ஞாயிறு, 9 அக்டோபர், 2011

Mathu.


Prabanchan.
மது நமக்கு மது நமக்கு மது நமக்கு உலகெலாம்



எழுதப்பட்ட வரலாறு தொடங்கும் காலத்துக்கு முன்பிருந்தே, நாங்கள் மது அருந்தி வாழ்ந்து வந்திருக்கிறோம். நாங்கள் என்பது புதுச்சேரி (பாண்டிச்சேரி என்பது தவறான வழக்கு) மக்களை உணர்த்துகிறது என்று கொள்க. தமிழ்நாடே வறண்டு கிடந்த, மதுவிலக்கு எனும் மூடத்தனமான சட்டங்கள் அமலில் இருந்த காலத்தில் நாங்கள் மது என்கிற அர்த்தத்தினால் வாழ்வைச் செறிவூட்டிக் கொண்டிருக்கிறோம். பூக்கள் என்கிற அதிசயத்தை ரசிக்கத் தெரியாதவர்களே, குழந்தைகள் என்கிற அபூர்வத்தை உணரத் தெரியாதவர்கள், கோழிக்குஞ்சுகளை, ஓடும் நதியை, எதையெதையோ மொழிந்து கொண்டிருக்கும் மலைச் சிகரங்களை, ரகசியங்களை மௌன வெளிகளில் முணு முணுத்துக் கொண்டே இருக்கும் காடுகளை நேசிக்கத் தெரியாதவர்கள், ஒரு அழகிய சம்போகத்தை நிகழ்த்த முடியாத உள்ளீடற்ற வெற்று மனிதர்களே மதுவை வெறுப்பவர்களாக இருக்கிறார்கள் என்கிறார் ஒரு பிரஞ்சுக் கவிஞர்.



பிரான்ஸ் தேசத்தோடு தொடர்பு கொண்டிருந்த, அழகிய பிரஞ்சுக் கலாச்சாரத்தோடு தம்மைப் பிணைத்துக் கொண்ட பல நூறு பிரஞ்சுக் குடும்பங்களைக் கொண்ட ஞானபூமி எங்கள் புதுவை. ஓரிரண்டு பத்து ஆண்டுகளுக்கு முன்னால், அக்குடும்ப நண்பர்கள் வீட்டுக்குச் சென்றால், அங்கே இருக்கும் முசியோவோ, மதாமோ நம்மிடம், 'முசியோ / மதாம், எது உங்களுக்கு உவப்பு, தண்ணீரா, சோடாவா' என்று கேட்கிற இன்னோசையைக் கேட்டு வளர்ந்தவன் நான். பூத்தையில் போர்த்திய சௌகரியமான இருக்கைகளில் நாம் அமர்ந்த பிறகு, நம்மை நோக்கி, தட்டில் உட்கார்ந்து வரும் நீலகண்டப் பறவை மாதிரி, மதுரம் நம்மைத் தேடிவரும். மது என்ற ஆச்சரியத்தைக் கண்டுபிடித்த உலகத்தின் அந்த ஆதி விஞ்ஞானியை நீங்கள் நினைக்க மறக்காதீர்கள் என்றால், சொர்க்கத்தின் கதவுகள் உங்களுக்கு ஒரு போதும் திறக்காது.



மது என்ற முறையில் நான் முதலில் அருந்தியது தென்னங்கள்ளைத் தான். தாய்ப்பாலுக்கு அடுத்தது தென்னங்கள்தானே? துரதிருஷ்டம் பிடித்த தமிழ்நாட்டிலிருந்து பலரும் வந்து எங்கள் (அக்காலத்து) சத்திரம் போன்ற வீட்டில் தங்கி, கள் குடித்து விட்டுச் செல்வார்கள். அவர்களின் வைத்தியர்கள், தினம் ஒரு மரத்துக் கள்ளாகக் குடித்து வந்தால், ஒரு மண்டலமோ, அரை மண்டலமோ (ஒரு மண்டலம் என்பது 48 நாட்கள்) கள்ளைப் பாவித்து வந்தால், மேனி புடமிட்ட பொன்னாகும் என்று சொல்லி இருப்பார். அதாவது ஒரு தென்னையிலிருந்து வடிந்த ஒரு மரத்துக் கள். காலை, மாலை இருவேளை பாவிக்க. 'கோல் கொண்டு முக்காலோடு நடந்து வந்த கிழம் கூட, வேட்கொண்டு களம் நோக்கி விரைந்து செல்வாரே, கள்ளுணர்ந்து குடித்தோரே' என்று யாரோ ஒரு பாரதி பாடியதாக ஒரு கள்ளன்பர் எனக்கும் சொல்லி இருக்கிறார்.



