சனி, 15 நவம்பர், 2014

கனவு-அன்று-கனவு

எல்லாம் முடிந்துவிட்டது எனக்
கடைசியாக வெளியேறிய போது
கவனித்தான்
பின்புலமற்ற
தூய நிலவிரிவு ஒன்றுabi_photobw01
அவனுக்காகக் காத்திருப்பதை

கனவுபோன்று இருந்தாலும்
கனவு அன்று அது

ஒளியிலிருந்து
இருளை நோக்கிப்
பாதிவழி வந்திருந்தது
அந்த இடம்

கிழக்கும் மேற்கும்
ஒன்றாகவே இருந்தன
தூரமும் கூடத்
தணிந்தே தெரிந்தது

தெரிந்ததில்
எப்போதாவது ஒரு மனிதமுகம்
தெரிந்து மறைந்தது
ஒரு பறவையும் கூடத்
தொலைவிலிருந்து தொலைவுக்குப்
பறந்துகொண்டிருந்தது

சஞ்சரிக்கலாம்
மறந்து மறந்து மறந்து
மடிவுற்றிருக்கலாம் அதில்
நடக்க நடக்க
நடையற்றிருக்கலாம்

ஆயினும்
உறக்கமும் விழிப்பும்
துரத்திப் பிடிப்பதை
அவற்றின் மடிநிறைய
தலைகளும் கைகால்களும்
பிதுங்கிக் கொண்டிருப்பதைப்
பார்க்கும் நிமிஷம்
ஒருவேளை வரலாம்

கனவு அன்று எனத் தோன்றினாலும்
கனவாகவே இருக்கலாம்


மாலை - எது

தூசி படிந்த புளியமர வரிசையை
வைதுகொண்டே
மணலில் வண்டியிழுக்கின்றன மாடுகள்

வண்டுகளும் பறவைகளும்
தோப்புகளுக்குள்
இரைச்சலைக் கிளறி
எதையோ தேடிக்கொண்டிருக்கின்றன

இருண்டு நெருங்கி வளைக்கும்
மலைகளுக்கு நடுவே பள்ளத்தாக்கில்
இங்கும் அங்கும் பாய்ந்து நிரம்பித்
ததும்புகிறது
என் வலி

பொழுது நிரம்புகிறது
ஒரு இடுக்கு விடாமல்
O

தூசி படிந்த இரைச்சலுக்கடியில்
சாத்வீக கனத்துடன்
இது எது?

இருள் இருண்டு காட்டிய வெளிச்சத்தில்
இடறாத என் பாதங்களினடியில்
இது எது
என் சாரங்களின் திரட்சியுடன்
வலியுடன்
அலங்கரித்த விநோதங்களை
அகற்றிவிட்டு
எளிய பிரமைகளின் வழியே
என்னைச் செலுத்தும்
இது எது?


மாலை - தணிவு

காடு எரிந்த கரிக்குவியலில்
மேய்ந்து களைத்துத்
தணிந்தது வெயில்
என்னோடு சேர்ந்து

இதோ இதோ என்று
நீண்டு கொண்டே போன பாதைகள்
மடங்கிப்
பாலையினுள், முள்வெளி மூழ்கச்
சலனமற்று நுழைந்துகொண்டன

விவாதங்கள்
திரும்புவதற்கு அடையாளமிட்டுப் போன
வழிகளில்
அறைபட்டுத் திரும்பின

முடிவுகள்
அரைகுறைப் படிமங்களாக வந்து
உளறி மறைந்தன

பசியும் நிறைவும்
இரண்டும் ஒன்றாகி
என் தணிவு

வேறொரு விளிம்பைச்
சுட்டிக் காட்டாத
விளிம்பில்
தத்தளிப்பு மறைந்த
என் தணிவு

நிகழும் போதே
நின்றுவிட்ட என் கணம்
குளிரத் தொடங்கியது
என் தணிவைத் தொட்டு


மாலை - காத்திருத்தல்

விஷப்புகை மேவிய வானம்
மூச்சுக்குத் தவிப்பது தெரிகிறது

அறிந்தவைகளின் மறுபுறங்கள் திரண்டு
மின்னி இடித்து
வெறியோடு வருகின்றன
அல்ல அல்ல அல்ல என்று
பொழிந்து பிரவகிக்க
அழித்துத் துடைத்து எக்களிக்க
வருவது தெரிகிறது

அடர்வனங்களின்
குறுக்கும் நெடுக்குமாக
ஆவேசக் காட்டாறுகள்
பதறி ஓடி
வாழ்வைப் பயிலும்

உண்டு-இல்லை என்பவற்றின் மீது
மோதிச் சிதறி
அகண்டம்
ஒரு புதிய விரிவுக்குத் தயாராவது புரிகிறது
O

காத்திருக்கிறேன்
இதுவே சமயமென
எனது வருகைக்காக
என் குடிசையில் வாசனை தெளித்து
சுற்றிலும் செடிகொடிகளின்
மயக்கம் தெளிவித்து
அகாலத்திலிருந்து
இந்த மாலைப்பொழுதை விடுவித்து-

காத்திருக்கிறேன்
மறுபுறங்களிலிருந்து
வெற்றி தோல்வியின்றித் திரும்பும்
என் வருகையை எதிர்நோக்கி

விடைகள்
விடைகள்
மிகவும் மெலிந்தவை

ஏதோ சுமந்து வருவன போல
முக்கி முனகி வியர்வை துளித்து
நம் முகத்தில்
திருப்தி தேடுபவை

தரையில் கால்பாவாது
நடக்கவும்
நீரில் நனையாமல்
நீந்தவும்
அறிந்தவை

முந்தாநாள்
ஒரு விடையை
எதிர்ப்பட்டேன்

என்னைப் பார்த்தவுடன்
அது
உடையணிந்து
உருவுகொண்டது

தன்னை ஒருமுறை
சரிபார்த்துக் கொண்டதும்
எங்களைச் சுற்றி
ஒரு அசட்டுமணம் பரப்பிவிட்டு
என்னை நேர்கொண்டது

நான்
ஒன்றும் சொல்லவில்லை

நெளிந்தது

கலைந்து மங்கும்தன்
உருவை
ஒருமித்துக் கொள்ளக்
கவலையோடு முயன்றது

சுற்றிலும் பார்த்துவிட்டு
ஒருமுறை
என்னைத் தொடமுயன்றது

நான்
எதுவுமறியாத
பாவனை காட்டியதில்
ஆறுதலுற்றுக்
கொஞ்சம் நிமிர்ந்தது

எதிர்பாராது வீசிய காற்றில்
இருவரும்
வேறுவேறு திசைகளில்
வீசப்பட்டோம்

திரும்பப்போய்த்
தேடிப்பார்த்த போது
சாமந்திப்பூ இதழ்கள் போல்
பிய்ந்து கிடந்தன
சில
சாகசங்கள் மட்டும்


காலம் - புழுதி

எங்கிலும் புழுதி
வாழ்க்கையின் தடங்களை
வாங்கியும் அழித்தும்
வடிவு மாற்றியும்
நேற்று நேற்றென நெரியும் புழுதி

தூரத்துப் பனிமலையும்
நெருங்கியபின் சுடுகல்லாகும்
கடந்தாலோ
ரத்தம் சவமாகிக் கரைந்த
செம்புழுதி

புழுதி அள்ளித்
தூற்றினேன்

கண்ணில் விழுந்து
உறுத்தின
நிமிஷம் நாறும் நாள்கள்


காலம் - சுள்ளி

காடு முழுதும்
சுற்றினேன்

பழைய
சுள்ளிகள் கிடைத்தன

நெருப்பிலிட்டபோது
ஒவ்வொன்றாய்ப்
பேசி வெடித்துப்
பேசின

குரலில்
நாளைச்சுருதி
தெரிந்தது

அணைத்து,
கரித்தழும்பு ஆற்றி
நீரிலிட்டபோது
கூசி முளைத்துக்
கூசின இலைகள்

தளிர் நரம்பு
நேற்றினுள் ஓடி
நெளிந்து மறைந்தது

சனி, 27 ஜூலை, 2013

நவீன கவிதை செல்லும் திசை - கலாப்ரியா



நவீன கவிதை அல்லது இன்றைய கவிதை என்னும்போது, நவீன கவிதையின் அரை நூற்றாண்டுக்கும் மேலான பின்புலத்தைத் தொட்டுச் செல்வது நல்லது என்று நினைக்கிறேன். எழுத ஆர்வமுறுகிற எவரும் முதலில் கவிதையைத் தேர்வு செய்கிறார்கள் என்பது ஒரு எழுதப்படாத விதியாய் இருக்கிறது.நான் பல உரைநடை,சிறுகதை, நாவல் எழுதும் பிரபலமானவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன், “ நான் முதலில் எழுதியது, கவிதை”, என்று. இதற்குப் பல காரணிகள் இருக்கலாம். என்றாலும் அவை எல்லாமும் ஒரே அடித்தளத்தில் சமைந்த பலமாடிக் கட்டிடமாகவோ, ஒரு மரத்தின் பல வேறு கிளைகளும், அதன் இலைகளும், பூக்களும் கனிகளுமாகவே இருக்கின்றன.ஒரு இலக்கிய வாசகனுக்கு அவனது தாய்மொழியில் அமைந்த கவிதைகளே மிகப் பெரிய சொத்து எனலாம்.அதிலும் தமிழ் போல, நீண்ட நெடிய வரலாறு கொண்ட ஒரு செம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவனுக்கு இது மாபெரும் வரம். தினசரி வாழ்வில் கூட நாம் சாதாரணமாய், ஒரு நல்ல உரைநடை வரியைப் படிக்க நேரிட்டால், பொதுப்புத்தி சார்ந்து பலரும், ’ஆகா இது கவிதை” என்று சொல்வதை நாம் கேட்கிறோம்.அந்த அளவுக்கு கவிதை ஆதியானதும் ஒரு உன்னதம் மிக்கதுமாக இருக்கிறது.காலையில் பரபரப்புடன் இயங்கும் ஹாஸ்டல அல்லது மேன்ஷனின் பாத்ரூம்கள், நடுப்பகலில் அமைதியுடன் இருப்பது போல, இயக்கமின்றி, வெற்று அரட்டையை நாடி நிற்கும், சோர்ந்து இருக்கும் மூளையில் திடீரெனத் தோன்றுகிறது, 


”உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னாருடைத்து”.....

என்று ஒரு குறள்.அந்த ’உருள்பெருந்தேர்’ என்ற அற்புதமான சொல்க்கட்டு நினவில் ஒரு பெரிய தேரை உருட்டுகிறது. வலிய தேர்ச்சக்கரப் பதிவாய், மனம் திரும்பத் திரும்ப அந்த வார்த்தையைச் சொல்லிச் சொல்லி அதிசயிக்கிறது.இது கவிதைக்கே சாத்தியம். மரபுக்கவிதை என்றில்லை,நவீன கவிதையிலும் “விரிகிறதென் யோனி” என்ற சொல்ச்சாட்டை சோர்ந்த மூளையைச் சொடுக்கும்போதும் இது சாத்தியமாகிறது. இதையே “நினைவின் விருந்தாளியாக ஒரு கவிதை பிரவேசிக்கும் போது நமது உலகமே மாறிப் போகிறது” என்ற ஆங்கில மேற்கோள் நமக்கு உணர்த்துகிறது.

