புதன், 17 ஆகஸ்ட், 2011

Aadukalam.

ஆடுகளம் : துரோகத்தின் வினைத்தொகை


Posted by நர்சிம் Thursday, January 20, 2011 comments (32) எல்லாப் படங்களையும் பார்த்துவிட்டாலும் சில படங்களைப் பார்க்கும்பொழுது மட்டும்தான் அதுகுறித்து எழுதத் தோன்றுகிறது. ஆடுகளம். துரோகம் ஆடியது,ஆடுகின்றது,ஆடும் என்ற வினைத்தொகையின் பண்பு, உலகம் இருக்கும் வரை. ஒருவரின் அன்பில்,அவர் நம்மீது கொண்டிருக்கும் அக்கறையில் திக்கித்திணறி நாம் மூர்ச்சையாகிப் போகும்பொழுது முதுகில் விழும் குத்து...ஆடுகளம்.



சேவல் சண்டையைப் பற்றிய வரலாற்று குறிப்போடு டைட்டில் தொடங்குகிறது. பொல்லாதவன் பாணியில் முதலில் க்ளைமேக்ஸ்..அதிலிருந்து பின்னோக்கி என வெற்றி ஃபார்முலாவை மீண்டும் கையாண்டிருக்கிறார்,வெற்றி-மாறன்.



கதையைப் பற்றிப் பேசுவதை விட அதற்கும் அப்பால் பேச நிறைய இருக்கிறது இப்படத்தில்.



சினிமாவில் வில்லன், நாயகன், குணச்சித்திரம் என அவரவர் பாத்திரம் உணர்ந்து எப்பொழுதுமே நல்லவனாகவும் எப்பொழுதுமே கெட்டவனாகவும் சித்தரிக்கப்பட்டுவந்ததில் இருந்து முற்றும் மாற்றாக, அன்றாடத்தில் எப்படி அவ்வந்த சூழலுக்கு ஏற்ப வாழ்கிறோம் என்பதை மிக நுட்பமாகக் காட்சிப்படுத்தி இருப்பதே இப்படத்தின் ஆகச் சிறப்பு.



கிஷோர்/துரை பாத்திரம். கொஞ்சம் பணமும் பார் வைக்குமளவிற்கு செல்வாக்கும் இருக்கும் ஒரு மதுரைக்காரன் எப்படி இருப்பானோ அப்படியே இப்பாத்திரம். மிகக் கூர்ந்து கவனித்ததில் இந்தப் படத்தின் அற்புதமானப் பாத்திரம் என்றால் அது துரைதான். ஒரு இடத்தில் கூட இயல்பிற்கு மீறியச் செய்கையைச் செய்யவில்லை.



எதிர் அணியில் இருந்த இன்ஸ்பெக்டர் தன்னை ஸ்டேஷனில் இருந்து விடுவிக்க உதவியதும் மறுநாள் அவர் வீட்டிற்கே சென்று நன்றி தெரிவிப்பது.



தன் கூட்டாளி அயூப்பை அதே இன்ஸ்ப்பெக்டர் கொன்றது தெரிந்து, தண்ணியடித்துவிட்டு, ‘இப்பிடி எல்லாத்தையும் செஞ்சுப்புட்டு ஒண்ணுமே தெரியாதமாதிரி நிக்கிறாங்களே’ என அவரை அடிக்கப்போவது.



குருவின் பேச்சைக் கேட்காத தனுஷின் முதல்சுற்று போட்டிக்கு, ‘விடுண்ணே சின்னப்பய,தெரியாம பண்ணிட்டான்’ என ஆதரிப்பது. மீண்டும் திமிறில் தனுஷ் களம் இறங்கும்பொழுது, ‘என்னடா ஓவராப் போற’ என தனுஷை எதிர்ப்பது.



மீண்டும் தனுஷ்க்கு வாழ்க்கையில் செட்டில் ஆகும் வாய்ப்பு வரும் எனத் தெரிந்ததும், தனுஷை ஆதரித்து, மூன்று லட்சம் வாங்கித் தருவது.



குரு அளவிற்கு மீறி கோவப்பட்டதும், ‘எனக்கென்னமோ நீ பண்றது தப்புன்னு தோணுதுண்ணே’ என குருவிடம் நியாயத்தைப் பேசுவது.



கடைசிவரை துரைக் கதாப்பாத்திரம் எந்த இடத்திலும் பிசகவே இல்லை.



பேட்டைக்காரன் என்ற பெரியசாமி : நான் சில மாதங்களுக்கு முன்னர் ‘அம்பத்தாறு’ என்ற கதையை எழுதி இருந்தேன். அந்த அம்பத்தாறு பாத்திரத்தின் குணாதிசயம், அடிப்படையில் நல்லவன், ஆனால் எவராவது ஊரில் நல்லபெயர் வாங்கினால் பொறுக்காது, தனக்கு யாராவது துரோகம் செய்வதாகப் பட்டால், நேரடியாக மோதாமல் கெடுதல் செய்வது.



