ஞாயிறு, 9 அக்டோபர், 2011

Prabanchan. Two ladies.



இரண்டு பிரஞ்சுப் பெண்கள்



இரண்டு பிரஞ்ச் பெண்களை அறிமுகம் செய்துகொள்ளப் போகிறோம். பொதுப்புத்தியில் பதிந்து போயிருக்கும் 'அழகி' என்கிற பிம்பமோ, வீர தீரச் சாகசம் செய்த பெண்மணிகளோ அல்லர். அவர்கள் இருவருமே தம் காலத்து சமூக வரம்புகளுக்குள் ஒரு மீறலை ஏற்படுத்தியவர்கள் என்பதனாலும், தங்கள் செயல்பாடுகளுக்குத் தங்கள் ஆத்மாவின் உள்ளுணர்வின் திசை காட்டுதலுக்கேற்பத் தங்களைத் தகவமைத்துக் கொண்டார்கள் என்பதாலேயே நம் கவனத்தைக் கோருப வர்களாக இருக்கிறார்கள். முதலில் ழான். பிரான்சில் பாரிசில் பிறந்து மருத்துவம் பயின்று இந்தியாவுக்கு வந்தவர் அவ்பேர். அரசு மருத்துவமனை அதிகாரியாகப் புகழ்பெற்றவர் அவர். பிரஞ்சுக்காரர்களின் தலை நகரான புதுச்சேரித் தெருவில் அவ் பேர், எலிசபெத்தைச் சந்திக்கிறார். ஒரு போர்ச்சுக்கீசியரின் இந்திய மனைவிக்குப் பிறந்தவர் எலிசபெத். புதுச்சேரித் தெருக்களில் ஷாம் பெய்ன் ஒயினின் மதுர மணம் பரவிய ஒரு மாலையில் அவர்கள் திருமணத்தில் இணைகிறார்கள். அவர்கள் எட்டுக் குழந்தைகளைப் பெறுகிறார்கள். அதில் மூத்தவள் ழான். பிறந்த வருடம் 1706.



ழானின் குழந்தைப் பருவம், கோட்டையைச் சுற்றிய பூங்காக்களில் பட்டாம்பூச்சியின் பின்னே மலர்ந்து கொண்டிருந்தது. நோயாளிக் கிடங்குக்கு அருகேயே இருந்த அவர்கள் வீட்டிலிருந்து பார்த்தால், கரும் பச்சைப் பாய் விரித்த கடல் தெரிந்தது. வீட்டு மாடி ஜன்னலிலிருந்து, புரண்டு புரண்டு வரும் அலைகளைப் பார்த்துக் கொண்டிருப்பதில் தன்னை மறப்பவள் ழான். கடலும் அலையும் அவளுக்குத் தினம் தினம் புதிது புதிதாய் என்னென்னவோ சொல்லிக் கொண்டே இருந்தன.



கடல் எப்போதும் ஒரு கண்ணாடி. மனிதர்களின் சந்தோஷத்தையும் துக்கத்தையும் அது பிரதிபலித்துக் கொண்டே இருக்கும். தெருக் குழந்தைகளிடம்தான் அவள் தமிழ் பேசக் கற்றாள். பிரஞ்ச் ஒலியில் தமிழ் பேசினாள். கடற்கரை மணலில் அவள் நிறைய வீடுகள் கட்டினாள். மறுநாள் சென்று பார்த்தால், அவை இருப்பதில்லை. தெருக்களில் ராணுவ, காவல் துறை ஆட்கள் நடமாட்டம் எப்போதும் இருக்கும். வெள்ளைக்காரர்கள், தனியாகவும் தம்பதி சமேதராகவும் தெருக்களில் நிரம்பி இருப்பார்கள். கோட்டைக்குள் அடிக்கடி உயர் உத்தியோகஸ்தர்கள், குவர்னர், துணை குவர்னர்களின் கொண்டாட்டங்கள் நிகழும். நிறைய மதுப்புட்டிகளுடன் வயதான ஒயின்கள் மனிதர்களைப் பருகிக்கொண்டே இருக்கும். பெரிய பெரிய தீனி மேசைகள் போடப்பட்டு இந்திய ஐரோப்பிய உணவு வகைகள் பரிமாறிக் கொள்ளப்படும். ழான் இந்திய உணவை நோக்கியே கை நீட்டுகிறவளாக இருந்தாள்.



அம்மா எலிசபெத் 'இந்தியப் பெண்ணின்' மனோபாவங்களைக் கொண்டவளாக இருந்தார். அதாவது தன்னைப் பின் கட்டிலேயே வைத்திருக்கும் பெண். (ஆண்களால் அப்படி வைக்கப்பட்டு அதை இயல்பாக ஏற்றுக் கொள்ளும் பெண்.) ழானுக்கும் அவள் அம்மாவுக்கும் இது பற்றியே முரண்கள் தோன்றிக் கொண்டிருந்தன. தனக்குப் பறக்கத் தோன்றுவதை நினைவுறுத்தினாள் ழான். பெண்ணுக்குச் சிறகுகள் தேவையில்லை என்றார் எலிசபெத்.



