செவ்வாய், 27 டிசம்பர், 2011

Sukumaran.Bharathimani

வாழிய நிலனே! --சுகுமாரன் உயிர்மையின் நூல் வெளியீட்டு விழா.

by Bharati Mani on Monday, December 26, 2011 at 7:02pm
டிசம்பர் 25-ம் தேதி உயிர்மை நூல் வெளியீட்டு விழாவில் சுகுமாரன் எழுதிய வாழிய நிலனே! கட்டுரைத்தொகுப்பை வெளியிட்டு நான் பேசியதன் சுருக்கம்:


வாழிய நிலனே!

முதலில்,  உயிர்மை பதிப்பகம் நேற்றும் இன்றும் வெளியிடும் புத்தகங்களின் ஆசிரியர்களுக்கும், 2012 சென்னை புத்தகச்சந்தைக்காக வெளியிடப்படும் எல்லா நூல்களின் ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுக்களும்! ’உயிர்மை’ பதிப்பாளர் மனுஷ்ய புத்திரன் வெளியிடும் எல்லா புத்தகங்களும் சந்தையிலேயே விற்றுத்தீர்ந்து பணமாகக்கொட்ட நான் வணங்கும் ஆண்டவன் அருள்வானாக!

நண்பர் சுகுமாரன் எழுதிய வாழிய நிலனே! புத்தகத்தை வெளியிட மனுஷ்ய புத்திரன் கேட்டபோது, ‘சார்! முக்கியமானவங்களையெல்லாம் கூப்பிட்டாச்சு. பிரபலங்கள் யாரும் இல்லே. அதனாலே உங்க பெயர் போட்டிருக்கேன்!’ என்று சொன்னபோது அதிலிருந்த உட்குத்து எனக்கும் புரிந்தது. அவர் என்னை நன்றாக தெரிந்துவைத்திருக்கிறார்! மனுஷ்ய புத்திரனுக்கு என் நன்றி!

’இந்தப்புத்தகம் நேற்றுத்தான் வந்தது….அதனால் படிக்கமுடியவில்லை’யென்று பொய் சொல்லி தப்பித்துக்கொள்ள நான் விரும்பவில்லை. இப்போதெல்லாம் வாசிக்கும் பழக்கம் அறவே நின்றுவிட்ட போதிலும், சுகுமாரனின் 29 சிறிய கட்டுரைகள் கொண்ட வாழிய நிலனே! புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். வாசிக்க வாசிக்க அவரது பரந்த ஆளுமை இந்தப்புத்தகத்தில் வெளிப்பட்டது. சுகுமாரன் எனக்கு… தூரத்து உறவினர் என்பது போல ‘தூரத்து நண்பர்’. பார்க்கும்போதெல்லாம் ‘வணக்கம்’ சொல்லியிருக்கிறேனே தவிர நெருங்கிப்பழகியதில்லை. மாறாத புன்சிரிப்புக்குப்பின் இவரைப்போன்ற அறிவுஜீவிகள்,  நெருங்கிப்பழகினால்,  ஒரே வார்த்தையால் நம்மை ஆயுசுக்கும் மறக்காத  சந்தோஷத்துக்கோ அல்லது ஒரே வார்த்தையில் எப்போதும் வலிக்கும் காயத்துக்கோ ஆளாக்கிவிடுவார்களென்ற தேவையற்ற பயம் எனக்குண்டு! மலையாளத்தில் சொன்னால் ’அயாள் ஒரு அமுக்கனாணு’ என்பது எனக்குப்புரிந்தது.

முதல் கட்டுரையிலேயே ‘ஒரு கலைப்படைப்பை ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு பெயர்ப்பதென்பது திருமணமான பெண்ணைக்காதலிப்பது போல. அதை அவள் கணவனின் நேரடி மேற்பார்வையில் செய்யமுடியாது!’ என்பது எனக்குப்பிடித்தமான வரி. ஒரு இடத்தில், ‘கவிதை வாசிப்பில் சிற்பி பாலசுப்பிரமணியம் ஒரு கவிதை வாசித்தார். அதில் கவிதை காற்பங்கு, சாதுரியம் முக்காற்பங்கு. இதை சிற்பியும் ஒப்புக்கொள்வார்’ என்று பூத்தாப்போலெ ஒரு வெடியை கொளுத்தி போட்டுவிட்டுப் போகிறார்.

