ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

Balakumaran.




சொல்வதெல்லாம் உண்மை









October 8, 2008









தமிழ் சினிமாவில் எழுத்தாளர் பாலகுமாரன்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து காணாப்படும் கதை வறட்சிக்கு பலராலும் முன்வைக்கப்படும் காரணங்களில் ஒன்று அதில் எழுத்தாளார்களின் குறைவான பங்களிப்பாகும். இந்த தலைமுறை எழுத்தாளர்களை எடுத்துக்கொண்டால் சுஜாதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா போன்ற வெகு சிலர் மட்டுமே திரையுலகிலும் பங்களித்து வருகிறார்கள்.



பாலகுமாரனை பொறுத்தவரை அவரது திரையுலக பங்களிப்பு சற்று தீவிரமானதாகவே இருந்தது. நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரான பாலகுமாரன், அதே கால கட்டத்தில் வசந்த் (அப்போது பாலசந்தரின் உதவியாளராக இருந்தார்), பாக்கியராஜ் போன்றவர்களுடனும் நெருக்கமாக இருந்தார். இக்காலகட்டத்தில் திரையுலகினாலும் அதில் கிடைக்கும் ஒரு விதமான புகழினாலும் தான் கவரப்பட்டதாக கூறியிருக்கிறார் பாலகுமாரன். பாக்கியராஜ் முந்தானை முடிச்சு திரைப்பட கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்த அக்காலத்தில் பாலகுமாரனும் கலந்து கொண்டிருக்கிறார். பாலகுமாரனின் கதைகளை படித்த எவருமே அவர் கதையை கொண்டு செல்லும் விதத்தையும், காட்சிகளை கோர்த்து கதையை கொண்டு செய்வதில் இருக்கும் கட்டுமானத்தையும் ரசித்தேயிருப்பார்கள். இந்த கதை விவாதங்களின் போது பாக்கியராஜும் பாலகுமாரனை திரையுலகுக்கு வருமாறு அழைப்புவிடுத்திருக்கிறார். இதன்பிறகு முந்தானை முடிச்சு படத்தின் ப்ரீவியூ பார்த்தபோது அப்படத்தில் பாக்யராஜுடன் இணிந்து பணியாற்றவில்லையே என்று தான் வருந்தியதாகவும் பாலகுமாரன் கூறியிருக்கிறார். பாலகுமாரன் தான் அக்காலத்தில் புகழ் மீது பெரும் போதை கொண்டிருந்ததாக பலமுறை கூறியிருக்கிறார். சுஜாதாவின் போஸ்டர்களை பார்த்து அப்படி தனது போஸ்டர்களும் வரவேண்டும் என்று ஏங்கியதாகவும் சினிமாவின் ஜிகினா வெளிச்சம் தன்னை அதிகம் ஈர்த்ததாகவும் ஓரிருமுறை எழுதியிருக்கிறார். காலச்சுசுவடு, உயிர்மை போன்ற பதிப்பகங்கள் புத்தக பதிப்பில் ஈடுபட முதல் வானதி, விசா (திருமகள்), பாரதி பதிப்பகம் போன்றவை புத்தகங்கள் வெளியிடும்போது பெரும் எழுத்தில் புத்தகத்தின் பெயரும் சிறிய எழுத்தில் எழுத்தாளரின் பெயரும் இருக்கும். இந்நிலையை மாற்றியது சுஜாதா, பின்னர் இது பாலகுமாரனுக்கும் தொடர்ந்தது.



