புத்தகங்கள், சிந்துபாத் கிழவன் மாதிரி என் கழுத்தைப் பிடித்துக்கொண்டு இறங்க மறுக்கின்றன. வரவேற்பறை என்று அழைக்கப்படும் பல்பயன் பகுதி. முழுமையும் மூன்று சுவர்களையும் மறைத்துப் புத்தகங்கள். தரையில், கூடத்தில், சமையல் அறை மற்றும் குளியல் அறை போகும் வழியை மறைத்துக்கொண்டு புத்தகங்கள். தினம் தபாலில் வரும் புத்தகங்கள். ‘நடை’க்காகச் செல்லும் பாதையிலும் வழி மறுத்துத் தரப்படும் கவிஞர்களின் புத்தகங்கள். தமிழ்ச் சூழலில் புதிது புதிதாக எழுதப்பட்டு வெளிவரும் படைப்பு மற்றும் ஆய்வுப் புத்தகங்களை நானே வாங்கிப் பாதுகாக்கிறேன்.முக்கியமான இளம் எழுத்தாளர்களின், கவிஞர்களின் புத்தகத்தை வாங்கி வாசித்து விடுகிறேன். ஆக, புத்தகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக என்னை வீட்டைவிட்டு வெளியேற்றிக் கொண்டிருக்கின்றன.

அதனால் என்ன? புத்தகங்கள் எனக்குப் பிடிக்கின்றன. மிக அழகான கலைநயம் மிக்க அட்டையும், நல்ல தாளும், பிழையற்ற அச்சும் கொண்ட புத்தகங்களை நான் நேசிக்கிறேன். புத்தம் புதிதாக இருக்கும் புத்தகங்களிலிருந்து வெளிப்படும் வாசனை என்னைக் கிறக்கத்துக்குள்ளாக்குகிறது. நல்ல எழுத்தாளர்கள் எழுதிய, புத்தம் புதிய புத்தகத்தைக் கையில் ஏந்தும்போது பிறந்த குழந்தையைக் கையில் ஏந்துவதுபோல இருக்கிறது. குழந்தைகளின் கறை படியாத கண்களைப்போல இருக்கின்றன, புத்தகப் பக்கங்கள், எல்லாவற்றுக்கும் மேலே, ஓர் உண்மை நண்பன்போல, நம் அறியாமையை அது சுட்டிக் காட்டுகிறது. மட்டுமல்ல, நம்மை, நமது வெறுமையை அவை இட்டு நிரப்புகின்றன. மனிதர்கள் அடர்த்தி கொள்வது, புத்தகங்களால்தான் என்பதை எவர்தாம் மறுப்பார்கள்.