இன்னொரு கட்டுரையில் அதிகம் பிரபலமாகாத புல்லாங்குழல் வித்வான் குடமாளூர் ஜனார்த்தனன் இவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, தியாகராஜர் ராமனைத்தேடி, நெக்குருக வேண்டிக்கொள்ளும் ஒரு கீர்த்தனைக்கு ஏன் நீண்ட ராக ஆலாபனை, விஸ்தாரமான நிரவல், ஸ்வரம்? என்று கேட்கும் கேள்விக்கு நம்மிடமும் பதில் இல்லை. அவரது இன்னொரு கேள்வி: ‘உலகத்தில் எங்காவது நூற்றுக்கணக்கான கலைஞர்கள் ஒரே சமயம் அபஸ்வரத்தில் பாடுவதைக்கேட்டிருக்கிறீர்களா?’ விடை தெரியாத சுகுமாரனுக்கு ஜனார்த்தனன் சிரிக்காமல் சொன்ன பதில்: ‘திருவையாறு ஆராதனை என்பது வேறு என்ன?’ அந்தக்கலைஞர் சொன்ன பொன்மொழி எனக்கும் பிடித்திருந்தது: “எவருடைய பாராட்டுக்கும் அல்லது குற்றச்சாட்டுக்கும் நான் அக்கறை காட்டுவதில்லை. என்னுடைய உணர்வுகளை மட்டுமே பின்தொடர்கிறேன்.”  புத்தகத்திலிருந்து இன்னொரு வரி: ‘பத்துக்கிணறுகள் ஒரு குளத்துக்கு சமம். பத்துக்குளங்கள் ஓர் ஏரிக்கு சமம். பத்து ஏரிகள் ஒரு மகனுக்கு சமம். பத்து மகன்கள் ஒரு மரத்துக்கு சமம்.”

’கடவுளில் நித்திரையான நாத்திகம்’ கட்டுரையில், ஒரு பசுவுக்கும் கொக்குக்குமான அழகான நட்பை விவரிக்கும்போது, அந்தப்பசுவுக்கு சொந்தக்காரர் பெயர் சோமன் என்றிருக்கிறது. இரண்டு பாரா தள்ளி அவர் சார்ங்கதரன் ஆகிறார். அதற்கடுத்த பாராவில் மீண்டும் சோமனாகவே மாறி பசுவை மேய்ச்சலுக்கு கொண்டுவருகிறார். இந்த செப்பிடுவித்தை சுகுமாரன் கட்டுரையில் ஏன்….எப்படி நிகழ்ந்தது?

இவரது கட்டுரைகளில், நிறைய Names Dropping ... பல பெயர்களை உதிர்த்துக்கொண்டே போகிறார். இளைய ராஜாவிலிருந்து, ஜாஃபர் பனாஹி, சியாட்டில் மூப்பன், ஞானபீட விருது பெற்ற ஓ.என்.வி. குறுப், ஷெஹ்ரியார், விர்ஜீனியா உல்ஃப், ஸல்மான் ருஷ்டி,  புற்றுநோயால் இறந்துபோன சூஸன் சாண்டக், கேளிக்கை கலைஞன் மைக்கெல் ஜாக்ஸன், பாப்லோ நெரூதா, சிறுமி ஜீனத், நோபல் பரிசு பெற்ற சீன எழுத்தாளர் காவ் ஜிங்ஜியானிலிருந்து கதகளி மகாபாரதக்கதை மூலம் விசித்திரமான பெயர் தேடிக்கொண்ட, இரண்டு காலும் இல்லாத ரயில் பிச்சைக்காரர் கலலன் வரை இவருக்கு கதைமாந்தர்கள். திருவனந்தபுரத்தில் பாளையம் பள்ளிவாசலுக்குப்போய், மாதவிக்குட்டி, கமலா தாஸ், கமலா சுரய்யா என்று பலபெயர் கொண்டவரின் சமாதியைத்தேடி பார்த்துவிட்டு வருகிறார்.

என்னை அறிந்தவர்கள் ‘ஸார்! உங்ககிட்டே அந்த ’வயோதிகக்குசும்பு’ கொஞ்சம் இருக்கு!’ என்று சொல்வார்கள். சுகுமாரனிடம் ’இளமைக்குசும்பு’ நிறையவே இருக்கிறது.

இவர் அசோக மித்திரனையும் விட்டுவைக்கவில்லை. நண்பர் தேவிபாரதியோடு, காலில் அடிபட்டு, சிகிச்சையிலிருந்த அசோக மித்திரனை அவர் வீட்டில் பார்க்கப்போகிறார். வாசலில் நின்று வரவேற்ற எழுத்தாளரிடம் பேசிவிட்டு விடைபெறும்போது, வழியனுப்ப வந்த அசோக மித்திரன் சொன்னார்: ‘ஒடம்பு சரியில்லாத ஒரு ஆளைப்பார்க்க வந்தா, அந்த ஆளே வாசல்லே  வரவேற்கிறது உங்களுக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும்……..ஸாரி!’ இப்படி யார் சொல்லமுடியும் அசோக மித்திரனைத்தவிர?

