செவ்வாய், 5 ஜூலை, 2011

Veerappan.

My Photo

Apr 27, 2010


இறந்த பூதத்தின் தொடரும் நிழல் - கவிதா


தொழில்ரீதியாக, நான் கதைகளைச் சேகரிப்பவள். கதைகளைச் சேகரித்துப் பத்திரிகைகளில் பதிவுசெய்வது என் பணி. மிகச் சில கதைகள் என்னுடனேயே தங்கிவிடுகின்றன.

சித்தியினுடையதும் செல்வியினுடையதும் சின்னப் பொண்ணுவினுடையதும் அப்படிப்பட்ட கதைகள்தாம். அதிலும் சித்தியைச் சந்தித்தது மிகவும் தற்செயலான விஷயம். வீரப்பன் இறந்து ஐந்து வருடங்கள் முடிந்ததையொட்டி அந்தப் பகுதி மக்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பதை எனது பத்திரிகைக்குக் கட்டுரையாக எழுதும் நோக்கத்தில் அந்தப் பகுதிகளுக்குச் சென்றபோது, சோளகர் தொட்டிக்குச் செல்லும் திட்டம் எதுவும் இருக்கவில்லை. அங்கே கட்டாயம் சென்று பார்க்க வேண்டுமென ச. பாலமுருகன் வற்புறுத்தி அனுப்பிவைத்தார்.

சுமார் நான்கு மணி நேரப் பயணத்துக்குப் பிறகு நாங்கள் சோளகர் தொட்டியைச் சென்றடைந்தபோது சூரியன் மறையத் தொடங்கியிருந்தது. நாங்கள் ஒரு பத்திரிகையிலிருந்து வந்ததையும் பாலமுருகன் அனுப்பி வைத்த விவரத்தையும் எங்களுடன் வந்த சி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த ஜீவா சொல்லி முடித்தபோது அந்தச் சூழலில் சின்னதாக ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது. சாலையில் நாற்காலிகள் போட்டு அமரவைத்தார்கள். மக்கள் சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள். சித்தி அழைத்து வரப்பட்டார். தன்னைத் தலையிலிருந்து கால்வரை அவர் புடவையால் மூடியிருந்ததற்குக் காரணம், வெறும் குளிர்தானா? ‘உன் கதையச் சொல்லு’, என்று யாரோ சித்தியிடம் சொன்னார்கள். “எத்தனதடவதான் சொல்லுவா, என்ன பிரயோஜனம்” என்று யாரோ பதில் சொன்னார்கள். சித்தி அமைதியாகவே இருந்தார். அந்த உரையாடலை எப்படித் தொடங்குவது என்று நான் தயங்கியபோது சித்தி வெகு இயல்பாக எனது கைகளைப் பிடித்துக்கொண்டு “காபி சாப்பிடறீங்களா” என்று கேட்டார். “உங்களுக்கு எதாவது சொல்லணும்னு தோணுதா?” என்று கேட்டேன். “இந்த உடம்புல ஒரு ஓட்டையைக்கூட விடாம அவங்க மின் கம்பி பாய்ச்சியிருக்காங்க. இப்போகூட வலிக்குது” என்று மட்டும் சொன்னார். கதைகளைச் சேகரிப்பதில் எனக்கிருக்கும் பத்து வருட அனுபவம் சித்தி சொன்ன அந்தச் சில வரிகளுக்கு என்னைத் தயார்ப்படுத்திக்கொண்டிருக்கவில்லை. அதற்கு மேல் சித்தியிடம் எதுவும் கேட்கத் தோன்றவில்லை. அவரும் எதுவும் சொல்லவில்லை. இழப்பீடாகச் சித்திக்குக் கிடைத்திருக்கும் இரண்டு லட்சம் ரூபாய் அவரது வலிகளை நீக்கிவிடவில்லை என்பது மட்டும் புரிந்தது.

வீரப்பன் இறந்த பிறகு தடதடக்கும் காவல் துறை வாகனங்கள் அதிர அதிர வந்து அவர்களை அலறவைப்பதில்லை என்பதைத் தவிர சோளகர் தொட்டியில் பெரிதாக மாற்றங்கள் எதுவும் இல்லை. மிக அருகில் இருக்கும் பள்ளிக்கூடத்துக்குப் போக வேண்டுமென்றாலும் பிள்ளைகள் ஒரு நாளைக்கு ஆறு மணிநேரம் நடக்க வேண்டும். அங்கிருக்கும் நாற்பது பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் அப்படி நடந்து சென்றுதான் படிக்கிறார்கள். “அதுவும் பத்தாவது வரைக்கும்தான். அதன் பிறகு படிக்க வேண்டுமானால் வேறு எங்கேயாவது தான் போக வேண்டும்” என்றாள் ஏழாவது படிக்கும் ஜோதிகா. “நான் சென்னையைப் பார்த்ததில்லை, அங்கே கூட்டிக்கிட்டுப் போறீங்களா? நான் மேலே படிக்கணும்.” சோளகர் தொட்டி உள்பட சத்தியமங்கலம் பகுதியிலுள்ள எந்த அரசுப் பள்ளிக்கும் அனேகமாக ஆசிரியர்கள் வருவதில்லை. வீரப்பன் இருந்தபோது பயம் காரணமாக வராமல் இருந்த ஆசிரியர்கள் அதன் தொடர்ச்சியாக இப்போதும் வராமல் இருக்கிறார்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். அனேகமான இடங்களில், அந்தப் பகுதிகளைச் சேர்ந்த சுமாராகப் படித்தவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஏதோ பணம் கொடுத்துப் பள்ளிக்கூடங்களில் பாடம் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள் சில ஆசிரியர்கள்.