உடம்பைப் பொன் செய்ய வரும் முக்கிய உறவினர்களைத் தோப்புக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள கிராமணிகள் யாரையேனும் கள் வடித்துத் தரச் சொல்லி, அவரைக் குடிக்கச் செய்து, பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்து வரும் பொறுப்பு எனக்களிக்கப்படும். வழிகாட்டியாக இருப்பது எனக்கும் பிடிப்பதில்லையானாலும் தென்னந்தோப்பில் மரங்களின் கீழ், ஓலைகளின் கூச்சல்களைக் கேட்டுக் கொண்டிருப்பது எனக்குப் பிடிக்கும். தோப்பில், சூரியனைக் கீழே விழாமல் தாங்கிக் கொண்டிருக்கும் தென்னைகள். அதனாலேயே, மண் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். தரையில், விழுந்து உருளும் சின்னக் கால்பந்து போல இருக்கும் குரும்பிகள் எனக்கு விளையாட்டுப் பொருள். கள் மணக்கும் காற்று.



ஒரு தஞ்சாவூர் உறவினர், "நீயும் கொஞ்சம் குடியேன்டா" என்றார். கிராமணியைப் பார்த்து, "இவனுக்கும் கொஞ்சம் கொடு" என்றார். நான் குடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. புதிய மொந்தையொன்றில் கள்ளை ஊற்றிக் கொடுத்தார் அவர். கள் மட்டுமல்ல, அது வார்க்கப்படும் பாத்திரமும் மிக முக்கியம். அக்பர் குடித்த பொற்கோப்பைகளில் கள்ளை நீங்கள் ஊற்றிக் கொடுத்தாலும் கூட நான் மண்ணால் ஆன மொந்தையைத்தான் விரும்புவேன். மண்ணுக்குள் வேரோடி நாகலோகத்திலிருந்து தென்னை கொணர்ந்து தரும் கள்ளை, மண்ணால் ஆன பாத்திரத்தில் அல்லவோ அருந்த வேண்டும். தென்னையை நன்றி மறவா மரம் என்கிறாள் அவ்வை. நமக்கு வேண்டாமா நன்றி.



