ஒரு விபத்து போலதான் அது நடந்தது.
செல்வநாயகம்
மாஸ்ரர் வீட்டில் தங்க வேண்டிய நான் ஒரு சிறு அசொகரியம் காரணமாக இப்படி
ஜோர்ஜ் மாஸ்ரர் வீட்டில் தங்க நேரிட்டது. எனக்கு அவரை முன்பின் தெரியாது.
அந்த இரண்டு இரவுகளும் ஒரு பகலும் எனது வாழ்க்கையில் மிகவும்
முக்கியமானவையாக மாறும். எனது பதினாலு வயது வாழ்க்கையில் நான் கண்டிராத
கேட்டிராத சில விஷயங்கள் எனக்குப்
புலப்படுத்தப்படும். இன்னும் சில அதிர்ச்சிகளுக்கும் தயாராக நேரிடும்.
ஜோர்ஜ்
மாஸ்ரர் பூர்விகத்தில் கேரளாவில் இருந்து வந்தவர். அவர் கழுத்தினால்
மட்டுமே கழற்றக்கூடிய மூன்று பொத்தான் வைத்த முழங்கை முட்டும் சட்டையை
அணிந்திருந்தார். அவருடைய முகம் பள்ளி ஆசிரியருக்கு ஏற்றதாக இல்லை.
வாய்க்கோடு மேலே வளைந்து எப்போதும் சிரிக்க ஆரம்பித்தவர் போலவே
காட்சியளித்தார்.
மிஸஸ் ஜோர்ஜை பார்த்தவுடன்
கண்டிப்பானவர் என்பது தெரிந்துவிடும். பொட்டு இடாத நெற்றி கடும் வெள்ளையாக
இருந்தது. யௌவனத்தில் இருந்து பாதி தூரம் வரை வந்திருந்தாலும் அவருடைய
கண்கள் மூக்குக்கு கீழே தென்படுவதைப் பார்த்துப் பழக்கப்படாதவை.
கறுப்புக்கரை வைத்த வெள்ளைச்சேலை அணிந்திருந்தார். சேலையின் ஒவ்வொரு
மடிப்பும் கனகச்சிதமாக உரிய இடத்தை விட்டு நகராமல் அப்படியே நின்றது. நான்
அங்கு போனபோது இருவரும் மகளை எதிர்பார்த்துக் கொண்டு வாசலில் நின்றனர்.
மூன்று
பெண்கள் தூரத்தில் வந்தார்கள். எல்லோரும் ஒரே மாதிரியான சீருடை போன்ற
ஒன்றை அணிந்திருந்தார்கள். இருந்தும் அவர்களில் இந்தப் பெண் அவள்
உயரத்தினால் நீண்ட தூரம் முன்பாகவே தெரிந்தாள். அவள் அசையும்போது இடைக்கிடை
அவள் இடை தெரிந்தது; மீதி மறைந்தது. கிட்ட வந்தபோது அவள் கண்கள் தெரிந்தன.
அவை அபூர்வமாக ஓர் இலுப்பக் கொட்டையைப் பிளந்ததுபோல இருபக்கமும் கூராக
இருந்தன. கழுத்திலோ காதிலோ வேறு அங்கத்திலோ ஒருவித நகையுமில்லை. ஆனால்
மூக்கிற்குக் கீழே, மேல் உதட்டில் ஒரு மரு இருந்தது. இது அவள் உதடுகள்
அசையும்போதெல்லாம் அசைந்து எங்கள் பார்வையை அவள் பார்வையை திருப்பியது.
அப்படியே அவள் உடம்பை அவதானிக்கும் ஆர்வத்தையும் கூட்டியது. இது ஒரு
நூதனமான தந்திரமாகவே எனக்குப் பட்டது.
ரொஸலின் என்று
அவளை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். அலுப்பாக, கண்களை நிமிர்த்திப்
பார்த்தாள். அந்த முகம் பதின்மூன்று வயதாக இருந்தது. ஆனால் உடல் அதை
ஒத்துக் கொள்ளாமல் இன்னும் அதிக வயதுக்கு ஆசைப்பட்டது.
