ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

Na.Murugesh.

வெளியிலிருந்து வருகிறவர்கள்: யாசிப்பவர்கள்


ந. முருகேசபாண்டியன்





பச்சைப் பசலென்ற இயற்கை எழிலும் தூய்மையான காற்றும் எனக் கிராமம் பற்றிப் பொதுப் பிம்பம் கட்டமைக்கப்பட்டுளளது. எல்லோரும் தன்னிச்சையுடன் சுதந்திரமாக இயங்குகிற போது சந்தோஷமும் உற்சாகமும் பொங்குவதாகத் தோன்றும். கள்ளம் கபடமற்ற வெள்ளந்தியான மனிதர்களின் சுபாவம் மனதுக்கு நெருக்கமாக இருக்கும். இவையெல்லாம் ஒருபக்கக் காட்சிகள். இன்னொருபுறம் கிராமம் என்றாலே கண்காணிப்புக்கு உட்பட்ட இறுக்கமான அமைப்பு என்பது பலருக்குத் தெரியாது. சாதி, மதம், வீட்டு வகைப்பு என ஒவ்வொருவரின் அடையாளமும் வரையறுக்கப்பட்டிருக்கும். ஒரு பெரிய கிராமம் எனினும் அங்கிருக்கும் ஒவ்வொருவருடைய நெற்றியிலும் இன்னார் பேரன், இன்ன சாதியைச் சார்ந்தவர் என்பது பதிவாகியிருக்கும். அதிகாரத்தின் வீச்சும் கண்காணிப்பின் அரசியலும் எல்லோருடைய வாழ்க்கையிலும் பதிவாகியிருக்கும். ஊருக்கு வெளியே இருக்கும் ஓடையில் வெள்ளம் புரண்டோடும்போது, பத்துப் பன்னிரண்டு வயதில் சிறுவர்கள் குதித்து நீச்சலடித்துக் கரையேறுவோம். அந்தத் தகவல் எங்கள் தலைமுடி காய்வதற்குள் எங்கள் பெற்றோரின் காதுகளுக்குப் போய்விடும். சின்னப் பையன்களுக்குக் கூட சுதந்திரமான இயக்கம் சாத்தியப்படாது. அதிலும் ஆதிக்கச் சாதியினரின் அதிகாரம் சிறுவர்களின் மீது பாய்வது கொடூர மாக இருக்கும்.



கிராமம் என்பது பெரும் வெளி போலத் தோன்றினாலும், அவ்வமைப்பிற்குள் வெளியிலிருந்து வந்து போகிறவர்கள் யார்யாரெனத் தெரிந்துவிடும். பொதுவாகக் கிராமத்திற்குப் பரதேசிகளும் சாமியார்களும் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அவர்களை யாரும் தொந்தரவாகக் கருதமாட்டார்கள். பகல் முழுக்க வெயிலில் கடுமையாக உழைத்துச் சம்பாதிக்கும் குடியானவர்கள், எவ்விதமான உடலுழைப்பும் இல்லாமல், வீட்டு வாசலில் சோறு கேட்டு நிற்பவர்களைக் கேவலமாக எண்ண மாட்டார்கள். காவியுடை அணிந்த சாமியார்கள் தவிர பிச்சைக்காரர்களும் கிராமத்துக்கு வருவார்கள். ‘நல்ல உடம்பு இருக்கு, உடல் வளைஞ்சு வேலை செய்தால் என்ன கொள்ளை' என்று சொல்வதைச் சாதாரணமாகக் கேட்கலாம்.