தில்லி சாகித்ய அகாதெமியின் கவியரங்கில் சந்தித்த மராத்தியக்கவிஞர் அருண் கொலாட்கர் மாதிரி தானும் ஒரு தான்தோன்றிக் கவிஞனாக இருக்கமுடியுமாவென்று ஏங்கியிருக்கிறார் சுகுமாரன். அங்கே சந்தித்த மூத்த அசாமியக்கவிஞர் ஹிரேன் பட்டாச்சார்யா இவரிடம் கேள்வி கேட்கிறார்: ‘நீ எந்த மொழியில் எழுதுகிறாய்?.... தமிழில்……சரி!..... அதை எவனாவது படிக்கிறானா? ....தெரியாது!.....உனக்கு எத்தனை வாசகர்கள் இருக்கிறார்களென்று தெரியாமல், நீ யாருக்காக எழுதுகிறாய்?’ என்று கேட்டுவிட்டு, சுகுமாரன் கவிதைகளின் ஹிந்தி மொழிபெயர்ப்பை சிலாகித்து படித்துப்பார்த்துவிட்டு, ‘அரே பையா! உனக்கு நிச்சயம் மூன்று வாசகர்கள் இருக்கிறார்கள்…….. உறுதி……. ஒன்று…நீ………இரண்டாவது உன் மனைவி………மூன்றாவது அசாமியக்கவிஞனான ஹிரேன் பட்டாச்சார்யா!’ என்று கூறி இவரை ஆரத்தழுவிக்கொள்கிறார். அதோடு விடவில்லை…. இந்தக்குசும்பன். ’அந்தக்கிழவர் நெருக்கத்தில் வந்தபோது, முந்தியநாள் அருந்திய மதுவின் நெடியும், சற்றுமுன் புகைத்த சாக்லேட் புகையிலையின் மணமும் என் மூக்கில் பரவியது!’ என்று முடிக்கிறார்! ஹிரேன் தாவும் என்னைப்போல் பைப் பிடிக்கும் நல்ல பழக்கத்தை வைத்திருந்தார்!

கட்டுரைகளில், இவரைத்தொடர்ந்து பயணித்தால் மட்டுமே, அவர் என்ன சொல்ல விழைகிறார் என்பது புலப்படும்.

அடூர் கோபாலகிருஷ்ணன் பற்றிய ஒரு கட்டுரையில், அவர் நடிகர்களின் ‘உடல் மொழி’க்கு கொடுக்கும் முக்கியத்தை விளக்கியிருப்பார். ‘நிழல் குத்து’ படப்பிடிப்பின்போது, காந்தி வழியில் வந்த முத்துவாக பாத்திரமேற்ற நடிகர் நரேனை, சரியான உடல் மொழிக்காக, பத்து நாட்கள் தொடர்ந்து சர்க்காவில் நூல் நூற்க பயிற்சியளித்தாராம்! இவ்வளவுக்கும் படத்தில் இந்தக்காட்சி இடம்பெறவில்லை. அடூரிடம் இதைப்பற்றி கேட்டதற்கு, ‘ராட்டை நூற்கும்போதுள்ள  உடல்மொழி….அதை வேறு எப்படித்தான் கொண்டு வருவது?’ நாடக நடிகனான எனக்கும் உடல்மொழி முக்கியம். பல தமிழ்ப்படங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம்…..ஷாட்டுக்கு முன்னால், கதாநாயகன் கையில் ஒரு வயலினை திணித்து வாசிக்கச்சொன்னால், நளினமாக வலதுகை மூன்று விரல்களால் வில்லை பிடிப்பதற்கு பதிலாக, ஏதோ திருப்பாச்சி அருவாளை சாணை தீட்டுவதுபோல ஐந்து விரல்களாலும் அழுந்தப்பிடித்து, வயலின் குறுக்காக – கிச்சுக்கிச்சு தாம்பாளமாக -- ஒரே சீரில் அறுப்பார்கள். ஆனால் பின்னணியில் லால்குடி ஜெயராமன் வாசித்த வசந்தபைரவி சுநாதமாக காதில் விழும்! இதுவாவது பரவாயில்லை….சில சமயங்களில் Interlude-ல் நம் ஹீரோ திரையில் அறுக்கும் வயலினுக்கு பின்னணியில் ஸிதார் ஒலி கேட்கும்! வயலினுக்கும் சித்தாருக்கும் வித்யாசம் தெரியாத இயக்குநர் திலகங்கள்!.........ஒரு பழைய படத்தில் எம்.ஆர். ராதா கடம் வாசிப்பார்……ஆனால் திரையில் நாம் கேட்பது மிருதங்க ஒலி! என்ன கொடுமை……..சரவணா!

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்! ஆனால் என் பேச்சை நிறுத்துமாறு சீட்டு வருவதற்குமுன், நான் முடித்தாகவேண்டும்.

சுகுமாரனின் வாழிய நிலனே! புத்தகத்தில் நிறைய விஷயங்கள் புதைந்திருக்கின்றன. நான் படித்து ரசித்தேன். நீங்களும் அவசியம் படியுங்கள்.

நன்றி……வணக்கம்! 

பாரதி மணி 
25 டிசம்பர், 2011.