திங்கள், 27 ஜூன், 2011

Komal swaminathan.























ராகவன் தம்பி





கோமல் என்னும் மாமனிதர் பாகம்-1



My Photo

பழகிய அனைவருக்கும் மிகவும் அற்புதமான ஒரு நண்பராகத் திகழ்ந்தவர் கோமல். நட்புக்கு அற்புதமான ஒரு மரியாதையையும் கௌரவத்தையும் தந்தவர் கோமல். ஏதோ ஒரு காரியத்துக்காக மட்டுமே நட்பினை வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் கொச்சைப் படுத்தாமல் நட்புக்கு ஒரு அழகு சேர்த்தவர் கோமல். இங்கு எழுதுவதற்காகவோ அல்லது வேறு ஏதாவது ஒரு சம்பிரதாயத்தின் பாற்பட்டோ இல்லாது கோமலைப் பற்றிய பல தனிப்பட்ட நினைவுகள் நெகிழ்ச்சியைத் தருவன. பல நேரங்களில் கண்ணீரை வரவழைப்பவை.





தில்லிக்கு வருவதற்கு முன்னர், இடை எழுபதுகளில் ஒரு குளிர்நாளில் கோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் நாடகம் கிருஷ்ணகிரி அண்ணா கலையரங்கில் (இப்போது அது வேறு ஏதோ பெயரில் திரையரங்காக மாறி விட்டது). நாடகம் ரொம்பவும் புதுமையாக, என்னவென்று சொல்லத் தெரியாமல் ரொம்பவும் பிடித்துப்போனது. இறுதியில் கோமல் சுவாமிநாதனை மேடையில் அறிமுகப் படுத்தினார்கள். அருகில் சென்று வணக்கம் சொல்லவேண்டும் என்று ஆசையாக இருந்தது. இருவார தாடியுடன் அறிவுஜீவியாக மாற முயற்சித்துக் கொண்டிருந்த நண்பன் ஒருவன், ""அந்த ஆளு கம்யூனிஸ்டு, கிட்டப்போனா ஏதாவது கன்னாபின்னான்னு கேள்வி கேட்டு கடிச்சிடுவான். உனக்கு இதெல்லாம் தேவையா?'' என்று பயமுறுத்தவே எம்.ஜி.ஆர் படம் ஓடிக்கொண்டிருந்த தாரா டாக்கீûஸ நோக்கித் தலைதெறிக்க ஓடிப்போய்விட்டேன். மறுநாள் காலையில் ரவுண்டானாவில் அந்த நாடகத்தில் நடித்த வீராச்சாமி (""எனக்கொரு உம்ம தெரிஞ்சாகணுஞ்சாமி'') மற்றும் சில நடிகர்கள் மாம்பழம் விற்றுக்கொண்டிருந்த கவுண்டச்சியுடன் பேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். வீராச்சாமியிடம் மெல்லப் பேச்சைக் கொடுத்து, என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். கோமலைப் பார்க்க முடியாத என் குறையையும் விலாவரியாக அவரிடம் சொன்னேன். அவர் (பின்னாளில்) முதல் மரியாதை படத்தில் பேசிய அதே தொனியில், அதே குரலில், எந்தப் படுபாவிப்பய சொன்னான் தம்பி. அவரு எவ்வளவு தங்கமான ஆளு தெரியுமா?நீ வேணும்னா அவர் கிட்டே ஒரு தடவை பேசிப்பாரு. ஆயுசு பூரா உன்கிட்டே அவரு உசுரை விடுவாரு. பழகிப்பாரு. அவரைப் பத்தித் தெரியும்'' என்றார்.





















