai...!

மனக்கதவைத் தட்டும் மரங்கொத்திகள்


எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா





ஒரிய மொழி குழந்தை இலக்கியத்தில்,மரங்கொத்திப் பறவைகளின் பங்கீடு மிகுந்திருக்கும். கதாநாயகனாக, நாயகியாக, தோழியாக, தூது செல்வோனாக, ஆபத்துக் காலத்தில் திடீரென்று தோன்றி காப்பாற்றும் தேவ தூதனாக, பாப்பாவின் கண்ணீரைத் துடைக்கும் சக தோழனாக என விதவிதமான வேடங்களை அணிந்து நம்மை மகிழ்விக்கும்.பொதுவாக குழந்தைக் கதைகளை நான் பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரிக் கதவுகளைத் தட்டும் போது, விடாமல் படித்திருக்கிறேன். இப்போதும் கூட அவ்வப்போது படிப்பதுண்டு. தன்னந்தனியாக ஒருவயல் வெளியில்,ஓடைக்கரையில், தோப்பில் என இயற்கைசார் இடங்களில் காலை மாலை நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது கரீக் என சப்தமிட்டு ஓடும் ஒரு பறவை இதுவாகவோ அல்லது மீன்கொத்தியாகவோ இருக்கும். கதவைத் தட்டும் ஓசை, மரங்களை செதுக்கும் ஓசை, பாறையில் சிற்பம் செதுக்கும் போது உருவாகும் உளியின் ஓசை என பல ரூபங்களை ,இது தன் அலகால் மரங்களைக் கொத்தும்போதும் ஏற்படும் ஓசையை நம் மனம் ஒப்பிடுகிறது. ஒரு முறை கும்பகோணம் செல்லும்போது ஒரு இடத்தில் சிற்பக் கலைக்கூடத்திற்கு அருகில் சில மணி நேரம் தங்க நேர்ந்தது. அது மரச்சிற்பக் கூடம். அங்கு ஒரு கலைஞன் கதவில் சிற்பங்களைச் செதுக்கியவாறு இருந்தான். அங்கு எழும்பிய ஒலி ,மரங்கொத்திப் பறவைகளை நினைவுபடுத்தியது. அவனும் அழகான ஒரு சிலையைச் செதுக்கிய வண்ணம் இருந்தான்.......



ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தூந்திரப் பிரதேசம் தவிர்த்து எங்கும் வாழும் ஒரு பறவையினமாக அடையாளம் காணப்படுகிறது. மரம் மட்டுமல்லாது, கள்ளி, புதர், புல், பாறை இடுக்கு என அனைத்தையும் தனது வசிப்பிடமாக மாற்றிக் கொள்ளும். இதனாலேயே அடர்ந்த காடுகளில் மட்டுமல்லாது, பாலைவனத்தில் கூட பார்க்க முடியும். 250 க்கும் மேற்பட்ட உள்வகுப்புகள் கொண்ட மரங்கொத்திகளில் பல ,இன்று அழிந்து விட்டன. சில அழிவின் விளிம்பில் உள்ளன. மிகக் குறிப்பாக சந்தன மூக்கு மற்றும் இம்பீரியல் வகை மரங்கொத்திகள் கிட்டத்தட்ட அழிந்தே போயிருக்கலாம் என்ற சந்தேகம் பறவை ஆய்வாளர்கள் மத்தியில் நிலவுகிறது.



மரங்கொத்திகளைப் பொறுத்தவரை,அதன் உடலமைப்பு மிகுந்த கவனத்தைப் பெறுகிறது. குட்டையான ,தட்டையான நடுவுடல் ,கடினமான அலகு, விறைப்பான குறிப்பிட்ட சாய்மானத்தில் அமையப்பெற்ற வால், சப்பையான அடிப்பகுதி கொண்ட கால்கள், தேவைப்படும்போது தன்னை மூடிக்கொள்ளும் வசதி கொண்ட ரோமக்கால்கள் என ஒவ்வொரு அங்கமும் முக்கியத்துவம் பெறுகிறது. 10 கிராம்-----450 கிராம் வரை பல்வேறு நிலைகளைக் கொண்ட இதன் உடல் வளர்ச்சி, பெண் இனத்தில் முக்கிய பங்காற்றுகிறது. பெண்ணே பெரிய உடலைப்போடு இருக்கும். பல நிறங்களை உடலில் கொண்டிருக்கும். இவ்வண்ணங்களை, எதிர்பாலைக் கவர்ந்திழுக்கவும், தான் பருவ நிலையில் இருப்பதையும், ஆபத்துக்களை அறிவிக்கும் சமிக்ஞையாகவும் பயன்படுத்துகிறது.