என்னுடைய
முதலாவது அதிர்ச்சி அந்த வீடுதான். அது எனக்குப் பரிச்சயமற்ற பெரும்
வசதிகள் கொண்டது. என்னிலும் உயரமான ஒரு மணிக்கூடு ஒவ்வொரு மணிக்கும் அந்த
தானத்தை ஞாபகம் வைத்து அடித்தது. விட்டுவிட்டு சத்தம் போடும். நான் முன்பு
தொட்டு அறியாத ஒரு குளிர் பெட்டி இருந்தது. தொங்கும் சங்கிலியைப் பிடித்து
இழுத்தால் பெரும் சத்தத்தோடு தண்ணீர் பாய்ந்து வரும் கழிவறை இருந்தது.
வாழ்நாள் முழுக்க பராமரித்தாலும் ஒரு பூ பூக்காத செடிகலைத் தொட்டிகளில்
வைத்து வளர்த்தார்கள்.
எனக்கு ஒதுக்கப்பட்ட அறை
அவசரமாகத் தயாரிக்கப்பட்டது. அலுமாரியும் மேசையும் ஒரு பக்கத்தை அடைத்தன.
நிறையப் புத்தகங்களும் வெற்றுப் பெட்டிகளும் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி
வைக்கப்பட்டிருந்தன. அலுமாரிக்குள் அனுமதி கிடைக்காத உடுப்புகள் வெளியே
காத்திருந்தன. படுக்கையில் விரிப்பு கலையாத வெள்ளை விரிப்பும், அநீதியாக
இரண்டு தலையணைகளும் கிடந்தன. அந்த அறையைத் தொட்டுக்கொண்டு மூன்று கதவுகள்
கொண்ட ஒரு குளியலறை இருந்தது. மூன்று பேரு மூன்று வாசல் வழியாக அதற்குள்
வரமுடியும். ஆனபடியால் மிகக் கவனமாக உள்பூட்டுகளைப் போடவும், பிறகு
ஞாபகமாகத் திறக்கவும் தெரிந்திருக்க வேண்டும். குளியல் தொட்டி வெள்ளை
நிறத்தில் இருந்து பழுப்பு நிறமாக மாறுகிறதா அலல்து பழுப்பு நிறத்தில்
இருந்து வெள்ளை நிறமாக மாறுகிறதா என்பதைச் சொல்ல முடியவில்லை. அதில்
நீண்டமுடி ஒன்று தண்ணீரில் நனைந்து நெளிந்துபோய் கிடந்தது. இன்னும் பல பெண்
சின்னங்களும், அந்தரங்க உள்ளாடைகளும் ஒளிவில்லாமல் தொங்கின.
இரண்டாவது
அதிர்ச்சி முத்தம் கொடுக்கும் காட்சி. அந்தப் பெண் அடிக்கடி முத்தம்
கொடுத்தாள். சும்மா போகிற தாயை இழுத்து அவள் கன்னத்திலே முத்தம்
பதித்துவிட்டுப் போனாள். சிலவேளை பின்னுக்கிருந்து வந்து அவளைக் கட்டிப்
பிடித்து ஆச்சரியப்பட வைத்தாள். சிலமுறை கன்னத்தில் தந்தாள்; சிலமுறை
நெற்றியில் கொடுத்தாள். தாயும் அப்படியே செய்தாள். சில நேரங்களில் அப்படிக்
கொடுக்கும்போது என்னைச் சாய்வான கண்களால் பார்த்தாள். எனக்கு அந்த
சமயங்களில் என்ன செய்வதென்று தெரிவதில்லை.
நான் முதல்
முறையாக அந்நியர் வீட்டிலே தங்கியிருந்தேன். அதிலும் அவர்கள்
கத்தோலிக்கர்கள். அவர்கள் பழக்கவழக்கங்கள் அப்படியாயிருக்கலாம் என்று
யோசித்தேன். ஆனாலும் கூச்சமாக இருந்தது. என் கண்களை இது சாதாரணமான
நிகழ்ச்சி என்று நினைக்கும் தோரணையில் வைக்கப் பழக்கிக்கொண்டேன்.
சாப்பாடு
மேசையில் பரிமாறப்பட்டதும் நான் அவசரமாகக் கையை வைத்துவிட்டேன். பிறகு
பிரார்த்தனை தொடங்கியபோது அதை இழுத்துக்கொண்டேன். கடைசியில் ‘ஆமென்’ என்று
சொன்னபோது நான் கலந்து கொள்ளத் தவறிவிட்டேன். அதற்கு இந்தப் பெண் என்னை
ஒருமாதிரியாகப் பார்த்தாள்.
