புதன், 10 ஆகஸ்ட், 2011

Prabanchan.

பானு உன் புத்தகப்பை அண்ணனிடம் இருக்கிறது




பிரபஞ்சன்



நானும், என் தங்கை பானுவும், தம்பி மூர்த்தியும் எங்கள் வீட்டு நடையில்தான் விளையாடுவோம். மூன்று இடங்களில் விளையாடுவது எங்களுக்குப் பிடிக்கும். ஒன்று நடை. எத்தனை மணிநேரம் விளையாடினாலும் அம்மா எங்களைத் தடையே பண்ணாது. குழந்தைகள் எப்போதும் தன் கண்முன்னே விளையாடிக்கொண்டு இருக்க வேண்டும். அடிக்கடி துண்டு எடுத்து வந்து, எங்கள் வியர்வையைத் துடைத்துவிட்டுச் செல்லும். அப்பாவின் துண்டு. அதில் வீசும் சுருட்டு மணம் எனக்குப் பிடிக்கும். இரண்டாவது இடம், வீட்டுப் புறக்கடை. பெரிய நிலப்பரப்பு இல்லை. ஒரு கிணறு. வலது ஓரத்தில் கழிப்பறை. கிணற்றை ஒட்டி எட்டுமுழ வேட்டியை அகல விரித்தது மாதிரி ஒரு பிரத்யேக இடம். துவை கல் மிகவும் பெரிசு. ஒளிந்து பிடியாட்டம் விளையாட மிகவும் சௌகர்யம்.



பெரிய கல் எங்களைக் காட்டிக் கொடுக்காது. அடுத்த வீட்டு நுணா மரம், தன் பரட்டைத் தலை முழுதையும் எங்கள் வீட்டுப் பக்கமே சாய்த்துக்கொண்டிருக்கும். அம்மா, ஒரு முல்லைக் கொடி போட்டிருந்தது. அம்மாவுக்குக் கோபம் வர ஒரே காரணம், பந்தல் காலை நாங்கள் தட்டிச் சாய்க்கும் போதுதான். கூடுமானவரை, நாங்கள் எங்கள் அம்மாவுக்குக் கோபம் வருவிப்பதில்லை. மூன்றாவது இடம், எங்கள் தெரு முனையில் இருக்கும் தோட்ட வாசலில் இருந்த கொடுக்காப்புளி மற்றும் மகிழ மரத்தடி. அதிகாலையில், அணில் கடித்துப் போட்ட கொடுக்காப்புளிக்காயைப் பொறுக்க ஓடுவோம். அப்படியே மகிழ மரத்தின் அடியில் சிந்திக் கிடக்கும் மகிழம் பூக்களைத் திரட்டிக் கொண்டு வருவோம். மகிழம் பூக்களைக் கோர்த்து பானுவின் தலையில் வைக்கும் அம்மா.



எனக்கு எட்டு வயதும், பானுவுக்கு ஐந்து வயதும், மூர்த்திக்கு நான்குமாய் இருந்தோம். எங்கள் மூவர் விளையாட்டின் போது, நாலாவதாக ஒருவர் விளையாடுவதை நான் அறியவில்லை. அறிந்து கொள்ளும் வயதும் இல்லை. நாங்கள் ஒளிந்து விளையாடும்போது மரணமும் எங்களோடு ஒளிந்திருந்தது எனக்குத் தெரியாது. மகிழம் பூக்களை நாங்கள் திரட்டும்போது அது எங்களை வேடிக்கை பார்த்திருக்குமோ? இருக்கும். அதுவும் எங்களோடு சேர்ந்து சுளைகளைத் திரட்டிக் கொண்டு போயிருக்குமோ? இருக்கும். இரவு நேரங்களில் முல்லைப் பந்தல்கால் கீழே விழுந்து கிடப்பதை விடிந்து நாங்கள் பார்ப்போம். பானுதான் சட்டென்று ஓடிப்போய், காலை நிறுத்துவாள். தரை மண் படிந்த கொடியின் முதுகைத் துடைத்துவிடுவாள். பானு, அம்மாவைக் கொண்டு வந்ததாக அம்மா சொல்லும். பானுவுக்கு, இரவில் வந்து பந்தக்காலைத் தள்ளிவிட்டுப் போனது பக்கத்து வீட்டு நுணா மரப் பேய்தான் என்பதில் அசாத்தியமான நம்பிக்கை. நாங்கள் கைரேகை மறையும் நேரத்துக்கு மேல், தோட்டத்துக்குப் போக மாட்டோம். பேய், விளையாடும் நேரம் அது.



