வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

தனுமை. வண்ணதாசன். சிறுகதைகளில் ஒரு வால்நட்சத்திரம்.

 


Jul 14, 2010

தனுமை - வண்ணதாசன்

இதில்தான் தனு போகிறாள்.
பஸ் பழையதுதான். ஆனாலும் காலனி வரைக்கும் போக ஆரம்பித்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன. தகரம் படபடவென அதிர ஞாயிற்றுக்கிழமை காலை, முதல் முறையாக வெள்ளோட்டம் சென்றது. இந்தப் புதிய மில்காலனியின் அதிகாரிகள் உள்ளே சிரித்துக் கொண்டிருந்தனர். ஞானப்பனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. பஸ் கக்கிவிட்டுப் போன புகை கலைந்து பாதையை விழுங்கும்போது உடைமரங்களுக்கும் தேரி மணலுக்கும் மத்தியில் மடமடவென உருவாகிவிட்ட இந்தக் காலனியிடம் தன் சம்பந்தத்தை அவன் இழந்து போனதாகவே தோன்றியது. தனு அங்கேயே vdaவீட்டுப்பக்கம் ஏறிக்கொள்வாள், இறங்கிக்கொள்வாள்.
ஒரு வகையில் மகிழ்ச்சி. தன்னுடைய பலகீனமான காலை இழுத்து இழுத்து, ஒரு அழகான சோகமாக அவள் இத்தனை தூரமும் நடந்து வர வேண்டும். முன்புபோல் இவனுடைய காலேஜ் வாசலோடு நின்று போகிற டவுன் பஸ்ஸிற்காக, அவளுடைய குறையின் தாழ்வுடன் எல்லோருடனும் காத்திருக்க வேண்டாம். இனிமேல் நேருக்கு நேர் பார்க்க முடியாது.
இந்த ஆர்பனேஜ் மர நிழல்களுக்குக் கையில் புஸ்தகத்துடன் ஞானப்பன் இனி வர வேண்டிய அவசியமில்லை. பழையபடி தெற்கே தள்ளி, உடைமரக் காடுகளுக்குள்ளே போய் விடலாம். எங்கே பார்த்தாலும் மணல், எங்கே பார்த்தாலும் முள். விசுக் விசுக்கென்று ‘சில்லாட்டான்’ ஓடும். அல்லது பருத்து வளர்ந்து ஓணான் ஆகத் தலையாட்டும். ஆளற்ற தனிமையில் அஸ்தமவானம் கீழிறங்கிச் சிவக்கும். லட்சக்கணக்கான மனிதர்கள் புதையுண்டதுபோல் கைவைத்த இடமெல்லாம் எலும்பு முள்ளும் முண்டுமாக அகப்படும். கருக்கு மட்டையை வேலியாக நட்டு, உள்ளே போட்டிருக்கிற குடிசையிலிருந்து கருப்பட்டி காய்ச்சுகிற வாடை வரும். கோழி மேயும். நத்தைக்கூடுகள் நெல்லிகாய் நெல்லிக்காயாக அப்பி இருக்கிற முள்ளை வெட்டி இழுத்துக்கொண்டு போகிறவளின் உடம்பு, பாடத்தை விட்டு விலக்கும். பலதடவை பேச்சுக் கொடுத்தபிறகு சிரிக்கிறதற்கு மட்டும் தழைந்திருந்த ஒருத்தியின் கருத்த கொலுசுக் கால்கள் மண்ணை அரக்கி அரக்கி நடக்கும்.
நடக்க முடியாமல் நடக்கிற தனுவுக்கு ஆர்பனேஜின் வழியாகக் குறுக்காகச் சென்றால் பஸ் நிற்கிற காலேஜ் வாசலுக்குப் போய்விடலாம் என்பது தாமதமாகத்தான் தெரிந்திருக்கும். அவள் பெயர் தெரிந்தது அன்றுதான். ’தனு! இந்த வழியாப் போயிரலாமாடி?’ என்று எப்போதும் கூடச்செல்கிற பையன் காட்டினான். அவள் தம்பி, யூனிபாரம் அணிந்த அவளின் சின்ன வழித்துணை.
ஞானப்பன் யதேச்சையாக அன்று ஆர்பனேஜிற்குப் படிக்க வந்திருந்தான். படித்து முடித்துவிட்டு ஹாஸ்டலுக்குத் திரும்புகிற வேளையில் பீடி தேவையாக இருந்தது. கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்தான். சின்ன வேப்பங்கன்றுக்குக் கீழே டயர் போட்ட மொட்டைவண்டியின் நோக்காலில் ’உட்கார்ந்து, பள்ளிக்கூடக்கட்டிடத்திற்கு முன்னால் உள்ள கொடிக்கம்பத்தைப் பார்ப்பது போல் பார்வை.
வட்டமாகக் குறுக்குச் செங்கல் பதித்து உள்ள பீநாறிப்பூச்செடி நட்டிருந்தார்கள். அந்த பூவும் செடியும் அவனுடைய ஊருக்கு இறங்க வேண்டிய ரயில்வே ஸ்டேஷனிலும் சிறு வயதிலிருந்து உண்டு. கல் வாழைகள் அப்போது வந்திருக்கவில்லை. ஊர் ஞாபகம், இரவில் இறங்குகையில் நிலா வெளிச்சத்தில் கோடாக மினுங்குகிற குளிர்ந்த தண்டவாளம், லாந்தல் சத்திரம், மினுக்கட்டாம் பூச்சிகள் எல்லாம் ஒவ்வொரு பூவிலும் தெரிந்துகொண்டிருந்த போதுதான் - ‘தனு! இந்த வழியாப் போயிரலாமாடி?’ என்ற சத்தம்.
கைலியை இறக்கிவிட்டுக்கொண்டு, நோக்காலில் இருந்து இறங்கினான். இறுகிக் கட்டின போச்சக்கயிறு கீச்சென்று முனகியது. தொழுவங்களில் மூங்கில் தடியினால் தண்டயம் போட்டிருப்பது போல வண்டி போகவர மட்டுமே புழங்குகிற அந்தத் தடுப்புக்கு அப்புறம் தனுவும் அவள் தம்பியும் நின்று கொண்டிருக்கிறார்கள். தம்பி சடக்கென்று காலைத் தவ்வலாகப் போட்டுக் குனிந்து உட்பக்கம் வந்துவிட, ஒரே ஒரு வினாடி அவள் விசாலமான தனிமையில் நின்றாள். பின்னால் பொருத்தமற்ற பின்னணியாய்ப் பாலையான மணல்விரிப்பும், உடைமரங்களும், உடைமரம் பூத்ததுபோல மெல்லிசான மணமாக இவள், தனு.
ஞானப்பன் ஒரு ராஜவாயிலைத் திறப்பதுபோல மென்மையாக மூங்கிலை உருவி, அவளை வரவிட்டு ஒதுங்கினான். உள் ஒடுங்கின, பரபரப்பில் மூங்கில் தவறி மண்ணில் இறங்கி கரையான்கள் உதிர்ந்தன. தனுவின் தம்பி ‘தாங்ஸ்’ - சொன்னான். தனு ‘உஸ்’ என்று அவனை அடக்கி இழுத்துப்போனாள். ஒரு சிறுமியைப்போல மெலிந்திருந்த தனு தூரம் போகப்போக நேர்கோடாக ஆரம்பிக்கும் ஆர்பனேஜின் முன்பக்கத்து இரண்டு ஓரச்செடிகளின் சினியா மலர்களின் சோகைச் சிவப்புக்கும் கேந்தியின் மஞ்சளுக்கும் முதல் முதலாக உயிர் வந்தன. அழகாகப் பட்டன.
எதிரே டெய்ஸி வாத்திச்சி வந்துகொண்டிருந்தாள். கன்னங்களில் பருவில்லாமல் இருந்ததால் அவளுக்கு இந்த மதமதப்பு இருக்காது. கல்யாணம் ஆகாததால் மீறி நிற்கிற உடம்பு. ஒரு கறுப்புக்குதிரை மாதிரி, நுணுக்கமான வீச்சுடன் அவள் பார்த்துவிட்டுச் செல்லும்போது ஞானப்பனுக்கு உடம்பு அதிரும். இன்று குறைவாக, இவனைப்போல இங்கே படிக்க வருகிற வேறு சிலருக்கும் அவளுடைய திரேகத்தின் முறுக்கம் ரசித்தது.
ஞானப்பனுக்கு தனுவின் நினைவு மாத்திரம் ஒரு நீர்ப்பூவைப் போல அலம்பி அலம்பி அவள் முகம் நிற்க மற்றவையெல்லாம் நீரோட்டத்தோடு விரைந்து ஒதுங்கின. டெய்ஸி வாத்திச்சி நதியில் மிதந்த செம்பருத்திப் பூவாய், அள்ளுகிற குடத்தில் புகுந்துவிட, விரலை முட்டி முட்டி விலகிக் கொண்டிருக்கிறாள். அவளைப் போன வருஷத்தில் இருந்தே அவனுக்குத் தெரியும்.
ஒரு டிசம்பர் மாதம். ஹார்மோனியம் நடைவண்டி நடையாகக் கேட்டது. பத்துப் பதினைந்து பையன்களின் கூச்சலுக்கு மத்தியில் ஒரு பையன் கொஞ்சம் துணிச்சலாக ஒவ்வொரு பல்லாக அழுத்திக் கொண்டிருந்தான். இடம் ஆரம்பித்து வலம். கண்டமத்தியில் ஆரம்பித்த இடம். இதற்குள் துருத்தியை அமுக்குகிற விரல் மறந்திருக்கும்.ங்ர்ர் என்று பெட்டி கம்மும்போது ஒரு சிரிப்பு. ஞானப்பன் போய் நின்றான். பையன்கள் விலகினார்கள்.
ஞானப்பன் சிரித்தான். அவன் கைப்பழக்கமாக வாசிப்பான். சினிமா பாட்டுவரை. ‘படிங்க சார், படிங்க சார்’ என்று குரல்கள். “என்ன பாட்டுடே படிக்க?” என்று கேட்டுக்கொண்டே அவன் ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்று தொய்வாக வாசித்து நிறுத்திவிட்டுக் கேட்டான், “என்ன பாட்டு சொல்லுங்க பார்க்கலாம்?”
“எனக்குத் தெரியும்”
“நாஞ் சொல்லுதேன் ஸார்”
“இந்த நல் உணவை’ - பாட்டு ஸார்”
ஞானப்பனுக்கு கடைசிப் பையன் சொன்னதைக் கேட்டதும் திக்கென்றது. “இந்த நல்உணவைத் தந்த நம் இறைவனை வணங்குவோம்” என்று காலையில் அலுமினியத் தட்டும் தம்ளருமாக உட்கார்ந்து கொண்டு, கோதுமை உப்புமாவுக்கும் மக்காச்சோளக் கஞ்சிக்கும் எதிர்பார்த்துப் பாடுகிற ஒரு தாங்க முடியாத காட்சி தெரிந்தது. அனாதைகளை மேலும் மேலும் அனாதைப்படுத்துகிற அந்தப் பாடலை இவன் வாசிப்பில் உடனடியாக உணர்ந்த பையனின் உயிரும் ஜீவனுமற்ற முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.
ஞானப்பனுக்கு வேறு எந்த கிறிஸ்தவ கீதங்களும் நினைவுக்கு வரவில்லை. எல்லா கிறிஸ்தவ கீதங்களும் ஒரே ராக வடிவுதான் என்ற நினைப்பை அவனுக்கு உண்டாக்கின. “எல்லாம் ஏசுவே எனக்கெல்லாம் ஏசுவே” பாடலின் முதலிரு வரிகளின் தடத்தையே மீண்டும் மீண்டும் வாசித்தான். பையன்கள் அடுத்த வரிகளைப் பாடினபோது அவனுக்குச் சிலிர்த்தது.
அந்த ஆர்பனேஜின் அத்தனை வேப்பம்பூக்களும் பாடுவதுபோல - வரிசையாக டவுனுக்குள்ளிருக்கிற சர்ச்சுக்குப்போய் வருகிறவர்களின் புழுதிக்கால்களின் பின்னணிபோல -
பால் மாவு டப்பாக்களில் தண்ணீர் மொண்டு மொண்டு வரிசையாகத் தோட்டவேலை செய்கிறவர்கள் பாடுவதுபோல -
வாரத்துக்கு ஒரு நாள் வருகிற கிழட்டு நாவிதனுக்குத் தன் பிடரியைக் குனிந்து, முகம் தெரியா அம்மாவின் முகம் நினைத்து அழுதுகொண்டிருக்கிற பையனின் சோகம்போல -
எந்தச் சத்துக்குறைவாலோ ‘ஒட்டுவாரொட்டி’யாக எல்லாப் பையன்கள் கைகளிலும் வருகிற அழுகுணிச் சிரங்கிற்கான பிரார்த்தனைபோல -
கிணற்றடியில் உப்புநீரை இறைத்து இறைத்து ட்ரவுசரைக் கழற்றி வைத்துவிட்டு அம்மணமாகக் குளிக்கிற முகங்களில் எழுதப்பட்டிருக்கிற அழுத்தமான நிராதரவின் குரல்போல -
இரண்டு பைசா ஒன்று பள்ளிக்கூடத்துக் கிணற்றில் விழுந்துவிட, அசுரத்தனமாகத் தண்ணீரை இறைத்து இறைத்து ஏமாந்து கொண்டிருந்த சிறுவர்களின் பம்பரக்கனவுகள் போல....
ஞானப்பன் மேலே வாசிக்க ஓடாமல் நிமிர்ந்தபோது, டெய்ஸி வாத்திச்சி வாசலில் நின்று கொண்டிருந்தாள். பையன்கள் கலைந்து நகர்ந்தார்கள். இவனின் வாசிப்பைப் பாராட்டினாள். வாசலில் கையூன்றிச் சிரித்தாள்.
ஞானப்பனுக்கு ஒரேயடியாக அந்த இடத்தில் அவளை அடித்துத் தள்ளவேண்டும் என்று தோன்றியது.
டெய்ஸி வாத்திச்சியின் பார்வையைப் போலவே, சைக்கிளில் போகிற ஒரு இங்கிலீஷ்காரப் பெண்ணையும் ஞானப்பன் சகித்துக் கொள்ள வேண்டியதிருந்தது. அவளை அநேகமாக லீவு நாட்களில் காலையிலேயே இரண்டு தடவை பார்த்துவிடலாம்.
முதல் ஷிப்டு வேலைக்காகக் கையில் தூக்குச் சட்டியைக் கோத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் போகிற ஜனங்கள். பதநீர் குடிக்கிறவர்கள். முதல் சங்கு ஊதின பிறகு அவசரம் அவசரமாக வடையை ஊறுகாய்த் தடையை வாங்கிக்கொண்டு போகிறவர்கள். இராத்திரி ஷிப்ட் முடிந்து பஞ்சும் தலையுமாக டீக்கடையில் பேப்பர் படிப்பவர்கள்; அவர்களின் சைக்கிளில் தொங்குகிற தூக்குச் சட்டிகள்; இவர்களுக்கு மத்தியில் இந்தப் பெண்ணின் குடும்பமே சைக்கிளில் சர்ச்சுக்குப் போகும். அப்பா, அம்மா எல்லாருமே ஒவ்வொரு சைக்கிளில். ஒரு பள்ளிக்கூடப் பெண்ணின் அமைப்புஅலை மீறின அவளுடைய பாரமான உடம்பும் பெருந்தொடையும் பிதுங்க அவள் செல்லும் போதெல்லாம், அவன் அநாவசியமான ஒரு அருவருப்பையடைய நேர்ந்திருக்கிறது.