அன்று இரவு நடந்ததுவும்
விநோதமான சம்பவமே. பழக்கப்படாத அறை, பழக்கப்படாத கட்டில், பழக்கப்படாத
ஒலிகள், வெகு நேரமாக நித்திரை வரவில்லை.
மெள்ள
என்னுடைய கதவு திறக்கும் ஒலி. ஒரு மெழுகுவர்த்தியைப் பிடித்தபடி இந்தப்
பெண் மெள்ள நடந்து வந்தாள். வந்தவள் என் பக்கம் திரும்பிப் பாராமல் நேராக
பெட்டிகள் அடுக்கி வைத்திருக்கும் திசையில் போய் நின்றுகொண்டு
அமெரிக்காவின் சுதந்திரச்சிலை போல மெழுகுவர்த்தியை உயர்த்திப் பிடித்தாள்.
நான் திடீரென்று எழுந்து உட்கார்ந்தேன்.
“பயந்துட்டியா?”
இதுதான் அவள் என்னுடன் பேசிய முதல் வார்த்தை. நானும் அவள் பக்கத்தில்
நின்று என்னவென்று பார்த்தேன். அந்த மரப்பெட்டிக்குள் ஐந்து
பூனைக்குட்டிகள் ஒன்றன்மேல் ஒன்றாக மெத்துமெத்தென்று கண்ணை மூடிக் கிடந்தன.
ஒவ்வொன்றாக கையிலே எடுத்துப் பூங்கொத்தை ஆராய்வதுப்போல பார்த்தாள். அவள்
கைச்சூடு ஆறும் முன்பு நானும் தொட்டுப் பார்த்தேன். புது அனுபவமாக
இருந்தது.
“மூன்று நாட்கள் முன்புதான் குட்டி
போட்டது. இரண்டு இடம் மாறிவிட்டது. தாய்ப் பூனை இந்த ஜன்னல் வழியாக வரும்,
போகும். பார்த்துக் கொள்” என்றாள். அதற்கு நான் மறுமொழி சொல்லவில்லை.
காரணம் நான் அப்போது அவளுடைய முதலாவது கேள்விக்கு எழுத்துக் கூட்டிப் பதில்
தயாரித்துக் கொண்டிருந்ததுதான்.
சற்று நேரம் என்னையே
பார்த்துக்கொண்டு நின்றவள், எனக்கு பரிச்சயமானவள் போல ரகஸ்யக் குரலில்,
“இந்தப்பூனை குட்டியாக இருந்த போது ஆணாக இருந்தது. திடீரென்று ஒரு நாள்
பெண்ணாக மாறி குட்டி போட்டுவிட்டது” என்றாள். பிறகு இன்னும் குரலை இறக்கி,
“இந்தக் கறுப்புக் குட்டிக்கு மாத்திரம் நான் பெயர் வைத்துவிட்டேன்.
அரிஸ்டோட்டல்” என்றாள்.
“ஏன் அரிஸ்டோட்டல்?”
“பார்ப்பதற்கு அப்படியே அரிஸ்டோட்டல் போலவே இருக்கிறது. இல்லையா?”
இவ்வளவுக்கும்
அவள் என் பக்கத்தில் நெருக்கமாக நின்றாள். அவளுடைய துயில் உடைகள் சிறு
ஒளியில் மெல்லிய இழை கொண்டதாக மாறியிருந்தன. கேசம் வெப்பத்தைக் கொடுத்தது.
என் விரல்கள் அவளுடைய அங்கங்களின் எந்த ஒரு பகுதியையும் சுலபமாகத்
தொடக்கூடிய தொலைவில் இருந்தன. ஆள் காட்டி விரலை எடுத்து தன் வாயில் சிலுவை
போல வைத்து சைகை காட்டியபடி மெதுவாக நகர்ந்து கதவைத் திறந்து போனாள். அவள்
போன திசையில் கழுத்தை மடித்து வைத்துப் படுத்தபடி கனநேரம் காத்திருந்தேன்.
காலை
உனவு வெகு அவசரத்தில் நடந்தது. அவர்கள் எல்லோரும் மிக நேர்த்தியாக
உடுத்தியிருந்தார்கள். மிஸஸ் ஜோர்ஜிடம் இருந்து ஒரு மெல்லிய மயக்கும் வாசனை
திரவ நெடி வந்தது. இரவு ஒன்றுமே நடக்காததுபோல ஒரு பூனையாகவே மாறிப்போய்
ரொஸலின் உட்கார்ந்திருந்தாள். மயில் தோகை போன்ற உடையும், கறுப்புக்
காலணியும், நீண்ட வெள்ளை சொக்ஸும் அணிந்திருந்தாள்.
