திங்கள், 26 செப்டம்பர், 2011

zha.

ழ + சாட் லவ் இரண்டு ஒரு பக்க கதைகள்


'ழ'



***************************************************





துறைத்தலைவர் சொன்னார்..கல்வி அமைச்சர் அவசரமாக கேட்டதால் அழைப்பிதழில் கூட என் பெயரை அச்சடிக்க அனுப்பிவிட்டாராம்.. ஒருமுறை கிள்ளிப்பார்த்துக்கொண்டேன். அரசின் உலக தமிழ் மாநாட்டில் பேச எனக்கு அனுமதியா ? நான் இரா.சிவராசு. வருமானத்துக்கு வழியில்லாத மாநிலக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்.



மனைவிக்கும் மகளுக்கும் தாளமுடியாத சந்தோஷம்..விடயத்தை கூறியதும்..மகள் இரண்டு அடிக்கு மேல் துள்ளினாள்...அப்பா..மூன் டிவியில லைவ்வா காட்டுவாங்க இல்லையா ?.



'நேரலை'ன்னு சொல்லு..ம்..கண்டிப்பாக காட்டுவாங்க...



தமிழின் தனிச்சிறப்பான 'ழ' என்று பெயரிட்டு இரவு பகலாக அமர்ந்து தமிழின் சிறப்பை கட்டுரையாக தயார் செய்தேன்.



அந்த நாளும் வந்தது. விழா மேடை. உலகத்தமிழர்களால் அரங்கு நிரம்பியிருக்க..எனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு சில வினாடிகளுக்கு முன் விழா அமைப்பாளர் என்னை ஓரமாக தள்ளிக்கொண்டு போனார்.



அப்புறம் சிவராசு, கல்லூரி பணியெல்லாம் எப்படி இருக்கு ?



அய்யா, என்னுடைய நேரம் வந்துவிட்டது, நான் கட்டுரை வாசிக்க செல்லவேண்டும்.



அது வந்து...சிவராசு...அமைச்சர் வீட்ல 'தம்பி' மேடைல பேசனும்னு அவர் வீட்டம்மா ஆசைப்பட்டாங்க. அதனால...என்று கொஞ்சம் தர்மசங்கடமாக இருப்பது போல முகத்தை வைத்துக்கொண்டு....இழுத்தார்..



அங்கே மேடையில்,



'தம்பிக்கு' தகுந்தபடி கூன் வளைத்து நிறுத்தப்பட்ட ஒலிப்பெருக்கியில்.



குட்மார்னிங் டு ஆல். நான் இப்போ திருக்குறல் சொல்லப்போறேன்.



அகர முதல எலுத்தெல்லாம் ஆதி

பகவன் முதர்ட்டே உயகு



பலத்த கரகோரங்களுடன் 'திருக்குறல்' சொல்லிக்கொண்டிருந்தார் மாண்புமிகு கல்வி அமைச்சரின் ஆறு வயது பேரர்.



***************************************************



சாட் லவ்.

***************************************************



அவன் - ஹாய்



அவள் - ஹாய். எஸ்ஸ்.



அவன் - வாட்ஸ் யுவர் நேம் யா ?



அவள் - ஸ்வேதா



அவன் - ஸ்வீட் நேம்.



அவள் - எங்கே இருந்து பேசுறீங்க ?



அவன் - நான் சென்னையில் தான். ஒரு ஐடி எம்.என்ஸியில் டீம் லீடர்.



அவள் - சோ நைஸ். நானும் சென்னை தான்.



அவன் - ஆர் யூ ஹிண்டு



அவள் - எஸ். ஸ்வேதான்னா ஹிண்டுன்னு தெரியாதா ? பட் உங்க நேம் நாகப்பன் அப்படீன்னு இருக்கு ?



அவன் - எஸ். வீ ஆர் செட்டியார்ஸ்.



அவள் - செட்டியார். வெரி குட். நாங்களும் தான்..என்ன சப் கேஸ்ட்?



அவன் - வீ ஆர் நாட்டு கோட்டை செட்டியார்ஸ். யூ ?



அவள் - வீ ஆல்சோ நாட்டுகோட்டை செட்டியார்ஸ்.



அவன் - ஐ லவ் யு.



அவள் - மீ டூ.





ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

just for youi...

பொதுவாக என் வீட்டில் இரண்டு இட்லிகளுக்குத் தொட்டுக் கொள்ள குறைந்தது மூன்று வகைச் சட்னிகள் இருக்கும். அது போக பொடி, எண்ணெய், இலசுமணன் கடை வடை என்று சாதாரண நாளில் கூட ராஜபோக விருந்தாகவே இருக்கும். ஏதாவது விசேஷம் என்றால் சொல்லவே தேவையில்லை. இதற்காக நான் ஏதோ பிறக்கும் போதே தங்கக் கரண்டிகளைச் சப்பிக் கொண்டு பிறந்தவனில்லை. என் அப்பாவின் சாப்பாட்டு ரசனை அத்தகையது. ஏன் இப்படி எடுத்தவுடன் எங்கள் வீட்டுச் சமையற்கட்டிலிருந்து ஆரம்பிக்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். போகப் போக உங்களுக்குப் புரியதானே போகிறது .




இன்றோடு என் நாக்கு செத்து ஒரு வருடம் ஏழு மாதம் இருபத்தி ஏழு நாட்கள் ஆகின்றன. அட ஆமாங்க நான் நொய்டா வந்த நாளை வச்சுதான் சொல்றேன்.



இங்கு நொய்டாவுக்கு வந்ததும் அலுவலகம் சார்பாக வரவேற்பு நிகழ்சிகள், அதை ஒட்டி கார்பரேட் பயிற்சி வகுப்புகள் என்று முதல் வாரம் நொய்டாவைச் சுற்றிக் கொண்டிருந்தோம். அன்று அப்படி ஒரு வகுப்பிற்கு வர தாமதமாகிவிட்டதால் எனக்கு முன்னால் எல்லோரும் வந்து அமர்ந்திருக்கவே ஆண்கள் பக்கத்தில் இடம் இல்லாமல் நின்று கொண்டிருந்தேன். அதுவோ " வாங்க பழகலாம் " வகுப்பு. எங்களுக்கு அதைச் சொல்லித் தர வந்த நல்லவர் என்னை பெண்களுடன் சேர்ந்து உட்காரச் சொன்னார். மற்ற எல்லோருடைய வயிற்று எரிச்சலைக் கொட்டியவாறு அங்கு அமர்ந்தேன். என் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் அவ்வளவு அழகு. முன்தினம் பார்த்தேனே பாட்டிற்கு முன் சூர்யா வர்ணிப்பாரே அப்படி ஒரு அழகு. அழகான பெண்களை பார்ப்பது எளிது. அவர்களுடன் பேசுவது கடினம். அதிலும் அருகில் அமர்ந்துவிட்டு அவர்களைப் பார்க்காதவாறு நடிப்பதென்பது கொடுமையிலும் கொடுமை. அது ஒரு குழு நடவடிக்கை என்பதால் அவர்களுடன் பேசியே ஆக வேண்டும். காலேஜில் நான் படிச்ச மெகானிகல் இன்ஜினீரிங்க்ல எக்ஸாம் ஹால்ல கூட பொண்ணுங்க பக்கம் உக்கார்ந்தது கிடையாது. என் அதிர்ஷ்டம் அத்தகையது. நல்ல வேளை அந்த பெண்ணே பேச்சை ஆரம்பித்தாள். ஊர்,பேர் கேட்டாள். சொன்னேன். நானும் கேட்டேன். அவளுடைய பெயர் தீபிகா. அழகான பெண்களின் பெயர் மறக்கிற அளவுக்கு முட்டாள் இல்லை நான். அவள் பிறந்து வளர்ந்தது எல்லாம் டெல்லியாம்.



என்னை நொய்டாவில் ஒரு ப்ரோஜெக்ட்டில் போட்டது போல் அவளை சென்னையில் ஒரு ப்ரோஜெக்ட்டில் போட்டிருந்தார்கள் போல. அதனால் அவள் சென்னையைப் பற்றி விவரங்கள் கேட்டுக் கொண்டிருந்தாள். காலையில் உண்ண என்ன கிடைக்கும் என்றாள். இட்லி, வடை, சாம்பார், தோசை, ஊத்தப்பம், பூரி என்று சரவண பவன் சர்வர் போல அடுக்கிக் கொண்டிருந்தேன். மதியம் ? சாதம், சாம்பார், ரசம், வத்தல் குழம்பு, தயிர், மோர் என்று மறுபடியும் அடுக்கினேன். சப்பாத்தி கிடைக்காதா என்றாள். கிடைக்குமே. சாயும்கால வேலைகளிலும், இரவிலும் கிடைக்குமென்றேன். முகம் மலர்ந்தாள்.



இப்போ என்னோட டர்ன். இங்க காலையில் என்ன கிடைக்கும் என்றேன் ? ரொட்டி என்றாள். என் ஏமாற்றத்தை வெளிக் காட்டாமல் மதியம் என்றேன். ரொட்டி, தயிர், ஆலு (உருளைக் கிழங்கு ) என்றாள். நீங்கள் சாதமெல்லாம் சாப்பிட மாடீர்களா என்றேன். ஏன் இல்லை ? சாப்பிடுவோமே வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை என்றாள். எனக்கு கஜினியில் அசினை அடித்தது மாதிரி பின் மண்டையில் யாரோ என்னை அடிப்பது போன்று ட்ங்கென்று ஒரு ஒலி கேட்டது. இப்படி தாங்க ஆரம்பிச்சது இந்த ஊரின் சாப்பாட்டுக் கொடுமை.



என்னோட முதல் எதிரி இந்த உருளைக் கிழங்கு தாங்க. உருளைக் கிழங்கை ஒரு வேளை சாப்பிடலாம் இரண்டு வேளை சாப்பிடலாம். ஆனா அதையே மூணு வேளையும் முப்பது நாளும் சாப்பிடச் சொன்னா என்னங்க பண்றது. காலையில் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு. மதியம் அதே உருளைக்கிழங்கை உள்ளே வைத்து சப்பாத்தி. இரவில் உருளைக்கிழங்குடன் கொஞ்சம் கோபி (காலி பிளவர்). இன்னும் இங்கு உருளைக்கிழங்கு ஜூஸ் கிடைக்காததுதான் மிச்சம்.



சரி ஸ்நாக்ஸ் சாப்பிடலாம் என்று பார்த்தால், நம்மூரில் முக்குக்கு முக்கு வடை சுடுவது போல இங்கு சமோசாவும், ஜிலேபியும் சுடுவார்கள். நம் ஊர் சமோசாக்களில் எல்லாம் கொஞ்சமே என்று உருளைக் கிழங்கு இருக்கும். இங்கோ உருளைக் கிழங்கிற்கு இடையில் கொஞ்சமே என்று சமோசா ஒளிந்திருக்கும். ஏற்கனவே இங்கு வழங்கப்படும் டீ குறித்து கூறியிருக்கிறேன்.



இவ்வளவுதான் இவர்களின் வெரைட்டியா என்று கேட்டால், இல்லை. தலைப்பில் சொன்னது போல அண்டா பரோட்டா எனில் உருளைக் கிழங்கு இருந்த இடத்தில் முட்டையை வைத்து நிரப்பித் தருவார்கள். அவ்வளவு தான். இந்தியில் அண்டா என்றால் முட்டை என்று அர்த்தம்.



சரி இவர்களது உணவுகள் தான் நமக்கு சரிப்பட்டு வரவில்லை என்றால் இவர்கள் உண்ணும் முறை கூட நமக்கு ஒத்து வருவதில்லை. எதைச் சாப்பிட்டாலும் கரண்டி(ஸ்பூன்) வைத்தே சாப்பிடுகிறார்கள். நாமும் அப்படியே சாப்பிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். சாதம் என்றால் ஏதோ முயற்சி செய்து ஸ்பூனில் சாப்பிட்டு விடலாம். ஆனால் நம்மூர் தோசையையும் அவ்வாறு சாப்பிட வேண்டும் என்று சொன்னால் என்ன செய்ய இயலும் மக்களே ? ( அவர்கள் தோசையையும் ஸ்பூனில் தான் சாப்பிடுகிறார்கள்). இங்கே டில்லியில் எனது அக்கா ஒருவர் இருக்கிறார். அவர் வட இந்தியர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். மிக்க மகிழ்ச்சியாகவே இருக்கிறார் என்ற போதும் அவர் சொல்லும் ஒரு குறை என்ன தெரியுமா? எங்க வீட்டுக்காரர் என்னை என் கையால சாப்பிட விட மாட்டிக்கிறார் என்பதே. அதுபோக இவர்கள் தரையில் அமர்ந்து சாப்பிடும் வழக்கம் இல்லாதவர்கள். என் அக்காவிற்கோ தரையில் உட்கார்ந்து சாப்பிட்டால்தான் சாப்பிட்டபடியே இருக்கும். என்ன செய்வது அவரது கணவர் இல்லாத சமயங்களில் தரையில் உட்கார்ந்து ஒரு கட்டு கட்டுகிறார்.



அப்படி இவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் அங்கு இருக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். " பிறக்க ஒரு ஊர். பிழைக்க ஒரு ஊர் ". நான் மட்டும் என்ன விதிவிலக்கா?. இன்னும் எவ்வளோ சொல்லிக் கொண்டு போகலாம். ஆனால் யாராவது தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த வட இந்தியர் ஒருவர் இதைப் படிக்க நேரிட்டால் என்னை ஆள் வைத்து அடிக்க ஏற்பாடு செய்யலாம். அதனால் இத்துடன் என் சாப்பாட்டு புலம்பல்களை முடித்துக் கொள்கிறேன்.



பி.கு : இதே போன்று வட இந்தியாவில் இருந்து சென்னை வந்து ரொட்டி கிடைக்காமல் புலம்பும் ஜீவன்களுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்.





Na.Murugesh.

வெளியிலிருந்து வருகிறவர்கள்: யாசிப்பவர்கள்


ந. முருகேசபாண்டியன்





பச்சைப் பசலென்ற இயற்கை எழிலும் தூய்மையான காற்றும் எனக் கிராமம் பற்றிப் பொதுப் பிம்பம் கட்டமைக்கப்பட்டுளளது. எல்லோரும் தன்னிச்சையுடன் சுதந்திரமாக இயங்குகிற போது சந்தோஷமும் உற்சாகமும் பொங்குவதாகத் தோன்றும். கள்ளம் கபடமற்ற வெள்ளந்தியான மனிதர்களின் சுபாவம் மனதுக்கு நெருக்கமாக இருக்கும். இவையெல்லாம் ஒருபக்கக் காட்சிகள். இன்னொருபுறம் கிராமம் என்றாலே கண்காணிப்புக்கு உட்பட்ட இறுக்கமான அமைப்பு என்பது பலருக்குத் தெரியாது. சாதி, மதம், வீட்டு வகைப்பு என ஒவ்வொருவரின் அடையாளமும் வரையறுக்கப்பட்டிருக்கும். ஒரு பெரிய கிராமம் எனினும் அங்கிருக்கும் ஒவ்வொருவருடைய நெற்றியிலும் இன்னார் பேரன், இன்ன சாதியைச் சார்ந்தவர் என்பது பதிவாகியிருக்கும். அதிகாரத்தின் வீச்சும் கண்காணிப்பின் அரசியலும் எல்லோருடைய வாழ்க்கையிலும் பதிவாகியிருக்கும். ஊருக்கு வெளியே இருக்கும் ஓடையில் வெள்ளம் புரண்டோடும்போது, பத்துப் பன்னிரண்டு வயதில் சிறுவர்கள் குதித்து நீச்சலடித்துக் கரையேறுவோம். அந்தத் தகவல் எங்கள் தலைமுடி காய்வதற்குள் எங்கள் பெற்றோரின் காதுகளுக்குப் போய்விடும். சின்னப் பையன்களுக்குக் கூட சுதந்திரமான இயக்கம் சாத்தியப்படாது. அதிலும் ஆதிக்கச் சாதியினரின் அதிகாரம் சிறுவர்களின் மீது பாய்வது கொடூர மாக இருக்கும்.



கிராமம் என்பது பெரும் வெளி போலத் தோன்றினாலும், அவ்வமைப்பிற்குள் வெளியிலிருந்து வந்து போகிறவர்கள் யார்யாரெனத் தெரிந்துவிடும். பொதுவாகக் கிராமத்திற்குப் பரதேசிகளும் சாமியார்களும் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அவர்களை யாரும் தொந்தரவாகக் கருதமாட்டார்கள். பகல் முழுக்க வெயிலில் கடுமையாக உழைத்துச் சம்பாதிக்கும் குடியானவர்கள், எவ்விதமான உடலுழைப்பும் இல்லாமல், வீட்டு வாசலில் சோறு கேட்டு நிற்பவர்களைக் கேவலமாக எண்ண மாட்டார்கள். காவியுடை அணிந்த சாமியார்கள் தவிர பிச்சைக்காரர்களும் கிராமத்துக்கு வருவார்கள். ‘நல்ல உடம்பு இருக்கு, உடல் வளைஞ்சு வேலை செய்தால் என்ன கொள்ளை' என்று சொல்வதைச் சாதாரணமாகக் கேட்கலாம்.