கொஞ்ச நேரத்தில் இதையெல்லாம் கழுவி விடுவதுபோல் தனு வருவாள். அந்த தனுவை இனிமேல் ஜாஸ்தி பார்க்க முடியாது. மறுபடியும் சிகரெட்டிலிருந்து பீடிக்கு மாறி கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு அலைய வேண்டியதுதான். ஆர்பனேஜ், தனுவின் ஒரு காலத்துப் பாதையாக இருந்தது என்பதால், இங்கு வராமலும் இனி முடியாது. இதற்கு மத்தியில் எதைப் படிக்க?
ஒரு தகர டின்னில், வரிசையாக நிற்கிற வேப்பமரங்களின் பழம் உதிர உதிரப் பொறுக்குகிற பையன்களைக் கூப்பிட்டால் பேசப்போவதில்லை. அவர்களுக்கு ஃபுட்பால் கோல்போஸ்டின் அடையாளமாக நிறுத்தியிருக்கிற பனங்கட்டையில் இருந்துகொண்டு காகங்கள் இரண்டு மூன்றான கொத்தாக இட்ட வேப்பங்கொட்டை எச்சத்தைச் சேகரிக்கிற சந்தோஷம் இவனுடன் பேசுவதில் இருக்காது.
பக்கத்தில், ஊடுசுவருக்கு அந்தப்புறம் கொட்டகைகளில் எரிகிற பிணங்களுக்கும் மண்டுகிற புகைக்கும் சலனமடையாமல், உப்புப் பொதிந்து சிதிலமாகிக் கிடக்கிற மையவாடிக்கு மத்தியில் காடாக வளர்ந்த எருக்கலஞ்செடிகளில் போய் வண்ணத்துப்பூச்சியின் முட்டையும் புழுவும் எடுத்துக்கொண்டிருக்கிற இவர்களிடையில், தனுவும் விலகினபின், எந்த அமைதியில் படிக்க?
மற்ற பையன்களுடன் சேர்ந்து உட்கார்வதுகூட முடியவில்லை. குப்பைக் குழிகளுக்கும் ‘ஐயா’க்களுக்குமான கக்கூஸ்களை ஒட்டிய பகுதிகளிலேயே க்ரா, க்ரா என்று தொண்டையைக் காட்டித் திரிகிற தாராக் கோழிகளை, போவ், போவ், என்று முன்னைப் போலக் கூப்பிடவும் தோன்றவில்லை. ‘ஐயா’க்களைப் போல எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கிவிட்டால் போதும் என ஞானப்பனுக்குத் தோன்றியது. அவன் வகுப்பில், கல்லூரியில் இதேபோல வெள்ளை முழுக்கைச் சட்டை, வேஷ்டியுடன் இங்கேயிருந்து படிக்கிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் அனாதைகள் தானா? தனுக்குள் எதிர்ப்படாமல் இருந்த பொழுதைவிடத் தான் இப்போது அனாதையா? ஞானப்பனுக்கு மனதுள் குமைந்து வந்தது.
ஊருக்குப் போக வேண்டும் போலத் தோன்றியது. வயலும் வரப்புமாக விழுந்து கிடக்கிற அப்பாவின் வம்சவாடையை உடம்பில் ஏந்தியிருக்கிற தன்னிடம், நெற்றியில் எலுமிச்சங்காய் அளவு புடைத்திருக்கிற ‘கழலை’ அசையச் சில சமயம் சந்தோஷமாகப் படிப்பு பற்றி விசாரிப்பதும், ‘படிச்சுப் பாட்டத் தொலைச்ச’ என்று அலுத்துக் கொள்வதும் முகம் முகமாகத் தெரிந்தது. எல்லா முகத்திலும் மிஞ்சித் தனி முகமாகி.. தனு முகமாகி...
உருண்டு வந்து கால் பக்கம் விழுந்த பந்தை எடுப்பதற்கு வந்த பையனைத் தடுத்து, பந்தோடு மைதான விளிம்புக்கு வந்து உதைத்தபோது, அது தூரமில்லாமல் உயரமாக எவ்வி, நீலத்தை அண்ணாந்து பார்க்க வைத்துக் கீழிறங்கியது. கீழிறங்கின பின்னும் ஞானப்பனுக்குப் பார்வை நீலமாக நின்றது.
நீலப்பூ. புத்தகங்களுக்கிடையில் வைத்துப் பாடம் பண்ணின நீலமான பூ. சிவப்பான இருந்து ஒரு வேளை நீலமாகிப்போன பூ- அல்லது வெளிறல் மழுங்கி நீலம் கறுத்த பூவொன்று வழியில் கிடக்க, ஞானப்பன் எந்தவிதத் தடயமும் இன்றி அது அவள் உதிர்த்த பூ என மனதில் உறுதி செய்து வைத்திருக்கிறான். அவனுக்கே தெரியும், அந்தப் பூ ஆர்பனேஜ் எல்லைக்குள் ஒதுக்கமாய் முன்பு இருந்து இப்போது இடிந்து தகர்ந்துபோன சர்ச்சின் பின்னால் வளர்ந்திருக்கிற கொடியின் பூ. ஆனாலும் தனு உதிர்த்த பூ.
இடிந்த சர்ச்சின் சுவர்கள் ஞானப்பனுக்கு ஞாபகம் வந்தது. இந்த ஆர்பனேஜ் ஆண்களுக்கு மட்டுமானது என்பதன் அடிப்படையில் எழுதப்பட்ட கொச்சைகள், பெயர்கள், கெட்ட வார்த்தைகள் எல்லாம் கருப்பாகச் சுவரில் சிந்தியிருக்கும். இவன் பார்வையில் இவனுடன் படிக்கிறவர்கள்கூட அதில் புதிதாக எழுதிய கரிப்படங்களும் வரிகளும் உண்டு. டெய்ஸி வாத்திச்சிகூட அப்படியொரு வரிகளில் ஒன்றாக, வேண்டுமென்றே செய்யப்பட்ட எழுத்துப்பிழைகளுடன் சுவரில் அறையப்பட்டிருக்கிறாள்.
புத்தகத்துக்கிடையில் நீலப்பூவைத் தகடாக மலர்த்திப் பார்த்தபடி மூடினான். படிக்க வேண்டும். வேகமாக நிழல் பம்மிக் கொண்டிருந்தது. கிணற்றடியில் முகத்தை அலம்பி, பள்ளிக்கூடத்துப் பின்பக்க வராண்டாச் சுவரில் சாய்ந்துகொண்டு வாய்விட்டுப் படிக்க ஆரம்பித்தான். மற்ற அமைதியிலிருந்து மீள அவனுக்குச் சத்தம் தேவையாக இருந்தது.
பெரிய ஐயாவுடைய தாராக்கோழிகளின் கேவல் விட்டு விட்டு மங்கியது. மைதானத்துப் பிள்ளைகளின் இரைச்சல் தூரத்துக்குப் போனது. ஒட்டுச்சார்ப்பில் எந்தப் பக்கத்தில் இருந்தோ ஒரு புறா குதுகுதுத்துக் கொண்டிருந்தது. காலனியில் புதிதாக வந்திருக்கிற பிள்ளையார் கோவில் மணி அமுங்கிக் கேட்டது. பக்கத்து ஸ்பின்னிங் மில் ஓடுகிற மூச்சு ரொம்பத் தள்ளி இரைந்தது.
மழை வருமா என்ன?
சென்ற மழைக்காலம் அடர்த்தியாக இருந்தது. வானம் நினைத்துக் கொண்டபோதெல்லாம் மழை. அநேகமாக மாலை தோறும், கருக்கலுக்கு முன்னாலேயே ஹாஸ்டலில் விளக்கெரியும். அடைந்து கொண்டிருக்க முடியாமல் ஞானப்பன் வெளியே அப்போதுதான் வந்திருப்பான். மழை விழுந்தது. திரும்ப முடியாமல் வலுத்து அறைந்தது. மண்ணும் சூடுமாக ஒரு நிமிஷம் வாசனை நெஞ்சையடைத்தது. பனைமரங்கள் ஒரு பக்கமாக நனைந்து கன்னங்கருப்பாயின. பன்றிகள் மசமசவென்று அலைந்தன. அவுரிச்செடி சந்தனத்தெளிப்பாகப் பூத்து மினுங்கியது.
ஞானப்பன் ஆர்பனேஜ் வாசலுக்குள் ஓடி, வாசல் பக்கத்து மரத்தடியில் நின்றான். பின்னும் நனைந்தது. முன்கட்டிடத்துக்கு ஓடினான். புறத்தே வகுப்புகள் இருப்பது போல இவைகளிலும் இருந்தன. ஆறு முதல் எட்டு, உள்ளே ஏறின பிறகு தெரிந்தது. டெய்ஸி வாத்திச்சியும் நின்று கொண்டிருந்தாள். புடவைத்தலைப்பை முக்காடாக இழுத்து ஓரத்தைப் பல்லிடுக்கில் கவ்வினபடி, நனைவதற்கு முன்பு வந்திருக்க வேண்டும்.
ஒரு வெள்ளாட்டுக்குட்டி சுவரோரமாக ஒண்டி, ரஸ்தாப் பக்கமாய்த் தலைதிருப்பி நின்றது. கீழே புழுக்கை, காவல்கார வயசாளி குப்பைவாளியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு துவண்டதுபோல் மடங்கிப் புகைத்துக் கொண்டிருந்தான். டெய்ஸி வாத்திச்சி கொஞ்சமும் அசையாமல் நின்றாள். வெளியே காம்பவுண்டுக்கு அப்புறம் பார்வையைத் தொலைத்துவிட்டு வெறுமனே நின்றாள். வெளியே பெய்கிற கனத்த மழை அவளை அவளின் சுபாவங்களிலிருந்து விலக்கிக் கட்டிப் போட்டிருந்தது. டெய்ஸி வாத்திச்சி, மெல்லிய திரைக்கு அப்புறம் தெரிகிறதுபோல துல்லியமான ஒரு புதிய வடிவில் இருந்தாள்.
ரஸ்தாவில் ஓடத்தைப் போல தண்ணீரைச் சுருட்டி எறிந்தபடி பஸ் வந்து நின்றது. சார்ப்புகள் போட்டு மூடின பஸ் டாப்பின் பக்கவாட்டு ஓடைகளிலிருந்து குலுங்கித் தண்ணீர் கொட்டியது. பஸ் திரும்பி நின்றதும் டெய்ஸி வாத்திச்சி அவசரமாக ஓடினாள். ‘தனுவைப் போல் அல்லாமல் முதிர்ந்து முற்றலாக இருக்கிற டெய்ஸி வாத்திச்சி இவ்வளவு புறக்கணிப்பாகக்கூட நின்று செல்ல முடியுமா?’ - ஞானப்பனுக்கு யோசனை. சிறு குரலில் ஆட்டுக் குட்டி கத்திய படி, சுவரில் ஏறி நின்றது.
தனுவின் கல்லூரியில் இருந்து புறப்படுகிற காலேஜ் டூ காலேஜ் பஸ் வர நேரம் உண்டு. மழையினால் பிந்தி வரலாம். காலனியில் இருந்து இரண்டு மூன்று அம்மாக்கள் அலுமினியப் பெட்டி சுமந்து இறங்குகிற குழந்தைகளைக் கூட்டிப் போகக் குடையுடன் நின்று கொண்டிருந்தார்கள். காலேஜ் வாசல் பக்கம் காலையில் பதநீர் விற்ற பனையோலைப்பட்டைகள் மேலும் நனைந்து பச்சையான குவியலாகக் கிடந்தன.
மஞ்சள் ஆட்டோக்கள் ஈரமான ரோட்டைச் சிலுப்பிக் கொண்டு காலனிப் பக்கம் சீறின. உள்ளே இருக்கிற குழந்தைகள் கையை அசைக்க ஞானப்பன் சிரித்துப் பதிலுக்கு அசைத்து, காலேஜின் இரண்டாவது வாசலுக்கு நடந்தான். ஹாஸ்டலின் வாசலில் தையல்காரன் மெஷினோடு நிற்பது தெரிந்தது.
மில் ஓடுகிறது மாத்திரம் நன்றாகக் கேட்டது.
புஸ்தகத்துக்குள் அமிழ்ந்து மௌனமாக வாசிக்கும்போது, மௌனம் இளகி ஓடி அலையலையாகி, மத்தியில் தனு அலம்பி அலம்பி நின்றாள்.
ஒரே வரியில் வழுக்கு மரம் ஏறின வெறும் வாசிப்பை மறுபடியும் ஆரம்பித்தபொழுது, வராண்டாவில் ஏறி டெய்ஸி வாத்திச்சி உள்ளே வந்தாள். ‘படிப்பு நடக்கிறதா’ என்பதாகச் சிரித்தாள். ‘குடையை வச்சுட்டுப் போய்ட்டேஎன்’ - செருப்பைக் கழற்றிப் போட்டபடி சொன்னாள். செருப்பில் விரல்கள் வழுவழுவென ஆழமாகப் பதிந்திருந்தன. பூட்டைத் திறந்து, வாசலுக்கு இடதுபுறம் இருக்கிற ஜன்னலில் கைக்குட்டைக்கு பாரம் வைத்ததுபோல் பூட்டும் சாவியும் இருக்க உட்சென்றாள். கையில் குடையோடு ஞானப்பனை பார்த்துக் கேட்டாள்.
“நாற்காலி வேணுமா?”
“இல்லை வேண்டாம். நேரமாச்சு. போக வேண்டியதுதான்.”
கவனமாகப் பூட்டை இழுத்துப் பார்த்தாள். கைக்குட்டை கீழே விழுந்திருந்தது.
“நேரமாயிட்டுதுண்ணா லைட்டைப் போட்டுக்கிறது” - கைக்குட்டையை எடுத்து மூக்கை ஸ்விட்சைக் காட்டிச் சுளித்தாள். கால் செருப்பைத் தேடி நுழைத்துக் கொண்டிருந்தது.
“இல்லை. வேண்டாம்” - ஞானப்பன் புஸ்தகத்தை நீவினபடி அவளைப் பார்த்தான்.
“தனலெட்சுமிதான் வேணுமாக்கும்” - ஒரு அடி முன்னால் வந்து, சடக்கென்று இழுத்துச் சாத்தியதுபோல் ஞானப்பனை அணைத்து இறுக்கிவிட்டு இறங்கி நடந்தாள்.
இருட்டும் வெளிச்சமுமாகக் கிடந்த ஆர்பனேஜ் ஞானப்பன் எட்டிப் பார்க்கையில் தடதடவென்று அந்த பஸ் இரைந்துகொண்டே போனது.
ஸ்டாப் இல்லாவிட்டால்கூட, டெய்ஸி வாத்திச்சி வழியிலேயே கையைக் காட்டி நிறுத்தி நிச்சயம் ஏறிக்கொள்வாள்.

