செவ்வாய், 5 ஜூன், 2012

!!!!!!!!?

இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 4
ராஜ்சிவா
ஷில்போல்டனில் மனித முகத்துடன் பயிர் வட்டம் உருவாகியது பற்றிச் சொல்வதற்கு முன்னர், நான் சில விசயங்களை உங்களுக்குத் தெளிவாகச் சொல்லி விடவேண்டும். இனி நீங்கள் தெரிந்துகொள்ளப் போகும் ஒவ்வொன்றிலும், "இதையெல்லாம் நாம் எப்படி நம்புவது?" என்ற அவநம்பிக்கையான கேள்வியே உங்களிடம் தோன்றிக் கொண்டிருக்கும். உங்களுக்கும், உலகில் உள்ள பலருக்கும், அதிகம் ஏன், எனக்கும் கூட இவை நம்ப முடியாதவைதான். நம்ப வேண்டிய அளவுக்கு ஆதாரங்களையும், சாட்சிகளையும் முன் வைத்தாலும், மனம் ஏனோ நம்ப மறுக்கிறது. காரணம், இவற்றை நம்பினால் நாம் எடுக்கும் முடிவு ஒன்றே ஒன்றாகத்தான் இருக்க முடியும். அந்த முடிவு, 'ஏலியன்கள் பூமிக்கு வந்து போகின்றன' என்பதுதான். ஏலியன் பற்றிய சந்தேகம் நம்மில் அனைவருக்கும் இருந்தாலும், முழுமையாக அதை நம்மால் நம்ப முடிவதில்லை. நான் எழுதுவதை நீங்கள் வாசித்து விட்டு, ஏலியன்கள் இருப்பதாக நான் சொல்ல முயற்சிக்கிறேன் என்று தப்பர்த்தம் பண்ணிவிட வேண்டாம். அது என் நோக்கமும் இல்லை. ஆனால் ஏலியன்கள் பற்றிய சாத்தியங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன். அத்துடன், பயிர் வட்டங்களை மனிதர்கள்தான் உருவாக்குகிறார்கள் என்பதற்கான ஆதாரங்களையும், இல்லை அது வேறு ஒரு சக்தியினால்தான் உருவாக்கப்படுகிறது என்பதற்கான ஆதாரங்களையும் ஒன்றுவிடாமல் சொல்வேன். இறுதியில் நம்மால் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு முடிவுக்கு நிச்சயம் நாம் வரமுடியும். 
ஷில்போல்டன் ரேடியோ டெலஸ்கோப் அமைக்கப்பட்ட இடத்துக்கு மிக அருகில், 2000 ஆண்டு ஆகஸ்ட் 13ம் திகதி ஒரு பயிர் வட்டம் உருவாக்கப்பட்டது. அது 'ஃப்ராக்டல்' (Fractal) என்று சொல்லப்படும் ஒருவித வடிவமைப்பைக் கொண்டது. கணிதத்தில் மிகவும் சிக்கலான அமைப்பைக் கொண்ட ஒரு வடிவம் இது. ஒரு குறிப்பிட்ட வடிவம் பல அடுக்குகளாகப் பெருகி உருவாகும் சித்திரத்தை 'ஃப்ராக்டல் வரைவு' (Fractal art) என்று சொல்வார்கள். இதில் 'ஜூலியா செட்' (Julia Set Fractal), மாண்டல்புரோட் செட்' (Mandelbrot Set Fractal) என வகைகள் இருக்கின்றன. இவை பற்றி நான் ஏன் இங்கு இவ்வளவு விளக்கமாகச் சொல்கிறேன் என்றால், பயிர் வட்டங்களில் பல, இந்த ஃப்ராக்டல் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டிருப்பதுதான். கணனிகளினால் உருவாக்கக் கூடிய இந்த ஃப்ராக்டல் வடிவங்களை, பயிர்களினால் உருவாக்குவதென்பது மிகவும் ஆச்சரியமான, சாத்தியமற்ற ஒரு விசயம். அப்படி உருவாக்க முடியுமென்றாலும் அதற்குப் பல பேர் சேர்ந்து, பல நாட்கள் உழைக்க வேண்டும். ஆனால் ஒரே இரவில், நான்கு மணித்தியால நேரங்களுக்குள் இவை உருவாக்கப்படுகின்றன. இது போன்ற ஒரு ஃப்ராக்டல் வடிவப் பயிர் வட்டம்தான் ஷில்போல்டனில் உருவானது. 
இந்த ஃப்ராக்டல் பயிர் வட்டம் உருவானபோது, வழமை போல உருவாக்கப்பட்ட ஒரு பயிர் வட்டமாகவே பலரும் எடுத்துக் கொண்டார்கள். ஆனால், அப்படி ஒரு வடிவத்தில், பயிர் வட்டம் அங்கு ஏன் அமைக்கப்பட்டது என்ற கேள்விக்கான விடை, சரியாக ஒரு வருடத்தில் கிடைத்தது. 2001ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி இரவு மனித முகத்துடனும், அதைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் இன்னுமொரு சிக்கலான வடிவத்துடனும் இரண்டு பயிர் வட்டங்கள், அதே இடத்தில் உருவாக்கப்பட்டன.  

வழமையான பயிர் வட்டங்கள் போல இவை காணப்படவில்லை. இரண்டுமே செவ்வக வடிவில் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு மனிதனின் முகம் கணனியில், ஃபோட்டோவாக வரையப்படும் போது, எப்படிக் கறுப்பு, வெள்ளை ஒளி மாற்றங்கள் (Shading) இருக்குமோ அப்படி அந்த மனித முகம் அமைக்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாமல், முப்பரிமான அமைப்புடன் (3D) அந்த முகம் உருவாக்கப்பட்டிருந்தது. முப்பரிமாணத் தோற்றம் உருவாவதற்காக, பயிர்கள் சிறியதும், பெரியதுமாகவும், அடர்த்தி கூடியதும், அடர்த்தி குறைந்ததுமாகவும் வட்டவடிவப் புள்ளிகள் போல (Pixel)  மிக நேர்த்தியுடன் அழுத்தப்பட்டு உருவாக்கப்பட்டிருந்தன. ஒரே இரவுக்குள் அது உருவாக்கப்பட்டது என்று யார் சொன்னாலும் நம்ப முடியாத சித்திரம் அது. 
என்று சிந்தித்த வேளையில், இதே போன்ற முகத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்ற நினைப்பு பலருக்குத் தோன்றத் தொடங்கியது. செவ்வாய் கிரகத்துக்கு 1976 இல் சென்ற வைகிங் (Viking) விண்கலம் பல படங்களை எடுத்துப் பூமிக்கு அனுப்பியது. அந்தப் படங்களில் மனித முகம் ஒன்று செவ்வாயின் நிலப் பகுதியில் பதிந்திருப்பது போன்ற ஒரு படமும் காணப்பட்டது. அந்த நேரங்களில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது அது. அந்த முக அமைப்பை இந்த நேரத்தில் பலர் ஞாபகத்தில் கொண்டு வரத் தொடங்கினர். உண்மையில் அதற்கும், இதற்கும் சம்மந்தம் உண்டோ, இல்லையோ என்று தெரியாவிட்டாலும்,  பலருக்கு ஷில்போல்டன் படத்துக்கும் ஏலியனுக்கும் சம்பந்தம் உண்டு என்ற நினைப்பு வர ஆரம்பித்தது.  இந்த நினைப்பை உறுதிப்படுத்தியது இரண்டாவதாக உருவாகிய பயிர் வட்டம்.
காணப்படுமோ, அப்படிக் காணப்பட்டது அது. அதைப் படமெடுத்து கணினியில் கொடுத்து படிப்படியாக ஆராய்ந்த போதுதான், பல மர்மங்களுக்கான விடைகள் வெளிவரத் தொடங்கியது. அந்த மர்மங்கள் ஆராய்ச்சியாளர்கள் அனைவரையும் ஒரு உலுக்கு உலுக்கியது. அந்த மர்மம் என்னவென்று விளக்கமாக நமக்குப் புரிய வேண்டுமென்றால், 'கார்ல் சேகன்' (Carl Sagan) என்பவரைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும்.
கார்ல் சேகன் என்னும் அமெரிக்கர் வானியல் துறையில் மிகப் பிரபலம் வாய்ந்த ஒரு விஞ்ஞானி. இவர் ஆஸ்ட்ரானாமர், ஆஸ்ட்ரா ஃபிஸிஸிஸ்ட், காஸ்மாலாஜிஸ்ட், விஞ்ஞான எழுத்தாளர் எனப் பல பரிமானமுள்ளவர். இருபதுக்கும் அதிகமான புத்தகங்களை எழுதியிருக்கிறார். இவர் எழுதிய புத்தகங்களில் ஒன்றுதான் காண்டாக்ட் (Contact). இந்தப் புத்தகம் எந்த மாற்றமுமில்லாமல், காண்டாக்ட் என்ற பெயருடனே, 1997 இல் 'ஜோடி ஃபோஸ்டர்' (Jodie Foster) நடித்துத் திரைப்படமாக வெளிவந்தது. உலக ரீதியாக வசூலை அள்ளிக் குவித்த படங்களில் இதுவும் ஒன்று.
மனிதர்கள் வேற்றுக் கிரக வாசிகளுடன் தொடர்பை ஏற்படுத்தும் கதையை மையமாக வைத்து, இந்தப் படம்  மிகவும் சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டிருந்தது (முடிந்தால் கட்டாயம் பாருங்கள்). இந்தக் கதையை எழுதிய கார்ல் சேகன், பிரபஞ்சத்தில் பல இடங்களில் உயிரினங்கள் உண்டு என்பதைத் தீர்க்கமாக நம்பினார். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் 1974ம் ஆண்டு நவம்பர் 16ம் திகதி விண்வெளிக்கு ஒரு செய்தியை அனுப்பினார். பூமியில் நாம் வசிக்கிறோம் என்ற செய்தியுடன், நம்மைப் பற்றிய விபரங்களை வரைபடமாக்கிப் பின்னர் அதை 0, 1 என்னும் பைனரி வடிவத்தில் ரேடியோ அலைகளாக விண்வெளிக்கு அனுப்பினார். குறிப்பாக, பூமிக்கு மிக அருகில், 25 ஒளி வருடங்கள் தூரத்தில் இருக்கும் Messier 13 என்று சொல்லப்படும் M13 நட்சத்திரக் கூட்டங்களை நோக்கி அனுப்பி வைத்தார். M13 இல் மூன்று இலட்சத்துக்கு அதிகமான நட்சத்திரங்களும், கோடிக்கணக்கான கோள்களும் இருக்கின்றன. அங்கு ஏதாவது ஒரு கோளில் உயிரினம் இருந்து இந்தச் செய்தியைக் கண்டறிந்து பூமியுடன் தொடர்பு கொள்ளலாம் என்பதே கார்ல் சேகனின் எண்ணம். 
வேற்றுக் கிரகங்களில் உயிரினம் உண்டு என்பதை எந்த விஞ்ஞானியும் இதுவரை மறுக்கவில்லை. அப்படி உயிரினம் இருக்கும் பட்சத்தில் அவை அதிபுத்திசாலிகளாக இருக்கவே சாத்தியம் அதிகம் என்பதும் இவர்கள் கணிப்பு. இந்தக் கணிப்பை அடிப்படையாக வைத்தே கார்ல் சேகன் செய்திகளை அனுப்பி வைத்தார். போர்ட்டா ரிக்கோ நாட்டில் உள்ள ஆரசிபோவில் (Arecibo-Puerto Rico) அமைந்துள்ள பாரிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலிருந்தே அந்தச் செய்திகள் அனுப்பப்பட்டன. அவர் அனுப்பிய செய்தி என்ன தெரியுமா...? அதன் வரைபடத்தை நீங்கள் பார்த்தால்தான், இதுவரை நான் ஏன் கார்ல் சேகன் பற்றி இவ்வளவு விபரங்கள் சொன்னேன் என்பது புரியும். அவர் அனுப்பிய செய்தியின் வரைபடம் இதுதான்.
என்ன புரிகிறதா? ஷில்போல்டனில் உருவாக்கப்பட்ட பயிர் வட்டத்தின் அமைப்புக்கும், கார்ல் சேகனின் செய்திக்கும்  சில மாற்றங்கள் தவிர்ந்து, வடிவத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பது தெரிகிறதா? புரியவில்லையெனின், அந்த இரண்டு சித்திரங்களையும் ஒன்றாகப் பார்த்தால் உங்களுக்குப் புரியலாம்.