‘அன்னைக் காவடி' தூக்கி வரும் சாமியார் உரிமையுடன் தானியம் கேட்டு வருவார். குளித்து முடித்துச் சுத்தமான காவியுடை உடுத்தி உடம்பெங்கும் திருநீறு பட்டையுடன் சாமியார் வருவார். அவருடைய தோளில் காவடி இருக்கும். உலக்கை மாதிரியான மரமானது வெண்கலப் பூண் பொருத்தப்பட்டிருக்கும். மரத்தின் இடையே பித்தளையிலான பூ வேலைப்பாடு மிக்க தகடுகள் பதிக்கப்பட்டிருக்கும். மரத்தின் முன்னும் பின்னும் தொங்கும் பித்தளைச் சங்கிலியில் தொங்கும் பித்தளைப் பாத்திரங்களில் திருநீறு பட்டையின் பளபளவென மின்னும். மரத்தில் பொருத்தப்பட்டுள்ள வெண்கல மணிகள் சாமியார் நடக்கும்போது ஒலித்துக் கொண்டேயிருக்கும். அவர் வீட்டு வாசலில் நின்று ‘அன்னக் காவடி’ என்று குரல் மட்டும் கேட்பார். சாமியாரின் மிடுக்கான தோற்றப் பொலிவும் பளபளக்கும் பித்தளைக் காவடியும் காரணமாக யாரும் இல்லை' என்று சொல்லமாட்டார்கள். பிச்சை கேட்பதை கலை நுணுக்கத்துடனும் அழகாகவும் கேட்ட ‘அன்னக் காவடிகள்' எழுபதுகளிலே காணாமல் போய்விட்டனர்.



பிச்சை கேட்டு வருவதில் கௌரமாகச் செயற்படுகிறவர்கள் உலகமெங்கும் இருக்கின்றனர். பூம்பூம் மாட்டை ஓட்டிக் கொண்டு, தோளில் உறுமியை மாட்டிக் கொண்டு வீடுவீடாக வரும் பூம்பூம் மாட்டுக்காரர் கிராமத்துத் தெருக்களில் கவர்ச்சிகரமானவர். பூம்பூம் மாட்டின் முகத்தில் அழகிய வண்ணமயமான முகபடம் அணியப்பட்டிருக்கும்; கொம்புகளில் பல வண்ணத் துணிகளால் சுற்றுப்பட்டு நுனியில் குஞ்சலம் தொங்கவிடப்பட்டிருக்கும் துணியில் ஆங்காங்கே கோலிகள, பாசிகள் பொருத்தப்பட்டு பார்க்க அழகாக இருக்கும். பூம்பூம்மாடு தானகவே நடந்து போகும். மாட்டுக்காரர் கழுத்தில் கட்டித் தொங்க விட்டுள்ள உறுமி மேளத்தை அடித்துக் கொண்டு பின்னே நடந்து வருவார். வீட்டு வயலில் நிற்கும் மாட்டிடம், மாட்டுக்காரர், ‘இந்த வீட்டு மகராசி மகாலட்சுமி நமக்கு அரிசி போடுவாங்களா' என்று கேட்பார். அம் மாடு ‘ஆமாம்’ என்பது போலத் தலையை ஆட்டும். ‘இந்த வீட்டுக்கு நல்ல சேதி வரபோகுமா' என்ற கேள்விக்கும் மாடு தலையை அசைக்கும். மாட்டுக்காரர் கேட்கும் கேள்விகளுக்கு மாட்டின் எதிர்வினை பார்க்க வேடிக்கையாகவும் அழகாகவும் இருக்கும். அரிசியை வாங்கியவுடன் மாட்டுக்காரர், ‘அம்மாவுக்கு வணக்கம் சொல்லு' என்றவுடன், மாடு முன்னங்காலை மடித்து, தலையைத் தாழ்த்தி வணக்கம் செய்வது அருமையான காட்சியாக இருக்கும். பூம்பூம் மாடு போகும் வீட்டிற்குப் பின்னால் சிறுவர் சிறுமியர் திரண்டு படை போலப் பின்னேயே போவார்கள். அந்த மாடு, மாட்டுக்காரரின் எல்லாப் பேச்சுக்கும் பணிந்து செயற்படுவது எப்படி என்று சிறுவர்கள் லயிப்புடன் பேசிக் கொள்வார்கள். பூம்பூம் மாடு இல்லாத தெருக்களாய் இன்றைய கிராமத்துக் தெருக்கள் வறண்டு போய்விட்டன.



கிராமத்தினர் தேநீர் குடிப்பது வீட்டு வாசலில் அல்லது திண்ணையில் தான். இரவு உணவை வீட்டுக்கு முன்னே தரையில் அமர்ந்து சாப்பிடும் குடும்பங்களும் ஊரில் உண்டு. பெரும்பாலும் பகல்வேளையில் ஓய்வாக இருக்கும்போது வீட்டுத் திண்ணைகள் தால் தங்குமிடமாக இருக்கும். தொளதொளத்த சட்டை தோளில் கறுப்புப் போர்வை, தலையில் பெரிய உருமா, கையில் கம்புடன் திடீரென ஒரு பெரியவர் வீட்டு வாசலில் வந்து நின்று, ‘இந்த வீட்டுக்கு நல்ல சேதி வரப் போகுது' என்று சொல்லிவிட்டுக் கையிலிருக்கும் குடுகுடுப்பையை ஆட்டுவார். மணிச்சத்தத்துடன் ஒலிக்கும் சிறிய உடுக்கையின் ஓசை வீட்டிலிருப்போர் கவனத்தை ஈர்க்கும். ‘ஜக்கம்மா சொல்றா. . . . நினைச்ச காரியம் நடக்கப் போகுது’ என்று சொல்லும்போது, அவரைத் தவிர்க்கவியலாமல் போய்விடும். குடுகுடுப்பைக்காரர்கள் நல்ல சேதியை நன்னம்பிக்கையாக எல்லோருடைய மனங்களிலும் விதைத்துக் கொண்டிருந்தனர். ‘இந்த வீட்டில் ஒரு கன்னி- தீயில் மாண்ட கன்னி ஈசன மூலையில் இருக்கா- அவள் ஒரு குறையு வராமல் பார்த்துக் கொள்ளுவாள்' என்று சொன்னவுடன், வீட்டுக்காரர் அரைக்கால் படியளவு அரிசி அல்லது சில்லறைக் காசைக் கொடுப்பார். ‘சாமி ஏடு போட்டுப் பார்க்கலாமா’ என்றவுடன் சரி எனத் தலையை ஆட்டினால் போதும். குடுகுடுப்பைக்காரர் திண்ணையில் உட்கார்ந்து, கண்களை மூடி, ‘தாயே ஜக்கம்மா நல்ல வாக்கு சொல்லு. . .நல்ல வழி காட்டும்மா’ என்று வேண்டி கையில் பனையோலை ஏட்டைக் கையில் வைத்துக் கொண்டு சிறிய கம்பியை வீட்டுக்காரரிடம் கொடுப்பார். அவர் ஓலைகளுக்கிடையில் கம்பியை நுழைத்தவுடன் அந்த ஏட்டிலுள்ள படம், வாசரங்களைக் குடுகுடுப்பைக்காரர் காட்டுவார். இம்மாதிரி மூன்று தடவைகள் காட்டுவார். புராணக் காட்சிகள், சாமி படங்கள் கோட்டோவியமாக வரையப்பட்டிருக்கும் ஓலையை வைத்து எதிர்காலப் பலன்கள் சொல்லப்படும். சீதை அசோகவனத்தில் இருக்கும் ஓவியம் வந்தால், ‘இப்ப உங்களுக்குக் கஷ்டகாலம்தான். ராமபிரான் வந்து காப்பாத்துற மாதிரி விரைவில் அது நீவ்வி விடும்' என்று சொல்லும்போது கேட்பவர்கள் தலையை ஆட்டுவார்கள். பெரும்பாலும் கண்ணேறு, கண் திருஷ்டி காரணமாக உடல் நலக் கோளாறு, பொருளாதாரச் சுணக்கம் ஏற்பட்டுள்ளது, பரிகாரம் பண்ண வேண்டும் என்று குடுகுடுப்பைகாரர் சொல்லும் தொனியே, கேட்பவருக்குப் பயத்தை உருவாக்கிவிடும். தான் ஏதோ மீள இயலாத பிரச்சனை, உருவாக்கி விடும். கஷ்டத்தில் மாட்டியிருப்பதாக நினைக்கத் தொடங்குவார். பிறகென்ன? கோழி, பழைய வேட்டி, நிறை நாழி நெல், 51 ரூபாய் தட்சிணையை வாங்கிக்கொண்டு போய் தீட்டுக் கழிக்கிறேன் என்று விளம்பிப் போய் விடுவார். தலைக்கு வந்தது. தலைப்பாகையோடு போனது போல வீட்டுக்காரர் நினைத்துக் கொள்வார்.



இரவுவேளை. அம்மாவாசை அன்று கும்மிருட்டாக இருக்கும். தெரு விளக்கு எல்லாம் கிராமத்துக்கு வராத காலம். திடீரென நள்ளிரவு நேரத்தில் இருளைக் கிழித்துக் கொண்டு குடுகுடுப்பை. ஒலிக்கும் சத்தம் கணீரெனக் கேட்கும். தெரு நாய்களும் இடைவிடாமல் குரைத்துக்கொண்டிருக்கும். தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருக்கும் பெரிசுகள் எழுந்து உட்கார்ந்து காதைக் கூர்மையாக்குவார்கள். நாய் குரைக்கும் சத்தம் கேட்டு விழிக்கும் சிறுவர்களுக்குக் குடுகுடுப்பைச் சத்தம் பயத்தை ஏற்படுத்தும். உண்களை இறுக்க மூடிக் குப்புறப்படுத்துக் கொள்வார்கள். பேய்களும் முனிகளும் உலாவும் நள்ளிரவில் சுடுகாட்டுக்குப் போய்விட்டு வந்து ஜக்கம்மாவின் அருளுடன் குறி சொல்லும் குடுகுடுப்பைக்காரரின் வாக்கினை வரிக்கு வரி உண்மை என்று நம்புகிறவர்கள் ஊரில் பலர் இருந்தனர். “இந்த வீதியிலே இருக்கிற ஒரு வீட்டுக்கு கெட்ட சேதி வரப் போகுது. . . ஜக்கம்மா சொல்றா. . . பெரிய உசிரு போய்ச் சேரப்போகுது. . . ஐயோ. . .ன்னு போகப் போகுது. . . ஜக்கம்மா சொல்றா” என்று சொல்லிவிட்டு குடுகுடுப்பையை ஒலித்தவாறு நடந்து போகிற குடுகுடுப்பைக்காரரின் ‘பேச்சு' அடுத்த நாள் பகலில் தெரு முழுசாகப் பேச்சாக இருக்கும். சில வீடுகளில் முன்னால் ஓரிரு வார்த்தைகளிலும் வாய்க்கு வந்ததை ‘வாக்கு' என்ற பெயரில் சொல்லிவிட்டுப் போகிற சாமக் கோடாங்கி அல்லது ராக் கோடாங்கியின் சொல்லுக்குக் கிராமத்துப் பெரும் மதிப்பு இருந்தது. இருட்டில் சாமக் கோடாங்கி எதிரில் போக பெரிய ஆட்களே பயப்படுவார்கள். ஏதாவது கெட்டது நிகழ்ந்துவிடும் என்று நம்பினர்.



மறுநாள் பகலில் அதே குடுகுடுப்பைக்காரர் ஊருக்குள் வந்து வீடுவீடாகக் குறி சொல்லும்போது, நெல், அரிசி அதிகம் கிடைக்கும். சில பெண்கள் நேற்று ராத்திரி சொன்ன குறியை இன்னும் விளக்கமாகக் சொல்லுமாறு கேட்டுக் காசு தருவார்கள். கிராமங்களில் பெரும்பாலும் வயதானவர்கள் சரியான பரமாரிப்பின்றி திண்ணையில் கட்டப்பட்டுள்ள தென்னந்தட்டி அல்லது சாக்குப் படுதாவுக்குள் படுத்துக் கிடப்பார்கள். அதிலயும் பெரிய உசிரு மேலூருக்குக் கிளம்பி போகுது என்ற வாக்கு, யார் அந்தப் பெரிசு என்று யோசிப்பார்கள். ஓரிரு வாரங்களுக்குள் யாராச்சும் வயதானவர் இறந்து விட்டால் போதும், ‘எனக்கு போன விசாலக் கிழமை ராத்திரி சாமக் கோடாங்கி சொல்றப்பவே சந்தேகமாக இருந்தது. உங்க அப்பச்சி தான் போகப் போறார்ன்னு. . . இப்ப எப்படி சரியாய் போச்சுப் பார்த்தாயா' எனது இழவு வீட்டில் பேசிக் கொண்டிருப்பார்கள். குடுகுடுப்பைக்காரர் எங்கிருந்து வருகிறார் என்று யாருக்கும் தெரியாது. உம்பளத்து நாயக்கரு. . ஜக்கம்மாவோட அருள் பெற்றவர் வாக்குப் பலிக்கும் என்ற நம்பிக்கை மட்டும் பரவலாக இருந்தது.



அறுவடை நேரம் கிராமத்தில் ஆணும் பெண்ணுக்கும் ஆயிரத்தெட்டு வேலைகள் இருக்கும். அந்த ஒரு மாதம் யாருக்கும் உட்கார நேரமிருக்காது. அந்த நேரத்தில் மணியாட்டிக்காரர்கள் ஊருக்குள் நுழைவார்கள். அவர்களுக்கு நாழிக்காரர் என்று இன்னொரு பெயர் இருந்தது. வெள்ளையிலான நீள அங்கியை உடலில் அணிந்திருப்பார்கள் (நைட்டி போல இருக்கும்). தலையில் வெள்ளைத் தலைப்பாகை. அதில் பித்தளைப் பிறை இருக்கும். பிறையின் நடுவில் மயிலிறகு சொருகப்பட்டிருக்கும் வெண்கலத்தினால் பெரிய மணியை வைத்திருப்பார்கள். தோளில் நெல்லை வாங்குவதற்காகப் பெரிய பையைக் கோர்த்திருப்பார்கள். இன்னொரு கையில் கம்பு இருக்கும். இடது கையில் வைத்திருக்கும் மணியை ஆட்டிக் கொண்டே வீடு வீடாகப் போவார்கள். குடிசை வீட்டுப்பக்கம் போக மாட்டார்கள். நிலம் வைத்திருப்பவர்கள், ஓரளவு வசதியானவர் வீட்டு வாசலில் நின்று மணியை ஆட்டியவாறு பாடத் தொடங்குவார்கள். அந்தப் பாடல் வாழ்த்துவது போலிருக்கும். ‘பொலி பெருசு. . . பட்டி பெருசு. . .உளம் பொலிய. . .’என்று எல்லாமே நல்லபடியாக நடக்க வேண்டும்; குடியானவர்களுக்கு நல்ல மகசூல் காண வேண்டும் என வேண்டுவதிலும் கேட்பவர்களுக்கு மன நிறைவு ஏற்படும். நெல் கொண்டுவந்தால் நாழி அளவு நெல் பிடிக்கும் மணியைக் கவிழ்த்துப் பிடித்து இரு தடவைகள் நெல்லை வாங்கிக் கொள்வார்கள். பணம் எனில் குறைந்தது ஒரு ரூபாய் கொடுத்தால்தான் வாங்கிக் கொள்வார்கள். இல்லையெனில் வேண்டாம் எனக் கிளம்பிவிடுவார்கள். நெல் அல்லது பணம் வாங்கிய வீட்டுச் சுவரில் காவிக்கட்டியினால் ஏதோ கிறுக்கி விட்டுப் போவார்கள். வேறு யாராவது மணியாட்டிக்காரர் வந்தால், ஏற்கனவே கொடுத்தாச்சு என்றால், காவிக் கிறுக்கலைப் பார்த்து விட்டுப் போய் விடுவார்கள். மணியாட்டிக்காரர்களுக்கு நெல் கொடுக்க வேண்டிய கட்டாயம் எப்படி ஏற்பட்டது என்பது புலப்படவில்லை. கடந்து பத்தாண்டுகளாக மணியாட்டிக் காரர்கள் வருவதில்லை.



பச்சைத் துணியைத் தோளில் மடித்துப் போட்டுக் கொண்டு, தலையில் சிறிய வெள்ளைக் குல்லாயை மாட்டியுள்ள நான்கைந்து பேர் கையில் ‘டேப்’புடன்(பறை) வீடுவீடாக வருவார்கள். நாகூர் ஆண்டவனின் மீது பாடல் பாடும் முஸ்லிம் பாடகர்களின் குரல் கணீரென ஒலிக்கும். டேப்பின் ஓசையும் அதன் வளையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிறிய வெண்கல மணியின் ஓசையும் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். பெண்கள் தங்கள் இடுப்பில் வைத்திருக்கும் குழந்தைகளை அவர்களை நோக்கிக் காட்ட, அவர்களில் ஒருவர் மயிற் தோகையால் குழந்தையின் தலையை மூன்று தடவைகள் தடவுவார். உரத்த குரலில் நபியின் புகழைப் பாடும் அந்தப் பாடகர்களைப் பார்த்தால், யாரும் பிச்சை எடுக்கிறவர்களாகக் கருத மாட்டார்கள். அப்படியொரு எடுப்பான தோற்றமளிக்கும்' உள்ளத்தை உருக்கும் பாடல். கிராமத்தினர் தாங்களாகவே முன்வந்து பணம் அல்லது நெல்லைக் கொடுப்பார்கள். அவர்கள் தெருவைக் கடந்து போன பின்னரும், டேப்பின் ஒலி கேட்டுக் கொண்டேயிருக்கும்.