எட்டாம் வகுப்பு வரும்போது,கள் பற்றிய ஞானத்தை நான் எய்திவிட்டேன். கள்கள் மூன்று. ஒன்று தென்னங்கள், இரண்டு பனங்கள், மூன்று ஈச்சைக்கள். தென்னைக் கள், வைகறைக்குப் பிறகான காலத்துக்கு மிக சிலாக்கியம். மதியத்தை நெருங்கும் வேளை மிக உன்னதம். போதை, செங்குத்தாக, மலை ஏற்றக்காரர்களைப் போல தாவித் தாவி எகிறும். தென்னங்கள்ளை அருந்திவிட்டு, கப்பி ரஸ்தாவுக்கு வருவது போலப் பாவம் உலகில் வேறு ஏதும் இல்லை. தென்னை ஓலை உங்களுக்குச் சாமரம் வீசும். நீங்கள் ஆணாக இருந்தால், மரங்கள், பெண்ணாக தீட்சை பெறும். பெண்ணாக இருந்தால் மரங்கள் யுவர்களாகும். அரவாணியாக இருந்தால், நீங்கள் தேர்வு செய்யும் பாலாகவோ அவை மாறும். உங்கள் தேர்வு உங்களுடையது. தென்னங்கள், வெளியே இருக்கும் உங்களை உள்ளே கொண்டு சேர்க்கும். சுருதியோடு இழையும் சுத்த சங்கீதத்தை நீங்கள் அப்போது உணர்வீர்கள். பனங்கள், இருள் புலராத, கதிர் உதிக்கும் முன் அருந்த வேண்டி வஸ்து. மத்திய வயது நரைமுடி என ஒளியும் இருளும் பிணைந்த பொழுதில் அருந்தத் தொடங்குவது மிக உத்தமம். பனங்கள்ளுக்கும் சூரிய உதயத்தில் ரேகைகளுக்கும் நுணுக்கமான உறவுண்டு. காலை வெயில் ஏற ஏறப் போதை ஏறிக் கொண்டிருக்கும். பனங்கள், 'கோமூத்ரி' போதைத் தன்மையைக் கொண்டதாம். மகான்கள் சொல்கிறார்கள். 'கோமூத்ரி' என்பது என்னவோவெனில் நடக்கும் மாட்டின் மூத்திரம் மண்ணில் படிகிற வடிவு. வளைந்து, வட்டமிட்டு, மேலேறும் தன்மையது. பனங்கள் அருந்திய பிறகு, கடற்கரையில் உலவுவது சாலச் சிறந்தது. கேவலம் மனித ஜென்மங்களை, விசுவத்தோடு இணைக்கும் ஞானப்பால் பனையின் பால். ஈச்சை, மிக அருகியே நம் மண்ணில் காணப்படுகிறது. பாலையின் தோழன்/தோழி அது. மாலை நேரத்து பானம் அது. வீட்டில் இருந்து, பனங்கள்ளும் வாய்க்கப் பெற்றால், கசல் கேளுங்கள். பாகிஸ்தான் பாடகர்களுடைய கசல். இறைமையின் மிக அருகில் உங்களைக் கொண்டு வைப்பது ஈச்சைக் கள். அதோடு, உங்கள் காம வீரியத்தைக் குதிரையின் பக்கத்தில் கொண்டு சேர்க்கும் என்று விளம்பர வைத்தியர்கள் சொல்வார்கள். நம்பாதீர்கள். சிட்டுக் குருவி, குதிரை முதலான சமாச்சாரங்கள் எல்லாம், அந்தந்தச் சூழல், மனநிலை, உடல்நிலைகளைப் பொறுத்தவை. லேகியங்கள் புக முடியாத பிரதேசங்கள் அவை.



ஒன்பதிலிருந்து பத்தாம் வகுப்புக்கு வருகிற, கோடை கால விடுமுறை ஒன்றின் போதுதான் முதன்முதலாக சாராயம் என்கிற மதுவை நான் அறிந்தேன். சுஜனரஞ்சனி என்கிற பழம் பெரும் பத்திரிகை நடந்த கட்டடத்தின் மாடி அறைகளில் ஒன்றில், பாரதிதாசனின் முக்கிய சிஷ்யர்களில் ஒருவரைப் பார்க்கச் செல்கிறேன். (அப்போது நான் கவியாக முயன்று கொண்டிருந்த காலம். அதற்கு இசைவாக காதல் ஒன்றில் தோல்வி பெற்றிருந்தேன். ஆகவே கவிதை எழுதத் தொடங்கி இருந்தேன்.) அக்கவி இன்றும் இருக்கிறார். புதுச்சேரியில் வரலாற்றுப் புகழ் பெற்ற உணவு விடுதி நடத்திய குடும்பத்தைச் சேர்ந்தவர். அங்கு, தமிழகத்தில் மாபெரும் நகைச்சுவை நடிகரும், கலைவாணரும் ஆனவரின் மகனுமான என்.எஸ்.கே.கோலப்பன் இருந்தார். பாரதிதாசனின் எதிர்பாராத முத்தத்தில் (சினிமா பெயர் பொன்முடி) நடித்த கதாநாயகர் நரசிம்ம பாரதி இருந்தார். அந்தக் கலைக்குழுவில் பொடியன் நான் ஒருவனே. கவிஞர் ஒரு கண்ணாடிக் கிளாசில் புதுச்சேரிச் சாராயத்தை ஊற்றி, எலுமிச்சைப் பழம் பிழிந்து, 'சாப்பிடு' என்று சொல்லித் தந்தார். காரநெடியும், வினோதமான கசப்பும், எலுமிச்சைப் புளிப்பும் இணைந்து வினோதமாக இருந்தது அந்தச் சரக்கு. பின்னாளில் தமிழ்நாட்டில் விற்ற 'கடா' மார்க் சாராயம் எங்கள் புதுச்சேரி சாராயத்துக்கு முன், ஒன்றுமே இல்லை. தமிழ்நாடு கடாதான். எங்களுடையது புலி.



