ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

Gnani..!

November 3, 2008










ஞாநியை நான் ஏன் நிராகரிக்கிறேன்



அறிவு ஜீவிகள் என்று தம்மை நினைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கெல்லாம் இருக்கின்ற ஒரு பொதுவான பிரச்சனை தாம் மற்றவர்கலிருந்து வித்தியாசமானவர்கள் என்றும், தம் சிந்தனைகள் வித்தியாசமானவை என்றும் காட்டவேண்டும் என்பதற்காக மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் உணர்ச்சிகளை தமது கடந்த கால வரலாற்று அறிவினாலும், அளாவுக்கு அதிகமான புள்ளி விபரங்களினாலும், தர்க்கங்களினாலும் குழப்பி, மக்களை மட்டம் தட்டி நிற்பதாகும். வரலாற்று அறிவினாலும், புள்ளி விபரங்களாலும் சரியென சொல்லப்படுபவை பிழையாக இருக்க முடியாதே என்று சிலர் கூறலாம், ஆனால் சற்று புத்திசாலித்தனமான ஒருவரால் எந்த விடயத்தையும் நியாயப்படுத்தக்கூடிய புள்ளி விபரங்களை வெகு இலகுவாக தொகுக்கவோ தர்க்கிக்கவோ முடியும். சென்ற வார தினமலரை பார்த்துக்கொன்ண்டிருந்த போது அரசியல் விமர்சகர் ஞாநியும் இந்த வகையோ என்ற என்னுடைய நெடுநாள் சந்தேகம் நிரூபனமாகிவிட்டது.



ஆனந்த விகடனில் ஓ பக்கங்களை தொடங்கிய நாள் முதல் விகடனின் வெகுஜன கவர்ச்சியால் மிகப்பெரும் கவனிப்புக்கு உள்ளானவர் ஞாநி. அதற்கு முன்னரே 98ல் விகடனில் அவர் எழுதிய தவிப்பு என்கிற தொடர்கதை கூட விடுதலை போராட்டங்களை பற்றி சரியான முறையில் பதிவு செய்யவில்லை என்பது எனது கருத்து. (அதில் வரும் ஆனந்தி என்கிற பாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது). இந்நாட்களில் அவர் எழுதிய கண்ணகி சிலை பற்றிய கட்டுரை, கலைஞர் ஓய்வு பெற வேண்டும் என்கிற கட்டுரை, ஜெயலலிதா – சசிகலா ஆலயம் ஒன்றில் பூசகர் கொடுத்த மாலைகளை மாற்றி மாற்றி அணிந்த போது தி மு க சார்பான ஏடுகள் “ஜெ – சசி ஆலயத்தில் மாலை மாற்றினர்” என்று கொச்சை படுத்தியபோது இவர் இன்னும் ஒரு படி போய் லெஸ்பியன் உறவில் என்ன தவறு ? என கேள்வியெழுப்பி அவர்கள் ஒரு பாற் சேர்க்கையாளார்கள் என்பது போன்ற ஒரு குழப்பத்தை உண்டாக்கியது, பின்னர் பிரபாகரன் பற்றி கொச்சைப்படுத்தி படம் எடுத்ததாக சிங்கள இயக்குனர் துசாரா பீரிஸ், சீமான், சுபவீ போன்றவர்களால் தாக்கப்பட்ட போது, “இரட்டை குவளை முறையை ஒழிக்க போராடாத சுபவீ ஏன் இலங்கை இனப்பிரச்சனை பற்றிய போராட்டங்களில் ஈடுபடுகிறார்?” என்கிற அபத்தமான கேள்வியை எழுப்பியது, அதனை தொடர்ந்து சுபவீ, அறிவுமதி போன்றவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது என்று இவரது பல கட்டுரைகளும் கருத்துகளும் மிக மோசமான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளன.