புரட்டாசி சனிக் கிழமைகளில் காலை வேளையில் ஓரளவு வசதியானவர்கள் வீட்டுமுன்னர், ‘வெங்கட்ராமா கோயிந்தா. . . கோயிந்த லட்சம் கோயிந்தா’என்ற குரல் கேட்கும். வெளியே எட்டிப் பார்த்தால், எங்கள் ஊரில் பல்லாண்டுகளாக வாழந்து வரும் நாயக்கர் இனத்துச் சிறுவர்கள் கையில் நாமம் போட்ட பெரிய சொம்புடன் நிற்பார்கள். நெற்றியிலும் உடம்பிலும் நாமம் போட்டிருக்கும். பள்ளிக்கூடத்தில் தங்களுடன் படித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் இப்படிக் கிளம்பியிருப்பது சிறுவர்களுக்குக் குதூகலத்தை ஏற்படுத்திவிடும். அவர்கள் ‘வெங்கட்ராமா கோயிந்தா எனக் கத்தி முடித்தவுடன், பின்னாலேயே போகும் சிறுவர்கள் ‘வெங்கட்ராமா கோயிந்தா. . சட்டியைத் தூக்கிடா நயினா’ என்று கேலியுடன் கத்துவார்கள். ஒரே சிரிப்பாக இருக்கும். பெண்கள் வீட்டிலிருந்து அரிசியைக் கொண்டு வந்து, பெரிய சொம்பில் போடுவார்கள். இப்படி வீடு வீடாகச் சென்று சேகரித்த அரிசியை அவர்கள் என்ன செய்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது. வீட்டுக்கு வந்த ஆளை எப்படி வெறுங்கையோட அனுப்புவது என்பதுதான் கிராமத்துக்காரர்களின் பிரச்சனை.



குரங்கைப் பிடித்துப் பழக்கி, அதன் இடுப்பில் கயிற்றைக் கட்டி வீடுவீடாக அழைத்து வந்து, வித்தை காட்டும் குரங்காட்டிகள் அவ்வப்போது வந்து போய்க் கொண்டிருப்பார்கள். எங்கே போய் க் குரங்குக் குட்டியைப் பிடிப்பார்கள்? அதை எப்படிப் பழக்குவார்கள்? அது என்ன உணவு சாப்பிடும்? இப்படிப் பல்வேறு கேள்விகளுடன் சிறுவர்கள் பின்னாடி அலைவார்கள். துணிச்சலான சிறுவர்கள் குரங்குக்கு ஏதாவது காசு கொடுப்பார்கள். குரங்காட்டி குரங்கை பார்த்துக் ‘கை கொடு' என்றவுடன் அது தனது சிறுவனை நோக்கிக் கையை நீட்டிக் குறுக்கும். குரங்குடன் கை குலுக்கிய சிறுவன் கூச்சத்துடன் நெளிவான்.



பார்வையிழந்தோர், தொழு நோயாளிகள், கைகால் இல்லாதவர்கள், வயசான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எனப் பிச்சையெடுக்கும் கூட்டத்தினர் கிராமத்துத் தெருக்களில் யாசித்துக் கொண்டிருப்பார்கள். சில வீடுகளில் ஏதாவது போடுவார்கள்; சில வீடுகளில் உலை கொதிக்குது என்பார்கள்; சில வீடுகளில் பெரிய ஆட்கள் வெளியே போயிருக்காரர்கள் என்று சிறுவர்கள் சொல்வார்கள்.



வருஷம் முழுக்க வயலில் வேலை, கட்டிட வேலை, மண் வெட்டுதல், கிணறு தோன்றுதல் என உடலுழைப்பில் வயதான அப்பா, அம்மா எனப் பலரையும் சம்பாதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும். ஓரளவு நிலம் வைத்து விவசாயம் பார்க்கும் குடியானவர்கள் வாழ்க்கைத்தரம் உயர்வாக இருக்கும். எந்த வகையிலும் உழைப்பில் ஈடுபடாமல், பிறரை அண்டி வாழும் குடும்பம் ஒருபுறம், ஏதோ ஒருவகையில் திறமையை வெளிப்படுத்தி பொருள் ஈட்ட முயலும் கும்பல் ஒருபுறம் எனப் பலதரப்பட்டவர்கள் வெளியிலிருந்து வந்து கிராமத்து தெருக்களில் திரிந்து கொண்டிருக்கிறார்கள். சமூகத்தின் பொது நீரோட்டத்திலிருந்து பிரிந்து வந்து, கிராமம் கிராமமாகப் பயணித்து வாழ்ந்து வந்த ‘பரதேசிகள்' ஓருவகையில் வித்தியாசமானவர்கள். இப்படிப்பட்டவர்களைக் கிராமத்தினர் புறக்கணிக்கவில்லை. மனுஷன் என்றால் இப்படித் தானிருப்பான் என்று அங்கீகரிக்கரிக்கவே செய்தனர். காளை மாட்டை உழவு, பரம்படித்தல், வண்டிகளில் பூட்டுதல் எனப் பயன்படுத்திய குடியானவர்களுக்குக் ‘பூம்பூம் மாட்டுக்காரன்’ விநோதமாகக் தெரிந்தது வித்தியாசமில்லை. ‘நல்ல சேதி வரப்போகுது’ என்று நம்பிக்கையை விதைக்கும் குடுகுடுப்பைக்காரனும் நல்லனாகத் தெரிகிறான். ஒருவாய் சோற்றுக்காக வாசலில் நின்று கொஞ்சம் பிச்சைக்காரனும் கேவலப்பட்டவன் அல்ல, அவன் தலையெழுத்து நாலு வீட்டில் பிச்சையெடுத்து வாழ வேண்டியிருக்கு என்று நினைத்தனர்.



கண்காணிப்பின் மையமாகக் கிராமம் விளங்கினாலும், அடுத்த வேளை உணவுக்காக அங்கு நுழையும் எவரையும் வெறுக்கவில்லை என்பது தான் உண்மை.









ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

Shobasakthi.

ரூபம்


Print this Page

இவன் வீட்டின் வாசற்படியை அடைந்த போது வீட்டின் உள்ளே தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ச உரையாற்றிக்கொண்டிருந்தார். இவன் வாசற்படியின் ஓரமாக உட்கார்ந்துகொண்டு தலையைச் சாய்த்துத் தொலைக்காட்சியைப் பார்த்தான். “உங்களைக் கவுரவமாகவும் சுயமரியாதையுடனும் வாழ வைப்பது என்னுடைய பொறுப்பு, நான் இந்த நாட்டு மக்கள் அனைவரதும் தலைவன் ” என ராஜபக்ச தமிழில் பேசிக் கொண்டிருந்தார். அந்த அகலமான தொலைக்காட்சித் திரை முழுவதையும் ராஜபக்சவின் முகம் நிறைத்திருந்தது. அவ்வளவு பெரிய தொலைக்காட்சியை இவன் இப்போதுதான் பார்க்கிறான். தட்டையாகவும் நவீனமாகவும் துல்லியமான ஒலியமைப்புடனும் அது இருந்தது. வீட்டுக்காரரின் மகன் அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியைச் சவூதியிலிருந்து அனுப்பி வைத்திருக்கலாம். இவன் முகத்தைத் திருப்பி வீதியைப் பார்த்தான். வீதியில் இருள் மண்டியிருந்தது.



இவன் சிறுவனாய் இருந்தபோது அம்மாவிடம் தொலைக்காட்சியொன்று வாங்கும்படி இடைவிடாமல் நச்சரித்திருக்கிறான். இறந்து போன அப்பாவின் சொற்ப பென்ஷன் பணம் மட்டுமே இவர்களிற்கு வருமானம். அந்தப் பணத்தில் தான் அம்மா இவனையும் இவனது அக்காவையும் பட்டினியில்லாமல் பள்ளிக்கூடம் அனுப்பிக்கொண்டிருந்தார். அப்போது இந்த வீட்டில் ஒரு சிறிய கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சியிருந்தது. இவனும் அக்காவும் இரவு நேரத்தில் இங்கே தொலைக்காட்சி பார்க்க வருவார்கள். அக்காவிற்குத் தொலைக்காட்சி பார்ப்பதில் ஏனோ ஆர்வமில்லை. ஆனால் இருளில் தனியாக வருவதற்கு இவன் பயப்படுவான். அதனால் அக்காவைத் துணைக்கு அழைத்து வருவான். தரையில் அமர்ந்து இவன் கண்கொட்டாமல் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பான். சிறிது நேரமானதுமே அக்கா “வீட்ட போகலாமா” என முணுமுணுப்பாள். அது இவனது காதில் விழாது. அக்கா பொறுக்க முடியாமல் இரகசியமாக இவனது தொடையைக் கிள்ளும்போது, இன்னும் கொஞ்ச நேரம் என இவன் அக்காவிடம் மன்றாடுவான். வீட்டுக்காரர்கள் தேனீரும் அவித்த பனங்கிழங்கும் தருவார்கள். அக்கா வெட்கப்படுவாள். அவற்றை வாங்காவிட்டால் தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்க மாட்டார்களோ என்ற பதற்றத்திலேயே இவன் அவற்றை வாங்கிக்கொள்வான்.



இவன் வீட்டில் வெறும் தீப்பெட்டியின் மீது வெள்ளைத்தாளை ஒட்டி நடுவே கத்தரித்து பக்கவாட்டில் வர்ணம் தீட்டித் தொலைக்காட்சிப் பெட்டி செய்து விளையாடிக் கொண்டிருப்பான். பள்ளிக்கூடம் எடுத்துச் செல்லும் பையில் எப்போதும் சில தீப்பெட்டித் தொலைக்காட்சிகள் இருக்கும். கொஞ்சம் வளர்ந்ததும் தொலைக்காட்சி பார்ப்பதற்காக இவன் கிராமத்துக் கடைத் தெருவுக்குப் போகத் தொடங்கினான். அங்கேயிருந்த ‘மீனா கபே’யில் எப்போதும் வண்ணத் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும். தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது இவன் வசியத்தில் விழுந்தவன் போலிருப்பான். அந்த நேரங்களில் இவனது கண்கள் ஒளிர்ந்துகொண்டேயிருக்கும். எந்த நிகழ்ச்சியும் அவனுக்கு அலுப்பூட்டியதேயில்லை. அலைவரிசைக் குழப்பத்தால் அடிக்கடி தொலைக்காட்சியில் வெறும் புள்ளிகள் மட்டுமே தோன்றும். அந்தப் புள்ளிகளை ஆயிரக்கணக்கான மனிதர்கள் ஓடி வந்துகொண்டிருப்பது போல கற்பனை செய்துகொள்வான். தொலைக்காட்சியில் சிலசமயங்களில் படம் மட்டும் வரும், ஒலி வராது. படத்துக்கு ஏற்ற ஒலிகளை இவனாகவே கற்பனை செய்து ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருப்பான். ஒலி மட்டும் வந்தாலும் படக்காட்சிகளை இவனால் கற்பனையில் உருவாக்கிக்கொள்ள முடியும். மின்சாரம் துண்டிக்கப்படும் போது வெறுமனே இவனால் தொலைக்காட்சியைக் கண்ணிமைக்கால் பல நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருக்கவும் முடியும். தொலைக்காட்சிப் பெட்டியொன்று தான் இவனுக்குத் தேவையானது. அதிலிருந்து படங்களையும் ஒலிகளையும் இவனால் உருவாக்கிக்கொள்ள முடியும். கடை மூடப்படும் போதுதான் இவன் வீட்டுக்குத் திரும்பி வருவான்.



பக்கத்து வீட்டிற்கு இவன் தொலைக்காட்சி பார்க்கப் போவது குறைந்திருந்தது. இரண்டு நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையின் ஓரத்தில் இவனின் கிராமம் அமைந்திருந்தது. அந்த நெடுஞ்சாலையை ஒட்டித்தான் கடைத்தெரு இருந்தது. அந்த நெடுங்சாலையால் இராணுவம் ரோந்து செல்லும் நாட்களில் கடைத் தெரு வெறிச்சோடிவிடும். இராணுவ வாகனங்கள் துரத்தில் வரும் ஒலி கேட்டவுடனேயே கடைகள் சடுதியில் மூடப்படும். கடைத் தெரு மனிதர்கள் நெடுஞ்சாலையிலிருந்து விலகி ஓடிவிடுவார்கள். இராணுவம் கடை வீதியைக் கடந்து செல்லும் போது சில வேட்டுக்களைத் தீர்க்காமல் செல்வதில்லை. அது வெறுமனே எச்சரிக்கை வெடியாகத்தானிருக்கும். இராணும் ஒருபோதும் நெடுஞ்சாலையிலிருந்து விலகிக் கிராமத்திற்குள் நுழைந்ததில்லை.



கடைத்தெரு மூடிக் கிடக்கும் நாட்களில் இவன் பக்கத்து வீட்டிற்குத்தான் தொலைக்காட்சி பார்க்கப் போவான். அவர்கள் இப்போது ஒரு சிறிய வண்ணத் தொலைக்காட்சியை வாங்கியிருந்தார்கள். இவன் ஆள் கொஞ்சம் வளர்ந்துவிட்டதால் இப்போது இவனை நாற்காலியில் உட்காருமாறு அவர்கள் வற்புறுத்துவார்கள். நொறுக்குத் தீனிகளும் தேனீரும் கொடுப்பார்கள். அவற்றை வாங்கத்தான் இவன் கொஞ்சம் வெட்கப்படுவான். இவ்வளவுக்கும் இவனது தாயாரும் இந்த வீட்டுக்காரியும் நெருங்கிய சிநேகிதிகள் தான். அவசரத்துக்குச் சீனி, தேயிலை என இருபக்கமும் கைமாற்றும் நடப்பதுண்டு. ஆனால், இவனுக்குத்தான் யாரிடமும் எதுவும் வாங்கிக் கொள்ளவதென்றால் கூச்சமாயிருக்கும். தொலைக்காட்சி விசயத்தில் மட்டும் தான் இவன் கூச்சத்தையும் மீறி நடந்துகொண்டான்.



தீப்பெட்டித் தொலைக்காட்சி வைத்து விளையாடும் வயது கடந்து போன போது உண்மையாகவே இவனது வீட்டுக்கு ஒரு சிறிய வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வந்தது. அக்கா ஆசிரியப் பணியில் சேர்ந்து பெற்ற முதலாவது சம்பளப் பணத்துடன் கையிலிருந்த சேமிப்புப் பணத்தையும் போட்டு அம்மா இவனுக்கு அதை வாங்கிக் கொடுத்தார். இவன் அக்காவிடம் கேட்டு ஓர் அழகிய துணியுறையைத் தைக்கச் செய்து அதனால் தொலைக்காட்சியைப் பத்திரம் செய்தான். பள்ளிக்கூடத்துப் பைக்குள் இப்போது தீப்பெட்டிகள் இல்லை. அதற்குப் பதிலாகத் தொலைக்காட்சியை இயக்க வழிகாட்டும் விபரக்கொத்தை இவன் பைக்குள் எப்போதும் வைத்திருந்தான்.



பள்ளிக்கூடத்தால் வந்ததும் தொலைக்காட்சியின் முன்னால் உட்கார்ந்துவிடுவான். ஆட அசைய மாட்டான். சிலைபோல தொலைக்காட்சியைப் பார்த்தவாறே உட்கார்ந்திருப்பான். சாப்பிடுவதற்கு அம்மா பத்துத் தடவைகள் கூப்பிட்ட பின்பே குசினிக்குள் ஓடிச் சென்று தட்டை எடுத்துக்கொண்டு ஓடிவந்து தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் உட்கார்ந்து விடுவான். இதனால் ஒன்றும் அவனது படிப்புப் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. வகுப்பில் எப்போதும் அவன் முன்னணி மாணவனாகவேயிருந்தான். அக்காவிடம் ஒரு நாள் தொலைக்காட்சியைச் சுட்டிக்காட்டி ‘எங்கிட வாத்திமார விட இது பிரயோசனமானது’ என்றான்.



பல்கலைக்கழக அனுமதி சொற்ப மதிப்பெண்களால் தவறிப் போனது. கொஞ்சம் மனம் சோர்ந்து போனான். பகல் முழுவதும் தீவிரமாகப் படித்தான். இரவானதும் அறையிலிருந்த விளக்கை அணைத்துவிட்டு இருளில் நடுநிசி வரை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பான். அம்மா அவ்வப்போது வந்து ‘இருட்டுக்குள்ளயிருந்து பார்க்காத தம்பி, கண் பழுதாப் போகும்’ என்பார். அது இவனின் காதில் ஏறாது.



இவனுக்கு இருபது வயதானபோது அந்தக் கிராமத்திற்குள் இராணுவம் முதற்தடவையாக நுழைந்தது. இராணுவம் வரும் செய்தி கேட்டுச் சனங்கள் வீடுகளிலிருந்து கையில் அகப்பட்டவற்றை எடுத்துக்கொண்டு உயிர் தப்பச் சிதறியோடினார்கள். அக்கா அப்போது நகரத்தில் அறை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்து நகரத்துப் பாடசாலையில் வேலை செய்ததால் இவனும் அம்மாவும் நகரத்திற்குப் போவதென்று முடிவெடுத்தார்கள். இவர்களது உடமைகள் இரு பெட்டிகளிற்குள் அடங்கிவிட்டன. சைக்கிளின் பின்னால் தொலைக்காட்சியை வைத்துக் கட்டிக் கொண்டான். நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று நகரத்திற்குச் செல்லும் வாகனமொன்றில் அம்மாவையும் பெட்டிகளையும் ஏற்றி விட்டு இவன் வாகனத்தைச் சைக்கிளில் பின் தொடர்ந்தான்.