வீராச்சாமி சொன்ன ""உம்ம'' யைத் தெரிந்து கொள்ளப் பல வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. தொண்ணூறுகளின் துவக்க வருடங்களில் ஒன்று. தில்லித் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலர் ராஜாமணி, கோமல் தில்லி வந்திருப்பதாகவும் அன்று மாலை கோமல் ஆசிரியராக சேர்ந்துள்ள சுபமங்களா பத்திரிகையின் அறிமுக விழா வித்தல்பாய் பட்டேல் ஹவுசில் இருப்பதாகவும் முடிந்தால் அந்த இதழ் பற்றி ஓரிரு வார்த்தைகள் பேசலாம் என்றும் சொன்னார். கையில் ஓரிரு சுபமங்களா இதழ்களையும் கொடுத்துச் சென்றார். ஒருவித அலட்சியத்துடன் படிக்கத் துவங்கினேன். கையில் எடுத்ததும் ஒரு விஷயம் புரிந்தது. எவ்விதக் குழுமனப்பான்மையும் இல்லாது சகல கோஷ்டிகளுக்கும் இடமளித்திருந்தார் கோமல். அதில் ஒன்றிரண்டு குப்பைகளும் இருந்தன. அவை அப்போது வெகுஜன இதழ்களில் மிகவும் பிரபலமாக இருந்த குப்பைகளின் எச்சங்கள். இது போதாதா? எனக்கு சிறுபத்திரிகைகளின் அறிமுகங்கள் கிடைத்து சில வருடங்கள் ஆகியிருந்த நேரம். சிறுபத்திரிகை எழுத்தாளப் பெருந்தகைகளின் சகவாசத்தால் அருளப்பட்ட ஞானஸ்நானம். நவீன நாடகப் புலவர்களுடன் சகவாசம். அதன் விளைவாகக் கொஞ்சம் பெரிய மனிதனாகக் காட்டிக் கொள்ளப் பிரத்யேகமாக வளர்க்கப்பட்ட தாடி. வாயில் எப்போதும் புகையும் சிகரெட். ஜோல்னாப்பை. பையில் கொஞ்சம் புத்தகங்கள். அறைகுறை ஞானம். கண்களில் எல்லாவற்றின் மீதும் ஒரு அலட்சியம். இவை அனைத்தையும் சுமந்து கொண்டு வித்தல் பாய் பட்டேல் ஹவுஸ் நோக்கிப் படையெடுத்தேன். பேசிய எல்லோரும் கோமலை வாழ்த்தினார்கள். அவருடைய முயற்சியை வாழ்த்தினார்கள். தில்லித் தமிழர்களின் வழக்கப்படித் தங்களைக் கொஞ்ச நேரம் புகழ்ந்து கொண்டு மிச்சம் கிடைத்த நேரத்தில் தங்களைப் போலவே கோமலும் இருப்பதற்கு ஆச்சரியம் தெரிவித்துக் கொண்டு அவரை வாழ்த்தினார்கள். அடுத்து என்முறை வந்தது. கோமலின் முயற்சியை ஏதோ போனால் போகட்டும் என்று பாராட்டி விட்டு சிறுபத்திரிகை வாசக மரபுப்படி கொஞ்சம் அவ நம்பிக்கையினையும் தெரிவித்து, பல நல்ல சிறுபத்திரிகை ஞானவான்கள் எழுத முனைந்திருக்கும் இந்தப் பத்திரிகையில் குப்பைகளையும் தெளிக்க கோமல் முன்வந்திருப்பதை கண்டித்து விட்டு அடுத்த சிகரெட் பிடிக்க வாசல் நோக்கி ஓடிப்போனேன். கோமல் தன் முறை வந்தபோது மிகவும் அற்புதமாக சிரித்துக்கொண்டே என் ஐயப்பாடுகளுக்கும் அச்சத்துக்கும் மிகத் தெளிவாக பதிலளித்தார். இதில் பயப்பட ஒன்றுமில்லையென்றும், தான் ஆசிரியப் பொறுப்பு ஏற்பதற்கு முன்பிருந்தே சில படைப்புக்கள் வந்து கொண்டிருப்பதால் அவற்றை உடனே நிறுத்துவது நாகரிகமாக இருக்காது என்பதால் இன்னும் சில இதழ்களில் அவை வரும் என்றும் உடனடியாக நிறுத்துவது கடினம் என்றும் சொன்னார். அந்தப் பெருந்தன்மையைப் புரிந்துகொள்ள பல வருடங்கள் பிடித்தன எனக்கு என்றுதான் சொல்லவேண்டும். அவர் செய்த காரியத்தின் மாண்பு புரிபட எனக்குப் பல வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.





