ஒருநாள், கடற்கரை ஓரம் நின்று வந்துபோகும் கப்பல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் ழான். அவளைத் தேடிவந்து அவள் வீட்டார் அழைத்துச் சென்றார்கள். வீட்டில் அவளை மணக்கப்போகும் மாப் பிள்ளை வேன்சான் காத்திருந்தார். பிரஞ்ச் கும்பினியில் ஒரு உத்தியோகஸ்தர். அதோடு வணிகர். தேவகுமாரனுக்கு முன்னால் அவள் விரலில் வேன்சான் திருமணத்தை உறுதி செய்தார். ழானுக்கு அப்போது வயது 13.



திருமணத்தின் அர்த்தத்தை இரவுகளில் அவள் புரிந்துகொள்ள நேர்ந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. கூடிக் குசுகுசுத்துக் குருட்டறைகள் இட்ட கரு. போர்க் குதிரைகளின் காலில் இடர்பட்டாற்போல் இருந்தது. தொடர்ந்து பதினொரு குழந்தைகளைப் பெற்றாள் ழான். சிலது வாழ்ந்தன. சிலதைக் கர்த்தர் எடுத்துக் கொண்டார்.



வீட்டின் வரவேற்பறையில் இப்போதெல்லாம் புதிய நபர், அவள் கணவனுடன் பேசிக்கொண்டு இருப்பதை அவள் காணத் தொடங்கினாள். புதுச்சேரிப் பகல்கள் இத்தனை வெளிச்சமாக இருப்பதை இப்போது தான் அவள் பார்த்தாள். வேன்சானின் மதாம் என்ற முறையில் விருந்தாளிக்குக் குடிக்கவும், அருந்தவும், தின்னவும் அவள் பணி செய்ய வேண்டி இருந்தது. அந்த இளைஞன், பிறந்த பிரான்ஸ் தேசத்தையும் விட்டு தனிமையில் வாழ்ந்துகொண்டிருக்கும் துய்ப்பிளக்ஸ். அவன் கண்களில் கனவு மிதந்து கொண்டிருந்தது. அரசியலில் பெரும் சாதனைகளைச் செய்யப் போகிறவன்தான் என்று அவன் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் வார்த்தைகளில் தங்க நாணயங்களின் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. பணம் பண்ண வேண்டும். பண மூட்டைகளை இருக்கைகளாகப் போட்டு அவைகளின்மேல் உட்கார வேண்டும். கும்பினியின் மிக முக்கிய இடத்தில் இருந்தான். விரைவில் துய்ப்பிளக்ஸ், வேன்சானின் வியாபாரக் கூட்டாளியாக மாறினான். இருவரும் சேர்ந்து வியாபாரம் செய்யத் தொடங்கினார்கள். சரக்குகளைக் கப்பல்களில் ஏற்றிக் கரைகடந்த நாடுகளுக்குச் சென்று விற்றுத் திரும்பிக் கொண்டிருந்தான் வேன்சான்.



துய்ப்பிளக்ஸ், மிக நுணுக்கமான மெல்லிய உணர்ச்சிகள் கொண்டவனாகத் தெரிந்தான், ழானுக்கு. அவள் குழந்தைகளிடம் அவன் பிரியமாக இருந்தான். அவன் வருகை, வரவேற்பறையில் பகல் நேரத்திலும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்திருப்பதாயும், சாம்பிராணிப்புகை மணமூட்டுவதாகவும் ழானுக்குத் தோன்றியது. புகை, இரவு நேரத்திலும் அவள் கட்டில் ஓரம் கமழ்வதாகவும் அவளுக்குத் தோன்றவாரம்பித்தது. இந்த நேரத்தில்தான், குழந்தைக் கை முறுக்கைக் காக்கை அடித்ததுபோல், துய்ப்பிளக்ஸ், புதுச்சேரியிலிருந்து கல்கத்தாவை அடுத்த சந்திரநாகூருக்கு மாற்றப்படுகிறான். அங்கு அவன் கும்பினியின் இயக்குநர். ஹுக்ளி நதிக்கரை ஓரம் அவன் இருக்கை இருந்தது. சில்லிட்டு வீசிய இரவு நேரக் காற்று துய்ப்பிளக்ஸை இம்சை செய்தது என்று ஒரு வரலாற்றாளர் எழுதுகிறார். வேன்சானைத் தான் இருக்கும் பகுதிக்கே அழைத்துக் கொண்டு வியாபாரத்தைத் தொடர்கிறான் துய்ப்பிளக்ஸ். வேன்சானுடன் ழானும் வங்கத்துக்குக் குடிபெயர்கிறாள்.