ஆனால் மொழியின் பரிணாமத்தைப் பார்க்கும் போது, “கவிதை என்பது சிறந்த வார்த்தைகளின் சிறந்த வரிசை” (POETRY IS BEST WORDS IN BEST ORDER) என்கிற ஒரு விளக்கத்தின் படி, சொல்லாடலின்படி - இதை ஒரு கவிதைக்கான வரையறையாகக் கொள்ள முடியாது, கவிதையை அப்படி எந்த ஒரு வரையறைக்குள்ளும் அடக்க முடியாது-பார்த்தோமானால் கவிதைக்கு முந்தியே பல வெளிப்பாட்டு முறைமைகள் இருந்திருக்க வேண்டும். நாட்டுப்புறப் பாடல்கள், பாணர் பாடல்கள் எல்லாம் இவற்றிற்கு உதாரணம். இந்த இடத்தில் ஒரு தகவலைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.இன்றைக்கு முப்பத்தியிரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குகை ஓவியங்களை ஃப்ரான்ஸின் ஒரு குகையில் கண்டு பிடித்துள்ளார்கள். குகை ஓவியங்களின் முதல்க் கண்டுபிடிப்பு இது என்கிறார்கள். அவை சுண்ணாம்புக்காரையின் மீது தீட்டப்பட்டுள்ளன. அவற்றில், பெண்ணின் பிறப்புறுப்பும், மிருகங்களும் உள்ளன என்பது மனோஆராய்ச்சியாளருக்கும் வரலாற்று ஆசிரியர்களுக்கும், மொழி வல்லுனர்களுக்கும் கூடுதல் சுவாரஸ்யம் தரக் கூடியவை. இதைப் பார்க்கையில் முதன் முதலில் சித்திர எழுத்துக்களாலான ஒரு வகை வெளிப்பாட்டு உத்தியே மானுட சிந்தனையின் ஆதி வித்து என்று உணர முடிகிறது. தவிரவும் உடல் - அதன் வலி, தாகம், பசி, பயம், சுகம் ஆகிய புலனுணர்வுகள் – சார்ந்தே சிந்தனை ஆற்றல் வேர் விட்டிருக்கிறது.. அரவிந்தாஸ்மரத்து அன்னை சொல்கிறார். ”உடலைப் பொறுத்து அதன் உழைக்கும் திறனே அறிவு” என்று. இது ஆதி மானுட நிலை பற்றிய பரிணாமத் தேடலின் விளைவு என எண்ண வைக்கிறது. இதிலிருந்து நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள முடிகிறது.ஆதி மனிதனின் உடலுக்கு நேர்ந்த பல அனுபவங்களே அவனைச் சிந்தனையின்பால் செலுத்தியிருக்க வேண்டும்.இதில் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவிற்கு, அவர்களது நிலவியல் அமைப்பு, வாழ்க்கை முறை ஆகியவற்றால் ஏற்பட்ட அனுபவங்களை அவர்கள், ஏதோ ஒரு வெளிப்பாட்டு உத்தியினால், தங்களுக்கிடையே பகிர்ந்து, தொகுத்து,ஏதோ ஒரு கருத்துக்கு வந்திருக்கலாம். இந்த அனுபவப் பகிர்தல் நிகழ்வினை சிந்தனை, மூளை என்ற அலகுகளால் பின்னர் குறிப்பிட்டிருக்கலாம்.

நவீன கவிஞர் திரு க. மோகனரங்கன் இதனையே “மனித மனத்தின் இயக்கமானது சிந்தனை, உணர்ச்சி என்ற இருவேறு எல்லைகளுக்கு நடுவே பல நிலைகளில் நிகழ்கிறது.இதில் சிந்தனை என்பது பொதுவாக நேரிடும் அனுபவங்களைத் தொகுத்து ஆய்ந்தறியும் அறிவு ஒருமுகப்படுத்தும் எண்ணங்கள் அதன் வழி உருவாகும் திட்டவட்டமான கருத்துக்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.இதன் குறியீடாக ‘மூளை’உருவகப் படுத்தப் படுகிறது.மாறாக உணர்வுகள் என்பது நினவுகள் மொழி, இனம் நம்பிக்கைகள்,அதன் காரணமான நெகிழ்ச்சி மற்றும் புலன் மெய்ப்பாடுகள் சார்ந்து ஒரு வசதி கருதி ’இதயம்’ என்பதுடன் அடையாளப்படுத்தப் படுகிறது..”, என்று தீர்க்கமாகச் சொல்லுகிறார்.

சிந்தனையும் உணர்ச்சியும் என்கிற ’இருமை’(BINARY) ஒன்றுக்கொன்று எதிரானதாகத் தோன்றினாலும், சிந்தனை என்பது தர்க்க பலத்தைக் கொண்ட தத்துவம் சார்ந்து இயங்குகிறது, என்றாலும், உண்மையில் உணர்வின் சாரமில்லாமல் தத்துவம் சாத்தியமில்லை.கவிதை தர்க்க ஒழுங்கை மீறி உணர்வின் பிரவாகமாவே எப்போதும் இருக்கிறது.ஏனெனில் சிந்தனை நிலைப்படுத்துகிற தத்துவமும்,அது நிர்ணயிக்கிற சமூக ஒழுங்கும் காலந்தோறும் சிதைந்து மாறுகிற தன்மையுடையது.இங்குதான் கவிதை கால தேச வர்த்தமானங்கள் தாண்டி நிலைக்கிறது. சமூகச் சிதைவுகளை காட்டி, தத்துவங்களை எள்ளி நகையாடுகிறது.

இயற்கை நிகழ்வுகளும், வாழ்வியல் சித்திரங்களும், அவற்றைக் காட்சிப் படுத்துதல் வழியே அபூர்வமான படிமங்களாக, கவிதையில் இடம்பிடிப்பது, நமது தமிழ்க் கவிதையில் சங்ககாலம் தொட்டு தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.ஆனால் இந்நிகழ்வுசார் படிமங்கள் காலத்திற்கேற்றாற் போல,நவீன கவிதையில் அர்த்த மாறுதல்களை அடைகின்றன..சமூக நிகழ்வுகளுக்கு திட்டவட்டமான வரையறை கிடையாது என்பதால் கோட்பாடுகளையும் சட்டகங்களையும் மீறி புது வியாபகம் கொள்கின்றன.

அகநானூற்றில் ஒரு கவிதை கயமனார் எழுதியது. அதில் ஒரு வரி, ”வேர்முழுது உலறி நின்ற புழற்கால்

தேர்மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்..” என்று தொடங்கும்..’முற்றிலும் காய்ந்த மரத்தில் சிள் வண்டுகள், தேரின் மணிகள் போல ஒலிக்கின்றன..’.என்ற அர்த்தத்தில்.இந்தக் கவிதை முழுவதுமாக அகச்சுவை கொண்டது. ஆனால் இன்றைய ஒரு கவிதை, சங்கர ராம சுப்ரமணியன் என்ற கவிஞர் எழுதியது......

”மலையும் மலை மேல் ஒளிரும்
பசுந்தளிரும்
இன்று புதிது.
அந்த மரத்தைக் குடையத்
தொடங்கியுள்ள
வண்டின் ரீங்காரம் போல்
என் சந்தோஷம்
புராதனம் மிக்கது.”

முன்னதில் ஒரு சோகம் நேரிடையாய் இழையோடுகிறது. மேற்சொன்ன இன்றைய கவிதையின் தொனி நமக்கு விவரிக்கும் அனுபவம் வித்தியாசமானது. கவிமனம் பசுந்தளிர் பார்த்து சந்தோஷம் கொள்கிறது. ஆனால் அதே வேளை வண்டுக் குடைச்சலால் மரம் அனுபவிக்கும் துயரையும் அது உணர்கிறது. அதனாலேயே கவிஞன் வண்டின் ரீங்கார இசையைப் புராதானமான ஒன்றாய்க் காண்கிறான். இது ஒரு தொடரும் முரணாகப் படுகிறது அவனுக்கு. நவீன கவிதை பல்வேறு வித வாசிப்புக்கு இடம் தருவதை நாம் அறிய முடிகிறது

அதே போல இதன் அடுத்த வரியில்

“வற்றல் மரத்த பொன்தலை ஓந்தி

வெயிற்கவின் இழந்த வைப்பின் பையுள் கொள.”- என்று வரும். காய்ந்த அந்த வற்றல் மரத்தில் பொன் நிற ஓந்தி வெப்பம் தாங்காமல் உச்சிக்கு ஏறுகிறது.இப்படியெல்லாம் அற்புதமான காட்சிகள் நம் சங்கக் கவிதையெங்கும் விரவிக் கிடக்கின்றன.இந்தக் காட்சியை வாசிக்கையில் இன்னொரு நவீன கவிதையின் சில வரிகள் நினைவுக்கு வருகிறது.

”தவறுதலாய்
புகைக் கூண்டு வழியே
வீட்டிற்குள் வந்துவிட்ட
ஓணானுக்கு
என்ன நிறம்
மாற்றிக் கொள்வது என்று
தெரியவில்லை.”

வீட்டிற்குள் பலவகையான வண்ணத் துணிகள், படங்கள். காணாததற்கு வண்ணத் தொலைக் காட்சி எப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது (இது இலவச தொலைக்காட்சிக்கு முந்தியகாலக் கவிதை).இப்போது ஓணானின் நிலை திண்டாட்டம் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ளுவீர்கள் என்று நினக்கிறேன்.இவை எனது கவிதை வரிகள்.

நவீன கவிதையின் பின்புலம் பெரும்பாலும் நடுத்தரவர்க்க மனோபாவத்திலிருந்து உருவானது.’கசடதபற’ என்ற அற்புதமான பத்திரிக்கையும் வானம்பாடியும் ஒரே காலகட்டத்தில் வெளியானது.’கசடதபற’, ‘எழுத்து’, ’நடை’ போன்ற பத்திரிக்கைகளின் தொடர்ச்சி என்றாலும், அதில் வெளித்தெரிந்த கவிஞர்கள், தமிழில் ஒரு புதிய திறப்பை உண்டு பண்ணினார்கள்.ஞானக்கூத்தன், பாலகுமாரன், சுப்ரமணிய ராஜு, வா.மூர்த்தி, கல்யாண்ஜி, கலாப்ரியா, தேவதச்சன், ஆனந்த், ஆத்மாநாம், என்று பலர். எல்லோரும் ஏதாவது பணியில் இருந்த அல்லது பணி தேடிக் கொண்டிருந்த நடுத்தர வர்க்க இளைஞர்கள்.(அதற்கு முந்திய தலைமுறையை பிரதிநிதித்துவப் படுத்தும், க.நா.சு, பிச்சமுர்த்தி, கு.ப.ரா . போன்றோர்,முழுநேர இலக்கியவாதிகள், அவர்களது சோதனை முயற்சிகள் பெரும்பாலும் மேலை நாட்டுத் தாக்கத்துடன்.இருந்தது.) இந்த இளைஞர்கள் தங்கள் முன்னோடிகளைப் போல் கவிதையின் உள்ளடக்கத்திற்காக எந்த வகையிலும் மேலைத் தாக்கத்தை சார்ந்திருக்கவில்லை. ஒரு வகையான தமிழ்ப்படுத்துதல் (TAMILISATION) இவர்கள் கவிதைகளின் உள்ளடக்கத்தில் காணப்பட்டது தமிழ்நிலம், தமிழ் வாழ்வு விரிவாகவே பேசப்பட்டது. நகுலன், பசுவய்யா, பிரமிள், ஞானக்கூத்தன் போன்றோர் முந்திய தலைமுறையின் நீட்சியாக இளைய தலைமுறையினருடன் கூடவே வந்தவர்கள். ஞானக்கூத்தனின் சர்ரியலிஸக் கவிதைகளின் பாதிப்பு 70-களின் கவிஞர்களிடம். வெகுவாகவே இருந்தது.

ஆங்கில வார்த்தைகளை சரளமாக உபயோகித்து எழுதப்பட்ட கவிதைகளைப் பார்க்கையில் (அதை எழுதியவர்களேயும், மற்றவர்களும்) எவ்வளவு தூரம் இன்று அதை விடுத்து வந்திருக்கிறர்கள் என்று பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது

உதாரணமாக (எஸ்.கே.)ஆத்மாநாமின் ஒரு கவிதை-1972-ல் கசடதபற இதழில் வெளிவந்தது.

“வாழ்க்கைக் கிணற்றின்
மோக நீரில்
மோதுகின்ற
‘பக்கெட்டு’ நான்
பாசக்கயிற்றால்
சுருக்கிட்டு
இழுக்கின்ற
தூதன் யார்?