இதன்பிறகு கமல்ஹாசனிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார் பாலகுமாரன். “புகழுக்காக சினிமாவுக்கு வாரதீங்க பாலா, அந்த புகழ் உங்களுக்கு இப்பவே இருக்கு. உங்கட புத்தக வெளியீட்டு விழாவில (இரும்பு குதிரைகள்) வைரமுத்து உங்கள புகழ்ந்ததே இதுக்கு உதாரணம். அத தாண்டி வரணும்ணு நினச்சா இப்படி அட்வைஸ் கேக்காதீங்க,” என்று கமல் கூற அதை தொடர்ந்து தனக்கு நெருக்கமான சாருஹாசன், சுஹாசினி, அனந்து, சிவகுமார் என்று அனைவரிடமும் ஆலோசனை கேட்டிருக்கிறார். பலதரப்பட்ட கருத்துகளால் அவர் குழம்பிபோயிருந்த நேரத்தில் சாருஹாசன் ஏற்பாடு செய்த seven samurai (Akira Kurasawa -1954) என்ற திரைப்படத்தை பார்த்து தான் திரைப்பட உலகின் நுழைய துடிப்பதற்கு தனக்குள் இருக்கும் போர்க்குணமும் காரணம் என்று தெளிந்து சினிமாவில் நுழைவதாக தீர்மானம் எடுத்ததாகவும் கூறுகிறார். இதனை தொடர்ந்து 1984/85ல் தான் பார்த்து வந்த ட்ராக்டர் கம்பனி வேலையை உதறிவிட்டு சினிமாவில் முழுநேரமாக நுழைகிறார்.



இது கூட அவரது ரசிகர்கள் / வாசகர்கள் உணர்ந்ததுதான். பாலகுமாரன் பிரபலமாக முன்னர் நடந்த நிகழ்வு இது. ஒரு இலக்கிய ஒன்று கூடலில் சுஜாதா பேசுகிறார், பாலகுமாரனும் சுப்ரமணிய ராஜுவும் (பாலகுமாரனின் மிக நெருங்கிய நண்பர். சிறந்த எழுத்தாளர். 1985 காலப்பகுதியில் ஒரு விபத்தில் இறந்தார். அவரை பற்றி “தாக்கம்” என்று பாலகுமாரன் ஒரு சிறுகதை எழுதினார்) கலந்து கொள்ளுகிறார்கள். அப்போது சுஜாதாவை இடைமறித்து தகராறும், வாக்குவாதமும் செய்து அதனால் வெளியேற்றப்படுகிறார் பாலகுமாரன். இவருடன் சென்ற சுப்ரமணிய ராஜு உள்ளே நின்றுவிட, தான் தனித்துவிடப்பட்டதாக உணர்ந்ததாகவும் சுஜாதா போன்ற பெரும் எழுத்தாளராக தானும் வருவேன் என்று சபதம் செய்ததாகவும் கூறுகிறார் பாலா. இதனை தொடர்ந்து K. பாலசந்தரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து சிந்து பைரவியில் தனது திரைப்பயணத்தை தொடங்குகிறார்.



உதவி இயக்குனராக :

அடிப்படையில் ஒரு எழுத்தாளராக இருந்தாலும் பாலகுமாரன் திரைத்துறையில் நுழைந்தபோது ஒரு டைரக்டராக வேண்டும் என்றுதான் நுழைந்தார். திரைத்துறையில் நுழைவதன் மூலம் புகழும் பிரபலமும் பெறுவது, தன்னை ஒரு சாதனையாளனாக நிலைநிறுத்துவது என்று நுழைந்த பாலகுமாரனை பொறுத்தவரை இது மிகப் பொருத்தமான முடிவுதான். தமிழ் சினிமாவில் கதாசிரியர் புகழ்பெறுவது என்பது மிகவும் கடினமானது. சுஜாதா கூட ஒருமுறை தமிழ்சினிமாவை பொறுத்தவரை கதாசிரியரின் வேலை “நொட் (முடிச்சு)” என்பதுடன் முடிந்துவிடுகிறது என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். ஒரு நேர்முகத்தில் பாலகுமாரனிடம் அவரது மெர்க்குரிப் பூக்களை திரைப்படமாக்க முயற்சித்தபோது அவர் மறுத்ததாக வந்த செய்தி உண்மையா என்று கேட்டபோது அவர் ஒப்புக்கொண்டிருந்தார். சாவித்திரியின் காதலை, மற்ற கதாபாத்திரங்களை எவர் சரியாக திரையாக்கப்போகிறார்கள், அவர்களின் துடிப்பை யார் வெளிக்காட்டப்போகிறார்கள் என்பதாலேயே தான் மறுத்ததாக அவர் சொன்ன காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.



இவர் சிந்து பைரவி, புன்னகை மன்னன், சுந்தர சொப்பனகளு (கன்னடம்) முதலிய திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றினார்.





