வியாழன், 31 ஜூலை, 2014

Rvr Rajendiran
3 hours ago
அடுக்குப்பானைகளில்

என்பாட்டி

தின்பண்டங்களை சேமித்து வைத்திருந்தாள்...

அஞ்சறைப்பெட்டியில்
என் அம்மா

ரூபாய் நோட்டுகளை சேர்த்து வைத்திருந்தாள்... 

ஏதோ என்னால் முடிந்த அளவு

நண்பர்களை மட்டுமே
நான் சம்பாதித்து வைத்திருக்கிறேன்

புதன், 5 மார்ச், 2014

எனது மகளின் கண்களில்


எனது மகளின் கண்களில் (In My Daughter's Eyes)
மொழி : ஆங்கிலம்
எழுதி இசையமைத்தவர் : ஜேம்ஸ் ஸ்லேட்டெர் (James Slater)
பாடியவர் : மார்டீனா மக்ப்ரைட் (Martina McBride)
பாடல் வகைமை : கண்ட்ரி (Country)
ஆண்டு : 2003 
நாடு : அமேரிக்க
தமிழில் : ஷாஜி


எனது மகளின் கண்களில்
நான் ஒரு கதாநாயகன்
பலம் மிகுந்தவன்
பயமே அறியாதவன்
உண்மை எனக்குத் தெரியும்
என்னைக் காப்பாற்ற வந்தவள் எனது மகள்
நான் ஆகவேண்டும் என விரும்புவதை
எனக்கு காட்டுபவை
எனது மகளின் கண்கள்
எனது மகளின் கண்களில்
எல்லோரும் ஒன்று
இருள் அதில் ஒளியாகிறது
உலகம் அமைதியில் சிரிக்கிறது
தளர்ந்து விழும்போது எனது பலம்
நம்பிக்கையோடு இருப்பதற்கு
எனக்கிருக்கும் ஒரே காரணம்
எனது மகளின் கண்கள்
அவளது மென்மையான உள்ளங்கை
எனது விரல்களை பொதியும்போது
என் இதயத்தில் ஒரு புன்னகை பூக்கின்றது
எல்லாமே கொஞ்சம் தெளிந்து விடுகிறது
வாழ்க்கை இதுதான் என்று புரிந்துவிடுகிறது
முடியவில்லை என்று நான் சோர்ந்து போகும்போது
என்னைத் தாங்கி நிறுத்துபவை
எனது மகளின் கண்கள்
எல்லாம் முடிந்தது என்று நான் நினைக்கும்போது
புதிதாய் ஒன்றை தொடங்கி வைப்பவை
வெளிச்சம் என்னவென்று எனக்கு தொடர்ந்து சொல்பவை
நான் யார் என்பதின் பிரதிபலிப்பு
நான் யாராகப் போகிறேன் என்பதின் சிறு சித்திரங்கள்
எதிர்காலம் என்று ஒன்று இருப்பதை
எனது கண்களுக்கு காணவைப்பவை
எனது மகளின் கண்கள்
அவள் வளர்வாள்
என்னை விட்டுச் செல்வாள்
எப்படி என்னை அவள் உயிர் வாழவைத்தாள்
எப்படியெல்லாம் என்னை சந்தோஷப்படுத்தினாள்
அனைத்தும் உங்களுக்குப் புரியவரும்
நான் இல்லாமல்போன பின்
அப்போதும் நானிருப்பேன்
எனது மகளின் கண்களில்

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் நானும்



ஒரு ஊரில் ஒரு ஓநாய் இருந்ததாம்... அந்த ஓநாய்க்கு ஆட்டுக்குட்டிகளின் மாமிசம் ரொம்ப பிடிக்குமாம்... அதனால் அந்த ஓநாய் இறந்த ஒரு ஆட்டுக்குட்டியின் தோலை எடுத்து தன்மேல் போர்த்தி, மேய்ப்பன் இல்லாத நேரம் பார்த்து ஒரு ஆட்டு மந்தைக்குள்ளே புகுந்ததாம்... விபரம் புரியாத ஆட்டுக்குட்டிகளுக்கிடையே இணக்கமாக தங்கி அவற்றில் ஒவ்வொன்றையாக கொன்று தின்ன ஆரம்பித்ததாம்.... எங்கும் பாற்கடலென நிலவொளி பரவிக்கிடக்கும் ஓர் இரவில், பனி பெய்யும் மேகங்கள் தாழ்ந்திறங்கும் நேரத்தில் மேய்ப்பன் திரும்பி வந்தானாம். தனது ஆட்டுக்குட்டிகளின் எலும்புகளைப் பார்த்து கதறி அழுது, தான் பொறுப்பற்று விட்டுப் போனதாலேயே அந்த அப்பிராணிகள் உயிரிழந்தன என்று தவித்து, துயரமான ஒரு பாடலை பாடத்துவங்கினானாம். இரவின் ஆழ்ந்த நிசப்தத்தில் இடிமுழக்கம்போல் ஒலித்த அப்பாடலின் கனத்தில் பயந்து நடுங்கிய ஓநாய் அங்கிருந்து ஓடிப்போய் தலைமறைவுக்கு இடம் தேடியதாம்... இடமேதும் கிடைக்காமல் இறுதியில் அது மனிதனின் இதயத்தில் புகுந்து, அங்கேயே நிரந்தரமாக தங்கி விட்டதாம்...
காலம்காலமாக இருக்கும் ஒரு நீதிக்கதைக்குமேல் நான் போர்த்திய ஒரு கட்டுக்கதை இது. ஆறுவயதான என் மகளுக்கு இதை நான் சொல்லும்போது அவளுக்கே நன்றாகத் தெரிகிறது இது ஓநாய் குறித்தோ ஆட்டுக்குட்டி குறித்தோ மேய்ப்பன் குறித்தோ உள்ள கதை அல்ல என்பது! ஓநாயும் ஆடுகளும் ஆட்டுமந்தையும் நிலவொளி பரவிய அந்த இரவும் நிஜமாக இருக்கக் கூடியவைதான் என்றாலும், அவற்றின் வழியாக சொல்லப்படும் கருத்து அது எதுவுமல்ல என்பது ஒரு குழந்தைக்கே எளிதில் தெரிவது. ஒரு ஓநாய் ஆட்டுத்தோல் போர்த்தி மாறுவேடம் போடுமா? மேய்ப்பன் ஏன் ஆடுகளை அப்படி விட்டுப் போனான்? ஆடுகள் கொலை செய்யப்பட்டதைக் கண்டு அவன் ஏன் பாட்டு பாடினான்? ஏன் அவனால் அந்த ஓநாயை பிடிக்க முடியவில்லை? ஒரு ஓநாய் மனிதனின் இதயத்தில் புகுவது எப்படி? என்றெல்லாம் ஒருபோதும் என் மகள் கேள்வி கேட்க மாட்டாள்.
மாயை அல்லது பொய்த்தோற்றத்திற்கும் யதார்த்தத்திற்கும் இடையே நடக்கும் வினோதமான விளையாட்டுதான் தனக்கு பிடித்தமான திரை உத்தி என்று அகிரா குரொசாவா சொல்லியிருக்கிறார். தனது பல படங்கள் வழியாக அதை விளக்கியுமிருக்கிறார். அதீத யதார்த்தம் என்றோ மீ யதார்த்தம் என்றோ இந்த உத்தியை வகை வகுக்கலாம். இதில் கலைப்படங்கள், வணிகப்படங்கள் என்கிற பாகுபாடுகள் எதுவுமில்லை.