தமிழின் முக்கியக் கவியாகப் பரிணமித்த ஆத்மாநாமின் ஆரம்பகாலக் கவிதைகள் போல 70-களில் நிறையவே வந்தன.ஆத்மாநாம் போலவே பலரும், பின்னாளில் மிகச் சிறந்த கவிதைகளைத் தந்தார்கள். கவிஞர்.சுகுமாரன் குறிப்பிடுவது போல்70-களுக்கு முன் எழுதியவர்கள், பெரும்பாலும் திருமணமானவர்கள்.அவர்களுடைய கவிதைகளில் ”காதலி என்றால் மனைவிதான்” என்ற நிலை இருந்தது. காதல் மட்டுமென்றில்லை. பல்வேறு உளக்கிடக்கைகளை பகிரங்கப் படுத்த தயக்கம் காட்டினார்களோ என்று தோன்றுகிறது. இந்தத் தயக்கம் எல்லாம் உடைபட்டது 70களில். ஞானக்கூத்தன் தொடங்கி கலாப்ரியா ஈறாக பலர் இதன் காரணகர்த்தாக்களாக இருந்தனர். ”மத்தியவர்க்க அகஜீவிகளின் அந்தரங்க டைரியாக மட்டும் கவிதை தேங்கிய நிலையில், அவ்வறைக்குள் ததும்பி நுரைத்தபடி கலாப்ரியா கவிதைகளினூடாக நிதரிசனத்தின் சாக்கடை உள்ளே நுழைந்தது.....” என்கிற ஜெயமோகனின் அவதானிப்பு இதை விளக்கக்கூடும்.எங்கள் தலைமுறையில் மனத்தடையின்றி காதலைச் சொன்னோம் என்றால், அடுத்த தலைமுறை காமத்தைச் சொல்லுவதில் தயக்கம் காண்பிக்கவில்லை என்கிற சுகுமாரனின் பதிவும் உண்மையே.

வானம்பாடி தன்னை ஒரு இயக்கமாக அறிவித்துக் கொண்டு செயல்பட்டது.விலையில்லாக்கவி மடலாக வெளிவந்த ”மானுடம் பாடும் வானம்பாடி” தனது தனித்த தடத்தை தமிழில் பதித்தது.திராவிட அழகியலின் சாரத்துடன் மார்க்ஸீய கண்ணோட்டத்துடன் அதன் கவிதைப் போக்கு அமைந்திருந்தது. இயக்க ரீதியிலான தொனியில் அதன் கவிதைகள் இருந்தாலும் புவியரசு, , சிற்பி, கங்கை, தமிழ்நாடன், ஞானி போன்றோரின் கவிதைகளில் ஒரு தனித்தன்மை இருந்தது.தமிழ்நாடனின் ‘அம்மா அம்மா’ தொகுப்பு ஒரு கலைக்களஞ்சியமாக இருந்தது.அதே போல் புவியரசின் ’மீறல்’, சிற்பியின் ’ஒளிப்பறவை’ ஆகியன பரவலான வரவேற்பைப் பெற்றன.அப்துல் ரகுமானின் பால் வீதி குறிப்பிடத்தகுந்த ஒரு தொகுப்பு வானம்பாடியில் வெளியான பல மொழிபெயர்ப்புக் கவிதைகள் எனக்கு உத்வேகம் தந்தவை பல உண்டு. ஒரு கவிதை சட்டென்று நினைவுக்கு வருகிறது.ஆதித்ய பிரதாப்சிங் என்ற இந்திக் கவிஞர் எழுதியது.

வியட்நாம்

“அக்கம் பக்கம்
வசந்தமில்லை-ஒரு
கபாலத்தின் மீது
வண்ணாத்திப் பூச்சி”

இவை எதிலும் சாராமல் ஆழ் மன அதிசயங்களில் முத்துக்குளித்து அதன் சிக்கலான ரகசியங்களை அருமையாகக் கவிதையில் சொன்னவர் அபி. இவர் அதிகமும் உணரப்படாமல்ப் போனது தமிழின் துரதிர்ஷ்டமே.மோகனரங்கன் சொல்வது போல். “ஓசைகளின் குழப்பத்திலிருந்து மௌனத்தின் தெளிவிற்கு உள்ளிறங்கிச் செல்லும் இவருடைய சொற்கள் அதன் அடங்கிய தொனி காரணமாகவே அதிகம் வெளித்தெரியாமல் தங்கிப் போயின” என்பதில் ஓரளவு உண்மையிருக்கிறது.

70-களின் கவிதை கவிஞர்கள் பற்றிப் பேசும்போது, நாம் ஏற்கெனவே சொன்னோம், இவர்களது நடுத்தர வர்க்க மனோபாவம் பற்றி. அதன் ஒரு கூறாக ஒரு விஷயத்தைக் காணலாம். இவர்கள், தங்கள் கவிதைகளின் சாரத்தை மேற்கிலிருந்து பெறுவதில் இருந்த முனைப்பு நமது செவ்வியல்க் கவிதைகளின்பால் இல்லை என்பதே அது.ஆனாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, அதாவது இன்றைய தேதியில் நவீனத் தமிழ்க் கவிதைகளை மீள் வாசிப்புச் செய்யும் போது, நம்முடையை செவ்வியல்க் கவிதைகளின் மறைமுகமான தாக்கத்தை பலருடைய கவிதைகளில் உணர முடிகிறது.தேவதச்சன்,தேவதேவன், கலாப்ரியா என்று மூத்த தலைமுறையும் சரி,மனுஷ்யபுத்திரன், ரவி சுப்ரமணியன், கனிமொழி, ஃப்ரான்சிஸ்கிருபா என்று அடுத்த தலைமுறையும் சரி... அவர்களது கவிதைகளில் சங்கக் கவிதைகளோ அதற்குச் சற்றே பிந்திய கவிதைகளோ அவற்றின் உள்ளார்ந்த பாதிப்பு, ஒரு அந்தர நதியாக ஊடோடியிருப்பதைக் காண முடிகிறது.உதாரணமாக மனுஷ்யபுத்திரன் கவிதை ஒன்று.


சொற்களைத் தின்னும் பூதம்

வெற்றுக் காகிதங்களை
உறையிலிட்டு அனுப்பும் பழக்கமுள்ள பெண்
தன் சொற்களைத் தின்னும் பூதத்திடம்
ஒரு நாள் கண்ணீர் மல்கக்கேட்டாள்

வெற்றுக் காகிதங்களை
படித்துக் கொண்டிருக்கும் மனிதனை
ஒரு நாள்
தின்று வர முடியுமா
உன்னால்.

இது முழுக்க முழுக்க ஒரு நவீன கவிதை. ஆனால், ஒரு விதமான வாசிப்பில் பூதம் –சதுக்க பூதமாகவும், கண்ணீர் மல்கும் பெண் கண்ணகியாகவும் (மாதவியுமாகவும்) உருக்கொள்வது தவிர்க்க முடியாத செவ்வியல் தாக்கமாவே தோன்றுகிறது.

இதேபோல்

“சிலிர்க்கச் சிலிர்க்க
அலையை மறித்து
முத்தம் தரும் போதெல்லாம்
துடிக்கத்துடிக்க ஒரு மீனைப் பிடித்து
அப்பறவைக்கு தருகிறது

இக்கடல்”

பிரான்சிஸ் கிருபாவின் கவிதை இது.தன்னளவிலேயே இது அற்புதமான கவிதை. ஆனாலும்

”கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.”

என்கிற குறள் நினைவில் நிழலாடுவதைத் தவிர்க்க முடியவில்லை.இரண்டின் இயங்குதளமும் சற்றே ஒன்று என்றாலும் இன்றையக் கவிதை ”வலி உணரும் மனிதனி”ன் கவிதை. மேற்குறிப்பிட்ட மனுஷ்யபுத்திரன் கவிதையில் தலைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.கவிதைகளுக்கு தலைப்பு என்பது மேலை நாட்டுத் தாக்கம்.ஆனால் தமிழில் அது கவிதைகளுக்கு கூடுதல் பரிமாணத்தையும், இருண்மையைப் போக்குகிற/விளக்குகிற விதமாயும் இருந்தது.அது இன்னமும் தொடர்கிறது.

“மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து
நோக்கக் குழையும் விருந்து”-

இது வள்ளுவரின், இரண்டு அற்புதமான அவதானிப்புகளை ஒன்றிணைத்துச் செய்யப்பட்ட, கவிதை. இதன் வாசிப்பனுபவம் தரும் மனநிலையோடு ரவி சுப்ரமணியனின் ஒரு அழகான கவிதையைப் பார்ப்போம்.

காரல் கமறும் வேளை

“அவனும் நண்பன்தான்
இந்த இடத்திற்கு
இப்போது வருவான்`என
எதிர்பார்க்கவில்லை
என்னை விரும்பியவளை
பிறகு விரும்பியவன்

திரையரங்க இடைவேளையில்
பக்கத்துப் பக்கத்து தடுப்பில்
சிறுநீர் கழிக்கும் வேளையில்
முகமன் கூறும் சங்கடம் போல்
வணக்கம் சொல்லிக் கொண்டோம்..

இந்த விஸ்கி
இப்போது
மேலும் கசக்க ஆரம்பித்துவிட்டது.”

சமகால சராசரி வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளை, அதன் சாதாரணத் தன்மையில் பொதிந்திருக்கிற குரூர அல்லது மூக்கைப் பொத்திக் கொள்ளவைக்கிற ஒரு காரியத்தைக் கூட இன்றைய கவிஞன் அழகியல் நிறைந்த கவிதையாக்குகிறான். இது நமக்கு நம் செவ்வியல் கவிகள் தந்த வரத்தினால் விளைந்தது. இதன் மூலம் நாம் கடந்து வந்திருக்கிற தமிழ்க்கவிதையின் பரப்பும் திசையும் இப்போதும் எப்போதும் மிக ஆரோக்கியமானது என்று தோன்றுகிறது.

”ஒரு நல்ல கவிதை புரிவதற்கு முன்பே தன்னை உணர்த்திவிடும்” இது எஸ்ராபவுண்ட் சொன்னது.புரியாமையும் இருண்மையும் நவீன தமிழ்க் கவிதைக்கெதிராக வைக்கப் படுகிற ஒரு குற்றச்சாட்டு. இதைக் குற்றச்சாட்டாகக் கொள்ள் முடியாது.நவீன கவிதை சொல்லியதை விட சொல்லாததன் மூலமே அதிகம் உணர்த்துகிறது. இதற்கும் தமிழில் முன் மாதிரிகள் இல்லாமல் இல்லை. ஒட்டணி என்று சொல்லக்கூடிய பிறிதுமொழிதலணி இலக்கணத்தின் பாற்பட்டு பல கவிதைகளை நாம் புரிந்து கொள்கிறோம். இதற்கு உரையசிரியர்கள் பலவகைகளில் உதவியிருந்தாலும், அவ்வுரைகள் முற்றான முடிவுகளில்லை என்பதை உணர்த்துவதே நவீன கவிதையின் இருண்மைக் கூறுகளில் ஒன்று.ஒரு கவிதை காலம் கடந்து நிற்கவேண்டுமெனில் அதன் உள்ளடக்கம், அது பாடப்பெற்ற காலத்தின் நிகழ்வுகளைத் தாண்டி இன்றைய வாழ்நிலைகளுக்கும், இன்றைய சமூக நிகழ்வுகளுக்கும் பொருந்தி வரவேண்டும்.

“இழைதாக முள்மரம் கொல்க கழையுநர்

கைக்கொள்ளுகம் காழ்த்த இடத்து” - என்ற குறளுக்கு உரையாசிரியர்கள் தருவது, எதிரிகளை அரசன் முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்பது போல் அமைந்துள்ளது. ஆனால் இன்றைய சூழலில், எல்லோருமே இந்நாட்டு மன்னர்களாகி விட்ட சூழலில், இன்றைக்கு அது சொல்லும் செய்தி என்னவாயிருக்கும். இன்று அது பொருள் இழந்த கவிதையா..இல்லை.. முள்மரம் என்ற படிமத்தை கவலை அல்லது பயம் என்று கொள்வோமானால் அது இன்றைக்கும் பொருத்தமான கவிதையாக்வே இருக்கிறது.இப்படிக் ”கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளும்” சுவாரஸ்யததைத் தருவதே கவிதை.

தேவதச்சன் எனது காலத்தின் முக்கியமான கவிஞர்.அவருடைய கவிதைகள் தத்துவார்த்தப் பிண்ணனி கொண்டவை. எனினும் மிக எளிமையான சொற்கள் கொண்டவை.

”குளத்துப் பாம்பினது
ஆழத்தில்
தாமரைகள் தலைகீழாய் முளைத்திருக்கின்றன.
மத்-
தியான வெயிலின் தித்திப்பு.
படிக்கட்டில்
ஓரிரு அரசிலைகள்.
இன்னும் ஆழத்தில்
சாவகாசமாய் ஒரு
விண் பருந்து”

இந்தக் கவிதையின் வரிகளில் எந்தப் புதிய சொல்லும் இல்லை. ஆனால் கவிதை அற்புதமான ’சொற்சேர்க்கை’ கொண்டு விளங்குகிறது..