‘அன்னைக் காவடி' தூக்கி வரும் சாமியார் உரிமையுடன் தானியம் கேட்டு வருவார். குளித்து முடித்துச் சுத்தமான காவியுடை உடுத்தி உடம்பெங்கும் திருநீறு பட்டையுடன் சாமியார் வருவார். அவருடைய தோளில் காவடி இருக்கும். உலக்கை மாதிரியான மரமானது வெண்கலப் பூண் பொருத்தப்பட்டிருக்கும். மரத்தின் இடையே பித்தளையிலான பூ வேலைப்பாடு மிக்க தகடுகள் பதிக்கப்பட்டிருக்கும். மரத்தின் முன்னும் பின்னும் தொங்கும் பித்தளைச் சங்கிலியில் தொங்கும் பித்தளைப் பாத்திரங்களில் திருநீறு பட்டையின் பளபளவென மின்னும். மரத்தில் பொருத்தப்பட்டுள்ள வெண்கல மணிகள் சாமியார் நடக்கும்போது ஒலித்துக் கொண்டேயிருக்கும். அவர் வீட்டு வாசலில் நின்று ‘அன்னக் காவடி’ என்று குரல் மட்டும் கேட்பார். சாமியாரின் மிடுக்கான தோற்றப் பொலிவும் பளபளக்கும் பித்தளைக் காவடியும் காரணமாக யாரும் இல்லை' என்று சொல்லமாட்டார்கள். பிச்சை கேட்பதை கலை நுணுக்கத்துடனும் அழகாகவும் கேட்ட ‘அன்னக் காவடிகள்' எழுபதுகளிலே காணாமல் போய்விட்டனர்.



பிச்சை கேட்டு வருவதில் கௌரமாகச் செயற்படுகிறவர்கள் உலகமெங்கும் இருக்கின்றனர். பூம்பூம் மாட்டை ஓட்டிக் கொண்டு, தோளில் உறுமியை மாட்டிக் கொண்டு வீடுவீடாக வரும் பூம்பூம் மாட்டுக்காரர் கிராமத்துத் தெருக்களில் கவர்ச்சிகரமானவர். பூம்பூம் மாட்டின் முகத்தில் அழகிய வண்ணமயமான முகபடம் அணியப்பட்டிருக்கும்; கொம்புகளில் பல வண்ணத் துணிகளால் சுற்றுப்பட்டு நுனியில் குஞ்சலம் தொங்கவிடப்பட்டிருக்கும் துணியில் ஆங்காங்கே கோலிகள, பாசிகள் பொருத்தப்பட்டு பார்க்க அழகாக இருக்கும். பூம்பூம்மாடு தானகவே நடந்து போகும். மாட்டுக்காரர் கழுத்தில் கட்டித் தொங்க விட்டுள்ள உறுமி மேளத்தை அடித்துக் கொண்டு பின்னே நடந்து வருவார். வீட்டு வயலில் நிற்கும் மாட்டிடம், மாட்டுக்காரர், ‘இந்த வீட்டு மகராசி மகாலட்சுமி நமக்கு அரிசி போடுவாங்களா' என்று கேட்பார். அம் மாடு ‘ஆமாம்’ என்பது போலத் தலையை ஆட்டும். ‘இந்த வீட்டுக்கு நல்ல சேதி வரபோகுமா' என்ற கேள்விக்கும் மாடு தலையை அசைக்கும். மாட்டுக்காரர் கேட்கும் கேள்விகளுக்கு மாட்டின் எதிர்வினை பார்க்க வேடிக்கையாகவும் அழகாகவும் இருக்கும். அரிசியை வாங்கியவுடன் மாட்டுக்காரர், ‘அம்மாவுக்கு வணக்கம் சொல்லு' என்றவுடன், மாடு முன்னங்காலை மடித்து, தலையைத் தாழ்த்தி வணக்கம் செய்வது அருமையான காட்சியாக இருக்கும். பூம்பூம் மாடு போகும் வீட்டிற்குப் பின்னால் சிறுவர் சிறுமியர் திரண்டு படை போலப் பின்னேயே போவார்கள். அந்த மாடு, மாட்டுக்காரரின் எல்லாப் பேச்சுக்கும் பணிந்து செயற்படுவது எப்படி என்று சிறுவர்கள் லயிப்புடன் பேசிக் கொள்வார்கள். பூம்பூம் மாடு இல்லாத தெருக்களாய் இன்றைய கிராமத்துக் தெருக்கள் வறண்டு போய்விட்டன.