சோளகர் தொட்டிக்குச் சவாலாக விளங்கும் இன்னொரு பிரச்சினை, நில ஆக்கிரமிப்பு. வீரப்பன் பயம் இல்லாத காரணத்தால் பல பணக்காரர்கள் இந்த வளமான பகுதியில் நிலம் வாங்குகிறார்கள். ஆண்டாண்டு காலமாகக் காடு, மலைகளில் புழங்கிவந்த சோளகர் குடும்பங்கள் அதிகம் பாதிக்கப்படுவது இந்தப் பிரச்சினையால்தான். “நாங்கள் வளர்ந்து திரிந்த நிலங்களுக்கு வேலிகளைப் போட்டு நாய்களைப் போல விரட்டுகிறார்கள்” என்கிறார் ஊர்த் தலைவராக அறியப்படும் ஜவுனா. வாழ்நிலங்களிலிருந்து துரத்தப்படும் பழங்குடியினரின் எதிர்வினைகள் நமக்கான படிப்பினைகளாக இப்போதும் நிகழ்ந்துகொண்டுதானிருக்கின்றன. அந்த நிலை சோளகர் தொட்டிக்கும் ஏற்படுவதைத் தடுக்க முடியுமா எனத் தெரியவில்லை.


மலைகளில் மட்டுமல்ல, சமவெளிகளிலும் வீரப்பன் தேடுதல் வேட்டையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை ஐந்து வருடங்களுக்குப் பிறகும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. குறிப்பாகப் பெண்களின் நிலை. பாலமுருகன் சொல்லும் வள்ளியின் கதை, யாரையும் நிலைகுலையவைக்கும். வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாலியல்ரீதியாகப் பாதிக்கப்பட்ட பல பெண்களில் வள்ளியும் ஒருவர். சேத்துக்குளியைச் சேர்ந்த வள்ளியைப் பல பெண்களைப் போல அவரது கிராமமும் தள்ளிவைத்திருக்கிறது. காரணம், அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார் என்பது. அப்படித் தள்ளிவைக்கப்பட்ட வள்ளியை அவரது உறவினர்களே மீண்டும் பாலியல்ரீதியாகத் துன்புறுத்திக் கொலைசெய்திருக்கிறார்கள்.

வீரப்பன் தேடுதல் வேட்டை விட்டுச் சென்ற பாதிப்புகளின் பல்வேறு வடிவங்களால் இன்னும் அச்சத்தில் வாழ்கிறார்கள் பல பெண்கள். 30 வயது சின்னப் பொண்ணுவைப்போல. மேட்டூர் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் நாங்கள் அவரைச் சந்தித்தபோது அவர் சித்தாள் வேலை செய்துகொண்டிருந்தார். வீரப்பன் தேடுதல் வேட்டையில் அவரது முதல் கணவர் கொல்லப்பட்டார். “அப்போ நான் பாலியல்ரீதியாப் பாதிக்கப்பட்டவன்னு தெரிஞ்சதும் எங்க வீட்டிலேயே என்னை ஒதுக்கிவச்சுட்டாங்க. எனக்கு இழப்பீடு வாங்கித்தந்த மனித உரிமை ஆர்வலர்கள் அக்கறையாச் சொன்னதால இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என்று சொல்லும் சின்னப் பொண்ணு, தன் அம்மா தன்னை ஏசியதுபோல வேறு யாரும் தன்னைக் குற்றம் சொல்லக் கூடாது என்பதாலேயே காது கேளாத வாய் பேச முடியாத ஒருவரைத் திருமணம் முடித்திருக்கிறார். ஆனால் சின்னப் பொண்ணுவின் கணவர் முருகன், அவருடைய ‘களங்கப்பட்ட’ மனைவி பற்றி எழுதி எழுதிச் சித்ரவதை செய்வாராம். “இப்போதுகூட அவரைத் தெய்வமாத்தான் நினைக்கிறேன், பாலியல்ரீதியாப் பாதிக்கப்பட்டவ, ஏற்கனவே கல்யாணமானவ, என்ன யார் மறுமணம் செய்ய முன்வருவாங்க?! அவருக்கு நல்ல மனைவியாதான் இருக்கணும்னு நினைக்கிறேன். வீரப்பன் தொந்தரவெல்லாம் முடிஞ்சு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிடுச்சுன்னு நினைக்கறப்ப வேறவிதமான தொந்தரவுகள் இருந்துகிட்டுதான் இருக்கு. ரொம்பக் கொடுமையான வார்த்தைகள எழுதிக் காட்டுவாரு. படிக்கறப்ப செத்துடலாம்னு தோணும்” என்கிறார்.