இந்த குணாதிசயத்தையும் தாண்டிய படைப்பு பேட்டைக்காரன். அடிப்படையில் திறமையான, நல்லவர் தன் சிஷ்யன் தன்னை மீறும் பொழுது ஏற்படும் மனஉளைச்சலை எப்படி துரோகமாக மாற்றுகிறார் என்பதே.



இவர் பேச்சை மீறி தனுஷ் களத்தில் இறங்கும்பொழுது, கோயில் முன்னர் நின்று கொண்டிருப்பார் பேட்டைக்காரன். ‘அண்ணே நம்ம சேவ ஜமீனாகிப்போகும் போலண்ணே, தோத்துறும்’ என ஒருவன் வந்து சொன்னதும், லேசான திருப்தியோடு கடவுளைப் பார்க்கும்பொழுது அவரின் குரூரம் தெரிகிறது. ஆனாலும் தனுஷ் முதல் சுற்றில் வெற்றிப் பெற்றதும், தன் மானம் காப்பாற்றப்பட்டது போன்ற திருப்தியும் அடுத்த முகபாவனையில்.



‘அதிர்ஷ்டம் அவன செயிக்க வச்சுருச்சுடா’ என மீசை மண் வசனத்தில் சமாளிப்பது.



‘இல்லண்னே, அன்னிக்கு மாதிரி ஏதாச்சும் மாத்தி ஆகிப்போச்சுண்டா’ என சேவல் வாங்க வருபவன், இவரின் பேச்சை மீறி வேறு சேவல் கேட்கும்பொழுது, மனம் முழுதும் வன்மம் குடிகொள்வதை டாப் ஆங்கிளில் பேட்டைக்காரனின் முதுகில் காட்டி இருப்பது.



இந்தக் கதாப்பாத்திரத்தின் மிகச்சிறந்த டீட்டெய்லிங், கடைசியில் எல்லா உண்மையும் தெரிந்த தனுஷை குத்தக் கத்தியைக் கையில் எடுக்கும் பேட்டைக்காரன், தனுஷ் சொல்லும், ‘வெளில தெரிஞ்சா இம்புட்டு நாளா உனக்கு இருந்த பேரு என்னண்ணே ஆகும்,’ என்ற வார்த்தைகளைக் கேட்டதும், கத்தியின் முனை திசை மாறும். அவ்வளவே. தன்மீது இருந்த பிம்பம் சிதைபடும்பொழுது ஒருவன் என்ன செய்வானோ அதைச் செய்துகொள்ளும் அற்புத பத்திரப்படைப்பு பேட்டைக்காரன்.



தனுஷ்/கருப்பு : I AM LOVE YOU என்ற மதுரை திருப்/தென்பறங்குன்ற கைலி இளைஞன். எல்லாக் கோவத்தையும் தாயிடம் காட்டும் சராசரியாக, டைவாவைக் கரெக்ட்பண்ணும் காதலனாக, நல்லது செய்யும் கிஷோரை அண்ணண் நிலையில் வைக்கும் நண்பனாக, துரோகம் தெரியவந்ததும் வெடித்துச் சிதறும் சிஷ்யனாக...



மிகக் கச்சிதமாய் செய்திருக்கிறார் தனுஷ். மதுரை பாஷை கொஞ்சம் தடுமாறினாலும், ஒன்றச் செய்துவிடுகிறது. தனுஷிடம் இருக்கும் நடிப்புத் திறமையே இவரை இந்த இடத்தில் வைத்திருக்கிறது என்பதை நிரூபிக்கும் படம் இது. புதுப்பேட்டையில் ஒரு பெரிய கூட்டமே அடித்துத் துவைத்தும், முகமெல்லாம் ரத்தமாக, எழுந்து நிற்கும்பொழுது ஒரு சிங்கத்தின் பார்வையை ரீரிக்கார்டிங்கோடு செல்வராகவன் கொண்டு வந்திருப்பார். அந்தக் காட்சி தனுஷின் மிகச்சிறந்த நடிப்பிற்கு ஒரு உதாரணம். அதைப்போல இந்தப் படத்தில் நிறைய இடங்களில்.



அயூப் : ஃபாரின் சரக்கை ஆசையாக, இதை திருப்பி கேட்க மாட்டியே என வெள்ளந்தியாக கேட்பதாகட்டும், தன்னை விலை பேசுவது தெரிந்த அடுத்த நிமிடத்தில், “என்னடா வேணும் உங்களுக்கு” என அதே பாட்டிலை தரையில் எறிந்து விட்டு, நாலு கிளாஸ் சாராயத்துக்கே இம்புட்டு கேட்குறீங்களேடா, நாப்பது வருச பழக்கம்னா எம்புட்டு இருக்கும்’ என்று நிற்பது கம்பீரம்.