அக்டோபர் 26ம் திகதி வெளியான தினமலர் இதழில் ஞாநி ஈழப்பிரச்சனை பற்றி எழுப்பியிருக்கும் சில வினாக்கள் மிகுந்த கண்டணத்துக்குரியவை. வெகுஜன இதழ்களில் புகுந்ததனால் மிகப்பெரும் கவனிப்பை பெற்ற, தம்மை மிகப்பெரிய சிந்தனாவாதிகளாக காட்டிக்கொள்ளும் ஞாநி போன்றவர்களின் இக்கருத்துகள் மிகப்பெரும் விஷ வித்துக்களாக உருவெடுக்க கூடியவை. “ஆயுதப் போராட்டம் தொடங்கியபோதும் ஈழத்தமிழர்கள் ஓரணியில் இருக்கவில்லை, அதற்கு காரணம் அவர்களுக்கிருந்த வேறுபட்ட அரசியல் பார்வைகள்தான். அரசியலுக்கு அப்பாற்பட்டு அவர்கள் ஒற்றுமையாக இயங்கியிருந்தால் வெகு சுலபமாக அன்றைக்கே தனி ஈழத்தினை பெற்றிருப்பர்” என்கிற கருத்தை கண்டுபிடித்துள்ளார் ஞாநி. ஊர் கூடி தேரிழுத்தால் வந்து சேரும் என்கிற பழமொழிக்காலத்தில் இருக்கிறீர்கள். நன்றி. இக்கருத்தை இருபதாண்டுகளுக்கு முன்னர் நீங்கள் சொல்லியிருந்தால் கூட சிலவேளை ஏற்றிருக்கலாம். ஆனால் இன்று அங்கு நடைபெறுவது பெருமெடுப்பிலான இனவழிப்பு. அதுமட்டுமல்ல கொழும்பில் இருக்கும் விடுதலைப்புலிகளால் நிராகரிக்கப்பட்ட ஏனைய தமிழ் இயக்கங்கள் இந்த இனவழிப்பின்போது ஏன் மௌனமாக உள்ளன என்ற கேள்விக்கு ஏதாவது பதில் கைவசம் வைத்துள்ளீர்களா? எல்லாம் புரிந்த மிகப்பெரும் மனிதாபிமானியான உங்களுக்கு இது ஏன் புரியவில்லை என்பது தெரியவில்லை. இயக்கங்கள் பிழை விட்டதாக வைத்துக்கொண்டாலும் அதற்காக ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவிப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது. அடுத்ததாக தோல்வியுற்று வரும் புலிகள் சிங்கள அரசின் தாக்குதலை நிறுத்தவும் அந்த நேரத்தில் தம்மை வலுப்படுத்தவும் தான் தமிழகத்தில் உள்ள மனித நேய உணர்வையும், தமிழ் உணர்வையும் பயன்படுத்த முயல்கின்றனர் என்று கூறியுள்ளீர்கள். ஆனால் இந்த முழு கட்டுரையிலும் ஒரு தடவை கூட திரள் திரளாக மக்கள் சாகின்றார்களே என்பதை நீங்கள் ஏன் உணர்த்தவில்லை. கட்டுரை முழுவதும் சிங்கள அரசு என்றே குறிப்பிடுவதால், அது சிங்களவர்களின் அரசு, தமிழர்களிற்கு பங்கில்லாதது என்கின்ற ஒரு கட்டமைப்பும் காணப்படுகிறது. தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் ஒப்புக்கொண்ட இந்த ஒற்றுமைக்கு நன்றிகள்.







தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாகவேண்டும் என்ற ஒரு உயரிய சிந்தனையை சொல்லிவிட்டு, அப்படி ஒற்றுமையானால்தான் தமிழர்களின் கல்வி மேம்பாட்டை சிங்களவர்களும் சிங்களவர்களிடமிருந்து நல்ல படங்களை எடுப்பது எப்படி என்று தமிழர்களும் அறிந்துகொள்ளமுடியும் என்றும் கூறியிருக்கிறீர்கள். கட்டாய மதுவிலக்கை அமுல் படுத்தவேண்டும் என்று அடிக்கடி எழுதும் ஞநி நீங்கள் தானே என்று எனக்கு குழப்பமாகவுள்ளது. ஞாநி, தென்னிந்திய திரைப்படங்களின் பாணியை விட்டு விலகி உய்ர் ரசனையுடன் படம் எடுப்பதல்ல இப்போதைய பிரச்சனை, இலங்கையில் இருக்கும் தமிழர்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு அங்கே உயிருடன் வாழ்வார்கள் என்பதே பிரச்சனை. பாலியல் பலாத்காரத்தில் கைதுசெய்யப்பட்ட நடிகர் எப்படி ராணுவம் செய்யும் பாலியல் பலாத்காரம் பற்றி பேசுவார் என்கிறீர்கள், திரைப்பட படப்பிடிப்பிற்காக சிம்பு ஏன் கண்டி சென்றார் என்கிறீர்கள் இது ஒரு வறட்டு வாதம். ஒரு சினிமா நன்றாக இல்லை என்று விமர்சகன் சொன்னால் அப்ப நீயே படம் எடு என்று இயக்குநர் சொல்வதற்கொப்பானது. எது பற்றியும் முழுமையாக தெரிந்த ஒருவனே அது பற்றிய தொழிலில் இறங்கவேண்டும் என்று சொன்ன நீங்கள் மருத்துவம், உளவியல், பாலியல் எல்லாம் கற்று முடித்தா அறிந்தும் அறியாமலும் என்று ஆனந்த விகடனில் எழுதினீர்கள்????