தட்டச்சு : சென்ஷி

12 comments:

  1. நான் வாசித்த வண்ணதாசனின் சிறுகதைகளில் மிகச்சிறந்த கதை தனுமை..

    Reply
  2. go to feedburner.com and place email subscription in your blog

    Reply
  3. எப்படி தச்ச நல்லுருக்கும், தாளையூதுக்கும், ரஸ்தாவிர்க்கும், ராமையன் பட்டிக்கும் எத்தனை முறை சென்றாலும் அலுக்காதோ, சலிப்பு தட்டாதோ அதே போல வண்ணதாசனின் இந்த கதை எத்ததை முறை வாசித்தாலும் சலிக்காது.

    Many thanks for sharing

    Reply
  4. சுஜாதாவின் தனிமை கொண்டு கதையையும் போடுங்களேன்.

    Reply
  5. i have a doubt ram...did u place the email subscription box in your blog after i told you or did u place it already? i have this doubt...

    Reply
  6. I added email subscription after ur suggestion only.Your suggestions are very useful. Thanks Mr. d .

    Reply
  7. subject: create page navi bar at the bottom of ur blog instead of older and newer posts.

    hi,

    see my model blog here http://thandapayal.blogspot.com/

    in this blog see at the bottom. u can see a page navi bar with scrolling menu. create as like this in ur blog too. it will be helpful to choose any page easily. if not we have to click older and newer posts every time.

    follow steps here in this site http://www.abu-farhan.com/2009/12/beautiful-new-page-navi-for-blogger/

    NOTE:

    (after finishing step 1 and step 2 u should click save template. then proceed to step 3)

    Reply
  8. http://www.abu-farhan.com/

    a great site for blogger tips. save this site url in ur email...

    Reply
  9. பல வருக்ஷஂகளுக்கு முந்தி படித்தது. தமிழில் மிக சிறஂத்த கதைகளில் இதுவும் ஒஂறு.
    Dhanalakshmi, her brother, Gnappan, that daisy teacher simply unforgettable characters.
    I dont think the feelings this story can bring about can be translated into any other language. Kalyanji Sir, I have almost read all your stories. Have a personal copy of them also. Your writings like so many other beautiful things in this world are just beautiful. God bless you with more such stories.

    Reply
  10. Good story!.....daisy vaathiyachi.

    Reply
  11. "KANAIYAZHIYIN KADAIS IPAKKAM" PAHUTHYIL SUJATHA ANTHA ANDIN SIRANTHA SIRUKATHAIYAHA THERVU SEITHA EN NANBARIN MASTERPIECE ENTHA KATHAI. KALAIKA MUDIYATHA OPPANAIHAL THOHUPPIN MUTHAL KATHAI

    AROCKIASAMY SBI NILAKKOTTAI

    Reply

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

காவிரி முழுகடை வயலில்...

 முழுகடை வயல்களை மூழ்கடித்து 

கரையினைத் 

தழுவி நிற்கிறது காவிரி.

அணையில் தேங்கிய நீரில் எழுந்த சிற்றலை 

விளிம்புவரை வந்து 

வட்டமிட்டு அழகு காட்டுகிறது. சென்றாயப் பெருமாள் மலைக் கோவிலுக்கு எதிரில் 

கரையோரம் மூழ்கிக் கிடக்கும் கிணற்றில் தூண்டில் போட்டுப் 

பிடித்த ஜிலேபி மீன்களை 

அன்று என்ன செய்தோமென நினைவில்லை. 

இன்று அந்த வாய்ப்புக்கு 

வழியுமில்லை, வயசுமில்லை. ஒன்றுமட்டும் நினைவிலிருக்கிறது , பிடித்த மீனிலொன்றை 

டவுசர் பாக்கெட்டில் 

போட்டுக்கொண்டு வந்து, தனபாக்கியத்திடம் 

சேந்து கிணற்றடியில் 

ரகசியமாகக் கொடுத்தது. 


- ஆர்.வி.ஆர். ராஜேந்திரன்.