ஒரு பாம்பு குளத்தினாழத்தில் இருக்கிறது.கவிதை முழுமையும் அதன் பார்வையிலேயே சொல்லப் பட்டிருக்கிறது.அதைப் பொறுத்து, தாமரை தலைகீழாய்த் தெரிகிறது...மத்தியான வெயிலின் கடுமை ஆழக்குளிர்ச்சியில் தெரியவில்லை.அது விண்பருந்திடமிருந்து தப்பித்திருக்கிறது அல்லது அது பற்றி அதன் ஆழத்தில் அதற்கு பயமில்லை.சாவகாசமாய் இருக்கிறது.வானில் உயரே பறக்கும் பருந்துக்கு, பாம்பு தரையை விட அதிக ஆழத்தில் இருக்கிறது.” நீ இன்னும் உயரத்திற்குப் போ, அப்போது மகத்தான ஆழங்களை அறிவாய்” என்கிற தத்துவார்த்தச் சொல்லாடலைச் சொல்லாமல் சொல்லுகிறது கவிதை. இதை நீங்கள் இன்னும் கூட அற்புதமாக உங்கள் பார்வையில் உணர முடியும்.

80-களின் மத்தியில் அறியப்பட்ட ஒரு முக்கியமான கவிக்குரல் . சுகுமாரனுடையது. அவருடைய பன்மொழி வாசிப்பனுபவம் அவரை ஒரு சிறந்த இலக்கியவாதியாக நிறுவியிருக்கிறது. இறுக்கமான சொற்கள், கச்சிதமான வரிகள்,அதே சமயம், வெற்று அழகியலைத் தூக்கிப் பிடிக்காத உள்ளடக்கம் என்று எனக்குப் பிடித்த கவிஞர்களில் முதலிடத்தைப் பிடிப்பவர். அவரது அருமையான கவிதை-

ஸ்தனதாயினி

இனிய வெண்கலப் பழங்கள்
உன் மர்ர்பகங்கள்
உள்ளே
உயிர் தழைக்கப் பெய்யவெனத்
திரண்டிருக்கும் பால் மேகம்.
ஒன்றில்
தாய்மையின் கசிவு
மற்றதில்
காதலின் குழைவு
உன் இடதுமுலை அருந்துகையில்
என் கண்களில்
குழந்தைமையின் நிஷ்களங்கம்
அப்போது உன் இடதுமுலை
பரிந்து சுரக்கும் ஊற்று
உன் வலதுமுலை அருந்துகையில்
என் கண்களில்
காதலின் உற்சவம்
அப்போது உன் வலதுமுலை
நெகிழ்ந்து பெருகும் அருவி
குழந்தைமையும் காதலும் கனிந்த மனவேளையில்
மார்பகங்களின் இடைவெளியில்
உணர்கிறேன்
அமைதிக் கடலாய் ஒரு மூன்றாவது முலை..

90-களில் தமிழ்க்கவிதை மகத்தான உயரங்களுக்குப் போயிருக்கிறது.அதனால் ஆழமும் அதிகமாய் இருக்கிறது.இந்தக் காலக் கட்டத்தில், எழுதவந்த கவிஞர்கள் பரந்துபட்ட வாழ்க்கை நிலையிலிருந்து கிளம்பியவர்கள், பார்ப்பன வெள்ளாள ஆதிக்கம் மிகுந்திருந்த கவிதையின் சாதிய அடையாளங்களைத் தகர்த்தார்கள். ஃப்ராய்டிய தத்துவம்,சில ஆதித்தடைகள் பற்றி நன்கு விளக்குகிறது.(TOTEM AND TABOO). ஆதிகாலத்தில் எல்லாப் பெண்களும் தனக்கே வேண்டுமென்று எண்ணுகிற தந்தை, வயது வந்த தன் மகன்களை விரட்டி விடுகிறார், அவர்கள் ஒன்று சேர்ந்து தந்தையைக் கொன்று சாப்பிட்டு விட்டு, அந்தக் குற்ற உணர்வோடு, அண்ணன் தங்கை என்ற தடைகளை ஏற்படுத்துகிறார்கள். உடலுக்காவே தன்னை ‘நிறுவ’ ஆரம்பித்து பெண்ணை அடிமை கொண்டிருந்த ஆணாதிக்கத்திற்கு எதிராகப் பல பெண்ணியக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தது.பல விலக்கங்களை (டேபூஸ்) பெண்கள் அதன் ஆதித்தன்மையிலிருந்து உணர்ந்து அதை தோலுரித்துக் காட்டுகிறார்கள், தங்கள் கவிதைகளில்.

பெண் என்ற பால் அடையாளத்தால் தான் அடைந்த துயரங்களை தமிழ்க்கவிப்பரப்பில் முதலில் அழுத்தமாகச் சொன்னவர். சுகந்தி சுப்ரமணியன். அதன் பின்னர் உமாமகேஸ்வரி சிறந்த கவிதைகளை எழுதியுள்ளார்.உதாரணமாக

“தொட்டி மண்ணிற்குள்
இட்டவிதையின் மௌனம்
கூடவருகிறது என்னோடு.
சமையலறையின் வெம்மையில்
குளீயலறையின் அவசர நிர்வாணத்தில்
படுக்கையறையின் புழுக்க மோகத்தில்
அலைகிறது அதன் அமைதி
என்னுடன்
தன் வீர்யத்தால்
என் பசுமை தழைக்கட்டுமென்று”

மென்மையான மொழிகளில் கவிதை சொன்ன இன்னொரு பெண்குரல், கனிமொழியினுடையது.

”எமக்கு என்று
சொற்கள் இல்லை
மொழி எம்மை
இணைத்துக் கொள்வதுமில்லை
உமது கதைகளில்
யாம் இல்லை
எனக்கென்று சரித்திரமில்லை
நீங்கள் கற்றுத் தந்ததே நான்
வார்த்துத் தந்ததே நிஜம்
எனக்கென்று கண்களோ
செவிகளோ, கால்களோ
இல்லை
அவ்வப்போது நீ இரவலாய்.
தருவதைத் தவிர.”

குட்டி ரேவதி, சல்மா, மாலதிமைத்ரி, சுகிர்தராணி ஆகியோர் தனித்துவமும் தீவிரமும் கூடிய குரலில் சாதனை படைத்து வரும் கவிஞர்கள்.. “பெண்ணையும் பெண்ணுடலையும் அனைத்தையும் பிறப்பித்து ஊட்டி வளர்க்கும் இயற்கையின் உயிர்சக்தியோடு இணையாகவைத்துக் காணுபவராக..” மாலதி விளங்குகிறார்., என்கிறார் மோகனரங்கன்.இதை இவருடைய ‘நீலி’ தொகுப்பு நன்கு விளக்கும். இவர்கள் தவிர பெண் கவிஞர் என்று தனித்துப் பார்ப்பதை அவ்வளவு விரும்பாத ஆனால் அதே சமயத்தில் பெண்ணீயக் கருத்தாக்கங்களுக்கு ஆதரவாளர்களாக விளங்கும், பல கவிஞர்கள், லதாராமகிருஷ்ணன் (ரிஷி)இளம்பிறை, மு.சத்யா, செ.பிருந்தா, தேன்மொழிதாஸ், தமிழச்சி தங்கபாண்டியன், சக்திஜோதி, லாவண்யா, எனப் பெரிய காத்திரமான பட்டியல் உள்ளது.

80 களின் பிற்பகுதியில் தங்கள் ‘கிரணங்கள் கவிதைகள் மூலம் கண்டெடுக்கப்பட்டு 90 களிலும், இன்றளவும் எழுதி வருகிற மிக முக்கியமான கவிஞர்களாக பிரேம் ரமேஷைச் சொல்லவேண்டும்.இருவரும் பலதளங்களில் இயங்குபவர்கள்,பின் நவீனத்துவம் பற்றிய அதிக பட்ச புரிதல்களுடன் இயங்கிவருபவர்கள்..இன்றைய உலகமயமாக்கல் என்கிற சந்தைப் பொருளாதாரம் - உலகையே தங்கள் உற்பத்திப் பொருட்களுக்காக சந்தையாக்குதல்- நுகர் பொருள் வேட்கையை உருவாக்கி வளர்த்தெடுக்க பல அரசியல், கலாச்சார அழகியல் அமைப்புகளை, வளர்ந்த நாடுகள் உருவாக்கி அலைய விட்டிருக்கின்றன. இதன் மூலம், பல்வேறு பட்ட இனக்குழு அடையாளங்களை அழித்து அவர்களின் நிலம், உற்பத்தி,சுயச்சார்பு எல்லாவற்றையும் பிடுங்கி ஒரே மையத்தில், ஒரு முற்றொருமை அடையாளத்தோடு, அவ்வினக்குழுக்களை நிறுத்த முனைகிறார்கள். இதற்கு வளரும் நாடுகளின் அரசியல்வாதிகள் துணை போகிறார்கள்., அவர்கள் செய்வது என்னவென்று தெரிந்தோ தெரியாமலோ.பின் நவீனத்துவம் இம் மையங்களை அழிப்பதில் முனைப்புக் காட்டுகிறது.இந்த அரசியல் கலாச்சார சதிகளை உடைக்க முற்படுவதே பின் நவீனத்துவம்.அவர்களின் அற்புதமான கவிதை ஒன்று-

“கண்ணாடிச் சில்லுகள் பதிக்கப்பட்டு
முடிவற்று நீளும் மதில் மீது
நேர்த்தியாக நடந்து செல்கிறது
பூனை என்ற ஒரு சொல்
ஆம் ஒரு சொல்
அதைக் கொஞ்சம் பின் தொடர்ந்தால்
அது ஒரு வாக்கியமாவதையும்
வாக்கியத்தின் நீண்ட அசைவில்
கண்ணாடிச் சில்லொன்று பொத்து விட்டால்
மதிலின் பக்கவாட்டில் வழியும் குருதி
கவிதையாவதையும் வாசிக்கலாம்

அது பூனையைப் பற்றிய கவிதையாக இருக்குமென்று
நீங்கள் எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள்.

ரமேஷ் பிரேமின் இன்னொரு கவிதை,

இமயவரம்பன்

பனையோலையில் நீ எழுதிய
காதல் கடிதம் தனது
மெய்யெழுத்துக்களின் மீது புள்ளிகொண்டு
அச்சேறுகிறது செவ்விய கவிதையாய்

யோனிப் பிளவை
சரிசமமாக அரிந்த ஆப்பிளின்
உட்பகுதிக்கு உவமை கூறியிருந்தாய்

சங்கம் மருவிய காதலனே
உன் காலத்தில்
காஷ்மீரத்து ஆப்பிள்
தமிழ் மண்ணில் கிடைத்ததா

சங்கம் மருவிய காலமும், மெய்யெழுத்துக்களின் மேல் புள்ளி வைக்கும் முறை ஏற்பட்ட காலமும், காஷ்மீர் ஆப்பிளும் ஒன்றுக்கொன்று முயங்கி நிற்கின்றன.ஆனால் கவிதை முழுமையாக இருக்கிறது.கொஞ்சமான புரிதலுடன் சொன்னால், காலத்தின் மையம் அழிக்கப்ப்ட்டு நிற்கிறது இந்தக் கவிதையில்.

தாயகத்தமிழ்க் கவிதைகளின் பரந்துபட்ட தன்மை, இறுக்கம், சிக்கலான படிமம், இவையெல்லாம் அதிகம் பாதிப்பேற்படுத்தாமல்,பெரிதும் ”சென்றொழிந்த காலத்து மீட்டல்களிலிருந்து விலகிச் செல்ல முடியாத துயரைச் சொல்லுகிற விதமாய் அமைந்துள்ள ஈழக்கவிதைகள், மனதை தைத்து நம் கையாலாகாத்தனத்தை பகடி செய்கின்றன.சேரன், வ. ஐ.ச ஜெயபாலன், கருணாகரன், திருமாவளவன், சிவரமணி, தமிழ்நதி என்று நீளும், இந்தப் பட்டியல். சிவரமணியின் வித்தியாசமான கவிதைகள் முக்கியமானவை.

90 களுக்குப் பின் வந்த கவிஞர்கள் ஏராளம்.இது தவிர்த்து இணையத்தில் எழுதிக் கொண்டிருப்பவர்கள் இன்னும் ஏராளம் அதிலும் நல்ல கவிதைகள் கிடைக்கின்றன.