விரைவிலேயே ஒரு பெரிய வணிகப் பயணத்தை மேற்கொண்ட வேன்சான், புயலில் சிக்கி, உடல் நலம் கெட்டு, வங்கம் திரும்பிய சில நாட்களுக்குள் மரணத்தை அழைத்துக் கொள்கிறான். நண்பனுக்காகத் துக்கம் காத்த துய்ப்பிளக்ஸ், கிறித்துவ நெறிகளுக்குட்பட்டு ழானைத் திருமணம் செய்துகொள்கிறான். திருமணம் நிகழ்ந்த சில நாட்களுக்குள் துய்ப்பிளக்ஸ், புதுச்சேரியைத் தலைமை அகமாகக் கொண்ட பிரஞ்சு பிரதேசத்துக்குக் குவர்னராக உயர்த்தப்படுகிறான்.



ழான், தன் கனவு நகரமான புதுச்சேரிக்குத் திரும்புகிறாள். கடல் அலைகள், அதே சப்தத்துடன் ஆர்ப்பரிக்கிறது. கடற்கரை மணல் மட்டும் லேசாக அழுக்குப்பட்டிருப்பது போல அவளுக்குத் தோன்றியது. இப்போது அவள் நகரத்தின் முதல் பெண்மணி. குவர்னர் துய்ப்பிளக்ஸின் மதாம். ஆகவே மதாம் துய்ப்பிளக்ஸ். ஒரு உயர்தரத்து அதிகாரி, 'மதாம் துய்ப் பிளக்ஸுக்கு நகரத்தின் நல்வரவு' என்கிற போது, 'நான் மதாம் துய்ப்பிளக்ஸ் மட்டும் இல்லை. நான் ழான் அல்பெரும்கூட, என்கிறாள். பதவியும், சௌகர்யப் பௌதிகப் பொருள்களும், திரும்பிய பக்கமெல்லாம் ஏவல் பாத்திரங்களும், அதீத உண்மைக் கலப்படம் அற்ற பணிவு நாடகங்களும் அவளை எரிச்சல் அடையச் செய்தன. கடற்கரையில் தன்னந்தனியாகக் காலாற நடக்கும்போதுகூட, துப்பாக்கிச் சனியன்கள் அவள் பாதுகாப்பாயின. துய்ப்பிளக்ஸ் குவர்னர் என்றால், நான் அதில் பாதி. அதிகாரச் சுவருக்குள் அலங்கார பொம்மை அல்ல நான் என்ற முடிவுக்கு அவள் ஒரு நாள் வந்தாள்.



அந்தக் காலத்தில் லஞ்சம், ஊழல் என்பதெல்லாம் அரசு அந்தஸ்தோடு விளங்கின. அதிலும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மானுட சங்கல்பங்களை உலகுக்கு வழங்கிய பிரான்சிலா என்றால் நமக்கு வியப்பாகத் தோன்றலாம். பிரஞ்சுப் புரட்சிக்கு முந்தியவள் ழான். அதோடு, பின்வந்த காலனிய வாதிகள், அந்தத் தத்துவங்களை பிரஞ்சு நாட்டு எல்லைக்குள் முடக்கிக் கொண்டார்கள். காலனி நாடுகளில் மிக மோசமான ஆதிக்கச் சக்திகளாகவே இருந்தார்கள். பிரான்ஸ் தேசத்தில் முக்கிய, அ-முக்கியப் பதவிகள் எல்லாமும் ஏலத்துக்கு விற்று அதிகப் பணம் தருவோரே பதவியில் அமர்த்தப்பட்டனர்.



மாநிலத்தில் கோர்த்தியேவாக, மிக முக்கிய அரசுப் பொறுப்பில் இருந்த கனகராயமுதலி, காலம் பண்ணிப் போனார். ஒரு பெரிய அறுவடை பூமியாயிற்று புதுச்சேரி. ஏற்கெனவே, துணை கோர்த்தியே வாக-துபாஷியாக-குவர்னருக்கு நெருக்கமான ஆனந்தரங்கப் பிள்ளைக்கே அந்தப் பதவி போய்ச்சேரும் என்றே அரசியல் வட்டாரம் நினைத்தது. ஊடாக, அன்னபூர்ண ஐயன் என்கிற வைத்தியன் புகுந்து, ழானைச் சந்திக்கிறான். அவளுக்கு 1500 வராகனும் (1 வராகன்- 3 ரூபாய்), குவர்னருக்கு 5000 வராகனும் தருவதாகவும், அந்தப் பதவி தனக்கு வேண்டும் என்கிறான். செத்துப்போன கனகராய முதலியின் தம்பி சின்ன முதலியும் அந்தப் பதவிக்குப் பணம் தரத் தயாராகிறான். ழான், மிக புத்திசாலித்தனமாக யோசிக்கிறாள். பதவியின் 'விலை'யை ஆனந்தரங்கப் பிள்ளையிடம் இவ்வாறு சொல்லிக் கொக்கி போடுகிறாள்.