அவள்
வேண்டுமென்றே சாவதானமாக உணவருந்தினாள். மேசையில் நாம் இருவருமே
மிஞ்சினோம். ஒருவருமில்லாத அந்தச் சமயத்திற்குக் காத்திருந்தவள் போல
திடீரென்று என் பக்கம் திரும்பி, ரகஸ்யத்திற்காக வரவழைத்த குரலில், “என்
அப்பாவிடம் ஒரு ரயில் வண்டி இருக்கிறது” என்றாள்.
“ரயில் வண்டியா?” என்றேன்.
“ரயில் வண்டிதான். பதினாலு பெட்டிகள்.”
“பதினாலு பெட்டிகளா?”
“இதுதான்
திருவனந்தபுரத்துக்கும் கன்னியாகுமரிக்கும் இடையில் ஓடும் ரயில் வண்டி.
காலையில் ஆறுமணிக்குப் புறப்பட்டு மறுபடியும் இரவு திரும்பி வந்துவிடும்.”
”ரயில் வண்டியை ஏன் உங்க அப்பா வாங்கினார்?”
“வாங்கவில்லை.
ஸ்டுபிட். திருவனந்தபுரம் மகாராஜா இந்த லைனை என்னுடைய தாத்தாவுக்கு
அவருடைய சேவையை மெச்சி பரிசாகக் கொடுத்தாராம். அவருக்குப் பிறகு
அப்பாவுக்குக் கிடைத்தது. அவருக்குப் பிறகு அப்பாவுக்குக் கிடைத்தது.
அவருக்குப் பிறகு அது எனக்குத்தான்.”
அவளுக்குப்
பிறகு அது யாருக்கு சொந்தமாகும் என்று தீர்மானமாவதற்கிடையில் ஜோர்ஜ்
மாஸ்ரர் திரும்பிவிட்டார். அப்படியே அவசரமாக எல்லோரும் மாதா கோயிலுக்குப்
புறப்பட்டதில் அந்த சம்பாஷணை தொடர முடியாமல் அந்தரத்தில் நின்றது.
ஒரு
பதினாலு வயதுப் பையன் எவ்வளவு நேரத்துக்கு தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள்
அடைந்துகொண்டு வாசிக்க ஒன்றுமில்லாமல் டேவிஸ் என்ற ஆங்கிலேயர் எழுதிய Heat
புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்க முடியும். அவர்கள் திரும்பி வந்த
சத்தம் கேட்டு வெகு நேரமாகிவிட்டது. துணிவை வரவழைத்துக்கொண்டு மெதுவாக என்
அறைக் கதவை நீக்கி எட்டிப் பார்த்தேன். ஒருவருமில்லை.
வெளி
வராந்தாவுக்கு நான் வந்தபோது அடியில் ஈரமான ஒரு நீளமான கடதாசிப் பைக்குள்
அவள் கையை நுழைத்து ஏதோ ஒன்றை எடுத்து வாய்க்குள் போட்டு மென்று
கொண்டிருந்தாள். அவளுடைய கை புற்றுக்குள் பாம்பு நுழைவது போல உள்ளே போவதும்
வருவதுமாக இருந்தது. பெயர் தெரியாத ஒன்று அவள் வாய்க்குள் விழுந்தது.
பையை
என்னிடம் நீட்டினாள். அவள் முடிச்சு மணிக்கட்டு என் முகத்துக்கு நேராக
வழுவழுவென்று இருந்தது. அநாமதேயமான உணவுப் பண்டங்களை நான் உண்பதில்லை.
வேண்டாம் என்று தலை அசைத்தேன். ஐஸ் கட்டி வேணுமா என்று திடீரென்று
கேட்டாள். என் பதிலுக்குக் காத்திராமல் தானாகவே சென்று குளிர் பெட்டிக்
கதவைத் திறந்து ஆகாய நீலத்தில் சிறு சிறு சதுரங்கள் கொண்ட ஒரு பிளாஸ்டிக்
பெட்டியைத் தூக்கிக்கொண்டு வந்தாள். வில்லை வளைப்பது போல அதை வளைத்தபோது
ஐஸ்கட்டிகள் விடுபட்டு துள்ளி மேலே பாய்ந்தன. அவள் அவற்றை ஒவ்வொன்றாகப்
பிடித்து வாயிலே போட்டாள். தன் கையினால் ஏந்தி தண்ணீர் சொட்ட எனக்கும்
ஒன்று தந்தாள். பிறகு நறுக்கென்று கடித்தாள்.
