காலக் கொடுமை
இலங்கை - இந்திய ஒப்பந்தம் என்ற நல்வாய்ப்பை நாங்கள் தவறவிட்டுவிட்டோம். அன்று நாங்கள் நிராகரித்த அதே ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தக் கோரியே (பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை அமுல் செய்வது ) இப்போது தமிழர் தரப்புகள் போராடிக்கொண்டிருக்கின்றன என்பதுதான் இன்றைய அரசியல் எதார்த்தமாயிருக்கிறது. ஆனால் இந்த எதார்த்தம் எந்த வகையிலும் இலங்கையில் இந்திய இராணுவம் நடத்திய போர்க் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் அராஜகங்களையும் நியாயப்படுத்திவிடாது.
ஜெயமோகன் சொல்வது போல புலிகளும் அவர்களது ஆதரவாளர்களும் சம்பவங்களை மிகைப்படுத்தி பிரச்சாரம் செய்யக் கூடியவர்கள் என்பது உண்மைதான். ஆனால் அதைக் காரணமாக வைத்து இந்திய அமைதிப் படையினரின் போர்க் குற்றங்களை மறைப்பது நியாயமற்றது.
இந்திய அமைதிப்படையினர் பொதுமக்கள் மீது நடத்திய கொலைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் நான் நேரடிச் சாட்சி. ஒவ்வொரு நாளும் பாலியல் வன்புணர்வுக்குச் சம்பவங்கள் நடைபெற்றன. 10 வயதுச் சிறுமியிலிருந்து 80வயது மூதாட்டிவரை வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். சிறுவர்களும் தப்பவில்லை.
இவையெல்லாம் ஆதாரபூர்வமாகப் பல இடங்களில் தொகுக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் முதன்மையான ஆவணம் யாழ் பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கத்தால் வெளியிடப்பட்ட ‘THE BROKEN PALMYRA’ ஆகும். இதனது தமிழ் வடிவம் ‘முறிந்தபனை’. ராஜினி திரணகம, ராஜன் ஹுல், தயா சோமசுந்தரம், கே. சிறீதரன் ஆகியோரால் இந்த ஆவணம் உருவாக்கப்பட்டது. ‘முறிந்தபனை’யின் இரண்டாவது பகுதியில் 5வது அத்தியாயம் முழுவதுமாக ஈழத்தில் பெண்கள்மீது IPKF இழைத்த கொடுமைகள் விரிவாகச் சாட்சியங்களுடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அந்த அத்தியாயத்தின் தலைப்பு: “அக்கா, அழுவதற்கு இனி என்னிடம் கண்ணீர் இல்லை”.
‘முறிந்த பனை’யின் புதிய பதிப்பு அ.மார்க்ஸின் விரிவான முன்னுரையோடு தமிழகத்தில் கிடைக்கிறது (பயணி வெளியீடு). www.noolaham.org இணையத்தில் PDF வடிவத்தில் முறிந்த பனையைப் படிக்கலாம்.
ஆம் மூத்த இராணுவ அதிகாரிகளே! நீங்கள் ஈழத்தில் பலநூறு அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றீர்கள். பலநூறு பாலியல் வன்புணர்வுகளைச் செய்தீர்கள். பல்லாயிரக்கணக்கான மக்களை அவமானப்படுத்தினீர்கள்.
ஜெயமோகனுக்கும் ஒரு வார்த்தை: ‘முறிந்த பனை’ ஆவணத்தை உருவாக்கியவர்கள் புலிகளோ அவர்களது ஆதரவாளர்களோ அல்ல. அந்த ஆவணத்தை உருவாக்கியவர்களில் மூவர் இன்றுவரைக்கும் புலிகளின் அரசியலைக் கடுமையாக விமர்சித்து வருபவர்கள். நான்கமவரான ராஜினி திரணகம ‘முறிந்த பனை’ ஆவணத்தை உருவாக்கியதற்காக விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார்.