இந்தப் படத்தில் வலது பக்கம் இருப்பது கார்ல் சேகன் அனுப்பிய செய்தி. இடது புறம் இருப்பது ஷில்போல்டனில் உருவாக்கப்பட்ட பயிர் வட்டத்தின் படம். இரண்டு படங்களையும் பார்க்கும்போது ஒன்று போலவே தோன்றினாலும், நன்கு கவனித்தால், பல வித்தியாசங்கள் தெரியும். அந்த வித்தியாசங்கள் என்ன என்று ஆராய்ந்தபோது கிடைத்த பதில் எல்லாமே அதிர்ச்சிகரமானவை. கார்ல் சேகன் 1974ம் ஆண்டு அனுப்பிய செய்திக்கு, 27 ஆண்டுகளுக்கு அப்புறம் ஏலியன்கள் கொடுத்த பதில்தான் அந்த ஷில்போல்டன் பயிர் வட்டம் என்கிறார்கள் அதை அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்தவர்கள். 
கார்ல் சேகன் M13 நட்சத்திரக் கூட்டத்தை நோக்கி அப்படி என்ன செய்திகளை அனுப்பினார்? அதற்கு நமக்குப் பயிர் வட்டங்கள் மூலமாகக் கிடைத்த பதில்கள்தான் என்ன? 
அவற்றை அடுத்த தொடரில் பார்ப்போமா?

vaamu komu.

Thursday, September 08, 2011

என் விகடனில் வந்த வாமுகோமுவும்,வாய்ப்பாடி பற்றிய அவரது உரையும்





புதன், 29 பிப்ரவரி, 2012

s.sakthi.

shobasakthi.


ரூபம்

Print this Page



இவன் வீட்டின் வாசற்படியை அடைந்த போது வீட்டின் உள்ளே தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ச உரையாற்றிக்கொண்டிருந்தார். இவன் வாசற்படியின் ஓரமாக உட்கார்ந்துகொண்டு தலையைச் சாய்த்துத் தொலைக்காட்சியைப் பார்த்தான். “உங்களைக் கவுரவமாகவும் சுயமரியாதையுடனும் வாழ வைப்பது என்னுடைய பொறுப்பு, நான் இந்த நாட்டு மக்கள் அனைவரதும் தலைவன் ” என ராஜபக்ச தமிழில் பேசிக் கொண்டிருந்தார். அந்த அகலமான தொலைக்காட்சித் திரை முழுவதையும் ராஜபக்சவின் முகம் நிறைத்திருந்தது. அவ்வளவு பெரிய தொலைக்காட்சியை இவன் இப்போதுதான் பார்க்கிறான். தட்டையாகவும் நவீனமாகவும் துல்லியமான ஒலியமைப்புடனும் அது இருந்தது. வீட்டுக்காரரின் மகன் அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியைச் சவூதியிலிருந்து அனுப்பி வைத்திருக்கலாம். இவன் முகத்தைத் திருப்பி வீதியைப் பார்த்தான். வீதியில் இருள் மண்டியிருந்தது.



இவன் சிறுவனாய் இருந்தபோது அம்மாவிடம் தொலைக்காட்சியொன்று வாங்கும்படி இடைவிடாமல் நச்சரித்திருக்கிறான். இறந்து போன அப்பாவின் சொற்ப பென்ஷன் பணம் மட்டுமே இவர்களிற்கு வருமானம். அந்தப் பணத்தில் தான் அம்மா இவனையும் இவனது அக்காவையும் பட்டினியில்லாமல் பள்ளிக்கூடம் அனுப்பிக்கொண்டிருந்தார். அப்போது இந்த வீட்டில் ஒரு சிறிய கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சியிருந்தது. இவனும் அக்காவும் இரவு நேரத்தில் இங்கே தொலைக்காட்சி பார்க்க வருவார்கள். அக்காவிற்குத் தொலைக்காட்சி பார்ப்பதில் ஏனோ ஆர்வமில்லை. ஆனால் இருளில் தனியாக வருவதற்கு இவன் பயப்படுவான். அதனால் அக்காவைத் துணைக்கு அழைத்து வருவான். தரையில் அமர்ந்து இவன் கண்கொட்டாமல் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பான். சிறிது நேரமானதுமே அக்கா “வீட்ட போகலாமா” என முணுமுணுப்பாள். அது இவனது காதில் விழாது. அக்கா பொறுக்க முடியாமல் இரகசியமாக இவனது தொடையைக் கிள்ளும்போது, இன்னும் கொஞ்ச நேரம் என இவன் அக்காவிடம் மன்றாடுவான். வீட்டுக்காரர்கள் தேனீரும் அவித்த பனங்கிழங்கும் தருவார்கள். அக்கா வெட்கப்படுவாள். அவற்றை வாங்காவிட்டால் தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்க மாட்டார்களோ என்ற பதற்றத்திலேயே இவன் அவற்றை வாங்கிக்கொள்வான்.



th



இவன் வீட்டில் வெறும் தீப்பெட்டியின் மீது வெள்ளைத்தாளை ஒட்டி நடுவே கத்தரித்து பக்கவாட்டில் வர்ணம் தீட்டித் தொலைக்காட்சிப் பெட்டி செய்து விளையாடிக் கொண்டிருப்பான். பள்ளிக்கூடம் எடுத்துச் செல்லும் பையில் எப்போதும் சில தீப்பெட்டித் தொலைக்காட்சிகள் இருக்கும். கொஞ்சம் வளர்ந்ததும் தொலைக்காட்சி பார்ப்பதற்காக இவன் கிராமத்துக் கடைத் தெருவுக்குப் போகத் தொடங்கினான். அங்கேயிருந்த ‘மீனா கபே’யில் எப்போதும் வண்ணத் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும். தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது இவன் வசியத்தில் விழுந்தவன் போலிருப்பான். அந்த நேரங்களில் இவனது கண்கள் ஒளிர்ந்துகொண்டேயிருக்கும். எந்த நிகழ்ச்சியும் அவனுக்கு அலுப்பூட்டியதேயில்லை. அலைவரிசைக் குழப்பத்தால் அடிக்கடி தொலைக்காட்சியில் வெறும் புள்ளிகள் மட்டுமே தோன்றும். அந்தப் புள்ளிகளை ஆயிரக்கணக்கான மனிதர்கள் ஓடி வந்துகொண்டிருப்பது போல கற்பனை செய்துகொள்வான். தொலைக்காட்சியில் சிலசமயங்களில் படம் மட்டும் வரும், ஒலி வராது. படத்துக்கு ஏற்ற ஒலிகளை இவனாகவே கற்பனை செய்து ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருப்பான். ஒலி மட்டும் வந்தாலும் படக்காட்சிகளை இவனால் கற்பனையில் உருவாக்கிக்கொள்ள முடியும். மின்சாரம் துண்டிக்கப்படும் போது வெறுமனே இவனால் தொலைக்காட்சியைக் கண்ணிமைக்கால் பல நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருக்கவும் முடியும். தொலைக்காட்சிப் பெட்டியொன்று தான் இவனுக்குத் தேவையானது. அதிலிருந்து படங்களையும் ஒலிகளையும் இவனால் உருவாக்கிக்கொள்ள முடியும். கடை மூடப்படும் போதுதான் இவன் வீட்டுக்குத் திரும்பி வருவான்.