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம்.
"எந்த அற்புத மரி?" என்றேன் நான்.
"இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்."
prabanjan22 தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான்.
"என்னத்துக்கு சார் டி.சி?"
"என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?"
"ஆமாம். அப்பப்போ இஷ்டப்பட்டால், ஏதோ எனக்கு தயவு பண்ணுகிற மாதிரி கிளாசுக்கு வரும். போகும்."
"உம். நீரே சொல்கிறீர் பாரும்." என்று சொல்லிவிட்டு இரண்டாள் சேர்ந்து தூக்க வேண்டிய வருகைப் பதிவு ரிஜிஸ்டரையும், இன்னும் இரண்டு மூன்று ஃபைலையும் தூக்கி என் முன் போட்டார்.
"பாரும். நீரே பாரும். போன ஆறு மாச காலத்திலே எண்ணிப் பன்னிரண்டே நாள் தான் ஸ்கூலுக்கு வந்திருக்கிறாள். வீட்டுக்கும் மாசம் ஒரு கடிதம் எழுதிப் போட்டுக் கொண்டுதான் இருக்கேன். ஒரு பூச்சி, புழு இப்படி எட்டிப் பார்த்து, அந்த கடுதாசிபோட்ட கம்மனாட்டி யாருன்னு கேட்டுச்சா? ஊகூம். சர்தான் போடா நீயுமாச்சு உன் கடுதாசியுமாச்சுன்னு இருக்கா அவள். சரி ஏதாச்சும் மெடிக்கல் சர்டிபிகேட் கேட்டு வாங்கிச்சேர்த்துக்கலாம்னா, வந்தால்ல தேவலாம். நம்ம டி.இ.ஓ மாதிரியில்ல ஸ்கூலுக்கு இஷ்டப்பட்டால் வருகிறாள். வந்தாலும் ஸ்டூடண்ட் மாதிரியா வர்றாள்? சே…சே…சே… என் வாயாலே அத எப்படிச் சொல்றது? ஒரு பிரஞ்சு சைக்கிள்ளே, கன்னுக்குட்டி மேலே உட்கார்ந்து வர்ற மாதிரி பாண்ட் போட்டுக் கொண்டு வர்றாள். பாண்டுங்காணும்… பாண்ட்! என்ன மாதிரி பாண்ட்டுங்கறீர்? அப்படியே 'சிக்'குன்னு பிடிச்சிக்கிட்டு, போட்டோவுக்கு சட்டம் போட்ட மாதிரி, அதது பட்பட்டுன்னு தெறிச்சுடுமோன்னு நமக்கெல்லாம் பீதியை ஏற்படுத்தற மாதிரி டிரஸ் பண்ணிட்டு வர்றாள். சட்டை போடறாளே, மேலே என்னத்துகுங்காணும் இரண்டு பட்டனை அவுத்துவிட்டுட்டு வர்றது? அது மேலே சீயான்பாம்பு மாதிரி ஒரு செயின். காத்தாடி வால் மாதிரி அது அங்கிட்டும் இங்கிட்டும் வளைஞ்சு வளைஞ்சு ஆடறது. கூட இத்தினி பசங்க படிக்கறாங்களேன்னு கொஞ்சமாச்சும் உடம்பிலே வெக்கம் வேணாம்? இந்த இழவெடுத்த ஸ்கூல்லே ஒரு யூனிபார்ம், ஒரு ஒழுங்கு, ஒரு மண்ணாங்கட்டி, ஒரு தெருப்புழுதி ஒன்றும் கிடையாது. எனக்கு தெரியுங்காணும்… நீர் அதையெல்லாம் ரசிச்சிருப்பீர்!"
"சார்…"
"ஓய் சும்மா இருங்காணும். நாப்பது வருஷம் இதுல குப்பை கொட்டியாச்சு. ஐ நோ ஹ்யூமன் சைக்காலஜி மிஸ்டல் டமிள்! தமிழ்சார், எனக்கு மனத்தத்துவம் தெரியும்பா. உமக்கு என்ன வயசு?"
"இருபத்தொன்பது சார்!"
"என் சர்வீஸே நாற்பது வருஷம்."
"பாண்ட் , சண்டை போடக்கூடாதுன்னு விதி ஒன்னும் நம்ம ஸ்கூல்ல இல்லையே சார்."
"அதுக்காக, அவுத்துப் போட்டுட்டும் போகலாம்னு விதி இருக்கா என்ன? வயசு பதினெட்டு ஆகுதுங்காணும் அவளிக்கு! கோட்டடிச்சு கோட்டடிச்சு இப்பத்தான் டெந்த்துக்கு வந்திருக்கிறாள். எங்க காலத்துல பதினெட்டு வயசுல இடுப்பிலே ஒண்ணு, தோள்லே ஒண்ணு இருக்கும். போதாக்குறைக்கு மாங்காயைக் கடிச்சிட்டு இருப்பாளுக. போனவாட்டி, அதான் போன மாசத்திலே ஒரு நாள் போனாப் போவுதுன்னு நம்ம மேலே இரக்கப்பட்டு ஸ்கூலுக்கு வந்தாளே அப்போ, அவள் ஒரு நாள்லே, ஆறு மணி நேரத்துக்குள்ளாறே-ஹார்ட்லி ஸிக்ஸ் அவர்ஸ் சார்- என்ன என்ன பண்ணி இருக்காள் தெரியுமா? யாரோ நாலு தடிக்கழுதைகளோட - நீங்கள்ளாம் ரொம்ப கௌரவமா சொல்லிப்பேளே பிரண்ட்ஸ் அப்படீன்னு - நாலு தடிக்கழுதைங்களோட ஸ்கூல் வாசல்லே சிரிச்சு பேசிட்டு இருந்திருக்காள். நம்ம ஹிஸ்டரி மகாதேவன் இருக்கே… அது ஒரு அசடு. நம்ம ஸ்கூல் வாசல்லே, நம்ம ஸ்டூடண்ட் இப்படி மிஸ்பிஹேவ் பண்ணறாளேன்னு அவ கிட்ட போய் "இப்படி எல்லாம் பண்ணக்கூடாது அற்புத மரி, உள்ள வான்னு கூப்பிட்டு இருக்கான். அவள் என்ன சொன்னாள் தெரியுமா?
"சொல்லுங்க சார்"
"உங்களுக்கு பொறாமையா இருக்கா சார்ன்னு கேட்டுட்டாள். அந்தப்பசங்க முன்னால வெச்சு மனுஷன் கண்ணாலே ஜலம் விட்டுட்டு என்கிட்டே சொல்லி அழுதார். இந்த ஸ்கூல் காம்பசுக்குள்ளே நடக்கிறதுக்குதான் நீங்க பொறுப்பு. வெளியிலே நடக்கிற விவகாரத்துக்கெல்லாம் நீங்க என்னைக் கட்டுப்படுத்த முடியாது சார்னு மூஞ்சியிலே அடிச்ச மாதிரி சொல்றாள். யாருகிட்டே? இந்த நரசிம்மன்கிட்டே.”
எச்.எம்.முக்கு முகம் சிவந்து மூக்கு விடைத்தது.
“இந்த அநியாயம் இத்தோடு போகலே. சாயங்காலம், பி.டி. மாஸ்டர்கிட்டே சண்டை போட்டுக்கொண்டாள். அவன் இப்படிப் பண்ணப்படாது, இப்படி வளையணும், இந்த மாதிரி கையை வச்சுக்கணும்னு அவளைத் தொட்டுச் சொல்லிக்கொடுத்திருக்கான். தொட்டவன், எசகுபிசகா எங்கேயோ தொட்டுட்டான் போலிருக்கு. இவ என்ன கேட்டிருக்கா தெரியுமா?”
“என்னைத் தொட்டுப் பேசாதீங்கன்னு சொல்லியிருப்பாள்.”
“மனுஷ ஜாதின்னா அப்படித்தானே சொல்லியிருக்கணும்? இவள் என்ன சொன்னாள் தெரியுமா?”
எச்.எம். தலையைக் கையில் தாங்கிப் பிடித்துக் கொண்டார். அவர் முகம் வேர்த்து விட்டிருந்தது.
”சார்... உங்க பொண்டாட்டியோட நீங்க படுக்கறது இல்லையான்னு கேட்டுவிட்டாள். பாவம்! நம்ம பி.டி. பத்மநாபன் லீவு போட்டு விட்டு போய்விட்டான். முடியாதுப்பா முடியாது. நானும் நாலு பெத்தவன். இந்த ராட்சஸ ஜென்மங்களையெல்லாம் வச்சிக்கிட்டு, இரத்தக் கொதிப்பை வாங்கிக்கிட்டு அல்லாட முடியாதுப்பா. அந்தக் கழுதையைத் தொலைச்சுத் தலைமுழுகிட வேண்டியதுதான்.”
“இப்போ போய் டி.சி. கொடுத்துட்டால், அவள் எஸ்.எஸ்.எல்.சி. எழுத முடியாமல் போயிடும் சார். அவள் வாழ்க்கை வீணாகப் போய்விடும்.”
”அந்தக் கழுதைக்கே அதைப் பத்திக் கவலை இல்லை. உமக்கெதுக்கு?”
***
நமக்கெதுக்கு என்று என்னால் இருந்து விட முடியாது. அது என் சுபாவமும் இல்லை. அத்தோடு, அந்த மரி என்ற ஆட்டுக்குட்டி, ஒரு சின்னப்பெண். அப்படி என்ன பெரும் பாவங்களைப் பண்ணிவிட்டாள்? அப்படியேதான் இருக்கட்டுமே. அதற்காக அவளைக் கல்லெறிந்து கொல்ல நான் என்ன அப்பழுக்கற்ற யோக்கியன்?
நான் சுமதியிடம் சொன்னேன். எச்.எம். மாதிரிதான் அவளும் சொன்னாள்.
”உங்களுக்கெதுக்கு இந்த வம்பெல்லாம்? நீங்க சொல்றதைப் பார்த்தால், அது ரொம்ப ராங்கி டைப் மாதிரி தெரியுது. உங்களையும் தூக்கி எறிஞ்சு ஏதாச்சும் பேசிட்டால்??” என்றாள்.
அவளை சம்மதிக்க வைத்து, அவளையும் அழைத்துக்கொண்டு மரி வீட்டுக்கு ஒரு நாள் சாயங்காலம் போனேன்.
என் வீட்டுக்கு ரொம்ப தூரத்தில் இல்லை அவள் வீடு. ரயில் நிலையத்துக்கு எதிரே இருந்த வரிசை வீடுகளில், திண்ணை வைத்த, முன்பகுதி ஓடு போட்டு, பின் பகுதி ஒட்டிய பழங்காலத்து வீடு அவளுடையது. விளக்கு வைத்த நேரம். திண்ணை புழுதி படிந்து, பெருக்கி வாரப்படாமல் கிடந்தது. உள்ளே விலை மதிப்புள்ள நாற்காலிகள் சோபாக்கள் இருந்தன. ஆனாலும் எந்த ஒழுங்கும் இன்றிக் கல்யாண வீடு மாதிரி இரைந்து கிடந்தன.
“மரி,” என்று நான் குரல் கொடுத்தேன். மூன்று முறை அழைத்தபிறகுதான், “யாரு?” என்று ஒரு குரல் உள்ளிருந்து வந்தது. கலைந்த தலையும், தூங்கி எழுந்த உடைச் சுருக்கங்களோடும், சட்டையும் கைலியுமாக வெளிப்பட்டாள் மரி.
என்னைப் பார்த்ததில் ஒரு ஆச்சரியம், வெளிப்படையாக அவள் முகத்தில் தோன்றியது. என் மனைவியைப் பார்த்ததில் அவளுக்கு இரட்டை ஆச்சரியம் இருக்க வேண்டும்.
“வாங்க சார்.. வாங்க, உட்காருங்க.” என்று எங்கள் இருவரையும் பொதுவாக வரவேற்றுவிட்டு நாற்காலிகளை ஒழுங்குபடுத்தினாள். சோபாவில் நானும் சுமதியும் அமர்ந்தோம். எதிரே இருந்த ஒரு நாற்காலியில் அவள் அமரச் சொன்னதும் அமர்ந்தாள்.
“தூக்கத்தைக் கலைச்சுட்டேனாம்மா?” என்றேன்.
”பரவாயில்லே சார்,” என்று வெட்கத்தோடு தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். முகத்தில் விழுந்த முடியை மேலே தள்ளிவிட்டுக் கொண்டாள்.
”நீங்க எப்படி இங்கே..?”
“சும்மாத்தான்.  பீச்சுக்குப் போய்க்கிட்டு இருந்தோம். வழியிலே தானே உங்க வீடு. பார்த்து ரொம்ப நாளாச்சேன்னு நுழைஞ்சிட்டோம். அழையாத விருந்தாளி. உடம்பு சரியில்லையா?”
”தைலம் வாசனை வருதா சார்? லேசாத் தலைவலி. ஏதாச்சும் சாப்பிடறீங்களா சார்?”
“எல்லாம் ஆச்சு. வீட்டிலே யாரும் இல்லையா?”
“வீடா சார் இது....? வீடுன்னா அப்பா, அம்மா இருக்கணும். அப்பா எப்பவோ போயிட்டார். போயிட்டாருன்னா செத்துப் போயிடலே. எங்களை விட்டு விட்டு போயிட்டார். அம்மா என்னைச் சுத்தமாக விட்டுடலை. அப்பப்போ நாங்க சந்திக்கிறோம். சமயத்திலே இரண்டு நாளுக்கு ஒரு முறை நாங்க பார்த்துக்கொண்டால் அது அதிகம். அதனால்தான் இது வீடான்னேன். எனக்கு ஏதோ லாட்ஜிலே தங்கற மாதிரி தோணுது.”
எனக்குச் சங்கடமாய் இருந்தது. இரவுகளில், நசுங்கிய அலுமினியப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பிச்சைக்கு வருகிற குழந்தையைப் பார்ப்பது போல இருந்தது.
”சாப்பாடெல்லாம் எப்படியம்மா?”
“பெரும்பாலும் பசி எடுக்கறப்போ, எங்க தோணுதோ அங்கே சாப்பிடுவேன். ஓட்டல்லேதான். அம்மா வீட்டிலே தங்கியிருந்தா ஏதாவது செய்வாங்க. அம்மா சமையலைக் காட்டிலும் ஓட்டலே தேவலை. நல்லாயிருக்காதுன்னு சொல்லலை. அம்மான்னு நினைச்சு சாப்பிட முடியலே. பொண்ணுன்னு நினைச்சு அவங்களும் பண்ணலை.”
சுமதி என்னை முந்திக்கொண்டு கேட்டாள்.
”உன் அம்மாதானே அவங்க?”
“ஆமாங்க. இப்போ வேறு ஒருத்தரோட அவங்க இருக்காங்க. அவரை எனக்குப் பிடிக்கலை. என்னையும் அவருக்குப் பிடிக்கலை. சரி அவங்க வாழ்க்கையை அவங்க வாழறாங்க. என் வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டு தீர்க்கிறேன்.”
ஓர் இறுக்கமான மௌனம் எங்கள் மேல் கவிந்தது. நான், சாவி கொடுக்காமல் எப்போதோ நின்று போயிருந்த கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
“மரி... ஸ்கூலுக்கு வந்தால், ஒரு மாறுதலாக இருக்குமில்லே?”
“நான் யாருக்காக சார் படிக்கணும்?”
“உனக்காக,”
“ப்ச்!” என்றாள் அவள். இதற்கு மேல் எதுவும் பேசக்கூடாது என்று எனக்குத் தோன்றியது.
”பீச்சுக்குப் போகலாம். வாயேன்.”
”வரட்டுமா சார்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.
“வா.”
“இதோ வந்துவிட்டேன் சார்,” என்று துள்ளிக் கொண்டு எழுந்தாள். உள்ளே ஓடினாள்.
நான் சுமதியைப் பார்த்தேன்.
“பாவங்க,” என்றாள் சுமதி.
“யாருதான் பாவம் இல்லே? இந்தப் பெண்ணை விட்டுவிட்டு எங்கேயோ இருக்கிற அந்த அம்மா பாவம் இல்லையா? இத்தோட அப்பா பாவம் இல்லையா. எல்லோருமே ஒருவிதத்திலே பாவம்தான்.” என்றேன் நான்.
அப்போதுதான் பூத்த ஒரு பூ மாதிரி, மழையில் நனைந்த சாலை ஓரத்து மரம் மாதிரி, ஓடைக் கூழாங்கல் மாதிரி, வெளிப்பட்டாள் மரி. பேண்ட்தான் போட்டிருந்தாள். சட்டையை டக் பண்ணியிருந்தாள். அழகாகவே இருந்தது அந்த உடை. உடம்புக்குச் சௌகரியமானதும், பொருத்தமானதும்தானே உடை.
“ஸ்மார்ட்!” என்றேன்.
“தேங்க்யூ சார்,” என்றாள், பரவசமான சிரிப்பில்.
நான் நடுவிலும், இரண்டு புறமும் இருவருமாக, நாங்கள் நடந்தே கொஞ்ச தூரத்தில் இருந்த கடற்கரையை அடைந்தோம்.
கடற்கரை சந்தோஷமாக இருந்தது. ஓடிப் பிடித்துக் கல் குதிரைகளின் மேல் உட்கார்ந்து விளையாடும் குழந்தைகள். குழந்தைகள் விளையாட்டைப் பார்த்து ரசிக்கும் பெற்றோர்கள். உலகத்துக்கு ஜீவன் சேர்க்கும் யுவர்களும் யுவதிகளும். கடலைகள், கடல் மணலில் சுகமாக வறுபட்டன.
குழந்தைகள் வாழ்வில் புதிய வர்ணங்களைச் சேர்த்துப் பலூன்கள் பறந்தன. ஸ்டூல் போட்டுப் பட்டாணி சுண்டல் விற்கும் ஐயரிடம் வாங்கிச் சாப்பிட்டோம்.
“கார வடை வாங்கிக் கொடுங்க சார்,” என்றாள் மரி, கொடுத்தேன். தின்றாள்.
”மத்தியானம் சாப்பிடல்லே சார். சோம்பேறித்தனமாக இருந்துச்சு. தூங்கிட்டேன்.”
“ராத்திரி எங்களோடுதான் நீ சாப்பிடறே,” என்றாள் சுமதி.
“இருக்கட்டுங்க்கா.”
”என்ன இருக்கட்டும். நீ வர்றே.”
வரும்போது, சுமதியின் விரல்களில் தன் விரல்களைக் கோத்துக்கொண்டு, சற்றுப்பின் தங்கி மரி பேசிக் கொண்டு வந்தாள். நான் சற்று முன் நடந்தேன்.
சாம்பாரும் கத்தரிக்காய் கறியும்தான். மத்தியானம் வறுத்த நெத்திலிக் கருவாடு இருந்தது.
“தூள்க்கா.... தூள்! இந்தச் சாம்பாரும் நெத்திலிக் கருவாடும் பயங்கரமான காம்பினேஷங்க்கா,” என்றாள் மரி.
*****
மரி இப்போதெல்லாம் காலையும் மாலையும் தவறாமல் எங்கள் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தாள். காலை இட்டிலி எங்கள் வீட்டில்தான். வருஷம் 365 நாட்களும் எங்கள் வீட்டில் இட்டிலி அல்லது தோசைதான். “ஆட்டுக்கல்லை ஒளித்து வைத்து விட்டால், சுமதிக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும். மரி,” என்பேன். மரி விழுந்து புரண்டு சிரிப்பாள். சாயங்காலங்களில் எங்கள் வீட்டில்தான் அவள் வாழ்க்கை கழிந்தது. பேண்ட் போட்ட அந்தப்பெண், சிரமப்பட்டுச் சம்மணம் போட்டு உட்கார்ந்து சுமதிக்கு வெங்காயம் நறுக்கித் தருவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும்.
“ஏம்மா... சைக்கிள்ளே ஊரைச் சுற்றுகிற பெண் நீ. இங்கே இவளுக்கு வெங்காயம் நறுக்கித் தர்றியோ?” என்றேன்.
“இதுதான் சார் த்ரில்லிங்கா இருக்கு. கண்ணிலே நீர் சுரக்கச் சுரக்க வெங்காயம் நறுக்கிறது பயங்கரமான எக்ஸ்பீரியன்ஸ்.” என்றாள். ஐயோ இந்தப் பயங்கரமே!
“சார், ஒண்ணு சொல்லட்டுமா?”
“ஊகூம். ரெண்டு மூணு சொல்லு.”
“சீரியஸாகக் கேட்கிறேன், சார். நான் இங்கே வந்து போறதிலே உங்களுக்குத் தொந்தரவு இல்லையே சார்?”
“சத்தியமாகக் கிடையாது.”
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு அவள் சொன்னாள்.
“ஏன் சார் - கெட்டுப் போனவள்னு எல்லோரும் சொல்கிற என்னை எதுக்கு உங்க வீட்டிலே சேர்த்து, சோறும் போடறீங்க?”
சிரிப்புத்தான் வந்தது.
“பைத்தியமே! உலகத்திலே யார் தான் கெட்டுப் போனவங்க? யாராலுமே கெட முடியாது, தெரியுமா? மனசுக்குள்ளே நீ கெட்டுப் போனவள்னு நினைக்கிறியாக்கும்? அதை விட்டுடு. நீயும் கெட்டவள் இல்லை, உங்க அம்மாவும், அப்பாவும் யாருமே கெட்டவங்க இல்லே.”
அவள் சொனாள்: “எங்க அம்மாவைப் பழி தீர்க்கணும்னுதான் அப்படியெல்லாம் நடந்துக்கறேன் சார்.”
“எனக்கும் தெரியும்.” என்றேன்.
பத்து நாள் இருக்குமோ? இருக்கும். ஒரு நாள் மரி என்னிடம் கேட்டாள்.
”சார்.. நான் ஸ்கூலுக்கு வர்றதே இல்லைன்னு நீங்க ஏன் கேட்கவில்லை?”
நான் அவள் முகத்தைப் பார்த்தேன். இரண்டு மணிகள் உருண்டு விழத்தயாராய் இருந்தன. அவள் கண்களில்.
“என்னை நீங்க கேட்டிருக்கணும் சார். ஏண்டி ஸ்கூலுக்கு வரலைன்னு என்னை அறைஞ்சு கேட்கணும் சார். அப்படி யாரும் என்னைக் கேட்க இல்லேங்கறதுனாலதானே நான் இப்படி விட்டேத்தியா இருக்கேன்? என் மேல் இப்படி  யாரும் அன்பு செலுத்தினது இல்லே சார். அன்பு செலுத்தறவங்களுக்குத்தானே அதட்டிக் கேக்கவும் அதிகாரம் இருக்கு?”
“உனக்கே அது தோணனும்னுதானே நான் காத்திருக்கேன். அதனாலே என்ன? ஒன்றும் முழுகிப் போய்விடவில்லை. இன்னைக்குப்புதுசா ஆரம்பிப்போம். இன்னைக்குத்தான் டென்த் கிளாஸ்லே நீ சேர்ந்தன்னு வச்சுக்க. நாளையிலேர்ந்து நாம் ஸ்கூலுக்குப் போறோம்.” என்றேன்.
மரி, முகத்தை மூடிக் கொண்டு விசும்பி விசும்பி அழுதாள்.
******
தட்டச்சு : சென்ஷி

 

