ஞாயிறு, 27 நவம்பர், 2011

Jayamohan..Aram.

கோவை முருகன் விடுதி அறையில் அதிகாலையில் ஐந்துமணிக்கு  எங்கள் குழுவின் கமாண்டராக தன்னை தானே நியமனம் கொண்டிருந்த கிருஷ்ணன் எழுந்து படாரென்று கழிப்பறை கதவைத் திறந்து, பெரியபடாராக அதை மூடி, அனைவரையும் பதறி எழச்செய்தார். அவர் துண்டை உதறிய ஒலியில் அந்த விடுதி அலறி எழுந்திருக்கும். வேறுவழியில்லை, ஈரோடு அழைக்கிறது. இருந்தாலும் நான் அரைமணிநேரம் கண்மூடி படுத்திருந்தேன்.
எல்லாரும் குளித்து முடித்ததும் கிளம்ப ஆரம்பித்தோம். ஆறரைக்கு கிளம்ப கமாண்டர் போட்டிருந்த திட்டம் ஏழாகியும்  ஆரம்பிக்கவில்லை. ஆகவே நாஞ்சில்நாடனையும் மரபின்மைந்தன் முத்தையாவையும் கிளம்பி ஈரோட்டுக்கே செல்லும்படி சொல்லிவிட்டார். செந்தில் நிதானமாகவே குளித்தார். பாட்டுபாடாமல் இத்தனைநேரம் குளிப்பவராக அவரை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன்.
நான், கிருஷ்ணன், தங்கமணி, அரங்கசாமி ,செந்தில் ஆகியோர் ஒருவழியாகக் கிளம்பி ஈரோட்டுக்கு செல்லும் வழியில் கோவைக்கு வெளியே ஒரு உணவகத்தில் அவர்களைச் சந்தித்தோம். நாஞ்சில்நாடன் புதிதாக இருந்தார். எனக்கு எப்போதுமே அவரைப்போல நேர்த்தியாக உடையணியும் ஆசை உண்டு. மிகையாகவும் போகாமல், குறைவாகவும் ஆகாமல் உடையணிவதென்பது ஒரு கலை. அதற்கு நாம் அவரைப்போல விற்பனைமேலாளராக கொஞ்சநாள் பணியாற்றியிருக்கவேண்டும்போல.
ஈரோட்டுக்கு செல்லும் வழி முழுக்க விதவிதமான நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் பேசிக்கொண்டிருந்தோம். சென்றுசேர்ந்தபோது தாமதமாகிவிட்டது. சாலையோரமாக என்னுடைய முகம் கொண்ட வினைல்போர்டு. உள்ளே போனால் சாயரசாயன விற்பனையாளர் சங்கத்தின் புதிய அரங்கில் வாசலில் வசந்தகுமார் கடைவிரித்து தம்பியர் புடைசூழ அமர்ந்திருந்தார்.
பத்துமணிக்கு நிகழ்ச்சி. ஒன்பது ஐம்பதுக்கு அமைப்பாளர் தவிர யாருமே இல்லை. பத்துமணிக்கு ஒரு பத்துபேர் தேறினார்கள். பத்து என்றால் பத்துக்கே ஆரம்பிக்கவேண்டும் என்றார் பாபு. அது ஈரோடு பசுமைபாரதத்தின் கொள்கை என்று சொல்லப்பட்டாலும் உண்மை என்பது சரியான நேரத்தில் ஆரம்பிக்கப்படாத பிற நிகழ்ச்சிகளில் சென்று கலாட்டா செய்த இறந்தகாலம் குறித்த அச்சம்தான்.
அமைப்பாளர் விஜயராகவன் காய்ச்சல்கண்ட முகத்துடன் இருந்தார். ‘என்ன விஜயராகவன்’ என்றேன் ”ஏமாத்திட்டாங்களே சார்…யாருமே வரல்லியே’ என்றார். ‘வந்தவங்க போரும்…இப்ப என்ன?” என்றேன்.