முன்பொருமுறை இயக்குநர் துசாரா பீரிஸ் தாக்கபட்டபோது நீங்கள் இரட்டை குவளை முறையை எதிர்க்காத சுபவீ ஏன் இதில் தலையிடுகிறார் என்கிற ஒரு மகா அபத்தமான கேள்வியை எழுப்பியிருந்தீர்கள். இயக்குநர் பீரிஸ் தாக்கப்பட்டதை அணுவளவு கூட ஏற்றுக்கொள்ளாத என் போன்ற ஆயிரக்கணக்கானோர் உள்ளோம். ஆனால் நீங்கள் காட்டும் உதாரணம் மிகத்தவறானது. ஞாநி, ஒரு தவறுக்கு இன்னொரு தவறு ஒருபோதும் நியாயமாகாது. விடுதலைப்புலிகளைப்பற்றி மிகப்பெரிய அளவில் ஊடகங்களினூடாக அவர்கள் பயங்கரவாதிகள் என்ற பிரச்சாரத்தை சில சுயநலவாதிகள் மூலம் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் சிங்கள அரசின் பிரச்சார உத்தி ஒன்றிற்கான எதிர்வினைதான் அது. அசர் தாக்கபட்டது பிழ என்றபோதும் கூட இப்படியான உங்களின் விதண்டாவாதங்களின் சரியான பதிலடி விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கூரிய பதில் என்பது என்கருத்து. (பீரிஸ் தாக்கப்பட்டிருக்க கூடாது, அவரது படத்தை சுதந்திரமாக வெளியிட்டு, பின்னர் தமது தரப்பை நியாயப்படுத்தி விடுதலைப்புலிக்ளா தரப்பும் ஒரு படம் தயாரிக்கலாம் என்று ஞாநி கூற, அதாவது நடு வீட்டில் நரகல் வந்துவிட்டால், அதையும் இருக்க விட்டு விட்டு, ஒரு ஊதுபத்தியையும் ஏற்றி வைக்கலாம் என்கிறீர்களா என்று திருமாவளவன் கேட்டார்.)

சின்னக்குத்தூசி, சோலை, ஞாநி, சோ என்று மிகச்சில அரசியல் விமர்சகர்களே தமிழ் மொழியில் இருக்கின்ற் சூழலில், நால்வருமே பக்கச் சார்புடையவர்களாகிப்போனது பெரும் சோகம். அதிலும் ஞாநி வேண்டும் என்றே கட்டமைக்கும் கலகக்காரர் தோற்றம் மிகுந்த விமர்சனத்துகுள்ளாக்கவேண்டியது. மகாபலிபுர புலிக்குகையில் குடுபத்தினருடன் வந்து இளைப்பாறி கலாஷேத்திராவின் நடன நிகழ்ச்சியை கண்டு ரசிக்கும் ஈழத்து முத்லமைச்சராக பிரபாகரன் வரும் நாளையும், ஈழத்து முதலமைச்சராக சிங்கள இயக்குனர் பிரசன்னாவுக்கு சிறந்த இயக்குனர் என்று பிரபாகரன் பரிசளிக்கும் நாளையும் கனவுகாண்கிறேன் என்றெல்லாம் கோமாளித்தனமாக இந்த இக்கட்டான நிலையில் ஒரு நியாயமான போரட்டத்தை மசாலா சினிமா போல காட்டாதீர்கள். பிரபாகரனின் ராணுவ அரசாங்கத்தைவிட, கலைஞரின் ஊழல் அரசாங்கம் மக்களுக்கு அதிகம் உதவியிருக்கிறதென்று விஷன் தோய்ந்த சொற்களை கூறியுள்ளீர்களே, தாயின் கருவில் இருக்கும் பிள்ளை சுகப்பிரசவம் ஆகவேண்டும் என்று நாம் கவலைப்படுகிறோம், பிறக்கும் பிள்ளை வளர்ந்து சிலவேளை கெட்டவன் ஆகிவிட்டால் என்ன செய்வது, எனவே பிள்ளை இறந்தால் கூட கவலைப்படாதீர்கள் என்பது போலிருக்கிறது உங்கள் கருத்து. பிரபாகரன் ஈழத்தின் முதல்வராகவேண்டும் என்ற உங்கள் கனவு நிச்சயம் நிறைவேறும். ஆனால், இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, விகடன், பண்பலை வானொலி, என்று எல்லா இடங்களிலும் துரத்தப்பட்டு ஓடிவந்ததால் உங்களுக்கு ஏற்பட்ட பித்தம் தெளியவேண்டும் என்ற எமது கனவு என்றேனும் நிறைவேறுமா