ஞாயிறு, 24 மே, 2020

ஆத்மாநாம் தன்னை நிராகரித்த கவிஞன்-குவளைக் கண்ணன்


குவளைக் கண்ணன்
”கவிதை என்று பிரிக்க முடியாது. கவிதை, கவிதை அல்லாதது என்று மட்டுமே பிரித்தாள முடியும். கவிதை அல்லாதது அப்பட்டமாகத் தன்னைத்தானே வெளிக்காட்டிக்கொண்டு விடுகிறது.
கவிதையானது என்றைக்குமே தனது இருப்பை மொழியின் மீதோ அல்லது அதனைப் பேசும் மக்கள் மீதோ திணித்ததில்லை. திணிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டதில்லை.'”
மேற்கூறிய வாசகங்கள் ஆத்மாநாமுடையவை.
பெருநகர்களில் தனிமனித இருப்பு சார்ந்த நெருக்கடியைத் தெரிவிக்கிற, ஒரு செடியின் இருப்பு வழியாக மனித இருப்பின் அடிப்படைச் சிக்கலை விளக்கிக்கொள்ள முயல்கிற, சகவாசியின் வேதனையைப் பார்ப்பதோடு, கும்பலின் மீதான வெறுப்பை athmanamஉமிழ்கிற (உதாரணம்: கட்டாந் தலைகள்), சுய தேடலுள்ள, குழந்தைகளின் உலகில் ஊடாடுகிற, விளக்குக் கம்பம், திருஷ்டிப் பொம்மை, திருஷ்டிப் பூசணி எனச் சாதாரணமாக நாம் தினசரி பார்ப்பவற்றை முற்றிலும் வேறாகக் கண்டு நமது வாழ்வினுள் கொண்டு வருகிற கவிதைகள், பட்டியலிடும் கவிதைகள், வாசகனிடம் நேரடியாகப் பேசும் கவிதைகள், இயக்கங்கள் தங்களது பிரச்சாரங்களில் உபயோகிக்கக்கூடிய அளவுக்குக் காட்டமான, அப்பட்டமான அரசியல் கவிதைகள், கேலி செய்யும் கவிதைகள், காதல் கவிதைகள் என்று பல்வேறு வகையான கவிதைகளையும் கொண்டது ஆத்மாநாமின் படைப்புலகம்.
'குட்டி இளவரசிக்கு ஒரு கடிதம்', 'குட்டி இளவரசி வந்துவிட்டாள்', 'புத்தம் புதிய' எனும் தலைப்பிலுள்ள கவிதைகள், குழந்தைகளின் உலகம் சார்ந்தவை. குட்டி இளவரசிக்கு ஒரு கடிதத்தில், குழந்தைகளின் புனைவுலகம் சார்ந்த ஷிநீஷீஷீதீஹ் எனும் நாய் வருகிறது அல்ல வருகிறான். நாய்களின் தலைவனைக் கௌரவிக்கக் கூட்டம் நடக்கிறது. அந்தத் தலைவன் எதற்காகக் கௌரவிக்கப்படுகிறான் தெரியுமா, பின்னால் சுமக்கும் பையைக் கண்டுபிடித்ததற்காக.
'குட்டி இளவரசி வந்துவிட்டாள்' கவிதையைப் பார்ப்போம்: டப்பியின் களிப்புகளைப் பரப்பி வைப்பாள்/ சுவற்று அழுக்கை ஈயெனப் பிடிப்பாள்/ கூக்கூவைத் தினம்தினமும் புதிதாய்க் காண்பாள்/ மக்கள் கூட்டத்தில் கூக்குரலிடுவாள்/ ஏறி இறங்கும் படிகள் அவள் உலகம்/ பார்த்தவரெல்லாம் அவளது தோழர்கள்/ பசி உடல் தவிர அழ ஒன்றும் இல்லை/ தனக்குள்தானே பொங்கும் மகிழ்ச்சி அவள்/ ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியின் தொடர்ச்சியே/ பெயர் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்ப்பாள்/ அவள் ஊடுருவல் பார்வை உம்மையும் மீறிச் செல்லும்.
குட்டி இளவரசி நடக்கக் கற்றுக் கொண்டவள்; அநேகமாக இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை. பசிக்கு அழுதால்தான் அழுகை. வளர்ந்தவர்களின் ஒழுக்கம்/ ஒழுக்க விதிகள் அவளுக்குப் பொருந்தமாட்டா. மக்கள் கூட்டத்தில் கூக்குரலிடுகிறாள். பார்த்தவரெல்லாம் அவளது தோழர்கள் . . . வளர்ந்தவர்களான நமக்குக் குழந்தையாகிற ஏக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்குக் குழந்தைகளின் உலகைக் கவனித்த கவிதை இது. நாமும் குழந்தையாக இருந்தபோது இப்படித்தானே இருந்திருப்போம். சொல்லோடுதான் இப்போதைய குழப்பங்களும் துயரங்களும் நம்மிடம் வந்தனவா?
'பூச்சுக்கள்' என்ற தலைப்பிலுள்ள கவிதையைப் பார்ப்போம்.
வாழ்க்கைக் கண்ணாடியில்/ முகம் பார்த்து/ தலை சீவி/ பவுடர் பூசி/ வெளிக் கிளம்பினேன்/ பஸ் ஸ்டாண்டில்/ என்னைப் போலவே/ ஆண்களும் பெண்களும்/ அவரவர் வாழ்க் கைக் கண்ணாடியில்/ முகம் பார்த்து/ அலங்கரித்து/ காத்து நின்றிருந்தனர்/ வந்து போய்க்கொண்டிருந்த/ வாகனங்களில்/ பொதுமக்கள்/ வேற்றுமை காண இயலாவண்ணம்/ உட்கார்ந்து கொண்டும்/ நகர்ந்துகொண்டும்/ பயணம் செய்துகொண்டிருந்தனர்/ என்னுடைய வாகனம் வந்துவிட்டது/ இடிபாடுகளுக்கிடையே/ நானும்/ ஒரு கம்பியில் தொற்றிக்கொண்டேன்/ எங்கோ ஒரு இடத்தில்/ நிலம் தகர்ந்து/ கடல் கொந்தளித்தது/ ஒரு பூ கீழே தவழ்ந்தது.
இந்தக் கவிதையில் நகரத்தின் காலை நேரக் காட்சியொன்று தரப்படுகிறது. காலை நேரம் என்பதை எட்டிலிருந்து பத்து மணிக்குள் என்று வைத்துக்கொள்ளலாம். திங்கட்கிழமையில் இருந்து சனிக்கிழமைக்குள் ஏதோ ஒரு வேலை நாளாக இருக்க வேண்டும். இதில் வரும் கவிதை சொல்லி வீட்டிலிருந்து கிளம்பிப் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நிற்கிறார். இவரைப் போலவே ஆண்களும் பெண்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். பொதுமக்கள் அடையாளம் காண இயலாவண்ணம் பயணம் செய்கிறார்கள். இவரது வாகனம் வருகிறது. இவரும் ஒரு கம்பியில் தொற்றிக்கொள்கிறார். பெருநகரமொன்றின் வேலைநாட்களின் காலை நேரம் அதன் அத்தனை அவசரத்தோடும் அவதியோடும் கவிதைக்கான காட்சிப் பின்புலமாக நமக்குத் தரப்படுகிறது.
முதல் வரியிலிருந்தே, முதல் சொல்லிலிருந்தே கவிதை தொடங்கிவிடுகிறது. கண்ணாடியில் முகம் பார்த்து, தலை சீவி, பவுடர் பூசி, வெளிக் கிளம்பினேன் என்றாலே கவிதை சொல்லி வீட்டைவிட்டுப் புறப்பட்டதை நமக்குக் காட்டிவிடலாம். ஆனால் வாழ்க்கைக் கண்ணாடி என்கிறார். நாம் ஏன் வெளியே கிளம்புவதற்கு முன் கண்ணாடி பார்க்கிறோம் கண்ணாடியில் முகம் மட்டும்தான் தெரிகிறதா? ஒவ்வொரு முறையும் வீட்டைவிட்டுப் பொதுவெளிக்குள் நுழையும்முன் நாம் ஏன் மறக்காமல் கண்ணாடியிடம் நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொள்கிறோம்? கண்ணாடிகள் பிரதிபலிக்கும் தன்மையுடையவை, நாம் உருவத்தைப் பார்த்தால் உருவத்தை. கண்ணாடியில் பார்த்து நமது உருவத்தைத் திருத்திக் கொள்கிறோம். உள்ளுக்குள் எப்படி இருந்தாலும் பொதுவெளிக்கு என்று முகத்தைத் திருத்திக்கொண்டுவிடுகிறோம். கவிஞர் கண்ணாடியில் வாழ்க்கையை, அல்ல கண்ணாடியையே வாழ்க்கையாகப் பார்க்கிறார். உட்கார்ந்துகொண்டு, நகர்ந்துகொண்டு பயணம் செய்யும்போது அடையாளம் காண இயலாதபடி ஆகிறோம். மேலும் பொதுமக்கள் என்பவர் நமது புலன் வெளிக்குள் வந்தாலும் நமது உணர்வுவெளிக்குள் வராதவர்தானே, யாரிடம் நமக்கு எதுவுமே தோன்றுவ தில்லையோ அவர்கள்தானே. இவருடைய வாகனமும் வந்துவிடுகிறது, கவிதைசொல்லியும் கம்பியில் தொற்றிக்கொள்கிறார். பேருந்தில் நின்றுகொண்டு நாம் எதையோ யோசித்துக்கொண்டிருக்கும்போது, சட்டென்று பேருந்து நகரத் தரையே நகர்வது போன்ற உணர்வு ஏற்பட்டு சட்டென்ற திகில் பொங்குமே, அப்படி ஆகிறது. கடைசி வரியில் கவிதை சொல்லி தனது எண்ண ஓட்டத்திலிருந்து நிகழ்கணத்துக்கு வந்து பேருந்துக்கு வெளியே பார்க்க, பேருந்து நகரும் திசைக்கு எதிர்திசையில் ஏதோ ஒரு பெண் நடந்துபோகிறாளா? அசைவுகள் நினைவுகளாகி இந்த நான்கு வரிகளும் அசைபோட்டு சொல்லப்படுகின்றனவா? இப்படி வாசிக்கலாம். மற்றொரு வாசிப்பாகப் பேருந்து நெரிசலில் தவிக்கிற அதே சமயத்தில் பூமியின் வேறொரு பகுதியில் பூமி நகர்ந்து, கடல் கொந்தளிந்துவிடலாம். வேறொரு இடத்தில் தனக்குக் கீழே தண்ணீரிலோ காற்றிலோ பூவொன்று தவழ்வதைக் கவிஞர் சொல்வதாகக் கொள்ளலாம். அதாவது முதலில் சொல்லப்பட்ட சந்தடியும் இரைச்சலுமான நகரக் காட்சியின் அருகில் பூமியின் வேறெதோ இடத்தில் வேறெதோ காலத்தில் நடந்த, நடக்கப் போகிற நிகழ்ச்சியை வைத்துக் கவிதைக்கும் வாழ்வுக்கும் அழகூட்டிவிடுகிறார். இப்படியும் வாசிக்கலாம்.
இந்தக் கவிதையில் 'இடிபாடுகளுக்கிடையே' என்ற சொல்லைக் கவனியுங்கள். நெரிசல் என்ற சொல்லே பொதுவாக உபயோகத்திலுள்ள சொல், தகர்ந்த கட்டுமானங்களைப் பற்றிச் சொல்லும்போது நாம் உபயோகிக்கிற சொல் 'இடிபாடுகள்' என்பது, இப்போது மீண்டும் இந்தக் கவிதையை வாசியுங்கள்.
ஆத்மாநாமின் கவிதை உலகை மேலும் அறிவதற்கு ஏதுவாகச் சில வரிகளைப் பார்ப்போம்:
முட்டிமோதிப் பார்க்கிறது கடல்/ மணலைத் தன் நீலப் புடவைக்குள்/ சுருட்டிக்கொள்ள* உங்கள் இருப்பை நிரூபிக்க/ முத்தத்தைவிட சிறந்ததோர் சாதனம் கிடைப்பதரிது . . . முத்தம்/ முத்தத்தோடு முத்தம்/ என்று/ முத்த சகாப்தத்தைத் துவங்குங்கள்* முன்பென்றால் நினைவு/ பின்பென்றால் கனவு/ இப்பொழுதென்றால் நான்* நானும் வேறான நானும் பொய்/ நான் இல்லை* சித்திரத்திற்கு குரல் இருக்க வேண்டும்/ அந்தக் குரலுக்கு உயிர் இருக்க வேண்டும்/ பார்ப்பவன் பேச வேண்டும்/ பேச்சில் தெளிவு வற்றாதது தெளிவு/ நீங்கள் ஒவ்வொரு வரும்/ ஒரு சமவெளியை நிரப்பிக் கொண்டிருக்கிறீர்கள்* எல்லோருமே/ ஒரே ஒரு புத்தகத்தைத்தான்/ படிக்கப்/ போகிறீர்கள்/ அது உங்கள் புத்தகம் தான்* இந்தக் கவிதை/ எப்படி முடியும்/ எங்கு முடியும்/ என்று தெரியாது./ திட்டமிட்டு முடியாது என்றெனக்குத் தெரியும்/ இது முடியும்போது/ இருக்கும் (இருந்தால்) நான்/ ஆரம்பத்தில் இருந்தவன்தானா.* உதிரும்/ மலரின்/ கணிதத்தை/ என்றாவது/ யோசித்திருந்தால்/ மட்டும்/ இது புரியும்* சரக்கென்று/ உடல்விரித்துக்/ காட்டும்/ கற்றாழையின்/ நுனியிலிருந்து/ துவங்கிற்று வானம்* வயல்களுக்கப்பால் இருந்த/ சூரியன் மேலே சென்றான்/ எருமைகள் ஓட்டிச் சென்ற/ சிறுவனின் தலையில் வீழ்ந்தான்.
மொத்தக் கவிதைகளில் பதினைந்துக்கு மேற்பட்ட சமூக/ அரசியல் கவிதைகள் உள்ளன. ஒருவகையில் தமிழில் இவ்வாறான கவிதைகளுக்கான முன்னோடி என்றுகூட ஆத்மாநாமைச் சொல்லலாம். இவ்வகைக் கவிதைகளில் நுட்பமானவையும் உள்ளன, அப்பட்டமானவையும் உள்ளன. இவ்வகைக் கவிதைகளின் சில வரிகளைப் பார்ப்போம்.
தூங்குபவர்களையும்/ தூங்குபவர்களைப் போல் நடிப்பவர்களையும்/ எழுப்பும் வார்த்தைக் கூட்டங்கள்/ புறப்பட்டாகிவிட்டது கருப்புப்படை* எனது சுதந்திரம்/ அரசாலோ தனி நபராலோ/ பறிக்கப்படுமெனில்/ அது என் சுதந்திரம் இல்லை/ அவர்களின் சுதந்திரம்தான்* மக்கள் சுபிட்சமாய் இருந்தனர்/ அவசரமாய் அவ்வப்போது ஒன்றுக்கிருந்து* இந்த நகரத்தை எரிப்பது/ மிகச் சுலபம்/ ஒரு தீப்பெட்டி போதும் . . . ஓசைகள் குறைந்த இரவில்/ எங்கேனும் துவங்கலாம் . . . தனியொருவன் எரித்தால் வன்முறை/ அரசாங்கம் எரித்தால் போர்முறை * மந்திரிப் பெயர் சூட்டிக்கொண்ட/ அரச குமாரர்கள் . . . ஜனநாயக சர்வாதிகாரம் . . . சூழ்ந் துறங்கும்/ மனித உரிமைகள்.
இவ்வகையிலான இரண்டு கவிதைகளைப் பார்ப்போம்:
'நன்றி நவிலல்' எனும் தலைப்பில்: இந்தச் செருப்பைப் போல்/ எத்தனை பேர் தேய்கிறார்களோ/ இந்தக் குடையைப் போல்/ எத்தனை பேர் பிழிந் தெடுக்கப்படுகிறார்களோ/ இந்தச் சட்டையைப் போல்/ எத்தனை பேர் கசங்குகிறார்களோ/ அவர்கள் சார்பில்/ உங்களுக்கு நன்றி/ இத்துடனாவது விட்டதற்கு.
'தும்பி' எனும் தலைப்பில்: எனது ஹெலிகாப்டர்களைப்/ பறக்கவிட்டேன்/ எங்கும் தும்பிகள்/ எனது தும்பிகளைப்/ பறக்கவிட்டேன்/ எங்கும் வெடிகுண்டு விமானங்கள்/ எனது வெடிகுண்டு விமானங்களைப் பறக்கவிட்டேன்/ எங்கும் அமைதி/ எனது அமைதியைப் பறக்கவிட்டேன்/ எங்கும் தாங்கவொண்ணா விபரீதம்.
இவை மட்டுமல்ல, பல்வேறு தொனிகளில் ஏற்கனவே சொன்னதுபோல் பதினைந்துக்கும் மேற்பட்ட சமூக, அரசியல் கவிதைகள் உள்ளன. இவ்வாறான கவிதைகளில் ஒன்று 'அவள்'. இந்த அவள் நீங்கள் நினைக்கிற 'அவள்' அல்ல, இது 1984க்கு முன்னர் எழுதப்பட்டது.
எந்த ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளும் இயங்க முடியாத ஒருவன் மட்டுமே படைப்பாளியாக முடியும். சுதந்திரத்தின் உச்சகட்டத்தில் இருப்பவன் மட்டுமே செயல்பட முடியும். புதிய புதிய திசைகளை அடையாளம் காண முடியும். படைப்பாளி தனக்குத்தானே கேள்விகளைக் கேட்டுக்கொண்டு பதில்களைக் கண்டுபிடித்துக்கொள்கிறான். அவன் தனக்குத்தானே குருவாகி சிஷ்யனுமாகித் தன்னையே நிராகரித்துக் கொண்டிருக்கிறான். தொடர்ந்து குருவின் சிலையை உருவாக்கும் உளிச் சத்தம் ஒன்றும் குருவின் சிலையை உடைக்கும் உளிச் சத்தம் ஒன்றும் கேட்கின்றன.
மேல் பத்தியிலுள்ளவையும் ஆத்மாநாமின் வாசகங்கள்தான். நம்மிடையே பல கவிஞர்களும் தம்மை நிறுவ முயன்று, தமக்கென்று ஒரு குறிப்பிட்ட ரீதியைத் தேர்ந்தெடுத்து, தம்மை மீண்டும் மீண்டும் நிறுவிக் கொண்டிருக்கையில், தன்னையே தொடர்ந்து நிராகரித்து வந்ததால்தான் பல்வகைப்பட்ட, பல ரீதியிலான கவிதைகளை அவரால் எழுத இயன்றிருக்கிறது. தமிழில் பலவகையான கவிதைகளை எழுதிய கவிஞர்களில் ஆத்மாநாம் ஒருவர். சரியாகச் சொல்வதானால் ஒரே ஒருவர்.
ஆத்மாநாம் பற்றி பிரம்மராஜன் எழுதியுள்ள வாழ்க்கைக் குறிப்பிலிருந்து Lithium, Hyportry, Largatyl, Fenargan போன்ற மருந்துகளை ஆத்மாநாம் தொடர்ந்து உட்கொண்டது தெரிகிறது. இவரது கவிதைகளில் 'ஒரு குதிரைச் சவாரி' என்கிற ஒரே ஒரு கவிதையில் மட்டுமே இந்த தனிப்பட்ட நிலைமை வெளியாகி வாசகனைத் துயருறச் செய்கிறது. எழுதுபவர்களது மன அவசங்களும் மன அலைவுகளும் மனச் சிக்கல்களும் கவிதையில் அதிகமாக எழுதப்படுகிற இந்தக் கட்டத்தில் கவிதை எழுதுபவர்கள் கவனிக்க வேண்டிய தன்மை இது. கவிதைக்கு ஆட்படுவதற்கும் கவிதையை ஆட்படுத்த நினைப்பதற்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசத்தை ஆத்மாநாம் உணர்ந்திருக்கக்கூடும். மேலே குறிப்பிடப்பட்ட நான்கு மாத்திரைகளில் ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து உட்கொண்டுவரும் ஒருவரிடம் அவரது பெயர் கேட்கப்பட்டால், தனது பெயரைச் சொல்லக்கூட அவருக்கு நேரமெடுக்கும். ஆத்மாநாமுக்கு மனித உறவுகளிலும் சமூக வாழ்விலும் சிக்கலிருந்திருக்கலாம். இலக்கியத்தைப் பொறுத்தவரை அவர் ஒரு திடமான பரப்பில் நின்றிருந்திருக்கிறார். ஆத்மாநாம் கவிதைக்கு ஆட்பட்டவர்.
மொத்தம் நான்கே பக்கங்கள் வரக்கூடிய இவரது இரண்டு கட்டுரைகளும் பிரம்மராஜனுக்கு அளித்த நேர்காணலும் தமிழ்க் கவிதையியலுக்கு ஆத்மாநாமின் முக்கியப் பங்களிப்புகள். 'கவிதை எனும் வார்த்தைக் கூட்டம்' கட்டுரையில் எனது 'மனத்தில் தைத்த கவிதைகள்' எனத் தந்திருக்கும் கவிதை வரிகள், கவிதை பற்றிய புரிதலுக்குப் பெரிதும் உதவக்கூடியவை. இப்படி ஒரு பத்துக் கவிஞர்கள் அவர்களது மனத்தில் தங்கிய கவிதை வரிகளைத் தந்தால் அது தற்காலத் தமிழ்க் கவிதைகளின் உண்மையான வாசகருக்கு உதவக் கூடிய திரட்டாக அமையும்.
'ஆத்மாநாமைப் பற்றியும் கவிதை பற்றியும்' ஆத்மாநாம் - ஐ எனும் கட்டுரையில்:
தன்னிலிருந்து தானே விடுபடும் போது ஒருவன் மனிதனுக்கு ஒருபடி மேலே செல்கிறான் என்பவர், "உண்மையைத் தவிர வேறு எதுவும் இலக்கியமாக முடியாது என்பதில் நம்பிக்கை உள்ளவர்" என்று சொல்லி மேலும் "இலக்கியத் தொடர்பாலேயே வாழ்க்கை வாழத் தகுதியுள்ளதாக நினைக்கும் இவர், இலக்கியத் தொடர்பாலேயே வாழ்க்கை முடியுமோ என்று அஞ்சுகிறார்" என்று தன்னைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இலக்கியத் தொடர்பாலா முடிந்தது? முடிந்ததா?
06.07.1984 அன்று மரணத்தில் மூழ்கியது, 18.01.1951இல் பிறந்த ஷி.ரி. மதுசூதன். இதற்கு இருபது ஆண்டுகள் கழித்தும் இப்போதும் ஆத்மாநாம் இருக்கிறார், இன்னும் இருப்பார். கவிதைகளின் வாழ்வல்லவா கவிஞர்களின் வாழ்வு.
('கடவு' சார்பில் மதுரையில் நடத்தப்பட்ட 'கூடல்' கவிஞர்கள் சந்திப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் விரிவாக்கம்)
ஆத்மாநாம் படைப்புகள்
பதிப்பாசிரியர்: பிரம்மராஜன்
காலச்சுவடு வெளியீடு
விலை ரூ. 150/
நன்றி: காலச்சுவடு இதழ்
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Unnatham
Unnatham Logo