பக்கத்து வீட்டிற்கு இவன் தொலைக்காட்சி பார்க்கப் போவது குறைந்திருந்தது. இரண்டு நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையின் ஓரத்தில் இவனின் கிராமம் அமைந்திருந்தது. அந்த நெடுஞ்சாலையை ஒட்டித்தான் கடைத்தெரு இருந்தது. அந்த நெடுங்சாலையால் இராணுவம் ரோந்து செல்லும் நாட்களில் கடைத் தெரு வெறிச்சோடிவிடும். இராணுவ வாகனங்கள் துரத்தில் வரும் ஒலி கேட்டவுடனேயே கடைகள் சடுதியில் மூடப்படும். கடைத் தெரு மனிதர்கள் நெடுஞ்சாலையிலிருந்து விலகி ஓடிவிடுவார்கள். இராணுவம் கடை வீதியைக் கடந்து செல்லும் போது சில வேட்டுக்களைத் தீர்க்காமல் செல்வதில்லை. அது வெறுமனே எச்சரிக்கை வெடியாகத்தானிருக்கும். இராணும் ஒருபோதும் நெடுஞ்சாலையிலிருந்து விலகிக் கிராமத்திற்குள் நுழைந்ததில்லை.



கடைத்தெரு மூடிக் கிடக்கும் நாட்களில் இவன் பக்கத்து வீட்டிற்குத்தான் தொலைக்காட்சி பார்க்கப் போவான். அவர்கள் இப்போது ஒரு சிறிய வண்ணத் தொலைக்காட்சியை வாங்கியிருந்தார்கள். இவன் ஆள் கொஞ்சம் வளர்ந்துவிட்டதால் இப்போது இவனை நாற்காலியில் உட்காருமாறு அவர்கள் வற்புறுத்துவார்கள். நொறுக்குத் தீனிகளும் தேனீரும் கொடுப்பார்கள். அவற்றை வாங்கத்தான் இவன் கொஞ்சம் வெட்கப்படுவான். இவ்வளவுக்கும் இவனது தாயாரும் இந்த வீட்டுக்காரியும் நெருங்கிய சிநேகிதிகள் தான். அவசரத்துக்குச் சீனி, தேயிலை என இருபக்கமும் கைமாற்றும் நடப்பதுண்டு. ஆனால், இவனுக்குத்தான் யாரிடமும் எதுவும் வாங்கிக் கொள்ளவதென்றால் கூச்சமாயிருக்கும். தொலைக்காட்சி விசயத்தில் மட்டும் தான் இவன் கூச்சத்தையும் மீறி நடந்துகொண்டான்.



தீப்பெட்டித் தொலைக்காட்சி வைத்து விளையாடும் வயது கடந்து போன போது உண்மையாகவே இவனது வீட்டுக்கு ஒரு சிறிய வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வந்தது. அக்கா ஆசிரியப் பணியில் சேர்ந்து பெற்ற முதலாவது சம்பளப் பணத்துடன் கையிலிருந்த சேமிப்புப் பணத்தையும் போட்டு அம்மா இவனுக்கு அதை வாங்கிக் கொடுத்தார். இவன் அக்காவிடம் கேட்டு ஓர் அழகிய துணியுறையைத் தைக்கச் செய்து அதனால் தொலைக்காட்சியைப் பத்திரம் செய்தான். பள்ளிக்கூடத்துப் பைக்குள் இப்போது தீப்பெட்டிகள் இல்லை. அதற்குப் பதிலாகத் தொலைக்காட்சியை இயக்க வழிகாட்டும் விபரக்கொத்தை இவன் பைக்குள் எப்போதும் வைத்திருந்தான்.



பள்ளிக்கூடத்தால் வந்ததும் தொலைக்காட்சியின் முன்னால் உட்கார்ந்துவிடுவான். ஆட அசைய மாட்டான். சிலைபோல தொலைக்காட்சியைப் பார்த்தவாறே உட்கார்ந்திருப்பான். சாப்பிடுவதற்கு அம்மா பத்துத் தடவைகள் கூப்பிட்ட பின்பே குசினிக்குள் ஓடிச் சென்று தட்டை எடுத்துக்கொண்டு ஓடிவந்து தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் உட்கார்ந்து விடுவான். இதனால் ஒன்றும் அவனது படிப்புப் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. வகுப்பில் எப்போதும் அவன் முன்னணி மாணவனாகவேயிருந்தான். அக்காவிடம் ஒரு நாள் தொலைக்காட்சியைச் சுட்டிக்காட்டி ‘எங்கிட வாத்திமார விட இது பிரயோசனமானது’ என்றான்.



பல்கலைக்கழக அனுமதி சொற்ப மதிப்பெண்களால் தவறிப் போனது. கொஞ்சம் மனம் சோர்ந்து போனான். பகல் முழுவதும் தீவிரமாகப் படித்தான். இரவானதும் அறையிலிருந்த விளக்கை அணைத்துவிட்டு இருளில் நடுநிசி வரை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பான். அம்மா அவ்வப்போது வந்து ‘இருட்டுக்குள்ளயிருந்து பார்க்காத தம்பி, கண் பழுதாப் போகும்’ என்பார். அது இவனின் காதில் ஏறாது.



இவனுக்கு இருபது வயதானபோது அந்தக் கிராமத்திற்குள் இராணுவம் முதற்தடவையாக நுழைந்தது. இராணுவம் வரும் செய்தி கேட்டுச் சனங்கள் வீடுகளிலிருந்து கையில் அகப்பட்டவற்றை எடுத்துக்கொண்டு உயிர் தப்பச் சிதறியோடினார்கள். அக்கா அப்போது நகரத்தில் அறை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்து நகரத்துப் பாடசாலையில் வேலை செய்ததால் இவனும் அம்மாவும் நகரத்திற்குப் போவதென்று முடிவெடுத்தார்கள். இவர்களது உடமைகள் இரு பெட்டிகளிற்குள் அடங்கிவிட்டன. சைக்கிளின் பின்னால் தொலைக்காட்சியை வைத்துக் கட்டிக் கொண்டான். நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று நகரத்திற்குச் செல்லும் வாகனமொன்றில் அம்மாவையும் பெட்டிகளையும் ஏற்றி விட்டு இவன் வாகனத்தைச் சைக்கிளில் பின் தொடர்ந்தான்.



நகரத்திற்கு வந்ததும் கிடைத்த விலைக்கு தொலைக்காட்சியை விற்றான். மிகச் சொற்பமான பணமே கிடைத்தது. நகரத்திலிருந்த உறவினரின் கடையொன்றிற்குச் சென்று அங்கே சைக்கிளை நிறுத்திவிட்டு, சற்று நேரத்தில் வருவதாகக் கூறிவிட்டு நடந்து பஸ் நிலையம் வந்து பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தான். நான்கு மணிநேரப் பயணத்தில் இருபது சோதனைச் சாவடிகளைக் கடக்க வேண்டியிருந்தது. நெடுஞ்சாலையின் ஓரத்தில் இறங்கியவன் அங்கிருந்து வயல்வெளிகளுக்குள்ளால் காட்டை நோக்கி நடந்தான். இடையிடையே எதிர்ப்பட்டவர்களிடம் வழியை விசாரித்துக்கொண்டான். இரவாகிக்கொண்டிருந்தாலும் காட்டின்மீது நிலவு வெளிச்சம் போட்டது. இரவு முழுவதும் காட்டுப் பாதையால் நடந்து ஒரு கிராமத்தை அடைந்தான். அங்கே விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இருந்தது.



இவன் காட்டிற்குள்ளால் நடந்துவந்து இயக்கத்தில் சேர்ந்ததாலோ என்னவோ இவனுக்குக் கானகன் என்று இயக்கத்தில் பெயர் வைத்தார்கள். ஆனால், தோழர்கள் இவனை ‘யங்கிள்’ என்றே அழைத்தார்கள். தாக்குதலின் முன்னணி அணியில் யங்கிள் நின்றால் அந்தத் தாக்குதல் வெற்றிதான் என்று இயக்கத்திற்குள் கதை இருந்தது. போரிடவே பிறந்தவன் போல அவன் இருந்தான். அவனது இடது கண்ணிற்கு திட்டமிடல் என்றும் வலது கண்ணிற்கு துணிச்சலென்றும் பெயர். அவனது இடது காலிற்கு நிதானம் என்றும் வலது காலிற்கு வேகமென்றும் பெயர். எத்தனையோ முற்றுகைகளை முன்னணியில் நின்று முறியடித்திருக்கிறான். அவனது அணி முழுவதுமாகச் சிதைக்கப்பட்ட நிலையிலும் தனியாளாகப் போராடித் தளம் திரும்பியிருக்கிறான். கடைசியில் விமானக் குண்டு வீச்சொன்றில் வேகமெனப் பெயரிடப்பட்ட கால் துண்டிக்கப்பட்டது. நிதானம் எனப் பெயரிடப்பட்ட கால் எஞ்சியிருந்தது.



ஊன்றுகோலின் உதவியுடன் அவன் முகாமில் நிதானமாக நடந்து திரிந்தான். அம்மாவிற்கோ அக்காவிற்கோ தான் காலிழந்த செய்தி தெரியாமல் பார்த்துக் கொண்டான். யுத்த நிறுத்தம் வந்தபோது கூட இவன் அம்மாவைப் பார்க்கப் போகவில்லை. இவன் இருக்குமிடமும் அம்மாவிற்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டான். ஒரு வருடத்திற்குப் பின்பு புலிகளின் தொலைக்காட்சியில் தான் அம்மா இவனைப் பார்த்தார். அடுத்த வாரமே அம்மாவும் அக்காவும் இவனைத் தேடி வந்தார்கள். இவன் பயந்தது போல எதுவும் நடக்கவில்லை. அம்மா இவனது கால் துண்டிக்கப்பட்ட பகுதியை மட்டும் தடவிக்கொடுத்தார். உற்சாகமாகப் பேசிவிட்டுத் திரும்பிச் சென்றார்கள்.