மீண்டும் ஒரு 'கிளாஸ்' எனக்கு அருளப்பட்டது. அருந்தினேன். வீட்டுக்குப் புறப்பட்டேன். அஜந்தா தியேட்டரில் கர்ணனும், ராஜா தியேட்டரில் வணங்கா முடியும். ரத்னா தியேட்டரில் விசுவரூபம் எடுத்து நின்றார் மாயாபஜார் கிருஷ்ணன். என்னுடைய பிரக்ஞையை மீறியே, என் உடம்பு கடிகாரப் பெண்ணுருவம் மாதிரி ஆடியபடி இருந்தது. கால்கள் என்கிற உடம்பின் உறுப்பு சாட்டின் துணி மாதிரி காற்றில் வெலவெலத்தது. தெரு விளக்குகள் மிகப் பிரகாசமாக எரிந்ததன் காரணம் விளங்கவில்லை. என் சுட்டு விரலால் காற்று வெளியில் ஏதோ எழுதிக் கொண்டே நடந்தேன். எதுவும் நடக்காமலேயே சிரிப்பு சிரிப்பாய் வந்து கொண்டிருந்தது. குடித்தது வெளியே தெரியக்கூடாது என்கிற அதீதப் பிரக்ஞையில் மிக நிதானமாக, நிமிர்ந்து நேராக நடந்து கொண்டிருந்தேன். எவனும் என்மேல் குறை காணமுடியாது. அவ்வப்போது என் நினைவுகளில் என் அப்பா வந்து பயமுறுத்திக் கொண்டிருந்தார். எங்கள் குலத் தொழிலே கள் விற்பதும், சாராயம் விற்பதும்தான். மூன்று கள்ளுக் கடைகளுக்கும் இரண்டு சாராயக் கடைகளுக்கும் சொந்தக்காரராக இருந்தவர்தான் என் அப்பா. அவர் குடித்ததே இல்லை. நான் குடிப்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியுமா. அதோடு, அவர் கைக்கு அசுர பலம் இருந்தது என் கேடு காலம். ஒருமுறை என்னை அவர் அறைந்ததில் அவர் விரலில் இருந்த மோதிரத்தின் வைரக்கல் தெறித்து விழுந்தது. அதையும் நானே தேடிக் கொடுக்கும் படியான துரதிருஷ்டம் நேர்ந்தது.



நடந்து கொண்டிருந்த என் முன், ஒரு சைக்கிள் வந்து நின்றது. மங்கலாக என் உறவினர் முகம் தெரிந்தது. அவர் சொன்னார்.



"இப்படியாடா குடிக்கிறது. தெருகூட தெரியாமே, சாக்கடை மேலேயே நடக்கிறியே, ஓரமா நகர்ந்து தெருவிலே நட."



அவர் என்னைத் தெருவுக்குக் கொண்டு வந்து நிலை நிறுத்தினார். 'நேரா நடந்து போ' என்றார். வளைவுகள், திருப்பங்கள் அற்ற, பிரஞ்சுக்காரர் போட்ட அருமையான தெருவில் நடக்கத் தொடங்கினேன்.



இரண்டு, மது தொடர்பான பிரஞ்சுத் தொடர்புகள். ஒன்று எங்கள் ஊருக்கும் குறுகிய சில மாதங்கள் மது விலக்கு வந்தது.