நகரத்திற்கு வந்ததும் கிடைத்த விலைக்கு தொலைக்காட்சியை விற்றான். மிகச் சொற்பமான பணமே கிடைத்தது. நகரத்திலிருந்த உறவினரின் கடையொன்றிற்குச் சென்று அங்கே சைக்கிளை நிறுத்திவிட்டு, சற்று நேரத்தில் வருவதாகக் கூறிவிட்டு நடந்து பஸ் நிலையம் வந்து பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தான். நான்கு மணிநேரப் பயணத்தில் இருபது சோதனைச் சாவடிகளைக் கடக்க வேண்டியிருந்தது. நெடுஞ்சாலையின் ஓரத்தில் இறங்கியவன் அங்கிருந்து வயல்வெளிகளுக்குள்ளால் காட்டை நோக்கி நடந்தான். இடையிடையே எதிர்ப்பட்டவர்களிடம் வழியை விசாரித்துக்கொண்டான். இரவாகிக்கொண்டிருந்தாலும் காட்டின்மீது நிலவு வெளிச்சம் போட்டது. இரவு முழுவதும் காட்டுப் பாதையால் நடந்து ஒரு கிராமத்தை அடைந்தான். அங்கே விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இருந்தது.



இவன் காட்டிற்குள்ளால் நடந்துவந்து இயக்கத்தில் சேர்ந்ததாலோ என்னவோ இவனுக்குக் கானகன் என்று இயக்கத்தில் பெயர் வைத்தார்கள். ஆனால், தோழர்கள் இவனை ‘யங்கிள்’ என்றே அழைத்தார்கள். தாக்குதலின் முன்னணி அணியில் யங்கிள் நின்றால் அந்தத் தாக்குதல் வெற்றிதான் என்று இயக்கத்திற்குள் கதை இருந்தது. போரிடவே பிறந்தவன் போல அவன் இருந்தான். அவனது இடது கண்ணிற்கு திட்டமிடல் என்றும் வலது கண்ணிற்கு துணிச்சலென்றும் பெயர். அவனது இடது காலிற்கு நிதானம் என்றும் வலது காலிற்கு வேகமென்றும் பெயர். எத்தனையோ முற்றுகைகளை முன்னணியில் நின்று முறியடித்திருக்கிறான். அவனது அணி முழுவதுமாகச் சிதைக்கப்பட்ட நிலையிலும் தனியாளாகப் போராடித் தளம் திரும்பியிருக்கிறான். கடைசியில் விமானக் குண்டு வீச்சொன்றில் வேகமெனப் பெயரிடப்பட்ட கால் துண்டிக்கப்பட்டது. நிதானம் எனப் பெயரிடப்பட்ட கால் எஞ்சியிருந்தது.



ஊன்றுகோலின் உதவியுடன் அவன் முகாமில் நிதானமாக நடந்து திரிந்தான். அம்மாவிற்கோ அக்காவிற்கோ தான் காலிழந்த செய்தி தெரியாமல் பார்த்துக் கொண்டான். யுத்த நிறுத்தம் வந்தபோது கூட இவன் அம்மாவைப் பார்க்கப் போகவில்லை. இவன் இருக்குமிடமும் அம்மாவிற்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டான். ஒரு வருடத்திற்குப் பின்பு புலிகளின் தொலைக்காட்சியில் தான் அம்மா இவனைப் பார்த்தார். அடுத்த வாரமே அம்மாவும் அக்காவும் இவனைத் தேடி வந்தார்கள். இவன் பயந்தது போல எதுவும் நடக்கவில்லை. அம்மா இவனது கால் துண்டிக்கப்பட்ட பகுதியை மட்டும் தடவிக்கொடுத்தார். உற்சாகமாகப் பேசிவிட்டுத் திரும்பிச் சென்றார்கள்.



புலிகளின் தொலைக்காட்சியில் இவன் மூன்று நிகழ்ச்சிகளிற்குத் தொகுப்பாளராயிருந்தான். அவற்றில் ‘விடுதலை கீதங்கள்’ என்ற அரை மணிநேர நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. சாந்தன், தேனிசை செல்லப்பா, சுகுமார், சிட்டு போன்றோரின் புகழ்பெற்ற பாடல்களை இவன் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்குவான். பாடல்களிற்கு முன்பு இவன் சொல்லும் கவிதை வரிகளும் இவனது உணர்ச்சி துள்ளும் ஏற்ற இறக்கமான கம்பீரமான குரலும் மக்களைச் சொக்கச் செய்தன. சாந்தன் ஒருமுறை இவனிடம் ‘என்னைவிட உங்களுக்குத்தான் கனக்க ரசிகர்கள்’ எனச் சொல்லிச் சிரித்தார்.



வழிதெருவில் இவனை மக்கள் காணும் போது இவனைச் சூழ்ந்து கொண்டார்கள். இவன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றும் போது உட்கார்ந்துகொண்டிருப்பதால் இவனிற்கு ஒரு கால் இல்லை என்பது பலருக்குத் தெரியாது. அந்தக் கம்பீரக் குரல் ஊன்றுகோலோடு தடுமாறி நடந்து வருவதை அவர்கள் நேரில் பார்த்தபோது அவர்களது கண்கள் இருண்டு போயின. சில தாய்மார்கள் இவனை அணைத்து உச்சி மோர்ந்தார்கள். இழந்து போன குழந்தைகள் அவர்களிற்கு ஞாபகம் வந்திருக்கலாம்.



இவனுக்கு ஏராளமான நேயர் கடிதங்கள் வந்தன. அவற்றில் காதல் கடிதங்களும் இருந்தன. அந்தக் கடிதங்களை இவன் தனிமையில் புன்னகையோடு படித்துவிட்டுக் கிழித்துப் போடுவான். ‘ இயக்கத்துக்கே காதல் கடிதம் எழுத எங்கிட பெட்டையள் துணிஞ்சிற்றாளவ’ என அவனது உதடுகள் முணுமுணுக்கும்.



சமாதான காலத்தில் வன்னியிலிருந்து இசைக்குழுவொன்று அய்ரோப்பாவிற்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இசை நிகழ்ச்சிகள் நடத்தச் சென்றபோது நிகழ்ச்சித் தொகுப்பாளராக இவனும் அவர்களுடன் சென்றான். இவன் தான் அவசியம் வர வேண்டுமென நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கேட்டிருந்தனர். விமானத்தில் மது வழங்கப்பட்ட போது இவனுக்கு அருகிலிருந்த பாடகன் ‘ கன நாளாப் போச்சுது, ஒண்டு எடுக்கவா” என இவனிடம் பகடி மாதிரிக் கேட்டான். இவன் முறைத்த முறைப்பில் பாடகன் “குடிக்கிறதில ஒண்டுமில்ல ஆனால் குரலுக்குக் கூடாதெல்லா” என முனகிவிட்டு இருக்கையில் சாய்ந்துகொண்டான்.



அய்ரோப்பிய நகரங்களில் பெருந்தீனியால் இவனுக்கு வயிற்று வலியே வந்துவிட்டது. தங்களது வீட்டிற்குச் சாப்பிட வரவேண்டும் என மக்கள் அடிக்காத குறையாக இவனைத் தங்களது வீட்டிற்கு முறை வைத்துக் கடத்திச் சென்றார்கள். நிகழ்ச்சிகளின் போது இவன் மேடைகளில் தோன்றும் போதெல்லாம் இளைஞர்கள் ஆரவாரித்துக் கூக்குரலிட்டார்கள். அங்கிருந்து திரும்பும் போது விலையுயர்ந்த பரிசுப் பொருட்களால் இவனது பெட்டி நிரம்பி வழிந்தது. கொழும்பு விமான நிலையத்தில் சோதனையின் போது பரிசுப் பொருட்களில் ஒன்றைக் கையிலெடுத்து “இதை எனக்குத் தருவாயா” என அதிகாரி கேட்ட போது, அதை அதிகாரியே எடுத்துக் கொள்ளுமாறு புன்னகையுடன் கைகாட்டினான்.



முகாமுக்குத் திரும்பியவுடனேயே எல்லாப் பரிசுப் பொருட்களையும் தோழர்களிற்குப் பகிர்ந்து கொடுத்தான். அவனுக்கென்று எஞ்சியவை காதலைத் தெரிவிக்கும் மூன்று வாழ்த்து அட்டைகள் மட்டுமே. பாரிஸ் நகரத்தில் இரண்டு அட்டைகளும் சுவிஸில் ஓர் அட்டையும் கிடைத்திருந்தன. பாரிஸ் அட்டைகள் இரண்டும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தன. சுவிஸ் அட்டையில் மழலைத் தமிழில் ஒரு மட்டமான காதல் கவிதை எழுதப்பட்டிருந்தது. அவற்றில் எழுதப்பட்டிருந்தவற்றுக்காக அல்லாமல் அந்த அட்டைகளின் அழகிற்காக அவற்றைக் கிழித்துப் போட மனமற்றவனாய் எடுத்து வந்திருந்தான். முகாமில் வைத்து அவற்றையும் கிழித்துப் போட்டான். முகாமிலிருந்த தோழர்களிற்கு விடிய விடிய அய்ரோப்பியப் பயணக் கதைகளைச் சொன்னான். புலம் பெயர்ந்த தமிழர்கள் இருக்கும் வரை போராட்டத்தை எவராலும் அழித்துவிட முடியாது என நம்பினான்.



நந்திக் கடலின் ஓரத்தில் இவனது அணி சரணடையும் முடிவை எடுத்த போது இவன் அந்த இடத்திலேயே சயனைட் குடித்துவிடலாம் என்றான். சாவதால் ஆகப்போவது எதுவுமில்லை எனப் பொறுப்பாளர் சொன்னார். துப்பாக்கிகள், சீருடைகள், இலக்கத் தகடுகள், சயனைட் குப்பிகள் எல்லாம் மணலில் புதைக்கப்பட்டதும் அணி சிதறி மக்களுக்குள் கரைந்து போனது. இவனுக்கு சயனைட் குப்பியைப் புதைக்க விருப்பமில்லை. அதை மடியில் செருகிக் கொண்டு நந்திக் கடலோரமாக நடந்து வந்தான். கடல் நீரேரியைக் கடந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் செல்ல ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக ஒரு படகில் இருபது பேர் வரை தயாராக இருந்தார்கள். இராணுவத்திடமிருந்து வரும் ஷெல் வீச்சுகள் குறையும் போது படகு புறப்படுவதாகத் திட்டம். இவன் செயற்கைக் காலைக் கழற்றிக் கரையிலேயே வைத்து விட்டு ஊன்றுகோலுடன் அந்தப் படகில் ஏறிக்கொண்டான். ஷெல் வீச்சு நின்றிருந்த ஒரு தருணத்தில் படகு புறப்பட்டது. இவன் சயனைட் குப்பியைக் கடல் நீரில் எறிந்தான்.



படகு கரையை அடையும் போதுதான் கரையிலேயே வரிசையாக இராணுவீரர்கள் படகை எதிர் நோக்கித் துப்பாக்கிகளைக் குறிவைத்துக் கரையோடு கரையாகப் படுத்துக் கிடந்தது தெரிந்தது. இவர்கள் படகை விட்டு இறங்கியதும் “ஆடைகளைக் களைந்து விட்டு வாருங்கள்!” என்ற உத்தரவு வந்தது. இவர்கள் ” அய்யா நாங்கள் பொது மக்கள்” எனக் கூக்குரலிட்டார்கள். ஆடைகளைக் களையுமாறு மறுபடியும் உத்தரவு வந்தது. இவர்கள் தயங்கி நின்றபோது கரையிலிருந்து சரமாரியாக வெடிகள் கிளம்பின. கடல்நீர் துடித்துச் சிதறியது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோருமே ஆடைகள் முற்றாகக் களையப்பட்டு அவர்களது உடல்களிலே வெடிப்பொருட்கள் கட்டப்பட்டிருக்கின்றனவா எனப் பரிசோதிக்கப்பட்டனர். அந்த மனிதர்களை முழு நிர்வாணமாகவே ஒரு கிலோமீற்றர் நடத்திச் சென்ற இராணுவம் அங்கிருந்த பஸ்ஸில் ஏற்றியதன் பின்பாகத்தான் அவர்களை ஆடைகள் அணிந்துகொள்ள அனுமதித்தது. இவன் தலையைக் குனிந்தவாறேயிருந்தான். எவரையும் ஏறிட்டுப் பார்க்க இவன் விரும்பவில்லை. மணிக்கணக்காக பஸ் ஓடிக்கொண்டிருந்தது. குழந்தைகள் தாகத்தாலும் பசியாலும் வெப்பத்தாலும் அழுதபோது அவர்களது தாய்மார்களால் ‘பளாரென’ அறையப்பட்டு அடக்கப்பட்டன. வவுனியா தடுப்பு முகாமில் பஸ் நின்றபோது இவன் தலையைக் கவிழ்ந்தவாறே இறங்கினான். பூமியைத் தவிர இவனது கண்கள் எதையும் பார்க்கவில்லை. வரிசையில் உட்கார்ந்திருந்தபோது இவனது தோளைத் தொட்டு ஒரு இரகசியக் குரல் ‘கானகன்’ என அழைத்தது. சடுதியில் இவன் தலை நிமிர்த்திப் பார்த்தபோது ஓர் இராணுவ அதிகாரி இவனைப் பார்த்து இளித்துக் கொண்டு நின்றான். தரையில் கிடந்த ஊன்றுகோலைக் கையில் எடுத்தவாறே மறுகையால் இவன் எழுந்திருக்க அதிகாரி உதவினான். இவன் எழுந்ததும் ஊன்றுகோலைக் கொடுத்து விட்டு இவனது தோள் பற்றி அதிகாரி அழைத்துச் சென்றான்.



தகரங்களால் அடைக்கப்பட்டிருந்த அந்தச் சிறிய அறைக்குள் தான் விசாரணை தொடங்கியது. இவனது உண்மையான பெயரைக் கேட்ட போது ரவிக்குமார் என்றான். இயக்கப் பெயர் கானகன் என்றான். “உனக்கு யங்கிள் என்று இன்னொரு பெயரும் இருக்கிறதே’ எனச் சொல்லி அதிகாரி சிரித்தான். எந்த உண்மையை மறைத்தும் பலனில்லை என்பது இவனுக்குத் தெரிந்தது. ஆனால், முடிந்தவரை உண்மைகளைப் பேசிவிடாமலிருப்பது தனது கடமை என்று இவன் நினைத்தான். ஆனால், விசாரணையின் போக்கில் மறைப்பதற்கு எந்தத் தகவல்களும் இவனிடம் இல்லாமற் போயின. விசாரணை ஒரு பேரேட்டில் பதிவாகிக்கொண்டிருந்தது. சுற்றி நின்ற இராணுவத்தினரில் சிலர் இவனை செல்போன் வீடியோவில் பதிவு செய்தவாறிருந்தார்கள். இவன் தலையைக் குனிந்தபோதெல்லாம் ஒரு சிங்கள வசைச் சொல்லுடன் இவனது தலை அவர்களால் தூக்கி நிறுத்தப்பட்டது. “கானகன் தான் சங்கடப்படுகிறாரே, படம் பிடிப்பதை நிறுத்துங்கள்” என அதிகாரி புன்னகையுடன் உத்தரவிட்டதும் படம் பிடிப்பது நிறுத்தப்பட்டது. இவன் எதிர்பார்த்த மாதிரியே பிறகு சம்பவங்கள் நிகழ்ந்தன.



தரையோடு தரையாக நகர முடியாது கிடக்கும் ஒரு முயலை அடிப்பதுபோல சுற்றிநின்று தடிகளாலும் துப்பாக்கியின் பின்புறங்களாலும் இவனை அடித்துக்கொண்டேயிருந்தார்கள். அவர்களது கேள்விகளிற்கு இவனுக்கு உண்மையிலேயே பதில் தெரியாது. இவனை உட்கார வைத்து விட்டு அசையவிடாமல் பிடித்துக்கொண்டே இவனது துண்டிக்கப்பட்ட காலின் தொடைப் பகுதியிலிருந்து மிக நிதானமாகவும் திருத்தமாகவும் ஒரு துண்டுத் தசையைக் ‘கேக்’ போல கத்தியால் வெட்டி எடுத்து இவனது கையில் கொடுத்து அதைச் சாப்பிடச் சொன்னார்கள். இவன் மயங்குவது போல பாவனை செய்து கண்களைச் சுழற்றிக் கீழே சரிந்தான். இவனின் வாய்க்குள் அந்தச் சதைத்துண்டு இரத்தம் வடிய அப்படியே திணிக்கப்பட்டது. அது தொண்டைக்குள் வழுக்கிக் கொண்டு போனது.



அடுத்த மூன்று நாட்களும் இவன் வாந்தி எடுத்தபடியே இருந்தான். உடலிலிருந்த இரத்தம் வாந்தியாக வெளியேறிக் கொண்டிருந்தது. இவன் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்ட பின்பும் அடிக்கடி வாந்தி எடுத்தவாறேயிருந்தான். சாப்பிடும் போது இறைச்சியையோ மீனையோ பார்த்தால் ஓங்காளித்து வாந்தி எடுப்பான். மாமிசம் சாப்பிடுவதை நிறுத்திக்கொண்டான். இந்தப் புனர்வாழ்வு முகாமில் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட இருநூறு சரணடைந்த போராளிகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். நோயால் இறந்த ஆறுபேருக்கும், தற்கொலை செய்துகொண்ட இருவருக்கும் பதிலாக புதியவர்கள் முகாமில் சேர்க்கப்பட்டார்கள். இருநூறு என்ற எண்ணிக்கை குறையாமல் இராணுவத்தினர் பார்த்துக்கொண்டார்கள்.