நிஜமும் பொய்யும்

இமையம்

“நீ மொதல்லெ எயிதுறத எயிதன். அப்பறமா நான் சொல்றன்”

“நீ விசயத்தை பூராத்தயும் ஒரே முட்டா சொல்லிப்புடு. நான் எல்லாத்தயும் எயிதிப்புட்டு படிச்சிக் காட்டுறன். ஏதாச்சும் வுட்டுப் போயிருந்தா படிச்சிக் காட்டும்போது சொல்லு, சேத்து எயிதிப்புடுறன்”

Woman “இல்லெ தம்பி. மொதல்லெ ‘என்னோட ஆச மவனுக்கு, ஒன்னோட அம்மா எயிதிக்கொண்டது, நான் ஊருலே நல்ல சொவமா இருக்கன். அங்கே ஒன்னோட சொவம் எப்பிடி, ஒடம்பு எப்பிடி’ன்னு எயிதுவ இல்லெ. அதெ எயிதிப்புடு. நான் பொறத்தாலெ சொல்றன்” எதிரில் பித்துக்குளி மாதிரி உட்கார்ந்திருந்த மொட்டையம்மாளை வெறுப்புடன் பார்த்த சேகர் கீழே கிடந்த காலண்டர் அட்டையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு, அதன்மீது நான்கு பக்கம் கொண்ட வெள்ளை முழு காகிதத்தை எடுத்து வைத்து எழுத ஆரம்பித்தான். ஆர்வம் பொங்க அவன் எழுதுவதையே அவள் பார்த்துகொண்டிருந்தாள். அவளுடைய முகத்தில் மலர்ச்சி உண்டாயிற்று. இரண்டு வரிகளை எழுதி முடித்த சேகர் தலையைத் தூக்கிப் பார்க்காமலேயே அசட்டைத்தனத்துடன் “சொல்லு” என்றான்.

“நான் சொல்லுறத செத்தெ ஒண்ணு வுடாம எயிது சாமி. ஒனக்குப் புண்ணியமா இருக்கும்”

“சொல்லு”

“நடுப்புற நடுப்புற வுட்டுட்டு வுட்டுவுட்டு எயிதிபுடாத”

“இதனாலதான் மனுசனுக்கு வேகோலம் வரது. எத்தனெவாட்டி ஒனக்கு நான் லெட்டர் எயிதிருப்பன். ஒரு வாட்டியாச்சும் அப்பிடி செஞ்சியிருக்கனா?”

“கோவிச்சுக்காதடா தம்பி. வுட்டுப் போயிடக்கூடாது பாரு, அதுக்காவச் சொன்னேன். ஒன்னெ குத்தம் சொல்லலெ”

“சீக்கிரம் சொல்லு, கட்டு எடுத்துடுவாங்க. ‘திருநாவுச் செலவுக்கு ஐநூறு’ கேட்டதயும் மறந்துப்புடாத”

“என்னாத்தை சொல்லுறது? மனங்கெட்டகேடு, நான் சொல்லுறன். நான் நல்ல சொவமா இருக்கன். நீ எப்பிடி இருக்கன்னு எனக்கு ஒரு சேதி பாதியும் தெரியலெ. மெட்ராசியிலெ இருந்து வந்த நம்ம ஊரு ஆறுவனும் ரெண்டு மூணு மாசமா ஒன்னெ கண்ணால கண்டதில்லன்னு சொல்றாங்க. அதனால எனக்கு ராத்தூக்கமில்லெ. இப்பிடி இருக்கன் அப்பிடி இருக்கன்னு கூடமா எயிதக் கூடாது? அதிலியா காசி செலவாப்பூடும்? ஒங்கிட்டேயிருந்து ஒரு நமோதும் இல்லங்கிற கொறதான் எனக்கு. மத்தது ஒண்ணுமில்லெ” என்று சொன்ன மொம்டையம்மாள் எழுதாமல் உட்கார்ந்து கொண்டிருந்த சேகரை சந்தேகமாகப் பார்த்தாள். எதுவுமில்லை என்பதுபோல் சாதாரணமாக, “மேற்கொண்டு சொல்றதயும் சொல்லிப்புடு. மொத்தமா எயிதிப்புடுறன்”என்று சொன்னான். அதற்கு அவள் கெஞ்சுவதுமாதிரி முகத்தை வைத்துக் கொண்டு உடைந்துபோன குரலில் “தவறிப்போவும் தம்பி. செத்த சொல்லச் சொல்ல எயிதிப்புடன்” என்று சொல்லி கட்டாயப்படுத்த ஆரம்பித்ததும் சேகருக்கு வேறு வழியின்றி போனது. வேகவேகமாக இரண்டு மூன்று வரிகளை எழுதிவிட்டு வெறுப்புடன் “அப்புறம்” என்று கேட்டான்.

“அப்பாவோட தெவசத்துக்கு நீ ஏன் வல்லெ. மகத்திலெ பொட்டச்சி அரிசி கொடுக்கக்கூடாது, நீதான் வரனும்ன்னு எத்தனவாட்டி ஒனக்கு எயிதிப் போட்டன். பெத்தவனுக்காக ஒன்னாலெ ஒரு நாளு மெனக்கிட முடியலெ. அம்மாம் பெரிய வேலெயா, நீ பாக்குற வேலெ, நாளக்கி நான் செத்தாலும் நீ இப்பிடித்தானெ செய்வ? நான் ஒரு ஆத்துமா இருந்ததாலெ இன்னிக்கி காரியம் முடிஞ்சிப் போச்சி. இல்லன்னா என்னா ஆவும்? மகத்திலெ அரிசி கொடுக்கிறது, பாப்பான்கிட்டெ நம்ப கருமத்தெ தொலக்கத்தான். இதுகூட தெரியாம என்னா படுப்பு படிச்செ? இதுக்கு மெட்ராசியிலெ வேற வேலெ பாக்குறவன்” என்று சொல்லிவிட்டு சேகர் முகத்தைப் பார்த்தாள். அவன் எழுதிக் கொண்டிருந்தான். அவன் எழுதி முடிக்கும்வரை பேசாமல் இருந்துவிட்டு, அவன் எழுதி முடித்தது தெரிந்ததும் தானாகவே சொல்ல ஆரம்பித்தாள்.

“நேத்துத்தான் நம்ப ஊரு சாமிக்கி காப்புக் கட்டுனாங்க. முடிஞ்சா நாலு ஐஞ்சி நாளு இருக்கிறமாரி வா. முடியாட்டி தேர் போடுற அன்னிக்காச்சும் வா. ஊருலெ தேரும் திருநாளுமா இருக்கிறப்ப, சொந்தம் பந்தமின்னு மக்கெ மனுச ஒண்ணா கூடுற நாளயிலே நீவல்லன்ன எம்மனசு என்னா பாடுபடும்? ஊருசனங்கதான் ஒனக்கு வாண்டாம். சாமிகூடமா வாண்டாம். ஊருலெ இருக்கிறவங்க எல்லாரும் சத்ராவிங்கதான். அதுக்காக ஊர வுட்டா ஓடிட முடியும்?” என்று சொன்னவள் சேகரை பார்த்தாள். அவன் எழுத ஆரம்பித்தான்.

“ஊட்டோட மேக்காலெ பக்க செவுரு சரிஞ்சிக்கிட்டு நிக்குது. முட்டுக்கயி கொடுத்திருக்கன். விட்டமும் லேசா மக்குனாப்லெ இருக்கு. பய காலத்து ஊடு. ஊட்ட மேஞ்சா தேவலாம். இந்த வருச கோட காத்துக்கு தாங்காது. நான் ஆம்பளயா, நாலு எடத்துக்கு ஓடி நாலுபேர கொண்டாந்து வேலெய முடிக்க. ஊட்டுலெ கைய வச்சா வல்லிசா ரெண்டாயிரமாவது புடிக்கும். நான் கெய்வி. என்னாலெ என்னா முடியும். ஆளு இல்லாதவன் பொயப்பு அர பொய்ப்புத்தான்” என்று சொன்னாள் மொட்டையம்மாள். எழுதிக்கொண்டிருந்த சேகர் கேட்டான்: “அப்பறம்?”