கடந்த ஐயாயிர ஆண்டுக்கால எங்கள் ஈர வாழ்வில், ஆறு மாதங்கள் மட்டும் நாங்கள் வறட்சிக்கு ஆளானோம். பிரஞ்சு ஆட்சியின்போது, அந்தப் பதினெட்டாம் நூற்றாண்டின் காலகட்டத்தில் எங்கள் ஊர் தொடர்ந்த படையெடுப்பைக் கண்டது. படை வீரர்களுக்குச் சம்பளம் கொடுக்கக் கஜானாவில் காசு இல்லையென்றால், ராஜாக்கள் படையெடுப்பார்கள். அப்படி மராத்தியர்கள் எங்கள் ஊர்ப்பக்கம் வந்தார்கள். திருப்பாப்புலியூர் (கடலூர்), மஞ்சக்குப்பம், சிங்கிரி கோவில், அழிசப்பாக்கம் என்று எங்கள் ஊருக்கு எல்லை ஊர்களைக் கொள்ளை போட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தச் சமயம், மக்களிடம் ஒழுங்கு, கட்டுப்பாடு குழைந்து போய்விடக் கூடாதென்று காரணம் சொல்லி, அப்போதைய குவர்னர் துய்மா ஒரு சட்டம் போட்டான். 1741 பிப்ரவரி 28-ஆம் தேதி.



'வெள்ளைக்காரர், தமிழர், மற்றும் கறுத்த சனங்களுக்கு (Black Town) அறிவிக்கிறதாவது: மார்ச் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரைக்கும் பிராந்தி, சாராயம், கோவை (கோவா) சாராயம், லிக்கர் சாராயம் (புதுச்சேரி சாராயம்), பத்தாவி (படேவியா) சாராயம், கொழும்பு சாராயம், பட்டை சாராயம் போன்றவற்றை விற்றாலும், விற்பித்தாலும் ஆயிரம் வராகன் அபராதமும் கொடுத்து ஒரு வருடம் காவலில் கிடக்கிறது. அவற்றை வாங்கிப் போகிறவனுக்குக் காலடியிலே கட்டி அடிச்சு வலது தோளிலே சுணக்கி நோய் முத்திரை போட்டு ஊருக்கு வெளியே துரத்தி விடுகிறது. தோட்டத்திலும் வீட்டிலும் தென்னை மரம் வைத்திருப்பவர்கள் எவருக்காவது கள்ளு ஒரு காசளவிலே வித்தாலும் விற்கச் செய்தாலும், யார் ஒருத்தர் குடிச்சாலும், குடிக்கச் செய்வித்தாலும் அவர்களுக்கும் முன்னே சொன்ன அபராதம் உண்டு'.



ஆறு மாதம் மட்டுமே இந்தச் சட்டம் அமலில் இருந்தது. அதன்பின் எங்கள் வீர முன்னோர்கள் இச்சட்டத்தைத் தூக்கி வங்கக் கடலில் எறிந்தார்கள்.



மது ஒரு அற்புதம் என்றால், அதை அடக்கிக் கொள்ளும் பாட்டிலும் ஒரு அற்புதம்தான். அந்தப் பாட்டில்கள், எங்கள் ஊரை மராத்தியர்களிடம் இருந்து காப்பாற்றியதை நீங்கள் கட்டாயம் அறிய வேண்டும். நன்றி மறப்பது நன்றன்று. மராத்தியப் படைத் தலைவன், ரகோஜி போஸ்லே புதுச்சேரியைச் சுற்றிக் கொண்டு குவர்னர் துய்மாவுக்கு (Dumas) ஒரு கடிதம் அனுப்புகிறான். ஆற்காடு நவாப்புக் குடும்பத்தார், குறிப்பாக சந்தாசாகிப்பின் மனைவியும், மகனும் உங்கள் பாதுகாப்பில் இருக்கிறார்கள். அவர்களையும், அவர்கள் புதுச்சேரி வரும்போது கொண்டு வந்திருக்கிற நகைகள், தங்க, வைர அணிகலன்கள், தங்கக் காசுகள், குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள் அனைத்தையும் எங்கள் வசம் ஒப்படைத்துவிட வேண்டும். இல்லையெனில் புதுச்சேரி ஜனத்தொகையை விட அதிகமான எங்கள் படை ஊருக்குள் நுழையும்.