90 களுக்குப் பின்னான முக்கியமான கவிஞர் பாலை நிலவனின் கவிதை ஒன்றைப் பார்க்கலாம்

“சாட்சியம்”

இந்த நிலா ஒளியைத்தான்
நான் யாசித்தது.
ஒரு பழத்தைப் பிழிவது போல்
பிழிந்து அத்ன் சாற்றை
இப்படிஎன் கையில் ஊற்றுங்கள்.
ஒரு மிடறு குடித்தபின் பாருங்கள்.
சகதியும் அகோரமுமான நான்
ஒளித்துண்டாய் விழுவேன்
என் மீது நீங்கள் சுமத்தும்
குற்றங்களுக்கெதிராய்.....
அதுவரைக்கும் இப்படித்தான்.
ஒரு கொடியைப் போன்று காற்றில் அசைந்து கொண்டிருக்கும்
உங்களால் கழற்ற முடியாத
என் வன்மம்.

எதற்கு இந்த வன்மம். ஏன் கவிஞன் அந்நியப்பட்டு நிற்கிறான். நவீன வாழ்வின் பதற்றம் இளைஞர்களை சமூக அரசியல் நிகழ்வுகளில் ஒன்ற விடாமல் செய்திருக்கிறது.. இந்த வகையான அந்நியமாதல் இளைஞர்களின் வாழ்க்கையில் காலந்தோறும் நிகழ்வதுதான்.ஆனால் நவகாலனீய ஆதிக்கத்தின் நிழலில் அவர்களால் நிம்மதியாய் உறங்க முடிய்வில்லை. இது அகவயச் சிக்கல் என்ற போதும் புறக்காரணிகளின் தாக்குதலே அச்சிக்கலுக்கு காரணம்.அவர்களுக்கு நேரிடும் வலி கூட்டுணர்வின் வலி. ஆனால் ஒவ்வொருவரின் மொழியும் தனியாக ஒலிக்கிறது.முந்திய காலகட்டங்களில் தனித்தனி தீவுகளாக அந்நியப்பட்ட இளைஞர்களைக் காண நேரிட்டது .இப்போது ஒவ்வொருவரும் ஒரு தீவாக இருப்பதாகக் கொள்ளலாம்.

பாலை நிலவனின் வார்த்தைகளில் சொல்வதானால், ”முற்றிலுமாகச் சிதைந்து விட்ட நவீன வாழ்வில், அதன் மீது ஓயாத எதிர்வினை புரிந்து கொண்டிருக்கும் துயர் மிகுந்த வேலையே கவிஞனுக்குச் சாசுவதமாகி விட்டது.தார்மீகமான நம்பிக்கைகள் அழிந்துவிட்ட பெருநகரத்தில் வீடும் அது சார்ந்த அறங்களும் நழுவி விட்டன.கலைஞன் வீட்டைத் துறக்க எத்தனிக்கும் போதெல்லாம் வீடு ஒரு பூனை போல அவன் காலைச் சுற்றுகிறது..தப்பிக்கும் வழியற்றவன் கவிஞன்.ஒரு பூனை போல தன் வீட்டை அவன் சுமந்தாக வேண்டும்.சமூகம் வனவிலங்காகிவிட்ட பின்பு அதில் வாழ்பவனும் வனவிலங்காகி விடுகிறான்.சமூகம் பார்வையற்றது. கலைஞனோ எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்.”

ரசனை வாசகனாக ஒரு கவிதையை பின் தொடர்பவருக்கு இந்தக்காலக் கவிதைகள் பேரதிர்ச்சியைத் தருவதில் வியப்பில்லை ’மொழியின் பெருங்குகையினுள்’நுழைந்து விட்டவனாகவே இன்றையக்கவிஞன் இருக்கிறான். இதற்கு முந்தைய காலகட்டங்களில் ‘அனுபவங்களின் கொந்தளிப்பா’க மொழி கவிதையில் செயல்பட்டது. இன்று அது புதிர்மொழியாகச் செயல் படுகிறது. வாழ்வை புதிர் வழிப்பாதைகளால் கடக்க நேரிடுவதால் இது நேரிட்டிருக்கலாம்.

இன்றைய கவிஞர்களில் முக்கியமானவர்களாக யூமா வாசுகி,கரிகாலன், யவனிகா ஸ்ரீராம், சங்கரராம சுப்ரமணியன், லக்ஷ்மி மணிவண்ணன், கடற்கரய், முகுந்த் நாகராஜன்,வா.மணிகண்டன் என்று பலபேரைச் சொல்லலாம்.பட்டியல் முழுமையானதில்லை

நவீனகவிதை வரலாற்றில், ஒடுக்கப்பட்டவர்களின் ஓங்கிய குரல் ஒலிக்க ஆரம்பித்தது 90-களில்தான்.பெண்ணியக்குரல் போலவே தலித்தியம் தன் முழ் வீர்யத்துடன் தடம் பதித்தது.மராத்திய, கன்னட தலித் எழுச்சியைத் தொடர்ந்து தமிழிலும் தலித் எழுத்துக்கள் தோன்றின. இது அம்பேத்கார் நூற்றாண்டை சரியானபடி கொண்டாடும் விதமாக அமைந்ததைக் குறிப்பிட வேண்டும்.தலைமுறை தலைமுறையாக ஒடுக்கப்படவர்களின் ‘தலைமுறைக்கோபம்’ ஒரு புதிய அழகியலுடன் வெளிப்பட்டது.அன்பாதவன், விழி.பா.இதயவேந்தன், மதிவண்ணன், கண்மணிகுணசேகரன், ஆதவன்தீக்ஷண்யா, ரவிக்குமார்,என்.டி.ராஜ்குமார்.... என பல படைப்பாளிகள் தோன்றினர்.விளிம்புநிலை மனிதர்கள் பற்றி, நான்,பழமலய் போன்றவர்கள் எழுதியிருந்தாலும், மேற்குறிப்பிட்ட புதியவர்களின் இரவல் அனுபவமற்ற கவிப்பரப்பு வேர்வையும் ரத்தமும் சதையும் கொண்டது.ஆனாலும் தலித்திய நாவல்கள், சிறுகதைகள் ஏற்படுத்திய உச்சபட்ச தாக்கத்தை தலித்திய கவிதைகள் உண்டாக்கவில்லை என்ற ஆதங்கத்தினையும் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

இன்றைய கவிதையின் திசை என்று எடுத்துக் கொள்ளும்போது இன்று முனைப்புடன் இயங்குகிற பழைய புதிய தலைமுறைக் கவிஞர்களின் கவிதைகள் அனைத்தையும் சொல்லவேண்டும். அந்த வகையில் இந்தக் கட்டுரை அமைந்திருப்பதாகவே எண்ணுகிறேன்.இந்த கட்டுரைக்கு பல கவிஞர்களின் நூல்கள் குறிப்பாக, க.மோகன ரங்கனின் ’சொல், பொருள், மௌனம்’ நூல், சுகுமாரன், கரிகாலன், பாலைநிலவன், பிரேம் ரமேஷ் ஆகியோரின் கட்டுரைகள் உதவியாயிருந்தன, அவர்களுக்கு என் நன்றி.

வியாழன், 31 ஜூலை, 2014

Rvr Rajendiran
3 hours ago
அடுக்குப்பானைகளில்

என்பாட்டி

தின்பண்டங்களை சேமித்து வைத்திருந்தாள்...

அஞ்சறைப்பெட்டியில்
என் அம்மா

ரூபாய் நோட்டுகளை சேர்த்து வைத்திருந்தாள்... 

ஏதோ என்னால் முடிந்த அளவு

நண்பர்களை மட்டுமே
நான் சம்பாதித்து வைத்திருக்கிறேன்

புதன், 5 மார்ச், 2014

எனது மகளின் கண்களில்


எனது மகளின் கண்களில் (In My Daughter's Eyes)
மொழி : ஆங்கிலம்
எழுதி இசையமைத்தவர் : ஜேம்ஸ் ஸ்லேட்டெர் (James Slater)
பாடியவர் : மார்டீனா மக்ப்ரைட் (Martina McBride)
பாடல் வகைமை : கண்ட்ரி (Country)
ஆண்டு : 2003 
நாடு : அமேரிக்க
தமிழில் : ஷாஜி


எனது மகளின் கண்களில்
நான் ஒரு கதாநாயகன்
பலம் மிகுந்தவன்
பயமே அறியாதவன்
உண்மை எனக்குத் தெரியும்
என்னைக் காப்பாற்ற வந்தவள் எனது மகள்
நான் ஆகவேண்டும் என விரும்புவதை
எனக்கு காட்டுபவை
எனது மகளின் கண்கள்
எனது மகளின் கண்களில்
எல்லோரும் ஒன்று
இருள் அதில் ஒளியாகிறது
உலகம் அமைதியில் சிரிக்கிறது
தளர்ந்து விழும்போது எனது பலம்
நம்பிக்கையோடு இருப்பதற்கு
எனக்கிருக்கும் ஒரே காரணம்
எனது மகளின் கண்கள்
அவளது மென்மையான உள்ளங்கை
எனது விரல்களை பொதியும்போது
என் இதயத்தில் ஒரு புன்னகை பூக்கின்றது
எல்லாமே கொஞ்சம் தெளிந்து விடுகிறது
வாழ்க்கை இதுதான் என்று புரிந்துவிடுகிறது
முடியவில்லை என்று நான் சோர்ந்து போகும்போது
என்னைத் தாங்கி நிறுத்துபவை
எனது மகளின் கண்கள்
எல்லாம் முடிந்தது என்று நான் நினைக்கும்போது
புதிதாய் ஒன்றை தொடங்கி வைப்பவை
வெளிச்சம் என்னவென்று எனக்கு தொடர்ந்து சொல்பவை
நான் யார் என்பதின் பிரதிபலிப்பு
நான் யாராகப் போகிறேன் என்பதின் சிறு சித்திரங்கள்
எதிர்காலம் என்று ஒன்று இருப்பதை
எனது கண்களுக்கு காணவைப்பவை
எனது மகளின் கண்கள்
அவள் வளர்வாள்
என்னை விட்டுச் செல்வாள்
எப்படி என்னை அவள் உயிர் வாழவைத்தாள்
எப்படியெல்லாம் என்னை சந்தோஷப்படுத்தினாள்
அனைத்தும் உங்களுக்குப் புரியவரும்
நான் இல்லாமல்போன பின்
அப்போதும் நானிருப்பேன்
எனது மகளின் கண்களில்