இவைகளின் அலகு மிகுந்த கடினத்தன்மை கொண்டது. நீளமான நாக்கை உள்ளடக்கிய இதன் வாய் அலகால் மூடப்பட்டிருக்கும். மூக்கின் நுனி, கூர்மையாய் இருக்க அவ்வப்போது ஏதாவது ஒரு பொருளைக் கொத்தியவாறே இருக்கும். புழு பூச்சிகள், வண்டுகள், சிலந்திகள், பிற பறவையினங்களின் பச்சிளங் குஞ்சுகளைக் கண்டால் மிகுந்த வேகத்தோடும், அழுத்தத்தோடும் கொத்தும். கண் இமைக்கும் நேரத்தில் இரையைச் செயலிழக்கச் செய்து, மடக்கி, சுருட்டி, விழுங்கிவிடும். இரை பெரியது எனில், வேறோர் இடத்திற்கு எடுத்துச் சென்று சாவகாசமாக அமர்ந்து கொத்தித் தின்னும். சில வாரங்கள் இவை அலகைத் தீட்டாமல் விட்டுவிட்டதெனில் ,அதன் நுனி மழுங்கி தட்டையாகிவிடும்,பின் உணவைப் பிடிக்க முடியாமல் போய் இறப்பிற்கு வழிவகுத்துவிடும். மிகச் சிறிய குஞ்சுகள் கூட நீண்ட அலகைக் கொண்டிருக்கும்.



2004ம் ஆண்டு ஐரோப்பியப் பறவை ஆய்வாளர்களுக்கு ஒரு சந்தேகம் மேலிட்டது. இதன் அபரிதமான கொத்தும் தன்மையால் மூளைக்கு பாதிப்பு வராதா என்பதுதான் அது. நீண்ட ஆய்விற்குப்பின், மூளை மிகச்சிறியதாக உள்ளதாகவும், அதனைப் பாதுகாக்கும் மண்டைஓடு, நடுவே அமைந்த நீர், ஜவ்வுப்படலங்கள், கொத்தும்போது ஏற்படும் அதிர்வைத் தாங்கிக் கொள்வதையும் ,மேலும் கண்ணிற்குச் செல்லும் நரம்பு மண்டலத்தைப் பாதுகாப்பதை கண்டறிந்தனர். கண்ணை, மற்றொரு ஜவ்வுப்படலம் வெளியேயிருந்து பாதுகாக்கிறது. கொத்தும் போது, இப்படலம் விரிந்து கண்ணை மூடுவதோடல்லாமல், அதிர்வுகளையும் தாங்குகிறது. கொத்தி முடித்தவுடன் சுருங்கிக் கொள்ளும்.



மரங்களில் ஓணான், பல்லி போன்று செங்குத்தாக நடக்கும் திறன் கொண்டவை இவை. அப்போது உடலைத் தாங்கிக் கொள்ளும் வகையில் இதன் வால் அமைப்பு உள்ளது. அதற்கேற்ப கால்களும் உள்ளன. இதன் குட்டையான கால் பாதம் 4 விரல்களைக் கொண்டது. நடுப்பகுதியிலுள்ள ஜவ்வு ஷாக் அப்சர்வர் போல் செயல்படும். அதோடு மரங்களைக் கவ்விப் பிடித்துக் கொள்ளவும் பயன்படுகிறது. மரங்களின் தன்மைக்கேற்ப தங்களின் சார்பு வாழ்க்கையை மாற்றிக் கொள்ளும். பிசாந்தியம் சார்ந்த குழுவினங்கள் உண்டு. அதில் உள்வகுப்புகளும் உண்டு. தொடர் மழை காலத்தையோ,குளிர் காலத்தையோ அவை விரும்புவதில்லை. மழைக் காடுகளில் வாழ்பவை அவ்வப்போது தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டேயிருக்கும். அத்தகைய காலங்களில் கிடைத்த உணவைத் தின்று வாழும் இயல்பு கொண்டவை. இடப்பெயர்ச்சிக் காலங்களில் குழுவின மோதல் ஏற்பட்டு உயிரிழப்பில் முடிகிறது. குறிப்பாக, ஆப்பிரிக்காவில் வாழும் தரையின மரங்கொத்திகள் நிலத்தில் குழி அமைத்து கூட்டை உருவாக்குகின்றன. அதற்காக,முள், கல், பாறைகள், புதர்களை நாடுகின்றன. தாங்கள் வாழ்ந்த பழைய இடத்திற்கு ஒருமுறையாவது திரும்பி வந்து முட்டையிடுவது தான் இவற்றின் சிறப்புக் குணம்.