எங்கள் பள்ளிக்கூடத்துக்கு வெளியே, ஆரஞ்சுச் சுளை மிட்டாய்கள் விற்பார் ஒருவர். விசையை இழுத்துவிட்டால், குண்டு எந்தக் குழியில் போய் விழுகிறதோ அத்தனை மிட்டாய்கள். ஒரு முறைகூட நான் நூறை எட்டியது இல்லை. அது விஷயம் இல்லை. அவர் கடையில்தான் ‘டிங்டாங்’ பத்திரிகை வரும். ஒரு பத்திரிகை எட்டுப் பக்கங்கள். இன்றைய ‘நக்கீரன்’ சைஸ். விலை அரையணா. இன்றைய விலையில் மூன்று பைசா. இது 1955ம் ஆண்டு. நான் ‘டிங்டாங்’ வாசகன். பத்திரிகை, புத்தகம் வாங்க எவ்வளவு கேட்டாலும் அப்பா கொடுப்பார். அசட்டு அப்புவும் சுட்டி சுப்புவும் எனக்குப் பிடித்த பாத்திரங்கள். ராட்சசன், ராஜகுமாரன் கதைகள். அறிவுக்கான வினா விடை. தாஜ்மகாலைக் கட்டியது யார் என்பதுபோல. அதற்குப் பிறகு ‘கண்ணன்’. அழகான சிறுவர் பத்திரிகை அது. ஒரு பையன் ரங்கு. ஒரு பெண் ராணி. இருவருக்கும் பந்தயம். யார் ஜெயித்தார்கள். ராணிதான். அப்புறம் ‘கல்கண்டு’. நானும் கோவிந்தனும் பாதிப்பாதிப் பணம் போட்டு வாங்குவோம். ஒன்றரை அணாவோ இரண்டு அணாவோ! எனக்கு சங்கர்லாலைப் பிடிக்கும். துப்பறியும் சிங்கம் அவர். மேசையின் மேல் காலைத் தூக்கிப் போட்டுக்கொண்டு உட்கார்வார்.  அவர் நெற்றியில் அழகாக சுருள் முடி வந்து விழும். நான் கடுமையாக முயன்று பார்த்தேன். என் முடி சுருள மறுத்துவிட்டது. சங்கர்லாலைக் காட்டிலும் எனக்குப் பிடித்தவர் கத்தரிக்காய் என்கிற குள்ளன். இந்திரா என்கிற ஒரு பெண் வருவாள். ‘பெண்’ மேல் லயிப்பு ஏற்படாத பருவம் அது. ஆகவே, இந்திரா என்னைக் கவரவில்லை. துணை கமிஷனர் வகாப் என்று ஒருவர் தொடர்ந்து தமிழ்வாணன் நாவல்களில் வருவார். மூளை என்கிற வஸ்துவே இல்லாத மனிதர் அவர். போலீஸ்காரர்கள் அந்தக் காலத்திலும் அப்படித்தான் இருந்தார்கள். சங்கர்லால் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பார். வகாப்  மெடல் குத்திக் கொள்வார்.

அப்புறம் அகிலனிடம் வந்து சேர்ந்தேன்.  தணிகாசலம் என்பவனை நான்கு பேர் (?) காதலிப்பார்கள். எனக்கு ஏனோ ‘பாவை விளக்கு’ பிடிக்கவில்லை.  நான் தணிகாசலம் இல்லையே! அப்புறம் நா.பார்த்தசாரதியிடம் வந்து சேர்ந்தேன். கூடவே எனக்கும் காதல் வந்தது. நான்தான் அரவிந்தன். ஒன்பதாம் வகுப்பில் ஜிப்பாவும் வேட்டியும் அணிந்துகொண்டு பள்ளிக்கூடம் போன காதலன் நான். அரவிந்தன் அப்படித்தான் இருந்தான். என் தேடல் பூரணியாக இருந்தது. தேடித் திரிந்தேன்.  இருநூறு பக்க பிரான்ஸ் தேச நோட்டுப் புத்தகம், காதல் கடிதங்களால் தீர்ந்துபோனது. கடைசி வரை பூரணி  எனக்குக் கிடைக்கவில்லை. பூரணிகள் எப்போதும் அரவிந்தன்களுக்கே கிடைப்பார்கள்.

சித்தார்த்தனும் என் நண்பர் சி.என்.பார்த்தசாரதியும் (பின்னாளில் எம்.எல்.ஏ.) இணைந்து ‘கலைக் கோவில்’  என்று ஒரு பத்திரிகை நடத்தினார்கள். பத்திரிகை அலுவலகத்தைக் கவிதைகள் கொண்டு தாக்கினேன். அலுவலகத்துக்கு வந்த கவிதைகளில் நூற்றுக்கு 98 என் சிருஷ்டிகள். இணை ஆசிரியர் சி.என்.பி. என்னைக் கையெடுத்துக் கும்பிட்டுக் கவிதைகள் போதுமே என்று மன்றாடினார். என் கவிதைக் காட்டாறை நான் எப்படித் தடுப்பது? சித்தார்த்தன் ஓர் அருமையான காரியம் செய்தார். ஓரத்தில் சிவப்புச் சாயம் பூசிய புதுமைப்பித்தன் கதைகள் புத்தகம் ஒன்றை எனக்குத் தந்தார். என் பிரமைகள் அனைத்தும் கழன்று விழுந்தன. தொடர்ந்து ஒரு மோசமான காரியம் நிகழ்ந்தது. பத்திரிகையில் இனி கவிதைகள் பிரசுரிக்கப்படாது என்று அறிவிப்பு வந்தது. ஒரு கவிச் சக்ரவர்த்தி உருவாகி விடக்கூடாது என்று உலகமே சதி செய்தால் நான் என்ன செய்யக்கூடும்? கதைகள் பற்றி யோசிக்கத் தொடங்கினேன்.