பானுவின் புகைப்படம் எங்கள் வீட்டில் வெகு காலம்வரை இருந்தது. ஒரு கழுத்தளவு கிருஷ்ண பொம்மை அவள் பக்கத்தில் இருக்கும். கிருஷ்ணர் தோளில் கைவைத்துக்கொண்டு சிரித்தபடி பானு நிற்பாள். பானுவின் முகம் அம்மாவுடையதல்ல. லேசான அப்பா சாயல். பள்ளம் விழுந்த முகவாய். பெரிய கண்கள். வெற்று மார்பில் சங்கிலி தொங்கும். மூர்த்தியைப் படம் எடுக்க வாய்க்கவில்லை போலும். அன்றைய தமிழர்கள் அனேகமாக இரண்டு முறை புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். திருமணத்தில் ஒரு முறை. மரணத்து உடம்போடு ஒரு முறை. என் தம்பி மூர்த்தி படம் எடுக்கப்படவில்லை. தேவைப்படவில்லை போலும். அம்மா, ஒரு இடுப்பில் பானுவையும், ஒரு இடுப்பில் மூர்த்தியையும் வைத்திருக்கும். பழுத்துத் தொங்கும் பலா மரம் போலிருக்கும் அம்மா.



கோடை விடுமுறை வந்தது. கோடை விடுமுறை என்பது முழுப் பரீட்சைக்குப் பிறகு வரும் மூன்று மாத விடுதலை. வாத்தியார்களின் சகல அதிகாரங்களும், மூர்க்கங்களும் பறிக்கப்பட்டு, சற்றேறக் குறைய தெருப்பூனைகள் மாதிரி, வீதிகளில் அலைவார்கள். கோடைவிடுமுறை என்றால், எனக்குத் தாத்தா வீடுதான். விருத்தாசலத்தில் தான் என் தாத்தா வீடு. மேட்டுத் தெருவில் இருந்தது. இந்த வீட்டின் விசேஷம், அதன் தோட்டம்தான்.பிரமாண்டமான தோட்டம். அங்கும் ஒரு கிணறு இருந்தது. துவைகல் இருந்தது. அதன் அருகே, எங்களுக்குச் சொந்தமான பெரிய இலந்தை மரமும், கல்யாண முருங்கையும் இருந்தது. அப்புறம், பறக்கும் வர்ணங்கள், எங்கள் ஊரில் நான் பார்க்காத பறவைகள். முதல் முதலாக அந்தத் தோட்டத்தில்தான் பாம்பைப் பார்த்தேன். அப்புறம் எனக்கு விளையாட்டுத் தோழியாக மாதவியும் அங்கு இருந்தாள்.



விடுமுறைக்கு முதல்நாள் என் தாய்மாமன் பழமலை புதுச்சேரிக்கு வந்திருந்தார். விருத்தாசலத்தில் பழமலை என்ற பேர் பலருக்கும் உண்டு. மன்னார்குடியில் ராஜகோபாலன் மாதிரி. (தி.ஜானகிராமன் இந்தப் பெயர்ப்பன்மையை வைத்து ஒரு கதை எழுதி இருக்கிறார்) கவிஞர் பழமலையின் தாய்மாமன் வீடும், எங்கள் தாத்தா வீட்டுக்குப் பத்துவீடு தள்ளி இருந்தது. அந்த வீட்டுக்கு எதிரில் இரண்டு கறுப்பு நிற வெள்ளாடுகள் எப்போதும் இருந்தது எனக்கு நினைவில் இருக்கிறது. விருத்தாசலத்துக் கோயில் சிவனுக்குப் பழமலைநாதர் என்று பேர்.