பயண காலங்களில்,இடத்தை தேர்ந்தெடுத்தால் அங்கு குறைந்தது 1 வருடமாவது வாழும். அப்போது ஆணும்--- பெண்ணும், பருவ காலத்தில் காதலில் மயங்கி, கலவி கொள்கின்றன. கலவி ,பொதுவான முறையிலேயே ,பெண் கீழே படுத்து தன் பின்புறத்தைத் தூக்கி காட்டியபடியும், ஆண் மேலே அமர்ந்தும் உடலுறவு கொள்கின்றன. பல முறை உடலுறவு கொள்ளும்.இந்நிகழ்வு சில மணித் துளிகளே நீடிக்கும். இரண்டும் சேர்ந்து கூட்டை அமைக்கும். அதில் வௌ்ளை நிறத்தில் 3--5 முட்டைகளை இடும். பெரும்பாலும் காலை நேரத்திலேயே முட்டையிடும். 10--14 நாள் அடைகாப்பிற்குப்பின் குஞ்சுகள் வெளிவருகின்றன. முதல் 18---35 நாட்களுக்குப் பெற்றோரின் பராமரிப்பில் இருக்கும் குஞ்சுகள் பின் தனியே செல்ல எத்தனிக்கும். 8 வார காலத்திற்குப்பின் தனியே இயங்கும். இவ்வினத்தில் பெண்ணே பிரதான தீர்மானிப்பாளனாக இருக்கின்றன. முட்டையை அடைகாப்பதில் துவங்கி, உணவிடல், பராமரிப்பு,பாதுகாப்பு என அனைத்திலும் பெண் பெரும்பங்காற்றுகிறது. ஆணின் சிறப்பு ,இரவு நேரத்தில் கூட்டையும், குஞ்சையும் பாதுகாப்பது. பெண் ஏதோ ஒரு காரணத்தால் வெளியில் செல்லும் போது, ஆண் அடைகாக்கும். அந்தி மயங்கும் வேளையில் குஞ்சிற்கு இரையூட்டும். பருவ காலங்களிலும் சக தோழர், தோழிகளுடன் கலவியில் ஈடுபடும். கம்யூன் கலாச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. பெற்றோரை இழந்த குஞ்சுகள் கூட்டத்தின் தலைவனால் பாதுகாக்கப்படுகிறது. அவை பெரும்பாலும், பதவிப்போரிலோ அல்லது வேறு ஏதாவது காரணத்தாலோ கொல்லப்படுகின்றன.



மலைப்பாம்பு, கழுகு, காக்கை போன்ற பறவைகள் இவைகளை வேட்டையாடும். இவை பிரதேச பற்று கொண்டவை என்பதால் உள் குடும்ப தகராறுகள் அதிகம் உண்டாகின்றன. இதனைத் தவிர்க்க பருவ காலம் தவிர்த்து சற்று முதிர் பருவத்தில் உள்ளவை தனித்தே வாழ விரும்புகின்றன. ஒன்றை ஒன்று சந்திக்கும்போது மூர்க்கத்துடன் சண்டையிட முயல்கின்றன. இதனால் இவைகளின் உடலில் ஆழமான காயங்கள் ஏற்படுகின்றன. இது இவைகளை இறப்பிற்கு இட்டுச் செல்கின்றன. பல கலவி கலாச்சாரம் இருப்பதால் குஞ்சு பொரித்துப் பாதுகாக்கும் காலத்தில் மட்டும் அமைதி காக்கின்றன. ஆணும் பெண்ணும் கலவியில் கூடி ,குஞ்சு பொரித்த பின் பேதமின்றி பாதுகாக்கும் பாங்கு ஆச்சரியமானது.



பூமியில் தற்போது நிலவும் அதிகபட்ச வெப்ப ஏற்ற இறக்கம் ,அதிக பூச்சி மருந்து தெளிப்பு போன்ற காரணங்களால் மரங்கொத்திகள் மட்டுமின்றி பல பறவையினங்கள் பேரழிவிற்கு ஆளாகி உள்ளன. வயல் வெளிகளைத் தாக்கும் பூச்சிகளை அழிப்பதிலும், வனத்தில் உருவாகும் ஒட்டுண்ணிகளை அழிப்பதிலும் மரங்கொத்திகள் பெரும் பங்காற்றுவதை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். கடந்த 2006ம் ஆண்டு மழைக் காலத்தில் அமேசான் காடுகளில் தோன்றும் பச்சை நிற வண்டுகளால் அங்கு வாழும் ஒரு வகை தவளை பயங்கர தோல் நோயால் பாதிக்கப்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். மரங்கொத்திகள் அவ்வண்டுகளை உண்பதால் தற்போது தவளைகள் தோல் நோய் பாதிப்பின்றி இருப்பதையும் அவர்கள் அறிக்கையில் தெரிவிக்கின்றனர். அவ்வகை வண்டுகளை உண்டு செரிமாணம் செய்யும் சுரப்பிகள் மரங்கொத்திகளுக்கு மட்டுமே உள்ளதையும் கண்டறிந்தனர் ஆய்வாளர்கள்.