கூட்டம் முடிந்ததும் அவர் என்னிடம் சற்று மனத்தாங்கலாக இருப்பார் என்று கற்பனை செய்து கொண்டு சற்று பாதுகாப்பான தூரத்தில் நின்று கொண்டு சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தேன். என்னைத் தேடிக்கொண்டு வந்தார் கோமல். கண்களில் எந்தக் குரோதமோ, விரோதமோ இல்லை. மிகவும் நட்புணர்வுடன் கைகளைப் பிடித்துக் கொண்டு ""நாடகம் எல்லாம் போடறீங்கன்னு கேள்விப்பட்டேன். சென்னை வர்றப்போ கண்டிப்பா சந்திக்கணும்'' என்று சொல்லி விட்டுச் சென்றார். அந்த ஆதுரம் மனதுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. கொஞ்சம் புடுங்கித்தனமாகப் பேசியிருக்க வேண்டாமோ என்று தோன்றியது. அந்த சிரிப்பு என் முகத்தின் முன்னே உறைந்து ரொம்ப நாட்களாக என்னைத் தொடர்ந்து கொண்டிருந்தது. சாதிப்பவர்கள் முகங்களில் மலரும் சிரிப்பு அது. சுபமங்களா இதழைத் தொடர்ச்சியாக என் முகவரிக்கு அனுப்ப ஆரம்பித்தார்.





















என் இயக்கத்தில் சி.சு.செல்லப்பாவின் ""முறைப்பெண்'' நாடகம் தில்லியில் மேடையேறியது. வெங்கட்சாமிநாதன் எழுதிய விமரிசனத்தை பெரிய படங்களுடன் சுபமங்களாவில் பிரசுரித்திருந்தார் கோமல். சென்னைக்கு வேறு வேலையாக சென்றபோது கோமலையும் மற்ற நண்பர்களையும் பார்க்க சுபமங்களா அலுவலகம் சென்றேன். ""எல்லாரையும் கடுமையாக விமர்சிக்கிற வெங்கட்சாமிநாதனே உங்க நாடகத்தைப் பத்தி நல்லா எழுதியிருக்கார். நீங்க ரொம்ப குடுத்து வச்சவர். அப்போ அதுலே கண்டிப்பா விஷயம் இருக்கணும். மதுரைக்குப் போய் செல்லப்பாவைப் பார்ப்பீர்களா?'' என்று கேட்டார். ""அவர் கோபிச்சுக்குவார். என் நாடகத்தை நீ கண்டிப்பா கெடுத்து இருப்பே என்று ஏற்கனவே என்னிடம் ஒருமுறை சொன்னார். வெங்கட்சாமிநாதனையும் திட்டுகிறவர் அவர். எங்கேயோ போகிற எதையோ எடுத்து எங்கேயோ விட்டுக்கொள்ளும் தைரியம் இப்போதைக்கு எனக்கு இல்லை'' என்று சொன்னேன். ""அதெல்லாம் இல்லை. நீங்க கண்டிப்பா செல்லப்பாவை சந்திக்கணும். நானும் அவரிடம் சொல்றேன். முறைப்பெண் நாடகம் கண்டிப்பாகத் தமிழ்நாட்டுக்கு வரணும்'' என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். சுபமங்களாவில் அவர் தொடர்ச்சியாக எழுதி வந்த ""பறந்து போன பக்கங்கள்'' பகுதியிலும் என்னைப் பற்றியும் முறைப்பெண் நாடகத்தைப் பற்றியும் எழுதினார். தொலைபேசியில் பேசும்போதும் அடிக்கடி ""உங்கள் நாடகத்தை தமிழ்நாட்டுக்கு எப்படியாவது கொண்டு வரணும்'' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.