இவன் எப்போதும் மனச் சோர்வுடனேயே காணப்பட்டான். முகாமில் இருவருக்கு மனநிலை முற்றாகச் சரிந்திருந்தது. அவர்களில் ஒருவன் தனது ஆடைகளைக் கழற்றி வீசுவதிலேயே குறியாயிருந்தான். அதற்காக இராணுவத்தினரிடம் ஒவ்வொரு நாளும் உதைபட்டான். அவன் அங்கிருந்து விடுதலையாவதற்காக நாடகம் போடுகிறான் என இராணுவ அதிகாரி சொன்னான்.



இவர்களில் தெரிவு செய்யப்பட்ட அய்ம்பது பேர்களிற்கு பயிற்சியளிக்க ஒரு மனநல மருத்துவர் வந்தார். அவர் மனச் சோர்விலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக இருப்பது எவ்வாறு என உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே இவன் குறுக்கிட்டு “இங்கிருந்து விடுதலையாகி வீட்டுக்குப் போனால் மகிழ்ச்சியாயிருப்போம் என நினைக்கிறேன்’” என்றான். மருத்துவர் எது சொன்னாலும் இவன் விட்டேற்றியாக அவரைத் தட்டிக்கழித்தான். கடைசியில் மருத்துவர் மனச் சோர்வுக்கு ஆளாகிவிட்டார் போலிருந்தது. அடுத்த பயிற்சி வகுப்பை இராணுவத்தினருக்கு எடுக்கவிருப்பதால் முன்னாள் போராளிகளிற்கான முதல்நாள் பயிற்சி வகுப்பை இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் சொன்னார்.



சரியாக ஒன்றரை வருடங்கள் கழித்து அங்கிருந்து விடுதலையான முதலாவது அணியில் இவனுமிருந்தான். அந்த அணியில் அவயங்களை இழந்திருந்தவர்கள் மட்டுமேயிருந்தனர். புதிய வேட்டியும் சட்டையும் இராணுவத்தினரால் வழங்கப்பட்டன. முகாமில் விழா நடத்திப் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் முன்னாள் போராளிகள் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவனை அழைத்துச் செல்ல அம்மா வந்திருந்தார். அம்மாவின் முகம் முழுவதும் சிரிப்புத் தொற்றியிருந்தது.



அக்காவுக்கு கல்யாணமாகி அவள் நகரத்தில் குடியிருந்தாள். இவ்வளவு நாட்களும் அம்மா அக்காவுடனேயே தங்கியிருந்தார். அம்மா தன்னை அக்காவின் வீட்டுக்குத்தான் அழைத்துச் செல்வதாக இவன் எண்ணினான். ஆனால் அம்மா இவனைக் கிராமத்து வீட்டிற்கு அழைத்து வந்தார்.



வீடு உருக்குலைந்திருந்தது. கதவுகளையும் நிலைகளையும் கூடத் திருடிச் சென்றிருந்தார்கள். வாசலுக்கும் ஜன்னல்களிற்கும் அம்மா துணியால் திரை செய்து போட்டார். இவனது அறைக்குள் ஒரு மேசையும் நாற்காலியும் படுக்கையும் வாங்கிப் போட்டார். இவன் அந்த அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தான். வீட்டுக்குப் போனால் மகிழ்ச்சி உருவாகும் என மனநல மருத்துவரிடம் சொன்னதை அடிக்கடி நினைத்துப் பார்த்தான்.



கடைத் தெருவே மாறியிருந்தது. முன்பு இவன் தொலைக்காட்சி பார்க்கச் செல்லும் ‘மீனா கபே’ இப்போது ‘லங்கா கபே’ ஆகியிருந்தது. அதை இராணுவத்தினர் நடத்திக்கொண்டிருந்தனர். இப்போதும் அங்கே இடையறாது தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது. இவன் தலையைக் கவிழ்ந்தவாறே அதைக் கடந்து சென்றான். கடைத் தெருவில் எல்லோருமே தன்னைப் போலவே தலையைக் குனிந்தவாறே நடந்துகொண்டிருப்பதாக இவனுக்குத் தோன்றியது. தற்செயலாகச் சந்தித்த கண்களில் அச்சத்தை மட்டுமே இவன் பார்த்தான்.



அம்மா இவனுக்குச் செயற்கைக் கால் பொருத்துவதற்காகப் பணம் திரட்டிக் கொண்டிருந்தார். காலைப் பொருத்தி நான் எங்கே போகப் போகிறேன், அந்தப் பணத்தில் ஒரு தொலைக்காட்சி வாங்கினாலாவது அறைக்குள்ளிருந்து பார்த்துக்கொண்டிருக்கலாமென நினைத்தான். ஆனால், அவ்வாறு கேட்பது அம்மாவைப் புண்படுத்தக் கூடுமென்பதால் இவன் வெறுமனே அறைக்குள் அடைந்து கிடந்தான். வாரம் ஒருமுறை இராணுவச் சாவடிக்குச் சென்று கையெழுத்திட வேண்டியிருந்தது. அந்த நாட்களில் மட்டுமே வெளியே போனான்.



அன்று மாலையில் பக்கத்து வீட்டிலிருந்து பாட்டுச் சத்தம் வந்து கொண்டிருந்தது. மகிழ்ச்சி என்பது நாம் உருவாக்கிக் கொள்வதே என மனநல மருத்துவர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தான். பொழுது பட்டதும் ஊன்றுகோலை எடுத்துக்கொண்டு வெளியே நடந்தான். அவன் பக்கத்து வீட்டு வாசற்படியில் தட்டுத் தடுமாறி ஏறிய போது உள்ளேயிருந்த தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ச உரையாற்றிக்கொண்டிருந்தார். சற்று நேரத்தில் தொலைக்காட்சி திடீரென நிறுத்தப்பட்டது.



வீட்டுக்காரர் வாசலுக்கு வந்து இவனைப் பார்த்தார். இவன் தொலைக்காட்சி பார்ப்பதற்காக வந்ததாகச் சொன்னான். வீட்டுக்காரர் தலையைக் குனிந்து நிலத்தைப் பார்த்தவறே அவர்கள் சாப்பிடப் போவதாகச் சொல்லிவிட்டு வாசலிலேயே நின்றார். இவன் கையை வாசற்படியில் ஊன்றித் தட்டுத் தடுமாறி எழுந்து சுவரில் சாய்த்து வைத்திருந்த ஊன்றுகோலையும் எடுத்துக்கொண்டு படியிறங்கும் போது வீட்டுக்காரர் ‘கானகன் நீ இஞ்ச வந்து போனால் ஆமியால எங்களுக்கும் பிரச்சினை வரும்’ என்று முணுமுணுத்தது இவனுக்குத் தெளிவாகக் கேட்டது.



வீதியில் நின்று சட்டைப் பையிலிருந்து பீடியை எடுத்துப் பற்றவைக்க முயன்றான். கை நடுங்கிக் கொண்டிருந்தது. நான்காவது தீக்குச்சியிலேயே பற்ற வைக்க முடிந்தது. இந்தப் பழக்கம் தடுப்பு முகாமிலிருந்தபோது வந்திருந்தது. அம்மா காலையில் ஒரு கட்டு பீடி வாங்கிக் கொடுப்பார்.



வாயில் பீடியை வைத்தவாறே நடந்தான். இவனது ரவி என்ற பெயரை வீட்டுக்காரர் மறந்து இவனைக் கானகன் என அவர் அழைத்தது இவனுக்கு ஆச்சரியமாயிருந்தது. பீடியை இழுத்துக் கொண்டே நடந்தான். விடுதலையாகி வந்து இவ்வளவு நாளாகியும் அக்காவோ அத்தானோ தன்னை இதுவரை வந்து பார்க்காதது திடீரென இவனுக்கு உறைத்தது.



நடுநிசியில் அம்மா எழுந்து கை விளக்கையும் எடுத்துக் கொண்டு மெதுவாக நடந்து இவனது அறையை நோக்கிப் போனார். ஒவ்வொரு நாளும் அம்மா இவ்வாறு சென்று பார்ப்பார். இவன் தூங்கிக்கொண்டிருப்பது அவருக்கு நிம்மதியாகயிருக்கும்.



அம்மா இவனது அறையின் வாசலில் நின்று இவனது படுக்கையிருந்த திசையில் விளக்கைப் பிடித்தபோது படுக்கை காலியாயிருந்தது. அம்மா பதற்றத்துடன் அறையின் மூலையொன்றிற்கு வெளிச்சத்தைத் திருப்பினார். அங்கே அவன் சுவரோடு சாய்ந்து தரையில் ஆடாமல் அசையாமல் சிலைபோல உட்கார்ந்திருந்தான். அம்மா அவனது முகத்திற்கு வெளிச்சத்தைத் திருப்பியபோது அவனது கண்கள் மேசையையே உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார். அம்மா மேசைக்கு வெளிச்சத்தைத் திருப்பியபோது மேசையில் ஒரு தீப்பெட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அம்மா திடீரென வெடித்துப் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினார். இவன் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தான். இவனது கண்கள் ஒளிர்ந்துகொண்டிருந்தன.



( இவ்வார ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளியானது )

M.Yuvan.

நான்காவது கனவு – யுவன் சந்திரசேகர்


Posted by Singamani ⋅ May 8, 2011 ⋅ Leave a Comment

i1 Vote

யோசித்துப் பார்க்கும்போது அமானுஷ்யம் என்னும் ஒன்றே கிடையாதோ எனத் தோன்றுகிறது. சென்னையின் புறநகர்த் தெருவில் நடந்தவாறு, காதோரம் உள்ளங்கையில் எதையோ வைத்துக்கொண்டு, சற்றே சித்தம் பிறழ்ந்தவன்போலத் தனக்குத்தானே உரத்துப் பேசிக்கொண்டு போகும் தன் பேரன் வாஸ்தவத்தில் அமெரிக்காவிலுள்ள அவனுடைய பேரனுடன் உரையாடுகிறான் என்று அறுபதுகளின் கடைசியில் அமரராகிவிட்ட என் தாத்தா இப்போது பார்த்தால் நம்புவாரா?



அல்லது, என் அத்தையை எடுத்துக்கொள்ளுங்கள். அவள் பெயர் வனஜாட்சி. இளம் வயதிலேயே கணவரை இழந்தவள். ஒரே மகன் பட்டாளத்தில் இருந்தான். இன்னும் மணமாகாதவன். 71 பாகிஸ்தான் யுத்தத்தின்போது அத்தை எங்கள் வீட்டுக்கு வந்திருந்தாள் – என்னுடைய தாத்தா திவசத்துக்கு ஆசாரச் சமையலில் உதவ. அவள் வந்த மறுநாள் வெள்ளிக்கிழமைக் காலை எங்கள் வீட்டுச்சுவரில் தொங்கிய முகம் பார்க்கும் கண்ணாடி தவறி விழுந்து நொறுங்கியது. என்னுடைய அம்மா கண்ணாடிச் சில்லுகளை ஒற்றியெடுக்கச் சாணி உருண்டை தேடிப் போனாள். நியாயமாக அந்த வேலையைச் செய்ய விரைபவள் அத்தையாகத் தான் இருக்கும்-அவளோ நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.



உத்தரத்தைப் பார்த்து நிலைகுத்தின விழிகளிலிருந்து கரகரகரவென்று கண்ணீர் ஊற்றியது. என்னுடைய அப்பா அவளருகில் சென்று தோளைத் தொட்டு, என்னாச்சு வனஜீ என்று கேட்க முனைந்தார்.



‘போயிட்டாண்டா, என் ஒத்தெப் பிள்ள போயிட்டாண்டா. என்னை ஒத்தெ மரமா நிக்கவிட்டுட்டுப் போயிட்டாண்டா’ என்று குமுறி அழுதாள் அத்தை. நீண்ட நெடுங்காலமாகக் கைம்பெண்ணாய் இருந்துவரும் அவளுக்கு ஏதோ காரணத்தால் திடீரென்று மரை கழண்டுவிட்டதுபோலிருக்கிறதே என்று நாங்களெல்லாம் கவலைப்பட்டோம்.



ஆனால் சரியாக மறுநாளைக்கு மறுநாள் மிலிட்டரியிலிருந்து தந்தி வந்து சேர்ந்தது. கிழக்குப் பாகிஸ்தானில் வைத்து லட்சுமணன் – அதுதான் வனஜா அத்தையின் மகன் – எதிரியின் பீரங்கி வெடியில் அகப்பட்டுச் சிதறிவிட்டான் என்று சொன்னது. தேச சேவைக்கு மகனை அர்ப்பணித்த தாய்க்குத் தன் மரியாதையையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தது இந்திய அரசாங்கம்.



எங்களுக்கானால் ஆச்சரியம் தாங்கவில்லை. அது என்ன மாதிரியான தொலைத்தொடர்பு என்று புரியவும் இல்லை… எதற்கு இவ்வளவும் சொன்னேன் என்றால், ஒரு தலைமுறைக்கு அமானுஷ்யமாகத் தெரிவது இன்னொரு தலைமுறைக்கு நடைமுறையான விஷயமாக இருக்கிறது என்பதற்காகத்தான்.



நான் யார் என்றே சொல்லாமல் என் யோசனைகளை மட்டுமே சொல்லிக்கொண்டு போகிறேன், இல்லையா? அதன் காரணமாக, திடும்மென்று ஆரம்பித்து நான் சொல்லிவரும் விஷயங்களில் லேசாகப் புகைமூட்டம் படர்கிறது, இல்லையா? என்னைப் பற்றிய தகவல்களைச் சொல்லிய பிறகும், நான் சொல்லப்போகிற விஷயத்தை விஸ்தாரமாகச் சொல்லி முடித்த பிறகும் தற்போது நிலவும் இதே குழப்பம் தொடர்வதற்கான வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது.



இத்தனை வருஷம் கழித்து எனக்கே சற்றுக் குழப்பமாகத்தானே இருக்கிறது.



நான் சுந்தரேசன். தற்போது வயது அறுபத்தொன்று. விற்பனைப் பிரதிநிதியாகத் தொடங்கி, அகில இந்திய நிறுவனமொன்றின் நிர்வாக இயக்குநர் பதவிவரை உயர்ந்தவன். சென்ற வருடம்தான் ஓய்வுபெற்றேன். முதன்முதலில் கர்நாடகத்தில் உள்ள ஒரு மதுவடிப்பு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். பிறகு சர்வதேச மென்பான நிறுவனம். அதன் பிறகு சிகரெட் நிறுவனம். கடைசியாக வேலை பார்த்த நிறுவனம் போதைப் பாக்குக்குப் பெயர் பெற்றது. இன்றைக்கு இந்தியா முழுவதும் இளைஞர்கள் சதா மென்றுகொண்டும் துப்பிக்கொண்டும் இருக்கிறார்கள் என்றால் அதில் என்னுடைய பங்களிப்பு கணிசமானது.



வாழ்நாள் முழுவதும் லாகிரி வஸ்துக்களை விற்றுவந்திருக்கிறேனே தவிர, அவற்றில் எதையும் நான் ருசிபார்த்ததுகூடக் கிடையாது.



எங்க சுந்தரம் மாதிரி ஒருத்தனைப் பார்க்க முடியாது. பாக்குத் துண்டு பல்லுலெ படாதே என் தங்கத்துக்கு. என்று இருபத்தைந்து வருடத்துக்கு முன் காலமாகிவிட்ட என் அம்மா அடிக்கடி சொல்வாள். பிதுர்லோகத்திலிருந்து பார்க்கும்போதும் அவள் என்னை எண்ணிப் பெருமைப்படத் தான் செய்வாள் என்று நம்புகிறேன். இந்த மாதிரி நம்பிக்கைகளுக்கும் நான் ‘மிஸ்ட்டர் டீட்டோட்டல’ ராக (அப்படித்தான் என் கடைசி நிறுவனத்தின் உபதலைவர் ஏ.கே. ஸின்ஹா என்னை அழைப்பார்) இருப்பதற்கும் நேரடித் தொடர்பு ஏதாவது இருக்கிறதோ என்னவோ?



ஆனால் எனக்குப் பிடித்தமான லாகிரி வேறு ஒன்று இருந்தது. தொழில் சார்ந்து ஊர் ஊராக அலையத் தொடங்கியவன் நான். பதவி உயர்ந்தபோது மாநிலம் மாநிலமாகத் திரிந்தவன். ஏழெட்டு முறை வெளிநாடு கூடச் சென்று வந்திருக்கிறேன், ஸிலோன், மாலத் தீவு, சிங்கப்பூர், பங்களாதேஷ், நேபாளம் என்கிற மாதிரி. அந்த நாட்களில், போகிற இடமெல்லாம் பரிச்சயமாகிற மனிதர்கள் விதவிதமான சம்பவங்களைக் கதைபோலச் சொல்வதைக் கேட்பதில் அலாதியான போதை எனக்கு.



சொன்னால் வியப்பீர்கள், யாருக்குமே சொல்வதற்கு ஒரு பேய்க்கதையோ பாம்புக்கதையோ இருக்கிறது அல்லது பரம்பரைப் பெருமைக் கதை. மேற்சொன்ன எதுவும் இல்லையா, ஒரு ராஜாராணிக் கதை நிச்சயம் உண்டு. வேற்றுமொழி பேசும் அயல் பிரதேசத்தில், எந்த நேரமும் ஏதோவொரு அவமானம் உங்களுக்காகக் காத்திருக்கிறது. அதற்குத் தன்னை சதா ஆயத்தப்படுத்திக்கொண்டு இருக்கும் மனத்தில் சன்னமான பீதி நிரந்தரமாக இருக்கும். மேற்படிக் கதைகளைக் கேட்பது என்னை நடைமுறை அன்றாடத்திலிருந்து விலக்கிக் காப்பதோடு, கதைசொல்லியின் மனத்தில் என் சம்பந்தமாக ஒரு நம்பிக்கையையும் இதத்தையும் உருவாக்கிவிடும்.