என் அப்பாவைப் படிக்காதவர் என்று மற்றவர்கள் சொல்வார்கள். நான் ஒருபோதும் அப்படி நினைக்கவும் மாட்டேன். படிப்பு, ஒரு மனிதனுக்கு நற்பண்புகளும் ஒழுக்கமும் நேர்மையையும் தரும் என்றால், அப்பண்புகள் என் தந்தையிடம் நிரம்பி இருந்தன. தன் இளமைக் காலத்தைக் கள்ளுக்கடையில் தொடங்கியவர் அவர். பதினாலு பதினைந்து வயது தொடங்கி, என் பிறந்த நாளுக்குப் புத்தகங்கள் வாங்கித் தந்து கொண்டாடியவர் அந்தப் படிக்காதவர். என் பதின்மூன்று வயதில் என்னை, எங்கள் ஊரின் அரசு நூலகமான ரோமன் ரோலந்து நூலகத்தில சேர்த்துவிட்டவர் அவர். பட்டு ஜிப்பாவும், பட்டு வேட்டியும், பாகவதர் கிராப்பும், கட் ஷூவும் அணிந்து குதிரை வண்டியில் ஒரு ராஜா போல பயணம் செய்தவர் அவர். இரண்டு ‘தவறுகளை’ அவர் செய்தார். என் போல துப்பில்லாத பிள்ளையைப் பெற்றார். காந்தீயத்தைத் தழுவி, கள்ளுக்கடையை விட்டு, செய்த வியாபாரங்கள் எல்லாம் நண்பர்கள சூதால் நசித்து, கதர் வேட்டியில் சதா கிழிசலைத் தைத்துக்கொண்டு, முதுமையைக் கழித்தார்...

ரோமன் ரோலந்து நூலகம், என் கண்களைத் திறந்தது.  பிரஞ்ச், ஆங்கிலம், தமிழ் என்று ஆயிரக்கணக்கான புத்தகங்கள் ஒரே இடத்தில். உலகத்தில் இத்தனை புத்தகங்களா என்று நான் திகைத்தேன். இந்த உலகத்துக் கோணல்களை நிமிர்த்த எத்தனை மாமனிதர்கள் சிந்தித்து இருக்கிறார்கள். மாப்பசானும், செகாவும், டால்ஸ்டாயும், விக்தோர் யூகோவும், பாரதியும், ரூமியும் இரவு நேரத்தில் புத்தகப் பக்கங்களிலிருந்து கீழே இறங்கி, படிப்பு மேசையில் வட்டமாக அமர்ந்து பேசுவார்களாக இருக்கும் என்று கற்பனை செய்து கொண்டேன்.

சுமார் இருபது அடிகள் உயர அலமாரிகளில் அடுக்கப்பட்டிருக்கும் பல்லாயிரம் புத்தகங்கள் சூழ, அவைகளின் கீழே அமர்ந்து கொண்டிருப்பதே ஓர் அற்புதமான அனுபவம். சுமார் நூறாண்டு காலத்து நூலகம் அது. பழைய நூலகத்துக்குரிய வாசனை தனிப்பட்டது. காலம் பழசாகி, பழமை தரும் வாசனை என்பார்கள். எனக்கு அப்படித் தோன்றவில்லை. புத்தகங்கள் விடும்  மூச்சு அது. புத்தகங்களுக்கு உயிர் இருக்குமா என்பதே அபத்தமான கேள்வி. உயிர் அற்ற ஒன்று, மனித குலத்தை உயிர்ப்புடன் வாழ வைக்குமா என்ன?

