சனி, 20 ஆகஸ்ட், 2011

Creaa.

Saturday, January 8, 2011அடையாளம்


க்ரியா ஸ்டாலில் வீடு போல விரிக்கப்பட்டிருந்தது பாய். க்ரியாவை 80களில் இருந்து பைலட் தியேட்டர் பக்கத்தில் இருந்த காலத்தில் இருந்தே பார்த்தவன் ஆதலால் எனக்கு வித்தியாசமாகப் படவில்லை.





ஒரு அடர்கருமீசைப் பையர் பில்லுக்குப் பணம் கொடுத்துக் கொண்டிருந்தார். முதுகில் தட்டினேன். சிரித்தார். ஈரடியில் தாண்டி உள்ளேபோய் திலீப்குமாரின் கடவு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தவர் முதுகில் தட்டினேன். சார் என்றார் சிரித்தபடி.



கொஞ்சம் பேசிக் கொண்டிருக்கையில் பில் கொடுத்து வாங்கிய புத்தகத்துடன் மீசையும் சேர்ந்து கொண்டது. அப்புறம் நான் அப்படியே வெளியே செல்ல மீசைப் பையரும் சிரித்தபடி கூடவே வந்தார். பேசிக்கொண்டே வர ஒரு எழுத்து கூட இன்னும் எழுதப்படாத புதிய கதை ஒன்றை சொல்லிக் கொண்டே வந்தேன்.





இது போல ஏகப்பட்ட கதைகள் சொல்லி வருகிறேன் பல வருஷங்களாய் ஆனாலும் ஒருத்தரும் எழுதியதாகத் தெரியவில்லை என்றேன்.





எழுதத்தெரியணும் இல்லே. அவனவனுக்குத் தெரிஞ்ச கதையவே இன்னும் எழுதின பாடில்லே. இதுல கேட்ட கதைய கேள்விப்பட்ட கதையை எப்படி எழுதுவது என்றார்.





எனக்கு ஒரு செய்தியை அனிச்சையாக அந்த சிரித்தமுக இளைஞர் அளித்ததாகப் பட்டது. கொஞ்சம் நெருக்கமாய் உணர்ந்தேன். க்ரியாவின் உள்ளே இருந்தவரின் பெயர் சொல்லி அவர் எங்கே என்றேன்.





ஓ அவர்தான் அவரா!





நான் திகைத்து விட்டேன்.யோவ் என்னைய்யா நீர் அதுக்காக டைப்படிக்கிறவர் இல்லையா!





ஆமாம் நான் மட்டும் இல்லை சென்ஷியும்





எனக்கு ஒன்றுமேப் புரியவில்லை! ஏளனத்திற்கு ஆளாகக்கூடும் என்கிற பிரக்ஞை கிஞ்சித்தும் அற்ற, தீவிர பெந்தகொஸ்தே பிரச்சாரகர்கள் போலவோ அல்லது டீயும் கஜுரேவும் சாப்பிட்டு, அந்த நேரப் பசியை ஒத்திபோட்டு, கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் புரட்சி, தான் சரியாக ஒட்டாத போஸ்டரால் தவறிவிடப் போகிறதே என்கிற பதற்றத்தில் சுவர் தேடும் இளம் போராளியைப் போலவோ மாங்கு மாங்கென்று டைப்படித்து தமிழின் நவீன முகத்தைப் போஷிக்கும் இவர்கள் ஒருவருக் கொருவர் நேர்ப்பரிச்சயம் கூட இல்லாதவர்கள்.





என்னால் நம்பவே முடியவில்லை. எப்படிய்யா ஒருத்தருக்கொருத்தர் தெரிஞ்சிக்காம...





ஒருத்தருக்கொருத்தர் மெய்ல் அனுப்பிப்போம் அவ்ளவுதான்.





அந்தப் பையரின் முன்னால் தழுதழுத்து விடுவேனோ, என உள்ளூர நான் உதறிக் கொண்டிருந்த நேரம் பார்த்து, நல்ல வேளையாக அதிஷாவும் யுவ கிருஷ்ணாவும் வந்து சேர்ந்தனர்.





விஷயத்தைச் சொல்லி யோவ் நீங்க ரெண்டுபேர் மட்டும்தான் எனக்குப் பரிச்சயம்னு நெனச்சிகிட்டு இருக்காங்கய்யா என்றேன்.





மொதல்ல உங்களைப் பார்க்கறவங்க உங்ககிட்டப் பேசறவங்க லிஸ்ட்டை எடுங்க. லிஸ்டை வெளியிட்டு இவங்கள்ளாம் என்னோட நண்பர்கள்னு அறிவிங்க, அப்பதான் உங்குளுக்கே தெரியும். உங்களுக்கு எவ்ளோ பேருன்னு.