புலிகளின் தொலைக்காட்சியில் இவன் மூன்று நிகழ்ச்சிகளிற்குத் தொகுப்பாளராயிருந்தான். அவற்றில் ‘விடுதலை கீதங்கள்’ என்ற அரை மணிநேர நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. சாந்தன், தேனிசை செல்லப்பா, சுகுமார், சிட்டு போன்றோரின் புகழ்பெற்ற பாடல்களை இவன் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்குவான். பாடல்களிற்கு முன்பு இவன் சொல்லும் கவிதை வரிகளும் இவனது உணர்ச்சி துள்ளும் ஏற்ற இறக்கமான கம்பீரமான குரலும் மக்களைச் சொக்கச் செய்தன. சாந்தன் ஒருமுறை இவனிடம் ‘என்னைவிட உங்களுக்குத்தான் கனக்க ரசிகர்கள்’ எனச் சொல்லிச் சிரித்தார்.



வழிதெருவில் இவனை மக்கள் காணும் போது இவனைச் சூழ்ந்து கொண்டார்கள். இவன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றும் போது உட்கார்ந்துகொண்டிருப்பதால் இவனிற்கு ஒரு கால் இல்லை என்பது பலருக்குத் தெரியாது. அந்தக் கம்பீரக் குரல் ஊன்றுகோலோடு தடுமாறி நடந்து வருவதை அவர்கள் நேரில் பார்த்தபோது அவர்களது கண்கள் இருண்டு போயின. சில தாய்மார்கள் இவனை அணைத்து உச்சி மோர்ந்தார்கள். இழந்து போன குழந்தைகள் அவர்களிற்கு ஞாபகம் வந்திருக்கலாம்.



இவனுக்கு ஏராளமான நேயர் கடிதங்கள் வந்தன. அவற்றில் காதல் கடிதங்களும் இருந்தன. அந்தக் கடிதங்களை இவன் தனிமையில் புன்னகையோடு படித்துவிட்டுக் கிழித்துப் போடுவான். ‘ இயக்கத்துக்கே காதல் கடிதம் எழுத எங்கிட பெட்டையள் துணிஞ்சிற்றாளவ’ என அவனது உதடுகள் முணுமுணுக்கும்.



சமாதான காலத்தில் வன்னியிலிருந்து இசைக்குழுவொன்று அய்ரோப்பாவிற்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இசை நிகழ்ச்சிகள் நடத்தச் சென்றபோது நிகழ்ச்சித் தொகுப்பாளராக இவனும் அவர்களுடன் சென்றான். இவன் தான் அவசியம் வர வேண்டுமென நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கேட்டிருந்தனர். விமானத்தில் மது வழங்கப்பட்ட போது இவனுக்கு அருகிலிருந்த பாடகன் ‘ கன நாளாப் போச்சுது, ஒண்டு எடுக்கவா” என இவனிடம் பகடி மாதிரிக் கேட்டான். இவன் முறைத்த முறைப்பில் பாடகன் “குடிக்கிறதில ஒண்டுமில்ல ஆனால் குரலுக்குக் கூடாதெல்லா” என முனகிவிட்டு இருக்கையில் சாய்ந்துகொண்டான்.



அய்ரோப்பிய நகரங்களில் பெருந்தீனியால் இவனுக்கு வயிற்று வலியே வந்துவிட்டது. தங்களது வீட்டிற்குச் சாப்பிட வரவேண்டும் என மக்கள் அடிக்காத குறையாக இவனைத் தங்களது வீட்டிற்கு முறை வைத்துக் கடத்திச் சென்றார்கள். நிகழ்ச்சிகளின் போது இவன் மேடைகளில் தோன்றும் போதெல்லாம் இளைஞர்கள் ஆரவாரித்துக் கூக்குரலிட்டார்கள். அங்கிருந்து திரும்பும் போது விலையுயர்ந்த பரிசுப் பொருட்களால் இவனது பெட்டி நிரம்பி வழிந்தது. கொழும்பு விமான நிலையத்தில் சோதனையின் போது பரிசுப் பொருட்களில் ஒன்றைக் கையிலெடுத்து “இதை எனக்குத் தருவாயா” என அதிகாரி கேட்ட போது, அதை அதிகாரியே எடுத்துக் கொள்ளுமாறு புன்னகையுடன் கைகாட்டினான்.



முகாமுக்குத் திரும்பியவுடனேயே எல்லாப் பரிசுப் பொருட்களையும் தோழர்களிற்குப் பகிர்ந்து கொடுத்தான். அவனுக்கென்று எஞ்சியவை காதலைத் தெரிவிக்கும் மூன்று வாழ்த்து அட்டைகள் மட்டுமே. பாரிஸ் நகரத்தில் இரண்டு அட்டைகளும் சுவிஸில் ஓர் அட்டையும் கிடைத்திருந்தன. பாரிஸ் அட்டைகள் இரண்டும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தன. சுவிஸ் அட்டையில் மழலைத் தமிழில் ஒரு மட்டமான காதல் கவிதை எழுதப்பட்டிருந்தது. அவற்றில் எழுதப்பட்டிருந்தவற்றுக்காக அல்லாமல் அந்த அட்டைகளின் அழகிற்காக அவற்றைக் கிழித்துப் போட மனமற்றவனாய் எடுத்து வந்திருந்தான். முகாமில் வைத்து அவற்றையும் கிழித்துப் போட்டான். முகாமிலிருந்த தோழர்களிற்கு விடிய விடிய அய்ரோப்பியப் பயணக் கதைகளைச் சொன்னான். புலம் பெயர்ந்த தமிழர்கள் இருக்கும் வரை போராட்டத்தை எவராலும் அழித்துவிட முடியாது என நம்பினான்.



நந்திக் கடலின் ஓரத்தில் இவனது அணி சரணடையும் முடிவை எடுத்த போது இவன் அந்த இடத்திலேயே சயனைட் குடித்துவிடலாம் என்றான். சாவதால் ஆகப்போவது எதுவுமில்லை எனப் பொறுப்பாளர் சொன்னார். துப்பாக்கிகள், சீருடைகள், இலக்கத் தகடுகள், சயனைட் குப்பிகள் எல்லாம் மணலில் புதைக்கப்பட்டதும் அணி சிதறி மக்களுக்குள் கரைந்து போனது. இவனுக்கு சயனைட் குப்பியைப் புதைக்க விருப்பமில்லை. அதை மடியில் செருகிக் கொண்டு நந்திக் கடலோரமாக நடந்து வந்தான். கடல் நீரேரியைக் கடந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் செல்ல ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக ஒரு படகில் இருபது பேர் வரை தயாராக இருந்தார்கள். இராணுவத்திடமிருந்து வரும் ஷெல் வீச்சுகள் குறையும் போது படகு புறப்படுவதாகத் திட்டம். இவன் செயற்கைக் காலைக் கழற்றிக் கரையிலேயே வைத்து விட்டு ஊன்றுகோலுடன் அந்தப் படகில் ஏறிக்கொண்டான். ஷெல் வீச்சு நின்றிருந்த ஒரு தருணத்தில் படகு புறப்பட்டது. இவன் சயனைட் குப்பியைக் கடல் நீரில் எறிந்தான்.



படகு கரையை அடையும் போதுதான் கரையிலேயே வரிசையாக இராணுவீரர்கள் படகை எதிர் நோக்கித் துப்பாக்கிகளைக் குறிவைத்துக் கரையோடு கரையாகப் படுத்துக் கிடந்தது தெரிந்தது. இவர்கள் படகை விட்டு இறங்கியதும் “ஆடைகளைக் களைந்து விட்டு வாருங்கள்!” என்ற உத்தரவு வந்தது. இவர்கள் ” அய்யா நாங்கள் பொது மக்கள்” எனக் கூக்குரலிட்டார்கள். ஆடைகளைக் களையுமாறு மறுபடியும் உத்தரவு வந்தது. இவர்கள் தயங்கி நின்றபோது கரையிலிருந்து சரமாரியாக வெடிகள் கிளம்பின. கடல்நீர் துடித்துச் சிதறியது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோருமே ஆடைகள் முற்றாகக் களையப்பட்டு அவர்களது உடல்களிலே வெடிப்பொருட்கள் கட்டப்பட்டிருக்கின்றனவா எனப் பரிசோதிக்கப்பட்டனர். அந்த மனிதர்களை முழு நிர்வாணமாகவே ஒரு கிலோமீற்றர் நடத்திச் சென்ற இராணுவம் அங்கிருந்த பஸ்ஸில் ஏற்றியதன் பின்பாகத்தான் அவர்களை ஆடைகள் அணிந்துகொள்ள அனுமதித்தது. இவன் தலையைக் குனிந்தவாறேயிருந்தான். எவரையும் ஏறிட்டுப் பார்க்க இவன் விரும்பவில்லை. மணிக்கணக்காக பஸ் ஓடிக்கொண்டிருந்தது. குழந்தைகள் தாகத்தாலும் பசியாலும் வெப்பத்தாலும் அழுதபோது அவர்களது தாய்மார்களால் ‘பளாரென’ அறையப்பட்டு அடக்கப்பட்டன. வவுனியா தடுப்பு முகாமில் பஸ் நின்றபோது இவன் தலையைக் கவிழ்ந்தவாறே இறங்கினான். பூமியைத் தவிர இவனது கண்கள் எதையும் பார்க்கவில்லை. வரிசையில் உட்கார்ந்திருந்தபோது இவனது தோளைத் தொட்டு ஒரு இரகசியக் குரல் ‘கானகன்’ என அழைத்தது. சடுதியில் இவன் தலை நிமிர்த்திப் பார்த்தபோது ஓர் இராணுவ அதிகாரி இவனைப் பார்த்து இளித்துக் கொண்டு நின்றான். தரையில் கிடந்த ஊன்றுகோலைக் கையில் எடுத்தவாறே மறுகையால் இவன் எழுந்திருக்க அதிகாரி உதவினான். இவன் எழுந்ததும் ஊன்றுகோலைக் கொடுத்து விட்டு இவனது தோள் பற்றி அதிகாரி அழைத்துச் சென்றான்.