கிராமத்தினர் தேநீர் குடிப்பது வீட்டு வாசலில் அல்லது திண்ணையில் தான். இரவு உணவை வீட்டுக்கு முன்னே தரையில் அமர்ந்து சாப்பிடும் குடும்பங்களும் ஊரில் உண்டு. பெரும்பாலும் பகல்வேளையில் ஓய்வாக இருக்கும்போது வீட்டுத் திண்ணைகள் தால் தங்குமிடமாக இருக்கும். தொளதொளத்த சட்டை தோளில் கறுப்புப் போர்வை, தலையில் பெரிய உருமா, கையில் கம்புடன் திடீரென ஒரு பெரியவர் வீட்டு வாசலில் வந்து நின்று, ‘இந்த வீட்டுக்கு நல்ல சேதி வரப் போகுது' என்று சொல்லிவிட்டுக் கையிலிருக்கும் குடுகுடுப்பையை ஆட்டுவார். மணிச்சத்தத்துடன் ஒலிக்கும் சிறிய உடுக்கையின் ஓசை வீட்டிலிருப்போர் கவனத்தை ஈர்க்கும். ‘ஜக்கம்மா சொல்றா. . . . நினைச்ச காரியம் நடக்கப் போகுது’ என்று சொல்லும்போது, அவரைத் தவிர்க்கவியலாமல் போய்விடும். குடுகுடுப்பைக்காரர்கள் நல்ல சேதியை நன்னம்பிக்கையாக எல்லோருடைய மனங்களிலும் விதைத்துக் கொண்டிருந்தனர். ‘இந்த வீட்டில் ஒரு கன்னி- தீயில் மாண்ட கன்னி ஈசன மூலையில் இருக்கா- அவள் ஒரு குறையு வராமல் பார்த்துக் கொள்ளுவாள்' என்று சொன்னவுடன், வீட்டுக்காரர் அரைக்கால் படியளவு அரிசி அல்லது சில்லறைக் காசைக் கொடுப்பார். ‘சாமி ஏடு போட்டுப் பார்க்கலாமா’ என்றவுடன் சரி எனத் தலையை ஆட்டினால் போதும். குடுகுடுப்பைக்காரர் திண்ணையில் உட்கார்ந்து, கண்களை மூடி, ‘தாயே ஜக்கம்மா நல்ல வாக்கு சொல்லு. . .நல்ல வழி காட்டும்மா’ என்று வேண்டி கையில் பனையோலை ஏட்டைக் கையில் வைத்துக் கொண்டு சிறிய கம்பியை வீட்டுக்காரரிடம் கொடுப்பார். அவர் ஓலைகளுக்கிடையில் கம்பியை நுழைத்தவுடன் அந்த ஏட்டிலுள்ள படம், வாசரங்களைக் குடுகுடுப்பைக்காரர் காட்டுவார். இம்மாதிரி மூன்று தடவைகள் காட்டுவார். புராணக் காட்சிகள், சாமி படங்கள் கோட்டோவியமாக வரையப்பட்டிருக்கும் ஓலையை வைத்து எதிர்காலப் பலன்கள் சொல்லப்படும். சீதை அசோகவனத்தில் இருக்கும் ஓவியம் வந்தால், ‘இப்ப உங்களுக்குக் கஷ்டகாலம்தான். ராமபிரான் வந்து காப்பாத்துற மாதிரி விரைவில் அது நீவ்வி விடும்' என்று சொல்லும்போது கேட்பவர்கள் தலையை ஆட்டுவார்கள். பெரும்பாலும் கண்ணேறு, கண் திருஷ்டி காரணமாக உடல் நலக் கோளாறு, பொருளாதாரச் சுணக்கம் ஏற்பட்டுள்ளது, பரிகாரம் பண்ண வேண்டும் என்று குடுகுடுப்பைகாரர் சொல்லும் தொனியே, கேட்பவருக்குப் பயத்தை உருவாக்கிவிடும். தான் ஏதோ மீள இயலாத பிரச்சனை, உருவாக்கி விடும். கஷ்டத்தில் மாட்டியிருப்பதாக நினைக்கத் தொடங்குவார். பிறகென்ன? கோழி, பழைய வேட்டி, நிறை நாழி நெல், 51 ரூபாய் தட்சிணையை வாங்கிக்கொண்டு போய் தீட்டுக் கழிக்கிறேன் என்று விளம்பிப் போய் விடுவார். தலைக்கு வந்தது. தலைப்பாகையோடு போனது போல வீட்டுக்காரர் நினைத்துக் கொள்வார்.