மேலோட்டமான காரண ஆய்வுகளுக்குப் பொருந்தாத, முரண்பாடாகத் தோன்றக்கூடிய உருவகங்களின் அணிவகுப்பு தான் அத்தகைய திரைப்படக் காட்சிகள். பாத்திரங்களின் மன ஓட்டங்களும் மனப் பிராந்திகளுமெல்லாம் அவற்றில் காட்சியாக்கமாக விரிகின்றன. படிமங்களாக, உவமைகளாக, குறியீடுகளாக கவிதையிலும் இலக்கியத்திலும் கையாளப்படும் இந்த உத்தியை, உலக சினிமாவின் சிறந்த ஆசான்களான பெர்க்மேன், புனுவேல் போன்ற பலர் எழுபதாண்டுகளுக்கு முன்பிருந்தே கையாண்டு வந்திருக்கிறார்கள். தமிழ் வணிக சினிமாவுக்குள் முதன்முதலாக ஆற்றலுடன் இதைச் சாத்தியப்படுத்திக் காட்டிய திரைப்படம் மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.  
மனிதனின் ஆழ்மன உணர்வுகளை காட்சிப்படுத்துவதற்கே தொடர்ச்சியாக முயன்ற  பெர்க்மேன் ஓநாயின் மணிநேரம் (Hour of the Wolf) என்று ஒரு படமே எடுத்திருக்கிறார்! ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற தலைப்பிலேயே அது ஒரு யதார்த்தப் படமில்லை என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார் மிஷ்கின். மிஷ்கினின் எந்தவொரு படத்தையுமே யதார்த்தப் படம் என்று சொல்ல முடியாது. யதார்த்தப் படங்கள் எடுப்பதில் அவருக்கு நாட்டமுமில்லை. யதார்த்தமும் நாடகப் பாணியும்  ஓங்கிய இசையும் நடன அமைப்பும் கூடியாட்டத் தன்மையும் இடை கலந்து வருபவை அவரது படங்கள். ஆனால் யதார்த்தப் படங்கள் என்று சொல்லப்படுபவையில் இங்கு பயன்படுத்தப்படும் யதார்த்தத்திற்கு முற்றிலும் புறம்பான ஷேக்ஸ்பியர் காலத்து நாடக உத்தியான மனக்குரல் (Mind voice) போன்றவற்றை மிஷ்கின் எப்போதுமே தவிற்கிரார்!
மிஷ்கின் குரொசாவாவின் அதி தீவிர ரசிகர். குரொசாவா பற்றி பேசுமிடத்தில் தன்னைப் பற்றி பேசுவதைக்கூட விரும்பாதவர். குரொசாவா, தர்காவ்ஸ்கி போன்றவர்களெல்லாம் மிக அரிதான ரத்தினக்கற்களைப் போன்றவர்கள் என்றும் அவர்களை ஒரளவுக்கு புரிவதற்கே நமக்கு இன்னும் பல பதிற்றாண்டுகள் தேவைப்படும் என்றும் சொல்பவர் அவர்! அவர்களின் தரத்திற்கு நம்மால் என்றைக்குமே படங்களை எடுக்க முடியாது என்பது மிஷ்கினின் கருத்து. அவரே ஒப்புக்கொள்வதுபோல் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் குறைகளற்ற படம் அல்ல. ஆனால் உலக சினிமாவின் அற்புத இயக்குநர்கள் வெகுதூரம் நடந்து சென்ற பாதையின் துவக்கத்தில், முதல் அடி எடுத்து வைப்பதற்கான மிஷ்கினின் முயற்சிதான் இப்படம்.
முன்முடிவுகள் எதுவுமே இல்லாமல் திரைப்படங்களை பார்க்கும் எளிய மனம் கொண்ட பார்வையாளர்களையும் உண்மையான சிந்தனைத்திறன் கொண்டவர்களையும் ஒரேபோல் கவர்ந்தது ஓநாயும் ஆட்டுக்குட்டியும். உலகம் முழுவதுமிருந்து பலதரப்பினைச் சார்ந்தவர்கள்  ஊடகங்களிலும் பொதுவெளிகளிலும் பதிவு செய்த கருத்துக்களும், தனிப்பட்ட முறையில் எனக்கு வந்த பல்லாயிரக்கணக்கான  மடல்களும் அழைப்புகளும் அதன் அழியா சாட்சியங்கள். குடும்பத்துடன் திரையரங்கில் வந்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பார்த்த இயக்குநர் பாலா என்னிடம் சொன்னார் “மிஷ்கின் அசாத்தியமான இயக்குநர். அவர் போன்று இன்னொருவர் இங்கில்லை. தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெரும் வரம் அவர் என்று!
கலைரீதியாக பெருமளவில் கொண்டாடப்பட்டு, ஏற்கத்தகுந்த வணிக வெற்றியையும் பெற்ற ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் பணியாற்றிய தருணங்கள் ஒவ்வொன்றும் என்னை மேலும் பணிவான, சுயநலமும் தற்பெருமையும் அற்ற மனிதனாக மாற்றியவை! யதார்த்தம் என்று நினைக்கக் கூடிய சூழல்களுக்குமேல் கட்டப்பட்ட அதீத யதார்த்தம்தான் இப்படம் என்பது போலவே இதன் படப்பிடிப்புக்கு நடுவே நிகழ்ந்த பல சம்பவங்களும் மிகுந்த கற்பனைத் தன்மையுடன் தான் இருந்தன!  
காவல் துறையின் குற்ற விசாரணைப் பிரிவில் அதிகாரியாக வரும் எனது பாத்திரம், ஆணையரின் அலுவலகத்தில் அவரிடமும் அவரது நண்பரான மருத்துவரிடமும் வாதிடும் காட்சிதான் முதன்முதலில் படமாக்கப்பட்டது. ஒரு பக்கத்துக்குமேல் வரும் வசனத்தை மனப்பாடம் செய்து ஒரே எடுப்பில் பேசவேண்டும்! அத்துடன் உணர்ச்சிகள் திடமாகவும் வலுவாகவும் வெளிப்பட வேண்டும்! காட்சிகளை எப்போதுமே நீளமாக எடுக்கும் மிஷ்கினின் சிக்கலான காட்சியமைப்பு வேறு! ஒன்று சரி வரும்போது எனக்கு இன்னொன்று தவறிவிடும். திரையில் இப்போதிருக்கும் காட்சியை விட சிறப்பாக அமைந்த சில எடுப்புகள் இருந்தன! ஆனால் அவற்றின் கடைசிப் பகுதிகளில் எனது முன் அனுபவமின்மையால் தவறுகள் நடந்து விட்டன! 62ஆவது எடுப்பு தான் திரையில் இப்போது நீங்கள் பார்க்கும் அந்த காட்சி! அதைப் படமாக்கிய பின்னர் மிஷ்கின் என்னைக் கட்டியணைத்தார். அன்றைக்கு என்னால் சாப்பிடவோ தூங்கவோ முடியவில்லை. சிபிசிஐடி லால் ஆக நான் என்னை உணரத் துவங்கியிருந்தேன்!
அந்த நாட்களில் நான் பாடக நடிகர் சந்திரபாபுவின் பாடல்களை கேட்ட வண்ணமே இருந்தேன். எனது வீட்டிலும் வாகனத்திலும் எப்போதும் சந்திரபாபு பாடல்கள் தான் ஒலித்துக் கொண்டிருந்தன. அப்பாடல்கள் ஒவ்வொன்றும் கேட்கும்போது அந்த மகா கலைஞனின் அலாதியான மேதமையும் அவரது துயரமான வாழ்க்கையும் என் மனதை அலைக்கழித்துக் கொண்டேயிருந்தன. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் கடைசிக் காட்சிகளில் வரும் அந்த கல்லறைத் தோட்டத்திற்குள்ளே படப்பிடிப்பிற்காக நுழையும்போது மிஷ்கின் என்னை ஒரு கல்லறையின் பக்கம் அழைத்து சென்றார். பதின்பருவத்தை எட்டிய அவரது மகளும் கூடவே இருந்தாள். மிஷ்கின் அக்கல்லறையத் தொட்டு முத்தமிட்டார். அப்போதுதான் நான் அதைக் கவனித்தேன். அது சந்திரபாபுவின் கல்லறை! அப்பா வணங்கும் ஒரு மாபெரும் கலைஞனின் கல்லறை இது. தொட்டுக் கும்பிட்டுக்கோஎன்று மகளையும் கும்பிட வைத்து என்னை அங்கே தனியாக விட்டுச் சென்றார் மிஷ்கின். என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. ஒரு மணிநேரத்துக்கும் மேல் சந்திரபாபுவைப் பற்றி யோசித்தபடியே கண்ணீருடன் நான் அங்கு நின்றுகொண்டிருந்தேன்.                  
அந்த கல்லறைத் தோட்டத்திற்குள் பல இரவுகளை நாங்கள் கழித்தோம். கல்லறைகளுக்குமேல் அமர்ந்து, அங்கேயே உண்டு, தாங்க முடியாத கொசுத்தொல்லைக்கு நடுவேயும் அவ்வப்போது எதாவது ஒரு கல்லைறைக்கு மேலே படுத்து கண்ணயர்ந்து...! இறந்து போனவர்கள் நம்மை எதுவும் செய்ய மாட்டார்கள். ஒரு இரவில் கல்லறைத் தோட்டத்திற்கு பின்னாலிருக்கும் புதர்கள் மண்டிய இடத்தில் மனிதர்களின் எலும்புகள் வீசப்பட்டிருப்பதைக் கண்டேன். புதிய புதைகுழிகள் தோண்டும்போது கிடைத்த பழைய மனிதற்களின் எலும்புகள்!
ஸ்ரீ நடிக்கும் கதாநாயகப் பாத்திரம், எனது உதவியாளனை அடித்து விழவைத்து எங்கள் துப்பாக்கிகளை பலவந்தமாக எடுத்து அங்கிருந்து தப்பிக்கும் காட்சி படமாக்கப்பட்ட இரவு மறக்க முடியாதது. முதலில் ஓநாயால் கட்டிப் போடப்பட்டிருக்கும் ஸ்ரீயை நான் கட்டறுத்து விடவேண்டும். அதற்கு சற்று முன்புதான் அங்கேயே கண்தெரியாத ஒரு பாத்திரத்தை நான் தெரியாமல் சுட்டுக் கொல்கிறேன். அந்த காட்சியின் உணர்வில் திளைத்து நிற்கிறார் மிஷ்கின்!