இயக்குனராக பணியாற்றிய படங்கள் :

ஒரு இயக்குனராகும் எண்ணத்துடன்தான் பாலசந்தரிடம் சேர்ந்து உதவி இயக்குனராக இவர் பணியாற்றினார். அதன் பின்னர் அப்படியான ஒரு வாய்ப்புன் வந்தது. K பாக்கியராஜ் – ஷோபனா நடிக்க பாக்கியராஜ் இசையமைத்து 88/89ல் வெளியான படம் இது நம்ம ஆளு. பெரு வெற்றி பெற்ற படம். இத்திரைப்படத்தை பார்த்தால் டைரக்க்ஷன் – பாலகுமாரன் என்ற டைட்டிலை காணலாம். படம் வெளியான பின்னர் பிராமணர்கள் உட்பட சாதிய ரீதியான கடும் எதிர்ப்பை சந்தித்த படம் இது. அப்போது எல்லாம் பாலகுமாரனின் பெயர் ஒரு கேடயம் போல பயன்பட்டது. ஆனால் பாக்கியராஜ் தரப்பில் இருந்து பாக்கியராஜே படத்தை இயக்கியதாகவும் கூறப்பட்டு படத்தின் பெருவெற்றியும் பாக்கியராஜின் திறனாகவே கருதப்பட்டது. இதனை தொடர்ந்து ராசுக்குட்டி என்ற திரைப்படம் உருவாகிக்கொண்டிருந்த காலப்பகுதியில் பாக்கியராஜ் இது நம்ம ஆளு திரைப்படத்தில் பாலகுமாரன் உதவியாளராக பணிபுரிந்ததாகவும் ஆனால் அவரால் ஒரு சிறு காட்சியை கூட விவரிக்க முடியவில்லை என்றும் கூறினார். இதனால் பாதிக்கபட்ட பாலகுமாரன் தான் இனிமேல் திரைப்படத்தில் வசனகர்த்தாவாக மட்டுமே பணிபுரிவேன் என்றும் அறிவித்தார்.



நடிகராக :

ஒரு நடிகராக வரவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஒரு போதும் இருந்ததாக தெரியாத போதும், புகழ் மீதான அவரது வேகம் அவர் சில திரைப்படங்களில் சில காட்சிகளில் தோன்றியதற்கு காரணமாக இருக்கலாம்.



இவரது நண்பர் வசந்த் முதன்முதலாக இயக்குனரானபோது கேளாடி கண்மணி திரைப்படத்தில் ஒரு ஆசிரம நிர்வாகியாகவும் (திரையில் கடைசி 20 நிமிடங்களுக்குள் வரும் காட்சி. தாடி இல்லாத, மெலிந்த, தலை நரைக்காத பாலகுமாரனை அடையாளம் காண்பது கூட கடினமாக இருக்கும்), இவரது பெரும் வாசகர்களான ஜேடி- ஜெர்ரி முதன் முதலில் இயக்கிய உல்லாசம் திரைப்படத்தில் பஸ் கண்டக்டராகவும் திரையில் தோன்றினார். அது போல மென்மையான படங்களை மட்டும் இயக்கிவந்த விக்கிரமன் முதன் முதலில் தனது பாணியை விட்டு விலகி புதிய மன்னர்கள் என்ற திரைப்படத்தை அரசியல் பிண்ணனியில் இயக்கியபோது மாணவர்கள் அரசியலுக்கு வருவது போல வருகின்ற காட்சிகள் ஏற்கப்படுமா என்ற கேள்வி வந்தபோது பாலகுமாரன் உட்பட சில பிரபலங்கள் திரையில் தோன்றி தமது கருத்தை கூறுவது போல படமாக்கியிருப்பார். மேலும் முன்னர் குறிப்பிட்ட இது நம்ம ஆளு திரைப்படத்தில் கூட ஒரு றெஸ்டாரண்ட் மனேஜராகவும் நடித்திருந்தார்.