ஆரம்பித்தோம். காலி நாற்காலிகளை நோக்கி பேசுவது எழுத்தாளர்களுக்கு ஒன்றும் புதியவிஷயம் அல்லதானே? முதலில் ஈரோடு வாசிப்பியக்கத்தைச் சேர்ந்த பாபு பம்மிப்போய் வரவேற்புரை அளித்தார். விமரிசகர் க.மோகனரங்கன் ஜெயில்சிங் போன்ற அதிநிதானத்துடன் மேடைக்கு வந்து மென்மையான குரலில் – பாலியல் வழக்கில் சிக்கியவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுப்பது போல குனிந்த தலையுடன் – விழாவை அறிவித்தார். ‘இன்றையகாந்தி’  நூலை நாஞ்சில்நாடன் வெளியிட இராசு பெற்றுக்கொண்டார்.
தலைமையுரையாக ஜீவானந்தம் சுருக்கமாகப் பேசினார். தன்னை காந்தியில் ஆர்வம்கொண்டவரே ஒழிய காந்தியவாதி என்று சொல்லிவிடமுடியாது என்றார். காந்தியம் என்பது ஒரு பெரிய பொறுப்பு. இடைவிடாத சோதனைகள் கொண்டது. தன் சூழலில் செயல்பட காந்தியம் ஒரு வழிகாட்டு நெறியாக இருந்தது, அவ்வளவுதான் என்றார்.
அடுத்து நாஞ்சில்நாடன் பேசினார். காந்தியின் பாலியல் சோதனைகள் குறித்த விவாதத்தை மையமாக்கிய உரை அவருடையது. காந்தியின் சோதனைகளை கிறுக்குத்தனமானவை என்று நூலாசிரியர் சொல்வதை தான் ஒப்புக்கொள்ளவில்லை என்றார் நாஞ்சில்நாடன். பாலியலை அவதானிப்பதும் அதை கடந்துசெல்ல முயல்வதும் எந்த மனிதனுக்கும் இயல்பான விஷயமே. காந்தி அந்த விஷயத்தில் அப்பட்டமானவராக வெளிப்படையானவராக இருந்திருக்கிறார்.
அடுத்துப்பேசிய செ.இராசு தமிழகத்தில் ஈரோட்டில்தான் முதன்முறையாக காந்திக்குச் சிலை வைக்கப்பட்டது என்று சொல்லி அந்தப்படத்தைக் காட்டினார். 1932ல் காந்தி உயிருடன் இருக்கும்போதே சிலை வைக்கப்பட்டுவிட்டது. காந்திக்கும் ஈவேராவின் குடும்பத்திற்கும் உள்ள உறவைப்பற்றி விரிவாகப்பேசினார். காந்தி ஈரோட்டுக்கு இருமுறை வந்திருக்கிறார். முதன்முறை ஈவேரா அவர்களின் இல்லத்தில் தங்கினார். மறுமுறை கிட்டப்பா மறைவால் பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருந்த கெ.பி.சுந்தராம்பாளைப் பார்த்து பொதுப்பணிக்கு வரச்சொல்லுவதற்காக வந்தார் என்றார்.
‘நாஞ்சில்நாடன் என் காதில் ‘ என்ன, கூட்டம் ஒருமணிநேரத்திலே முடிஞ்சிரும் போல இருக்கே’ என்றார். ஆனால் அடுத்து மரபின் மைந்தன் முத்தையா  பேச ஆரம்பித்தபோது மெல்லமெல்ல கூட்டம் அரங்கை நிறைக்க ஆரம்பித்து, பதினொருமணிக்கு அரங்கு முழுமையாக நிரம்பியிருந்தது. ஈரோட்டில் பத்து என்றால் பதினொருமணி என்றுதான் அர்த்தமாம்.
முத்தையா காந்தியின் மகன்களைப்பற்றி பேசினார். காந்தி தன் புதல்வர்களை சரியாக வளர்க்கவில்லை என்ற பொதுநம்பிக்கை சூழலில் உள்ளது. ஆனால் காந்தி அவர்களை போராளிகளாக, அதிகாரத்துடன் சமரசம்செய்துகொள்ளாதவர்களாக வளர்த்தார். அதை ஆசிரியர் விரிவாக விளக்குகிறார்
காந்தியின் எல்லைகளையும் நாம் கவனிக்கவேண்டும், ஆகவே தனக்கு காந்தி மீது வழிபாட்டுணர்வு ஏதும் இல்லை என்றார் முத்தையா.காந்தி இந்திய அரசியலில் பதவி இல்லாத அதிகாரமையமாக விளங்க விரும்பினார். பதவியில் இல்லாத அவர் இந்திய அரசை பாகிஸ்தானுக்கு கஜனாவை பங்கிட்டுக்கொடுக்க நிர்ப்பந்தித்தது உதாரணம்.