“காசிய மிச்சப்படுத்தறன்னு சொல்லி வவுத்த கட்டாத. புடிச்சா பாரு இல்லன்னா வந்துடு. வேலெ போனா செருப்பாச்சி. ஒப்பன், பாட்டனெல்லாம் காட்டு வேலெ செஞ்சி இந்த ஊருலெ பொயிக்கிலியா? செத்தா போயிட்டாங்க. வவுத்த காயப்போட்டு சம்பாரிச்சி என்னா செய்யப்போற? அப்பிடித்தான் மெத்த மாளி கட்டலாமின்னா அப்பிடிப்பட்ட மெத்த மாளி நம்பளுக்கு வாண்டாம். நல்லா சாப்புடு. வவுத்துக்கு வஞ்சண வைக்காதெ. ஒடம்ப எளக்க வுடாத. ஒடம்புதான் சொத்து. அது இருந்தா நாலு எடத்துக்கு ஓடிப்போயி பொயிச்சிக்கலாம். காசி பத்தலன்னா சொல்லு, இங்க இருக்கிற ரெண்டு பயிர் ஆட்டெயும் வித்து அனுப்புறன்.”

“சொல்ல மறந்துட்டன் பாரு. போன ஒரு மாசத்திலியே ஒண்ணு வுட்டு ஒண்ணுன்னு மூணு ஆடுவோ குட்டிப் போட்டிச்சி. அதுலெ மூணு கொறா, ரெண்டு கெடா. ஒரு ஆடு மட்டும் சாவு குட்டியாப்போச்சி. அதுவோதான் இப்ப என்னெ புள்ளிவுளாட்டம் சுத்திச் சுத்தி வருதுவோ. குடும்பத்தோட குல தெய்வத்துக்கு மொட்டப்போட்டு பூசப்போடுறன் ஒரு குட்டி கொடுன்னு ஒரு குடித்தெரு ஆளுவந்து கேட்டான். முடியாதுன்னுட்டன். எயிதிறியா தம்பி?”

“எயிதிகிட்டுத்தான் இருக்கன் சொல்லு”

“எம்மவனுக்கு ஒரு கண்ணாலம் காச்சி நடக்கலியேன்னு சொல்லி நம்ப பொயனப்பாடி ஆண்டவர் கோவுலுக்கு ரெண்டு மூணு வரிசத்துக்கு மின்னாடி ஒரு கெடாவ நேந்து வுட்டன். அது இப்ப என்னடான்னா மாடாட்டம் வளந்துப்போயி நிக்குது. பாக்குற சனமெல்லாம் வித்தப்புடுன்னு சொல்லுதுவோ. நானு வாய்ப்பேச முடியாம கெடக்குறன். ஆட்டே கொண்டுபோயி கோவுல்லெ வுட்டுடலாமின்னு இருக்கிறன். நீ என்னா சொல்ற?”

சேகர் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை கண்ட மொட்டையம்மாள் “என்னா தம்பி என்னியே பாக்குற? நான் சொல்ற எல்லாம் ஊகமாக எயிதிறியா?” என்று லேசாக சிரித்துக் கொண்டே கேட்டாள்.

“எயிதிகிட்டுத்தான் வரன் மேலெ சொல்லு... நான் கேட்ட ஐநூறு எப்ப கெடக்கும்” என்றான் சேகர்.

“ஒனக்கு இல்லாமியா?” என்றவள் கசந்து போன குரலில் சொன்னாள், “ஒரு காச்ச தலவலின்னாகூட கேக்கறதக்கு நாதி பிராதி கெடயாது. தனி பொணமா கெடக்குறன். நான் இன்னிக்கி செத்தன்னா எம்பொணத்தோட தலமோட்டுலெ குந்தி ஆயிவறதுக்கு ஒரு ஆளு இல்லெ. பொட்டெ புள்ளையா இருந்தாலும் நான் செத்தாக்க ஐயோ என்னெ பெத்த தாயாரேன்னு சொல்லி மாரடிக்சிக்கிட்டு அயுவும். எனக்கு அந்த கொடுப்பன இல்லெ. தாலி கட்டிக்கிட்டு ஒங்கப்பன் காரன்கூட வந்ததிலிருந்து எனக்கு எந்த கொடுப்பனதான் இருந்துச்சு? அதுக்குத்தான் சொல்றன், என் மூச்சிருக்கவே ஒரு குட்டிக்கி தாலிய கட்டி கொண்டாந்துடு. ஒப்பன் பேர சொல்லலன்னாலும் ஒம் பேர சொல்லவாச்சும் ஒரு நாதி வாணாமா? எம்மாங்காலத்துக்கு இப்பிடி நாடு நாடா, தேசாந்திரம் ஓடிக்கிட்டே இருப்ப? ஒரு நாளக்காச்சும் ஊரு நாடுன்னு வந்து சேர வாணாமா? ஆடு திருடற, மாடு திருடற ஊரா இருந்தாலும் நம்பளுக்கின்னு நாலு மக்கெ மனுச இல்லாமியா போயிடுவாங்க? ஆதியிலெ நடந்ததியே நெனச்சிக்கிட்டிருந்தா முடியுமா? மருந்த மியிங்குறாப்ல எல்லாத்தயும் மியிங்கிப்புட்டு, மறந்துப்புட்டு போவனும். இல்லாட்டி நாளு ஓடாது.

ஊருன்னு இருந்தா, நாலு விதமாத்தான் இருக்கும் மின்னாலெ ஒண்ணு பின்னாலெ ஒண்ணு சொல்வாங்கதான் சனங்கின்னு இருந்தா இப்பிடித்தான். காது கேக்கல, கண்ணு பாக்கலென்னு நாமதான் ஒதுங்கி கால ஜீவனத்த ஓட்டிக்கிட்டுப் போவனும். யாரப் பார்த்தாலும் ஒங்களெப்போல உண்டான்னுட்டுப் போவனும். தண்ணீக்கிப்போன சாந்தி குட்டியோட சடய நீ புடிச்சி இயித்தன்னு சொல்லி நாலு குள்ளேறிப் பயலுவோ பஞ்சாயத்து கூட்டுனதுக்கு ஊரு என்னாப் பண்ணும்? ஊருலெ இருக்கிற நாலு நாதேறிவோ கட்டிவச்ச கங்காட்சியாலெ இன்னா பொயிதின்னு இல்லாம ராவோட ராவா ஊட்ட வுட்டுப்போன புள்ளெய ஒரு வரிசமா காணலியேன்னு எங்கட்டெ காத்தா பறக்குது. ஒரு வேளெக்கி மறுவேளெ சோத்த கண்டா ‘ஆ’ன்னு அமுட்டிக்கிட்டு வருது. ராத்திரியிலெ கண்ணெமூட முடியலெ. ராவும் பவலும் ஒங்கவலெதான் எனக்கு. புள்ளெ இந்நாரம் எங்கெ நிக்குதோ, சோறுதண்ணீ குடிச்சிச்சோ இல்லியோன்னு எங்கொல பதறிப்போவுது. நீ என்னெப் பத்தி ஒண்ணும் நெனக்காத. காடு வா வாங்குது, ஊடு போ போங்குது. இனிமே என்னா கெடக்கு? இருந்த முட்டும் இருந்தோம் வேளெவந்தா போவ வேண்டியதுதானெ. முடியாது இன்னா முடியுமா? காய பூவ தின்னு இனுமே எத்தன காலத்துக்கு சம்பத்தா வாயிந்திடப்போறன். அதனால என்னெ நெனச்சிக்கிட்டு நீ மனச தளரவுடாத”

மொட்டையம்மாள் பேசுவதை நிறுத்திவிட்டு தலையைக் குனிந்து கொண்டு சிறிதுநேரம் உட்கார்ந்திருந்தாள். சேகர் எழுதுகிறானா இல்லையா என்றுகூட அவள் பார்க்கவில்லை. “அப்பறம்... அப்பறம்” என்று சேகர் கேட்ட பிறகுதான் தலையைத் தூக்கிப் பார்த்தாள். முந்தானையால் கண்களையும் முகத்தையும் துடைத்துக்கொண்டு கம்மலான குரலில் சொன்னாள்.

“செத்துப்போன ஒப்பன்காரன் நாள் தவறாம எஞ்சொப்பனத்திலெ வந்துட்டு வந்திட்டுப் போறான். செத்தவங்க சொப்பனத்திலெ வரது குடும்பத்துக்கு நல்லதில்லெ. குடும்பத்துக்கு ஆவாது. குடும்பம் விருத்திக்கி வராது. நம் குடும்பதிலெ என்னா இருக்கு, யார் இருக்கான்னு சொல்லி நீ சிரிக்காத. நான் கெய்வி. நான் சுடுகாட்டுக்குப் போவலாம். ஒன்னெ நெனச்சாத்தான் எம்மனசு ஆறமாட்டங்குது. அதனால் சட்டுசடுக்குன்னு ஒரு குட்டியப் பார்த்து முடிச்சிடலாமின்னு இருக்கன். ஒனக்குன்னு ஒருத்தி வந்துட்டா எங்கவல வுட்டுடும். எங்கட்ட சீக்கிரமா மசானக்கரயிலெ வெந்துடும். மனக்கொறயோட ஆவியா வலயாது. எனக்கு என்னா இருக்கு? ஆனமுட்டும் பாக்குறன், ஆவாட்டி சாவறன். ஒரு கவலயுமில்லெ. பாலு குடிக்கிற புள்ளெய வுட்டுட்டு சாவறமேன்னு கவலயா, இல்லெ நண்டும் சிண்டுமா இருக்கிற புள்ளிவுளெ வுட்டுட்டு சாவறனேன்னு கவலயா? ஒண்ணும்கெடயாது. சாவு வல்லியேங்கிற கவலதான். அது ஒண்ணுதான் மனக்கொறயா இருக்கு... என்ன, எயிதிகிட்டு வரியா தம்பி”

“பின்னே, கொஞ்சம் பொறுமயா சொல்லு”

“எம்மனசுல இருக்கிற கொறயெல்லாம் சொன்னா எயிதுறதுக்கு இந்தமாரி ரெண்டு மாட்டு வண்டி காயிதம் பத்தாது. என்னாப் பண்றது? சரி நீ எயிது.”

“எம்மனசுல ஒரு கோரிக்கப் பண்ணிக்கிட்டு இருக்கன். அது சரி வந்தா சொல்லு, இல்லன்னா வுட்டுடு. நம்ப ஊருலெ இருக்கிறானே கஞ்சிகாச்சி, அவனோட பெரிய மவன் மூக்கன் இருக்கானில்லே, அவனுக்கு நாலும் பொட்டெ. அதுலெ மூணு குட்டிக்கி கண்ணாலமாயிப் போயிட்டாலுவ, கடேசி குட்டி இருக்கிறா, அவப்பேரு என்னா தம்பி?, ம், வனமயிலு. பாக்குறதுக்கு வள்ளமாட்டம் இருந்தாலும் பதக்கமாட்டம் இருப்பா. நம்ப ஊருலெ அவ ஒருத்தித்தான் எடுப்பா கண்ணுக்குப் பொருத்தமா இருக்கிறா. வெகு நாளா மனசிலெ ஆச இருந்தாலும் போன எட்டாம் நாளுதான் கேட்டன். ஆட்டுக்கு தல ஒடிக்க வந்தவகிட்டெ ‘சம்மதமாடி’ன்னு நேராவே கேட்டன். படிச்சவரு. மெட்ராசிலெ வேலெ பாக்குறவருக்கு, கலவெட்டுற, கரும்பு கட்டு தூக்குற என்னெயெல்லாம் புடிக்குமா?ன்னு திலுப்பிக் கேட்டுப்புட்டா. என்னாலெ வதுலு பேச முடியலெ. அவ மனசிலயும் ஆச இருக்குமாட்டம் இருக்கு. அவ ருதுவான சாதகத்தையும் ஒன்னோட ஜாதகத்தயும் போட்டுப் பாத்தன். இந்த மாரி சாதகப் பொருத்தம் நூத்திலெ ஒண்ணுதான் அமயுமின்னு அய்யரு அடிச்சிச் சொல்றான். எல்லாப் பொருத்தத்தயும் விட மொக பொருத்தம் இருந்தா சரிதான், மொக வாட்டமான குட்டிதான் அவ.”

“உள்ளூர்ன்னா பாடுனாலும் பேசுனாலும் எடுத்துவச்சி பாக்கும். நான் நாளக்கி செத்தா நாலு சனம் கூட்டமா வந்து எம்பொணத்தெ எடுத்துப்போடும். இந்த ஊருலெ நம்பிளுக்குன்னு நாலு சனம் வாணாமா? பெரிய கூட்டமுள்ள குடும்பம் அது. மேற்க்கால தெருவே அவ கூட்டம்தான். காசி ஆப்புடுதின்னு பட்டணத்தோட போயிட முடியுமா? பட்டணத்துக்காரனுவோ பகரா வெள்ளச் சட்டத்தான் போட்டிருப்பானுவோ. நெயலு வாட்டத்திலே குந்தி இருக்கிறதாலெ பொட்டச்சிவுலும் கொஞ்சம் வெளுப்பாத்தான் இருப்பாலுவோ. மத்தது ஒண்ணுமில்லெ. ரெண்டு நாளக்கி ஆடுவோகூட நடந்தாளுவோன்னா கூறமேலெ காயப்போட்ட கருவாடுமாரி ஆயிப்போயிடுவாளுவோ. நான் சொல்லுறது நெசம்தான். வெளுத்தத் தோளுக்காகப் பொண்ணு கட்டெ முடியுமா? காசி பணம் என்னா செய்யும்? சனங்களெ சம்பாரிக்கிறதுதான் கஷ்டம். நாளக்கி நான் செத்தா காசி பணமா வந்து மாரடிச்சி அயிவப்போவுது? உத்தெ மனுசாள்தான் ரெண்டு சொட்டு கண்ணு தண்ணீவுடும். காசிப் பணம் நம்பளுக்கு வாணாம். காசிப்பணத்தப் பாத்தா நான் ஒங்கப்பனுக்கு புள்ளெ பெத்தன்? காசி பணம் இருந்தா ஊருமெச்ச துணி கட்டலாம், நாலு நகயப்போட்டுப் பாக்கலாம். வேறென்ன? எல்லா ஆட்டமும் இந்தட்டயிலெ உசுரு இருக்கமட்டும்தான? அப்புறம் இல்லியா?”

