ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

Jayamohan.

ஜெயமோகனுடன் கொஞ்ச நேரம்


by RV on பெப்ரவரி 18, 2011

சமீபத்தில் ஜெயமோகன் எழுதிய சில கதைகளைப் படித்துவிட்டு மீண்டும் மீண்டும் அந்தக் கதைகளேதான் மனதில் ஓடிக் கொண்டிருக்கின்றன. என்னை விடுங்கள், என் பனிரண்டு வயதுப் பெண்ணுக்கு வணங்கான் என்ற கதையை (பகுதி 1, பகுதி 2) சொல்ல ஆரம்பித்தேன், அவள் ஹோம்வொர்க் பண்ணமாட்டேன் கதையை சொல் என்கிறாள். அவளுக்கு ஜாதி என்றால் என்ன என்று சரியாகத் தெரியாது, அவளையே கதை கட்டிப் போடுகிறது. (மொழிபெயர்த்து தருகிறேன், நீயே படித்துக் கொள் என்று கொஞ்சம் அடக்கி வைத்திருக்கிறேன்.)



ஜெயமோகன் எழுத்தில் மட்டுமல்ல, பேச்சிலும் பிஸ்தாதான். அவர் அமெரிக்கா வந்தபோது அவரை சில சமயம் சந்திக்க முடிந்தது. சுவாரசியமான, எதிரில் இருப்பவர் லெவலில் பேசும், அதே நேரத்தில் அவர்களை patronize செய்யாமல் பேசுபவர். (ஆண்டன் செகாவும் இப்படிப்பட்ட குணம் உடையவர் என்று படித்திருக்கிறேன்.) அப்போது எழுதிய பதிவை மீண்டும் மீள்பதித்திருக்கிறேன்.



ஜெயமோகன் ஃப்ரீமாண்டுக்கு வருகிறார் என்று தெரிந்தபோது அவரை சந்திக்கப் போவதா வேண்டாமா என்று எனக்கு இரண்டு மனதாக இருந்தது. காரணம் ரொம்ப சிம்பிள் – அவருடன் என்னத்தை பேசுவது? அவரிடம் எனக்கு விஷ்ணுபுரம், பி.தொ.நி. குரல், காடு போன்ற புத்தகங்கள் பெரும் சாதனைகளாக தெரிகின்றன என்று சொல்லலாம். அது அவருக்கு தெரியாமலா இருக்கும்? எனக்கு கன்யாகுமரி பிடிக்கவில்லை என்று சொல்லலாம் – அது அவ்வளவு மரியாதையாக இருக்குமா? வயதாக ஆக புதியவர்களுடன் small talk தவிர வேறு எதுவும் சாத்தியம் இல்லாமல் போகிறது.



அவரை சந்திக்க முக்கியமான காரணம் என் மனைவிதான். ஹேமா திருப்பி திருப்பி சொன்னாள் – அவர் புத்தகங்களை பற்றி நிறைய எழுதுகிறார், உங்களுக்கும் புத்தகப் பித்து அதிகம், போய்ப் பாருங்களேன் என்று ஹேமா கொடுத்த ப்ரெஷரில்தான் நான் அவரை சந்திக்க போனேன்.



நடுத்தர உயரம், பருமன். தலையில் இன்னும் நிறைய கருப்பு முடியும் கொஞ்சம் நரையும் இருக்கிறது, ஆனால் பின் தலையில் வழுக்கை லேசாக தெரிகிறது. (நான் புதிதாக யாரைப் பார்த்தாலும் முதலில் தலையில் எவ்வளவு முடி இருக்கிறது என்று கவனிப்பேன். சொந்தக் கதை சோகக் கதை) மீசையை எடுத்த பிறகு இன்னும் இளமையாக தெரிகிறார். மலையாள accent உள்ள பேச்சு – Condemborary என்றால் Contemporary என்று அர்த்தம். நாஞ்சில் நாட்டு பேச்சு அவ்வப்போது வருகிறது – சொல்லுதேன் என்பார்.



தங்கு தடையில்லாத பேச்சு. சொல்ல வரும் விஷயம் சாதாரண பேச்சில் கூட பல வருஷம் யோசித்து வைத்தது போல் செறிவாகவும், திட்டவட்டமாகவும் வந்து விழுகிறது. அடுத்தவர்கள் பேச்சை கவனிக்கிறார், பதில் சொல்கிறார் ஆனால் பெரும்பாலும் நடப்பது உரையாடல் இல்லை, லெக்சர்தான். ஒரு ப்ரொஃபஸர் – மாணவர்களோடு நன்றாக கலந்து பேசுபவர் – க்ளாஸ் எடுக்கிற மாதிரித்தான். அது பாந்தமாகவும் இருக்கிறது. ஏனென்றால் மனிதர் படித்திருப்பது நிறைய. வாழ்க்கை அனுபவங்கள் மூலமும், சிந்தனை மூலமும், புரிந்து கொண்டிருப்பதும் நிறைய. விஷயம் தெரிந்தாலும் பலரால் அதை கோர்வையாக எடுத்து சொல்ல முடியாது – இவருடைய பெரிய பலம் சொல்ல வரும் விஷயத்தை கோர்வையாக, ஒரு சதஸில் தன் கருத்தை எடுத்து வைப்பவர் போல் சொல்ல முடிவதுதான்.