தகரங்களால் அடைக்கப்பட்டிருந்த அந்தச் சிறிய அறைக்குள் தான் விசாரணை தொடங்கியது. இவனது உண்மையான பெயரைக் கேட்ட போது ரவிக்குமார் என்றான். இயக்கப் பெயர் கானகன் என்றான். “உனக்கு யங்கிள் என்று இன்னொரு பெயரும் இருக்கிறதே’ எனச் சொல்லி அதிகாரி சிரித்தான். எந்த உண்மையை மறைத்தும் பலனில்லை என்பது இவனுக்குத் தெரிந்தது. ஆனால், முடிந்தவரை உண்மைகளைப் பேசிவிடாமலிருப்பது தனது கடமை என்று இவன் நினைத்தான். ஆனால், விசாரணையின் போக்கில் மறைப்பதற்கு எந்தத் தகவல்களும் இவனிடம் இல்லாமற் போயின. விசாரணை ஒரு பேரேட்டில் பதிவாகிக்கொண்டிருந்தது. சுற்றி நின்ற இராணுவத்தினரில் சிலர் இவனை செல்போன் வீடியோவில் பதிவு செய்தவாறிருந்தார்கள். இவன் தலையைக் குனிந்தபோதெல்லாம் ஒரு சிங்கள வசைச் சொல்லுடன் இவனது தலை அவர்களால் தூக்கி நிறுத்தப்பட்டது. “கானகன் தான் சங்கடப்படுகிறாரே, படம் பிடிப்பதை நிறுத்துங்கள்” என அதிகாரி புன்னகையுடன் உத்தரவிட்டதும் படம் பிடிப்பது நிறுத்தப்பட்டது. இவன் எதிர்பார்த்த மாதிரியே பிறகு சம்பவங்கள் நிகழ்ந்தன.



தரையோடு தரையாக நகர முடியாது கிடக்கும் ஒரு முயலை அடிப்பதுபோல சுற்றிநின்று தடிகளாலும் துப்பாக்கியின் பின்புறங்களாலும் இவனை அடித்துக்கொண்டேயிருந்தார்கள். அவர்களது கேள்விகளிற்கு இவனுக்கு உண்மையிலேயே பதில் தெரியாது. இவனை உட்கார வைத்து விட்டு அசையவிடாமல் பிடித்துக்கொண்டே இவனது துண்டிக்கப்பட்ட காலின் தொடைப் பகுதியிலிருந்து மிக நிதானமாகவும் திருத்தமாகவும் ஒரு துண்டுத் தசையைக் ‘கேக்’ போல கத்தியால் வெட்டி எடுத்து இவனது கையில் கொடுத்து அதைச் சாப்பிடச் சொன்னார்கள். இவன் மயங்குவது போல பாவனை செய்து கண்களைச் சுழற்றிக் கீழே சரிந்தான். இவனின் வாய்க்குள் அந்தச் சதைத்துண்டு இரத்தம் வடிய அப்படியே திணிக்கப்பட்டது. அது தொண்டைக்குள் வழுக்கிக் கொண்டு போனது.



அடுத்த மூன்று நாட்களும் இவன் வாந்தி எடுத்தபடியே இருந்தான். உடலிலிருந்த இரத்தம் வாந்தியாக வெளியேறிக் கொண்டிருந்தது. இவன் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்ட பின்பும் அடிக்கடி வாந்தி எடுத்தவாறேயிருந்தான். சாப்பிடும் போது இறைச்சியையோ மீனையோ பார்த்தால் ஓங்காளித்து வாந்தி எடுப்பான். மாமிசம் சாப்பிடுவதை நிறுத்திக்கொண்டான். இந்தப் புனர்வாழ்வு முகாமில் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட இருநூறு சரணடைந்த போராளிகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். நோயால் இறந்த ஆறுபேருக்கும், தற்கொலை செய்துகொண்ட இருவருக்கும் பதிலாக புதியவர்கள் முகாமில் சேர்க்கப்பட்டார்கள். இருநூறு என்ற எண்ணிக்கை குறையாமல் இராணுவத்தினர் பார்த்துக்கொண்டார்கள்.



இவன் எப்போதும் மனச் சோர்வுடனேயே காணப்பட்டான். முகாமில் இருவருக்கு மனநிலை முற்றாகச் சரிந்திருந்தது. அவர்களில் ஒருவன் தனது ஆடைகளைக் கழற்றி வீசுவதிலேயே குறியாயிருந்தான். அதற்காக இராணுவத்தினரிடம் ஒவ்வொரு நாளும் உதைபட்டான். அவன் அங்கிருந்து விடுதலையாவதற்காக நாடகம் போடுகிறான் என இராணுவ அதிகாரி சொன்னான்.



இவர்களில் தெரிவு செய்யப்பட்ட அய்ம்பது பேர்களிற்கு பயிற்சியளிக்க ஒரு மனநல மருத்துவர் வந்தார். அவர் மனச் சோர்விலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக இருப்பது எவ்வாறு என உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே இவன் குறுக்கிட்டு “இங்கிருந்து விடுதலையாகி வீட்டுக்குப் போனால் மகிழ்ச்சியாயிருப்போம் என நினைக்கிறேன்’” என்றான். மருத்துவர் எது சொன்னாலும் இவன் விட்டேற்றியாக அவரைத் தட்டிக்கழித்தான். கடைசியில் மருத்துவர் மனச் சோர்வுக்கு ஆளாகிவிட்டார் போலிருந்தது. அடுத்த பயிற்சி வகுப்பை இராணுவத்தினருக்கு எடுக்கவிருப்பதால் முன்னாள் போராளிகளிற்கான முதல்நாள் பயிற்சி வகுப்பை இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் சொன்னார்.



சரியாக ஒன்றரை வருடங்கள் கழித்து அங்கிருந்து விடுதலையான முதலாவது அணியில் இவனுமிருந்தான். அந்த அணியில் அவயங்களை இழந்திருந்தவர்கள் மட்டுமேயிருந்தனர். புதிய வேட்டியும் சட்டையும் இராணுவத்தினரால் வழங்கப்பட்டன. முகாமில் விழா நடத்திப் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் முன்னாள் போராளிகள் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவனை அழைத்துச் செல்ல அம்மா வந்திருந்தார். அம்மாவின் முகம் முழுவதும் சிரிப்புத் தொற்றியிருந்தது.



அக்காவுக்கு கல்யாணமாகி அவள் நகரத்தில் குடியிருந்தாள். இவ்வளவு நாட்களும் அம்மா அக்காவுடனேயே தங்கியிருந்தார். அம்மா தன்னை அக்காவின் வீட்டுக்குத்தான் அழைத்துச் செல்வதாக இவன் எண்ணினான். ஆனால் அம்மா இவனைக் கிராமத்து வீட்டிற்கு அழைத்து வந்தார்.



வீடு உருக்குலைந்திருந்தது. கதவுகளையும் நிலைகளையும் கூடத் திருடிச் சென்றிருந்தார்கள். வாசலுக்கும் ஜன்னல்களிற்கும் அம்மா துணியால் திரை செய்து போட்டார். இவனது அறைக்குள் ஒரு மேசையும் நாற்காலியும் படுக்கையும் வாங்கிப் போட்டார். இவன் அந்த அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தான். வீட்டுக்குப் போனால் மகிழ்ச்சி உருவாகும் என மனநல மருத்துவரிடம் சொன்னதை அடிக்கடி நினைத்துப் பார்த்தான்.



கடைத் தெருவே மாறியிருந்தது. முன்பு இவன் தொலைக்காட்சி பார்க்கச் செல்லும் ‘மீனா கபே’ இப்போது ‘லங்கா கபே’ ஆகியிருந்தது. அதை இராணுவத்தினர் நடத்திக்கொண்டிருந்தனர். இப்போதும் அங்கே இடையறாது தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது. இவன் தலையைக் கவிழ்ந்தவாறே அதைக் கடந்து சென்றான். கடைத் தெருவில் எல்லோருமே தன்னைப் போலவே தலையைக் குனிந்தவாறே நடந்துகொண்டிருப்பதாக இவனுக்குத் தோன்றியது. தற்செயலாகச் சந்தித்த கண்களில் அச்சத்தை மட்டுமே இவன் பார்த்தான்.



அம்மா இவனுக்குச் செயற்கைக் கால் பொருத்துவதற்காகப் பணம் திரட்டிக் கொண்டிருந்தார். காலைப் பொருத்தி நான் எங்கே போகப் போகிறேன், அந்தப் பணத்தில் ஒரு தொலைக்காட்சி வாங்கினாலாவது அறைக்குள்ளிருந்து பார்த்துக்கொண்டிருக்கலாமென நினைத்தான். ஆனால், அவ்வாறு கேட்பது அம்மாவைப் புண்படுத்தக் கூடுமென்பதால் இவன் வெறுமனே அறைக்குள் அடைந்து கிடந்தான். வாரம் ஒருமுறை இராணுவச் சாவடிக்குச் சென்று கையெழுத்திட வேண்டியிருந்தது. அந்த நாட்களில் மட்டுமே வெளியே போனான்.



அன்று மாலையில் பக்கத்து வீட்டிலிருந்து பாட்டுச் சத்தம் வந்து கொண்டிருந்தது. மகிழ்ச்சி என்பது நாம் உருவாக்கிக் கொள்வதே என மனநல மருத்துவர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தான். பொழுது பட்டதும் ஊன்றுகோலை எடுத்துக்கொண்டு வெளியே நடந்தான். அவன் பக்கத்து வீட்டு வாசற்படியில் தட்டுத் தடுமாறி ஏறிய போது உள்ளேயிருந்த தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ச உரையாற்றிக்கொண்டிருந்தார். சற்று நேரத்தில் தொலைக்காட்சி திடீரென நிறுத்தப்பட்டது.



வீட்டுக்காரர் வாசலுக்கு வந்து இவனைப் பார்த்தார். இவன் தொலைக்காட்சி பார்ப்பதற்காக வந்ததாகச் சொன்னான். வீட்டுக்காரர் தலையைக் குனிந்து நிலத்தைப் பார்த்தவறே அவர்கள் சாப்பிடப் போவதாகச் சொல்லிவிட்டு வாசலிலேயே நின்றார். இவன் கையை வாசற்படியில் ஊன்றித் தட்டுத் தடுமாறி எழுந்து சுவரில் சாய்த்து வைத்திருந்த ஊன்றுகோலையும் எடுத்துக்கொண்டு படியிறங்கும் போது வீட்டுக்காரர் ‘கானகன் நீ இஞ்ச வந்து போனால் ஆமியால எங்களுக்கும் பிரச்சினை வரும்’ என்று முணுமுணுத்தது இவனுக்குத் தெளிவாகக் கேட்டது.