மாமா திரும்பும்போது, நானும் அவருடன் தாத்தா வீட்டுக்குப் புறப்பட்டேன். உறவினர் வீட்டுக் கல்யாணத்தை முடித்துக்கொண்டு பின்னால் அப்பாவும் அம்மாவும் பானுவும் மூர்த்தியும் பிறகு விருத் தாசலத்துக்கு வருவதாகத் திட்டம். அம்மா என் துணிச் சுமையைப் பையில் அடுக்க ஆரம்பித்தது. பானுவின் முகம் சுண்டிப் போயிற்று. "நானும் அண்ணன் கூடப் போறேன்" என்றது. "சூ. . . குழந்தைகள் தனியாப் போறதாவது. அம்மா கூடத்தான் வருவியாம்" என்றது அம்மா. தம்பி பழமலையிடம், "குழந்தையைப் பார்த்துக்கோ. . . புதனும் சனியும் எண்ணெய் தேய்ச்சுவிட அம்மாகிட்ட சொல்லு. . ." என்றது, "தனியா கினியா வெளியில போயிடப் போறான்" என்று நூறு முறை சொல்லியது. பழமலை சிரித்துக் கொண்டார். நான் புறப்படும்போது, எங்கிருந்தோ ஒரு நாய்த்தோல் பந் தொன்றைக் கொண்டுவந்து என்னிடம் தந்தது பானு. பாருங்களேன். இத்தனை காலமும் நான் பந்தைத் தேடித் திரிந்திருக்கிறேன். அவள் ஒளித்து வைத்திருக்கிறாள். இப்போது எடுத்துக்கொண்டு வந்து தருகிறாள். அம்மா என் பாக்கெட்டில் பணம் வைத்தது. என் நெற்றியில் முத்தம் வைத்தது. அம்மா வெற்றிலையோடு கிராம்பு போடும். பானு அழுதுகொண்டே தெரு முனைவரை வந்தாள். மூர்த்தி, இடுப்பில் இருந்துகொண்டே எனக்கு 'டாடா' காட்டினான். பானு அழுதது எனக்குச் சிரிப்பு சிரிப்பாய் இருந்தது. அம்மா அப்பா இல்லாமல், நான் ஊருக்குக் கிளம்பினேன். நான் பெரியவன் ஆகிவிட்டேனாக்கும். நாய்த்தோல் பந்து, வெள்ளையாக, புதுசுக்கென்று இருக்கிற ஒரு தனி வாசனையோடு இருந்தது.



கர்ணம் பக்கிரிசாமிப்பிள்ளை என்பது என் தாத்தாவின் பெயர். பக்கிரிசாமி கிராமணிதான் அவர். கிராமணி தாழ்ந்த சாதியாம். ஆகவே தன்னைப் பிள்ளையாக ஆக்கிக்கொண்டார். கணக்குப்பிள்ளை வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அது சம்பந்தப்பட்ட அச்சிட்ட பெரிய பெரிய தாள்கள், பைண்ட் செய்யப்பட்ட நோட்டுகள் வைத்திருப்பார். ஒரு சாய்வு நாற் காலியில், நீண்ட பலகையின்மேல், 'பேடை' வைத்து எழுதிக்கொண்டு இருப்பார். வீட்டில்தான் வேலை. துறை சார்ந்த தொழிலாளர்கள் அளவைச் சங்கிலி, தடிகளோடு வந்து பேசிக்கொண்டிருப்பார்கள். தாசில்தார், ஜமாபந்தி நடக்கும் போதுமட்டும் தாத்தா, புத்தகக்கட்டுகளை வெட்டியானோ, தலையாரியோ சுமந்து வர, குடை பிடித்துக் கொண்டு கச்சேரிக்குப் புறப்படுவார். தாத்தாவுக்கு நொண்டிக் கணக்குப் பிள்ளை என்றும் ஒரு பேர் இருந்தது. நான் பிறந்த அன்றே, அவர் பயணம் செய்த வண்டி குடை சாய்ந்து அவர் கால்கள் உடைந்து போயின. இரண்டில் ஒன்று சரிப்படவே இல்லை. ஆகவே விந்தி விந்தி நடந்து போவார். என் 'ஜாதகம்' அப்படி.