வசனகர்த்தா:

திரையுலகை பொறுத்தவரை பாலகுமாரன் பெரு வெற்றிபெற்றது ஒரு வசனகர்த்தாவாகத்தான். திரைப்படங்களை பொறுத்தவரை வசனகர்த்தாவின் பங்கென்ன என்று ஒரு முறை கேட்டபோது வசனம் எழுதுவதுடன் சில காட்சிகளை அமைக்கவும் அதாவது கதையை கொண்டு செல்ல உதவுவது என்றும் கூறினார். உண்மையிலேயே அவரது பெரும் பலமான கதைஜ்களை இறுக்கமாக கட்டியமைஇகும் திறன் இயக்குனர்களுக்கு பெரும் துணைதான். இவர் பணியாற்றிய படங்களே அதற்கு சாட்சி. அதிலும் ஷங்கர் தனது படங்களுக்கு இவரையும் சுஜாதாவையும் மாற்றி மாற்றி பயன்படுத்தி தனது படங்களை மெருகேற்றி கொண்டது கவனிக்கதக்கது. அது போல பல இயக்குனர்கள் இவருடன் கைகொடுத்து அருமையான படங்களை தந்துள்ளனர். அவற்றின் முழு விபரம்

நாயகன் - (மணிரத்னம்)

குணா - (சந்தானபாரதி)

செண்பகத்தோட்டம்

மாதங்கள் ஏழு - (யூகி சேது)

கிழக்கு மலை (

ஜெண்டில்மேன்,காதலன், ஜீன்ஸ் - (ஷங்கர்)

பாட்ஷா - (சுரேஷ் கிருஷ்னா)

ரகசிய போலீஸ் - (சரத் குமார் நடித்தது)

சிவசக்தி - (சுரேஷ்கிருஷ்ணா)

வேலை - ( சுரேஷ் )

முகவரி, காதல் சடுகுடு - (துரை)

சிட்டிசன் - (சரவண சுப்பையா)

உல்லாசம் ( ஜேடி – ஜெர்ரி)

உயிரிலே கலந்தது (ஜெயா)

கிங் – (சாலமன்)

மன்மதன், வல்லவன் – (சிலம்பரசன்)

கலாபக் காதலன் – (இகோர்)

புதுப்பேட்டை – (செல்வராகவன்)

ஜனனம் – (ரமேஷ்)

ஜூன் ஜூலை – வெளியாகாத படம் / தயாரிப்பு நிறுத்தப்பட்டது

இது காதல் வரும் பருவம் – (கஸ்தூரி ராஜா)



திரைப்படமாக வரவேண்டும் என்று நான் எதிர்பார்க்கும் இவரது சில நாவல்கள்:

தாயுமானவன்

பயணிகள் கவனிக்கவும்

சினேகமுள்ள சிங்கம்

மெர்க்குரி பூக்கள்

அகல்யா

இரும்புக் குதிரைகள்

பொய்மான்

கரையோர முதலைகள்





ம்ம்ம்ம்ம்… இப்படியெல்லாம் நடிக்க, படம் எடுக்க இப்போது அல்லது இங்கே யார் இருக்கிறார்கள்… அவதாரங்கள் போலவே கையில் அரிவாளுடணும் உருட்டுக்கட்டையுடனும் துப்பாக்கியுடனும் திரியும் நம் திரை நாயகர்களுக்கு பாலகுமாரன் சொன்ன “என் அன்பு மந்திரம்” புரியுமா?



Posted by அருண்மொழிவர்மன் at 22:59

Labels: எழுத்தாளர்கள், திரைப்படம், பாலகுமாரன் 34 comments:

Bee'morgan said...

வாவ்.. அருமையான தொகுப்பு அருண்மொழிவர்மன்.. பாலகுமாரனின் திரைப்பங்களிப்பைப் பற்றி இவ்வளவு விலாவாரியாக இப்போதுதான் காண்கிறேன்.. பதிந்தமைக்கு நன்றி.. :)

அவர் கருத்துதான் எனக்கும்.. மெர்குரிப்பூக்களின் கண்ணியம் குறையாமல் காட்சியில் எடுக்கும் இயக்குனர் இப்போதைக்கு இல்லை என்றே கருதுகிறேன்.. அல்லது, ஜெயகாந்தன் மாதிரி அவரே வந்து இயக்கினால்தான் உண்டு..