'அந்த அன்னபூர்ண ஐயனுக்கு வாணிபம், நிர்வாகம் போன்ற எதிலுமே அனுபவம் இல்லை. நீயானால் இந்த உத்தியோகத்தில் சின்னப் பிள்ளையாயிருந்து எங்கள் கையின் கீழ் பழகினவன். . . நீ எனக்குப் பிள்ளை. துரையும் உன்னைப் பிள்ளையாக நினைத்தே என்னிடம் கெட்டியாகச் சொன்னார்' என்பதாகச் சொல்லி, பிள்ளையை ஆராய்கிறாள் ழான்.



'காசு சத்தம் கேட்டாலே அம்மாள் வாயைத் திறக்கிறாள்' என்று பிள்ளை (தன் டைரியில்) எழுதுகிறார். குவர்னர் துரை வாங்கலாம். துரைசானி லஞ்சம் வாங்கக் கூடாதா என்பது ழானின் கேள்வியாக இருந்தது. ஆனந்தரங்கர், குவர்னருக்கு மட்டுமல்லாமல் தனக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள் ழான். கனகராய முதலி வாரிசில்லாமல் செத்துப் போக, அவர் சொத்துக்கு மனைவி, மருமகள், தம்பி என உறவுகள் எதிர்பார்க்க, சொத்துகளைத் தன்பக்கம் வளைத்துக் கொள்ள பெரு முயற்சி எடுத்து வெற்றியும் பெறுகிறாள் ழான். அரசாங்கத்தின் முக்கிய அச்சாணியாகவும் பணி ஆற்றுகிறாள். பிரஞ்சியர்க்கும் ஆங்கிலேயர்க்கும் விளைந்த யுத்தத்தின் போது, ஊரைவிட்டு ஓடிப்போன செட்டிகள், கோமட்டிகளின் வீடுகளில் தாழ்த்தப்பட்ட, வீடற்றவர்களைக் குடியேற்றுகிறாள் ழான். தனக் கென்று தனிப்படையே வைத்துக் கொண்டு ஆட்சி செய்திருக்கிறாள் ழான்.



துய்ப்பிளக்ஸுக்குப் பன்னிரண்டாவது குழந்தையைப் பெறுகிறாள் ழான். ஆண் குழந்தை. அது காலை நேரத்தில் பிறக்கிறது. கோயில் மணியோசை ஊரை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. மக்களுக்குச் சர்க்கரை விநியோகம் செய்கிறார் பிள்ளை. மாலை, மணியோசை துக்கத்தைக் கொண்டு சேர்க்கிறது. பிறந்த குழந்தை சில மணி நேரத்தில் இறந்து போகிறது.



சுமார் 12 ஆண்டுத் துரைத்தனத்துக்குப் பிறகு, பிரான்ஸ், துய்ப்பிளக்ஸைத் திருப்பி அழைத்துக் கொள்கிறது. வியாபாரம் செய்வதற்கு மாறாக, நாடு பிடிக்கும் வேலையில் ஈடுபட்டான் என்பது குற்றச்சாட்டு. நாடு பிடிக்கும் வியாபாரம் வெற்றி பெற்றிருக்கும் என்றால் பிரான்ஸ் அவனைப் பாராட்டி இருக்கும். துய்ப்பிளக்ஸ் வீழ்ந்த இடத்தில் கிளைவ் வெற்றி பெற்றான். ஏறக்குறைய ஒரு கைதியாகப் பிரான்சுக்குப் புறப்பட்டான் துய்ப்பிளக்ஸ். மகள்கள், மரு மகன்கள் ழானைத் தங்களுடன் வைத்துக் கொள்ளவே பிரியப்பட்டார்கள். ஆனாலும் கைதியுடன் தான் தன் வாழ்க்கையை இணைத்துக் கொண்டாள் ழான். பிரான்சுக்குப் சென்ற ழான், அங்குள்ள குளிர் வாட்ட, மண் ஒட்டாமல் போக, வறுமை வந்தெய்த, நிராசையுடன் அங்கேயே தன் கடைசி மூச்சை விட்டாள். இறக்கும்முன், சில நாட்கள் முன்னர், புதுச்சேரியில் இருந்த தன் தோழிக்கு எழுதினாள்.



'புதுச்சேரி மண்ணில் இறந்து, அங்கேயே புதைக்கப்படவேண்டும் என்று விரும்புகிறேன். அது நடக்காது என்றே தோன்றுகிறது'



ழான் ஆசை நிறைவேறவில்லை. சரியாக ஐம்பது ஆண்டுகளே மண்ணில் வாழ்ந்தாள், அவள். ஆண்களால் மட்டுமே நிரம்பி இருந்த அரசியல் களத்தில் தனக்கான இடத்தைக் கடும் பிரயாசையுடன் ஏற்படுத்திக் கொண்டவள் அவள். அவள் அரசியல் பிழைத்தாள் என்கிறார்கள் வரலாற்றாளர்கள். முதலிலும் இடையிலும் கடைசியிலும் தப்பாகவே ஆகிப்போன அரசியலில் அவள் மட்டுமே பிழை செய்தாள் என்பது எங்ஙனம் சரி? அவள், அவள் விருப்பப்படி வாழ்ந்தாள். தனக்கான தடத்தைத் தானே தேடினாள். தனக்கான கூட்டைக் கட்டினாள்.