தாத்தா, ஜில்லாவிலேயே பெரிய ஜோஸ்யர். அவர் சம்பாதனை என்பது ஜோஸ்யத்தில்தான். எப்போதும், தெருவை ஒட்டி இருந்த மூன்று திண்ணைகளிலும் ஜனங்கள் வண்டி கட்டிக்கொண்டு வந்து அமர்ந்திருப்பார்கள். குறிஞ்சிப்பாடி, முன்னஞ்சாவடி, நெய்வேலி, இந்தப் பக்கம் தொழுதூர் முதலான பல இடங்களில் இருந்தும் மக்கள், ஜாதகக் காகிதங்களுடன் வருவார்கள். குழந்தைகள் பிறந்தால், ஜாதகம் கணிப்பார். வருபவர்கள் வாழை இலைக்கட்டுகள், பூசணிக்காய், சுரைக்காய், சுண்டைக்காய், மற்றும் வாழைப்பழம் மரியாதைகளோடு வருவார்கள். அவர்களின் உறவு ஜோசியக்காரன், பார்க்க வருபவர்கள் என்பதாக இருக்காது. நெருங்கிய ரத்த பந்துக்காரர்களாக அவர்கள் சம்பாஷிப்பது மிகவும் ரம்மியமாக இருக்கும். தாத்தாவுக்கு, அவரது ரசிகர்களின் குடும்பச் சங்கதிகள் அத்தனையும் அத்துபடி. பிறந்த குழந்தைக்கு ஜாதகம் எழுதிய அவரே, அந்தக் குழந்தையின் குழந்தைக்கும் அந்தக் குழந்தையின் குழந்தையின் குழந்தைக்கும் ஜாதகம் எழுதியதை நான் அறிவேன். எனக்கும் தாத்தா ஜாதகம் எழுதி இருக்கிறார். பச்சை அட்டை போட்ட பவுண்ட் நோட்டில் எழுதியது. இன்னும் என் மனைவியிடம் பத்திரமாக இருக்கிறது. அதில் என்னுடைய 33வது வயதில் உலகையே சுற்றி வருவேன் என்றும், யோகப் பிரசித்தனாகி, உலகையெல்லாம் ஜெயித்து விக்கிமாதித்த மகாராஜா மாதிரி சிங்காசனம் ஏறுவேன் என்றும், செல்வத்தில் குபேரனாகவும், அழகில் மன்மதனாகவும், எட்டுத்திக்கும் விட்டெறிய ஆட்சிப் பரிபாலனம் பண்ணுவேன் என்று எழுதி இருக்கிறார். இடை இடையே கவிதையாகவும் (எண்சீர் விருத்தத்தில்) புனைந்து தள்ளி இருக்கிறார்.



பாரப்பா புதபகவான் பாரு பாரு

பார்ப்பதனால் ஜாதகனின் ஆயுள் ஓங்கி

பாருலகில் பிரசித்தி தேஜஸ் செல்வம்

பனிபுத்ரி ஜல புத்ரி நிலத்துப் பெண்கள்

பணிபூண்டு பார்யைகளாய் விளங்கி ஒன்று

நூறாண்டு ஆயுளிலே ஜகத்தை வென்று

ஆறோடு இரண்டுமான திக்கை எல்லாம்

காலடியில் இருக்குமாறு கண்பா ரப்பா. . .



என்று கவிதைகள் போகும். பனிபுத்ரி என்றது மலைநாட்டுப் பெண்கள். ஜலபுத்ரி என்றது, கடற்கரை நாட்டுப்பெண்கள். நிலத்துப் பெண்கள் என்றது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைப் பிரதேசத்துப் பெண்கள். இவர்கள் எல்லாம் என் மனைவிகளாக அமைந்து குடும்பம் (எத்தனை குடும்பம்?) நடத்துவார்களாம். ஆயுசு நூறாம். எட்டுத் திக்கும் என் காலடியிலாம். இதற்கு புதபகவான் அருள் செய்வாராம். தாத்தாவின் ஆசை அப்படி இருந்திருக்கும் போலும். தனக்குக் கிடைக்காதது தன் பேரனுக்காவது கிடைக்கட்டுமே என்கிற பேருள்ளம். யதார்த்த நிலைமை என்னவென்றால், தீபாவளியைத்தள்ள நண்பர்களிடம் இருந்து 'செக்கை' எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதுதான்.



எனக்கு ஜோசியத்தில் நம்பிக்கை இல்லாமல்போனது, என் தாத்தா எனக்குத் தந்த ஞானம்தான்.