காந்தியின் பிள்ளைகள் என்னும்போது இன்றைய இந்தியர்களையே அப்படிக் குறிப்பிடலாம். இந்தியாவுக்கு காந்தி ஒரு இலட்சியத்தையும் அதை அடைவதற்கான வழிமுறையையும் அளித்தார் என்று ஆசிரியர் சொல்கிறார். காந்தி ஒரு கனவை அளித்தார், ஆனால் அவர் காட்டிய வழி குழப்பமானது. அதுவே இந்தியா சிக்கல்களில் ஆழ்ந்தமைக்கு வழிவகுத்தது என்றார் முத்தையா.
தந்தை பழ.கருப்பையா அவர்களின் குரல், உடலசைவுடன் பேசினார் ஆறுமுகத்தமிழன். காந்தி ஓர் அடையாளமாகவே தனக்குக் கிடைத்தார் என்றவர் அந்த அடையாளம் இன்று செலவேறியதாக ஆகிவிட்டிருக்கிறது என்றார். அவரது தந்தையின் காந்திய நோக்கு காரணமாக அவர் சிறுவயது முதலே கதர் அணிபவர் என்றார். ஆனால் தினம் பத்து ரூபாய் இல்லாமல் கதரை சலவைசெய்து அணிய முடியாது, அது உயர்தர உடையைவிட செல்வேறியது….
இத்த¨கைய அடையாளங்களில் இருந்து காந்தியை விடுவிக்கும் முயற்சியாக  இன்றைய காந்தி நூலை தான் காண்பதாக ஆறுமுகத் தமிழன் சொன்னார். காந்திய வழி என்பது தனக்கு ஏற்புடையதாக இருந்தாலும் தன்னால் பிரபாகரனையும் விட்டுவிட முடியாது. காந்தி தந்தை என்றால் பிரபாகரன் அண்ணன் போல. இருவருடைய வழிமுறைகள் வேறு ஆனால் அர்ப்பணிப்பும் தியாகமும் சமம்தான். ஈழப்போராட்டம் வன்முறையால் வெல்ல முடியவில்லை, அது காந்தியவழியால் வென்றிருக்கலாம். ஆனால் அதனால் பிரபாகரனின் தியாகம் அர்த்தமற்றது என்று ஆகிவிடாது.
இன்றையகாந்தி நூலில் தேசியம் குறித்து சொல்லப்படும் ஆசிரியரின் கருத்துக்களில் தனக்கு உடன்பாடில்லை என்றார் ஆறுமுகத்தமிழன். ஆசிரியர் மொழிவழித்தேசியத்தை பிளவுவாதம் என்று எதிர்க்கிறார், அதை உணர்வுபூர்வமாக ஏற்பவன் நான் என்றார். மொழிவழித்தேசியம் சிலரை அன்னியராக்கும் என்றால் அவர் பேசும் பண்பாட்டுத்தேசியமும் அதேபோல வேறுசிலரை அன்னியர்களாக்க்கும். இந்திய தேசியம் என்பது செயற்கையானது, மொழிவழித்தேசியமே இயற்கையானது என்றார்.
அடுத்துப்பேசிய முருகானந்தம் இன்றையகாந்தி நூல் இளைய தலைமுறைக்கு காந்தியை மீட்டளித்திருக்கிறது என்றார். இன்றைய இளைஞன் காந்தியை இன்றைய வாழ்க்கையில் பொருத்திப்பார்க்க ஆசைப்படுகிறான். அவனுடைய வினாக்களுக்குப் பதிலாக அமையும் நூல் இது. ஆனால் இதில் சில விஷயங்கள் தவறாக உள்ளன. காந்தியின் அழகியலுணர்வின்மை குறித்து ஆசிரியர் சுட்டும் பகுதிகள் உதாரணம். காந்தி  இலக்கியம், இசை குறித்த உணர்வில்லாதவரல்ல. அவர் அவற்றைப்பற்றி விரிவாகவே பேசியிருக்கிறார்.  அவர் போராட்டக்களத்தில் இருந்தார். இந்தியாவையே போராட்டத்தில்  நிறுத்தினார். ஆகவே அவர் கலையிலக்கியங்களை ஊக்குவிக்கவில்லை என்று முருகானந்தம் சொன்னார்.