வாழ்க்கை அவளுக்காகத் தரப்பட்டது. அதை முழுதுமாகவே அவள் வாழ்ந்தாள். அப்புறம் என்ன?



அடுத்த பெண், மார்க்கெரித் துராஸ். பிரஞ்சு மொழியில் எழுதிய 'காதலன்' நாவலில் இடம் பெறும் அந்த 'அவள்'. பிரஞ்சு மூலத்திலிருந்தே தமிழ் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. உலகம் முழுதும் சுமார் 40 மொழிகளில் ஆக்கம் செய்யப்பட்ட நாவல் இது.



ஆசிரியை மார்க்கெரித் துராஸ், 1996 வரை வாழ்ந்தவர். வாழ்வின் கடைசிப் பகுதியில் மிகுந்த புகழோடு, நிறைய மர்மப் பூச்சுகளைப் பூண்டவராக விளங்கியவர். தீவிரமான அரசியல் ஈடுபாட்டுக்கும் செயல்பாட்டுக்கும் இவர் பேசப்பட்டிருக்கிறார். பிரான்சின் அனைத்து அரசியல், கலாச்சாரப் போராட்டங்களிலும் அழுத்தமாகப் பங்கெடுத்துக் கொண்டவர். பிரான்ஸ், ஜெர்மனியின் ஆக்கிரமிப்புக்குள்ளானபோது தலைமறைவு வாழ்க்கையை மேற் கொண்டு நாஜிகளுக்கு எதிராக இயங்கியவர். மே 68 மாணவர் போராட்டம், அல்ஜீரியா நாட்டின் விடுதலை ஆதரவுப் போராட்டம், தீவிரப் பெண்ணியம் என்று இவர் வாழ்க்கையை அடர்த்தி பண்ணிக் கொண்டார். கீழைத் தேசத்தை நேசித்த பெண்மணி. கங்கையையும், கல்கத்தாவையும் எழுதி இருக்கிறார். துராசின் நண்பரும், பிரான்சின் ஜனாதிபதியுமான மித்ரானிடம், ஒரு உணவு விடுதியில் உரையாடியபோது அவர் சொன்னார். 'மித்ரான். நான் இப்போ சாதாரணமானவள் இல்லை. உன்னைக் காட்டிலும் நான் பெரியவள். உலகம் என்னை அறியத் தொடங்கி இருக்கிறது.’ என்றபோது மித்ரான் 'அதிலென்ன சந்தேகம். உன் மரியாதை பற்றி நான் ஆச்சரியப்படவில்லை' என்றார்.



துராசின் எல்லாப் படைப்புகளுமே தன் வரலாறு வகையைச் சேர்ந்தவை. அந்த வரலாற்றைச் சொல்ல அவர் தேர்ந்தெடுத்த வசீகரமான மொழியும், விசித்திரச் சொப்பனம் காணும் பாத்திரங்களும் அவர் படைப்புகளைத் தரப்படுத்தி இருக்கின்றன. ஒற்றைத் திறப்பு அல்லாது, பாத்திரங்களின் பல கதவங்களைத் திறக்கிற நுட்பம் அவருக்கு இருந்தது. ஒன்றைச் சொல்லும்போதே பல அடுக்குகளையும் வெளிச்சப்படுத்திக் கொண்டே நகரும் எழுத்துப்போக்கு துராசுடையது.



மனிதப் புரிதலில், 'முழுமை' என் பதில் அறவே நம்பிக்கை இல்லாதவராக இருக்கிறார் துராஸ். தத்தளிப்பவர்கள், கனவுலகவாசிகள், நீர்த்த கற்பனையில் மிதப்பவர்கள், தூக்கத்தில் நடப்பவர்கள், விட்டேற்றியான வழிப்போக்குப் பயணிகளின் மனோபாவக்காரர்கள், உறுதி என்பதை அறியாதவர்கள் என்பவர்களே துராசின் பாத்திரங்கள். உண்மை என்பது ஒன்று இல்லை ஆதலால், உண்மை என்பது போன்ற ஒன்றைக் கட்டமைக்கிறவராக இருக்கிறார் துராஸ். தான் அறிந்த 'உண்மையை', மொழிக்குக் கொண்டுவரச் சிரமப்படுபவர்போல நடிக்கிறார் துராஸ். எதிர்காலத்தில் எழுத்து எப்படி இருக்கும் என்பது பற்றித் துராஸ் இப்படிச் சொல்கிறார். 'எதிர் காலத்தில் எழுத்தென்பது எழுதப்படாததாக இருக்கக்கூடும். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை. மிகச்சுருக்கமாக இலக்கணம் இன்றி சொற்களை மட்டும் நம்பி எழுதப்படும். இலக்கணம் மறுக்கும். அலைக்கழிக்கும் சாத்தியங்களுடன் இருக்கும்'.