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் நானும்



ஒரு ஊரில் ஒரு ஓநாய் இருந்ததாம்... அந்த ஓநாய்க்கு ஆட்டுக்குட்டிகளின் மாமிசம் ரொம்ப பிடிக்குமாம்... அதனால் அந்த ஓநாய் இறந்த ஒரு ஆட்டுக்குட்டியின் தோலை எடுத்து தன்மேல் போர்த்தி, மேய்ப்பன் இல்லாத நேரம் பார்த்து ஒரு ஆட்டு மந்தைக்குள்ளே புகுந்ததாம்... விபரம் புரியாத ஆட்டுக்குட்டிகளுக்கிடையே இணக்கமாக தங்கி அவற்றில் ஒவ்வொன்றையாக கொன்று தின்ன ஆரம்பித்ததாம்.... எங்கும் பாற்கடலென நிலவொளி பரவிக்கிடக்கும் ஓர் இரவில், பனி பெய்யும் மேகங்கள் தாழ்ந்திறங்கும் நேரத்தில் மேய்ப்பன் திரும்பி வந்தானாம். தனது ஆட்டுக்குட்டிகளின் எலும்புகளைப் பார்த்து கதறி அழுது, தான் பொறுப்பற்று விட்டுப் போனதாலேயே அந்த அப்பிராணிகள் உயிரிழந்தன என்று தவித்து, துயரமான ஒரு பாடலை பாடத்துவங்கினானாம். இரவின் ஆழ்ந்த நிசப்தத்தில் இடிமுழக்கம்போல் ஒலித்த அப்பாடலின் கனத்தில் பயந்து நடுங்கிய ஓநாய் அங்கிருந்து ஓடிப்போய் தலைமறைவுக்கு இடம் தேடியதாம்... இடமேதும் கிடைக்காமல் இறுதியில் அது மனிதனின் இதயத்தில் புகுந்து, அங்கேயே நிரந்தரமாக தங்கி விட்டதாம்...
காலம்காலமாக இருக்கும் ஒரு நீதிக்கதைக்குமேல் நான் போர்த்திய ஒரு கட்டுக்கதை இது. ஆறுவயதான என் மகளுக்கு இதை நான் சொல்லும்போது அவளுக்கே நன்றாகத் தெரிகிறது இது ஓநாய் குறித்தோ ஆட்டுக்குட்டி குறித்தோ மேய்ப்பன் குறித்தோ உள்ள கதை அல்ல என்பது! ஓநாயும் ஆடுகளும் ஆட்டுமந்தையும் நிலவொளி பரவிய அந்த இரவும் நிஜமாக இருக்கக் கூடியவைதான் என்றாலும், அவற்றின் வழியாக சொல்லப்படும் கருத்து அது எதுவுமல்ல என்பது ஒரு குழந்தைக்கே எளிதில் தெரிவது. ஒரு ஓநாய் ஆட்டுத்தோல் போர்த்தி மாறுவேடம் போடுமா? மேய்ப்பன் ஏன் ஆடுகளை அப்படி விட்டுப் போனான்? ஆடுகள் கொலை செய்யப்பட்டதைக் கண்டு அவன் ஏன் பாட்டு பாடினான்? ஏன் அவனால் அந்த ஓநாயை பிடிக்க முடியவில்லை? ஒரு ஓநாய் மனிதனின் இதயத்தில் புகுவது எப்படி? என்றெல்லாம் ஒருபோதும் என் மகள் கேள்வி கேட்க மாட்டாள்.
மாயை அல்லது பொய்த்தோற்றத்திற்கும் யதார்த்தத்திற்கும் இடையே நடக்கும் வினோதமான விளையாட்டுதான் தனக்கு பிடித்தமான திரை உத்தி என்று அகிரா குரொசாவா சொல்லியிருக்கிறார். தனது பல படங்கள் வழியாக அதை விளக்கியுமிருக்கிறார். அதீத யதார்த்தம் என்றோ மீ யதார்த்தம் என்றோ இந்த உத்தியை வகை வகுக்கலாம். இதில் கலைப்படங்கள், வணிகப்படங்கள் என்கிற பாகுபாடுகள் எதுவுமில்லை.

மேலோட்டமான காரண ஆய்வுகளுக்குப் பொருந்தாத, முரண்பாடாகத் தோன்றக்கூடிய உருவகங்களின் அணிவகுப்பு தான் அத்தகைய திரைப்படக் காட்சிகள். பாத்திரங்களின் மன ஓட்டங்களும் மனப் பிராந்திகளுமெல்லாம் அவற்றில் காட்சியாக்கமாக விரிகின்றன. படிமங்களாக, உவமைகளாக, குறியீடுகளாக கவிதையிலும் இலக்கியத்திலும் கையாளப்படும் இந்த உத்தியை, உலக சினிமாவின் சிறந்த ஆசான்களான பெர்க்மேன், புனுவேல் போன்ற பலர் எழுபதாண்டுகளுக்கு முன்பிருந்தே கையாண்டு வந்திருக்கிறார்கள். தமிழ் வணிக சினிமாவுக்குள் முதன்முதலாக ஆற்றலுடன் இதைச் சாத்தியப்படுத்திக் காட்டிய திரைப்படம் மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.  
மனிதனின் ஆழ்மன உணர்வுகளை காட்சிப்படுத்துவதற்கே தொடர்ச்சியாக முயன்ற  பெர்க்மேன் ஓநாயின் மணிநேரம் (Hour of the Wolf) என்று ஒரு படமே எடுத்திருக்கிறார்! ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற தலைப்பிலேயே அது ஒரு யதார்த்தப் படமில்லை என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார் மிஷ்கின். மிஷ்கினின் எந்தவொரு படத்தையுமே யதார்த்தப் படம் என்று சொல்ல முடியாது. யதார்த்தப் படங்கள் எடுப்பதில் அவருக்கு நாட்டமுமில்லை. யதார்த்தமும் நாடகப் பாணியும்  ஓங்கிய இசையும் நடன அமைப்பும் கூடியாட்டத் தன்மையும் இடை கலந்து வருபவை அவரது படங்கள். ஆனால் யதார்த்தப் படங்கள் என்று சொல்லப்படுபவையில் இங்கு பயன்படுத்தப்படும் யதார்த்தத்திற்கு முற்றிலும் புறம்பான ஷேக்ஸ்பியர் காலத்து நாடக உத்தியான மனக்குரல் (Mind voice) போன்றவற்றை மிஷ்கின் எப்போதுமே தவிற்கிரார்!
மிஷ்கின் குரொசாவாவின் அதி தீவிர ரசிகர். குரொசாவா பற்றி பேசுமிடத்தில் தன்னைப் பற்றி பேசுவதைக்கூட விரும்பாதவர். குரொசாவா, தர்காவ்ஸ்கி போன்றவர்களெல்லாம் மிக அரிதான ரத்தினக்கற்களைப் போன்றவர்கள் என்றும் அவர்களை ஒரளவுக்கு புரிவதற்கே நமக்கு இன்னும் பல பதிற்றாண்டுகள் தேவைப்படும் என்றும் சொல்பவர் அவர்! அவர்களின் தரத்திற்கு நம்மால் என்றைக்குமே படங்களை எடுக்க முடியாது என்பது மிஷ்கினின் கருத்து. அவரே ஒப்புக்கொள்வதுபோல் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் குறைகளற்ற படம் அல்ல. ஆனால் உலக சினிமாவின் அற்புத இயக்குநர்கள் வெகுதூரம் நடந்து சென்ற பாதையின் துவக்கத்தில், முதல் அடி எடுத்து வைப்பதற்கான மிஷ்கினின் முயற்சிதான் இப்படம்.
முன்முடிவுகள் எதுவுமே இல்லாமல் திரைப்படங்களை பார்க்கும் எளிய மனம் கொண்ட பார்வையாளர்களையும் உண்மையான சிந்தனைத்திறன் கொண்டவர்களையும் ஒரேபோல் கவர்ந்தது ஓநாயும் ஆட்டுக்குட்டியும். உலகம் முழுவதுமிருந்து பலதரப்பினைச் சார்ந்தவர்கள்  ஊடகங்களிலும் பொதுவெளிகளிலும் பதிவு செய்த கருத்துக்களும், தனிப்பட்ட முறையில் எனக்கு வந்த பல்லாயிரக்கணக்கான  மடல்களும் அழைப்புகளும் அதன் அழியா சாட்சியங்கள். குடும்பத்துடன் திரையரங்கில் வந்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பார்த்த இயக்குநர் பாலா என்னிடம் சொன்னார் “மிஷ்கின் அசாத்தியமான இயக்குநர். அவர் போன்று இன்னொருவர் இங்கில்லை. தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெரும் வரம் அவர் என்று!
கலைரீதியாக பெருமளவில் கொண்டாடப்பட்டு, ஏற்கத்தகுந்த வணிக வெற்றியையும் பெற்ற ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் பணியாற்றிய தருணங்கள் ஒவ்வொன்றும் என்னை மேலும் பணிவான, சுயநலமும் தற்பெருமையும் அற்ற மனிதனாக மாற்றியவை! யதார்த்தம் என்று நினைக்கக் கூடிய சூழல்களுக்குமேல் கட்டப்பட்ட அதீத யதார்த்தம்தான் இப்படம் என்பது போலவே இதன் படப்பிடிப்புக்கு நடுவே நிகழ்ந்த பல சம்பவங்களும் மிகுந்த கற்பனைத் தன்மையுடன் தான் இருந்தன!  
காவல் துறையின் குற்ற விசாரணைப் பிரிவில் அதிகாரியாக வரும் எனது பாத்திரம், ஆணையரின் அலுவலகத்தில் அவரிடமும் அவரது நண்பரான மருத்துவரிடமும் வாதிடும் காட்சிதான் முதன்முதலில் படமாக்கப்பட்டது. ஒரு பக்கத்துக்குமேல் வரும் வசனத்தை மனப்பாடம் செய்து ஒரே எடுப்பில் பேசவேண்டும்! அத்துடன் உணர்ச்சிகள் திடமாகவும் வலுவாகவும் வெளிப்பட வேண்டும்! காட்சிகளை எப்போதுமே நீளமாக எடுக்கும் மிஷ்கினின் சிக்கலான காட்சியமைப்பு வேறு! ஒன்று சரி வரும்போது எனக்கு இன்னொன்று தவறிவிடும். திரையில் இப்போதிருக்கும் காட்சியை விட சிறப்பாக அமைந்த சில எடுப்புகள் இருந்தன! ஆனால் அவற்றின் கடைசிப் பகுதிகளில் எனது முன் அனுபவமின்மையால் தவறுகள் நடந்து விட்டன! 62ஆவது எடுப்பு தான் திரையில் இப்போது நீங்கள் பார்க்கும் அந்த காட்சி! அதைப் படமாக்கிய பின்னர் மிஷ்கின் என்னைக் கட்டியணைத்தார். அன்றைக்கு என்னால் சாப்பிடவோ தூங்கவோ முடியவில்லை. சிபிசிஐடி லால் ஆக நான் என்னை உணரத் துவங்கியிருந்தேன்!
அந்த நாட்களில் நான் பாடக நடிகர் சந்திரபாபுவின் பாடல்களை கேட்ட வண்ணமே இருந்தேன். எனது வீட்டிலும் வாகனத்திலும் எப்போதும் சந்திரபாபு பாடல்கள் தான் ஒலித்துக் கொண்டிருந்தன. அப்பாடல்கள் ஒவ்வொன்றும் கேட்கும்போது அந்த மகா கலைஞனின் அலாதியான மேதமையும் அவரது துயரமான வாழ்க்கையும் என் மனதை அலைக்கழித்துக் கொண்டேயிருந்தன. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் கடைசிக் காட்சிகளில் வரும் அந்த கல்லறைத் தோட்டத்திற்குள்ளே படப்பிடிப்பிற்காக நுழையும்போது மிஷ்கின் என்னை ஒரு கல்லறையின் பக்கம் அழைத்து சென்றார். பதின்பருவத்தை எட்டிய அவரது மகளும் கூடவே இருந்தாள். மிஷ்கின் அக்கல்லறையத் தொட்டு முத்தமிட்டார். அப்போதுதான் நான் அதைக் கவனித்தேன். அது சந்திரபாபுவின் கல்லறை! அப்பா வணங்கும் ஒரு மாபெரும் கலைஞனின் கல்லறை இது. தொட்டுக் கும்பிட்டுக்கோஎன்று மகளையும் கும்பிட வைத்து என்னை அங்கே தனியாக விட்டுச் சென்றார் மிஷ்கின். என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. ஒரு மணிநேரத்துக்கும் மேல் சந்திரபாபுவைப் பற்றி யோசித்தபடியே கண்ணீருடன் நான் அங்கு நின்றுகொண்டிருந்தேன்.                  
அந்த கல்லறைத் தோட்டத்திற்குள் பல இரவுகளை நாங்கள் கழித்தோம். கல்லறைகளுக்குமேல் அமர்ந்து, அங்கேயே உண்டு, தாங்க முடியாத கொசுத்தொல்லைக்கு நடுவேயும் அவ்வப்போது எதாவது ஒரு கல்லைறைக்கு மேலே படுத்து கண்ணயர்ந்து...! இறந்து போனவர்கள் நம்மை எதுவும் செய்ய மாட்டார்கள். ஒரு இரவில் கல்லறைத் தோட்டத்திற்கு பின்னாலிருக்கும் புதர்கள் மண்டிய இடத்தில் மனிதர்களின் எலும்புகள் வீசப்பட்டிருப்பதைக் கண்டேன். புதிய புதைகுழிகள் தோண்டும்போது கிடைத்த பழைய மனிதற்களின் எலும்புகள்!
ஸ்ரீ நடிக்கும் கதாநாயகப் பாத்திரம், எனது உதவியாளனை அடித்து விழவைத்து எங்கள் துப்பாக்கிகளை பலவந்தமாக எடுத்து அங்கிருந்து தப்பிக்கும் காட்சி படமாக்கப்பட்ட இரவு மறக்க முடியாதது. முதலில் ஓநாயால் கட்டிப் போடப்பட்டிருக்கும் ஸ்ரீயை நான் கட்டறுத்து விடவேண்டும். அதற்கு சற்று முன்புதான் அங்கேயே கண்தெரியாத ஒரு பாத்திரத்தை நான் தெரியாமல் சுட்டுக் கொல்கிறேன். அந்த காட்சியின் உணர்வில் திளைத்து நிற்கிறார் மிஷ்கின்!