திரும்பி
இரண்டு பக்கமும் பார்த்து, குளிர்பெட்டி கேட்காத தூரத்தில் இருக்கிறது
என்பதை நிச்சயித்துக்கொண்டு, மெதுவாகப் பேசினாள். “இந்த தண்ணி கேரளாவில்
இருந்து வந்தது. அரைமணியில் ஐஸ் கட்டி போட்டு விடும். இங்கே இருக்கிற தண்ணி
சரியான ஸ்லோ. இரண்டு நாள் எடுக்கும்” என்றாள்.
நானும்
அவளைப் போல நறுக்கென்று கடித்தேன். பற்கள் எல்லாம் கூசி சிரசில் அடித்தன.
தண்ணீர் பல் நீக்கலால் வழிந்து வெளியே வந்தது. என்னையே சிரிப்பாகப்
பார்த்துக்கொண்டிருந்தவள், “உனக்கு ஐஸ் கட்டி சாப்பிட வராது” என்றாள்.
அவளைப்
பார்த்தேன். ஓர் ஆணைப்போல ஆடை தரித்திருந்தாள். சரி நடுவில் தைத்து வைத்த
கால் சட்டை போன்ற பாவாடை. அவள் மேலாடை இரண்டு நாடாக்கள் வைத்து
பொருத்தப்பட்டு, தோள்களையும், கழுத்துக் குழிகளையும் மறைப்பதற்கு முயற்சி
எடுக்காதததாக இருந்தது. அவளுடைய தோள் எலும்புகள் இரண்டு பக்கமும் குத்திக்
கொண்டு நின்றன.
அப்பொழுது பார்த்து ஜிவ்வென்று
இலையான் ஒன்று பறந்து வந்து அவளையே சுற்றியது. தானாகவே பிரகாசம் வீசும்
பச்சை இலையான். உருண்டைக் கண்கள். தோள் மூட்டில் இருக்க முயற்சித்த போது
உதறினாள். நான் பொறுக்க முடியாமல் கையை வீசினேன். நட்டுவைத்த கத்தி போன்ற
தோள்மூட்டில் கை பட்டதும் தராசுபோல அது ஒருபக்கம் கீழே போனது.
மறுபடியும்,
மிகக் கூர்மையான கண்கள் மட்டுமே கண்டுபிடிக்கக் கூடிய உள் வளைந்த அவளுடைய
முழங்கால்களில் அது போய் இருந்தது. நான் மீண்டும் கையை ஓங்கியதும்
சிரிக்கத் தொடங்கினாள். சுற்று முடிவடையாத சக்கரம் போல அது நீண்டுகொண்டே
போனது. மனது பொங்க நானும் சிரித்தேன். அந்தக் கணம் கடவுள் எப்படியும்
அதற்கு ஒரு தடை கொண்டு வந்துவிடுவார் என்று எனக்குப் பயம் பிடித்தது.
அப்படியே நடந்தது. வேலைக்காரப் பெண் வந்து அம்மா கூப்பிடுவதாக அறிவித்தாள்.
அந்த
ஞாயிறு நாலு மணிக்கு நடந்த தேநீர் வைபவமும் மறக்க முடியாதது. பெரிய
ஆலாபனையுடன் இது வெளித்தோட்டத்தில் ஆரம்பமானது. மஞ்சளும் பச்சையும் கலந்த
பெரிய பழங்களைத் தாங்கி நின்ற ஒரு பப்பாளி மரத்தின் கீழ் இது நடந்தது.
தூரத்ஹ்டில் இரண்டு பனை மரங்களில் கட்டிய நீளமான மூங்கில்களில் இருந்து
வயர் இறங்கி வந்து ஜோர்ஜ் மாஸ்ரருடைய பிரத்தியேகமான வாசிப்பு அறை
ரேடியோவுக்குப் போனது.