ஸ்ரீயின் கைக்கட்டை அறுக்க என்னிடம் கொடுத்த கத்திக்கு கூர்மையே இல்லை! காட்சி படமாக்க ஆரம்பித்துவிட்டார்கள்! பாலாஜி ரங்காவின் கேமரா என் பக்கம் வரும் முன் நான் ஒரு உதவி இயக்குநரிடமிருந்த தொட்டால் வெட்டும் ஒரு சிறிய வெட்டுச் சாதனத்தை வாங்கினேன். எடுப்பின்போது ஸ்ரீயின் கை அறுந்திடக்கூடாது என்ற கவனத்தில் எனது விரலை நான் மோசமாக அறுத்து விட்டேன். கொட்டிய ரத்தம் காட்சி எடுப்பை சிக்கலாக்கியது. படப்பிடிப்பு தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அன்று எனக்குப் பிறந்த நாள்!
தனது பாத்திரத்திற்கு வலிமை சேர்க்க ஸ்ரீ எடுத்த முயற்சிகள் அலாதியானது. பெரும்பாலான நேரங்களில் சாப்பிடாமல், தண்ணீர் கூடக் குடிக்காமல் அப்பாத்திரத்தின் மனநிலையிலேயே வாழ்ந்துகொண்டிருந்தார். மிஷ்கின் சொல்லிக்கொடுக்கும் விஷயங்களை கனக் கச்சிதமாக உள்வாங்கி நடிக்கும் ஆற்றலை எப்போதுமே வெளிப்படுத்தினார். அப்பாத்திரத்தின் முழுநிறைவுக்காக தனது உடலையும் மனதையும் மிகவும் வருத்தினார். ரயில் பாலத்திலிருந்து கயிற்றில் தொங்கி கீழிறங்கும் காட்சியில் கையில் அணிந்திருந்த உறை கிழிந்து அவரது உள்ளங்கையிலிருக்கும் தோல் உரிந்துபோனது. ஆரம்பக் காட்சிகளில் பலமுறை தன்னை விட இருமடங்கு எடை கொண்ட மிஷ்கினை தோளில் தூக்கியெடுத்து நடந்து படிக்கட்டுகள் ஏறினார்!
மிஷ்கினின் வலங்கையான இணை இயக்குநர் புவனேஷ் கண்தெரியாத இருபது பேரை அழைத்து வந்தார். அவர்கள் வரும்போது ஒரு மூலையில் அமர்ந்து அன்று அவர்கள் பாடி நடிக்க வேண்டிய பாடலின் வரிகளை எழுதிக்கொண்டிருந்தார் மிஷ்கின். அரைமணி நேரத்தில் மேற்கத்திய செவ்வியல் இசையமைப்பாளர் அண்டோனின் ட்வோர்ஷாக் அமைத்த ஸ்டபாட் மாடெர் எனும் இசையை மையமாக வைத்து போகும் பாதை தூரமில்லை, வாழும் வாழ்க்கை பாரமில்லைஎனும் பாடலை உருவாக்கினார். அது அந்த பார்வையற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கத் துவங்கினார். அவர்களில் யாருமே நன்றாகப் பாடக்கூடியவர்கள் அல்ல என்பதை உணர்ந்த பின்னரும் மிகுந்த பொறுமையுடனும் நேசத்துடனும் அவர்களுக்கு சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தார்.
அப்போது மிஷ்கினிடம் நான் பேட்ரிக் ரொசாரியோவைப் பற்றிச் சொன்னேன். அவரும் கண் பார்வையற்றவர். அக்கார்டியன் எனும் இசைக் கருவியை மிகச்சிறப்பாக இசைக்கக் கூடியவர். எனது இசையின் தனிமை புத்தக வெளியீட்டு விழாவில் ஆரம்ப இசை வழங்கியபோது மிஷ்கினும் அவரை பார்த்திருக்கிறார். உடனடியாக அவரை அழைத்து வரும்படி சொன்னார். அவர் வந்துசேரும் வரை காத்திருந்து அந்த கண்தெரியாதவர்களின் பாடலுக்கு அக்கார்டியன் வாசிப்பவராக அவரையும் நடிக்க வைத்து, அவரது இசையின் துணையுடன் அக்காட்சியை பதிவு செய்தார். பின்னர் குரல் பதிவின்போது பேட்ரிக்கை ஒலிப்பதிவு கூடத்திற்கு வரவழைத்து அப்பாடலின் அசல் வடிவத்தைப் பதிவு செய்தார். திரையில் தனது நடிப்பை ‘பார்ப்பதுமிகவும் சந்தோஷமாகயிருந்தது என்று பேட்ரிக் பின்னர் என்னிடம் சொன்னார்.
வடபழனியில் உள்ள ஒரு மாபெரும் அடுக்குமாடி அங்காடித் தொகுதியின் வாகனங்கள் நிறுத்தும் நாங்காவது அடித்தளத்தில்தான் படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் பதிவு செய்யப்பட்டன. அங்கு பதிவான அந்த சண்டைக் காட்சியின்போது மிஷ்கினின் கால்கள் பல இடத்தில் காயம்பட்டன. அக்கால்களை வைத்துக்கொண்டே அந்த பெண்மணியையும் குழந்தையையும் தோளில் தூக்கி ஓடிக்கொண்டேயிருந்தார்! படப்பிடிப்பின் கடைசி நாளில் மிஷ்கின் நடித்த ஓநாய் பாத்திரம் இறந்துவிழும் காட்சி படமாக்கப்படும்போது கார்த்தி எனும் குழந்தையாக நடித்த சைதுப் பாப்பா மயக்கமாகி விழுந்தாள். அந்த காட்சியின் உக்கிரம் அக்குழந்தையின் மனதை அவ்வளவு பாதித்திருந்தது. காவல் துறையினராக நடித்துக் கொண்டிருந்த சில நண்பர்களும் மயக்கம்போட்டு விழுந்தனர்!
ஒரு சாதாரண திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் வசதிகளோ பாதுகாப்புகளோ எதுவுமில்லாமல் எடுத்து முடிக்கப்பட்ட படம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்! மிஷ்கின் பாயும் மின் ரயிலிலிருந்து கீழே குதிக்கும் காட்சி எடுக்கப்பட்டதும் மிகக்குறைவான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தான். அன்றும் தனது மகளுடன் படப்பிடிப்புக்கு வந்தார் மிஷ்கின். அக்காட்சிகளில் நான் இல்லாதபோதிலும் என்னையும் வரவழைத்தார். இன்றிரவு முழுவதும் என்னுடன் இருங்கள் என்றார். பாயும் ரயிலிலிருந்து குதித்து அவர் கீழே விழப்போகும் இடத்தில் தடுப்பு மெத்தைகள் போடப்பட்டிருந்தன. ஒத்திகைக்காக ரயில் ஓட்டப்பட்டபோதுதான் ரயிலின் அசுர வேகம் எனக்கு விளங்கியது. அந்த வேகத்தில் ரயிலிலிருந்து குதித்தால் தடுப்பு மெத்தைகளின்மேல் தான் அவர் விழுவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை!
நாலாபக்கமும் துருத்தி நிற்கும் கனமான இரும்பு தூலங்களும் உத்தரங்களும்! அதைச்சுற்றி கடும் காரைச் சுவர்கள். ஒரு நொடியில் எதுவும் நடக்கக் கூடும். தனது கலையில் யார் அறிவுரைகளையுமே ஏற்றுக்கொள்ள மாட்டார் மிஷ்கின் என்பதை நன்கு தெரிந்திருந்தும்  பயிற்சி பெற்ற நகல் நடிகரை வைத்து எடுக்கலாமே என்று பலவீனமான குரலில் சொன்னேன். அதற்கு அவர் சிரித்தபடியே இதைச் சொல்லவா உங்களை வரச் சொன்னேன்? எனக்கு எதாவது நடந்தாலும் என் மகளுக்கு நீங்களெல்லாம் இருக்கிறீர்கள் என்ற மன நிம்மதிக்காகத் தானேஎன்று சொல்லி ரயிலேறினார். சில நொடிகளில் அதிவேகத்தில் பாயும் ரயிலிலிருந்து அவர் கீழே குதித்தார். எனது மனம் ஒருகணம் உறைந்துபோனது. மெத்தை மேல் விழுந்து எழுந்து நின்றார். ஆபத்தான குதிப்புகளை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறார் மிஷ்கின். பெரும்பாலும் அவர் தடுப்பு மெத்தைகளின்மேல் விழுவதேயில்லை. இருந்தும் எழுந்து வந்துகொண்டேயிருக்கிறார்... அடுத்த குதிப்புக்கு ஆயத்தமாக... ஓநாய்க்களின் நிழல்படாத இதயத்துடன்....

சனி, 15 பிப்ரவரி, 2014

Friday, February 14, 2014

முடிந்தது :-(

மின் தகன மேடையில் வாத்தியாரின் உடல் கிடத்தப்பட்டு, மார்பில் கற்பூரத்தைக் கொளுத்தி வைக்கவும் நா.முத்துக்குமாரிடம் கதறத் தொடங்கினேன்.

‘முத்து! ஸாருக்கு சுடும்டா. வேண்டாம்டா’.

அவரது டிரேட்மார்க் ஃபிடம் கேஸ்ட்ரோ தொப்பியுடன் சேர்த்து அவரது தலையைத் தொட்டு வணங்கிய அடுத்த நொடியில் சரேலென வாத்தியாரை உள்ளே இழுத்துக் கொண்டது, அந்த யந்திரம். கதறலும், கேவலுமாக அழுது மயங்கிச் சரிந்தேன். இயக்குனர் பாலாஜி சக்திவேல் தாங்கிக் கொண்டார். யார் யாரோ என்னைக் கடத்தி அங்கிருந்து நகர்த்தினர்.

‘நீங்களே இப்பிடி கண்ட்ரோல் இல்லாம அழுதீங்கன்னா என்னண்ணே அர்த்தம்?’

வெற்றி மாறன் கடிந்தான்.

‘நீங்க அழுது எங்க எல்லாரயும் அழ வைக்கிறீங்க. மொதல்ல இவர பத்திரமா வெளியெ கூட்டிட்டுப் போங்க.’

யாரிடமோ சத்தமாகச் சொன்னான், இயக்குனர் ராம்.

’வாங்க சுகா’. இயக்குனர் சசி கைப்பிடித்து வெளியே கொணர்ந்தார்.

‘சுகா! இந்தாங்க. கொஞ்சம் மோர் சாப்பிடுங்க’.

இயக்குனர் விக்ரமன் கொடுத்தார்.

‘!என்னண்ணே இது? சின்னப் புள்ள மாதிரி அழுதுக்கிட்டு?’

தோளைப் பிடித்து அணைத்துச் சொல்லும் போதே அடக்க முடியாமல் அழுது என் மார்பில் சாய்ந்தான், இயக்குனர் சீனு ராமசாமி.



மாலையில் ராஜா ஸாரிடமிருந்து ஃபோன்.

‘என்னய்யா? பத்திரமா அனுப்பி வச்சுட்டீங்களா?’

பதில் சொல்லாமல் அழுதேன்.

புரிந்து கொண்டு மறுமுனையில் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு,

‘சரி சரி. நாளைக்கு வா’ என்றார்.

நாளைக்குப் போய்ப் பார்க்க வேண்டும். இனி அவர்தானே ’வாத்தியார்’!