பவா செல்லத்துரை ஒரு மார்க்ஸியச்சூழலில் வளர்ந்த தனக்கு படத்தில்கூட காந்தி கவரக்கூடியவராக இருந்ததில்லை என்றார். ஆனால் இந்த நூல் காந்தியைப்பற்றிய ஒரு சித்திரத்தை அளிக்கிறது. காந்தியை சாமானிய மக்களுடன் பேசிய ஒரு மக்கள்தலைவராக இது காட்டுகிறது. காந்தியின் எளிமையும் மக்களுடன் அவர் கொண்டிருந்த தொடர்பையும் இந்நூலில் ஒரு கட்டுரையில் கூறும் ஆசிரியர் இன்றைய மார்க்ஸிய தலைவர்களிடம் காண்பதாகச் சித்தரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.ஆசிரியர்  காந்தியத்தாக்கம் கொண்ட தலைவராக சொல்லும் ஈ.எம்.எஸ் குறித்து அவர் ஒரு நல்ல நூல் எழுதவேண்டும் என்று கோருவதாக பவா சொன்னார்.
கடைசியாக நான் பேசினேன். ‘மூன்று சந்திப்புகள், மூன்று அவதூறுகள்’ என அவ்வுரையை சுருக்கலாம். காந்தியை நானும் எதிர்மறையாகவே புரிந்துகொண்டிருந்தேன். மூன்று சந்திப்புகள் வழியாக காந்தியை புரிந்துகொள்ள முடிந்தது.
முதல் சந்திப்பு, எம்.கோவிந்தன். மலையாளச் சிந்தனையாளரான கோவிந்தனைச் சந்தித்தபோது அண்டோனியோ கிராம்ஷி பற்றி சொன்னார். இப்போது ஆளும் ஆட்சியாளர்களை அதிகாரிகளை ஒட்டுமொத்த அதிகாரவற்கத்தை கொன்றழித்தால் என்ன ஆகும்? அதே அதிகார அமைப்பு மீண்டும் உருவாகி வரும். புல்லை வெட்டினால் மீண்டும் முளைப்பதுபோல. அதாவது வேர், உண்மையான அதிகாரம் கண்ணுக்கு தெரியாமல் உள்ளே இருக்கிறது. அது மக்களிடம் கருத்தியல்வடிவில் உள்ளது.
மக்கள் அரசுக்கு அளிக்கும் ஆதரவில் இருந்தே அரசு அதிகாரத்தை பெறுகிறது என்று கிராம்ஷி சொல்வதைச் சொன்னார் கோவிந்தன். அந்த ஆதரவு கருத்தியல்ரீதியானது. அன்றைய பிரிட்டிஷ் அரசின் உண்மையான அதிகாரம் அன்றிருந்த மக்கள் அதற்கு அளித்த ஆதரவில் இருந்தது. காந்தி அந்த மக்களை நோக்கி பேசியது அதனாலேயே. அரசை வீழ்த்த அவர் முயலவில்லை, மக்களை மாற்றவே முயன்றார். அதுவே காந்தியப்போராட்டம். மக்களுக்கு பிரிட்டிஷ் அரசு அளித்த நல்ல நிர்வாகம்மீது மதிப்பிருந்தது. அதன் மாபெரும் சுரண்டல் தெரிந்திருக்கவில்லை. அதை மக்களுக்குத் தெரிவிக்கவே காந்தி உப்புசத்தியாக்கிரம் போன்ற போராட்டங்களை உருவாக்கினார்.
காந்தியைப்பற்றிய புதிய பார்வையை உருவாக்கியது அந்த கருத்துதான். காந்தியை பிரிட்டிஷ் அரசை ‘பிளாக்மெயில்’ செய்பாவ்ர் என்றே நானும் எண்ணியிருந்தேன். அந்த எண்ணம் மாறி அவரை புதிய கோணத்தில் பார்க்க ஆரம்பித்தேன்.