துய்மாவிடம் படை பலம் இல்லை. நெஞ்சில் நேர்மையும், துணிவும் மட்டுமே அவனிடம் இருந்தன. பிரஞ்சு புதுச்சேரியின் சிறந்த மூன்று குவர்னர்களில் அவன் ஒருவன். அவன் பதில் கடிதம் எழுதினான்.



'.... பல ஆற்காட்டு நவாப்புகள் பிரஞ்சுக்காரர்களிடம் நட்பு பாராட்டி நண்பர்களாக இருந்துள்ளார்கள். அந்த நட்பை முன்னிட்டு ஆபத்துக் காலத்தில் எங்களிடம் தஞ்சம் புகுந்துள்ளார்கள். நண்பர்கள் உதவி கேட்டு வரும்போது, கதவை அடைப்பது மனித தர்மம்தானா? என்னிடம் தஞ்சம் புகுந்தார்கள் என்றால், எங்கள் பேரரசர் பிரஞ்சு தேச மாமன்னரிடம் தஞ்சம் புகுந்தார்கள் என்றே அர்த்தம். அவருக்குமானக்குறைவு ஏற்படுத்தும் காரியத்தை நான் செய்யமாட்டேன். தோஸ்த் அலியின் விதவையும், சந்தா சாயபுவின் மனைவியும், மகனும் எங்களிடம் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்களை நாங்கள் வெளியேற்ற முடியாது. புதுச்சேரியில் இருக்கும் கடைசிப் பிரஞ்சுக்காரனின் கடைசித்துளி ரத்தம் மண்ணில் விழும் வரைக்கும், கடைசிப் பிரஞ்சுக்காரன் உயிருடன் இருக்கும் வரைக்கும் அடைக்கல மனிதர்களை நாங்கள் விட்டுக் கொடுக்கமாட்டோம் . . .'



இந்த வீரம் மிகுந்த பதில், ரகோஜி போஸ்லேவுக்குக் கோபத்தை உண்டு பண்ணியது. சந்தா சாகிப்பின் குடும்பம் மட்டுமல்ல, துய்மாவின் அலட்சியத்து அபராதமாக ஆறு கோடி ரூபாய் அபராதமும், ஆண்டு தோறும் பிரஞ்சு அரசு கோடிக்கணக்கில் தமக்குக் கப்பம் கட்ட வேண்டும் எனச் சொல்லி, ஒரு தூதுவரையும் அனுப்பி வைத்தேன். மராத்தியத் தூதுவரை மிக மரியாதையுடன் வரவேற்ற துய்மா, அவரைச் சிறப்பாக நடத்தி தன் படைக்கலச் சாலையை அவருக்குக் காண்பித்தான். துப்பாக்கிகள், பீரங்கிகள், படை அணிவகுப்பையும், ராணுவ ஒழுங்கையும் கண்ட தூதுவர் மனநிலை மாற்றம் அடைந்தது. அவர் விடைபெறும்போது, ரகுஜி போஸ்லேவுக்கு மரியாதை நிமித்தம் 10 ஐரோப்பிய மது பாட்டிலையும் கொடுத்து அனுப்பினான்.

கதையின் முக்கிய இடத்தை அடைந்திருக்கிறோம். அந்த பாட்டில் மதுவை ரகுஜி தன் அன்புக்குரிய

மனைவியுடன் பகிர்ந்து கொண்டான். மராத்திய வரலாறு அவளைப் 'பேரழகி' என்று சொல்கிறது. அந்தப் பேரழகி, அத்தனை பாட்டில்களையும் அனுபவித்து அருந்தி முடித்து 'இன்னும் வேண்டும்' என்றாள். ரகுஜிக்கு என்ன செய்வது என்று விளங்கவில்லை. விரோதியிடம் பாட்டில் கேட்பதா என்பது அவன் பிரச்சினை. ஒரு பக்கம் பேரழகி. மறுபக்கம் கௌரவம். எது வெல்லும்? எது வென்றிருக்கிறது? அதுதானே வென்றிருக்கிறது. அந்த இல்லாத, இருப்பது போல் இல்லாத, ஆனால் இருக்கிற, சூன்ய மாயும், சேதன மாயும், அசேதனமாயும், மாயமாயும், ரூபமாயும் நிலைபேறுற்ற அதுதான் கடைசியில் வென்றது. 'சந்தா சாயுபு மனைவியா, மகனா, பணமா, இதெல்லாம் என்ன' என்றான் ரகுஜி. துய்மா மிக அன்புடன் முப்பது பாட்டில்கள் - அன்புடன்தான்- அனுப்பி வைத்தான். ரகுஜி, கொள்ளை அடிக்க வேறு பக்கம் நகர்ந்தான்.