வீதியில் நின்று சட்டைப் பையிலிருந்து பீடியை எடுத்துப் பற்றவைக்க முயன்றான். கை நடுங்கிக் கொண்டிருந்தது. நான்காவது தீக்குச்சியிலேயே பற்ற வைக்க முடிந்தது. இந்தப் பழக்கம் தடுப்பு முகாமிலிருந்தபோது வந்திருந்தது. அம்மா காலையில் ஒரு கட்டு பீடி வாங்கிக் கொடுப்பார்.



வாயில் பீடியை வைத்தவாறே நடந்தான். இவனது ரவி என்ற பெயரை வீட்டுக்காரர் மறந்து இவனைக் கானகன் என அவர் அழைத்தது இவனுக்கு ஆச்சரியமாயிருந்தது. பீடியை இழுத்துக் கொண்டே நடந்தான். விடுதலையாகி வந்து இவ்வளவு நாளாகியும் அக்காவோ அத்தானோ தன்னை இதுவரை வந்து பார்க்காதது திடீரென இவனுக்கு உறைத்தது.



நடுநிசியில் அம்மா எழுந்து கை விளக்கையும் எடுத்துக் கொண்டு மெதுவாக நடந்து இவனது அறையை நோக்கிப் போனார். ஒவ்வொரு நாளும் அம்மா இவ்வாறு சென்று பார்ப்பார். இவன் தூங்கிக்கொண்டிருப்பது அவருக்கு நிம்மதியாகயிருக்கும்.



அம்மா இவனது அறையின் வாசலில் நின்று இவனது படுக்கையிருந்த திசையில் விளக்கைப் பிடித்தபோது படுக்கை காலியாயிருந்தது. அம்மா பதற்றத்துடன் அறையின் மூலையொன்றிற்கு வெளிச்சத்தைத் திருப்பினார். அங்கே அவன் சுவரோடு சாய்ந்து தரையில் ஆடாமல் அசையாமல் சிலைபோல உட்கார்ந்திருந்தான். அம்மா அவனது முகத்திற்கு வெளிச்சத்தைத் திருப்பியபோது அவனது கண்கள் மேசையையே உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார். அம்மா மேசைக்கு வெளிச்சத்தைத் திருப்பியபோது மேசையில் ஒரு தீப்பெட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அம்மா திடீரென வெடித்துப் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினார். இவன் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தான். இவனது கண்கள் ஒளிர்ந்துகொண்டிருந்தன.

வியாழன், 19 ஜனவரி, 2012

Puthumaipitthan.

கண்மணி கமலாவுக்கு புதுமைப் பித்தன் (ஒரு வாசிப்பு அனுபவம்)
உஷாதீபன்
வாழ்க்கையின் அர்த்தத்தைச் சொல்லுவது தத்துவம். வாழ்க்கையைச் சொல்லுவது, அதன் இரசனையைச் சொல்லுவது இலக்கியம் என்றார் புதுமைப்பித்தன்.
அந்த அளவுக்கான ஆழ்ந்த ரசனையோடுதான் தனது ஒவ்வொரு படைப்பினையும் வடித்தெடுத்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும். அதனால்தான் இலக்கியம் என்பதன் முழு அர்த்தத்தை உள்ளடக்கியதாக நம்மை பிரமிக்க வைக்கிறது அவரது ஒவ்வொரு படைப்புக்களும்.
இல்லையென்றால் தனது மனைவிக்கு எழுதும் கடிதங்களைக் கூட இத்தனை ரசனையோடும், பிடிப்போடும், உள்ளார்ந்த அனுபவச் செறிவோடும் அன்பையும், பாசத்தையும், பொறுப்புணர்ச்சியையும், கடமையுணர்ச்சியையும் நுணுகி நுணுகி உணர்ந்து, அனுபவித்து அதன் ஆழமான உட்பரிமாணங்களில்  மனமுவந்து பயணித்து, தனக்கு ஊனாகவும், உடலாகவும் இருந்து பரிமளித்திடும் தன் மனையாளிடம் அதன் மொத்த சாரத்தையும் வடித்துக் கொடுத்துக் கடிதங்கள் எழுதியிருப்பாரா?
கண்மணி கமலாவுக்கு புதுமைப்பித்தன்  இதுதான் புத்தகம். இத்தனை கடிதங்களைத் தொகுக்கும் பணி என்ன சாதாரணமா? என்ன விலையோ அதைத் தயங்காமல் கொடுத்து, ஆர்வமாகப் படித்து முடித்து விடுகிறோம். ஆனால் அந்தப் புத்தகத்தை உருவாக்குவதற்கு அந்தத் தொகுப்பாளர் என்ன ஒரு உழைப்பையும், முனைப்பையும் காட்டியிருப்பார்? திரு இளையபாரதி அவர்கள் நிரம்பவும் பாராட்டுக்குரியவர்தான்.
இதுதான் புத்தகம்இத்தனை கடிதங்களைத் தொகுக்கும் பணி என்ன சாதாரணமாஎன்ன விலையோ அதைத் தயங்காமல் கொடுத்துஆர்வமாகப் படித்து முடித்து விடுகிறோம்ஆனால் அந்தப் புத்தகத்தை உருவாக்குவதற்கு அந்தத் தொகுப்பாளர் என்ன ஒரு உழைப்பையும்முனைப்பையும் காட்டியிருப்பார்திரு இளையபாரதி அவர்கள் நிரம்பவும் பாராட்டுக்குரியவர்தான் நாமெல்லாம் என்ன வாழ்க்கை வாழ்கிறோம் என்றுதான் தோன்றுகிறது நமக்கு. முணுக்கென்றால் முன்னூறு முறை கோபித்துக் கொள்ளும், முகத்தைத் திருப்பிக் கொள்ளும், சண்டைக்கு சதிராய்ப் பறக்கும் சாதாரண மானிடப் பிறவியாய் அன்றாட வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறோம்.
இத்தனைக்கும் பொருளாதாரத் தேவை என்பது நிறைவடைந்திருக்கும் நிலையில், எதடா சாக்கு என்று ஒன்றுமில்லாததற்கெல்லாம் முறுக்கிக் கொண்டு அலைகிறோம். என்னதான் புத்தகங்கள் படித்தாலும், உணர்ந்தாலும், மனிதனின் இயல்பான கோணல் புத்தி என்ன அத்தனை சீக்கிரமாகவா தன்னை மூடி மறைத்துக்கொள்கின்றன? அல்லது எல்லா முரண்களிலிருந்தும் விலகிக் கொள்கின்றனவா?
அன்றாட வாழ்க்கையே பிரச்னையாக இருந்த நிலையில், பொருள் ஆதாரத்தை முற்றிலுமாக நம்பி நின்ற பொழுதில்,  ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அவரவருக்கான மனச் சங்கடங்களைக் கூட நேரில் பகிர்ந்து கொள்ள முடியாது வெகு தூரம் பிரிந்து நின்ற வேளையில், எத்தனை கரிசனத்தோடும், அன்போடும், கருணையோடும், பாசத்தோடும், பரஸ்பரம்  எப்படியெல்லாம் உறவாடியிருக்கிறார்கள்? மனதுக்குள்ளே எப்படி ஆரத் தழுவியிருக்கிறார்கள்? இதுதான் உண்மையான அன்பு என்பதோ?
மூத்த தலைமுறையினரின் அடிப்படையான விழுமியங்கள் அவர்கள் வாழ்க்கையை எப்படியெல்லாம் செழுமைப் படுத்தியிருக்கின்றன! ஒழுக்கமும், பண்பாடும், கடமையுணர்ச்சியும், கட்டுப்பாடும், இந்த வாழ்க்கையை இப்படித்தான் வாழ்ந்து காட்ட வேண்டும் என்றல்லவா நமக்குப் பாடம் கற்பிக்கின்றன! சொல்லும் ஒவ்வொரு சொல்லும் அட்சர லட்சம் பெறும் என்கிற உண்மை இங்கே எப்படியெல்லாம் பரிணமிக்கின்றன!
பொருளீட்டுவதற்கான நமது உழைப்பு  என்பது எங்ஙனம் இருக்க வேண்டும், ஈட்டிய பொருள் எத்தனை அர்த்தபூர்வமாய்ப் பயன்படுத்தப்பட வேண்டும், பொருள் ஆதாரம் என்பது அதற்கான தேவைகளை நீட்டித்துக் கொண்டே போகாமல் அவசரம், அவசியம் என்பவைகளை அடிப்படையாகக் கொண்டு தவிர்க்க முடியாதவைகளாயும், தவிர்க்கக் கூடியவைகளாகவும் எப்படிப் பொறுப்போடு  உணரப்பட வேண்டும், என்பதாக வாழ்க்கையின் நிகழ்வுகளை எத்தனை அக்கறையோடு போதிப்பதாக உள்ளன!.
வாழ்க்கையில் மனிதனுக்கு எல்லாவிதமான அனுபவங்களும் கிட்டி விடுவதற்கு வாய்ப்பே இல்லை. காரணம் ஒருவனுடைய வாழ்க்கை எல்கை மிகக்  குறுகிய அளவிலானதாக இருப்பதுதான். வீடு, அங்கிருந்து பொருளீட்டும் நிறுவனம் வரையிலான தூரம். வீடு, அங்கிருந்து பணியாற்றும் அலுவலகம் வரையிலான தூரம். இடைப்பட்ட மற்றும் பணியாற்றும் இடங்களில் பழகும் மனிதர்கள், அவர்களின் குணாதிசயங்கள், அவர்களின் நடத்தைகள், பழக்க வழக்கங்கள், அனுபவங்கள் என்று மிகக் குறிப்பிட்ட அளவிலான மனிதர்களின் சந்திப்புகளோடு பெரும்பாலும் முடிந்து போகின்றனவாய் அமைந்து விடுகின்றன.
அப்படியானால் ஒரு மனிதன் முழுமையான அனுபவம் வாய்ந்தவனாக, இந்த சமூகத்தை, அதன் நிகழ்வுகளை முற்றிலுமாகப் புரிந்து நடந்துகொள்பவனாக ஒரு முழு மனிதனாக எப்பொழுது, எப்படி உலா வருவது?
அதற்குத்தான் வாசிப்பு அனுபவம் என்பது பெரிதும் உதவுகிறது எனலாம். வாசிப்பு ஒரு மனிதனைப் பக்குவப்படுத்துகிறது. அவனது சளசளப்பைப் போக்கி அவனை அமைதியானவனாக்குகிறது. வாசிப்பனுபவத்தினால் மிகப்பெரிய விவேகியானவர்கள் பலர் என்று கூறுகிறார் திரு சுந்தரராமசாமி அவர்கள்.   இதுதான் சத்தியமான உண்மை.
மேற்கண்ட புத்தகத்தின்பால் ஏற்பட்ட வாசிப்பனுபவம்தான் இந்த அளவுக்கான தொகையறாவை முன்னே வைக்கும் அவசியத்தை ஏற்படுத்தி விட்டது.
திரு இளையபாரதி அவர்கள் தொகுத்து புதுமைப்பித்தன் அவர்கள் தனது துணைவியாருக்கு எழுதிய கடிதங்கள்தான் கண்மணி கமலாவுக்கு என்கிற பெயரில் அற்புதமான ஒரு இலக்கியப் பெட்டகமாக இங்கே மிளிர்கிறது.
வாழ்வதாகச் சொல்கிறோம். ஆனால் உண்மையில் வாழ்கிறோமா? என்று கேட்ட கலைஞனின் வாழ முடியாமல் போன வாழ்வு அவன் வாக்கு மூலமாய் இங்கே ஒலிக்கிறது என்று தனது முன்னுரையில் முன் வைக்கிறார் திரு இளையபாரதி அவர்கள். புதுமைப்பித்தன் என்கிற மகாகலைஞனின் இன்னொரு பரிமாணம் இந்தக் கற்பூர ஆரத்தியில் தரிசனமாகிறது என்கிறார்.
ஆம்! அவர் சொன்னது போல் தன் இருதயத்தை, அதன் தவிப்பை, தணலைக்கொட்டி முழக்கியிருக்கிறார் புதுமைப்பித்தன்.
வாழ்க்கை எப்படியெல்லாம் நீண்ட காலத்திற்குப் பிரிந்து நின்றது, எப்படியெல்லாம் சிதைந்து போனது, தேவைகள் எங்ஙனமெல்லாம் குன்றிப் போயின, சுயபூர்த்தியில்லாமலே நாட்கள் எத்தனை வேதனையாய்க் கழிந்தன, அவற்றினூடே மனம் தன்னை, தன் எண்ணங்களை அகல விரித்து எப்படியெல்லாம் ஆறுதல் தேடிக் கொண்டன என்பனவாக விரிந்து செல்லும் கண்மணி கமலாவுக்கு என்னும் இந்த இலக்கியப் பெட்டகம் நம் மனதைப் பிழிந்து எடுத்து விடுகிறது என்பது சத்தியமான உண்மை.  
இலக்கியத்தை ஆதாரமாகக் கொண்ட ஒருவனின் வாழ்க்கை எப்படித்தான் சிதைந்தாலும், அந்தக் கனவின்பால் ஏற்பட்ட பிடிப்பு ஒருவனை எங்ஙனம்  ஆட்டிப் படைக்கிறது என்பதைத் தன் மனைவிக்கான ஒவ்வொரு கடிதம் மூலமாக அப்படியே வடித்தெடுத்திருக்கிறார் பு.பி. அவர்கள்.
பழைய திரைப்படங்களிலும், நாவல்களிலும், கடிதம் எழுதும் முறைமையில் கண்டவற்றை தன் மனைவிக்கான முதல் அழைப்பின் வாயிலாக பு.பி. அவர்கள் முன் வைக்கும்போது இம்மாதிரியெல்லாம் விளித்து நாம் எழுதியதேயில்லையே என்று தோன்றத்தான் செய்கிறது. அப்படி எழுதியிருந்தால் அது ஒரு செயற்கையான விஷயமாகத்தானே பட்டிருக்கும். எல்லோராலும் விரும்பப் பட்டிருக்குமா, மனைவியால் கூட விரும்பத் தக்கதாக இருந்திருக்குமா என்றெல்லாம் கூடத் தோன்றினாலும், பு.பி. அவர்கள் கடிதத்திற்குக் கடிதம் அப்படியே தன் மனைவியை விளித்து, தன் ஆழமான அன்பை, பாசத்தை, தன் குடும்பத்தின்பாலான தன் நேசத்தை நிலைநிறுத்தும்போது ஒரு மனிதன் முதலில் தன்னை நேசித்தால்தான் தன் நெருக்கமான சொந்தத்தை, சுற்றத்தை இப்படி நேசித்து, அரவணைக்க முடியும் என்கிற மன நியாயம் நம்மைக் கட்டுப்படுத்தி நிலை நிறுத்தி விடுகிறது.
கண்மணி கமலாவுக்கு….
எனதாருயிர்க் கண்ணாளுக்கு
எனதாருயிருக்கு
கமலாளுக்கு
எனது கட்டிக் கரும்பான ஆருயிர்க் கண்ணாளுக்கு,
என் கண்ணம்மா
கண்ணா
கண்ணாளுக்கு
எனது கண்ணாளுக்கு
கண்ணான எனது உயிருக்கு
எனது கண்ணுக்குக் கண்ணான கட்டிக் கரும்புக்கு
எனது உயிருக்கு உயிரான கட்டிக் கரும்புக்கு
எனது கண்ணான கட்டிக் கரும்புக்கு
எனது அருமைக் கண்ணாளுக்கு….
கடிதத்தின் முதல் அழைப்பே எவ்வளவு அன்பைப் பொழிந்து நிற்கிறது?
பொருளை மட்டுமே ஆதாரமாக வைத்து வாழும் தற்போதைய வாழ்க்கையில் விழுமியங்களான விஷயங்கள் எங்கிருந்து எடுபடும்?
பழைய மதிப்பு மிக்க விஷயங்கள் இன்றும் அந்த மூத்த தலைமுறையினரால் மட்டுமே உணரப்படுகிறது என்றால் அதுதான் உண்மை. இவற்றையெல்லாம் நாம் நம் வாரிசுகளுக்குச் சொன்னோமா? அப்படியே சொல்லப் புறப்பட்டால்தான் யார் காதைத் தீட்டிக் கொண்டு கேட்கத் தயாராயிருக்கிறார்கள்?
1938 களிலிருந்து 1948 வரையிலான சுமார் பத்தாண்டு கால கடிதப் போக்குவரத்துகள் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இக்குறிப்பிட்ட பத்தாண்டு கால இடைவெளியில் புதுமைப்பித்தன் அவர்கள் சென்னையில் வெவ்வேறு முகவரிகளில் மாறி மாறி இருந்திருக்கிறார். மதுரை, புனே, பெங்களுர், என்று பல இடங்களுக்கும் சென்றிருக்கிறார். அதுவே அவரின் வாழ்க்கைப் போராட்டத்தின் ஆரம்ப அடையாளங்களாக, காரண காரியங்களை முன்னிறுத்தியதானதாய் நமக்குத் தோன்றி மனதை மிகவும் கஷ்டப்படுத்தி விடுகிறது.  