ஒருத்தருக்கொருத்தர் தனிப்பரிச்சயத்திற்கு வராமலே மெயிலில் இணைந்து முன்னோடிகளின் எழுத்துக்களை சி.சு.செல்லப்பா போல எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வலையேற்றிக் கொண்டிருப்பவர்கள் தன்னலமற்ற இலக்கியப் போராளிகள் இல்லையா?





கீழ்மையென்று நாம் நம்புவதை ஆயுதம் தாங்கி மூர்க்கமாக எதிர்த்து அழிப்பதே போராட்டம் என்பதாக ஸ்தபிக்கப் பட்டுவிட்டது. ஸ்தாபனத்தின் நீடு துயிலைக் கலைக்க ஊதப்படும் பாஞ்சஜண்யம் எல்லாம் சைக்கிள் பெல் போல ஆகிவிட்டது. கிணுகிணுப்பெல்லாம் நானும் ஒரு கச்சேரி வாசிச்சேனே எனக்கும் ஒரு தேங்காய் மூடி எடுத்து வை என்பதாக ஆகிவிட்ட்டது.





மேன்மை என்று நாம் நினைப்பது, அடுத்தவனுக்கும் போய்ச் சேரவேண்டும் போஷிக்கப்பட வேண்டும் என்று மனதை நிறைத்த எழுத்துக்களை ஏதோ விளையாட்டு போல சுமந்து திரிந்து இணையத்தில் இறக்குவதை இலட்சியமாகக் கொண்டிருப்பதும்தான் எவ்வளவு பெரிய விஷயம்.





நான் சுமந்த புத்தகங்களைப் பார்த்துவிட்டு அதிஷா கேட்டான் என்ன இது! எல்லாம் அந்தக் காலம்?





பழைய பொக்கிஷம் தேடித்தேடி வாசி. கலையின் செய்திறனை உள்வாங்கி செரித்துக் கொள். உனக்குப் பரிச்சயப்பட்ட உலகத்தைவிட்டு ஒரு போதும் பார்வையை விலக்காதே. பொறிதட்டும் போதெல்லாம் புதிதாக யோசி. முடிந்தபோது எழுதிப்பார். வரும் போது சரியாக வரும்.





அப்ப அழியாச்சுடர்கள் படிச்சாலே போதும் போல இருக்கே.





க்ரியாவிற்கு உள்ளே இருந்து கடவு புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது அழியாச்சுடர்கள் வலைபூ நடத்தும் ராம் பிரஸாத்.





க்ரியாவிலிருந்து பேசியபடி, என்கூடவே வந்தது சங்கர நாராயணன்.





கடல்களைத் தாண்டி சத்தமில்லாமல் டைப்படித்துக் கொண்டிருப்பவன் சென்ஷி.





இன்று நான் வாங்கி இருந்த புத்தகங்கள் மூன்று. தி.ஜானகிராமன் சிறுகதைகள் இரண்டு பாகங்கள் ஐந்தினைப் பதிப்பகம் மற்றும் குபரா முழுத்தொகுதி - அடையாளம் வெளியீடு.



முன் அட்டை ஓவியம்: மருது

அட்டை வடிவமைப்பு: த பாபிரஸ்

அடையாளம். தரமான புத்தகங்களைத் தரமாகத் தயாரிப்பதற்கு மட்டுமல்ல நன்றி, தரம் இல்லாதவற்றை வியாபாரம் கருதியும்கூட தராதரமற்று வெளியிட மாட்டேன் எனப் பிடிவாதமாய் இருப்பதற்காக. இப்படியே நீர் என்றும் இருப்பீராக - கை சுட்டுக் கொள்ளாமல் - இன்ஷா அல்லாஹ்.



சிறு பத்திரிகைகள் போல சிறு பதிப்பகங்கள் என்கிற பெருமரியாதைக்கு உரியவை உங்களது அடையாளம் போன்ற பதிப்பகங்கள்.



குறைந்த பட்சமாக நாம் செய்யக் கூடியதெல்லாம் அடையாளம் மாதிரியான பதிப்பகங்களை வெளிச்சம் போட்டு அடையாளப் படுத்துவதுதான். தயவு செய்து கடை எண் 247க்குச் செல்லுங்கள். ஒருவர் புத்தகம் வாங்குவதும் வாங்காததும் அவரவரின் அந்த நேர வசதி. இந்தப் புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்த்து, காசா பணமா, ஒரு பதிப்பகக் கலைஞனைக் கெளரவியுங்கள்.





தன்னைக் கரைப்பதில்தான் இருக்கிறது ’தான்’ அழிந்த பொதுமை.