கோமலின் தீவிரம் மதுரை நிஜ நாடக விழாவில் கலந்து கொள்ள மு.ராமசாமி அனுப்பிய அழைப்பில் தெரிந்தது. மு.ராமசாமியிடமும் பார்க்கும் நண்பர்கள் எல்லோரிடமும் முறைப்பெண் நாடகத்தைப் பற்றியும் என்னைப் பற்றியும் அபாரமான நம்பிக்கையினைத் தெரிவித்திருக்கிறார் கோமல் என்று பின்னாளில் தெரிந்து கொண்டேன்.





















அது மட்டுமல்ல. யதார்த்தா நாடகக் குழு மதுரையில் சென்று இறங்கியதுமே, ராஜா அண்ணாமலை மன்றத்தில் எங்களுக்காகக் காத்திருந்தார் கோமல். அவர் என்னைக் கேட்ட முதல் கேள்வி þ செல்லப்பா மதுரையில்தான் இருக்கார். அவரை நாடகத்துக்கு வரச்சொல்லி கடிதம் போட்டீங்களா? என்றார். நான் போடவில்லை என்று சொன்னேன். ""நல்லா இருக்காது. நீங்க அவரைக் கட்டாயம் நாடகத்துக்குக் கூப்பிடணும். அவரும் சந்தோஷப்படுவார்'' என்று வற்புறுத்தினார் கோமல். மு.ராமசாமி, விழாவுக்காக ஓடியாடி உழைத்துக் கொண்டிருந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர் தோழரை அனுப்பி செல்லப்பாவின் முகவரியைக் கொடுத்து மாலையில் நடைபெறும் நாடகத்துக்குக் கலந்து கொள்ள அவரை அதே ஆட்டோவில் அழைத்து வரச்சொன்னார். அந்தத் தோழர் போன வேகத்தில் பேயறைந்தது போலத் திரும்பி வந்தார். ""என்னங்க இது, ஒரு கெட்ட கிழவர் கிட்டே போய் என்னை அனுப்பிச்சீட்டீங்களே. அவர் ஆளை உண்டு இல்லைன்னு பண்ணிட்டார். எனக்கு என்ன வண்டி எல்லாம் அனுப்பி தாஜா பிடிக்கிறானா? அவன் யார் என்னைக் கூப்பிடுவதற்கு? நான் அங்கெல்லாம் வரமாட்டேன் என்று போய்ச் சொல்லு'' என்று கோபித்துக் கொண்டதாகச் சொல்லி வருத்தப்பட்டார். அந்தத் தோழரின் முகத்தில் ""எங்கே போய் என்னை மாட்டிவிட்டாய்?'' என்கிற பாவனை ரொம்ப நேரம் இருந்தது. ""என்ன செல்லப்பா வரலையா?'' என்று கேட்டார் கோமல். இல்லையென்றும், நடந்த கதையையும் சொன்னேன். விருட்டென்று வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு செல்லப்பாவைப் பார்க்கக் கிளம்பினார் கோமல். ஒரு பலியாட்டை பார்ப்பது போல அவரைப் பரிதாபமாகப் பார்த்தோம். அதே ஆட்டோ தோழரை தாஜா பிடித்து தைரியம் சொல்லி அவருடன் கிளம்பினார் கோமல். சிவதாணு போன்ற மூத்த கலைஞர்களும் அவருக்காகக் கொஞ்சம் பரிதாபப்பட்டார்கள். ஆனால் போன வேகத்தில் திரும்பி வந்தார் கோமல். உடன் குழந்தை போல் சிணுங்கிக்கொண்டே செல்லப்பா. செல்லப்பா நேராக என்னிடம் வந்து ""என் நாடகத்தை நீ எப்படிக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி இருக்கேன்னு பார்க்கத்தான் வந்திருக்கேன். கோமல் கூப்பிட்டாருன்னு வரலை'' என்று சொன்னார். (இப்போது கோமலை விட்டு செல்லப்பாவுடன் கதையை நகர்த்திப்போகிற ஆபத்து இருக்கிறது. என் பிறவிக்குணம் இது. ஜாக்கிரதையாகத் தான் இருக்கிறேன். செல்லப்பா கதையை வேறொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்.