வியாழன், 20 அக்டோபர், 2011

Pothigai.

தமிழ் முனிவர் அகத்தியர் வாழும் மலை பொதிகை என்பது தமிழர்தம் நம்பிக்கை. பொதிகையின் புதையல்கள் சுரண்டை சுப்பிரமணியன் மோகன்ராம் அவர்களால் உள்ளங்கை நெல்லிக்கனி ஆக்கப்பட்டுவிட்டன. ஆம்! பல லட்சம் பொருட் செலவில், மூன்றாண்டுகால உழைப்பில், 2000கிலோ.மீட்டர் மலைப் பயணத்தில், 2000அரிய வகை உயிரினங்கள், தாவரங்கள், மரம், செடி, கொடிகள் என பொதிகையின் சுற்றுச் சூழல் எனும் புதையல் படமாக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தொலைக்காட்சிப் படப்பிடிப்பாளர் வெங்கடாச்சலம், மற்றும் திரைப்படக் கல்லூரி மாணாக்கர் மூவர் கொண்ட குழுவினர் மோகன்ராம் முயற்சிகளுக்குத் துணையாய் செயல்பட்டுள்ளனர். இவர்கள் தமது தயாரிப்பு நிறுவனத்திற்கு வைத்த பெயர் வனபாரதி மீடியா. தயாரித்துள்ள ஆவணப்படத்திற்கு இவர்கள் சூட்டியுள்ள பெயர், ஓர் அருந்தமிழ்க் காடு. இந்த ஆண்டு இறுதிக்குள் சாமான்யர்களும் கண்டு களித்திட வாய்ப்புக் கிடைக்கும் என்று பெருமிதம் பொஙகச் சொல்கின்றார், எஸ்.மோகன்ராம்.
சென்னை வண்ணாரப்பேட்டை பி.ஏ.கே. பழனிச்சாமி பள்ளி ஆசிரியர் பசுபதி இளமைக் காலத்தில் ஊட்டிய சுற்றுச் சூழல், மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வுதான் அடிப்படைக்காரணம் என்று நன்றியோடு நினைவு கூர்கின்றார். அப்பா வழிப்பாட்டி சொன்ன இயற்கை குறித்தான கதைகளும் இப்பெரு முயற்சிக்கு அடித்தளமாய் அமைந்ததையும் மறக்காமல் சொல்கின்றார்.
தமிழக- கேரள எல்லைப் பகுதியில் வாவதி-சீவதி என்ற உடன்பிறப்புக்களான தமிழ், மலையாள குறியீட்டுக் கோவில்களும் படமாக்கப்பட்டுள்ளன. பொதிகை மலையின் வயது250மில்லியன் ஆண்டுகள் முதல்400 மில்லியன் ஆண்டுகள் வரை இருக்கலாம் என்பது மோகன்ராமின் ஆய்வின் முடிவு. பறவை இயல் நிபுணர் சலீம், எம்.எஸ் இராமசாமி, ஏ.என்.ஹென்றி, ஏ.ஜே.டி.ஜான்கிட், ரால்ப் அலி, ஸ்டீபன், ஜான் ஓட்ஸ் ஆகியோரும் பொதிகையை ஆய்வு செய்துள்ளனர்.
இராஜநாகம் உள்ளிட்ட இருபது வகைப் பாம்புகள், புலிவரிக் கோடுகளுடன் காணப்படும்பத்து வகையான உயிரினங்கள், பறக்கும் பல்லி உள்ளிட்ட இருபது வகையான பல்லி இனங்கள், மனித முகமுடைய பூச்சி, மர்றும் பதினைந்து வகையான எறும்புகள் துல்லியமாகப் படமாக்கப்பட்டுள்ளன.
மிகச் சாதாரண ஈ, தேனீயைப்போன்று150 மடங்கு பெரிதான15 வகையான ஈ,தேனீக்களையும், மிகப் பெரிய மரக் கூட்டுக்குள் கோடிக்கணக்கான எறும்பினங்கள் வசிப்பதையும், அந்த மரங்களுக்குள் மிகப்பெரிய உலகமே படைக்கப்பட்டிருப்பதையும் படமாக்கியுள்ளனர்.
தூக்கணாங்குருவிகள், தஙகள் கூட்டுக்குள் மின் மினிப் பூச்சிகளைக் கொத்திக் கொண்டு வந்து விளக்கொளி பாய்ச்சுவதையும், அழகிய பீ-ஈட்டர் மற்றும் பி ஜே என்னும் பறவை இனங்களையும், இராஜாளி கழுகுகள் வானத்தில் ஒரே இடத்தில் இறக்கையை விரித்து நின்று அழகு காட்டுவதையும், பலவகை வண்ணங் கொண்ட பட்டாம் பூச்சிகளையும், ஹனிபில் என்ற நீர்ப்பறவையையும் படமாக்கியுள்ளனர்.
கருங்குரங்கின் பல்வேறு வளர்ச்சி நிலைகளையும், மொழி உச்சரிப்புடன் செல்போனில் பேசினால், பதில் பேசுகின்ற அரிய வகைப் பறைவைகள், மகிழ்ச்சி மொழிகளைப் பரிமாறி ஜோடி சேரும் பறவைகள் என அரிய காட்சிகளைப் படமாக்கியுள்ளனர்.