Thu Oct 09, 12:23:00 AM

குப்பன்_யாஹூ said...

நல்ல பதிவு, நல்ல எழுத்து நடை.



வாழ்த்துக்கள் நண்பரே.



இன்றைய வேகமான சூழ்லில் வேகமான திரை படங்கள் மத்தியில் பாலகுமாரனின் நிதானமான வசங்கள் மிகவும் தேவை.



தங்களது விருப்பம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.



குப்பன்_யாஹூ



Thu Oct 09, 12:24:00 AM

தமிழ் விரும்பி said...

நல்ல பதிவு. உங்களைபோல எனக்கு பாலகுமாரன் மீதான ஈடுபாடு இருக்கவில்லை. தவிர்க்க வேண்டும் என்றல்ல. வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. இனிமேல் கிடைக்குமா என்று ஏங்குகிறேன்.



Thu Oct 09, 02:02:00 AM

விசாகன் said...

நன்றி நண்பா,



நீங்கள் எல்லோரும் பாலகுமாரன் பற்றி கதைக்கும் போது இருந்து கேட்ட கேள்வி ஞானமே உள்ளது. ஆனால் அவர் வசனம் எழுதிய படங்களைப்பார்த்து இருக்கிறேன். நறுக்கான வசனங்கள். அண்மையில் ஞாநி உடனான குமுதம் இணையத்தள பேட்டியில் கருத்துக்களை தனக்கே உரித்தான் முறையில் ஆணித்தரமாக முன்வைக்கிறார். ஞாநி தனிப்பட்ட வாழ்க்கையை கிளறினாலும், அவர் நிதானமாகவே பதில் அளிக்கிறார். மீண்டும் அவரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி. உங்களைப்போல் நண்பா எங்களால் முடியாது.



Thu Oct 09, 02:07:00 AM

நந்தா said...

நல்ல விவரத் தொகுப்பு. பல விஷயங்கள் புதிதாய் தெரிந்துக் கொண்டே. பாலுகுமாரனின் எழுத்துக்களின் மீதான காதலை பதிவைப் படிக்கையிலேயே தெரிகிறது.



http://blog.nandhaonline.com



Thu Oct 09, 07:21:00 AM

Bleachingpowder said...

இப்பதிவை எழுத நிறைய உழைத்திருக்கிறீர்கள் என்பதை படிக்கும் போதே உணர முடிகிறது. வாழ்த்துக்கள்.



குணா படத்தின் கதையை கமல்,பாலகுமாரன்,சந்தான பாரதி மூவரும் சேர்ந்து உருவாக்கினார்கள். அதே போல் பாபாவிலும் அவருடைய பங்கு இருந்ததாக கேள்வி பட்டிருகிறேன்.



Thu Oct 09, 08:20:00 AM

Thanjavurkaran said...

தாயுமானவன் தொலைக்காட்சி தொடராக வந்தது.



அவர்களால எவ்வளவு கெடுக்க முடியுமோ அவ்வளவு கெடுத்து இருந்தார்கள்



Thu Oct 09, 09:21:00 AM

தமிழ்ப்பறவை said...

நல்ல விரிவான பதிவு. நான் தேடிக்கொண்டிருந்த பல தகவல்களை அநாயசமாகச் சொல்லிவிட்டீர்கள்.பழைய பாலகுமாரன் எழுத்துக்களுக்கு நான் வாசகன்.அவர் ஒரு சிறந்த இயக்குனராக முடியுமோ இல்லையோ...சிறந்த கதை,வசன,திரைக்கதை ஆசிரியராகச் சொலிக்கலாம்.அதாவது திரைத்துறையின் பேப்பர் வொர்க்கில்...



Thu Oct 09, 02:23:00 PM

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் bee'morgan



வருகைக்கு நன்றி.

ஜெயகாந்தன் மாதிரை அவரே வந்து இயக்கினால் தான் முடியும். ஆனால் இப்பொது வரும் சில புதுமுக இயக்குனர்களும் நம்பிக்கை தருகிறார்கள். பார்ப்போம்.



Thu Oct 09, 06:15:00 PM

அருண்மொழிவர்மன் said...