மனிதன் வறுமையோடு போராடுவது என்பது மிகக் கொடுமை. பொருளாதாரக் கஷ்டத்தினால் ஒருவனின் அன்றாட வாழ்க்கைப் பாடுகளே சீர்குலைந்துதான் விடுகிறது. கையில் கிடைக்கும் பணத்தைக் கண்ணும் கருத்துமாகக் கணக்கிட்டு, கவனமாகச் செலவு செய்து, விரயங்களைக் கட்டாயமாகத் தவிர்த்து, குடும்பத்திற்கு என்று கரிசனத்தோடு அனுப்பி வைத்து மன நிறைவு கொள்ளுதலும், கடிதத்திற்குக் கடிதம் அன்பையும், ஆறுதலையும், அரவணைப்பையும்  தந்து பக்கத்தில் இல்லாத குறையைப் போக்க முயலுதலும், அருகில் இல்லாவிட்டாலும் என் கடிதங்கள் கட்டாயம் உன்னை ஆறுதல்படுத்தும் என்கிற நம்பிக்கையில் ஒவ்வொரு கடிதத்தையும் அவர் வடித்திருக்கும் பாங்கு….பின்னால் இது இலக்கியமாகப் பேசப்பட வேண்டும் அல்லது பேசப்படும் என்கிற எதிர்பார்ப்பிலா எழுதப்பட்டது? மன ஆழத்திலிருந்து உண்மையான அன்பின், பாசத்தின் வெளிப்பாடல்லவா அவைகள்! அதிலும் குழந்தை குஞ்சு இறந்து போய்விட அவர் அந்தத் துயரத்தை மறக்க தன் மனைவிக்கு எழுதும் வரிகள் நம் நெஞ்சத்தை அறுத்து எடுக்கின்றன.
தொலைபேசி வசதி கூட இல்லாத அந்தக் காலத்தில் வெறும் கடிதங்கள் மட்டுமே தொடர்பு படுத்துபவை என்கிற அளவில், கடுமையான வேலைகளுக்கு இடையில் அடுத்தடுத்து விடாமல் அவர் தன் மனைவிக்கு எழுதியுள்ள கடிதங்கள், வீட்டின் தொடர்ந்த  நடவடிக்கைகளை சென்னையிலிருந்தே எவ்வளவு பொறுப்பாக இயக்க முடியுமோ அந்த அளவுக்குக் கட்டுப்பாட்டோடு இயக்கி, மனைவியையும் ஆறுதல்படுத்தி, தான் இல்லாத குறையைப் போக்க அவர் எடுத்திருக்கும் முயற்சிகள், மனிதர்கள் எவ்வாறு தங்கள் வாழ்க்கையை சீர்பட நடத்திச் செல்ல முயற்சித்திருக்கிறார்கள் என்பதற்கான அற்புதமான அடையாளங்களாகப்  பரிணமிக்கின்றன.
எப்படியும் வாழலாம் என்பது எந்தக் காலத்திலும் எவருக்கும் பொருந்தியதாக இருந்ததில்லை. நமது குடும்ப அமைப்பு கற்றுக் கொடுத்த பாடங்கள் அவை. இப்படித்தான் வாழ்ந்தாக வேண்டும், அதுதான் ஒரு மனிதனின், அவன் சார்ந்த குடும்பத்தின் நன்னடத்தைகளின் அடையாளங்களாகக் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்பதுதான் சத்தியமான உண்மை.
அம்மாதிரியான விழுமியங்களை அவற்றின் அடையாளங்களை வறுமையும், பொருளாதாரப் பற்றாக்குறையும் குலைக்க முயலும்போது மனிதன் முரண்படாமல், அந்தப் பேரலையில் அடித்துச் செல்லப்படாமல்,  அவற்றை எப்படிச் சமாளித்து முன்னேறுகிறான் என்பதுதான் வறுமையிற் செம்மை என்ற தத்துவ நிகழ்வாகக் காலத்துக்கும் இருந்து வந்திருக்கின்றன. இந்த அடையாளங்களின் பிரதிநிதியாய் பு.பி. அவர்கள் இந்தப் புத்தகத்தில் தான் வரைந்த கடிதங்களின் மூலம் நம் மனக் கண்ணில் திகழ்கிறார்.
கமலா கண்ணே! கட்டிக் கரும்பே! மறந்து விடாதே. உனக்கு ஏற்படும் துன்பம் எனக்கும்தான். நாம் இருவரும் சேர்ந்தே அனுபவிக்கிறோம். அதனால் உனக்கென்று ஒரு வழி என்னும் அசட்டு யோசனைகளை விட்டுவிடு. மனசை மாத்திரம் தளர விடாதே! அது எனக்கு எவ்வளவு கவலை கொடுக்கிறது தெரியுமா? உன்னுடன் தவிக்கும். உனது சொ..வி.
விடாமல் கடிதத்திற்குக் கடிதம் அவர் தன் மனைவிக்கு ஆறுதல் சொல்லும் விதம், அடக் கடவுளே, ஒரு அற்புதமான படைப்பாளிக்கு வாழ்க்கைப் போராட்டம் எத்தனை கொடுமையாக அமைந்து விட்டது என்று நம்மைப் பிழிந்து எடுத்து விடுகிறது.
மனைவியை ஊக்கப்படுத்தும் நிமித்தம், அவர் எழுதும் கதைகளைத் தனக்கு அனுப்பிவைக்கச் சொல்கிறார். அடுத்தடுத்து விடாமல் எழுது என்று உற்சாகப்படுத்துகிறார். உன் கதைகள் நன்றாகவே உள்ளன, ஓரிரு வார்த்தைகளை மாற்றிப் போட்டால் போதும். அவற்றை நான் சரி பண்ணி, பிரசுரத்திற்குக் கொடுத்து விடுகிறேன் என்று கூறி, இன்னும் ஏதாவது எழுதியிருந்தாயானால் உடன் எனக்கு அனுப்பிக் கொடு என்று கேட்கிறார்.
1947 ஆரம்ப வரையிலான காலங்கள் சென்னையிலேயே கழிந்து விடுகின்றன. பிறகுதான பட விஷயமாக என்று மதுரைக்குப் பயணிக்கிறார். சூழ்ந்திருந்த இருள் விலக ஆரம்பித்து விட்டது என்று மகிழ்ச்சியை மனைவியோடு பகிர்ந்து கொள்கிறார். மதுரை சித்திரகலா ஸ்டுடியோவில் பட வேலைகளைக் கவனிக்க என்று கிளம்புகையில் அவர் மனம் பெரிதும் உவகை கொள்கிறது. அப்பொழுது கூட அங்கிருந்து உன் மனக் கவலை தீர்க்கும் தகவலை உனக்கு அனுப்ப முடியும் என்று நினைக்கிறேன் என்று மனைவிக்குத் தெரிவிக்கிறார்.