காதலன் 1984-இல் பிரசுரமாயிற்று. பதினாறு வயதுகூட நிறையாத ஒரு பெண்ணுக்கு அவளை விடவும் இரு மடங்கு வயதான ஆணுடன் காதல் ஏற்படுகிறது. அவன், பணக்கார சீன இளைஞன். அவள், வியட்நாமில், பிரஞ்ச் ஆதிக்கத்துக்குப் பட்ட பூமியில் பிறந்து வளர்பவள். ஏழை. அல்லது தேவைகள் பூர்த்திசெய்து கொள்ள முடியாத சூழல் உள்ள குடும்பம். இருவருக்குமான 'காதல்', நிகழ்காலம் தொடங்கிக் கடந்த காலத்துக்கும் பின்வாங்கிச் சொல்லப்படுகிறது. இருவருக்குமே இக் காதல் 'கைகூடாது' என்பது தெரியும். அவளுக்கு அவன் தான் முதல் அனுபவம். அவனுக்கு அது உண்மையான முதல் காதல்.



'கை கூடாது' என்பதுதான் என்ன? காதல் என்பது முறையாக, திருமணத்தில் பழுத்து, குடும்பத்தில் நிலை பேறுடையது என்பதாகக் கருதுவதையே கைகூடுதல் என்று கருதப்படக் கூடியது. இவ்வாறு நலமோங்கும் விதத்தில் அதன் வளர்ச்சிப் போக்காக அமையாதது, திரளாதது, கைகூடாதது. துராஸ், கைகூடாமல் போனால் என்ன போயிற்று என்கிறார். சூரியன் அஸ்தமனம் நின்றுவிடுமா என்கிறார் அவர். புத்திக்குள் ஏன் இந்த நிறுவனச் சிலுவைகளைச் சுமக்கிறீர்கள் என்கிறார் துராஸ். நியாயம்தானே?



துராசின் காதலன் நாவலில் வரும் அவள், அந்த அந்தக் கணத்தில் வாழ்பவள். அவனுக்கு அருளப்பட்ட அற்புதம் எனத்தக்க வாழ்வின் கணங்களின் முழுமையில் தன்னைக் கரைத்துக் கொள்கிறாள். அவள் தன் அனுபவங்களைச் சொல்வதாக, தன்மை இடத்தில்வைத்து நிகழ் காலத்தையும் கடந்ததையும் இணைத்துச் சொல்லுவதாக நாவல் நிகழ்கிறது. நாவல் இப்படித் தொடங்குகிறது.



'ஒரு நாள் வளர்ந்து பெரியவளாக இருந்த காலம். பொது மண்டபமொன்றில் நின்று கொண்டிருக்கிறேன். என்னை நோக்கி ஒருவன் வந்தான். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபின், 'வெகுநாட்களாக உங்களை அறிவேன். பலரும், நீங்கள் இளவயதில் அழகாய் இருந்ததாகச் சொல்கிறார்கள். எனக்கென்னவோ இப்பொழுதுதான் உங்கள் முகம் அழகாயிருக்கிறது. அதைச் சொல்லவே வந்தேன். உங்கள் இளவயது முகத்திலும் பார்க்க, சோபையற்றிருக்கும், இப்போதைய முகத்தை விரும்புகிறேன்' என்றான்.



'எனக்கென்று ஒரு வாழ்க்கை இல்லை. இருந்தால்தானே சொல்ல. மையம் என்ற ஒன்றை ஒரு போதும் கண்டதில்லை' எனச் சொல்லும் அவள், தொடர்கிறாள். ‘என் பதின்பருவத்துக் காலங்களான பதினெட்டும் பதினைந்தும் என் கண்முன்னே விரிகின்றன. தெரிகிற முகம் பின்னர் (அதாவது எனது நடுத்தர வயதில்) குடித்துச் சீரழியவிருந்த எனது முகத்தை ஓரளவு முன்கூட்டியே தெரிவிக்கும் முகம். கடவுளால் நிறைவேற்ற இயலாத பணியினை மது முடித்து வைத்தது. என்னைக் கொல்லும் பணியையும் மது ஏற்றிருந்தது’ என்று விசாரத்துக்குள் புகுகிறாள் துராசின் கதை நாயகி.