முப்பது பாட்டில்களும் தீர்ந்த பிறகு, அந்தப் பேரழகி என்ன செய்து அவன் தாகத்தைத் தீர்த்துக் கொண்டாள், என்பதை எந்த சரித்திர ஆசிரியனும் எழுதி வைக்கவில்லை. யுத்தங்களை மனிதர்கள் உருவாக்குகிறார்கள். பாட்டில்கள் தீர்த்து வைக்கின்றன.



தமிழ்நாட்டில் நிலவி இருந்த மது விலக்கு, தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு திரும்பப் பெறப்பட்டது. மதுக்கடை மீண்டும் தமிழ்நாட்டில் திறக்கப்பட்ட அந்த நள்ளிரவில், நான் தஞ்சாவூரில் மாணவனாக இருந்தேன். தஞ்சைப் பழைய பேருந்து நிலையத்து அருகில், இன்று ஆரிய பவன் இருக்கும் இடத்துக்குச் சற்றுத் தள்ளி, சாராயக் கடை திறக்கப்பட இருந்தது. நானும் பிரகாஷும் அந்தச் சொர்க்க வாசல் திறப்பைக் காணக் காத்திருந்தோம். பிரகாஷ் குடிக்க மாட்டார். நானும் பிரடரிக் சுந்தர்ராஜன், இருளாண்டி, தஞ்சை மோகன் முதலான நண்பர்களும் நின்றிருந்தோம். ரஜினி திரைப்படத் தொடக்கக் காட்சி போல் மக்கள் குழுமி இருந்தார்கள். கடை, சீரியல் விளக்குகளாலும் மல்லிகைச் சரங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நாழியாக நாழியாக கூட்டம் எங்களை நெருக்கித் தள்ளியது. திடுமென மழை லேசாகத் தூறத் தொடங்கியது. லவுட் ஸ்பீக்கரிலிருந்து மிகப் பெரும் சப்தமுடன் சினிமாப் பாடல்கள், முழங்கிக் கொண்டியிருந்தன. எல்லாமும் எம்.ஜி.ஆர். படத்துப் பாடல்கள், எம்.ஜி.ஆர் தத்துவ, சமூக, காதல் பாடல்கள் சூழலுக்குப் பெரும் சோபையை நல்கிக் கொண்டிருந்தன. தமிழ்நாட்டின் இருண்ட காலம் நீங்கி, பொற்காலம் பிறந்து கொண்டிருந்த ஒரு அற்புத யுகத்தின் பிரசவ அறைக்குள் நாங்கள் இருந்தோம். குழந்தையின் தலை வெளியே தெரிந்தது. கடை உரிமையாளர், கடை விளம்பரப் பலகைக்குக் கற்பூரத் தீபம் காட்டிக் கொண்டிருந்தார். கூட்டம் வாயிலை நோக்கிச் சாடி முன்னேறியது. சரியாக மணி 12. இந்த நிமிஷம் முதல் குடிப்பவர்கள் சட்ட பூர்வமான குடிமக்கள். பத்து நிமிஷத்துக்கு முன் குடித்தவர்கள் குற்றவாளிகள். அரசு, எவ்வளவு எளிதாக மக்களின் முகங்களை மாற்றி அமைக்கிறது? எனக்கு எப்போதும் குடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயமோ, பெரு விருப்போ இருந்ததில்லை. நான் குடிப்பது பெரும்பாலும் என்னுடன் அமரும் நண்பர்களைப் பொறுத்தது. என் அளவு ர-ழ ஆகும் வரை. அதாவது ராயப்பேட்டை ழாயப்பேட்டை என்று எந்தக் கணம் உச்சரிக்கிறேனோ, அந்தக் கணமே நான் எழுந்துவிடுவேன். பிரகாஷுக்கு எல்லா மட்டத்திலும் அறிமுகம் உண்டு. அவருடைய செல்வாக்கைக் கொண்டு, ஒரு பாட்டில்ரம் வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினோம். அந்தக் காலத்திலிருந்தே, சாராயக் கடைகள் இன்றைய டாஸ்மாக் கடைகள் வரை பெரும்பாலும் நாய்கள் புகத் தயங்கும் அழுக்குக் கட்டிடமாகவே இருப்பதன் காரணம் என்ன என்பதின் பதில், குடிகாரர்கள் மேல், சமூகத்துக்கு இருக்கும் மனோபாவம்தான். அவர்களுக்கு இதுபோதும் என்று அரசு நினைக்கிறது. ஆனால், அவர்கள் பணம் மட்டும் வேண்டும்.