குப்பன் யாஹூ



அவருடைய வசனங்கள் மற்றும் கதைகளில் கூட ஒரு நிதானம் காணப்படும். உதாரணமாக அகல்யாவில் வரும் சிவசு அல்லது அவர் வசனம் அமைத்த உல்லாசம் படத்தில் வருகின்ற விக்ரம் கதாபாத்திரம்



Thu Oct 09, 06:17:00 PM

அருண்மொழிவர்மன் said...

தமிழ் விரும்பி



தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றிகள். எந்த ஒரு வாசகனும் வாழ்வில் கட்டாயம் பாலகுமாரனை கடந்து தான் வரவேண்டும். அது ரசனைக்கு மட்டுமல்ல, தெளிவுக்கும் நல்லது. முக்கியமாக அவரது கற்றுகொண்டால் குற்றமில்லை, உயிரில் கலந்து உணர்வில் நனைந்து புத்தகங்கள்.



Thu Oct 09, 06:19:00 PM

அருண்மொழிவர்மன் said...

விசாகன்

சிலருக்கு பற்றவர்காளின் ரணங்களை கீறி கீறி சந்தோஷப்படும் ஒரு வித மனோ வியாதி உள்ளது. அதில் ஞாநியும் அடக்கம். கலைஞரை துணைவி -மனைவி என்று இவர் செய்யாத கிண்டலில்லை,. ஆனால் தனது தந்தையை இவர் விட்டு கொடுத்ததும் இல்லை.



Thu Oct 09, 06:24:00 PM

அருண்மொழிவர்மன் said...

//குணா படத்தின் கதையை கமல்,பாலகுமாரன்,சந்தான பாரதி மூவரும் சேர்ந்து உருவாக்கினார்கள். அதே போல் பாபாவிலும் அவருடைய பங்கு இருந்ததாக கேள்வி பட்டிருகிறேன்.//



கமலின் பல படங்களுக்கு, டைட்டிலில் பெயர் வருகிறதோ இல்லையோ, சுஜாதா, பாலகுமாரனின் பங்உ இருந்திருக்கிறது. இவர்கள் இருவருக்கும் கமல் மிக நெருக்கமான நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது .



ஆனால், நான் அறிந்தவரை பாபா படத்தில் எஸ். ராமகிருஷ்ணனின் பங்குதான் இருந்திருக்கவேண்டும்.



Thu Oct 09, 06:39:00 PM

அருண்மொழிவர்மன் said...

//தாயுமானவன் தொலைக்காட்சி தொடராக வந்தது.



அவர்களால எவ்வளவு கெடுக்க முடியுமோ அவ்வளவு கெடுத்து இருந்தார்கள்//



அப்படியா... யார் யார் நடித்தார்கள்...



Thu Oct 09, 06:41:00 PM

அருண்மொழிவர்மன் said...

தமிழ்ப்பறவை...



வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஒரு இயக்குனராகவேண்டும் என்ற ஆர்வத்தில் குறுகிய காலத்திலேயே சினிமாவின் பல துறைகளிலும் தீவிரமான அக்கறையை காட்டியிருக்கிறார் பாலா. அதை பார்க்கும்போது அவர் வென்றிருப்பார் என்றொரு நம்பிக்கை தோன்றுகிறது.



Thu Oct 09, 06:53:00 PM

கானா பிரபா said...

அருமையான கட்டுரை அருண்மொழி, இது இன்னும் பலரைச் சென்றடைய வேண்டும்



Thu Oct 09, 10:30:00 PM

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் பிரபா.



உங்கள் ஆதரவுக்கு



நான் பதிவுகள் எழுத தொடங்கிய நாட்களில் நீங்கள் தந்த ஆதரவு மிக முக்கியமானது. அது எனக்கு பெரும் ஊக்குவிப்பாக இருந்தது. இப்போது உங்கள் பதில்கள் காண்கையில் மிகுந்த உற்சாகம் கொள்கிறேன்.



தொடர்ந்து நான் எழுத அது என்னை இன்னும் தயார்படுத்தும்



நன்றிகள்



Thu Oct 09, 10:49:00 PM

சரவணகுமரன் said...