தூணையும் பற்றி பேசுவார், துரும்பையும் பற்றி பேசுவார் – சுவாரசியமாக. நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் விருந்து உபசரிப்பு முறைகள், இந்திய பண்பாட்டின் கூறுகள், ஜாதியை பற்றி டி.டி. கோசாம்பி என்ன கூறுகிறார், காந்தளூர்சாலை கலமறுத்தருளி என்று ராஜ ராஜ சோழனின் மெய்க்கீர்த்தியில் வருவதன் பொருள் என்ன என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய பேப்பர், திருவண்ணாமலை தீபம் என்ற ஐதீகம் எங்கிருந்து வந்திருக்க வேண்டும் எதை பற்றி வேண்டுமானாலும் பேச ரெடி. மார்க்சிய முறைப்படி வரலாற்று ஆய்வுகள், மலையாள சினிமா, மத்திய பிரதேசத்தில் இருக்கும் வறுமை, இலக்கிய சர்ச்சைகள், மேல் நாட்டு இலக்கியங்கள் எல்லாம் grist to his mill. அதே நேரத்தில் வெட்டி பேச்சு கிடையாது. நடிகை நிலாவுக்கும் நடிகர் ஆர்யாவுக்கும் என்ன உறவு, நயனதாரா பிரபு தேவா கல்யாணம் நடந்துவிட்டதா என்றெல்லாம் பேசுவதில்லை. சுவாரசியமாக, அதே நேரத்தில் உருப்படியாக பேச வேண்டும் என்பதை ஒரு கோட்பாடாகவே வைத்திருக்கிறார்.



எப்படி மறுத்து பேசினாலும் கோபம் வருவது இல்லை. சுற்றி இருக்கும் யாருக்கும் தன்னை போல் படிப்பும் உழைப்பும் இல்லை, இந்திய வரலாற்றை, தத்துவத்தை, பண்பாட்டை மேலோட்டமாகவே அறிந்தவர்கள் என்று தெரிந்தாலும் அவர்கள் கேட்கும் எந்த இடக்கு மடக்கு கேள்விக்கும் சலிக்காமல் விளக்கம் சொல்கிறார். அவரை எரிச்சல் ஊட்டுவது இரண்டு விஷயங்கள் (எனக்கு தெரிந்து) – ஒன்று அவர் பேசும்போது கவனிக்காமல் பராக்கு பார்ப்பது; இரண்டு இந்தியாவை தாழ்த்தி பேசும் மனப்பான்மை. பலரும் நான் பெரிய பிஸ்தா, இந்தியாவில் இருக்கும் இந்தியர்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது என்ற ரேஞ்சில் இவரிடம் பேசி இருக்கிறார்கள் போல தெரிகிறது. நான் பார்த்த கூட்டத்தில் உண்மையில் பிஸ்தா அவர்தான்.



தான் பெரிய எழுத்தாளர், தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்ற பெருமிதம் அவரிடம் இருக்கிறது. (என் கண்ணில் அவர் உலகின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.) ஆனால் கர்வம் என்பது கொஞ்சம் கூட இல்லை. எதிரில் இருப்பவனுக்கு ஒன்றும் தெரியாது என்ற மனப்பான்மை துளியும் இல்லாதவர். அடுத்தவர்கள் சொல்வதை கூர்ந்து கவனித்து அதை மறுத்தோ ஆமோதித்தோ விளக்கம் சொல்வார். நாம் ஏதாவது சொல்லும்போது கவனிக்காமல் பராக்கு பார்க்கும் பழக்கம் கிடையாது.



ராத்திரி தூங்கவே மாட்டாரோ என்று தோன்றியது உண்டு. ஒரு நாள் இரவு பனிரண்டு ஒரு மணி வரை பேசிவிட்டு வீட்டுக்கு வந்தேன். கம்ப்யூட்டரை திறந்து பார்த்தால் நான் வீட்டுக்கு வந்த பதினைந்து நிமிஷத்துக்குள் இரண்டு பதிவு போஸ்ட் செய்திருக்கிறார். அட ஏற்கனவே எழுதி வைத்திருந்தாலும் அதை கடைசி ஒரு முறை சரி பார்க்க மாட்டாரா?



அவருடன் நாலைந்து முறை பேச முடிந்தது. ராஜன் வீட்டில் சில முறை சந்தித்தோம்; என் மற்றும் பக்ஸ் வீட்டுக்கு வந்தார். ஒரு கலந்துரையாடலில் வந்தவர்களை அப்படியே கட்டிப்போட்டுவிட்டார். ஒரு உரை, மற்றும் கேள்வி பதில் நன்றாக அமைந்திருந்தது. இவரை மாதிரி ஒரு தமிழ் இல்லை சரித்திர வாத்தியார் இருந்தால் அது பெரிய அதிர்ஷ்டம்.



சுருக்கமாக சொன்னால் அவரை இன்னும் 4 முறை பார்த்திருக்கலாமே, இன்னும் பேசி இருக்கலாமே, பேசுவதை கேட்டிருக்கலாமே, என்று தோன்றுகிறது. மிக அபூர்வமான மனிதர். அவர் எழுத்துக்கள் மட்டும் இல்லை, அவர் பேச்சும் மீண்டும் மீண்டும் யோசிக்க வைக்கிறது. என்னவோ ஊரிலிருந்து நிறைய நாளாக பார்க்காத ஒரு அதி புத்திசாலி ஒன்று விட்ட அண்ணன் வந்து போனது போல் இருக்கிறது.



சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் தவறவிடாதீர்கள்.