எங்கள் ஊர் பிராந்திக் கடைகள் மிக அழகியவை. நாகரிகமானவை. பார்கள் மிக நவீனமானவை. உங்களை மதிப்பவை. புதுச்சேரிகாரர்களாகிய நாங்கள் மது அருந்துபவர்கள். குடிகாரர்கள் அல்லர். குடிப்பது வேறு. அருந்துவது வேறு. தமிழ் நாட்டில் டாஸ்மாக் கடையைப் போல ஒரு ஆபாசக் கட்டிடம் எங்கள் ஊரில் இருக்கவே முடியாது. நாங்கள் அதைச் சகிக்க மாட்டோம். இது பிரஞ்சியரிடம் இருந்து நாங்கள் கற்ற பல அழகுகளில் ஒன்று.



உணவு மேசையை (இதைத் தீனி மேசை என்பார் ஆனந்த ரங்கர்) நாங்கள் அலங்கரிக்கும் முறையே வேறு. அழகும், சௌகரியமும் மிகுந்த மேசையும், நாற்காலிகளும் முக்கியம். மேசை மேல், அப்பழுக்கற்ற, பூப் போட்ட வெள்ளைத் துணிகள் விரித்து ஒழுங்கு செய்வோம். மதுவில் வகைக்கு ஏற்ப கிளாஸ்களை மட்டுமே பயன்படுத்துவோம். பீர் என்றால் பெரிய அகன்ற கிளாஸ். விஸ்கி, பிராந்திக்கு வேறு. சின்னக் குப்பிகளையும் ஒயின்களுக்குப் பயன்படுத்துவோம். சுற்றி அழகான சீனத் தட்டுகள். நிறைய பூக்கள் வரையப்பட்டவை. அவைகளில் உபகாரத் தீனி (சைட்டிஷ்) இருக்கும்.ஆளுக்கொரு சிறிய கைத்துண்டு கட்டாயம். தனியாக சோடா, தண்ணீர், இனிப்பு பாட்டில் டிரிங்க் என்று இருக்கும். எங்கள் சப்தம், அடுத்த மேசைக்குக் கேட்பது அநாகரிகம் என்று எங்களுக்குத் தெரியும்.



தெருவில், துணியில்லாமல், குறியை வானத்துக்குக் காட்டியபடி மயங்கிக் கிடப்பவர்கள் சர்வ நிச்சயமாகத் தமிழ்நாட்டுக்காரர்களாகவே இருப்பார்கள். நாங்கள் காட்டுவதில்லை. அண்மைக் காலமாக புதுச்சேரியும் சீரழியத் தொடங்கி இருக்கிறது.



ஜப்பானியர்களின் தேநீர் அருந்துவதில் இருக்கும் ஓர்மை மற்றும் ஆன்மீகப் பரவசத்துடன் அருந்த வேண்டிய ஒரு உள்நோக்குப் பயணம் மது. வன்மம், பகை, கோப தாபம், சிறுமைகளை வெளிப்படுத்திக் கொள்ளும் இடமாக மதுப்பிரதேசம் சீரழிவது, மதுவை அல்ல, அதைக் குடிப்ப வரையே நிரூபிக்கிறது.