இரண்டாவது சந்திப்பு லாரிபேக்கர். நவீன கட்டிடவரைகலை நிபுணர் அவர். அவர் கார்ட்டூன் வரைவதற்காக காந்தியைப் பார்க்கச் சென்றார். காந்தி அவரிடம் ‘சிறந்த கட்டிடம் என்றால் என்ன?’ என்றார். விடையாக அவரே ‘குறைந்த அளவுக்கு சரக்குப் போக்குவரத்துச் செலவு உடையது’ என்றார். அந்த வரி பேக்கரை மாற்றியமைத்தது. இந்தியாவில் தங்கி ‘தேசிய வீடு’ என்ற கருத்தை உருவாக்க வைத்தது
அப்படி காந்தி அவரைச் சந்தித்த எத்தனையோ பேரை பாதித்திருக்கிறார். சந்தித்தவர்களை எல்லாம் புரட்சிகரமாக மாற்றி அமைத்திருக்கிறார். அவர்களெல்லாம் மாமனிதர்களாக ஆனார்கள். காந்தி வாழ்நாள் முழுக்க காந்திகளை உருவாக்கிக்கொண்டே இருந்தார். வெரியர் எல்வின், ஜெ.சி.குமரப்பா என எத்தனையோ பேரைச் சொல்லலாம்.
மூன்றாவது சந்திப்பு ஈ.எம்.எஸ். வாழ்நாள் முழுக்க காந்தியக் கோட்பாடுகளுக்கு எதிரான அரசியலை நடத்தியவர் அவர். ஆனால் தனிவாழ்க்கையில் காந்தியின் எளிமையை அர்ப்பணிப்பை தானும் கொண்டிருந்தார். எதிரிகளிடம் கூட ஆழமாக ஊடுருவும் காந்தியை அவரிடம் கண்டுகொண்டேன்.
பின்னர் மூன்று அவதூறுகள். ஒன்று ரயிலில் ஒருவர் காந்தி தன் மூத்தமகனை பாரிஸ்டர் படிப்புக்கு அனுப்பாத காரணத்தால் அவன் குடிகாரன் ஆனான் என்றார். மீண்டும் மீண்டும் மேடையில் சொல்லப்படுகிறது அது. ஆனால் ஹரிலால் மெட்ரிகுலேஷனை நான்குமுறை எழுதி தோற்றவர் என்பதை நானே வாசித்து தெரிந்துகொண்டேன்.
காந்தி தகுதியிருந்தும் பட்டேலை விட்டுவிட்டு நேருவை தலைவராக்கியது தனிப்பட்ட விருப்பு வெறுப்பினால் என்ற அவதூறை அடுத்து கேட்டேன். ஆனால் இந்தியா மதவெறுப்பால் அழிந்துகொண்டிருந்த நாட்களில் முற்றிலும் மதச்சார்பற்ற ஒருவர் இந்தியாவை வழிநடத்தவேண்டுமென காந்தி விரும்பியதை வரலாற்றில் இருந்து புரிந்துகொண்டேன்.
கடசியாக, காந்தியின் மூன்றாம் வகுப்பு ரயில்பயணம் முதல்வகுப்பு பயணத்தைவிட செலவேறியது என்று சரோஜினிநாயிடு சொன்ன அவதூறை எதிர்கொண்டேன். அது சொல்லப்பட்ட தருணத்தை அன்றைய சூழலை தேடி அறிந்தேன். லட்சக்கணக்கான தொண்டர்கள் காந்தி பேச்சை கேட்டு எளிமையிலும் எளிமையான வாழ்க்கக்கு சென்று தொண்டாற்றியது காந்தியும் எளிமையாக இருந்தமையாலேயே. அந்த எளிமை ஒரு பதாகை. ஒரு முன்னுதாரணம். எந்த பாதுகாப்பும் இல்லாமல் தனியாக இந்தியாவைச் சுற்றி வந்த காலத்தில்கூட காந்தி மூன்றாம்வகுப்பிலேயே பயணம்செய்திருக்கிறார்
அந்த அவதூறில் இருந்து காந்தியை பற்றி எழுத ஆரம்பித்ததே இந்நூல். இதில் சமகாலத்தில் காந்தியை எப்படி புரிந்துகொள்வதென்ற தேடல் உள்ளது. இத்தனை அவதூறுகள் ஒரு சிந்தனையாளரைப் பற்றி ஏன் எழுகிறதென்ற கேள்வியே என்னை காந்திக்குள் செல்ல வைத்தது.