நான் கேட்ட கதைகள் யாவற்றையும் விடாமல் என் நாட்குறிப்பில் பதிவுசெய்து வந்திருக்கிறேன். சமீபத்தில் என் சிநேகிதன் ஒருவனிடம் அதைக் காண்பித்தபோது, அவன் வெகுவாக ஆச்சரியப்பட்டான். கதைகளில் குவிமையம், செய்தியென்றெல்லாம் எதுவும் இல்லாவிட்டாலும் சுவாரசியத்திற்குக் குறைவில்லையென்றும், நான் கேட்டவிதமாக மட்டும் கதைகளை எழுதாமல் சொந்தச் சரக்காகச் சில வர்ணனைகள், சில வாக்கியங்களைச் சேர்த்திருப்பதால் இவற்றுக்கு ஒரு தனித் தன்மையும் சமச்சீர்மையும் உருவாகியிருப்பதாகவும், இளம் வயதில் எழுதியவை என்பதால் மொழியில் ஒரு முறுக்கும் விறுவிறுப்பும் இருப்பதாகவும் தமிழில் தற்சமயம் எழுத்தாளர்களின் எண்ணிக்கையை விடப் பதிப்பகங்களின் எண்ணிக்கை அதிகமாய் இருக்கிறபடியால் என் குறிப்புகளை ஒரு புத்தகமாகப் போடுவது எளிது என்றும் சொன்னான்.



அவனுடைய ஏற்பாட்டின்படி, மேற்படிக் கதைகளை மாநிலவாரியாகப் பிரித்துப் புத்தகமாகப் போட ஒரு பிரசுர நிறுவனம் முன்வந்திருக்கிறது. நான் காலவரிசையில் அடுக்கலாம் என்றிருக்கிறேன் – அதாவது நான் அவற்றைக் கேட்ட கால வரிசையில்.



ஆரம்பித்த இடத்திலிருந்து வெகுதூரம் தள்ளிப்போய்விட்டது என்று நினைத்துவிட வேண்டாம், நான் கூறிய முதல் பத்தியின் பின்னணியில் இன்னொரு விஷயம் மிக முக்கியமானது. சமீபத்தில் பொழுதுபோகாமல் என் நாட்குறிப்பை வரிவிடாமல் வாசித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தபோது தான் நானே இதைக் கண்டுபிடித்தேன்.



அதாவது, இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் கொலைகள் நடைபெற்ற நாட்களிலெல்லாம் நான் வேறு மாநிலங்களில் இருந்திருக்கிறேன் என்பதை.



ரயில்வே அமைச்சராக இருந்த லலித் நாராயண் மிஸ்ரா சமஷ்டிபூரில் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்பட்டபோது நான் பீகாரிலேயே இருந்தேன். ஜர்னெய்ல் சிங் பிந்தரன்வாலேயைக் கொல்ல ராணுவம் பொற்கோயிலுக்குள் நுழைந்தபோது மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் இருந்தேன். தமது பாதுகாவலர்களால் திருமதி. காந்தி கொல்லப்பட்ட தினத்தில் வங்காளத்தின் 24 பர்கானாஸ் மாவட்டத்தில். அவருடைய மகன் சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்த நாளில் மேகாலயாவில். ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட மறுநாள் ஆந்திரத்தின் கடப்பைக்கு அருகே ஒரு கிராமத்து ரயில் நிலையத்துக்கு வெளியே நாள் முழுவதும் தடுத்துவைக்கப்பட்ட ரயிலில் இருந்தேன். இப்படி ஒரு விசித்திரமான பிரயாணத் திட்டத்தை எனக்கு வகுத்துத் தந்த கரம் மானுடக் கரமாக இருக்கச் சாத்தியமே இல்லை.



நாட்குறிப்பைப் படித்துவந்த போது, கடப்பையில்-உண்மையில் கடப்பை தாண்டி, எர்ரகுண்ட்லாவும் தாண்டி, பிறகு வந்த சிறு நிலையத்தையும் கடந்தபிறகு வந்த கிராமத்தின் வெளிவிளிம்பில் – சந்தித்த அல்லூரி வெங்கடேச ராவ் சொன்ன கதை அழுத்தமாக நெஞ்சில் வந்து அமர்ந்தது. அதைத்தான் இப்போது சொல்லப்போகிறேன்.



அன்று அதிகாலையில் கடப்பையைத் தாண்டிக் கொஞ்சநேரம் ஊர்ந்த ரயில் திடீரென்று வேர் பிடித்த மாதிரி நின்றது. ஓட்டுநரும் கார்டும் ரயில் இப்போதைக்கு நகராது என்ற தகவலையும் அதற்கான காரணத்தையும் பெட்டிபெட்டியாக அறிவித்துக்கொண்டு சென்றார்கள். நாள் முழுவதும் நகராதிருக்கும் ரயில் பெட்டிக்குள் சும்மா உட்கார்ந்திருப்பது சாதாரண விஷயமில்லை. மே மாத வெய்யில் கனக்கத் தொடங்கும் போது, ரயில்பெட்டி கொதிக்கும் இட்லிக் கொப்பரையின் உட்புறம் போல வெம்மைகொள்ளும். முந்தின இரவு நமக்கு நண்பராகிய அயல் மாநிலத்துக்காரரை மறுநாள் காலையில் விரோதியாக்குகிற அம்சங்கள் பெருகத் தொடங்கும்.



போக்கிடம் இல்லாமல் நின்றுகொண்டிருக்கும் ரயிலுக்குள் சிறையிருக்கும் பயணிகளுக்குச் சாப்பாடு முதல் எல்லாமே பிரச்சினையாகி விடும் அல்லவா? அக்கம்பக்கத்து ஜனங்கள் திடீர் வியாபாரிகளாவார்கள். அவசரத் தயாரிப்பின் அவல ருசியும் அளவுப் பற்றாக்குறையும் எச்சில்தொட்டி நாய்கள்போல அடித்துக்கொள்ள வேண்டிவருவதும் ரயில் பயணிகளுக்குள் தீராத குரோதத்தை விளைவிக்கும். தவிர, வேறு வழியேயில்லாமல் நாற்பது ஐம்பது முகங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டிருக்கும் போது அந்தரங்கமான, விதவிதமான, கொலைவெறிகள் கூடிவிடும். தண்ணீர் காலியாகிவிட்ட கழிவறை சொந்த உடல்மீதே அசாத்தியமான வெறுப்பை உண்டாக்கும். குழந்தைகள் சலிக்காமல் அழும் ஒலி சதா கேட்டவாறிருக்கும்.



ரயிலைவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கினேன்.



பொதுவாகவே, கல் விளையும் பூமி அது. விதவிதமான அளவுகளில் தகடுகளாக வெட்டியெடுக்கும்போது விளிம்புகளில் சேதமுற்ற கல்பலகைக் கற்கள் சிதறிக்கிடந்தன. கண்ணுக்கெட்டியவரை ஆகாயத்தில் செருகிக்கிடக்கும் புகைபோக்கிகள் கொண்ட சிமெண்ட்டுத் தொழிற்சாலைகள் மண்டிய பிரதேசம். காலடியில் நிரநிரக்கும் மண்ணில் சாம்பல் நிறம் பூத்திருந்தது.



பாறைகள் வெடிவைத்துத் தகர்க்கப்பட்ட பெரும் பள்ளங்கள். கிணறுகள்போல ஆழம் கொண்ட அவற்றின் படுகையில் பாசிபடர்ந்த மழைத் தண்ணீர்மீது மேலும் தூசிகள் சென்று அடர்வது வெறும் கண்ணுக்கே தெரிந்தது. தரையையொட்டிக் கிடந்த அழுக்குத் தண்ணீரைக் குடிக்க இறங்கிச் சென்றிருந்த மைனா ஒருமுறை தலை நிமிர்த்தி என்னைப் பார்த்தது. கணவனும் மனைவியும்போலத் தென்பட்ட சக பயணிகள் இருவர் என்னை விரைந்து கடந்தார்கள். அந்தப் பெண் ஒரு புதருக்குப் பின் அவசரமாக ஒதுங்கினாள். அவன் அசட்டுப் பார்வையுடன் காவலுக்கு நின்றான்.



ரயிலின் சாந்தத்தில் ஏதாவது சலனம் இருக்கிறதா என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்துசென்றேன். மெல்ல வேகம் எடுத்த காற்றில் வறட்சியும் வெம்மையும் போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்தன. சிறிய தோட்ட வீடு போன்ற ஒன்று கண்ணில் தட்டுப்பட்டது. ஆலமரம்போல அகலித்து வளர்ந்த பிரம்மாண்டமான வேப்ப மரத்தின் நிழலில் சாவகாசமாக நின்றிருந்த வீடு.



அங்கேதான் வெங்கடேச ராவைச் சந்தித்தேன்.



கடப்பைக் கல் கழிவுகளைச் செங்கற்கள்போல உபயோகித்துக் கட்டப்பட்ட குடில் அது. வாசலில் சிறு கீற்றுக்கொட்டகை போடப்பட்டிருந்தது. அதற்குள் இரண்டு மர பெஞ்சுகள். வெளியில், மெருகேற்றப்பட்ட ஏகப்பட்ட கல்பலகைகள் சாத்திக் கிடந்தன. அவற்றில் பொறிக்கப்பட்ட எழுத்துகள் பிடிமானமேயற்று அந்தரத்தில் தொங்கின. நேர்கோடுகளே இல்லாத லிபிகொண்டது தெலுங்கு மொழி என்று ஒரு அபிப்பிராயம் தோன்றியது.



எனக்குத் தெலுங்கு வாசிக்கத் தெரியாது. ஆனால் மிகச் சரளமாகப் பேசவும் புரிந்துகொள்ளவும் முடியும். மெல்லின ஓசைகள் நிறைந்ததும், பல சந்தர்ப்பங்களில் மூக்கால் பேசுகிறார்களோ என்று தோன்றவைக்கிறதுமான மொழியைச் சங்கீதத்துக்கான சிறப்பு மொழி என்று காலங் காலமாகச் சொல்லிவருகிறார்களே, இதற்கெல்லாம் என்ன அடிப்படை என்று ஒரு சந்தேகம் உண்டு எனக்கு. வெங்கடேச ராவ் பேசுவதைக் கேட்டபிறகு, இந்த மாதிரியான மூத்தோர் கூற்றுகளில் சட்டென்று புலப்படாத ஒருவகை ஞானம் ஒளிந்திருப்பது தெரியவந்தது.



தொழில் காரணமாக ஆந்திரா முழுவதும் மூன்று வருடங்கள் சுற்றியலைந்திருக்கிறேன். கர்நூல் என்னுடைய தலைமையிடமாக இருந்தது அப்போது. தவிர, மார்க்கெட்டிங் துறையில் என்னுடைய அபார வளர்ச்சிக்கு புதிய பாஷைகளை விரைவாகக் கற்றுக்கொள்ளும் திறமையும் ஒரு காரணம் என்று என் முன்னாள் உபதலைவர் ஸின்ஹா பாராட்டுவார். ரூபாய் நோட்டில் போட்டிருக்கும் மொழிகள் பலவற்றிலும் என்னால் சரளமாகப் பேச முடியும். சொன்னால் நம்பமாட்டீர்கள், உத்தரப் பிரதேசத்தின் ஒரு பகுதியில் மைதிலி என்ற பாஷை பேசுவார்கள். அதில்கூட என்னால் சகஜமாக உரையாட முடியும்.



கொட்டகைத் தூணாக நின்ற மூங்கில் கழிகளில் சாத்தியும் தரையிலும் கிடந்த பலகைகள் பலவும் பெயர்ப் பலகைகள். எழுத்துகள் பிசிறில்லாமல் பொறிக்கப்பட்டிருந்தன என்பதுபோக, அவற்றின் அமைப்பில் ஒரு நேர்த்தியும் சுற்றிலுமிருந்த அலங்கார வேலையில் நூதனமான வடிவங்களும் இருந்தன. இவ்வளவு தேர்ந்த கைவேலைக்காரன் இப்படி ஒரு அத்துவான வெளியில் வந்து குடியிருக்கிறானே, வாடிக்கையாளர்கள் எங்கிருந்து வருவார்கள் என்று ஆச்சரியமும் ஆதங்கமும் ஒரே சமயத்தில் தோன்றின. குடிலின் பின்புறம் இருந்த கிணற்றின் உறைச் சுவரையொட்டிக் கிளம்பிய வண்டிப் பாதையின் தடம் முடியும் இடத்தில் உயர்ந்திருந்த நாலைந்து காரைக் கட்டடங்கள் சிறுநகரொன்று அண்மையில் இருப்பதற்கான தடயம் அறிவித்தன. என் முதுகுப்புறம் யாரோ செருமும் ஒலி கேட்டது.



என்ன வேண்டும்?



சற்றுக் கிறீச்சிட்ட குரல்தான். வயதான மனிதர். பல நாட்களாக மழிக்கப்படாத முகத்தில் முள்முள்ளாகப் படர்ந்திருந்த வெண்முடிகள். பஞ்சு வெண்மையில் அடர்த்தியாக இருந்த தலைமுடி. மீசை கிடையாது. தாடைவரை இறங்கியிருந்த வெண் கிருதா. ஆனாலும் முகச் சருமத்திலும் முன்னங்கைகளிலும்கூடச் சுருக்கங்கள் எதுவும் இல்லை. சாம்பல் நிற விழிகள் பார்வையை அகற்றவொட்டாமல் ஈர்த்தன.



சும்மாதான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். வியாபார விஷயமாக வரவில்லை.



அதுதான் தெரிகிறதே. அந்த ரயிலிலிருந்து இறங்கி வந்தவர் தானே….?



அசட்டுத்தனமாகச் சிரித்து வைத்தேன்.



… அதனால்தான் கேட்டேன். சாப்பாடா தண்ணீரா, என்ன வேண்டுமென்று!



கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்.



பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் சீசாக்கள் புழக்கத்துக்கு வராத காலகட்டம் அது. பெரியவர் வாய் அகண்ட ஒரு தாமிரப் போணியில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். ரயிலில் கிடைத்த தண்ணீர் போல இல்லை அது. புத்துணர்ச்சியும் மென்மையும் நிரம்பிய குளிர்நீர். என் ஆச்சரியத்தைக் கவனித்தவர் போல, ‘மண்பானைத் தண்ணீர்’ என்று புன்னகைத்தபடி குடிலின் உட்புறம் கையைக் காட்டினார். தண்ணீரில் ஏதோ வேர் போட்டிருப்பதாகச் சொன்னார். தெலுங்கு வேர். சரியாகப் புரியவில்லை.



குடிலின் வாசலைப் பார்த்தபோது இரண்டாவது ஆச்சரியம் தொற்றியது. அதன் உள் ஷரத்தாக, இத்தனை நேரம் இதை எப்படிக் கவனிக்காமல் விட்டேன் என்று ஒரு உப ஆச்சரியமும் கிளர்ந்தது.



நிமிர்ந்து நின்றிருந்த ஆளுயரச் சிலை ஒன்று. வெண் பளிங்கால் ஆன சிலை. இந்தப் பிரதேசத்தில் கிடைக்கும் கற்கள் படிவக் கற்கள் அல்லவா? முதிராத பாறைகள், சிற்பம் செய்ய லாயக்கற்றவை என்றல்லவா சொல்வார்கள்? எனக்கு சிற்பத்துக்கும் சிலைக்கும் வித்தியாசம் தெரியாது அல்லது இரண்டும் ஒன்றுதானா என்பதுகூடத் தெரியாது. என்றாலும், அசந்தர்ப்பமாக அந்த இடத்தில் நின்றுகொண்டிருக்கும் சிலையை அருகில் சென்று பார்க்கத் தோன்றியது. பெரியவரிடம் அனுமதி கேட்டேன்.



‘தாராளமாய்’ என்றார் அவர்.



முழுமையாக விளைந்த ஒரு ஆணுடம்பின் சிற்பம் அது. பொதுவாகக் கோவில் சிற்பங்களில் உள்ள திருத்தமும் நேர்த்தியும் சமகால நபர்களை வடித்த சிலைகளில் இருக்காதல்லவா? அசல் நபரின் தொலைதூர நகல் மாதிரிக்கூட இல்லாத பஞ்சுமிட்டாய் நிறங்களில் வர்ணம் பூசப்பட்ட, சிமெண்ட் பொம்மைகளை எத்தனை கிராமங்களில் பார்த்திருக்கிறேன். அவற்றின் காரணமாக உருவாகும் அரசியல் தகராறுகளையும் வெட்டுக் குத்துகளையும் சாமான்யர்கள் உயிரிழப்பதையும் எத்தனை செய்திகளில் படித்திருக்கிறேன். இந்தச் சிற்பம் அப்படிப்பட்டதல்ல. அதன் வடிவத்திலும் திருத்தத்திலும் ஒரு புராணிகத் தன்மை இருந்தது. இந்த நாள் ஆச்சரியங்களின் தினம் போல என்று ஒரு கணம் தோன்றியது. அந்த வாலிபன் தன் வலது கையில் ஒரு சுத்தியலையும் இடது கையில் உளியும் வைத்திருந்ததுகூடப் பெரிய ஆச்சரியம் அல்ல, அவனுடைய கண்கள் உயிருள்ள கண்கள் போலவே என்னைப் பார்த்தன என்பதுதான் பேராச்சரியம். விலகி நின்று வேறு கோணத்தில் பார்த்தபோதும் அவனுடைய கண்களின் வெண்ணிறக் கருவிழிகள் என்னைப் பார்த்தன. விழிகளில் சலனமெதுவும் இருக்கிறதோ என்று ஒரு சந்தேகம் உதித்தது. மின் அதிர்ச்சிபோல அச்சம் என் முதுகுத் தண்டில் தாக்குவதை உணர்ந்தேன். தவறான இடத்தில் வந்து வேண்டாத வேலையில் இறங்கிவிட்டேனோ?