ஊளை : மதுரையில், கிட்டத்தட்ட எல்லா கேங்கிலும் ஒரு ஊளை கேரக்டர் உண்டு. அவ்வளவு தத்ரூபமாக செய்திருக்கிறார். ‘எந்தத் தெருடா ஏழுமணிக்கு வெறிச்சோடி இருக்கு, தப்பாத் தெரிதே மாப்ள’ இந்த ஒரு வசனம் போதும். அவ்வளவு கச்சிதமான ஏற்ற இறக்கம். படம் முழுதும் வரும் இப்பாத்திரம் தனுஷ் என்ற பாத்திரம் எது செய்தாலும் அதற்கு உடன்பட்டு எப்பொழுதும் உடன் இருக்கும் நண்பன் பாத்திரம். காதலியைத் தேடிப்போகும் பொழுது உடன் வந்து கம்பெனி கொடுப்பதில் துவங்கி இறுதியில் வழியனுப்பி வைக்கும் வரை இருக்கும் மதுரை நட்பை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கும் இந்தப் பாத்திரமும் கிஷோருக்கு அடுத்தபடியாக அமைந்திருக்கும் அற்புதம்.



தவிர, சில சுவாரஸ்யங்கள் :



1.சேவல் சண்டையின் நுட்பங்களை உள்வாங்கி அற்புதமாக திரையில் கொண்டு வந்திருப்பது. குறிப்பாக இருவாசியின் பொழுது ஜெயிப்பது யார் என சீட்டின் நுனிக்கு நம்மை இட்டுச் சென்றது.



2. மதுரை என்றாலே அங்கிட்டு இங்கிட்டு அறுவா என்பது மட்டும் அல்ல, அதையும் தாண்டிய ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை காட்டிய விதம்.



3. சேவல் சண்டை நடக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஃப்ளெக்ஸ் பேனரில், கிஷோர் ராஜா உடை அணிந்து நிற்பார். பேட்டைக்காரன் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார். மதுரையின் அன்றாட காட்சிகள் இவை. இதில் துவங்கி ஒவ்வொரு காட்சியில் நுட்பங்களை காட்சிப் படுத்திய விதம்.



4. ஒவ்வொரு பாத்திரத்தின் தேர்வும், அவர்கள் ஒரு இடத்தில் கூட தேவையில்லாமல் கையை என்ன பண்ணுவது என்று தெரியாமல் நிற்பதோ, மற்றவர் வசனம் பேசும்பொழுது அடுத்த வசனத்திற்கு ரெடியாக துடித்துக்கொண்டு நிற்பதோ இல்லாமல், வெகு இயல்பாக வந்து போவது.



5. வாழ்வினூடாக பாடல் இருப்பதை அப்படியே வசனங்களுக்கு ஊடாக சேர்த்து இருப்பது..யாத்தேப் பாடலின் பொழுது தனுஷின் குதூகலம் நம்மையும் தொற்றச் செய்துவிடும் கேமிரா/டான்ஸ்/இசை.



6. இரண்டாம் பாதியில், ஒரு இடத்தில் கூட நாம் நினைப்பது நடக்காதது போல அமைத்திருக்கும் திரைக்கதை. இன்ஸ்பெக்டர் மொட்டை அடித்ததும் அறுவா பறக்கும் என்று எதிர்பார்த்தால் ..இல்லை. இதே நிலம உனக்கும் வரும்ணே..என தனுஷ் கிஷோரைப் பார்த்து சொல்லும் பொழுது கிஷோரின் நிலை அப்படி ஆவது இல்லை, காதலி இனி அவ்வளவுதான் எனில் அவ்வளவு இல்லை என மிக இயல்பாய் சம்பவங்களைக் கடந்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.



7. ‘என்கிட்டயே உன்னத் தப்பாச் சொல்றாரு’ என காதலியின் நம்பிக்கை.இந்த வசனம் வந்ததும் கைத்தட்டல் எழுகிறது அரங்கில். சாதாரண வார்த்தைகளில் வாழ்வைக் காட்டுவதே வசனம். விக்ரம் சுகுமாரன் & வெற்றி மாறன் இருவரின் வசனங்கள் இயல்பான உரையாடல்களாக அற்புதமாய் இருக்கிறது.



8. மதுரை என்றாலே இரவு. அதை அற்புதமாய் பாடலில் கொண்டு வந்திருக்கும் நேர்த்தி.



9. ராதாரவின் வெகுநேர்த்தியான பின்குரல்.



10. மீனாள் கதாப்பாத்திரம்.



நன்றி வெற்றிமாறன்.



Labels: சினிமா விமர்சனம்