இப்போது அந்தப் பெண்ணின் முகம் சுமாராக, கதாநாயகித்தனம் இல்லாத விதத்தில் தட்டுப்பட்டிருக்கும். அவள் தன் அம்மாவிடம், 'தான் எழுதப்போவதாகச் சொல்கிறாள். அம்மா மௌனம் காத்தாள். பின், 'என்ன எழுதப்போகிறாய்' என்கிறாள். அவள் 'புத்தகங்கள், நாவல்கள்' என்கிறாள். அம்மா முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு, தடித்த குரலில் 'முதலில் கணக்கில் பட்டம் பெற்றாகணும். பிறகு உனது விருப்பம் போல் எதையாவது எழுதித் தொலை' என்கிறாள். எழுத்தின்மேல் இப்படியான 'கரிசனம்' உலகம் முழுதும் இருக்கிறது போலும்.



நமது அவளின் ஆசிரியர், அவள் அம்மாவிடம், அவள் பிரஞ்சுப் பாடத்தில் முதலாவதாக வந்திருப்பதைச் சொல்கிறாள். அம்மா அமைதியாக இருக்கிறாள். அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. நமது கதாநாயகி இப்படி எழுதுகிறாள். 'பிரஞ்சுப் பாடத்தில் முதலாக வந்திருப்பது அம்மாவின் ஆண்பிள்ளைகள் அல்லவே!'



ஆண்களுக்கான தொப்பியை அவள் அணிய நேர்கிறது. அதற்கும் வீட்டு வறுமைக்கும் சம்பந்தம் இருக்கிறது. அம்மாவைச் சுற்றி இருப்பது வறட்சியும் பாலையும். அவள் பிள்ளைகள் பாலை நிலமே, எஞ்சி இருப்பது பெண் மட்டுமே. அனேகமாக பணத்தை எப்படி வீட்டுக்குக் கொண்டுவருவது என்பதை அவள் புரிந்து கொள்ளலாம். ஒரு வேளை அதற்காகத்தான் அம்மா தன் மகளை வேசிக்கோலத்தில் வெளியில் அனுப்புகிறாளோ என்னவோ?



அவள் முதல் முறையாக ஆணை அறிந்த அந்த நிகழ்ச்சியை வர்ணிக்கிறாள். ஒரு பெண்ணின் பார்வை மட்டுமல்ல. ஒரு ஐரோப்பியப் பெண், ஒரு சீனனை ஏற்றுக் கொண்ட விதம் பற்றியும்கூட. அவள், தான் ஒரு பிரஞ்சுக்காரி என்பதை ஏனோ மறப்பதே இல்லை. 'தனது சொகுசுக் காரிலிருந்து மிடுக்குடன் ஒருவன் இறங்குகிறான். இங்கிலீஷ் சிகரட் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருக்கிறான். ஆண்கள் தொப்பியும், மின்னும் காலணியுமாக நிற்கும் சிறுமியைப் பார்க்கிறான். அவளை நோக்கி நடந்து வருகிறான். அவன் தயங்குவதுபோலத் தெரிந்தது. அவனது கை நடுங்குகிறது. சிகரட்டை நீட்டுகிறான். சைகோனில் இருக்கிற வீட்டுக்கு வருகிறாயா என்கிறான். அவள் மறுக்கவில்லை. கறுப்புநிற வாகனத்துக்குள் அவள் நுழைகிறாள். வாகனத்தின் கதவு மூடிக் கொள்கிறது. திடுக்கென்று மெலிதான ஒரு துயரம் அவளைச் சூழ்கிறது. ஒருவித அயற்சி, மெல்ல மெல்ல நதிமீது பரவி இருந்த வெளிச்சம் மங்கி வருவதுபோலத் தோற்றம். . நதியெங்கும் மூடுபனி.



இந்த நிகழ்வுக்குப் பின்னர், அவள் நினைவுகள் இப்படிச் செல்கின்றன.



'இனி உள்ளூர் மக்களுடன் பேருந்தில் பயணிப்பது நின்று போகலாம். விடுதியில் இருந்து உயர்நிலைப் பள்ளிக்குப் போகவும் வரவும் சொகுசு வாகனம் ஒன்று வைத்துக் கொள்வேன். இரவு உணவுக்கு, நகரத்தில் உள்ள மிகவும் ஆடம்பரமான இடங்களுக்குச் செல்லக்கூடும்.. . .'



ஒரு வியாழக்கிழமை அவன், பின் நேரம் விடுதிக்கு வந்திருந்தான். அவளைத் தன் கறுப்பு நிற மோட்டார் வாகனத்தில் அழைத்துப் போனான். அவனது இருப்பிடம் நவீனமாக இருந்தது. தனி அறை. போதிய வெளிச்சம் இல்லை. ஜன்னலைத் திறக்கச் சொல்லவில்லை அவள். சூழலுக்கு இணங்கும் பக்குவம். நிராகரிக்கும் மனம் இல்லை. அவன் உடலில் நடுக்கம். அவன் அவள் கருணையை எதிர் பார்த்துக் கொண்டிருந்தான். அது அவளுக்கு மகிழ்ச்சி தந்திருக்கக்கூடும். உன்னை வெறித்தனமாக நேசிக்கிறேன் என்று முணுமுணுக்கிறான். இவள் 'உன்னிடத்தில் அப்படி ஒன்றும் பிரியம் இல்லை' என்று சொல்ல வேண்டும். ஆனால் சொல்லவில்லை. ஒன்று புரிகிறது அவனுக்கு. அவளை அவனுக்குப் புரியாது. இப்போது மட்டும் அல்ல. ஒரு போதும் அவளைப் புரிந்து கொள்ள அவனால் முடியாது.