நல்ல பதிவு.



Fri Oct 10, 02:33:00 AM

K.Guruparan said...

Good ,Suthan keep it up!!



Sat Oct 11, 03:01:00 AM

கானா பிரபா said...

http://kanapraba.blogspot.com/2008/10/blog-post.html

இந்தச் சங்கிலித் தொடர் விளையாட்டுக்கு அன்பாக நான் அழைப்பவர்கள். அழைப்பினை மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டுகின்றேன்.



Tue Oct 14, 09:03:00 AM

முரளிகண்ணன் said...

super post. excellent narration



Fri Nov 21, 05:41:00 AM

அண்ணாகண்ணன் said...

நல்ல அலசல். பாலகுமாரனால் திரைப்பட இயக்குநராகவும் ஒளிர முடியும். ஆனால், அதற்குச் செலவிடும் நேரத்தில் அவர் பல புத்தகங்களை எழுதிவிட முடியும். புத்திசாலியான பாலகுமாரன், தன் நேரத்தை அநாவசியமாக வீணடிக்க மாட்டார்.



Tue Aug 03, 03:20:00 PM

அருண்மொழிவர்மன் said...

நன்றிகள் அண்ணாகண்ணன்,



//அதற்குச் செலவிடும் நேரத்தில் அவர் பல புத்தகங்களை எழுதிவிட முடியும். புத்திசாலியான பாலகுமாரன், தன் நேரத்தை அநாவசியமாக வீணடிக்க மாட்டார்//



இதை பணம் உழைப்பது என்ற கருத்துடன் எழுதி இருந்தால் அதை ஏற்கச் சற்றுச் சிரமமாக உள்ளது,

ஒரு எழுத்தாளரால் இயக்குனரை விட அதிகமாக (தமிழ்ச்சூழலில்) பணம் உழைக்க முடியுமா?



Tue Aug 03, 08:38:00 PM

Muthu said...

இயக்குநராக மிளிர தமக்கு தகுந்த நிர்வாகத்திறமையும் இயக்குநருக்கேயுரிய சூட்சும புத்தியும் குறைவு என்பதால் தன் எல்லை உணர்ந்து வசனகர்த்தாவாகவும் திரைக்கதைக்கு சீன்கள் சொல்பவராகவும் தன்னை நிறுத்திக்கொண்டதாக ஒரு பதிலில் சொல்லியிருந்தார்.



அன்புடன்

முத்து



Thu Aug 12, 01:09:00 AM

Ravikutty said...

பாலகுமாரனின் எழுத்துக்களை அந்த கால கட்டத்தில் தேடிச் சென்று படித்த பலரில் நானும் ஒருவன். அவரது திரையுல முயற்ச்சிகள் பற்றி ஓரளவு தெரிந்தாலும் இந்த பதிவில் கூறப்பட்டுள்ள பல விஷ்யங்கள் புதிது. ஒரு நல்ல‌

இலக்கியவாதியை ஆன்மீகம் விழுங்கிவிட்டதோ என்று தோன்றுகிறது.



Thu Aug 12, 04:02:00 AM

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் முத்து



//இயக்குநராக மிளிர தமக்கு தகுந்த நிர்வாகத்திறமையும் இயக்குநருக்கேயுரிய சூட்சும புத்தியும் குறைவு என்பதால் தன் எல்லை உணர்ந்து வசனகர்த்தாவாகவும் திரைக்கதைக்கு சீன்கள் சொல்பவராகவும் தன்னை நிறுத்திக்கொண்டதாக ஒரு பதிலில் சொல்லியிருந்தார்.//



அதையும் நான் வாசித்திருக்கின்றேன், ஆரம்பகாலத்தில் அவரே இயக்குணர் தொழில் தந்திரம் மிகுந்தது என்று சொல்லி அதை விட்டு விலகியதாக சொல்லியிருக்கின்றா. இன்னமும் சொல்லப் போனால், பந்தயப் புறா நாவலில் 'வாழ்வில் தந்திரம் மிகும்போது நேர்மை விட்டு விலகிவிடுகின்றது' என்றும் சொல்லி இருக்கின்றார்



அவர் இயக்குணார் தொழில் பற்றிய விருப்பங்களில் இருந்தாலும், உதவி இயக்குணராக பணியாற்றிய காலங்கள் சலிப்புகளாலும், ஏமாற்றங்களாலுமே நிரம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது



Fri Aug 13, 01:32:00 AM

அருண்மொழிவர்மன் said...