நான் பார்த்த அடுத்த நூலகம் தஞ்சாவூரில் பிரகாஷ் வைத்திருந்தது. மிகப் பெரிய மாடி முழுதும் நீள வாக்கில் இரும்பு ஷெல்ப்பில் அடுக்கப்பட்டிருந்தன பல நூறு புத்தகங்கள். தமிழின் அத்தனை ஆளுமைகள் அத்தனை பேரும் அங்கே இருந்தார்கள். ‘மணிக்கொடி’ தொகுப்பு முழுதுமாக அங்கு இருந்தது. அப்போது வந்துகொண்டிருந்த ‘எழுத்தும்’ அங்கே இருந்தது.

தனியார் சேகரிப்போ, அரசு சேகரிப்போ, புத்தகங்கள் ஒரு வகையான மர்மப் புன்னகை புரிந்த வண்ணமாக இருப்பதை நான் உணர்கிறேன். என் கல்லூரிக் காலம் (1965 - முதல் ) அந்த நூலகத்தில். பிரகாஷ் இருந்தாலும் இல்லையென்றாலும், இரவு பகல் இருந்திருக்கிறேன்.எப்போதும் படித்துக் கொண்டிருக்கிறேன் என்பது அல்ல. எட்டுத் திக்கும் புத்தகம் சூழ நான் இருக்கவேண்டும் என்பதைத் தவிர வேறு காரணம் இல்லை.

அந்தச் சூழலில்தான் எனக்கொரு பெரு விருப்பம் எழுந்தது. அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பேராசான்கள்  வரிசையில் எனக்குமொரு இடம் கிடைக்கவேண்டும். வாழ்க்கையின் மாலைப் பொழுதில் இருக்கும் என் ஆசை  நிறைவேறியதா  என்பதில் இன்னும் எனக்கு சந்தேகம் இருக்கவே செய்கிறது. இல்லாமல் போனாலும் அது ஒரு பெரிய விஷயம் இல்லை. வாழும் வரை எனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்கிற திருப்தி எனக்கு இருக்கவே செய்கிறது. எழுத முடிகிறது என்பதில் திருப்தி அடைகிறேன்.

எனக்கென்று ஓர் அருமையான நூலகத்தை நானே உருவாக்கி இருக்கிறேன். தமிழின் முக்கியமான புத்தகங்களை நான் கடந்து வந்திருக்கிறேன். என் அடிப்படைத் தேவைகளை மறுத்தும்கூட நான் புத்தகங்கள் வாங்கி  இருக்கிறேன். என் மனைவியை, என் குழந்தைகளின் ரொட்டியைப் பறித்தும்கூட புத்தகங்கள் வாங்கிச் சேகரித்தேன். சுவாரஸ்யம் என்ன வென்றால், என் நூலகத்தில் என் புத்தகம் ஒன்றுகூட இல்லை. எல்லாம் எம்.ஃபில் பண்ணும் ஆய்வு மாணவர்கள் பலர் கொள்ளையடித்துப் போனார்கள் என்பதை நான் இப்போதாவது சொல்லியாக வேண்டும்.

எனக்குத் தெரிந்து சுமார் நூறு பேர்களாவது என் எழுத்துக்களை எம்.பில்.லுக்கு ஆய்வு செய்திருக்கிறார்கள். அவர்களில் பலரிடம் இருந்து, முதலில் தொலைபேசி வரும்.