பாலுமகேந்திரா

எந்த புள்ளியில் எங்கள் நட்பு இணைந்தது என்று ஞாபகப்படுத்த முடியவில்லை. பூவின் மலர்தலை எந்த செடி நினைவில் வைத்திருக்கும்.
கலைஞர்களும், படைப்பாளிகளும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற பதாகையின் கீழ் குவிந்து, சென்னை பெரியார் திடலில் கருத்து சுதந்திரம் வேண்டி உணர்வுக் குவியாகத் திரண்டிருந்த கூட்டத்தை விலக்கி கம்பீரமாக பாலுமகேந்திரா என்ற அக்கலைஞன் மேடையேறுகிறார். மௌனம் மேலும் நுட்பமாகிறது. வெளிர்நீல ஜீன்சும், வெள்ளை சட்டையும், தன் உடலில் ஒன்றாகிப் போன தொப்பியோடும் யாருடைய அனுமதிக்கும் காத்திரமால் மைக் முன்னால் நின்று பேச ஆரம்பிக்கிறார்.

''என் கேமராவை என் உயிராக மதிக்கிறேன். அதை ஒரு ஆக்டோபஸ் சுற்றிக் கொண்டிருப்பதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது. அது என் ஆன்மாவை இயக்க்கவிடாமல் அடைத்துகொண்டிருக்கிறது.''

இதோ இந்த புள்ளிதான் அவர் என்னுள் நுழைந்ததென இன்று மீட்டெடுக்க முடிகிறது. ஒரு அரசை எதிர்த்து கம்பீரமாய் ஒலித்த ஒரு கலைஞனின் குரல் பல வருடங்களை பின்னுக்குத் தள்ளி இன்றும் என்னுள் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. அதன் பிறகான நாட்களில் எங்கள் நட்பு கண்ணி இறுக்கமானது. அவரையும், அவர் படைப்புகளையும் நெருக்கமாக்கி கொண்டது மனது.

நேற்று வீட்டில் எல்லோரும் உட்கார்ந்து இதுவரை பார்க்ககிடைக்காத 'யாத்ரா' பார்க்க ஆரம்பிக்கிறோம். மம்முட்டியும், சோபனாவும் போட்டிபோட்டு நடித்திருக்கிறார்கள். ஆயும் தண்டனை முடிந்து வெளியே வரும் உண்ணிக்கிருஷ்ணனுக்கு (மம்முட்டி) நம்பிக்கையின் ஏதோ ஒரு துளி மட்டும் ஒட்டியிருக்கிறது. துளசியின் (சோபனா) மலை கிராமத்தை நோக்கி செல்லும் ஒரு டூரிஸ்ட் வேனில் பயணிக்கிறான். பயணங்கள் எப்போதும் பழைய ஞாபகங்களை கோருகின்றன. உன்னியின் கடந்த கால துயரம் அந்த சகப்பயணிகளை துக்கப்படுத்தி கண்ணீரில் நனைய வைக்கிறது. ஒரு குழந்தை தன் தேவனிடம் அவனின் காதலுக்காக இறைஞ்சு மன்றாடுகிறது.

''தான் விடுதலையாகி வரும் போது, நாம் எப்போதும் சந்திக்கும் அந்தக் கோவிலின் முன் நீ ஒரு ஒற்றை தீபத்தை ஏற்றி வைத்திருந்தால் இன்றும் எனக்காகவே நீ... என இறங்கிக் கொள்கிறேன். ஒரு வேளை தீபமற்ற கோவிலை என் வண்டி கடக்கையில் என் பயணம் தொடரும் துளசி'' அவன் எழுதிய கடிதங்களின் வரிகளை மீண்டும் ஒரு முறை வரிசைப்படுத்துகிறான்.

இருள் கவிந்துவிட்ட மாலை அது.

இதோ இந்த திருப்பம்தான் துளசியின் ஊர். ஊரின் முகப்பில் கிருஷ்ணன் கோவில். மௌனம், எல்லோர்க் கண்களும் அந்த ஒற்றை தீப ஒளியை தரிசிக்க நீள்கிறது. அவர்களது பார்வை கோவில் முன் மட்டுமல்ல, ஊர், வயல்வெளிகள், காடு மலை எல்லா இடங்களும் ஏற்றப்பட்ட தீப ஒளியில் ஒளிர்ந்து நிறைந்திருக்கிறது.

ஒரு மகத்தான கலை மனதுக்கு மட்டுமே இப்படைப்பின் உச்சம் சாத்தியம். பாலுமகேந்திரா என்ற கலைஞனின் கலை ஆளுமைக்கு இப்படத்தின் முடிவே சாட்சியம். yellow ribben என்ற ஹங்கேரியக் கவிதையே இப்படத்திற்கான உந்துதல் என்கிறார்.

ஒரு கவிதையை மூன்று மணி நேர உன்னத சினிமாவாக செதுக்கத் தெரிந்த கைகள் அவருடையது.

என் மனைவி ஷைலஜாவை தன் மகளாக மனதளவில் ஸ்வீகரம் எடுத்துக் கொண்டவர். தன் சந்தோஷம், துயரம், தனிமை , வெறுமை இப்பொழுதுகளை அப்படியே எங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டுமென நினைப்பவர். பல நேரங்களில் அவைகள் தொலைபேசி வழியாகவும், சிலநேரங்களில் நேரடியான வருகையின் மூலமாகவும் அவ்வுணர்வுகளை நாங்கள் ஸ்வீகரித்துள்ளோம்.

ஒரு காதலியின் மடியில் திருட்டுத்தனமாய் மரத்தடியில் படுத்துக் கொள்ளும் அவருடனான என் திருவண்ணாமலை நாட்கள். யாருமற்று நானும் அவரும் மட்டுமே எங்களுக்கு எங்களுக்கென்று அமைத்துக் கொண்ட உரையாடல்கள் சுவரசியமானதும், பெருமிதமானதும் யாருக்கும் வாய்க்காததுமானவைகள்.

ஒரு தொலைபேசி செய்தியினூடே வந்திறங்கிய இரண்டாண்டுகளுக்கு முந்தைய மழைத்தூறல் மிக்க மாலையை இன்றும் ஈரமாகவே வைத்திருக்கிறேன்.

அவர் தங்கியிருந்த விடுதிக்கு அடுத்த நாள் மாலை வரச்சொன்னார். மலையின் முழு வடிவமும் தெரியும் அந்த 102-ம் அறையின் பால்கனி அவருக்கு பிடித்தமான இடம். எதிரெதிரே போடப்பட்ட பிரம்பு நாற்காலியில் மௌனம் காத்து ஒரு சொல்லின் ஆரம்பம் வேண்டி தவமிருக்கிறோம். ஆவி பறக்கும் green tea ஆறிக் கொண்டிருக்கிறது. 'சொல்' எத்தனை மதிப்புமிக்கது, கிடைப்பதற்கறியதுமென நான் உணர்ந்த கணம் அது.

நான் அடுத்தபடம் பண்ணப்போறேன் பவா. அந்தக் கதைக்கான பகிர்தல் இந்த மாலை. ஒரு பையனுக்கும் அவன் சித்திக்கும் உடல்ரீதியான பகிர்தலே இப்படம். கதை சொல்கிறார். இலங்கையில் கழிந்த தன் பால்யத்தில் கரைகிறார். பனைமர மறைவுகளில் நின்று தான் பார்த்த காட்சிகளை அடுக்கிறார். தன் ஆஸ்தான ரோல்மாடல் ஒருவரின் கள்ளத்தனமான ஸ்நேகிதியைப் பற்றி சொல்லி சிரிக்கிறார். சினிமாவும், நிஜமும், பால்யமும் கலந்த கலவைகளாளானது அந்த இரண்டு மணி நேரம்.

நான் முற்றிலும் கரைந்து போயிருதேன். பேச வார்த்தைகளற்று தூறலில் நனையும் மலையின் திசையை நோக்கி கண்களைக் குவித்திருத்தேன்.

’’சொல்லுங்க பவா''

''சித்தியுடனான உறவை தமிழ் மனது ஏற்காது சார்''

''நல்ல Treatment-ல?''

''இல்ல சார், ஒரு வேலை ஒவ்வொரு மனிதனுக்கும் கூட அப்படி ஒரு ரகசியம் இருந்தாலும், தன் ஆழ்மனதின் ரகசியம் திரையில் தெரிவதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியாதுன்னு நெனைக்கிறேன்.''

''ஏன், ஏன், தன் உண்மைகள் படைப்பாகும் போது அதை அவனே நிராகரிக்கணும், 'மூன்றாம்பிறை' ஸ்ரீதேவியை கமல் எங்கிருந்து அழைச்சிட்டு போவார்னு ஞாபகப்படுத்துங்க பாக்கலாம்?''

மீட்டெடுக்க முடியாமல் திணறியதை ஒரு நொடியில் உணர்ந்தவர்,

''ஒரு விபச்சார விடுதியிலிருந்து’’ ஆனா அது உங்களுக்கு மட்டுமல்ல, படம் பார்த்த யாருக்கும் ஞாபகம் இருக்காது, ஏன்னா படத்தோடு Treatment-ல அது காணமல் போயிடுது''

ஆனாலும் என்னால் அவரோடு உடன்படமுடியலை. அழுத்தமான கைப்புதைவுகளிடையே அவ்விரவில் தனித்தனியானோம்.

அதற்கடுத்த பத்து நாட்களும் ஒரு பித்தேறிய படைப்பு மனநிலையோடு அவருக்குள் ஏறியிருந்த புதுப்புது தர்க்கங்களுக்கு விடை தேடி திருவண்ணாமலையில் எங்கள் வீடு, அருணை ஆனந்தா ஹோட்டல், வம்சி புக்ஸ் கடை என்று அலைந்து கொண்டிருந்தார்.

முடிவுகளின்றி முடிந்தது அப்பயணம்.