11வகையான காடுகளைப்பற்றியும், பொருணைநதியாம் தாமிரபரணி உற்பத்தியாகும் பொதிகைமலை உச்சிப்பகுதி படமாக்கப்பட்டுள்ளது. அதன் வற்றாத கிளை நதிகளான சிற்றாறு, கடனா நதி, ராமா நதி, அனுமன் நதி, சேர்வலாறு, மணிமுத்தாறு, பம்பாறு, க்வுதலை ஆறு, பச்சையாறு, கோதையாறு, குண்டாறு ஆகிய அனைத்தும் வழிப்பாதைகளுடன் படமாக்கப்பட்டுள்ளன. உலகின் மிகப் பெரிய பரப்பளவிலான மழைக் காடுகளையும் மோகன்ராம் குழுவினர் படமாக்கியுள்ளனர்.
ஓர் அருந்தமிழ்க் காடு” என்ற இந்த ஆவணப்படத்தை டி50, டி55, ௪௫0-௫00 எனும் துல்லியமான லென்ஸ் பொருத்தப்பட்ட கேமிராக்களைப் பயன்படுத்தி எடுத்துள்ளனர். இந்தக் கேமிராக்களைத் தாஙகக் கூடிய “ட்ரைபாட் ஸ்டாண்ட்களை” சிலுவையைப்போல் சுமந்து சென்றதாக படப்பிடிப்புக் குழுவினர் கூறுகின்றனர். பல நாட்களில் மலைக் குகைகளில் முடங்கியும் கிடந்துள்ளனர். ரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளச் சமாளிக்க மூக்குப்பொடி, ஓடோமோஸ், விளக்கெண்ணெய் கலந்த நீரை உடலெங்கும் பூசிக்கொண்டும் சமாளிக்க வேண்டியதாயிற்று. வழி மறிக்கும் யானைக் கூட்டங்கள், பாதையில் பரவிடும் பாம்புகள் மலைவாசிகளின் உதவிகளால் படப்பிடிப்புக் குழுவினரின் பயணம் தொடர்ந்தது.
தாராளமாய்க் கிடைத்த மூட்டுப்பழம், தேன், ஆரோக்கியப் பச்சை என்ற அகத்தியர் மூலிகை ஆகியவற்றைச் சாப்பிட்டு இருபது மணி நேரம் படப்பிடிப்பில் சோர்வில்லாமல் ஈடுபடமுடிந்தது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இருஞ்சிக்குடி, பெரியமையிலாறு, சின்ன மயிலாறு, கேரளப் பகுதிகளான தேபாரா மற்றும் பாணாக் காடு எஸ்டேட் பகுதிகளி எல்லாம் படமாகப்பட்டிருக்கின்றது.
ஆதிவாசிகளும், மலை சாதியினரும் மரவள்ளிக் கிழங்கையும், தேனையும் மீன்களையும் உண்டு எழுபது சதவிகிதம் பேர் சாமான்யராகவே வாழ்ந்து வருகின்றனர். மிகச் சிலரே இயற்கையோடு இணந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த ஆதிவாசிகளின் துணையோடுதான் “ஓர் அருந்தமிழ்க் காடு “ ஆவணப்படத்தினை உருவாக்க முடிந்தது என்கிறார் வனபாரதி மீடியா குழுவினரின் அச்சாணியான எஸ்.மோகன்ராம். தமிழக-ஆந்திர அரசுகள் தாரளாமாய் அனுமதி வழங்கியதையும் குறிப்பிட மறக்கவில்லை.
அக்டோபர்18ல் ஜனசக்தியில் இக்கட்டுரையைப் படித்தவுடன் உளம் மகிழ்ந்தது. பொதிகையையும், இலமூரியாவையும் நேரடி ஆய்வுக்குட்படுத்தமாட்டார்களா என்று ஏங்கும் பலருள் நானும் ஒருவன். பொதிகையில் இது ஒரு துவக்கம்தான். பொதிகையும், குமரிக் கண்டமும் முழுமையாக வெளிப்படும் பொழுது தமிழர் பெருமை மேலும் உயரும். அதற்கான ஆதாரங்கள் கிட்டும்.
சுப்பிரமணியன் மோகன்ராமின் மனைவியார் தேன்மொழியும், சுப்பிரமணி பாரதி, திவ்ய பாரதி, பொதிகை பாரதி ஆகிய வாரிசுகளும் பெறும் பேறு பெற்றவர்கள்.
சென்னை பி.ஏ.கே.பள்ளி04425951428
Clap
எஸ்.இசைக்கும் மணியை அறிமுகப்படுத்திய கே.ஜீவபாரதிக்கும், ஜனசக்திக்கும் நன்றி.ஜனசக்தியில் இக்கட்டுரையை எழுதியவரின் பெயரும் வித்தியாசமானது. நெல்லை மாவட்டத்தில் எசக்கியம்மன் பெயரினடிப்படையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெயர் சூட்டுவார்கள். இவருக்கும் எசக்கிமணி என்று பெயரிட்டுள்ளார்கள். சென்னைக்குக் குடி பெயர்ந்தது குடும்பம். பெயரை ஆசிரியர் இசைக்கும் மணி என்று மாற்றி விட்டார். பொதிகையின் ஆவணப்படப் புகழை இசைக்கும் முதல் மணி இவர்தான். ஜனசக்தியின் தொடர்பிற்கு; 04422502447/48
சுப்பிரமணியன் மோகன்ராமைத் தொடர்புகொள்ள9944814445
Clap