‘ஐயா! நான் ‘இந்தக்’ கல்லூரியில் படிக்கிறேன். தங்கள் நாவலை ஆய்வுக்கு எடுத்திருக்கிறேன்’

‘சரி. எந்த நாவலை?’

‘தெரியாது சார். என் வழிகாட்டி அதைச் சொல்வார்’

‘நீ படித்தது இல்லையா?’

‘இல்லை சார்’

‘பின் எதுக்கு என் நாவலை எடுத்தாய்?’

‘என் வழிகாட்டி எடுக்கச் சொன்னார் ஐயா!’

சில மாணவிகள், அதிகாலை ரயில் களைப்புடன் அண்ணன் பாதுகாப்புடன் வருவார்கள். அவர்கள் கையில் ஒரு பெரிய காகிதச் சுருள் இருக்கும். அத்தனையும் என் பதிலை எதிர் நோக்கும் கேள்விகள். முதல் கேள்வி, தங்கள் இயற்பெயர் யாது என்பதாக இருக்கும். ஒரு நாளின் சூரிய ஒளி இருக்கும்வரை கேள்விகள் தொடரும். பிறகு, என்னிடம் இருந்தே என் புத்தகங்களை, ஆய்வுக்கு உதவும் இன்னும் பலப்பல புத்தகங்களையும் எடுத்துச் செல்வார்கள். ‘ஒரே மாதத்தில், ஆய்வு முடிந்ததும் திருப்பித் தந்து விடுகிறேன் ஐயா’ என்பார்கள். ஏழ்மைக் குடும்பத்துப் பெண்கள். எப்படிக் கறாராக இருக்க முடியும். சில ஆண்டுகளுக்குப்பிறகு, மதுரை மாவட்டத்து, கோவை மாவட்டத்து ஏதோ ஒரு கல்லூரிக்குப் பேசக் கூப்பிடுவார்கள். அங்கே ஒரு பெண் எதிர்ப்பட்டு, ‘ஐயா! நான் உங்கள் நூல்களை ஆய்வு செய்தவள்’ என்பாள். எனக்கு என் புத்தகங்கள் நினைவுக்கு வரும். கேட்பேன். ‘அதா ஐயா? அப்போதே கமலாவிடம் கொடுத்து உங்களிடம் சேர்ப்பிக்கச் சொன்னேனே, வந்து சேரவில்லையா?’ என்பாள், அந்த விரிவுரையாளர். நான் இன்னும் பத்து கமலாவையும், இருபது இந்திராவையும், முப்பது ராஜேஸ்வரிகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

புத்தகங்கள் மேல் எனக்குள்ள ஈர்ப்பு குறைந்துவிட்டது. ஏன் என்று தெரியவில்லை. புத்தகமும் அவைகளை மூளையில் ஏற்றிக்கொள்வது ஒரு வகையாக அதிகாரத்தை ருசிப்பதற்கான முன் ஏற்பாடு என்று தோன்றுகிறது. எனக்கு அதிகாரம் தேவை இல்லை. ஒரு மனிதனுக்கு எத்தனை புத்தகங்கள் போதும்? நான் எழுதுபவன்... என் துறைக்கு, என் வாழ்க்கைக்கு எத்தனை புத்தகங்கள் தேவைப்படும் என்று அண்மையில் யோசித்தேன். என் புத்தகங்களை நண்பர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.எனக்குச் சில புத்தகங்கள் போதும். அவை இவை:

சங்க இலக்கியம் 18 புத்தகங்கள், கீழ்க்கணக்கு 18 நூலில், திருக்குறள் போதும். சிலம்பு, கம்பன், தமிழ்விடு தூது, நந்திக் கலம்பகம், உ.வே.சா.வின் தன் வரலாறு, பிள்ளை வரலாறு, நளவெண்பா, கலிங்கத்துப்பரணி, ராமலிங்கரின் 6ம் திருமுறை, புதுமைப்பித்தன், மௌனி, தி.ஜானகிராமன், ஆனந்த குமாரசாமியின் மற்றும் பாரதி புத்ரனின் கலை தொடர்பான புத்தகங்கள், சித்தர் பாடல்கள், பாரதி, தமிழை மக்களை நோக்கிச் செல்லும்படி எடுத்த முயற்சிகளான தேவாரம், திருவாசகம், நாலாயிரப் பிரபந்தம், பெரிய வாச்சான் பிள்ளை உரை, ஆண்டாள், ஆவுடை அக்கா, மகாபாரதம் கும்பகோணப் பதிப்பு, தமிழிசை குறித்த ராமனாதன் மற்றும் மம்முதுவின் நூல்கள், சி.சு.மணியின் சிவஞான மாபாடியம் புத்தகம், பைபிள், குர்ரான். அவ்வப்போது வருகிற படைப்பு மற்றும் தத்துவம் சார்ந்த திறனாய்வுகள்... போதும். இது என் மனநிலை சார்ந்த தேர்வு மட்டுமே, இப்போதைக்கு.

புத்தகப் பக்கங்களை மட்டுமே வாழ்நாள் முழுக்க வாசித்துக் கொண்டிருத்தல், மனதை ஊனமாக்கும் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது. புத்தகத்தை மூடினால் மனம் அல்லது உள்ளிருந்து ஏதோ ஒரு குரல் பேசத் தொடங்கும். அது நம்மைவிட நம்மை அதிகமாகத் தெரிந்து வைத்திருக்கும். அது பொய் சொல்லாது. புகழாது. நம் இருத்தலை மிகக் கச்சிதமாக அது உணர்த்தும்.

ஆக, புத்தகத்தை மூடி நம்மை நாம் வாசிக்கத் தொடங்குவோம்.

என் புத்தகங்கள், நண்பர்கள் கைகளுக்கு மாற மாற எனக்கு விட்டு விடுதலை ஆகிற உணர்வு ஏற்படுகிறது. நிம்மதி வந்தடைகிறது. என் கர்வம், என் உடமை உணர்வு என்னிடமிருந்து விடைபெறுகிறது. இழக்க இழக்க நான் நிரப்பப் பெறுகிறேன். என் தலைக்குப் பின்னால் சுற்றுவதாக நான் நினைத்திருக்கும் மேதை வட்டத்தை ஆடு தின்றுச் சென்றுவிட்டது, நீட்ஷே சொன்னதுபோல.

ஒரு ஜென் குருவிடம் ஒருவன் வந்தான். குருவிடம் தன் வாசிப்புப் பெருமையை நீட்டி முழக்கினான். வானத்தை முட்டும் அளவுக்கு தன் வாசிப்பை விளம்பிக் கொண்டிருந்தான். குரு, அவனைத் தேநீர் அருந்த அழைத்தார். இருவருக்கும் முன் இரு கோப்பைகள் வைக்கப்படுகின்றன.  மாணவன் கோப்பையில் குரு, தேநீரை ஊற்றிக்கொண்டே இருந்தார். தேநீர் கோப்பை நிரம்பி வழியத் தொடங்கியது.தரையில் சிந்தியது. மாணவன் பதறினான். ‘குருவே! கோப்பை நிறைந்துவிட்டது. நிறைந்து வழிந்துகொண்டும் இருக்கிறது. மேலும் மேலும் ஊற்றிக்கொண்டே இருந்தால், தேநீர்தானே நட்டமாகும்’ என்றான். குரு அமைதியாகச் சொன்னார்: ‘அதைத்தான்  நானும் சொல்கிறேன். வானத்தை முட்டும் புத்தகப் பக்கங்களை உன் கோப்பையில் நிரப்பித் திரிகிற உனக்கு, நான் என்ன வார்க்க முடியும். உன் கோப்பையைக் கொட்டி சுத்தம் செய்துவிட்டு வா...’

சுத்தம் செய்து கொண்டிருக்கிறேன்.
 பிரபஞ்சன்