கருங்கற்களால் நாங்கள் கட்டி முடித்த எங்கள் வீட்டின் திறப்பு விழாவிற்கு வந்திருந்த போது மிகுந்த மௌனம் காத்தார். எல்லா நண்பர்களும் வீட்டின் தரையில் உட்கார்ந்து 'கரிசல் குயில்' கிருஷ்ணசாமியின் பாட்டிற்கு எங்களை ஒப்புக் கொடுத்திருந்தோம். என் வீட்டின் ஒரு மூலையில் மூன்று மணி நேரத்திற்கும் மேல் அசையாமல் உட்கார்ந்து தன் நினைவுகளை மீட்டெடுத்துக் கொண்டிருந்த மிச்சம் இன்றும் என்னுள் நிற்கிறது. பாடல்களின் இடைவெளியில் உட்கார்ந்தவாறே மிக மென்குரலில் நம்மோடு ரகசியமாய் உரையாடுவதைப்போல பேசினார்.

நான் என் மகளாக ஸ்வீகரித்துக் கொண்ட என் மகள் ஷைலுவும், என் மாப்பிள்ளை பவாவும் கட்டியுள்ள இச்சிறு கூடு எனக்கு என் அம்மாவின் நினைவுகளை அலைகழித்துக் கொண்டிருந்தது. என் அம்மா ஒரு அற்புத மனுஷி. என் அம்மா இல்லாத அப்பா வெறும் பூஜ்யம். கலையும், இசையும், படைப்பும் நிறைந்து அம்மாவின் ஆகிருதி அவள் ஒரு வீடு கட்ட ஆரம்பித்தவுடன் அது ஒவ்வொன்றாய் உதிர ஆரம்பித்தது. நிறைவடையாத அவ்வீடு அம்மாவின் அத்தனை கலாபூர்வங்களையும் சிதைத்திருந்தது. அம்மாவின் நிறைவேறாத அக்கனவே என் 'வீடு' ஆனால் என் மகளின் நிறைவடைந்த இவ்வீடு அவளின் சிருஷ்டியை அப்படியே காப்பாற்றியுள்ளது''

எவ்வளவு கவித்துவம் ததும்பும் சொற்கள் இவைகள். இன்றளவும் தன் ஒவ்வொரு நொடியின் இடைவெளிகளையும் கவித்துவத்தால் நிரப்பத்துடிக்கும் ஒரு கலை ஆளுமை.

இந்திய சினிமாவின் தனிப்பெரும் ஆளுமை அவர்.

ஒரு நாள் அதிகாலை என்னை தொலைபேசியில் அழைக்கிறார். ''பவா நேற்று ஒரு திரைப்பட விழாவில் என் 'வீடு' திரையிடப்பட்டது. பார்வையாளர் வரிசையில் உட்கார்ந்து படம் பார்த்தேன். நேற்று எடுத்த மாதிரி அத்தனை புதுசாயிருந்தது. காலத்தின் முன் தன் படைப்பு உதிர்ந்துவிடாமல், முன்னிலும் அதிக கம்பீரத்தோடு எழுந்து விஸ்வரூபமெடுப்பதை பார்க்கும் ஒரு படைப்பாளிக்கு உரிய பெருமிதம் இது.

''சார் நீங்க.....''

''நான் வார்த்தை கிடைக்காமல் தடுமாறுகிறேன். அவரே கோடிட்ட இடத்தை நிரப்புகிறார்.''

''நான் புலி பவா, புலியின் உடல் கோடுகளை அது செத்த பின்னாலும் அழிக்க முடியாது''

- நாளை எழுதுகிறேன்...

பாலுமகேந்திரா பாராட்டிய கதை!

அன்பு நண்பர் கல்யாண் அவர்களுக்கு...

தாங்கள் ஆனந்த விகடனில் எழுதிய ‘அப்பாவுக்கு ஒரு
இ-மெயில் ‘ என்ற சிறுகதை படித்தேன். அந்தக்கதை என்னுள் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து வெளிவர பல நாட்களாயிற்று. அற்புதமான படைப்பு.

உள்ளடக்கத்தை உன்னதப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட உருவம்... அதன் இயல்புத் தன்மை... அதன் கம்பீரமான எளிமை... கதையாக்கத்தில் கையாளப்பட்டிருக்கும் உத்தி... இவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து, ஓர் உன்னதமான கலைப்படைப்பைச் சாத்தியமாக்கியிருக்கின்றன. அப்பாவைப் பற்றிய ஆழமான உணர்வுகளை எந்தப் பிரயத்தனமுமின்றி வெகுஇயல்பாக வெளிப்படுத்த உங்களால் முடிந்திருக்கிறது.

இது ஒரு யுனிவர்சல் தீம் என்பதால் இந்தக் கதை பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படலாம்.

வாழ்த்துக்களுடன்,
பாலுமகேந்திரா

சிறுகதை: அப்பாவுக்கு ஒரு இ-மெயில் - கல்யாண்குமார்
(ஆனந்தவிகடனில் முத்திரைக்கதையாக ரூ5,000 பரிசுபெற்ற எனது சிறுகதை)

அப்பாவிடமிருந்து வாரம் தவறாமல் ஒரு தபால் கார்டு வந்துவிடும். விஷேசமான செய்திகள் ஏதுமில்லையென்றாலும் பொதுவான் நலம் விசாரிபும், ‘இப்போது உன் வேலை விஷயம் எப்படியிருக்கிறது? புதிதாக கதை எதுவும் எழுதினாயா? என்று ஒரு நல்ல நண்பனைப் போல அக்கறையான விசாரிப்புகளும் இருக்கும். அவர் மரணம்கூட என்னைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. ஆனால் அவரிடமிருந்து இனிமேல் கடிதங்கள் வரவே வராது என்பதுதான் அவரின் இழப்பைவிடக் கொடுமையானதாக இருந்தது.

யாரிடமிருந்து கடிதம் வந்தாலும் உடனே அதற்குப் பதில் எழுதி அடுத்த தெருவிலிருக்கும் தபால் ஆபீஸுக்குப் போய் தானே தன் கையால் போஸ்ட் செய்வதில்தான் அவருக்குத் திருப்தி. அதுவும் நான் கடிதம் எழுதிவிட்டால் உடனுக்குடன் பதில் வந்துவிடும். சமயத்தில் சொல்ல வேண்டிய விஷயம் சற்றுப் பெரிதாக இருந்தால்கூட இன்லேண்ட் லெட்டரிலோ அல்லது ஒரு பேப்பரில் எழுதி, கவரில் வைத்தோ அனுப்ப மாட்டார். இரண்டு கார்டுகள் சேர்ந்தாற்போல் வரும். அதில் ஒரு கார்டில் 1 என்றும் அடுத்ததில் 2 இரண்டு என்றும் எண்ணிட்டு வட்டமடித்திருப்பார் – சிவப்பு மையால்.

எப்போதுமே அப்பாவிடம் நிறைய கார்டுகள் இருக்கும். நான் எட்டாவது படிக்கிறபோதே என்னைவிட்டு சில கடிதங்களை எழுதச் சொல்வார். அவர் சொல்லச் சொல்ல நான் எழுத வேண்டும். விஷயமிருக்கிறதோ இல்லையோ, ‘உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு அப்பப்ப ஒரு நாலுவரி எழுதிப் போடறதுல என்னாகிடபோவுது’ என்பார். நான்கூட ஒருநாள் அவரைக் கிண்டலடித்திருக்கிறேன்...’’இப்படி அடிக்கடி கடிதம் எழுதறதால, என்ன பெருசா எழுதியிருக்கப் போறார்னு படிக்காமலே குப்பைக் கூடையிலே போட்டுடப் போறாங்க..’’ என்று!

‘’ அப்படி என்மேல மதிப்பு மரியாதை இல்லாத பயலுகளுக்கெல்லாம் நான் லெட்டர் போட்டதேயில்லை..’’ என்பார்.

நிஜம்தான். அப்பா இறந்தபோதுதான் அதை நான் உணர்ந்தேன். அவரின் மரணம் பற்றி துக்கம் விசாரிக்க ஒரு மாதம் கழித்து வந்தவர்கள்கூட அவர் போடும் கடிதங்கள் பற்றி சிலாகித்துப் பேசி ‘’ இனி யார் எங்களையெல்லாம் அக்கறையாய் விசாரித்து லெட்டர் போடப்போறாங்க..?’’ என்று ஆத்மார்த்தமாக வருத்தப்பட்டுக் கொண்டது என்னை மிகவும் சங்கடப்படுத்தியது. அன்றைக்கு அப்பாவிடம் அப்படிக் கிண்டலாக பேசியிருக்கக் கூடாதோ என்று தோன்றியது. அவர் எழுதிய கடிதங்களைப் பத்திரப்படுத்தி வைத்திருப்பதாக சிலர் சொன்னபோதுதான் அதுவரை உள்ளுக்குள்ளேயே அழுது கொண்டு இருந்த அம்மாகூட பெருங்குரலெடுத்து அழுது தீர்த்தாள்.

சென்னைக்கு வந்தபுதிதில் ஒரு இலக்கியப் பத்திரிக்கையில் நூற்றைம்பது ரூபாய் சம்பளத்தில் வேலையில் இருந்தபோது அப்பா எழுதிய கார்டுகள் மட்டும் சுமார் முன்னூறைத் தொடும். ‘உன்னுடைய கதை வந்த ‘கணையாழி’ புத்தகம் இங்கே பஸ் ஸ்டாண்ட் கடையிலேகூட கிடைக்கவில்லை. முடிந்தால் தபாலில் அனுப்பி வை. புக்போஸ்டில் அனுப்பினால் போதும். அதிகம் சிரமம் எடுத்துக் கொள்ளாதே’ என்கிற அவரது கடித வரிகள் இன்னும் மனசிலிருக்கின்றன.