இரவுவேளை. அம்மாவாசை அன்று கும்மிருட்டாக இருக்கும். தெரு விளக்கு எல்லாம் கிராமத்துக்கு வராத காலம். திடீரென நள்ளிரவு நேரத்தில் இருளைக் கிழித்துக் கொண்டு குடுகுடுப்பை. ஒலிக்கும் சத்தம் கணீரெனக் கேட்கும். தெரு நாய்களும் இடைவிடாமல் குரைத்துக்கொண்டிருக்கும். தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருக்கும் பெரிசுகள் எழுந்து உட்கார்ந்து காதைக் கூர்மையாக்குவார்கள். நாய் குரைக்கும் சத்தம் கேட்டு விழிக்கும் சிறுவர்களுக்குக் குடுகுடுப்பைச் சத்தம் பயத்தை ஏற்படுத்தும். உண்களை இறுக்க மூடிக் குப்புறப்படுத்துக் கொள்வார்கள். பேய்களும் முனிகளும் உலாவும் நள்ளிரவில் சுடுகாட்டுக்குப் போய்விட்டு வந்து ஜக்கம்மாவின் அருளுடன் குறி சொல்லும் குடுகுடுப்பைக்காரரின் வாக்கினை வரிக்கு வரி உண்மை என்று நம்புகிறவர்கள் ஊரில் பலர் இருந்தனர். “இந்த வீதியிலே இருக்கிற ஒரு வீட்டுக்கு கெட்ட சேதி வரப் போகுது. . . ஜக்கம்மா சொல்றா. . . பெரிய உசிரு போய்ச் சேரப்போகுது. . . ஐயோ. . .ன்னு போகப் போகுது. . . ஜக்கம்மா சொல்றா” என்று சொல்லிவிட்டு குடுகுடுப்பையை ஒலித்தவாறு நடந்து போகிற குடுகுடுப்பைக்காரரின் ‘பேச்சு' அடுத்த நாள் பகலில் தெரு முழுசாகப் பேச்சாக இருக்கும். சில வீடுகளில் முன்னால் ஓரிரு வார்த்தைகளிலும் வாய்க்கு வந்ததை ‘வாக்கு' என்ற பெயரில் சொல்லிவிட்டுப் போகிற சாமக் கோடாங்கி அல்லது ராக் கோடாங்கியின் சொல்லுக்குக் கிராமத்துப் பெரும் மதிப்பு இருந்தது. இருட்டில் சாமக் கோடாங்கி எதிரில் போக பெரிய ஆட்களே பயப்படுவார்கள். ஏதாவது கெட்டது நிகழ்ந்துவிடும் என்று நம்பினர்.