“காசிப்பணத்துக்கு ஆசப்பட்டா ஒன்னெ படிக்க வச்சன்? அப்பிடி இருந்தா அப்பறமென்ன? நீ எட்டாவதோ ஒம்பதாவதோ படிக்கிறப்ப ஒப்பன் காயிலாவுல கெடந்தப்ப, ஒங்க பெரியப்பன்காரன் வந்து இனிமே பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப வாணாம். எங்கூட அனுப்பு மோளம் கத்துக்கட்டும். சாவு, கண்ணாலமின்னு போய் ரெண்டு தட்டுத்தட்டுனா ரெண்டு காசி வரும்ன்னு சொல்லி ஒங்கையப் புடிச்சி அயிச்சிக்கிட்டுப்போனான். ஒப்பன்காரன் மரமாட்டம் பாத்துக்கிட்டு நின்னான். அண்ணங்கார்னெ எதுத்துப்பேச அவனுக்கு வாய் வல்லெ. ‘என்னடா இது, நம்ப வச்சியிருக்கிறதே ஒரு புள்ளெ, அதெயும் மோளமடிக்க கூப்புட்டுக்கிட்டுப்போறன்னு போறானேன்’னு சொல்லி, பாதி தெருவுக்கு ஓட்டமா ஓடிப்போயி ஒங்க பெரியப்பன்காரன் கால்ல வியிந்து கும்புட்டு, ‘எம்புள்ளெய வுட்டுடு, அது செத்தாலும் சாவட்டும், இந்த வயிசியிலே ஒயச்சி திங்க வாணாம், அதிலயும் சாவு மோளமடிச்சி திங்க வாணாம்ன்னு சொல்லி’ அயிதன். என்னெ எட்டி ஒதச்சிப்புட்டு எப்பிடியாச்சும் போடின்னு சொல்லிப்புட்டுப் போனான். அப்ப நான் ஒங்கால்ல வியிந்து கும்புட்டு பள்ளிக்கூடத்துக்குப் போ சாமின்னு கும்புட்டன்.

மத்த சனங்கமாரி நான் ஒன்னெ அதெ செய், இதெ செய், மாடு மேய்க்க, ஆடு மேய்க்கப் போன்னு சொன்னது கெடயாது. அதெல்லாம் ஒனக்கு நெனவுல இருக்கோ இல்லியோ. என்னால முடியுமா? பெத்தவளாச்சே”என்று சொல்லும்போதே மொட்டையம்மாளுக்கு அழுகை வந்துவிட்டது. முகத்தை கவிழ்த்துக் கொண்டாள். அவளுடைய உடம்பு குலுங்கியது. சேகர் எழுதுவதை நிறுத்திவிட்டு அழுது கொண்டிருந்தவளையே பார்த்தவாறு இருந்தவனுக்கு கொஞ்ச நேரத்திற்கு மேல் பொறுமை இல்லை. “அப்பறஞ் சொல்லு” என்று சேகர் முறைத்தான். அதன்பிறகுதான் முகத்தை நிமிர்த்துக் கொண்டு மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள்.

“நான் சொல்றன்ங்கிறதுக்காக நீ ஒருத்தியயும் கட்டெ வாணாம். எனக்கு இவளத்தான் புடிச்சியிருக்குன்னு சொல்லி நீ ஒரு நரிகுறத்திய கொண்டாந்தாலும் எனக்கு பரிபூரண சம்மதம்தான். எனக்கென்னா? நானா அவகூட குடும்பம் நடத்தப்போறன்? நான் கண்ணெ மூடிட்டப் பின்னாலெ இந்த ஊடு இருளடஞ்சி கெடக்கக் கூடாது. அதத்தான் ஒங்கிட்டெ வேண்டுறன். நல்லது நடந்துச்சோ கெட்டது நடந்துச்சோ எப்பிடியோ எங்காலம் ஓடிப்போயிடிச்சி. இனி ஒங்காலம்தான் எப்பிடியோ எங்காலமா இருந்தா ஒரு கை புடி சோள நொய்யும் ரெண்டு கொத்து முருங்க தவயும் இருந்தாபோதும். ஒரு நாள் பொயிது ஓடிடும். இன்னிக்கி அப்பிடியா?” என்று சொன்னவள் நிராசையுடன் சேகரிடம் கேட்டாள்: “என்னா தம்பி நாலே நாலு வரிதான் எயிதிருக்க? நான் சொன்னத எல்லாத்தயும் எயிதிலியா?”

“நீ சொன்னதுல ஒண்ணுகூட வுடலெ. வேணுமின்னா படிச்சிக்காட்டுட்டா” என்று சட்டென்று கேட்டதும் “படி” என்று சொல்லத்தான் நினைத்தாள். என்மேல் நம்பிக்கை இல்லையா என்று கேட்டு பாதியிலேயே போட்டுவிட்டு போய்விட்டால் என்ன செய்வதென்ற கவலையில் லேசாக பசப்புச் சிரிப்பு சிரித்து, “ஒம்பேர்ல நம்பிக்க இல்லாமியா? ...இம்புட்டு நேரத்துக்கும் நாலே நாலு வரி எயிதிருக்கியே, கனமா இல்லியேன்னு கேட்டன்” என்று சொல்லி பசப்பினாள்.

“எல்லாம் சரியாத்தான் இருக்கு. கடேசிலே படிச்சிக்காட்டுறன். மேலெ சொல்லு” என்று வெறுப்புடன் சொல்லிவிட்டு எழுதுவதற்கு தயாராக இருந்தான்.

“எந்த எடத்திலெ வுட்டன்?” என்று மொட்டையம்மாள் கேட்டதும், “வனமயில் கண்ணாலம் கட்டுறதப்பத்தி” என்று சேகர் எடுத்துக் கொடுத்தான். அவன் சொன்னதை காதில் வாங்காதவள் போல உட்கார்ந்திருந்தவள் திடீரென்று நினைவுக்கு வந்ததை சொல்வது மாதிரி சொன்னாள்.

“தம்பி ஒன்னோட பேர் நாமத்துக்கு பாத்தன். இன்னம் மூணு மாசத்துக்குள்ளார வெரய செலவு வரும்ன்னு இருக்காம். அதோடவும் நாடு வுட்டு நாடு போவனும்ன்னும் இருக்காம். கேடு காலம் வந்தா மணியடிச்சிக்கிட்டு வராது. போற வர எடத்திலெ வாய் பதனமா கை பதனமா இரு. காரு ரயிலு ஏறயிலெ பாத்து ஏறு பாத்து எறங்கு. ஒனக்கு ஒண்ணு ஆச்சின்னா அவ்வளவுதான். என் உசுரு தங்காது. ராவும் பவலும் ஒங்கவலதான் எனக்கு. ஒங்கூட பொறந்ததெல்லாம் உசுரோட இருந்திருந்தா எனக்கு இம்மாம் மனக்கவல இருக்காது. ஒங்கூட பொறந்தது மொத்தம் ஆறுபுள்ளிவோ. மொத ரெண்டும் செத்து செத்து பொறந்துச்சி. சாவு புள்ளெயா பெக்குறன்னு சொல்லி என் மாமியாக்காரி அதாம் ஒப்பன பெத்த பாட்டியா என்னெ ஒதுக்கி வச்சிட்டா. ஒப்பன் ஊட்டு சனங்களும் எங்கிட்டெ மொவம் கொடுத்து பேசாதுவோ. அந்தக் கெய்வி அம்மாம் கட்டுமானம் பண்ணி வச்சியிருந்தா. மூணாவதா நீ பொறந்த. புள்ளெ பெத்து கிடந்தவள என்னா ஏதுன்னு யாரும் வந்து எட்டிப் பாக்கலெ. நானேதான் பச்ச ஒடம்போட காயம் அரச்சி தின்னன். அப்பறம் பொண்ணு ரெண்டு ஆணு ஒண்ணு பொறந்துச்சி. வரிசியா புள்ளிவோ பொறந்தாலும் ஒண்ணும் நெலச்சி தரிச்சி வாயல. அவசர அவசரமின்னு ஆறுமாசம் ஒரு வருசமின்னு ஒவ்வொன்னும் மண்ணுக்குள்ளாரப் போயிடிச்சிவோ. எல்லாத்தயும் வாரி கொடுத்துட்டன். ஒப்பனும் போயி சேந்துட்டான். இப்ப நீ ஒருத்தன்தான் இருக்க. நீதான் எனக்கு குல குருவா இருக்க. அப்பிடித்தான் நான் எண்ணிக்கிட்டிருக்கன். நீயும் எனக்குக் காம்ப காட்டிப்புடாத”

எழுதிக்கொண்டே, “இன்னம் இருக்கா?”என்று சேகர் கேட்டான். அவன் கேட்ட விதத்தைப் புரிந்து கொள்ளாமல் கண்கள் கலங்க உடைந்துபோன குரலில் மொட்டையம்மாள் தரையைப் பார்த்தவாறு சொன்னாள்.

“ஒண்ணே ஒண்ணுதான் எம்மனசிலெ இருக்கு. நான் செத்தா எம்பொணத்த ஊரு மெச்ச எடுக்கனும். தேர் பாடெ கட்டு. ஒப்பனுக்கு கட்டுனாப்ல. உள்ளூர் பற மோளத்தோட பாசாரு தம்ரு மோளமும் வை. பாடெ மத்தியிலெ கொல்லு காசி பிரிக்காயிலெ கை கூசாம தோட்டி தொம்பன், வண்ணான் கூத்தாடின்னு ஒருவரும் மனங்கோணக்கூடாது. கேட்டெ காசிய கொடுத்துப்புடு. கசம்பன்னு பேரூ எடுக்காத. நம்ப ஊட்டுலெ எஞ்சாவுதான் கடேசி சாவு. அதனால வானவெடி வுடு. கயிதூரு ஆட்டக்காரி செடலோட ஆட்டம் வை. ராத்திரிக்கு கர்ணமோட்சம் கூத்து வைக்காம வுட்டுப்புடாத. இதுக்கெல்லாம் நீ கையறுத்துக்க வேண்டியதில்லெ. ரெண்டு பயிர் ஆடு இருக்கு. இன்னிக்கி வித்தாக்கூட இருவதனாயிரம் முப்பதனாயிரம் போவும். அப்பப்ப ஆடு வித்தது, குட்டி வித்தது, சாவு ஆடு வித்ததுன்னு வந்த காசியில, ரெண்டு ஊட்டுக்குண்டான சாமான வாங்கிவச்சிருக்கன். ஒரு கூண்டு கோயி இருக்கு. அதெ வித்து காசாக்கிப்புடு. வாரத்துக்கு ஆறு பன்னிக்குட்டிவுளெ புடிச்சி வுட்டிருக்கன். அதுவுளயும் காசாக்கிப்புடு. அதோட வடக்கு தெரு காசியம்மா வல்லியா மூணாயிரம் தரனும். வாங்கி ரெண்டு வருசமாச்சி. பாண்டு பத்திரமின்னு ஒண்ணுமில்லெ. பக்கத்து ஊட்டு வேலாயி மவ வயசிக்கு வந்தப்ப நானூரு வாங்குனா. கேட்டா ‘இந்தா இந்தா’ங்கிறா. காசி கையிக்கு வரல. இந்தமாரி இன்னம் ரெண்டு ஒருத்தர் தரனும். தோட்டி மவன் பெரிய பய கண்ணாலத்துக்கு ஒரு மரக்கா அரிசியும், ஒரு தூக்கு புளியும், ரெண்டு பரங்கி காயும் வச்சன். இப்பிடி ஊரு மூச்சூடும் செய்வின செஞ்சி வச்சிருக்கன். நாளக்கி நம்பப் புள்ளெக்கி நாலு சனம் வரனுமே, செய்யனுமேன்னு, எல்லாத்தயும் ஊகமாக ஒரு சீட்டுலெ எயிதி வச்சியிருக்கன். யாரும் திலுப்பி செய்யலன்னா கேக்கனுமில்லெ. அதுக்காக நாளு கெயமயோட விகரமா எயிதிவச்சிருக்கன்”

“சீட்டு ஆவப்போவுது. சீக்கிரமா சொல்லு”

“ஒரு சீட்டுத்தான் கொண்டாந்தியா?”

“ஆமாம் ஆமாம்”

“அப்ப இதெ மட்டும் எயிதிப்புடு” என்று சொன்னவள் சந்தேகத்துடன் “இன்னம் ரவ எடந்தான் இருக்கா?” என்று கேட்டாள். ஆமாம் என்பதுபோல் சலிப்புடன் தலையை மட்டும் ஆட்டினான் சேகர்.

“ரெண்டே ரெண்டு வாத்ததான். எயிதிப்புடு” என்றவள் சிறிது நேரம் யோசித்து விட்டு சொன்னாள்.

“அம்மா ஏதாச்சும் நெனச்சுக்குவான்னு பணம் காசி அனுப்பாத. சீல துணியும் வாணாம். நான் என்னெ எளங்குட்டியா புதுத்துணி கட்டிப்பாக்க, ஆசப்படெ. எனக்காக நீ ஒன் ஒயலெ செலவுப் பண்ணாத. ரத்த ஓட்டம் இருக்கமுட்டும் நானே பாத்துக்கிறன்” என்று சொன்ன மொட்டையம்மாள் சிறுபிள்ளைமாதிரி ஏக்கத்துடன் “இன்னம் ரவ எடமிருக்குமா?” என்று கேட்டாள். இல்லை என்பதற்கு சேகர் உதட்டை மட்டுமே பிதுக்கிக் காட்டினான்.

சேகர் எழுதிக்கொண்டிருந்தான். அவன் எழுதுவதை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் மொட்டையம்மாள். அவன் எழுதி முடித்து காகிதத்தை மடித்து உரைக்குள் போடப்போனபோது ரொம்ப ஆவலாக, “செத்த படிச்சிக்காட்டன்” என்று கேட்டதற்கு எரிச்சல்பட்ட சேகர், “எல்லாம் சரியாத்தான் எயிதிருக்கு. மனுசனுக்கு வேற வேலெ இல்லியா?” என்று வெடுக்கென்று சொன்னவன், காகிதத்தை உறைக்குள்போட்டு ஒட்டி, விலாசம் எழுதினான். அப்போது மொட்டையம்மாளின் முகம் மாறிற்று. வெறுப்புடன் அவனைப் பார்த்து “என்னாத்தெ எல்லாத்தயும் எயிதினெ? நான் இங்க சொவம். நீ அங்க சொவமா? ஊருலெ திருனா போட்டிருக்கு. அவசியம் வா. ஒங்கிட்டெ நிறயா பேசணும். நேர்ல வா. எல்லாத்தயும் பேசிக்கலாமின்னு எயிதிருக்க. அதான? எனக்கு எல்லாமும் தெரியும்டா தம்பி” என்று சொல்லிவிட்டு அவனிடமிருந்து பிடுங்காத குறையாக கடித உரையை வாங்கிக்கொண்டாள். உண்மை வெளிப்பட்டுவிட்ட வெட்கத்தில் சேகர் ஒன்றும் சொல்லாமல் அவசரமாக எழுந்து வெளியே போனான்.
நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...
படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...
About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com