மதுரையில் மேலமாசி வீதியில் இருந்த உடுப்பி Nஉறாட்டலில்தான் அந்தக் காலத்தில் எழுத்தாளர்கள் வந்தால் தங்குவார்கள் என்று கேள்விப் பட்டதுண்டு.  அங்கு அறை எண் 13ல் பு.பி. வந்து தங்கியிருக்கிறார் என்கிற தகவல் இன்று பெரிய ஜவுளி நிறுவனமாயும் வேறு பல கடைகளாயும் இருக்கும் அவ்விடத்தைப் பார்க்கும்போது நம் மனதை கனக்க வைக்கிறது. எல்லாவிதமான பழைய அடையாளங்களும்தான் பணம் என்கிற புள்ளியில் இங்கே படிப்படியாக அழிக்கப்பட்டு விட்டனவே! காலத்தின் வேக ஓட்டத்தில் விரட்டியடிக்கப்பட்டுவிட்டனவே!
1948 களில் புனாவிற்கும் பிறகு பெங்களுருக்கும் செல்லும் வாய்ப்புக் கிட்டிய பு.பி. அவர்கள் பெங்களுரிலிருந்து எழுதும் ஒரு கனமான கடிதத்தோடு இப்புத்தகம் நிறைவு பெறுகிறது.  நம் மனதையும் அது நிறைத்து கனக்க வைத்து விடுகிறது.


அங்கே நிபுணர்கள் என்னைப் பரிசோதனை செய்து இரண்டு சுவாசப் பையிலும் துவாரம் விழுந்து விட்டதினால் இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்று சீட்டுக் கிழித்து விட்டார்கள். இனி அவர்களைப் பொறுத்தவரை மரணம்தான் முடிவு. என்பதாக அந்தக் கடிதத்தின் வரிகள்  விரிகின்றன.
முக்கியமான செய்தி ஒன்றைத் தரும் ஒரு கடிதத்தையும் நாம் இங்கே கவனித்தாக வேண்டும். அது புனேயிலிருந்து எழுதப்படுகிறது. 5.2.48 என்று தேதியிட்ட அந்தக் கடிதத்தில் மகாத்மாவைச் சுட்டுக் கொன்றுவிட்ட செய்தியைப் பெரும் அதிர்ச்சியோடு தெரிவித்து, அதன் தொடர்பான கலகங்களைச் சுருக்கமாக விவரிக்கிறார்.
கொன்றது உறிந்து, புனா நகரத்து ஆள் என்று சொன்னார்கள். புனாவில் உறிந்து மகாசபை பத்திரிகை நடத்தியவன் என்று தெரிந்ததும், நகரம் கொந்தளித்துப் போயிற்று. உறிந்து மகா சபைக்காரர்களைக் குத்தி அவர்கள் வீடுகளை எரித்தார்கள். காந்தியைச் சுட்டவன் பத்திரிகாலயத்தை  ஜனங்கள் எரிக்கும்போது நெருப்பு அணைக்கும் யந்திரம் வந்தது. அணைக்கக் கூடாது என்று ஜனங்கள் தடுக்க, ராணுவம் துப்பாக்கி பிரயோகித்து எட்டுப் பேர் மரணம். எங்கு பார்த்தாலும் பிராமணர்களை அடித்துக் கொல்லுவது அவர்கள் வீடுகளைக் கொளுத்துவது என்ற காரியம் நாலு நாட்களாக நடந்து வருகிறது. காந்தி மாண்டதற்காகச் சர்க்கரை கொடுத்த ஒருவன்ய கடை தீ. வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலை. நான்கு நாட்கள் எனக்கு வெற்றிலை இல்லை என்றால் நிலை எப்படி என்று யோசித்துக் கொள் என்று முடிக்கிறார். இருக்கும் அதிரடியைச் சொல்லி அவருக்கான வெற்றிலையோடு முடிக்கும் பாங்கு எத்தனை சரளமும் யதார்த்தமும் நிறைந்தது. நல்லிலக்கியம் என்பது தானே கூடி வருவதாய்த்தானே இருக்க வேண்டும். காலம் பின்னால் உணரும் என்று அவர் நினைத்திருப்பாரா? அவரது உள்ளக் கிடக்கை அத்தனை தத்ரூபமாய்ப் பரிணமித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
பெரு முயற்சி செய்து இந்தக் கடிதங்களைத் தொகுத்தளித்த திரு இளையபாரதி மிகவும் பாராட்டுக்குரியவர்.
இந்தக் கடிதங்களில் காணக் கிடைக்கும் புதுமைப் பித்தன் நமக்கு முற்றிலும் புதியவர். ரொம்பவும் நெகிழ்ச்சியானவர். தமிழ் இலக்கியத்தின் எல்லாவிதமான பரிசோதனைகளுக்கும் என்னிடம் வாருங்கள் என்று களம் அமைத்துக் கொடுத்த பெருமை பு. பி. அவர்களைச் சாரும். அவரைத் தொடாமல் இந்த இலக்கிய வானுக்குள் எவரும் சஞ்சாரம் செய்ய இயலாது. தன் மனைவிக்கு  அவர் எழுதிய இக்கடிதங்கள் காலத்தால் இலக்கியமாகப் பரிணமிக்கும் என்ற நினைத்தெல்லம் அன்று அவர் எழுதவில்லை. ஆனால் இன்று அவையும் அந்தத் தகுதியைப் பெற்று தலை நிமிர்ந்து நிற்கின்றன. நாம்தான் அவற்றை உணர்ந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இலக்கியத்தை விரும்பும் ஒவ்வொருவர் நூலகத்திலும் கட்டாயம் இருக்க வேண்டிய அரிய பொக்கிஷம் இது!
.வு.சி. நூலகம், ஜி-1, லாயிட்ஸ் காலனி, இராயப்பேட்டை,சென்னை-14 ன் அற்புதமான வெளியீடு இது. இந்தப் பதிப்பகம் எத்தனையோ நல்ல நூல்களைத் தேடித் தேடி வெளியிட்டு வருகிறது. அதில் இது அதி முக்கியமானது.