மறுநாள் பகலில் அதே குடுகுடுப்பைக்காரர் ஊருக்குள் வந்து வீடுவீடாகக் குறி சொல்லும்போது, நெல், அரிசி அதிகம் கிடைக்கும். சில பெண்கள் நேற்று ராத்திரி சொன்ன குறியை இன்னும் விளக்கமாகக் சொல்லுமாறு கேட்டுக் காசு தருவார்கள். கிராமங்களில் பெரும்பாலும் வயதானவர்கள் சரியான பரமாரிப்பின்றி திண்ணையில் கட்டப்பட்டுள்ள தென்னந்தட்டி அல்லது சாக்குப் படுதாவுக்குள் படுத்துக் கிடப்பார்கள். அதிலயும் பெரிய உசிரு மேலூருக்குக் கிளம்பி போகுது என்ற வாக்கு, யார் அந்தப் பெரிசு என்று யோசிப்பார்கள். ஓரிரு வாரங்களுக்குள் யாராச்சும் வயதானவர் இறந்து விட்டால் போதும், ‘எனக்கு போன விசாலக் கிழமை ராத்திரி சாமக் கோடாங்கி சொல்றப்பவே சந்தேகமாக இருந்தது. உங்க அப்பச்சி தான் போகப் போறார்ன்னு. . . இப்ப எப்படி சரியாய் போச்சுப் பார்த்தாயா' எனது இழவு வீட்டில் பேசிக் கொண்டிருப்பார்கள். குடுகுடுப்பைக்காரர் எங்கிருந்து வருகிறார் என்று யாருக்கும் தெரியாது. உம்பளத்து நாயக்கரு. . ஜக்கம்மாவோட அருள் பெற்றவர் வாக்குப் பலிக்கும் என்ற நம்பிக்கை மட்டும் பரவலாக இருந்தது.



அறுவடை நேரம் கிராமத்தில் ஆணும் பெண்ணுக்கும் ஆயிரத்தெட்டு வேலைகள் இருக்கும். அந்த ஒரு மாதம் யாருக்கும் உட்கார நேரமிருக்காது. அந்த நேரத்தில் மணியாட்டிக்காரர்கள் ஊருக்குள் நுழைவார்கள். அவர்களுக்கு நாழிக்காரர் என்று இன்னொரு பெயர் இருந்தது. வெள்ளையிலான நீள அங்கியை உடலில் அணிந்திருப்பார்கள் (நைட்டி போல இருக்கும்). தலையில் வெள்ளைத் தலைப்பாகை. அதில் பித்தளைப் பிறை இருக்கும். பிறையின் நடுவில் மயிலிறகு சொருகப்பட்டிருக்கும் வெண்கலத்தினால் பெரிய மணியை வைத்திருப்பார்கள். தோளில் நெல்லை வாங்குவதற்காகப் பெரிய பையைக் கோர்த்திருப்பார்கள். இன்னொரு கையில் கம்பு இருக்கும். இடது கையில் வைத்திருக்கும் மணியை ஆட்டிக் கொண்டே வீடு வீடாகப் போவார்கள். குடிசை வீட்டுப்பக்கம் போக மாட்டார்கள். நிலம் வைத்திருப்பவர்கள், ஓரளவு வசதியானவர் வீட்டு வாசலில் நின்று மணியை ஆட்டியவாறு பாடத் தொடங்குவார்கள். அந்தப் பாடல் வாழ்த்துவது போலிருக்கும். ‘பொலி பெருசு. . . பட்டி பெருசு. . .உளம் பொலிய. . .’என்று எல்லாமே நல்லபடியாக நடக்க வேண்டும்; குடியானவர்களுக்கு நல்ல மகசூல் காண வேண்டும் என வேண்டுவதிலும் கேட்பவர்களுக்கு மன நிறைவு ஏற்படும். நெல் கொண்டுவந்தால் நாழி அளவு நெல் பிடிக்கும் மணியைக் கவிழ்த்துப் பிடித்து இரு தடவைகள் நெல்லை வாங்கிக் கொள்வார்கள். பணம் எனில் குறைந்தது ஒரு ரூபாய் கொடுத்தால்தான் வாங்கிக் கொள்வார்கள். இல்லையெனில் வேண்டாம் எனக் கிளம்பிவிடுவார்கள். நெல் அல்லது பணம் வாங்கிய வீட்டுச் சுவரில் காவிக்கட்டியினால் ஏதோ கிறுக்கி விட்டுப் போவார்கள். வேறு யாராவது மணியாட்டிக்காரர் வந்தால், ஏற்கனவே கொடுத்தாச்சு என்றால், காவிக் கிறுக்கலைப் பார்த்து விட்டுப் போய் விடுவார்கள். மணியாட்டிக்காரர்களுக்கு நெல் கொடுக்க வேண்டிய கட்டாயம் எப்படி ஏற்பட்டது என்பது புலப்படவில்லை. கடந்து பத்தாண்டுகளாக மணியாட்டிக் காரர்கள் வருவதில்லை.