“பரவாயில்லையே. ஒரு பார்வையில் கண்டுபிடித்துவிட்டீர்களே?” முதுகுப்புறம் கிறீச்சிட்ட குரல் மிகப் பெரிய ஆறுதலாக இருந்தது. திரும்பிப் பார்த்தேன். நான் என்ன கண்டுபிடித்தேன் என்று இவர் கண்டுபிடித்தார்?



“இந்தச் சிற்பத்தின் சிறப்பே அதுதான். எந்த இடத்திலிருந்து பார்த்தாலும் அது நம்மைப் பார்க்கிற மாதிரி இருக்கும். ஏன் தயங்கி நிற்கிறீர்கள்? இன்னும் கிட்டச் சென்று பார்க்கலாம். அது சிற்பம்தான். ஒன்றும் செய்துவிடாது…” குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.



இன்னும் அருகில் சென்றேன். நெருங்கிப் பார்த்தபோது இன்னமும் தீர்க்கமாக ஆகியது சிற்பம். மார்பின் குறுக்கே ஓடிய பூணூலின் புரிகள் துலக்கமாகத் தெரிந்தன. சிங்கத்தின் பிடரி போன்று தோளில் படர்ந்திருந்த கேசத்தின் ஒவ்வொரு இழையும் துல்லியமாய்த் தெரிந்தது. ராஜஸ்தானிய பாணி உருமாலில் துணி மடிப்புகளும் சுருக்கங்களும் குச்சத்தின் நுனிப் பிசிறுகளும் தத்ரூபமாய் இருந்தன. கண் இமைகளின் முடிகள் ஒவ்வொன்றும் தனித் தனியாக நீட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்தபோது எனக்கு மூச்சுத் திணறியது. பளிங்கின் நிறமில்லாமல் இயல்பான நிறங்கள் மட்டும் இருந்திருந்தால் உயிருள்ள ஆள் உறைந்து நிற்கிறான் என்றே நம்பியிருப்பேன்…. பெரியவரிடம் கேட்டேன்.



யார் செதுக்கிய சிற்பம் இது?



செதுக்கியதா? என்று கேட்டார்.



ஆழமாக இழுத்து ஒரு பெருமூச்சுவிட்டார். ஏதோ ஞாபகம் வந்த மாதிரி உதட்டோரம் சிறு முறுவல் உதித்தது.



நான் ஒன்றும் தவறாகக் கேட்டுவிடவில்லையே?



அட. அதெல்லாம் இல்லை. இந்தச் சிற்பத்தின் கதை பெரியதாயிற்றே. . .



தொலைவில் மரவட்டையின் பிரேதம்போல நின்றிருந்த ரயிலை ஒருமுறை பார்த்தார்.



…. அது இப்போதைக்குக் கிளம்பாது. உட்காருங்கள். சாவகாசமாகச் சொல்கிறேன். என்றவாறு குடிலின் உள்ளே சென்று திரும்பினார்.



ஒரு கையில் பருத்த சுரைக் குடுக்கையும் மறுகையில் ஒருவர் மட்டும் அமர்கிற மாதிரி சதுரமான கோரைத் தடுக்கும் கொண்டுவந்தார். தரையில் உட்கார்ந்து கொட்டகையின் தூணாக நின்ற கழியில் சாய்ந்துகொண்டார். தமக்கெதிரில் தடுக்கைப் போட்டு என்னை அமரும்படி சைகைகாட்டினார்.



குடுக்கையின் தக்கையைத் திறந்தவுடன் உறைந்து பல நாட்களாய்க் காடியேறிய ஊளைமோரின் புளிப்பு மணம் கொட்டகை முழுவதும் நிரம்பியது.



‘கொஞ்சம் கள் சாப்பிடுகிறீர்களா?’ – என்று என்னை நோக்கி நீட்டினார்.



‘பழக்கமில்லை…’ என்று தலையசைத்த மாத்திரத்தில், அவர் மனம் புண்பட்டுவிடக் கூடாதே என்று அவசரமாய்ச் சொன்னேன்.



“வாசலில் உள்ள பலகைகள் நீங்கள் பொறித்ததா? பிரமாதமாக இருக்கின்றன.”



அவர் பெருமிதமாகச் சிரித்துக்கொண்டார்.



“சும்மாவா? நான் பிறந்த வம்சத்தின் பெருமை அல்லவா அது? இதோ நிற்கிறாரே, இவர் யார் தெரியுமா?…” – மூலையில் நின்ற சிற்பத்தை மோவாயால் சுட்டிக்காட்டினார். இதற்குள் நாலைந்து மிடறுகள் அருந்தவும் செய்திருந்தார். பேசுவதற்காக வாய்திறந்தபோது இன்னும் விசையுடன் புளிப்பு பீறியது.



கர்நாடகத்தில் ஒரு ராஜாவின் ஆஸ்தான சிற்பியாக இருந்தவர். எனக்கு இருபது தலைமுறைக்கு முந்தியவர்.



ஏயப்பா. பல நூறு வருஷம் ஆகியிருக்குமே. அவருடைய சிலைதானா இது?



அவசரப்படாதீர்கள். அதை நிதானமாகச் சொல்ல வேண்டும் என்றுதானே இதை எடுத்துவந்திருக்கிறேன்.



குடுக்கையைச் செல்லமாகத் தட்டினார். மெல்ல மெல்ல அவர் கண்கள் சிவந்து வந்தன. கொஞ்சமும் தடுமாறாத மொழியில், ஏற்கனவே பலதடவை சொல்லி ஒத்திகை பார்த்துக்கொண்டது போன்ற நிதானத்தில், தான் காண்கிற கனவைக் காணும்போதே அடுத்தவருக்குச் சொல்கிற மாதிரிக் கிறக்கத்தில் சொல்லிக் கொண்டே போனார். இதுபோல ஆழ்ந்து கதை சொன்ன பலபேர் என் முகத்தைத் திரைபோலப் பாவித்து அதில் தெரியும் காட்சிகளை எனக்கே எடுத்துச் சொல்கிறவிதமாக என்னை உற்றுப் பார்ப்பதை ரசித்து அனுபவித்திருக்கிறேன். இவர் கதை சொல்லும்போது என் முகத்தை ஊடுருவிப் பார்த்தபடி சொன்னார். எனக்குப் பின்புறம் வேறெங்கோ தற்சமயம் நடந்துகொண்டிருக்கும் உண்மைக் கதைபோலும் அது.



…. கர்நாடகத்தில் ஒரு ராஜா என்று சொன்னேனே, அது எந்த ராஜா, எந்தக் காலகட்டம் என்று சொல்வதற்கு எனக்கு அதிகாரம் இல்லை. எங்கள் வம்சம் வெகு கறாராகக் கடைப்பிடித்துவரும் ரகசியம் அது. ஊரையும் பேரையும் சொன்னால் தீராத சாபம் பிடித்துவிடும். தெற்குக் கர்நாடகத்தில் ஒரு பிரம்மாண்டமான சிவன் கோயிலைக் கட்ட ஆரம்பித்தார் அந்த ராஜா.



என் மூதாதை – அதுதான் இங்கே சிலையாக நிற்கிறாரே, அவர் – அந்தச் சமயத்தில்தான் கர்நாடகம் வந்து சேர்ந்தார். அவருடைய பூர்வீகம் ராஜஸ்தானம். கல் தச்சர்கள் பரம்பரை. குடும்பத்தவரோடு ஏதோ பிணக்கு ஏற்பட்டு வெளியேறிவிட்டார். அப்போது இருபத்தோரு வயது அவருக்கு. தனியராகவும் கைவசம் சாமான் மூட்டை எதுவுமின்றியும் தம் முன்னால் வந்து நின்ற வாலிபனைப் பலவாறாகக் கேள்விகள் கேட்டு இவர் ஒரு சிற்பி என்று அறிந்துகொண்டார் ராஜா. கோவில் பணியில் சில சில்லறை வேலைகளைக் கொடுத்தார். இவருடைய வேகமும் திறமையும் ஒரே வாரத்தில் வெளிப்பட்டுவிட்டதாம். உடனடியாகப் பெரிய வேலைகளை இவர்வசம் ஒப்படைத்தார்.



குறிப்பாக, கோவிலில் விழா மண்டபத்தின் முகப்பில் நிறுத்துவதற்கான பெண் சிலை. பொதுவாக, அந்தக் காலகட்டத்தில் கருங்கல் அல்லது மாக்கல்லில்தான் சிற்பங்களைச் செதுக்கிவந்தார்கள். நமது சிற்பி ராஜஸ்தானத்தைச் சேர்ந்தவரல்லவா? வெண்பளிங்கில் வடிக்க முடிவெடுத்தார். ஆனால், கல்லைத் தேர்ந்தெடுக்கத் தம் பூர்வீக ராஜ்யத்துக்குப் போக மறுத்துவிட்டார்.



ராஜாவின் ஏற்பாட்டில் ராஜஸ்தானத்திலிருந்து தரமான கற்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவருவதற்கு நாற்பத்தியிரண்டு சிற்பிகள் கொண்ட ஒரு குழு ராஜஸ்தானம் புறப்பட்டுச் சென்றது. அவர்களுக்குப் பதினைந்து நாள் பாடம் சொல்லிக் கொடுத்தாராம் நமது சிற்பி. அறுபது யானைகள் சுமந்துவந்த பளிங்குக் கற்கள் கர்நாடகம் வந்து சேர்வதற்கு மூன்று மாதங்கள் பிடித்தன. அதுவரை ஓய்வெடுத்துக்கொண்டிருந்த சிற்பி, கற்களைப் பொறுப்பெடுத்துக்கொண்ட மாத்திரத்தில் பிசாசுபோல இயங்க ஆரம்பித்தார்.



உசிதமான கல்லைத் தேர்ந்தெடுக்க மட்டுமே ஒரு மாதம் ஆகிவிட்டதாம். தினசரியும் காலையில் கற்கள் குவிக்கப்பட்டிருக்கும் திடலில் வந்து ஒவ்வொரு கல்லையும் அங்குலம் அங்குலமாகத் தட்டி அதன் நாதத்தைக் கேட்டுக்கொண்டிருப்பாராம். முடிவாக ஒரு கல்லைத் தேர்ந்தெடுத்தார். அன்றாடம் நீராடிவிட்டு வந்து அதன் முன்னால் உட்கார்ந்து தியானத்தில் ஆழ்ந்துவிடுவாராம். சரியான முகூர்த்த நாள் ஒன்று பார்த்து, அன்று சிற்பப் பணி ஆரம்பித்தது.



ராப்பகலாக வேலை. அவருக்குத் தாம்பூலம் தரிக்கும் வழக்கம் உண்டு. பிரம்மச்சாரி என்பதால் சுயம்பாகமாகச் சமைத்துச் சாப்பிடுபவர். பல நாட்கள் வேலை மும்முரத்தில் தாம்பூலம் தவிர வேறெதுவும் சாப்பிடாமலே பொழுது கழிந்துவிடுமாம். சுபாவமாகவே பிறருடன் அதிகம் உரையாடல் எதுவும் வைத்துக்கொள்ளாத தனிமை விரும்பி. இந்த வேலையை ஏற்றுக்கொண்டதன் பிறகு பேச்சு இன்னமும் குறைந்துவிட்டது.



இவருக்குத் தனியாக ஒரு விஸ்தாரமான குடில் அமைத்துத் தரச் செய்தார் ராஜா. தாமே சமைத்துச் சாப்பிடுகிறார் என்று கேள்விப்பட்டு இனி அது தேவையில்லை, தினமும் அரண்மனையிலிருந்தே ஆசாரமான சாப்பாடு வந்து சேரும் என்று ஏற்படுத்தினார். இரவில் இவர் உறங்கும்போது விசிறுவதற்காக இரண்டு பணிப்பெண்களை அமர்த்தித் தந்தார். ஓரிரு நாட்கள் கழித்து இந்தப் பெண்கள் வர வேண்டியதில்லை என்று சிற்பி கூறிவிட்டாராம். யாராவது பார்த்துக்கொண்டிருக்கும்போது உறக்கம் தன்னியல்பாக வந்து கவிய மறுக்கிறது என்று காரணம் சொல்லியிருக்கிறார்.



கற்கள் வந்து சேர்ந்த நாட்களிலேயே, ராஜாவின் ஒரே மகளான ராஜகுமாரி தினசரி வந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். ஒருமுறை ராஜகுமாரி சிற்பியிடம் கேட்டாள்.



சிற்பம் செதுக்குவதற்கான கல்லை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?



அது ரொம்ப சுலபம் அம்மா. எந்தக் கல்லுக்குள் நாம் தேடும் சிற்பம் ஒளிந்திருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டால் போதும்.



சிற்பியின் பதில் கொஞ்சமும் புரியவில்லை அவளுக்கு. ஆனால் அவருடைய கண்களைவிட்டுப் பார்வையை விலக்கிக்கொள்ளவும் முடியவில்லை.



ஓ… வேலை தொடங்குவதற்கு முன்னால் நாட்கணக்காகத் தியானத்தில் அமர்ந்தது எதற்காக?



சுற்றிப் போர்த்தியிருக்கும் பாறைத் திப்பிகளைத் தட்டி உதிர்ப்பதற்கு சிற்பத்தின் அனுமதியை வேண்டித்தான்.



இந்தவிதமாக அவ்வப்போது உரையாடிக்கொண்டு, சேடியர் கொண்டுவந்த அலங்கார நாற்காலியில் அசையாமல் அமர்ந்து பார்த்துக்கொண்டிருப்பாள். அவள் வேடிக்கை பார்த்தது சிற்பத்தையா சிற்பியையா என்பது பெரும்பெரும் சர்ச்சையையும் தர்க்கத்தையும் விவாதத்தையும் ராஜ்யம் முழுவதும் ஏற்படுத்தியதாம்…



புதிதாக வந்த ஒருவனுக்கு இவ்வளவு சௌகரியமும் அங்கீகாரமும் கௌரவமும் கிடைப்பது சக சிற்பிகளுக்குள் பொறாமையை ஏற்படுத்தத்தானே செய்யும்? தலைமைச் சிற்பியாய் இருந்த கிழவர் இதை ஒரு விநோதமான வழியில் தீர்த்துக்கொள்ள முடிவெடுத்தார். ராஜஸ்தானத்திலிருந்து வந்த கற்களில் நமது சிற்பி வேண்டாம் என்று ஒதுக்கிய ஒன்றை எடுத்துத் தாம் ஒரு சிலை செய்யத் தொடங்கினார்.



அவர் செதுக்கிய சிலை வேறெதுவுமல்ல, நமது சிற்பியின் உருவம்தான். பெண் சிற்பம் உருவாகி முடியும் நாளில், தாம் வடிக்கும் சிலையையும் முடித்துவிடும் திட்டத்துடன் வேகமாக வேலை பார்த்து வந்தார். ஆனால் இந்த வேலை மிக ரகசியமாக நடந்துவந்தது. நமது சிற்பியின் வேலைபோலப் பகிரங்கமாக அல்ல.



ஆரோக்கியமான தாய் வயிற்றில் வளரும் சிசுவைப் போலப் பெண் சிற்பம் நன்கு வளர்ந்து வந்தது. ராஜகுமாரி அரண்மனை திரும்பும் நேரமும் தாமதமாகிவந்தது. ஓரிரு இரவுகள் குடிலிலேயே தங்கவும் செய்தாள்.



ஒரே சிற்பத்தை எவ்வளவு நேரம் அம்மா பார்த்துக்கொண்டிருப்பாய்?



என்று ராஜாகூட மகளைச் சற்றுக் கோபமாகக் கேட்டாராம்.



ஒரே ராஜ்யத்தை எவ்வளவு காலமாக ஆண்டுகொண்டிருக்கிறீர்கள்? என்று பதிலுக்குக் கேட்டாளாம் மகள்.



அவள் இப்படியெல்லாம் கேட்கக் கூடியவளே அல்ல. சிற்பியின் சகவாசம்தான் காரணமோ என்று மனம் புழுங்கியிருக்கிறார் மன்னர்…



ஆயிற்று, சிலைக்கு நாளைக் காலை கண்திறக்க வேண்டியதுதான் பாக்கி.



முந்தின நாள் இரவில் சில உற்பாதங்கள் தோன்றின. வெகுநாட்களாக ஆகாயத்தில் உலவிவந்த வால்நட்சத்திரம் சடாரென்று உதிர்ந்தது. பார்வையற்ற காக்கை ஒன்று குடிலின் வாசலில் ஓயாமல் பிலாக்கணம் வைத்தது. அதை விரட்டியடிக்கும் விதமாக நாலைந்து கோட்டான்கள் விடாமல் அலறின. இரவு முழுவதும் மார்கழி மாதத்துக்குச் சம்பந்தமேயற்ற வெக்கை நிலவியது. குடிலின் மூலையில் இருந்த எண்ணெய் விளக்கின் அருகே கொடியில் காய்ந்த வஸ்திரமொன்று காற்றுக்கு அசைந்து தீப்பற்றியது. இரவுச் சாப்பாட்டுக்காக அரண்மனையிலிருந்து வந்திருந்த அன்னத்தில் பல்லி விழுந்து இறந்துகிடந்தது. குடிலின் உத்தரத்தில் புதிதாகக் குடிவந்திருந்த மரப் பல்லி இரவு முழுவதும் துர்ச்சொல் உதிர்த்தவண்ணமிருந்தது. சிற்பி கை மறதியாய் வெற்றிலையில் தடவிய சுண்ணாம்பு அபரிமிதமாக அளவு கூடி வாய் வெந்துபோயிற்று.