தாத்தா வீடு இத்துடன் முடிந்து விடவில்லை. அவர் படித்த புத்தகங்கள் கொண்ட கறுப்பு நிறத்தேக்கு அலமாரி. அலமாரியின் மேல் இருக்கும் புத்தகங்களை ஸ்டூல் போட்டு ஏறித்தான் பார்க்க வேண்டும். வடுவூர் துரைசாமி ஐயங்கார், ரங்கராஜு, கோதைநாயகி என்று பலரும் அங்கே இருந்தார்கள். தமிழில் வந்த விசித்திரமான துப்பறியும் நாவல்கள், அரேபிய தேசத்து அற்புதக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், தமிழ் நாட்டுக் கதைகள், முதல் உலக மகாயுத்தம் என்று வகைவகையான புத்தகங்கள். மேல் அடுக்கில் மிகவும் பத்திரமாக இருந்த கொக் கோகத்தைக் கண்டுபிடித்து, ரகசியமாகப் படித்தேன். படித்தேன் என்றால் சாதாரணமாக அல்ல. எழுத் தெண்ணிப் படித்திருக்கிறேன். பல பாடங்கள் இன்றும் எனக்கு மனப்பாடமாக இருக்கிறது.



நான் தாத்தா வீடு வந்து பல நாளாகியும் அப்பாவும் அம்மாவும் தங்கையும் தம்பியும் வரவில்லை. ஊரில் தேர்தல் அறிவிக்கப்பட்டதாம். தாத்தா சொன்னார். எங்கள் மாநில விடுதலை நெருங்கிக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ்காரன் பெட்டி படுக்கையோடு கப்பல் ஏறிப்போனாலும், புதுச்சேரியை விடப்போவதில்லை என்று பிரஞ்சுக்காரன் முரண்டு பண்ணிக்கொண்டிருந்தான். ஏகாதிபத்யவாதிகளிலேயே மிக மோசமான ஏகாதிபத்ய வாதி பிரஞ்சுக்காரன் என்பது என் அபிப்ராயம். உண்மையும் கூட அதுதான். நேரு மிக நிதானமாக, மீண்டும் ஒரு இந்திய பிரஞ்ச் யுத்தம் வந்துவிடக் கூடாது என்று பட்டேலைச் சாந்தப்படுத்திவிட்டுக்காய் நகர்த்திக்கொண்டிருந்தார். 1954 நவம்பர் முதல் தேதியாகிய எங்கள் சுதந்திர தினம் நெருங்கிக் கொண்டிருந்தது. அப்பா, காங்கிரஸ்காரர் என்ற முறையில் கட்சி வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார் என்று தாத்தா சொன்னார்.



எனக்கு எந்தக் கவலையும் இல்லை. பின்னாளில் நர்சாகிய மாதவி எனக்குக் கிடைத்திருந்தாள். மேட்டுத்தெரு வீட்டுத் தோட்டம்.துவை கல். புத்தகங்கள். தெருமுனையில் இருந்த ஏரி. ஏரியை ஒட்டிய புளியந்தோப்பு. என் கற்பனைகள் என்னுடன் இருந்தன. அந்தக் குயில்களுக்கு வேடன் இல்லாத விருந்துத் திருநாள் மாதிரி எனக்குப் பள்ளிக் கூடமும் வாத்தியார்களும் இல்லாத விடுமுறை. எங்கள் தெருவில் இருந்த இடதுசாரி, வலது சாரி வீடுகள் எத்தனை (அரசியல் சாரி இல்லை) என்று எனக்குத் தெரியும். வீடுகளில் மனிதர்கள் யார் யார் என்று எனக்கு அத்துபடி. எங்கள் வீட்டு எதிர்சாரியில் அரியலூர் அம்மாவின் வீடு. அந்த அம்மாவின் மகன் கண்ணன் எனக்குச் சினேகிதம். கண்ணனின் அண்ணன் தமிழரசுக்கழக அனுதாபி. வீட்டு வாசலில்வில், கயல், புலிக்கொடி பறக்கும். சிலம்புச் செல்வரின் படம் வீட்டு அரிவுக்காலில் மாட்டி இருக்கும்.



ம.பொ.சிவஞானத்தின் புத்தகங்கள் அப்போதுதான் எனக்கு அறிமுகம் ஆயின. கண்ணனும் நாளடைவில் கட்சிக்காரர் ஆனார். எல்லைப்போரில் சிறைக்குப் போனதாகவும் பின்னாளில் அறிந்தேன். ஏதோ ஒரு தகராறில் வெட்டுப்பட்டுச் செத்தார். எதிர்ச்சாரியில் ஏழாம் வீட்டில் இருந்த படித்த, அழகான, குடை பிடித்துக்கொண்டு தெருவில் நடந்த, சரஸ்வதி அக்கா திடுமெனக் காணாமல் போய், தெரு களேபரத்தில் ஆழ்ந்தது நினைவில் இருக்கிறது.