பச்சைத் துணியைத் தோளில் மடித்துப் போட்டுக் கொண்டு, தலையில் சிறிய வெள்ளைக் குல்லாயை மாட்டியுள்ள நான்கைந்து பேர் கையில் ‘டேப்’புடன்(பறை) வீடுவீடாக வருவார்கள். நாகூர் ஆண்டவனின் மீது பாடல் பாடும் முஸ்லிம் பாடகர்களின் குரல் கணீரென ஒலிக்கும். டேப்பின் ஓசையும் அதன் வளையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிறிய வெண்கல மணியின் ஓசையும் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். பெண்கள் தங்கள் இடுப்பில் வைத்திருக்கும் குழந்தைகளை அவர்களை நோக்கிக் காட்ட, அவர்களில் ஒருவர் மயிற் தோகையால் குழந்தையின் தலையை மூன்று தடவைகள் தடவுவார். உரத்த குரலில் நபியின் புகழைப் பாடும் அந்தப் பாடகர்களைப் பார்த்தால், யாரும் பிச்சை எடுக்கிறவர்களாகக் கருத மாட்டார்கள். அப்படியொரு எடுப்பான தோற்றமளிக்கும்' உள்ளத்தை உருக்கும் பாடல். கிராமத்தினர் தாங்களாகவே முன்வந்து பணம் அல்லது நெல்லைக் கொடுப்பார்கள். அவர்கள் தெருவைக் கடந்து போன பின்னரும், டேப்பின் ஒலி கேட்டுக் கொண்டேயிருக்கும்.



புரட்டாசி சனிக் கிழமைகளில் காலை வேளையில் ஓரளவு வசதியானவர்கள் வீட்டுமுன்னர், ‘வெங்கட்ராமா கோயிந்தா. . . கோயிந்த லட்சம் கோயிந்தா’என்ற குரல் கேட்கும். வெளியே எட்டிப் பார்த்தால், எங்கள் ஊரில் பல்லாண்டுகளாக வாழந்து வரும் நாயக்கர் இனத்துச் சிறுவர்கள் கையில் நாமம் போட்ட பெரிய சொம்புடன் நிற்பார்கள். நெற்றியிலும் உடம்பிலும் நாமம் போட்டிருக்கும். பள்ளிக்கூடத்தில் தங்களுடன் படித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் இப்படிக் கிளம்பியிருப்பது சிறுவர்களுக்குக் குதூகலத்தை ஏற்படுத்திவிடும். அவர்கள் ‘வெங்கட்ராமா கோயிந்தா எனக் கத்தி முடித்தவுடன், பின்னாலேயே போகும் சிறுவர்கள் ‘வெங்கட்ராமா கோயிந்தா. . சட்டியைத் தூக்கிடா நயினா’ என்று கேலியுடன் கத்துவார்கள். ஒரே சிரிப்பாக இருக்கும். பெண்கள் வீட்டிலிருந்து அரிசியைக் கொண்டு வந்து, பெரிய சொம்பில் போடுவார்கள். இப்படி வீடு வீடாகச் சென்று சேகரித்த அரிசியை அவர்கள் என்ன செய்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது. வீட்டுக்கு வந்த ஆளை எப்படி வெறுங்கையோட அனுப்புவது என்பதுதான் கிராமத்துக்காரர்களின் பிரச்சனை.