ஆகாயத்தில் பரவிவிட்ட இரவையும் அதன் இருள் அடர்த்தியையும் தன் தனிமையையும் வெறித்துக் கொண்டு உறக்கம் பிடிக்காமல் உட்கார்ந்திருந்தார் சிற்பி. வெக்கை முற்றியபோது ஆயாசம் தாங்காமல் கண்கள் தாமே மூடிக்கொண்டன. உறக்கத்தினுள் வழுக்கினார்.



முதல் ஜாமம்



முதலாம் ஜாமம் ஆரம்பித்து ஒரு நாழிகை சென்றபின் ஒரு கனவு வந்தது. வழக்கமாகக் கனவுகளில் நிலவுவதுபோன்ற சாம்பல் நிற வெளிச்சம் இல்லை. கோடை நாளின் உச்சிப்பொழுது போன்ற ஒளி. கண்களை முழுக்கத் திறந்து பார்க்க இயலாதபடி பார்வை கூசியது.



தன் எதிரில் நிற்பது சிற்பம் அல்ல, உயிருள்ள தேவதை என்று கண்டு சிற்பி அதிர்ந்தார். முந்தைய கணத்தில் உளியும் சுத்தியும் திறந்துவைத்த கண்களை முழுசாக மலர்த்திச் சிரித்தாள் அந்த மந்திரக் கன்னி. நேற்றுவரை உறைந்திருந்த சிரிப்பில் இல்லாத ஒரு கபடம் தற்போதைய சிரிப்பில் கூடியிருப்பதைக் கவனித்தார் சிற்பி. கண்களும்கூடத் தான் திறந்துவைத்த விதமாக இல்லாமல், அகலம் அதிகரித்திருப்பதைக் கண்டார். அவை அவ்வப்போது இமைக்கவும் செய்தன.



வெக்கையின் ஊடாகத் திடீரென்று ஒரு குளிர்ந்த காற்றலை ஊடுருவிச் சென்றது. திகைப்பின் காரணமாக மூடிய சிற்பியின் கண்கள் மீண்டும் திறந்தபோது சிலை பீடத்தைவிட்டுக் கீழே இறங்கி வந்திருந்தது.



அது நின்ற நிலையும் அதன் கன்னச் சதையின் துடிப்பும் நீட்டிய கைகளில் இருந்த பரபரப்பும் அதன் நோக்கத்தை வெளிப்படையாகத் தெரிவித்தன. தன் மார்பின் குறுக்காக இரண்டு கைகளையும் கோத்துக் கட்டிக்கொண்டு நிமிர்ந்து பார்த்தார் சிற்பி.



என்னம்மா வேண்டும் உனக்கு?



நீர்தான்.



தயக்கமில்லாமல் பதிலளித்தாள் சிற்பக் கன்னி. தீவிரமான யோசனை போல மௌனத்தில் அமிழ்ந்தார் சிற்பி. கண்களை மறுபடியும் மூடிக்கொண்டார். கண்களின் உட்புறம் எதையோ நிகழ்த்திப் பார்க்கிறவர் மாதிரி இமைகளுக்கடியில் விழிகள் உருண்டன. சில நிமிடங்கள் கழித்து கனிவான குரலில் பதிலிறுத்தார்.



அது முறையல்ல அம்மா.



ஏன்?



கல்லிலிருந்து உன்னைப் பிறப்பித்தவன் நான்தான். ஆகவே, உனக்குத் தகப்பன் ஸ்தானம். உன்னை என் மகளாகத்தான் பார்க்கிறேனே தவிர, பெண் உடம்பாகப் பார்க்க முடியாது.



உளறுகிறீர். கல்லிலிருந்து என் வடிவத்தைத்தான் உருவாக்கினீர். கல்லை நீர் உருவாக்கவில்லை. தவிர, என் உடம்பு பற்றிச் சொன்னீரே…



ம்.



மிக அருகிலிருந்து உம்முடைய உடம்பை அன்றாடம் பார்த்து வந்திருக்கிறேன் அல்லவா…



இன்று காலைதானே உன் கண்களைத் திறந்துவிட்டேன்?



… கண்ணை மூடிப் படுத்திருக்கும்போது உம் அருகில் யாராவது வந்தால் உம்மால் உணர முடியாதா?



வாஸ்தவம்தான்.



உம்மீது கிளர்ந்த மோகத்தின் கிறக்கம் தாளாமல்தான் இறங்கி வந்திருக்கிறேன். நான் பார்த்துப் பார்த்து மோகித்த அந்த உடம்பை ஒருமுறை தழுவி இன்புற்றாக வேண்டும் எனக்கு.



தொடர்ந்து உரையாடல் போய்க்கொண்டேயிருந்தது. சிற்பியின் சுண்டுவிரல் நகம்கூடச் சிற்பக் கன்னியின்மீது படவில்லை. விவாதத்தின் உச்சத்தில் அவர் முடிவாகச் சொன்னார்.



பாறையுடன் சம்போகம் செய்யும் திராணி எனக்கு இல்லை அம்மா – என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.



அவள் அடிவயிற்றிலிருந்து சாபமிட்டாள்.



என்னைச் சிலை என்றுதானே பரிகசிக்கிறீர். அடுத்த பிறவியில் நீரும் சிலையாக இருக்கக் கடவீர். அப்போதுதான் புரியும் என் தகிப்பு.



மீண்டும் சிற்பமாக உறைந்தாள் அவள்…



உடல் விதிர்த்து விழித்துக்கொண்டார் சிற்பி. படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார். ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தார். யதேச்சையாக வந்த குட்டிமேகத்துக்குப் பின்னால் மறைந்துகொண்டாலும் நிலாவின் வெளிச்சம் அது இருந்த இடத்தைச் சுற்றிலும் வெகுதூரத்துக்கு ஆதிக்கம் செலுத்தியிருந்தது. இருளின் ரகசியத்துடன் ஓயாமல் கண்சிமிட்டிப் பேசிக்கொண்டிருந்த நட்சத்திரங்கள் விநோதமான ஏக்கத்தைக் கிளர்த்தின. வெற்றிலைப் பையை எடுத்துத் திறந்தார். தாம்பூலம் தந்த கிறுகிறுப்பு தனிமைக்கு மிக இதமான துணையாக இருந்தது. எழுந்து சென்று சக்கையைத் துப்பிவிட்டுத் திரும்புகிறார், சிலை தம்மையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்தார். முதுகில் பூரான் ஓடுகிற மாதிரி ஒரு குறுகுறுப்பு. மேகத்தைவிட்டு வெளியே வந்திருந்த நிலா பளிரிட்டது. சிற்பம் கேட்டதைக் கொடுத்திருக்கலாமோ? என்று ஒரு கணம் சிந்தை தயங்கியது.



வாசலில் இருந்த மூங்கில் படலை யாரோ திறக்கிற மாதிரி சப்தம் கேட்டது. பாத சரங்கள் ஒலிப்பது போலவும், அவற்றின் ஒலி மிகவும் பரிச்சயமானது போலவும் தோன்றியது. இந்த நேரத்தில் யார் வரப் போகிறார்கள், பிரமையேதான் இது என்று சமாதானம் கொண்டு கண் கிறங்கினார்.



இரண்டாம் ஜாமம்



விட்ட இடத்திலிருந்து தொடர்வதுபோல, அதே கனவு மீண்டும் வந்தது. இந்தமுறை மிகப் பெரிய வித்தியாசம் ஒன்று நேர்ந்துவிட்டிருந்தது…



கண் திறந்த சிலையின் முகம் ராஜகுமாரியின் முகம்போலவே இருந்தது.



சிற்பம் முந்தைய கனவில்போல வேண்டுகோளெல்லாம் விடுக்கவில்லை. தன்னியல்பாக நெருங்கி வந்து அணைத்துக்கொண்டது. தனது பொருளைத் தான் எடுத்துக்கொள்ளும் சுவாதீனத்துடனும் வெகு நாளாகக் காணாமல்போயிருந்த பொருள் யதேச்சையாகக் கிடைத்து விட்ட ஆவேசத்துடனும் இன்னும் கொஞ்ச நேரம்தான், பிறகு அது நிரந்தரமாகக் காணாமல் போய்விடும் என்பது போன்ற பதற்றத்துடனும் பலநாள் திட்டத்தின் விளைவாகச் செயல்படுவது போன்ற சிரத்தையும் கச்சிதமும் கொண்டு சேர்க்கையின் பல்வேறு அடுக்குகளுக்கு இட்டுச்சென்றது.



தேர்ந்த சிற்பி ஆட்டுரல் கொத்துவதுபோல எளிமையாகவும் வாகாகவும் தன் உடம்பு கையாளப்படுவதை உணர்ந்தார் சிற்பி.



கனவில் நிகழ்ந்த முத்தங்களின் ஒலியும் மென்சதையின் ஸ்பரிசமும் மறைவிடங்களின் மணமும் எச்சிலின் ருசியும் அலையலையாக முன்னெழுந்த சதையின் திரட்சியும் என எதுவுமே கனவில்போல இல்லை. நிஜம்போலவே அவ்வளவு அண்மையில், அவ்வளவு நேரடியாக, அவ்வளவு கிளர்ச்சி தருவதாக இருந்தன.



உச்சத்தின் விளிம்பில் சட்டென்று தான் பிடுங்கி வீசப்படுகிற மாதிரி உணர்ந்தார் சிற்பி.



விழிப்புத் தட்டியது.



குடிலுக்கு வெளியில் குதிரைக் குளம்படிபோல ஒலிகள் கேட்டன. தழைந்த பேச்சுக் குரல்களும் இணைந்துகொண்டன. வெகு தத்ரூபமான ஒலிகள். இருளைத் தவிர வேறு மர்மங்களும் இரவின் நிசப்தத்தின் திரைக்குப் பின்னால் ஏதோ பயங்கரங்கள் ஒளிந்திருப்பது போல, பிரமை தட்டியது.



உடம்பு கடுமையாக வியர்த்திருந்தது. படுக்கை விரிப்பில் அகலமாக ஈரத்தடம் பதிந்திருந்ததைப் பார்க்க விகாரமாக இருந்தது.. வெளியில் வெக்கை இன்னும் அதிகரித்துவிட்ட மாதிரித் தோன்றியது. வெக்கை நிஜமாக இருப்பது எங்கே, சூழ்நிலையில்தான் நிலவுகிறதா அல்லது தனக்குள்ளிருந்து ஊறுகிறதா என்று தீர்மானிக்க முடியாமல் திகைத்தார். கைகள் அனிச்சையாகத் தாம்பூலப் பையை எடுத்தன.



குடிலுக்கு வெளியே குளம்படித் தடங்கள் இருக்கின்றனவா என்று பார்த்துவிட்டால் கைகளின் நடுக்கம் சற்றுக் குறையக்கூடும் என்று தோன்றியது. விரும்பத்தகாத ஏதாவது உறுதியாகிவிடுமோ என்று கவலையாகவும் இருந்தது.



கனத்த மனத்துடன் பஞ்சணையில் சரிந்தார்.



ஆறுதலாகத் தொற்றியது உறக்கம்.



மூன்றாம் ஜாமம்



இந்தமுறை வந்த கனவு அதிக நேரம் நீடிக்கவில்லை. அதிகபட்சம் ஏழு அல்லது எட்டு விநாடிகள் இருக்கலாம். அவ்வளவுதான். அதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டன.



முந்தைய இரண்டுமுறைகள் போலவே இப்போதும் சிற்பம் உயிர் கொண்டது. ஆனால் பெண்ணுக்குரிய அம்சங்கள் யாவற்றையும் துறந்துவிட்டு ஒரு பயில்வானைப் போன்று உடல்வாகை உருமாற்றிக் கொண்டது. முந்தைய ஜாமத்தில் உடலெங்கும் பொங்கித் தீர்ந்த பரபரப்பையும் உச்சத்தில் தொற்றிய கிளுகிளுப்பையும் மீண்டும் நிகழ்த்திக்கொள்ளும் ஆவலுடன் விரித்த கைகளுடன் நெருங்கிய சிற்பியின் நெஞ்சில் கைவைத்து நிறுத்தியது.



தனது வலது புஜத்தில் முளைத்துப் பெரிதாகப் புடைத்திருந்த மருவைச் செதுக்கியெறியும்படி சைகை காட்டியது. குடிலின் உள்ளே சென்று உளியும் சுத்தியலும் எடுத்துவந்தார் சிற்பி.



கண்ணிமைக்கும் நேரத்தில் அவரைச் செந்தூக்காய்த் தூக்கியது சிற்பம். முந்தைய ஜாமத்தின் மிருதுத் தன்மையும் காதலும் அறவே நீங்கியிருந்த ஸ்பரிசம். போர்வீரன்போல மாறியிருந்தது ராஜகுமாரியின் முகச் சாயல். சிற்பியைப் பீடத்தில் நிறுத்தியது.



தன் பாதங்களின் அடிப்புறம் நூல் சரங்கள்போல வேர் முளைத்துப் பீடத்துக்குள் ஊன்றிக்கொள்வதையும் தலைப்பகுதியிலிருந்து மரத்துக் கொண்டே வருவதையும் உணர்ந்த சிற்பி, ஏதோ ஒரு விபரீதச் சுழியின் மையத்தில் தான் சிக்கிக்கொண்டதை அறிந்து தப்பிக்க முனைந்த மாத்திரத்தில் அந்த உருவம் குடிலை விட்டு வெகுவேகமாக வெளியேறுவதைக் கண்டார். குதிரைக் குளம்படியோசை எழுந்து நகர்ந்து மெல்லத் தேய்ந்து மறைந்தது. நகரத் திராணியின்றி நின்றிருந்தார் சிற்பி.



நாலாம் ஜாமம்



வயலை நோக்கிக் கலப்பைகளுடனும் மண்வெட்டிகளுடனும் பிரம்புக் கூடைகளுடனும் சென்றுகொண்டிருந்த ஆண்களும் பெண்களும் ஆச்சரியத்துடன் பார்த்தார்களாம் – நேற்றுவரை ஒரு பெண் சிலை நின்றிருந்த இடத்தில் இப்போது ஆண் சிலை நிற்கிறதே என்று…



இதுவரைதான் என்னுடைய நாட்குறிப்பில் இருக்கிறது. அதன் பிறகும் பலதடவை கடப்பை வழியாகச் சென்று வந்திருக்கிறேன். ஒருமுறைகூட அந்தக் குடிலுக்கு மறுபடியும் போக வாய்க்கவில்லை. வாழ்க்கை என்னை உந்திச் சென்ற பாதைகள் அப்படி. கொஞ்சம்கூட அவகாசம் தராதவை.



எனக்குக் கதைசொன்ன பெரியவர் தற்போது உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பும் மிகக் குறைவுதான் என்று தோன்றுகிறது. நான் சந்தித்தபோதே அவருக்கு வயது எழுபதுக்கு அருகில் இருக்கலாம். அந்தச் சிற்பம் யார்வசத்தில் இருக்கும் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. ஆனால் என் ஞாபகத்தில் வெகு அழுத்தமாக ஏதோ முந்தாநாள்தான் பார்த்த வஸ்துவின் பிம்பம்போல அவ்வளவு திருத்தமாக அது வீற்றிருக்கிறது.



தொடர்ந்து பல வருடங்கள் அந்தச் சிற்பியின் கதையை அசைபோட்டு வந்தபோது இயல்பாகச் சில சந்தேகங்களும் எழுந்து வந்தன.



1. ராஜஸ்தானியரான சிற்பியின் இருபத்தோராம் தலைமுறை வாரிசு, ஆந்திரத்தின் ராவ் ஆனது எவ்விதம்?



2. பிரம்மச்சாரியாக வந்து சேர்ந்து பிரம்மச்சாரியாகவே வாழ்வு முடிந்த சிற்பிக்கு வாரிசுகளும் வம்சமும் தோன்றியது எப்படி?



3. இவருக்குப் போட்டியாக தலைமைச் சிற்பி செய்த சிலை பிறகு என்னாயிற்று? எங்கே போயிற்று?



4. ராஜகுமாரிக்குச் சிற்பியின் மீது ஒரு அந்தரங்கமான இச்சை உருவான செய்தியும் கதையில் வந்ததே, அவள் என்னவானாள்?



5. தன்னந்தனியாக வாழ்ந்து மறைந்தவராயிற்றே சிற்பி? அவருடைய மறைவுக்கு முந்திய துர்ச்சகுனங்களின் பட்டியலை யார் கவனித்துக் கோத்தார்கள்? நிகழப்போகும் அசம்பாவிதத்தின் முன்குறிகள் அவை என்று யாருக்குத் தோன்றியது?



ஓய்வுபெறுவதற்குச் சிலமாதங்கள் முன்பு, உத்தியோகரீதியாக மஹாராஷ்ட்ரம் செல்ல வேண்டி வந்தது. கடைசியாக அதுதான் நான் கடப்பையைத் தாண்டிச் சென்றது. அந்தமுறை இன்னொரு விசித்திரமான சந்தேகம் தோன்றியது.



அந்தக் கனவுகள் மூன்றையும் கண்ட மனிதன்தான் சிலையாகிவிட்டானே, நான் பார்த்த பெரியவர் வரை கர்ணபரம்பரையாக அவை எவ்விதம் வந்து சேர்ந்தன?



அப்புறம் சமாதானம் செய்துகொண்டேன்… போகட்டும், உயிருள்ள மனிதன் சிலையாக மாற முடியும் என்றால், ஒருவருடைய கனவை இன்னொருவர் காண்பதும் நடக்கக்கூடிய விஷயம் தானே!



******