பள்ளி நாட்கள் முடிந்து கதை கவிதை என்கிற பெயரில் ஒரு குயர் நோட்டுகளைத் தீர்த்துக் கொண்டிருந்த நாட்கள். பக்கத்துவீட்டு ஜெயாதான் கவிதையின் மையநாயகி. கடைசிவரை அவள் என்னைக் கண்டுகொள்ளவேயில்லை என்பது தனியொரு சோகக்கதை! அதைவிடக் கொடுமை என்னவென்றால், என்மீது ஒரு மரியாதை ஏற்படவும் என் தனித்துவத்தைக் காட்டவும் ஒருநாள் ‘கண்ணதாசன் கவிதைகள்’ புத்தகத்தை அவளிடம் படிக்கக் கொடுத்தேன். படித்துவிட்டு அதில் சில காதல் கவிதைகளில் நான் அடிக்கோடிட்டு இருப்பதைப் புரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக எனக்குப் பதில் கொடுப்பாள் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் நடந்தது என்ன தெரியுமா? புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தவள், ‘’படிக்க எதாவது கதைப்புத்தகம் கொடுப்பீங்கன்னு பாத்தா, எதோ செய்யுள் புத்தகத்தைக் கொடுத்திருக்கீங்களே?’’ என்றாள்.

இதுவே ஒரு ஆரம்பக்கட்ட கவிஞனுக்கு மரண அடியாக இருந்தது. என் ப்ரிய நாயகி இப்படி ஒரு ஞான சூன்யமாக இருப்பாள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அந்த சோகத்திலேயே பல கவிதைகளை எழுதிக் குவித்தேன். கவிதைகளைத் தொடர்ந்து சிறுகதைகள். எப்படியோ ஒரு எழுத்தாளன் உருவாகிவிட்ட தீர்மானத்தோடு அந்த சோகத்திலும் ஒருவித திமிர் சேர்ந்து, சக நண்பர்களிடம் அவர்களுக்குப் புரியாத சில உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரபல எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்லி அசர வைத்தேன். அவர்கள் என்னைப் பிரமிப்போடு பார்ப்பதில் உள்ளூர ஒரு சந்தோஷம். ஒருவித மமதை கலந்து ஊருக்குள் சுற்றிக் கொண்டிருந்த நாட்கள் அவை. கையெழுத்துப் பத்திரிக்கையும், தினசரி பேப்பர்களின் ஞாயிறு பதிப்புகளில் அவ்வப்போது வெளிவரும் கவிதைகளும் கொஞ்சம் தெம்பூட்டிக் கொண்டிருந்தன.

கல்லூரிப் போக விருப்பம் இல்லை என்று சொன்னதும் அப்பா எந்த அதிர்ச்சியும் காட்டவில்லை. ‘’பிறகு?’’ என்றார். சென்னைக்குப் போய் எதாவது பத்திரிக்கை ஆபீஸில் வேலைக்குச் சேர்ந்து நிறைய கதை கட்டுரையெல்லாம் எழுதணும் என்று நான் சொன்னதும் எதிர்ப்பு சொல்லாமல் ஆமோதித்தார். அம்மாதான் பலத்த எதிர்ப்பைக் காட்டினாள். ‘’ஆசைப்படறான். போயிட்டுதான் வரட்டுமே, என்ன ஆகிடப்போகுது? நாளைக்கு உன் புள்ள ஒரு எழுத்தாளனா, பத்திரிக்கை ஆசிரியனா வந்து பிரபலமான உனக்குத்தானே பெருமை?’’என்று அம்மாவை சரிக்கட்டினார். ரயிலுக்கும் ரூம் எடுத்துத் தங்கவும், இரண்டு மாத செலவுக்கும் என்று ஒரு கணிசமான பணமும் அனுப்பிய அப்பா வேறு யாருக்குமே அமைந்திருக்க மாட்டார்கள்.

தினசரிகளில் வெளிவந்திருந்த ஒரு சில கவிதைகள்தான் அப்போதைக்கு எனக்கு சகலவிதமான சர்டிபிகேட்டுகள்! அங்கேயிங்கே அல்லாடி கடைசியில் நடையாய் நடந்த காரணத்துக்காக ‘கணையாழி’ என்ற ஒரு சிறுபத்திரிக்கையில் பரிதாபப்பட்டு எனக்கு வேலை போட்டுக் கொடுத்தார்கள். வந்திருக்கிற கதைகளையெல்லாம் படித்து அதன் கதைச்சுருக்கத்தை ஒரு சின்ன பேப்பரில் எழுதி அதை டெல்லியில் எதோ ஒரு ஆங்கிலப்பத்திரிக்கையில் பெரிய பொறுப்பிலிருந்த கணையாழியின் ஆசிரியருக்கு தபாலில் அனுப்ப வேண்டும். அவர் அதிலிருந்து சில கதைகளை அந்த மாத இதழுக்குத் தேர்வு செய்து அனுப்பி வைப்பார். மொத்த வேலையும் ஒரு வாரத்தில் முடிந்து விடும். ஒருசில நேரங்களில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறைதான் புத்தகம் வெளிவரும்!

ஒருமுறை டெல்லியிலிருந்து வந்திருந்த ஆசிரியரிடம் நான் எழுதிய ஒரு சிறுகதையைத் தயங்கியபடியே நீட்டினேன். வாங்கியவர் உடனே படித்துப் பார்த்துவிட்டு ‘’ நல்லாதானிருக்கு, இந்தமாத சிறுகதைகள்ல சேத்துக்கப்பா...’’ என்று கொடுத்துவிட்டுப் போய்விட்டார். எனக்கு ஜென்ம சாபல்யம் கிடைத்துவிட்டதாக உணர்ந்தேன். உடனே அப்பாவுக்குத்தான் அந்தச் சந்தோஷத்தைத் தெரிவித்தேன். பிறகு கதை வந்த கணையாழி அங்கே கிடைக்கவில்லை என்பதால் அவர் கேட்டிருந்தபடி தபாலில் அனுப்பி வைத்தேன். படித்துவிட்டு அவர் கருத்தையும் அடுத்த கார்டில் தெரிவித்திருந்தார். அதோடு பின்குறிப்பாக ‘உன் கதையை அம்மாவுக்கும் படித்துக் காண்பித்தேன். அவளுக்கும் பிடித்திருந்தது’ என்று எழுதியிருந்தார். அந்தக் காட்சியை நான் மனசில் கொண்டுவந்து பார்த்தேன். சுகமாக இருந்தது.

பத்துவருடப் போராட்டத்திற்குப் பிறகு பிரபல வாரப் பத்திரிக்கை ஒன்றில் சினிமா பகுதி ஆசிரியராக உயர்ந்த நிலை. நல்ல சம்பளம். கல்யாணம், குழந்தைகள், ஆபீஸ் பிஸி என்று ஓடிக் கொண்டிருந்தேன். பத்திரிக்கையில் சினிமா பொறுப்பு என்பதால் எல்லா திரை நட்சத்திரங்கள், இயக்குனர்களின் நேரடித் தொடர்பும் நல்ல மதிப்பும் எனக்குக் கிடைத்திருந்தது. அப்பாவையும் அம்மாவையும் இங்கே கூட்டிக் கொண்டுவந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பது ஆசை. எத்தனையோமுறை கேட்டுப் பார்த்தும் அப்பா அசைந்து கொடுக்கவில்லை. மூன்று மாதத்திற்கு ஒருமுறை சென்னைக்கு வருவார்கள்; ஒருவாரம் இருப்பார்கள். கிளம்பிவிடுவார்கள். ஆனாலும் அவர்கள் அருகில் இல்லாத குறையை அப்பாவின் கடிதங்கள் பூரணமாகத் தீர்த்துவிடும். நேரடி ஒளிபரப்பு போல அவரது கடிதங்கள் குடும்பம் மற்றும் ஊர் செய்திகளை தெரியப்படுத்திவிடும்.

இதனிடையே கடைசி தங்கையின் திருமண ஏற்பாடுகள் நடந்தன. திருமண வரவேற்பை சென்னையில் வைத்துக் கொள்ளலாமே என்று அப்பாவிடம் கேட்டிருந்தேன். முதலில் ‘எதற்கு உனக்குச் சிரமம்?’ என்று மறுத்தவர் பின்னர் ஒருவழியாகச் சம்மதித்தார். ஆறு குழந்தைகளுக்கும் சிறப்பாக திருமணம் நடத்தியவருக்கும் ஏழாவதாக அந்தச் சிரமத்தில் நானும் கொஞ்சம் பங்கு கொள்ளலாமே என்றுதான் வரவேற்புக்கு ஏற்பாடு செய்தேன்.

இங்கே ஒரு மூன்று நட்சத்திர ஓட்டலில் தங்கையின் திருமண வரவேற்பு சிறப்பாக நடந்தது. சுமார் அறுபது எழுபது நடிக நடிகைகள், டைரக்டர்கள், காமிராமேன்கள், இசையமைப்பாளர்கள் என்று முக்கிய புள்ளிகள் அனைவருமே நேரில் வந்து நிஜமான நட்பை கெளரவப்படுத்தியிருந்தார்கள். சக ஊழியர்கள், மற்ற பத்திரிக்கை நண்பர்கள் என்று நான் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே ரிசப்சன் களை கட்டியிருந்தது.

ஊரிலிருந்து வந்திருந்தவர்களும் தங்கை கணவருக்கும் ரொம்ப சந்தோஷம். தன் அபிமான நட்சத்திரங்களெல்லாம் அண்ணனோடு இவ்வளவு நெருக்கமாக பேசிக் கொண்டிருக்கிறார்களே என்று தங்கைக்கும் ஏக மகிழ்ச்சி. எல்லாம் சிறப்பாக முடிந்து ஊருக்குக் கிளம்புகிறபோதுகூட அப்பா எதுவும் சொல்லவில்லை. நான்கூட அவருக்கு இந்த ஆடம்பரமெல்லாம் பிடிக்காமல் இருந்திருக்கும் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் ஊருக்குப் போனதும் மனசு நெகிழ்ந்துபோய் மூன்று கார்டுகளில் அப்பா எழுதியிருந்த விஷயம்தான் எனக்குக் கிடைத்த ஜனாதிபதி விருது!