ஸ்ரீயின் கைக்கட்டை அறுக்க என்னிடம் கொடுத்த கத்திக்கு கூர்மையே இல்லை! காட்சி படமாக்க ஆரம்பித்துவிட்டார்கள்! பாலாஜி ரங்காவின் கேமரா என் பக்கம் வரும் முன் நான் ஒரு உதவி இயக்குநரிடமிருந்த தொட்டால் வெட்டும் ஒரு சிறிய வெட்டுச் சாதனத்தை வாங்கினேன். எடுப்பின்போது ஸ்ரீயின் கை அறுந்திடக்கூடாது என்ற கவனத்தில் எனது விரலை நான் மோசமாக அறுத்து விட்டேன். கொட்டிய ரத்தம் காட்சி எடுப்பை சிக்கலாக்கியது. படப்பிடிப்பு தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அன்று எனக்குப் பிறந்த நாள்!
தனது பாத்திரத்திற்கு வலிமை சேர்க்க ஸ்ரீ எடுத்த முயற்சிகள் அலாதியானது. பெரும்பாலான நேரங்களில் சாப்பிடாமல், தண்ணீர் கூடக் குடிக்காமல் அப்பாத்திரத்தின் மனநிலையிலேயே வாழ்ந்துகொண்டிருந்தார். மிஷ்கின் சொல்லிக்கொடுக்கும் விஷயங்களை கனக் கச்சிதமாக உள்வாங்கி நடிக்கும் ஆற்றலை எப்போதுமே வெளிப்படுத்தினார். அப்பாத்திரத்தின் முழுநிறைவுக்காக தனது உடலையும் மனதையும் மிகவும் வருத்தினார். ரயில் பாலத்திலிருந்து கயிற்றில் தொங்கி கீழிறங்கும் காட்சியில் கையில் அணிந்திருந்த உறை கிழிந்து அவரது உள்ளங்கையிலிருக்கும் தோல் உரிந்துபோனது. ஆரம்பக் காட்சிகளில் பலமுறை தன்னை விட இருமடங்கு எடை கொண்ட மிஷ்கினை தோளில் தூக்கியெடுத்து நடந்து படிக்கட்டுகள் ஏறினார்!
மிஷ்கினின் வலங்கையான இணை இயக்குநர் புவனேஷ் கண்தெரியாத இருபது பேரை அழைத்து வந்தார். அவர்கள் வரும்போது ஒரு மூலையில் அமர்ந்து அன்று அவர்கள் பாடி நடிக்க வேண்டிய பாடலின் வரிகளை எழுதிக்கொண்டிருந்தார் மிஷ்கின். அரைமணி நேரத்தில் மேற்கத்திய செவ்வியல் இசையமைப்பாளர் அண்டோனின் ட்வோர்ஷாக் அமைத்த ஸ்டபாட் மாடெர் எனும் இசையை மையமாக வைத்து போகும் பாதை தூரமில்லை, வாழும் வாழ்க்கை பாரமில்லைஎனும் பாடலை உருவாக்கினார். அது அந்த பார்வையற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கத் துவங்கினார். அவர்களில் யாருமே நன்றாகப் பாடக்கூடியவர்கள் அல்ல என்பதை உணர்ந்த பின்னரும் மிகுந்த பொறுமையுடனும் நேசத்துடனும் அவர்களுக்கு சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தார்.
அப்போது மிஷ்கினிடம் நான் பேட்ரிக் ரொசாரியோவைப் பற்றிச் சொன்னேன். அவரும் கண் பார்வையற்றவர். அக்கார்டியன் எனும் இசைக் கருவியை மிகச்சிறப்பாக இசைக்கக் கூடியவர். எனது இசையின் தனிமை புத்தக வெளியீட்டு விழாவில் ஆரம்ப இசை வழங்கியபோது மிஷ்கினும் அவரை பார்த்திருக்கிறார். உடனடியாக அவரை அழைத்து வரும்படி சொன்னார். அவர் வந்துசேரும் வரை காத்திருந்து அந்த கண்தெரியாதவர்களின் பாடலுக்கு அக்கார்டியன் வாசிப்பவராக அவரையும் நடிக்க வைத்து, அவரது இசையின் துணையுடன் அக்காட்சியை பதிவு செய்தார். பின்னர் குரல் பதிவின்போது பேட்ரிக்கை ஒலிப்பதிவு கூடத்திற்கு வரவழைத்து அப்பாடலின் அசல் வடிவத்தைப் பதிவு செய்தார். திரையில் தனது நடிப்பை ‘பார்ப்பதுமிகவும் சந்தோஷமாகயிருந்தது என்று பேட்ரிக் பின்னர் என்னிடம் சொன்னார்.
வடபழனியில் உள்ள ஒரு மாபெரும் அடுக்குமாடி அங்காடித் தொகுதியின் வாகனங்கள் நிறுத்தும் நாங்காவது அடித்தளத்தில்தான் படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் பதிவு செய்யப்பட்டன. அங்கு பதிவான அந்த சண்டைக் காட்சியின்போது மிஷ்கினின் கால்கள் பல இடத்தில் காயம்பட்டன. அக்கால்களை வைத்துக்கொண்டே அந்த பெண்மணியையும் குழந்தையையும் தோளில் தூக்கி ஓடிக்கொண்டேயிருந்தார்! படப்பிடிப்பின் கடைசி நாளில் மிஷ்கின் நடித்த ஓநாய் பாத்திரம் இறந்துவிழும் காட்சி படமாக்கப்படும்போது கார்த்தி எனும் குழந்தையாக நடித்த சைதுப் பாப்பா மயக்கமாகி விழுந்தாள். அந்த காட்சியின் உக்கிரம் அக்குழந்தையின் மனதை அவ்வளவு பாதித்திருந்தது. காவல் துறையினராக நடித்துக் கொண்டிருந்த சில நண்பர்களும் மயக்கம்போட்டு விழுந்தனர்!
ஒரு சாதாரண திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் வசதிகளோ பாதுகாப்புகளோ எதுவுமில்லாமல் எடுத்து முடிக்கப்பட்ட படம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்! மிஷ்கின் பாயும் மின் ரயிலிலிருந்து கீழே குதிக்கும் காட்சி எடுக்கப்பட்டதும் மிகக்குறைவான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தான். அன்றும் தனது மகளுடன் படப்பிடிப்புக்கு வந்தார் மிஷ்கின். அக்காட்சிகளில் நான் இல்லாதபோதிலும் என்னையும் வரவழைத்தார். இன்றிரவு முழுவதும் என்னுடன் இருங்கள் என்றார். பாயும் ரயிலிலிருந்து குதித்து அவர் கீழே விழப்போகும் இடத்தில் தடுப்பு மெத்தைகள் போடப்பட்டிருந்தன. ஒத்திகைக்காக ரயில் ஓட்டப்பட்டபோதுதான் ரயிலின் அசுர வேகம் எனக்கு விளங்கியது. அந்த வேகத்தில் ரயிலிலிருந்து குதித்தால் தடுப்பு மெத்தைகளின்மேல் தான் அவர் விழுவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை!
நாலாபக்கமும் துருத்தி நிற்கும் கனமான இரும்பு தூலங்களும் உத்தரங்களும்! அதைச்சுற்றி கடும் காரைச் சுவர்கள். ஒரு நொடியில் எதுவும் நடக்கக் கூடும். தனது கலையில் யார் அறிவுரைகளையுமே ஏற்றுக்கொள்ள மாட்டார் மிஷ்கின் என்பதை நன்கு தெரிந்திருந்தும்  பயிற்சி பெற்ற நகல் நடிகரை வைத்து எடுக்கலாமே என்று பலவீனமான குரலில் சொன்னேன். அதற்கு அவர் சிரித்தபடியே இதைச் சொல்லவா உங்களை வரச் சொன்னேன்? எனக்கு எதாவது நடந்தாலும் என் மகளுக்கு நீங்களெல்லாம் இருக்கிறீர்கள் என்ற மன நிம்மதிக்காகத் தானேஎன்று சொல்லி ரயிலேறினார். சில நொடிகளில் அதிவேகத்தில் பாயும் ரயிலிலிருந்து அவர் கீழே குதித்தார். எனது மனம் ஒருகணம் உறைந்துபோனது. மெத்தை மேல் விழுந்து எழுந்து நின்றார். ஆபத்தான குதிப்புகளை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறார் மிஷ்கின். பெரும்பாலும் அவர் தடுப்பு மெத்தைகளின்மேல் விழுவதேயில்லை. இருந்தும் எழுந்து வந்துகொண்டேயிருக்கிறார்... அடுத்த குதிப்புக்கு ஆயத்தமாக... ஓநாய்க்களின் நிழல்படாத இதயத்துடன்....

சனி, 15 பிப்ரவரி, 2014

Friday, February 14, 2014

முடிந்தது :-(

மின் தகன மேடையில் வாத்தியாரின் உடல் கிடத்தப்பட்டு, மார்பில் கற்பூரத்தைக் கொளுத்தி வைக்கவும் நா.முத்துக்குமாரிடம் கதறத் தொடங்கினேன்.

‘முத்து! ஸாருக்கு சுடும்டா. வேண்டாம்டா’.

அவரது டிரேட்மார்க் ஃபிடம் கேஸ்ட்ரோ தொப்பியுடன் சேர்த்து அவரது தலையைத் தொட்டு வணங்கிய அடுத்த நொடியில் சரேலென வாத்தியாரை உள்ளே இழுத்துக் கொண்டது, அந்த யந்திரம். கதறலும், கேவலுமாக அழுது மயங்கிச் சரிந்தேன். இயக்குனர் பாலாஜி சக்திவேல் தாங்கிக் கொண்டார். யார் யாரோ என்னைக் கடத்தி அங்கிருந்து நகர்த்தினர்.

‘நீங்களே இப்பிடி கண்ட்ரோல் இல்லாம அழுதீங்கன்னா என்னண்ணே அர்த்தம்?’

வெற்றி மாறன் கடிந்தான்.

‘நீங்க அழுது எங்க எல்லாரயும் அழ வைக்கிறீங்க. மொதல்ல இவர பத்திரமா வெளியெ கூட்டிட்டுப் போங்க.’

யாரிடமோ சத்தமாகச் சொன்னான், இயக்குனர் ராம்.

’வாங்க சுகா’. இயக்குனர் சசி கைப்பிடித்து வெளியே கொணர்ந்தார்.

‘சுகா! இந்தாங்க. கொஞ்சம் மோர் சாப்பிடுங்க’.

இயக்குனர் விக்ரமன் கொடுத்தார்.

‘!என்னண்ணே இது? சின்னப் புள்ள மாதிரி அழுதுக்கிட்டு?’

தோளைப் பிடித்து அணைத்துச் சொல்லும் போதே அடக்க முடியாமல் அழுது என் மார்பில் சாய்ந்தான், இயக்குனர் சீனு ராமசாமி.



மாலையில் ராஜா ஸாரிடமிருந்து ஃபோன்.

‘என்னய்யா? பத்திரமா அனுப்பி வச்சுட்டீங்களா?’

பதில் சொல்லாமல் அழுதேன்.

புரிந்து கொண்டு மறுமுனையில் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு,

‘சரி சரி. நாளைக்கு வா’ என்றார்.

நாளைக்குப் போய்ப் பார்க்க வேண்டும். இனி அவர்தானே ’வாத்தியார்’!


பாலுமகேந்திரா

எந்த புள்ளியில் எங்கள் நட்பு இணைந்தது என்று ஞாபகப்படுத்த முடியவில்லை. பூவின் மலர்தலை எந்த செடி நினைவில் வைத்திருக்கும்.
கலைஞர்களும், படைப்பாளிகளும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற பதாகையின் கீழ் குவிந்து, சென்னை பெரியார் திடலில் கருத்து சுதந்திரம் வேண்டி உணர்வுக் குவியாகத் திரண்டிருந்த கூட்டத்தை விலக்கி கம்பீரமாக பாலுமகேந்திரா என்ற அக்கலைஞன் மேடையேறுகிறார். மௌனம் மேலும் நுட்பமாகிறது. வெளிர்நீல ஜீன்சும், வெள்ளை சட்டையும், தன் உடலில் ஒன்றாகிப் போன தொப்பியோடும் யாருடைய அனுமதிக்கும் காத்திரமால் மைக் முன்னால் நின்று பேச ஆரம்பிக்கிறார்.