இந்திய தேசியம் குறித்த என் கருத்துக்களை நான் பதிவுசெய்திருக்கிறேன். நான் சொல்லும் தேசியம் நேற்றில் இருந்து எடுக்கும் அடையாளங்களால் ஆனதல்ல. இந்தமண்ணில் இப்போது வாழும் அனைவரும் நாளை குறித்த ஒரு கனவை உருவாக்கிக் கொள்வதனால் வரும் தேசியம் அது. எவரையுமே விலக்குவதல்ல.
இந்திய மண்ணில் இரண்டாயிரம் வருடங்களாக போர்களால், பண்பாட்டுக்காரணங்களால், கடைசியாக பஞ்சங்களால், மக்கள்ப்பரிமாற்றம் நிகழ்ந்து இன்று இந்த நிலம் ஒரே பண்பாட்டு வெளியாக உள்ளது. மக்கள் எங்கும் கலந்து வாழ்கிறார்கள். ஆகவே இவர்கள் சேர்ந்து வாழ்ந்தாகவேண்டும். இது வரலாற்று நிர்ப்பந்தம். அதற்கான தேசியமே நம் தேவை.
எல்லைப்பிரிவினை இந்தியாவில் 1948ல் ஐந்து லட்சம்பேரை பலிகொண்டது. சின்னஞ்சிறு இலங்கையில் ஒரு பிரிவினை லட்சம்பேரை காவுகொண்டது.இந்திய மக்கள்தொகையில் 20 சதவீதம் பேராவது இன்று மாற்றுமொழி நிலங்களில் நூற்றாண்டுகளாக குடியேறி வாழ்கிறார்கள். கிட்டத்தட்ட இருபதுகோடிப்பேர்! இந்தியாவில் எங்குமாக ஒருகோடி தமிழர்கள் அப்படி குடியேறி வாழ்கிறார்கள். யாரோ எதற்கோ பேசும் பிரிவினைவாதம் கோடிக்கணக்கான மக்களை இடம்பெயரச்செயும். பரஸ்பர வெறுப்பை கிளறும்.  அவர்களை அர்த்தமற்ற அழிவுக்கே கொண்டுசெல்லும். அந்த மனுடப்பேரழிவு நடந்தபின்னும் அதைப் பேசியவர்கள் அதற்குப் பொறுப்பேற்க மாட்டார்கள்.
தேசியம் மயிர் மட்டை என்று கொள்கை பேசி உயிர்களுடன் விளையாடாதீர்கள். அதிகாரவெறியால் உயிர்வாழ மட்டுமே விரும்பும் எளிய மக்களை கொன்றழித்துவிட்டு எண்ணிக்கைக் கணக்கையும் கோட்பாட்டையும் சேர்த்துப்பேசும் திமிரை அறிவுஜீவிகள் இனிமேலாவது கைவிட வேண்டும் என்றேன். ஈ.எம்.எஸ்.குறித்து ஒரு நூல் எழுதும் எண்ணம் உண்டு என்று சொல்லி முடித்துக்கொண்டேன்.
ஈரோட்டுக்கும் வெளியூரில் இருதெல்லாம் வாசகர்கள் வந்திருந்தார்கள். பெங்கலூரில் இருந்து கார்த்திகேயன் வந்திருந்தார். அனைவரிடமும் தனியாக நிறையவே பேசமுடிந்தது
விழா சரியாக ஒரு மணிக்கே முடிந்தது. மாடியில் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடாகியிருந்தது. கூட்டத்துக்கு வந்தவர்களே பரிமாறியது உற்சாகமாக இருந்தது. விஜயராகவன் முகமலர்ச்சியுடன் ”ஈரோடு காப்பாத்திடிச்சு சார்” என்றார்.
மாலை ஐந்து மணிவரைக்கும் அங்கேயே அறையில் அமர்ந்து நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். பின்னர் இருகார்களிலும் இருசக்கரவண்டிகளிலுமாக வள்ளிபுரத்தான்பாளையம் சென்றோம். எட்டுமணிவரை அங்கே பேசிக்கொண்டிருந்துவிட்டு திரும்பினோம். நான் இரவு பத்து மணிக்கு நாகர்கோயில் ரயிலை பிடித்தேன். நண்பர்கள் வந்து வழியனுப்பி வைத்தார்கள். படுத்ததுதான் தெரியும். காலையில் நாகர்கோயில்.
http://erodetamizh.blogspot.com/2010/01/blog-post_24.html