அவள் அவனிடத்தில், 'என்னை நீ விரும்பித்தான் அழைத்து வந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. பிற பெண்களை நீ எப்படி நடத்துவாயோ, அப்படியே என்னை நீ நடத்தலாம். அதற்கு என்னை நீ விரும்ப வேண்டிய கட்டாயம் இல்லை' என்கிறாள். அவன் முகம் வெளிறுகிறது. அவன் மிக நெருக்கடிக்குள்ளானான். அவர்கள் அவர்களுக்கிடையில் எழுந்து நிற்கும் பருத்த முரண்களுக்கிடையே, தூர தூரங்களுக்கிடையே உரையாடலை, பெரும்பாலும் மாற்று வார்த்தைகளில் நிகழ்த்திக் கொள்கிறாள். 'தயவு செய்து உடனே ஆரம்பி' என்கிறாள் அவள்.

அவன் பரவசம் கொள்கிறான்.



அவன் அவள் குடும்பத்து நிலைக்கு வருந்துகிறான். அது தேவை இல்லை என்கிறாள் அவள். அவன் பணம் தருகிறான். வாங்கிக் கொள்கிறாள். . .



அவளுக்குப் பணம் தேவைப்படுகிறது உண்மைதான். ஆனால், பணம் மட்டுமே இந்த நிகழ்ச்சிக்குக் காரணம் இல்லை. இருவருக்கும் இடையே காதல் இருந்ததா என்றால் உண்டு என்றும் இல்லை என்றும் சொல்லலாம். அவன் அவளது கருணையை எதிர்பார்த்தே இருந்தான் என்பது மட்டும் உண்மை. நமது அவளை இன்புறுத்துவது இந்த நுட்பம்தான்.



இந்தக் காதல், உண்மையில் விருப்பத்தின் அடிப்படையில் எழுந்தது அல்ல. வெறுப்பில், பரஸ்பரம் வெறுப்பில் எழுந்தது என்று சொன்னால், அது பெரும்பாலும் உண்மை ஆகலாம். அவளுக்கு அவன் கறுப்பு நிற சொகுசுக் கார் பிடித்திருந்தது. அவன் படுக்கை சுகமாக இருந்தது. அவன் அழைத்துச் செல்லும் இரவு உணவு விடுதிகள் பிடித்திருந்தன. எல்லாமும் பிடித்திருந்தன.



அவன் அவளுக்காக உருகுவதாகச் சொல்கிறான். அப்படி ஒன்றும் இல்லை. அவள் இடத்தில் வேறு அவள்கள் இருந்தாலும், அவன் அப்படி உருகி இருப்பான். அவனுக்கு அவன் மேல் அப்படியான சாய்வு எதுவும் இல்லை.

நாவல் முழுக்க, பச்சையான மனித மாமிச வாசனை, எந்த மணப்பூச்சும் இல்லாமல் விசுகிறது. ஆண் பெண் உறவின் நுட்பத்துக்குப் புதுப்பரிமாணம் தந்த நாவல் இது. நமது கதை நாயகி அவள், எந்தக் காதல் கதைக்கும் உகந்தவள் இல்லை. அவள் அவளாக மிக இயற்கையாக இருக்கிறாள். அது அவளது பலம் என்றாலும் சரி, பலவீனம் என்றாலும் சரி, இரண்டுக்கும் அவள் பொறுப்பானவள் இல்லை.



அவளும் சரி, ழானும் சரி இரு வருமே பிரஞ்சு மண்ணில் இருந்து வந்தவர்கள். இருவருக்கும் இடையே 300 ஆண்டுகள் பாரதூரம் இருக்கிறது. என்றாலும் எலும்பும் சதையுமாக நமக்குத் தென்படுகிறார்கள். வாழ்க்கை, இதுகாறும் இலக்கியம் காணாத, கண்டு முடிக்காத, இன்னும் இருளிலேயே உலவுகிற, வெளிச்சம் காணாத மனிதச் சுரங்கங்களைக் கொண்டே இருக்கிறது. தரிசிக்கும் கண்களுக்கு எப்போதாவது அவர்கள் தட்டுப்படுகிறார்கள். மாறுபடுகிறவர்களால்தான் உலகம் முன்னோக்கி அடி வைக்கிறது.



ஓவியங்கள் : ஆ.விஜயகுமார்