ஒருநாள், தாத்தாவீடு வித்தியாசமாகத் தோற்றம் தந்தது. ஆயா, அன்று சோறு ஆக்கவில்லை. எனக்கு ஓட்டலில் இருந்து சாப்பாடு வந்தது. ஆயா நடு வீட்டில் அமர்ந்து கொண்டு அழுதுகொண்டிருந்தது. ஜோசியம் பார்க்க வந்த ஜனங்களை அனுப்பிவிட்டுத் தாத்தா சாய்வு நாற்காலியில் புதைந்து கொண்டார். திடுமென எழுந்து ஜாதகப் புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்தார். மாமாக்கள் மவுனம் காத்தார்கள். ஒன்றிரண்டு வாரங்கள் இது நீடித்தது.



விடுமுறை முடிந்து என் மாமாவின் துணையுடன் தாத்தா தைத்துக் கொடுத்த புதுச்சட்டை, மற்றும் முட்டிவரை நீண்ட அரைக்கால் சட்டையுடன் ஊர் திரும்பினேன். அம்மா என்னைப் பார்த்ததும் கதறியபடி கட்டிக்கொண்டு அழுதது. நான் அம்மாவை விலக்கிக்கொண்டு தோட்டத்துப் பக்கம் போனேன். அறைகள் எல்லாவற்றுக்கும் போய்ப் பார்த்தேன். எங்கும் பானுவையும் மூர்த்தியையும் காணவில்லை. 'அண்ணன் எங்கே எங்கேன்னு கேட்டிங்களே, கண்ணுங்களா, அண்ணன் வந்துட்டான், நீங்க போய்ட்டீங்களே' என்று நடுவீட்டில் தரையில் புரண்டு அம்மா அழுதது. அப்போதுதான் கவனித்தேன். நடு வீட்டில் பானுவின் புகைப்படம் சட்டம்போட்டு அதன் உச்சியில் பூக்கள் சொருகி இருந்தன.



அப்போதெல்லாம், அம்மை ஆண்டுதோறும் கோடைக் காலங்களில் தவறாமல் வரும். அம்மை நோய் வந்தால், தெருவுக்குப் பத்து, இருபது குழந்தைகள் செத்துப் போவார்கள். அனேகமாக நாலு வீட்டுக்கு ஒரு வீட்டில் கூரையில், வாயிலில் வேப்பிலைகள் சொருகி இருப்பார்கள். வேப்பிலை சொருகிய வீடுகளில் அம்மை வந்திருக்கிறாள் என்று அர்த்தம். வேப்பிலை சொருகி இருக்கும் வீடுகளில் நாலைந்து நாள்களில் அழுகை ஒலி கேட்கும். குழந்தை செத்துப் போயிருக்கும். உடன் நாலைந்து நாட்களில் அந்த வீட்டில் இருந்த இன்னொரு குழந்தை செத்துப் போகும். கோடைக்காலம் வருகிறது என்றாலே, ஜனங்கள் பயந்தபடி அலைவார்கள். எங்கள் ஊரில் பாட்டுகள் பல இது பற்றியே பாடப்பட்டன.



கோடை வந்துடுச்சு எங்கம்மா

கோமாரி வருவாளே. . .

குழந்தைகளை விட்டுடும்மா. . என் குலம் காத்து ரட்சியம்மா. .

குழந்தைங்களை விட்டுட்டு

எங்க உயிரை எடுத்துக்கம்மா. . .