''என் கேமராவை என் உயிராக மதிக்கிறேன். அதை ஒரு ஆக்டோபஸ் சுற்றிக் கொண்டிருப்பதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது. அது என் ஆன்மாவை இயக்க்கவிடாமல் அடைத்துகொண்டிருக்கிறது.''

இதோ இந்த புள்ளிதான் அவர் என்னுள் நுழைந்ததென இன்று மீட்டெடுக்க முடிகிறது. ஒரு அரசை எதிர்த்து கம்பீரமாய் ஒலித்த ஒரு கலைஞனின் குரல் பல வருடங்களை பின்னுக்குத் தள்ளி இன்றும் என்னுள் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. அதன் பிறகான நாட்களில் எங்கள் நட்பு கண்ணி இறுக்கமானது. அவரையும், அவர் படைப்புகளையும் நெருக்கமாக்கி கொண்டது மனது.

நேற்று வீட்டில் எல்லோரும் உட்கார்ந்து இதுவரை பார்க்ககிடைக்காத 'யாத்ரா' பார்க்க ஆரம்பிக்கிறோம். மம்முட்டியும், சோபனாவும் போட்டிபோட்டு நடித்திருக்கிறார்கள். ஆயும் தண்டனை முடிந்து வெளியே வரும் உண்ணிக்கிருஷ்ணனுக்கு (மம்முட்டி) நம்பிக்கையின் ஏதோ ஒரு துளி மட்டும் ஒட்டியிருக்கிறது. துளசியின் (சோபனா) மலை கிராமத்தை நோக்கி செல்லும் ஒரு டூரிஸ்ட் வேனில் பயணிக்கிறான். பயணங்கள் எப்போதும் பழைய ஞாபகங்களை கோருகின்றன. உன்னியின் கடந்த கால துயரம் அந்த சகப்பயணிகளை துக்கப்படுத்தி கண்ணீரில் நனைய வைக்கிறது. ஒரு குழந்தை தன் தேவனிடம் அவனின் காதலுக்காக இறைஞ்சு மன்றாடுகிறது.

''தான் விடுதலையாகி வரும் போது, நாம் எப்போதும் சந்திக்கும் அந்தக் கோவிலின் முன் நீ ஒரு ஒற்றை தீபத்தை ஏற்றி வைத்திருந்தால் இன்றும் எனக்காகவே நீ... என இறங்கிக் கொள்கிறேன். ஒரு வேளை தீபமற்ற கோவிலை என் வண்டி கடக்கையில் என் பயணம் தொடரும் துளசி'' அவன் எழுதிய கடிதங்களின் வரிகளை மீண்டும் ஒரு முறை வரிசைப்படுத்துகிறான்.

இருள் கவிந்துவிட்ட மாலை அது.

இதோ இந்த திருப்பம்தான் துளசியின் ஊர். ஊரின் முகப்பில் கிருஷ்ணன் கோவில். மௌனம், எல்லோர்க் கண்களும் அந்த ஒற்றை தீப ஒளியை தரிசிக்க நீள்கிறது. அவர்களது பார்வை கோவில் முன் மட்டுமல்ல, ஊர், வயல்வெளிகள், காடு மலை எல்லா இடங்களும் ஏற்றப்பட்ட தீப ஒளியில் ஒளிர்ந்து நிறைந்திருக்கிறது.

ஒரு மகத்தான கலை மனதுக்கு மட்டுமே இப்படைப்பின் உச்சம் சாத்தியம். பாலுமகேந்திரா என்ற கலைஞனின் கலை ஆளுமைக்கு இப்படத்தின் முடிவே சாட்சியம். yellow ribben என்ற ஹங்கேரியக் கவிதையே இப்படத்திற்கான உந்துதல் என்கிறார்.

ஒரு கவிதையை மூன்று மணி நேர உன்னத சினிமாவாக செதுக்கத் தெரிந்த கைகள் அவருடையது.

என் மனைவி ஷைலஜாவை தன் மகளாக மனதளவில் ஸ்வீகரம் எடுத்துக் கொண்டவர். தன் சந்தோஷம், துயரம், தனிமை , வெறுமை இப்பொழுதுகளை அப்படியே எங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டுமென நினைப்பவர். பல நேரங்களில் அவைகள் தொலைபேசி வழியாகவும், சிலநேரங்களில் நேரடியான வருகையின் மூலமாகவும் அவ்வுணர்வுகளை நாங்கள் ஸ்வீகரித்துள்ளோம்.

ஒரு காதலியின் மடியில் திருட்டுத்தனமாய் மரத்தடியில் படுத்துக் கொள்ளும் அவருடனான என் திருவண்ணாமலை நாட்கள். யாருமற்று நானும் அவரும் மட்டுமே எங்களுக்கு எங்களுக்கென்று அமைத்துக் கொண்ட உரையாடல்கள் சுவரசியமானதும், பெருமிதமானதும் யாருக்கும் வாய்க்காததுமானவைகள்.

ஒரு தொலைபேசி செய்தியினூடே வந்திறங்கிய இரண்டாண்டுகளுக்கு முந்தைய மழைத்தூறல் மிக்க மாலையை இன்றும் ஈரமாகவே வைத்திருக்கிறேன்.

அவர் தங்கியிருந்த விடுதிக்கு அடுத்த நாள் மாலை வரச்சொன்னார். மலையின் முழு வடிவமும் தெரியும் அந்த 102-ம் அறையின் பால்கனி அவருக்கு பிடித்தமான இடம். எதிரெதிரே போடப்பட்ட பிரம்பு நாற்காலியில் மௌனம் காத்து ஒரு சொல்லின் ஆரம்பம் வேண்டி தவமிருக்கிறோம். ஆவி பறக்கும் green tea ஆறிக் கொண்டிருக்கிறது. 'சொல்' எத்தனை மதிப்புமிக்கது, கிடைப்பதற்கறியதுமென நான் உணர்ந்த கணம் அது.

நான் அடுத்தபடம் பண்ணப்போறேன் பவா. அந்தக் கதைக்கான பகிர்தல் இந்த மாலை. ஒரு பையனுக்கும் அவன் சித்திக்கும் உடல்ரீதியான பகிர்தலே இப்படம். கதை சொல்கிறார். இலங்கையில் கழிந்த தன் பால்யத்தில் கரைகிறார். பனைமர மறைவுகளில் நின்று தான் பார்த்த காட்சிகளை அடுக்கிறார். தன் ஆஸ்தான ரோல்மாடல் ஒருவரின் கள்ளத்தனமான ஸ்நேகிதியைப் பற்றி சொல்லி சிரிக்கிறார். சினிமாவும், நிஜமும், பால்யமும் கலந்த கலவைகளாளானது அந்த இரண்டு மணி நேரம்.

நான் முற்றிலும் கரைந்து போயிருதேன். பேச வார்த்தைகளற்று தூறலில் நனையும் மலையின் திசையை நோக்கி கண்களைக் குவித்திருத்தேன்.

’’சொல்லுங்க பவா''

''சித்தியுடனான உறவை தமிழ் மனது ஏற்காது சார்''

''நல்ல Treatment-ல?''

''இல்ல சார், ஒரு வேலை ஒவ்வொரு மனிதனுக்கும் கூட அப்படி ஒரு ரகசியம் இருந்தாலும், தன் ஆழ்மனதின் ரகசியம் திரையில் தெரிவதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியாதுன்னு நெனைக்கிறேன்.''

''ஏன், ஏன், தன் உண்மைகள் படைப்பாகும் போது அதை அவனே நிராகரிக்கணும், 'மூன்றாம்பிறை' ஸ்ரீதேவியை கமல் எங்கிருந்து அழைச்சிட்டு போவார்னு ஞாபகப்படுத்துங்க பாக்கலாம்?''

மீட்டெடுக்க முடியாமல் திணறியதை ஒரு நொடியில் உணர்ந்தவர்,

''ஒரு விபச்சார விடுதியிலிருந்து’’ ஆனா அது உங்களுக்கு மட்டுமல்ல, படம் பார்த்த யாருக்கும் ஞாபகம் இருக்காது, ஏன்னா படத்தோடு Treatment-ல அது காணமல் போயிடுது''

ஆனாலும் என்னால் அவரோடு உடன்படமுடியலை. அழுத்தமான கைப்புதைவுகளிடையே அவ்விரவில் தனித்தனியானோம்.

அதற்கடுத்த பத்து நாட்களும் ஒரு பித்தேறிய படைப்பு மனநிலையோடு அவருக்குள் ஏறியிருந்த புதுப்புது தர்க்கங்களுக்கு விடை தேடி திருவண்ணாமலையில் எங்கள் வீடு, அருணை ஆனந்தா ஹோட்டல், வம்சி புக்ஸ் கடை என்று அலைந்து கொண்டிருந்தார்.

முடிவுகளின்றி முடிந்தது அப்பயணம்.

கருங்கற்களால் நாங்கள் கட்டி முடித்த எங்கள் வீட்டின் திறப்பு விழாவிற்கு வந்திருந்த போது மிகுந்த மௌனம் காத்தார். எல்லா நண்பர்களும் வீட்டின் தரையில் உட்கார்ந்து 'கரிசல் குயில்' கிருஷ்ணசாமியின் பாட்டிற்கு எங்களை ஒப்புக் கொடுத்திருந்தோம். என் வீட்டின் ஒரு மூலையில் மூன்று மணி நேரத்திற்கும் மேல் அசையாமல் உட்கார்ந்து தன் நினைவுகளை மீட்டெடுத்துக் கொண்டிருந்த மிச்சம் இன்றும் என்னுள் நிற்கிறது. பாடல்களின் இடைவெளியில் உட்கார்ந்தவாறே மிக மென்குரலில் நம்மோடு ரகசியமாய் உரையாடுவதைப்போல பேசினார்.

நான் என் மகளாக ஸ்வீகரித்துக் கொண்ட என் மகள் ஷைலுவும், என் மாப்பிள்ளை பவாவும் கட்டியுள்ள இச்சிறு கூடு எனக்கு என் அம்மாவின் நினைவுகளை அலைகழித்துக் கொண்டிருந்தது. என் அம்மா ஒரு அற்புத மனுஷி. என் அம்மா இல்லாத அப்பா வெறும் பூஜ்யம். கலையும், இசையும், படைப்பும் நிறைந்து அம்மாவின் ஆகிருதி அவள் ஒரு வீடு கட்ட ஆரம்பித்தவுடன் அது ஒவ்வொன்றாய் உதிர ஆரம்பித்தது. நிறைவடையாத அவ்வீடு அம்மாவின் அத்தனை கலாபூர்வங்களையும் சிதைத்திருந்தது. அம்மாவின் நிறைவேறாத அக்கனவே என் 'வீடு' ஆனால் என் மகளின் நிறைவடைந்த இவ்வீடு அவளின் சிருஷ்டியை அப்படியே காப்பாற்றியுள்ளது''

எவ்வளவு கவித்துவம் ததும்பும் சொற்கள் இவைகள். இன்றளவும் தன் ஒவ்வொரு நொடியின் இடைவெளிகளையும் கவித்துவத்தால் நிரப்பத்துடிக்கும் ஒரு கலை ஆளுமை.

இந்திய சினிமாவின் தனிப்பெரும் ஆளுமை அவர்.

ஒரு நாள் அதிகாலை என்னை தொலைபேசியில் அழைக்கிறார். ''பவா நேற்று ஒரு திரைப்பட விழாவில் என் 'வீடு' திரையிடப்பட்டது. பார்வையாளர் வரிசையில் உட்கார்ந்து படம் பார்த்தேன். நேற்று எடுத்த மாதிரி அத்தனை புதுசாயிருந்தது. காலத்தின் முன் தன் படைப்பு உதிர்ந்துவிடாமல், முன்னிலும் அதிக கம்பீரத்தோடு எழுந்து விஸ்வரூபமெடுப்பதை பார்க்கும் ஒரு படைப்பாளிக்கு உரிய பெருமிதம் இது.

''சார் நீங்க.....''

''நான் வார்த்தை கிடைக்காமல் தடுமாறுகிறேன். அவரே கோடிட்ட இடத்தை நிரப்புகிறார்.''

''நான் புலி பவா, புலியின் உடல் கோடுகளை அது செத்த பின்னாலும் அழிக்க முடியாது''

- நாளை எழுதுகிறேன்...