‘தனி ஆளாய் சென்னைக்குப் போய் நீ கஷ்டப்பட்ட போதெல்லாம் ஒருபக்கம் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறேன். உன்னை மேல படிக்க வச்சு ஒரு ந் அல்ல உத்தியோகம் வாங்கிக் கொடுக்காம இப்படி அநாதை மாதிரி ஐநூறு மைலுக்கப்பால் அனுப்பி வைச்சிருக்கேனே நான் ஒரு நல்ல தகப்பனாயில்லையோன்னு பல நாள் தூக்கமில்லாம தவிச்சிருக்கேன். ஆனா நீ உன் சொந்த முயற்சியில இவ்வளவு தூரம் முன்னேறி , ஒரு நல்ல வேலையையும் நீயா தேடிக்கிட்டதுகூட எனக்குப் பெருசா படல. அதுக்கும்மேல, நீ கூப்பிடேங்கற காரணத்துக்காக இருநூறு ஜனம், பட்டணத்துல அவங்க பரபரப்பான வேலைக்கு நடுவுல உனக்காக நேர்ல வந்திருந்து மனசு ஒப்பி சந்தோஷத்தைப் பகிர்ந்திட்டு கைகுலுக்கி வாழ்த்திட்டுப் போனதைப் பார்த்தப்பதான் என் மனசே நிறைவாச்சு. நீ காசு பணம் சேர்த்து வைக்கலியேன்னு நான் உன்னைக் குறை சொல்லமாட்டேன். மனுஷங்களை சேர்த்து வெச்சிருக்கியே அது போதும். ஆண்டவன் காப்பாத்துறானோ இல்லையோ, அந்த அன்பு உன்னக் காப்பாத்தும்..’

படித்ததும் அழுதேவிட்டேன். எவ்வளவு துல்லியமாகக் கவனித்து எழுதியிருக்கிறார்! அதுதான் அவரிடமிருந்து வந்த கடைசி கடிதமும்கூட. அதன்பிறகு பக்கவாதாம் வந்து ஆஸ்பத்திரியில் சேர்ந்திருப்பதாகத் தந்திதான் வந்தது. குடும்பத்தோடு அவசர கதியில் ரயில் பிடித்து ஊர் போய்ச் சேர்ந்தபிறகு எனக்காகவே காத்திருந்த மாதிரி என்னை அருகில் அழைத்து ‘லெட்டர் கிடைச்சுதா?’ என்று ஜாடையிலேயே கேட்டார். அதன்பிறகு மூன்று நாள் அவஸ்தைக்குப் பிறகு அடங்கிப் போனார்.

காரியமெல்லாம் முடிந்து மறுபடி சென்னைக்கு வந்தபிறகு பல மாதங்களுக்கு அப்பாவின் இழப்பு மிகப்பெரிய சுமையாக மனசுக்குள் இருந்துக் கொண்டேயிருந்தது. அவரிடமிருந்து இனி கடிதம் வராது என்பதும் மிகப்பெரிய வேதனையாக இருந்தது. இதே யோசனையில் இருந்தபோதுதான் ஒருநாள், அப்பாவிடமிருந்துதானே இனி கடிதம் வராது; நான் அவருக்கு எழுதலாமே என்று தோன்றியது. அன்றிலிருந்து அவர் உயிரோடு இருந்தால் என்னென்ன எழுதுவேனோ அதை அப்படியே வாரந்தோறும் அவருக்கு ஒரு கடிதமாக எழுதிவிடுவதை வழக்கமாக்கிக் கொண்டேன். கடைசித் தங்கைக்கு ஆண் குழந்தை பிறந்தது; அதற்கு முத்திருளாண்டி என்று அவரின் பெயரையே வைத்தது; சமீபத்தில் வீட்டுக்கென்று கம்ப்யூட்டர் வாங்கியது; என் மகன் மூன்றிலிருந்து நான்காம் வகுப்புக்குப் போகவிருப்பது...இப்படிப் பல விஷயங்களை அவரிடம் கடிதம் மூலம் தெரியப்படுத்தியதில் ஒரு நிறைவு.

இங்கேதான் நவீன விஞ்ஞான வளர்ச்சி எனக்கு மிகவும் உதவியது. ஆபீஸில் ஒன்றும் வீட்டில் ஒன்றுமாக டிவியை ஓரங்கட்டிக் கொண்டு இருக்கும் கம்ப்யூட்டர் – அதன் மூலம் இண்டர்நெட் – இமெயில் – தமிழ்வழி தகவல் பரிமாற்றங்கள் என்கிற அசுர வளர்ச்சி அப்பாவுக்கும் இ-மெயில் அனுப்ப உதவுகிறது. இ-மெயிலில் அனுப்புகிற தகவல்கள் வான்வெளி வழியாகத்தான் பயணிக்கின்றன. மேலே எங்கேயோ இருக்கிற அப்பாவுக்கு நான் அனுப்புகிற இ-மெயில் நிச்சயம் சென்று சேரும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இது பைத்தியக்காரத்தனமாக இருக்கலாம். ஆனால் அப்பாவுக்காக நான் உருவாக்கியிருக்கிற – இ-மெயில் விலாசத்திற்கு நீங்களும்கூட ஒரு மெயில் அனுப்பி வைக்கலாம் – எனது நண்பராகவோ அவரது நண்பராகவோ நீங்கள் இருக்கும் பட்சத்தில்! அப்பா நிஜமாகவே சந்தோஷப்படுவார்.

அப்பாவின் இ-மெயில் விலாசம் இதோ...

muthirulandi@anbu.paasam.com


--------------------

33 comments:

SurveySan said...
:) good one.
Jeeves said...
excellent. I think I read this story in av.

did you publish any book so far ?
tamil24.blogspot.com said...
அப்பாவுக்கு ஈமெயில் இதயத்தைக் கனக்க வைத்துவிட்டது. அப்பாவின் அன்பு கடிதங்கள் பிரிவு என கதையின் அகலம் என் தந்தையை என் முன் கொண்டு வந்தது போன்ற உணர்வு. சிலமாதங்கள் முன்னர் காலமான எனது தந்தையாரின் இழப்பிலிருந்து இன்னும் விடுபடாத எனது துயரோடு உங்கள் கதையும் மனசைக்கனக்க வைத்தள்ளது கல்யாண்.

வாழ்த்துக்கள்.

சாந்தி
அதிரை ஜமால் said...
நெகிழ்வாய் இருந்தது.
அதிரை ஜமால் said...
தந்தை என்பவர் கற்று கொடுப்பவர்.

ஆசான்.

ஆசானே உங்கள் நேசன் ஆன பிறகு நீங்கள் வெற்றி நடை போடுவது மிக எளிது.

வாழ்த்துக்கள். நல்ல எழுத்து.
N Suresh said...
என் மீது அதீத பாசம் வைத்துள்ள கல்யாண்ஜீ,

என்னை சந்தித்தது கூட இல்லை. இருப்பினும் என் மீது இந்த கல்யாண்ஜீ இத்தனை பாசமா என்ற எனது பலமாத கேள்விக்கு இன்று இந்த சிறுகதை பதில் சொல்லிற்று. அன்பும் பாசமும் நிறைந்த ஒருவரின் மகன் நீங்கள்!

இப்போது அலுவலகத்தில் இருந்து தான் இந்த கதையை வாசித்தேன். பாலுமகேந்திராவின் பாராட்டோ, இந்த கதை ஆனந்தவிகடனில் வெளிவந்ததோ என்னை அப்படியொன்றும் பெரிதாக கவரவில்லை என்பதே உண்மை.

ஆனால் இந்த கதை, உண்மை அழகானது என்று நிரூபித்துள்ளதே, அது என்னை ஈர்த்தது.

அலுவலகத்தில் இருப்பதை சில நொடிகள் மறந்து விட்டேன். ஏறத்தாழ இந்த கதை முழுக்க அழுது கொண்டே வாசித்தேன்.

என் தந்தையின் நினைவிற்கு இந்த கதை கொண்டு சென்றது. என் தந்தைக்கு எழுதப் படிக்க தெரியாது. தொலைபேசியில் பேசி வந்தார், உங்கள் தந்தை கடிதமிட்டார்.

இங்கே நாம் நண்பர்களாக/சகோதரர்களாக இருப்பதைக் கண்டு வானத்திலிருந்து நமது அப்பாக்கள் மகிழட்டும்.

சந்தோஷமோ கவலையோ அல்லது இரண்டு கலர்ந்த என்னமோ - சொல்ல முடியாத ஓர் உணர்வில்

உங்களன்பு சகோதரன்
என் சுரேஷ்
goma said...
கடிதம் எழுதுவதை என் ஆரோக்கியமான ஹாபியாகக் கொண்டிருந்த காலத்துக்கு என்னை அழைத்துச் சென்று விட்டது உங்கள் சிறுகதை.ஆழமான கருத்தை அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.கடிதத்தை நேசித்த உங்கள் தந்தையாருக்கு என் அஞ்சலி.
ஆயிரம் மைலுக்கு அப்பால் உள்ளவரையும் அருகே நிறுத்திவைக்கும் அற்புதமான ஒரு மந்திரக் கோல் இந்த கடிதக்கலை.இன்று அது 10 விழுக்காடுக்குள் விழுந்த விட்டது,என்று அறியும் பொழுது வருத்தமாகத்தான் இருக்கிறது.
Thooya said...
உங்களுக்கு அப்பா, எனக்கு அப்பப்பா....
மயிலாடுதுறை சிவா said...
படித்து முடித்தவுடன் மனம் கனக்கிறது.

இதை ஒரு குறும் படமாக எடுக்கலாம் போல் உள்ளது!

வாழ்த்துக்கள் கல்யாண். நான் பெரிதும் மதிக்கிற உன்னத கலைஞன் பாலுமகேந்திரா உங்களை பாராட்டி இருப்பது மிகப் பெரிய பொக்கிஷம்!