@ravikutty



//இலக்கியவாதியை ஆன்மீகம் விழுங்கிவிட்டதோ என்று தோன்றுகிறது//



இதே எண்ணம் எனக்கும் உண்டு



Fri Aug 13, 01:34:00 AM

Prasannaakumar MP said...

idhanudan THALAYANAI POOKAL naavalum serthukolungal nanbaa!!



Sun Aug 15, 12:58:00 AM

அருண்மொழிவர்மன் said...

தலையணைப் பூக்களை எத்தனை தூரம் ப்டமாக்க முடியும் எனத் தெரியவில்லை,உதாரணமா அதில அலைபாயுதே பாடல் பற்றி எழுதியதை எந்டஹ் ஒரு இயக்குண்ர் கொம்பனாலும் காட்சிப்படுத்த முடியாது



Sun Aug 15, 01:04:00 AM

பிரியமுடன் ரமேஷ் said...

மிகவும் அருமையான தொகுப்பு...பாலகுமாரனின் பல நாவல்களை தேடித்தேடி சேர்த்து வைத்து படிக்கும் எனக்கே..இதில் பல விசயங்கள் புதிதாக இருந்தன..நன்றி நண்பரே



Wed Aug 25, 07:54:00 AM

Erode Nagaraj... said...

:)

http://erodenagaraj.blogspot.com/2009/05/blog-post.html



Sat Aug 28, 03:32:00 PM

J. Ramki said...

..இரும்புக் குதிரைகள்..



இதில் க் கிடையாது. ஏன் கிடையாது என்பதற்கு நாவலில் அவரே ஒரு விளக்கம் கொடுத்திருப்பார். க்கை நீக்கிவிடவும். :-)



Fri Oct 08, 12:40:00 PM

thamizhan said...

பாலகுமாரனை சிம்சன் குருப்-டாபே-யில் வேலை செய்யும்போது-பிரதாபசந்திரன்-வழக்கின்போது-தெரியும்.koviexpress ல் இது நம்ம ஆளு படப்பிடிப்பிற்காக அவர் சென்றுகொண்டிருந்தபோது,நானும் பயணித்தேன் .பல தகவல்களை பரிமாறிக்கொண்டோம்.அவருடைய எழுத்துக்கள்,கதைகளில் அவருடைய அன்றன்றைய நிலையையே பிரதிபலித்து வந்தது என்பதே உண்மை.அவர் நாஞ்சில் பி,டி.சாமியைபோலவோ,ராஜேஷ்குமாரைப்போலவோ,சுஜாதவைப்போலவோ ஒரே நிலைப்பாட்டுடன் எழுதுபவர் இல்லை என்பதால்தான் முதல் கதைகளால் கவரப்பட்ட வாசகர்கள் பின்னர் வந்த எழுத்துக்களால்,கதைகளால் ஏமாற்றம் அடைந்தார்கள்.அவரால் இனி இரும்புக்குதிரை,மெர்கு ரிபூக்கள் போன்ற கதைகளை தர முடியாது என்பதும் உண்மையே.மிக அழகாக பல செய்திகளை கொடுத்திருகிறீர்கள்.வாழ்த்துக்கள்.



Mon Dec 06, 04:44:00 AM

mp said...

மிகவும் அருமையான தொகுப்பு...பாலகுமாரனின் பல நாவல்களை தேடித்தேடி சேர்த்து வைத்து படிக்கும் எனக்கே..இதில் பல விசயங்கள் புதிதாக இருந்தன..நன்றி நண்பரே இனி இரும்புக்குதிரை,மெர்கு ரிபூக்கள் போன்ற கதைகளை தர முடியாது என்பதும் உண்மையே.மிக அழகாக பல செய்திகளை கொடுத்திருகிறீர்கள்.வாழ்த்துக்கள்.