புதன், 20 ஜூலை, 2011

Kuttu..

My Photoஎதிர் துருவ அரசியலும் ஜெயலலிதாவின் மாறாத சர்வாதிகாரமும்: சமச்சீர் கல்வியில் கிடைத்த குட்டுக்குப் பிறகாவது மக்கள் உணர்வுகளுக்கும் சமூக நலனுக்கும் மதிப்பளிக்கப்படுமா?


மாயா





ஒரு ஜனநாயக தேசத்தை மன்னராட்சிப் பாணியில் ஆட்சி செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்பதற்கு சமீபத்திய தேர்தலில் தி.மு.கவுக்கு கிடைத்த தோல்வியே சாட்சி. அதே போல, ஒரு மக்களாட்சியை சர்வாதிகாரத்துடன் ஆட்சி செய்தால் சில சமயங்களில் அவமானங்களையும் சந்திக்க நேரும் என்பதற்கு சமச்சீர் கல்வி விவகாரமே சாட்சி. இதே போல சர்வாதிகாரியாக ஆட்சி செய்ததன் விளைவாக 1996ஆம் ஆண்டிலும் 2006ஆம் ஆண்டிலும் ஆட்சியை பறி கொடுத்த ஜெயலலிதா எந்த பாடத்தையும் கற்கவில்லை என்பது மீண்டும் நிரூபிக்கப்படுகிறது. தி.மு.க அரசு கொண்டு வந்தது என்பதாலேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை குப்பைத் தொட்டியில் வீச நினைக்கும் ஜெயலலிதா நீதித் துறையிடம் வரிசையாக மூன்று முறை தோற்றிருக்கிறார். இந்த வருடம் சமச்சீர் கல்வியையே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்திருக்கும் தெளிவான தீர்ப்பையும் மீறி ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செல்லக்கூடும் என்று பேசப்படும் அளவுக்கு பிடிவாதமிக்கவராக ஒரு தலைவர் இருப்பது ஆபத்தானது. அ.தி.மு.க அரசின் பிடிவாதம் மக்கள் மத்தியில் அக்கட்சியின் ஆட்சிக்கு எவ்வளவு கெட்ட பெயர் ஏற்படுத்துகிறது என்ற தகவல் அவரைச் சென்று சேர்கிறதா என்று தெரியவில்லை.



ஒரு வலுவான எதிர்க்கட்சியே இல்லாமல் ஆட்சி செய்து வரும் சமயத்தில் ஜெயலலிதா இவ்வாறு வலியப் போய் பிரச்சனையை சந்திப்பது அவரின் மாறாத இயல்பைக் காட்டுகிறது. அ.தி.மு.க ஆட்சி குறித்து என்னென்ன நல்லெண்ணங்கள் உருவானதோ அவை அனைத்தையும் சமச்சீர் கல்வித் திட்டத்தில் அவரது பிடிவாதம் நாசமாக்குகிறது. இதே நிலை தொடர்ந்தால் 2001-06 ஆட்சிக் காலம் போலவே ஜெயலலிதா மக்களால் வெறுக்கப்படும் தலைவியாக மாறிவிடக்கூடும். 1 கோடி மாணவர்களின் கல்வியை நிர்கதியில் வைத்திருப்பது அவரின் முந்தை ஆடு, கோழி பலி தடைச் சட்டத்தைவிட மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.



உண்மையில் ஜெயலலிதா கெட்ட பெயருக்கு பதில் நிறைய நிறைய நல்லெண்ணத்தை உருவாக்க வேண்டிய தருணம் இது. ஏனெனில் ஒரு மிகப் பெரிய கண்டத்தை அடுத்து கடக்கவிருக்கிறார் அ.தி.மு.க தலைவி ஜெயலலிதா. பெங்களூருவில் நடந்து வரும் ஜெயலலிதாவுக்கு எதிரான 66 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்புக் கட்டத்தை எட்டிவிட்டது. அதில் அவர் சிறை செல்வது உறுதி என்று சட்டத் துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கள் தரப்பு தரப்பு வாதங்களை முன்வைப்பதற்காக ஜூலை 27ந் தேதி நேரில் ஆஜராகி ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது. அவ்வாறு குற்றவாளிக் கூண்டில் நிற்பதே அவரின் பிம்பத்திற்கு மிகப் பெரிய அடியாக இருக்கும். தி.மு.கவினர் ஏராளமானோர் வரிசையாக சிறை சென்றாலும் ஒரு கட்சியின் தலைவரே சிறை செல்வது என்பது அக்கட்சியின், ஆட்சியின் பிம்பத்திற்கு தீராத களங்கத்தை உண்டாக்கும்; மற்ற அனைத்தையும்விட மோசமான களங்கமாக அது இருக்கும். மீண்டும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டிய தேவை உருவாகி வரும் ஒரு காலக் கட்டத்தில், ஜெயலலிதா தனது சர்வாதிகார குணங்களை மாற்றிக்கொள்ளாமலிருப்பது அவரது கட்சிக்கு மட்டுமின்றி, மக்களுக்கும் சமூகத்திற்கும் ஆபத்தானது.



கருணாநிதியின் எதிர் துருவமாக செயல்படும் ஜெயலலிதா, தி.மு.க கொண்டு வந்த திட்டம் என்றோ, சமச்சீர் கல்வியில் உள்ள குளறுபடிகளை வைத்து அதை நிராகரிக்க வேண்டும் என்றோ நினைப்பது ஒரு வழி. மாநில வாரியம், மெட்ரிக் வாரியம் என்ற பிரிவை அகற்றியது மட்டுமே தி.மு.கவின் சமச்சீர் கல்வியின் ஒரே சாதனை என்பதை புரிந்துகொண்டு கல்வியாளர்கள் அனைவரும் விரும்பும் பொதுக் கல்வியை நோக்கி அடியெடுத்து வைப்பது இன்னொரு வழி. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை புதிய முழுமையான காப்பீட்டுத் திட்டம் என்றும், கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தை பசுமை வீடுகள் திட்டம் என்று கொண்டு வர முடிந்த ஜெயலலிதாவால், சமச்சீர் கல்வித் திட்டத்தை மேம்படுத்தப்பட்ட பொதுக் கல்வித் திட்டமாக கொண்டு வர முடியாதா? அதைத் தடுப்பது யார்? சோ போன்ற வலதுசாரி, அடித்தட்டு மக்கள் விரோத ஆலோசகர்களா? தங்களின் கல்விக் கொள்ளைக்கு எந்த கடிவாளமும் வர விரும்பாத மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பண செல்வாக்கா? ஜெயலலிதாவுக்கும் மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத அவரின் மனசாட்சிக்குமே வெளிச்சம்.