மயிலாடுதுறை சிவா...
லிவிங் ஸ்மைல் said...
ஹே! இந்த கத நான் படிச்சிருக்கேன். நல்ல கதை. நீங்க எழுதினதா.. ரொம்ப சந்தோசம். மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒரு சந்தேகம் இது Fictionஆ, நெஜமா...?
நா. கணேசன் said...
மிகவும் அருமை!
கவிநயா said...
மனதைத் தொட்ட கதை. அருமை. வாழ்த்துகள்.
தமிழ்நெஞ்சம் said...
அழ வைத்துவிட்டீர்கள்.

இயல்பான உங்க்ள் நடையில் எழுதி உள்ளீர்கள்.

எந்த மெழுகுப் பூச்சும் இல்லாமல், கதை அதன் போக்கில் செல்கிறது.

வாழ்த்துக்கள்.

அனுபவம் பளிச்சிடுகிறது.
//இதுவே ஒரு ஆரம்பக்கட்ட கவிஞனுக்கு மரண அடியாக இருந்தது
துளசி கோபால் said...
அருமை.

நம் மனதுக்கு இனியவர்களிடம் குடும்ப விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது சுகமானதே, அது கற்பனை என்றாலுமே.
VINOTH gowtham said...
நல்ல நெகிழ்வான கதை.
தங்கராசா ஜீவராஜ் said...
/////அவர் மரணம்கூட என்னைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. ஆனால் அவரிடமிருந்து இனிமேல் கடிதங்கள் வரவே வராது என்பதுதான் அவரின் இழப்பைவிடக் கொடுமையானதாக இருந்தது.
/////

படித்து முடிந்ததும் கனத்திருந்தது இதயம்

////இது ஒரு யுனிவர்சல் தீம் ///
உண்மை
இயல்பான நடை,அலங்காரமில்லாத வார்த்தைப் பிரயோகங்கள் ..... அருமை வாழ்த்துக்கள்......
RAMASUBRAMANIA SHARMA said...
EXCELLENT ARTICLE...KINDLY ACCEPT MY WISHES...PL CONTINUE WRITING...
கவின் said...
வாசிக்கும்போது மிக நெகிழ்சியாக இருந்தது
கவின் said...
அருமையான கதை
Resh said...
I also red this story in Vikadan without knowing you as a author, it's nice. Congrats.
நசரேயன் said...
ரெம்ப அருமையா இருக்கு
boopathy perumal said...
இந்த கதையை படிக்கும் ஒவ்வொரு "மகனும்" தனது மறைந்து விட்ட தந்தையையின் நினைவுகளில் மூழ்காமல் இருக்க முடியாது, இந்த நிகழ்வுகளின் தாக்கம் தந்தையை இழந்தவர்கள் மட்டுமே உணர முடியும். நான் பாலிடெக்னிக் படிக்கும் போது ஒருமுறை விடுதியில் பணம் கட்ட அவரது திருமண மோதிரத்தை 1985 ஆம் ஆண்டு ருபாய் 750 க்கு வங்கியில் அடகு வைத்து பணம் அனுப்பினார், அந்த மோதிரத்தை இப்போது பார்த்தாலும் அந்த நிகழ்வுதான் ஞாபகம் வருகிறது.
வடகரை வேலன் said...
மிகச் சிறப்பாக எழுதியிருகிறீர்கள்.

வாழ்த்துக்கள்.
நான் ஆதவன் said...
கண்களில் நீர் கேர்த்து விட்டது தோழரே வாழ்த்துக்கள்
goma said...
அடே! டெம்ப்பிளேட் மாற்றம் நன்றாக உள்ளது.
பழயன் கழிதலும் புதியன புகுதலும் என்று நமக்காகத்தான் சொன்னார்களோ.நானும் அவ்வப்போது மாற்றுவேன்
G.Muthukumar said...
மிகவும் நெகிழ்ச்சியான கதை. பெரும்பாலும் தந்தை என்ற மனிதனை புரிந்து கொள்ள பிள்ளைகள் - அதிலும் ஆண் பிள்ளைகள் பெரும்காலம் கடக்க வேண்டி இருக்கிறது. அதன் காரணமாக நான் கொள்வது ஆண்களின் ஈகோ எனப்படும் உணர்ச்சிதான். அந்த குமிழ் உடையும் போது அப்பா என்ற மனிதனின் காலம் பெரும்பாலும் முடிந்து விடுகிறது. திரு.பாலுமகேந்திரா அவர்கள் சொன்னது போல இது பன்மொழிகளிலும் மொழி பெயர்க்கபடவேண்டிய ஒரு கதை. ஒரு இனம் தெரியாத நூலிழையில் கட்டப்பட்ட தந்தை மகன் பாசம் மிக இயல்பான வார்த்தைகளில், இயல்பான சம்பவங்களில் சொல்லபட்டு உள்ளது அருமை. மெல்லிய நகைச்சுவை இழையோடும் சுய சோகங்கள் மேலும் உணர்வு கூட்டுகின்றன. மேலும் நிறைய படிக்க ஆசைப்படுகிறோம்... வாழ்த்துக்கள்.
இது என் சங்கப்பலகை said...
வணக்கம். இதே முத்திரை கதை போட்டியில் நானும் கலந்துகொண்டவன் என்கிற முறையில்
அப்போதே இந்த கதையிடம் நான் தோற்றுப்போனதை மனமார ஒப்புக்கொண்டிருக்கிறேன். சக்திவாய்ந்த காலம் இன்று படித்ததையே மீண்டும் படிக்க வைக்க- சுரேஷ் அண்ணா மூலம் என்னை பணித்திருக்கிறது. இது ஒருவகையில் என் கதையும் கூட.படபிடிப்பிலிருந்தபோது அப்பாவுக்கு முடியவில்லை உன் பெயரையே சொல்லிக்கொண்டிருக்கிறார்ர் எனும் சேதி கேட்டு, கிளம்பிப்போய் உயிரற்ற அவரை பார்த்த அதிர்ச்சியும்,சட்ட முறைக்கு உட்பட்ட சில விண்ணப்பங்களில் அப்பா எனுமிடத்தில் 'late'என் எழுதும் ஒவ்வொருமுறையும் அழுபவன் நான்.
எனது திருமணத்தில் அப்பாவுக்கு உடன்பாடில்லை.நேசத்தைவிட்டுத் தர என்னால் இயலவில்லை.பத்திரிக்கை ஏதும் அடிக்காமல் ஒன்றேயொன்றை நானெழுதி அவளை அழைத்தேன். அவள் ஒன்றை எழுதி என்னை அழைத்தாள். புதிய வாழ்வின் தேசம் புகுந்த பிறகு அப்பாவுக்கும் எனக்குமான தொடர்பு அற்றுப்போனது.அவர் மரணகாலத்தில் எடுத்த சில முடிவுகள் அப்பாக்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கான பாடம். இறந்தவரை புதைப்பது எங்கள் வழக்கம். ஆனால் அப்பா..என் மூத்த அண்ணனிடம்.."அவன் காதல் திருமணம் நிமித்தம் தம்பியோடு முரண்பட்டது நிஜம். அதே சமயத்தில் இந்த ஊருக்கு அவன் என் உறவிலிருந்து விலகாத பிள்ளை என்பதை நான் அறிவிக்க வேண்டும்.என்னை புதைப்பதற்கு பதில் எரித்துவிடவும். கொள்ளியை என் கடைசி மகனிடம் கொடுங்கள்.அப்போதுதான் ஊருக்கு என்னுடையதில் எல்லா பாத்தியதையும் அவனுக்குமிருக்கிறது என தெரியும்."என்று அவர் சொன்னபடிதான் அனைத்தும் நடந்தது.
அப்பாவிடமிருந்து மனமுவந்து நான் கேட்டு.வேண்டி பெற்றுக்கொண்டது அவரது தமிழ்.அந்த தமிழ்தான் எனக்கான வாழ்க்கை.
உங்களின் கதை என் அப்பாவை மீண்டும் என்னிடம் சேர்த்திருக்கிறது.எனக்கு மட்டுமல்ல இந்த கதையை படிக்கும் ஒவ்வொருவரும் தம் தந்தையரை எண்ணுவர் என்பதே இதன் வெற்றி.
Chandravathanaa said...
கல்யாண்குமார்,

மிக அருமையான பதிவு.
கண்கள் பொலபொலவென்று கொட்டி விட்டன.
விக்னேஷ்வரி said...
மிகவும் நெகிழ்வாயிருக்கிறது.
சுதாகர் said...
மிகவும் அருமை.
உணர்ச்சிபூர்வமான எழுத்து.
வாழ்த்துக்கள்
Vilasini Nair said...
ஊண்மையின் தன்மையில் விளைந்த நெகிழ்வு உங்கள் வார்த்தைகளை படிக்கும் போது. இது கதையாக தோன்றவில்லை. உங்கள் சுய சரிதையின் ஒரு பாகமாக இருக்குமோ என்று தோன்றியது...

Vilasini Nair said...
உண்மையின் தன்மையில் தோன்றிய எழுத்துக்கள் நெகிழ வைத்து விட்டன. இது ஒரு சிறுகதையாக தோன்றவில்லை எனக்கு. உங்கள் சுய சரிதையின் ஒரு பாகமாகவே தோன்றியது!
anu salim said...
ரொம்பவே நெகிழ்ச்சியான பதிவு.... கொடுத்து வைத்தவர் நீங்க....எல்லா விஷயத்திலேயும் பக்கபலமா இருக்கிற பெற்றோர் கிடைக்கறது ரொம்பவே குறைவு.....ஒழுங்க கல்லூரிக்கு போயி படிச்சி வேலைய தேடிக்கோன்னு வற்புறுத்தாமல் உங்கள் விருப்பத்துக்கு விட்டு கொடுத்ததை படிச்ச போது உங்கள் மேலே கொஞ்சம் பொறாமை கூட....:)