குரங்கைப் பிடித்துப் பழக்கி, அதன் இடுப்பில் கயிற்றைக் கட்டி வீடுவீடாக அழைத்து வந்து, வித்தை காட்டும் குரங்காட்டிகள் அவ்வப்போது வந்து போய்க் கொண்டிருப்பார்கள். எங்கே போய் க் குரங்குக் குட்டியைப் பிடிப்பார்கள்? அதை எப்படிப் பழக்குவார்கள்? அது என்ன உணவு சாப்பிடும்? இப்படிப் பல்வேறு கேள்விகளுடன் சிறுவர்கள் பின்னாடி அலைவார்கள். துணிச்சலான சிறுவர்கள் குரங்குக்கு ஏதாவது காசு கொடுப்பார்கள். குரங்காட்டி குரங்கை பார்த்துக் ‘கை கொடு' என்றவுடன் அது தனது சிறுவனை நோக்கிக் கையை நீட்டிக் குறுக்கும். குரங்குடன் கை குலுக்கிய சிறுவன் கூச்சத்துடன் நெளிவான்.



பார்வையிழந்தோர், தொழு நோயாளிகள், கைகால் இல்லாதவர்கள், வயசான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எனப் பிச்சையெடுக்கும் கூட்டத்தினர் கிராமத்துத் தெருக்களில் யாசித்துக் கொண்டிருப்பார்கள். சில வீடுகளில் ஏதாவது போடுவார்கள்; சில வீடுகளில் உலை கொதிக்குது என்பார்கள்; சில வீடுகளில் பெரிய ஆட்கள் வெளியே போயிருக்காரர்கள் என்று சிறுவர்கள் சொல்வார்கள்.



வருஷம் முழுக்க வயலில் வேலை, கட்டிட வேலை, மண் வெட்டுதல், கிணறு தோன்றுதல் என உடலுழைப்பில் வயதான அப்பா, அம்மா எனப் பலரையும் சம்பாதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும். ஓரளவு நிலம் வைத்து விவசாயம் பார்க்கும் குடியானவர்கள் வாழ்க்கைத்தரம் உயர்வாக இருக்கும். எந்த வகையிலும் உழைப்பில் ஈடுபடாமல், பிறரை அண்டி வாழும் குடும்பம் ஒருபுறம், ஏதோ ஒருவகையில் திறமையை வெளிப்படுத்தி பொருள் ஈட்ட முயலும் கும்பல் ஒருபுறம் எனப் பலதரப்பட்டவர்கள் வெளியிலிருந்து வந்து கிராமத்து தெருக்களில் திரிந்து கொண்டிருக்கிறார்கள். சமூகத்தின் பொது நீரோட்டத்திலிருந்து பிரிந்து வந்து, கிராமம் கிராமமாகப் பயணித்து வாழ்ந்து வந்த ‘பரதேசிகள்' ஓருவகையில் வித்தியாசமானவர்கள். இப்படிப்பட்டவர்களைக் கிராமத்தினர் புறக்கணிக்கவில்லை. மனுஷன் என்றால் இப்படித் தானிருப்பான் என்று அங்கீகரிக்கரிக்கவே செய்தனர். காளை மாட்டை உழவு, பரம்படித்தல், வண்டிகளில் பூட்டுதல் எனப் பயன்படுத்திய குடியானவர்களுக்குக் ‘பூம்பூம் மாட்டுக்காரன்’ விநோதமாகக் தெரிந்தது வித்தியாசமில்லை. ‘நல்ல சேதி வரப்போகுது’ என்று நம்பிக்கையை விதைக்கும் குடுகுடுப்பைக்காரனும் நல்லனாகத் தெரிகிறான். ஒருவாய் சோற்றுக்காக வாசலில் நின்று கொஞ்சம் பிச்சைக்காரனும் கேவலப்பட்டவன் அல்ல, அவன் தலையெழுத்து நாலு வீட்டில் பிச்சையெடுத்து வாழ வேண்டியிருக்கு என்று நினைத்தனர்.



கண்காணிப்பின் மையமாகக் கிராமம் விளங்கினாலும், அடுத்த வேளை உணவுக்காக அங்கு நுழையும் எவரையும் வெறுக்கவில்லை என்பது தான் உண்மை.