அம்மை மாரி குழந்தைகளைத் தான் அதிகம் நேசித்தாள். ஒரு திங்கட்கிழமை அன்று பானு அம்மை வந்து படுத்திருக்கிறாள். புதன்கிழமை அம்மை உச்சமாகி இருந்தது. வெள்ளிக்கிழமை பானு குளிர்ந்து போயிருக்கிறாள். வியாழக்கிழமையே மூர்த்திக்கும் அம்மை போட்டு மயக்கமாகி இருக்கிறான். ஞாயிற்றுக்கிழமை அவன் குளிர்ந்து போயிருக்கிறான். பானுவுக்கு வெட்டிய குழியும் ஈரம் காயவில்லை. அந்தக் குழி அருகில் அப்பா, மயக்கமாகி விழுந்துவிட்டார். மயக்கம் தெளிவித்து வீட்டுக்கு அழைத்து வந்து இருக்கிறார்கள். இரண்டு நாட்கள் படுத்துக் கிடந்திருக்கிறார். பிறகு, துண்டை எடுத்துப் போட்டுக் கொண்டு, வடக்கு பார்த்துப் போனார் என்று அம்மா சொல்லி இருக்கிறது. இரண்டு வாரங்களாகியும் அவர் திரும்பாததைக் கண்டு அம்மா பயந்து போனது. தாத்தா வீட்டில் கலவரம். அம்மை போட்ட வீட்டில் சம்பந்திகள் வருகை தடுக்கப்பட்டிருந்தது. ஆகவே தாத்தாவும், ஆயாவும், மாமாக்களும் சாவுக்கு வரவில்லை. இப்போது அப்பாவைத்தேடி மாமாக்கள், உறவுகள் திக்குக்கு ஒருவராகப் புறப்பட்டார்கள். ஆயா உடனிருந்து அம்மாவைக் காப்பாற்றி இருக்கிறது. ஒரு மாதத்துக்குப்பிறகு, வள்ளி மலைக்கு அருகில் அப்பாவைச் சாமியார்களோடு இனம் கண்டுபிடித்து தாடி மீசையோடு அழைத்து வந்திருக்கிறார்கள். பல மாதங்கள் அப்பா வீட்டைவிட்டு வெளியே போகாமல் எரவானத்தைப் பார்த்தபடி இருந்தார்.



அப்போதெல்லாம் எல்லா வீடுகளிலும், எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் மூட்டைப்பூச்சிகள் வந்து விடும். அடை அடையாக நாற்காலி, படுக்கை, பாய், கட்டில் இணைப்புகள், சுவர்ப்பள்ளங்களில் அவை வாழும். இரவு படுத்தபிறகு ரத்தம் குடிக்க வந்துவிடும். எனக்கு மூட்டைக் கடியில் தூக்கம் பிடிக்காது. புரண்டு புரண்டு படுப்பேன். அதற்காக அப்பா, ஒரு ஜிமினி விளக்கைக் கொளுத்திக்கொண்டு என் பக்கத்தில் அமர்ந்து கொண்டு வெளியே வந்து மாட்டிக்கொள்ளும் மூட்டைப் பூச்சிகளைப் பிடித்து ஜிமினி விளக்கில் போட்டுக் கொன்று கொண்டிருப்பார். மின்சாரம் எங்கள் வீட்டில் நான் ஏழாவது படிக்கும்போது வந்தது. அதுவரை அப்பா இரவில் விளக்கோடு என் அருகில் அமர்ந்திருப்பார். மூட்டைப் பூச்சி அற்றுப் போச்சி என்று சுவரில் என்னை எழுதச் சொன்னார் அப்பா. பிரஷை வர்ணத்தில் தொட்டுக்கொண்டு நானும் அப்படியே எழுதினேன். அப்படி எழுதினால் மூட்டைப் பூச்சி அற்றுப் போகுமாம். எப்படியோ, மூட்டைப் பூச்சி அற்றுப்போயிற்று. அதன்பிறகு அப்பா விழித்துக்கொண்டு, விளக்கை ஏற்றி, விளக்கு வெளிச்சத்தில் என்னைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பார். அடிக்கடி என் மூக்குக்கு அருகில் விரலைப் பிடித்துக்கொண்டு என் மூச்சு சீராக வெளிவருவதைக்கண்டு ஆறுதல் அடைவார். பள்ளிக்கூடத்துக்குக் கூடவே வருவார். நான் பள்ளிக்கூடம் விட்டு வருகிறவரைக்கும் எதிரில் இருக்கும் Ôஜெகனாதம் பிரஸ்Õ மரப் பலகையில் அமர்ந்திருப்பார். பின்னாலேயே சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வருவார். என்னை மரணம் எடுத்துக்கொண்டு போய்விடாமல் காப்பாற்றுவதாக அவர் நினைத்தார். மரணத்திடம் அவருடைய ஒற்றைக் குழந்தையை விட்டுவிட மாட்டார். அவர் மரணத்தோடு ஒரு யுத்தத்துக்குத் தயாராக இருந்தார். மரணம் அவர் எதிரில் வந்தால் அதை வெட்டிக் கொல்லாமல் விடமாட்டார். அப்பாவை அழைத்துப் போய் ஆந்திராவில் இருந்த ஒரு வைத்திய சாலையில் வைத்து வைத்தியம் பார்த்தார்கள். அப்பா இயல்புக்கு வெகு விரைவிலேயே திரும்பினார்.



கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிக்கூடம் திறந்தது. நான் தயாராகிக் கொண்டிருந்தேன். அப்படியென்றால், புதுச்சட்டை, புது பேண்ட் (முதல் முதலாக அந்த வருஷம் பேண்ட் அணிகிறேன்) தைத்துக்கொள்ளுதல், நாலைந்து புத்தகக் கடைகளில் தேடிப் புத்தகம் வாங்குதல், பேனா, இங்க் பாட்டல், ஜாமெட்ரி பெட்டி முதலானவைகளைச் சேகரித்தல் என்று அர்த்தம். 'நேம் சிலிப்' தருகிற கடைகளாகப் பார்த்துப் பொருள்களை வாங்க வேண்டும். மை ஒட்டி எடுக்கிற, பிளாட்டிங் பேப்பரைச் சில கடைக்காரர்கள்தான் தருவார்கள். அம்மா, எனக்காக முகத்தில் சிரிப்பைப் பூசிக் கொண்டு என் புதுப் பள்ளிக்கூட ஏற்பாடுகளைச் செய்தது. கேக்கும் போதெல்லாம், தேவைக்கு அதிகமாகவே பணம் கொடுத்தது. அம்மாவுக்கு நாவற்பழம் பிடிக்கும். அந்தக் கலரும் பிடிக்கும். எனக்கு அந்தக் கலரில் சட்டைத் துணி கிழித்துத் தைக்கக் கொடுத்தது. தையற்காரர் கிருஷ்ணன், அளவே எடுக்காமல் தோராயமாகவே ஆடைகள் தைக்கும் நிபுணர். என்ன, சட்டை என் மாமாவுக்கும் பொருந்துமாறு இருக்கும். வளர்கிற பிள்ளைகளுக்கு அப்படித்தான் இருக்கவேண்டும் என்ற அவர் நியாயத்தை அப்பா மனப் பூர்வமாக ஏற்றுக்கொள்வார். அது பரவாயில்லை. பேண்ட் இடுப்புக்குள் ஒரு நாயும் சேர்ந்து இருக்கும் அளவுக்குப் பெரிசாக இருக்கும். அதற்கென்ன. 'பெல்ட்' என்கிற பொருள் பின் எதற்காகத்தான் இருக்கிறது. உடைந்த கைக்குப் போடும் துணிக்கட்டு மாதிரி என் இடுப்பைச் சுற்றி இரண்டு முறை சுற்றி பெல்ட் கட்டுவார்கள். புதிய தொப்பி, புதிய செருப்பு எல்லாம் தயாராக இருந்தன. என் புத்தகப்பையும் புதுசாகவே இருந்தது. என் புதுப் பையோடு இன்னுமொரு புதுப்பையும் அறையில் இருந்தது. 'இது எதுக்கும்மா' என்றேன்.



விடுமுறைக்குப் பிறகு பானுவையும் இந்த ஆண்டு பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதாக இருந்தது. அப்பா அதை அழைத்துப்போய் முதல் வகுப்பு புத்தகம், நோட்டு, பென்சில், பென்சில் சீவும் மிஷின் எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அந்தப் பைதான் ஆணியில் மாட்டி இருந்தது.



அம்மா சிரித்தபடி என்னை ரிக்ஷா வண்டியில் ஏற்றித் தலையைத் தடவிக் கொடுத்தது. வண்டி நகர்ந்தபின் உள்ளே போனது. எனக்குத் தின்பண்டம் வாங்கக் காசு வாங்கிக் கொள்ளாதது நினைவுக்கு வந்தது. பள்ளிக்கூட வாசலில் சோன்பப்டி விற்கும். எங்கள் குழாத்தில் அதன் பெயர் மயிர் மிட்டாய். வண்டியை நிறுத்தச் சொல்லி வீட்டுக்குள் நுழைகிறேன். அம்மா, பானுவின் புத்தகப் பையை மார்பில் வைத்துக்கொண்டு குலுங்கி அழுது கொண்டிருந்தது.



அப்பாவுக்கும் பெண் இல்லை. எனக்கும் பெண் இல்லை. என் மருமகள்களே என் பெண்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்.



ஓவியங்கள்: ஆ.விஜயகுமார்