செல்வியின் நிலையும் கிட்டத்தட்ட அதேதான். “தினம் தினம் சாகறேன், பேச்சுவாக்குலகூட யாராவது எனக்கு இப்படியொரு கொடுமை நிகழ்ந்திருக்குன்னு சொன்னாங்கனா அன்னிக்கு முழுவதும் நரகத்தில இருக்கறது மாதிரி இருக்கும்” என்கிறார் செல்வி.

செல்வி, சின்னப் பொண்ணு, சித்தி போன்று பல பெண்கள். இவர்கள் எல்லோருக்கும் இழப்பீடு கிடைத்திருக்கிறது. சமயங்களில் இவர்களது மறுமணத்துக்குத் தூண்டுதலாய் இருந்தது இந்த இழப்பீட்டுத் தொகைதான் எனச் சொல்லப்படுகிறது. பணத்துக்காக மணந்துகொள்பவர்கள் பிறகு வீரப்பன் தேடுதல் வேட்டை என்னும் இறந்துபோன பூதத்தின் நிழலாக மாறிவிடுகிறார்கள். வீரப்பனின் தேடுதல் வேட்டை புரட்டிப்போட்ட பாதையிலிருந்து இவர்களது வாழ்க்கை இன்னும் விலகவில்லை என்பதுதான் உண்மை. இனியும் விலகுமா எனத் தெரியவில்லை. சின்னப் பொண்ணு சொல்வதுபோல அந்தப் பெருவேட்டையின் தடயங்களை அவர்கள் தங்கள் உடல்களில் சுமந்துகொண்டிருக்கிறார்கள். பாலியல்ரீதியாக இன்னும் இறுக்கமாகவே இருக்கும் ஒரு சமூகத்தில் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் இழப்பீடோ மறுமணமோ அந்தத் தடயங்களை முழுவதுமாக நீக்கிவிடப்போவதில்லை.

அதனாலேயோ என்னவோ, அதிகார எதிர்ப்பைத் தனது கூறுகளில் ஒன்றாகக் கொண்டிருந்த வீரப்பன் இன்னமும் இங்கு ஒரு கதாநாயகன். வீரப்பனின் வீரம் பற்றிப் பல புனைவுகள் இந்தப் பகுதிகளில் இன்னமும் காற்றில் அலைந்துகொண்டிருக்கின்றன. மூலக்காட்டில் வீரப்பன் புதைக்கப்பட்ட இடத்தில் “இங்கே வீரம் விதைக்கப்பட்டிருக்கிறது” என்கிற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

செல்வியின் நான்கு வயது மகன் பார்த்தனுக்கு எதிர்காலத்தில் ‘வீரப்பனாக வேண்டும்’ என்பதுதான் ஆசை. செல்வி அதிர்கிறார். “ஒரு வீரப்பனால பட்டததான் இன்னிக்கு வரைக்கும் அனுபவச்சிட்டிருக்கிறோம். பேச்சுக்குக்கூட அப்படிச் சொல்லாத” என்று அவனை அணைக்கிறார்.

சித்தியின் மீதும் செல்வியின் மீதும் சின்னப் பொண்ணுவின் மீதும் பிரமிப்பை ஏற்படுத்தும் விஷயம், வாழ்வு அவர்கள்மீது செலுத்திய வன்முறையை அவர்கள் எதிர்கொண்ட விதமும், வாழ்வின் மீது அவர்கள் இன்னமும் வைத்திருக்கும் தகர்க்க முடியாத எளிய நம்பிக்கைகளும்தான். ஜோதிகா உள்பட நாற்பது பிள்ளைகளும் ஆறு கிலோ மீட்டர் நடந்தாவது படித்தால்தான் தனக்கு நேர்ந்த கதி அவர்களுக்கு ஏற்படாது எனத் திடமாக நம்புகிறார் சித்தி. பார்த்தனையும் தன்னுடைய பிற குழந்தைகளையும் எப்படியாவது படிக்கவைத்து, பெரிய இடத்தில் வேலைக்குச் சேர்த்துவிட வேண்டுமென்ற முனைப்பில் இருக்கிறார் செல்வி. அவர்கள் எல்லோருமே மிச்சமிருக்கும் வாழ்வை வாழ்ந்துதான் தீர்க்க வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.