மிஸஸ் ஜோர்ஜ் எல்லோருக்கும்
அளவாக தேநீரைக் கோப்பைகளில் ஊற்றித் தந்தார். மெல்லிய சீனி தூவிய நீள்சதுர
பிஸ்கட்டுகள், ஒரு பீங்கான் தட்டில் வைத்து வழங்கப்பட்டன. அவை கடித்த உடன்
கரைந்துபோகும் தன்மையாக இருந்தன.
திடீரென்று ஜோர்ஜ்
மாஸ்ரர் மகளைப் பார்த்து கிதார் வாசிக்கும்படிப் பணித்தார். ‘ஓ, டாடி’
என்று அவள் அலுத்துவிட்டு, அதைத் தூக்கி வந்தாள். கால்மேல் கால் போட்டு
கிடங்குபோல பதிந்து கிடக்கும் பிரம்பு நாற்காலியில் அசௌகரியம் தோன்ற
உட்கார்ந்து கிதாரை மீட்டிக் கொண்டு பாடினாள். அவளுடைய ஸ்கர்ட் மேற்பக்கமாக
நகர்ந்து சூரியன் படாமல் காப்பாற்றப்பட்ட உள் தொடையின் வெள்ளையான பாகத்தை
கண் பார்வைக்குக் கொண்டுவந்தது. ‘என் கண்களில் நட்சத்திரம் விழ
அனுமதிக்காதே’ என்று தொடங்கியது அந்த நீண்ட பாடல். Love blooms at night,
in day light it dies (காதல் இரவில் மலர்கிறது; பகலில் மடிந்துவிடுகிறது)
என்ற வரிகள் எனக்காகச் சேர்க்கப்பட்டது போல தோன்றின. இசைக்கு முற்றிலும்
பொருத்தமில்லாத ஒரு புறாவின் குரலில் அவள் பாடியது ஒருவித தடையையும்
காணாமல் நேராக என் மனதில் போய் இறங்கியது.
இப்படி ஓர்
அந்நியோன்யமான குடும்பத்தை நான் என் வாழ்நாளில் கண்டதில்லை. மிஸஸ் ஜோர்ஜ்
குறுக்கே போட்ட தாவணியை பனை ஓலை விசிறி மடிப்புபோல அடுக்கி தோள்பட்டையில்
ஒரு வெள்ளி புரூச்சினால் குத்தியிருந்தார். ரொஸஸினுடைய கண்கள் முன்பு
பார்த்ததிலும் பார்க்க நீளமாகத் தெரிந்தன. முகத்தில் இன்னும் பிரகாசம்
கூடியிருந்தது. ஜோர்ஜ் மாஸ்ரர் கைகளை உரசியபடி எதிர் வரப்போகும் நல்ல
உணவுகளைப்பற்றிய சிந்தனையில் உற்சாகமாகப் பேசினார். அவர்கள் செய்ததைப்போல
நானும் உணவு மேசையைச் சுற்றி அமர்ந்து கொண்டேன். “ஜெபம் செய்வோம்” என்று
அவர் ஆரம்பித்தார்.
“எங்கள் ஆண்டவராகிய யேசு
கிறிஸ்துவே, உமது அளவற்ற கிருபையினால நேற்றையைப் போல இன்றும் எங்களுக்குக்
கிடைத்த ரொட்டிக்காக இங்கு பிரசன்னமாகியிருக்கும் நாங்கள் நன்றி
செலுத்துகிறோம். அதே போல இந்த ரொட்டிக்கு வழியில்லாதவர்களுக்கும் வழி
காட்டும். பாரம் இழுப்பவர்களுக்கு இளைப்பாறுதல் தருபவரே, எங்கள் பாரங்களை
லேசானதாக்கும். எங்களுடன் இன்று சேர்ந்திருக்கும் சிறிய நண்பரை
ரட்சிப்பீராக. அவர் எதிர்பார்ப்புகள எல்லாம் சித்தியடையட்டும். உம்முடைய
மகிமையை நாம் ஏறெடுத்துச் செல்ல ஆசிர்வதியும். ஆமென்.”
சரியான
இடத்தில் நானும் ‘ஆமென்’ என்று சொன்னேன். முதன்முறையாக என்னையும்
ஜெபத்தில் சேர்த்தது எனக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. நான் ஆமென்
சொன்னபோது குறும்பாகப் பார்த்துவிட்டு அவள் கண்களை இழுக்காமல் அந்த
இடத்திலேயே வைத்துக் கொண்டாள்.
ஆனால் இப்படி அருமையாக ஆரம்பித்த இரவு மிக மோசமானதாக முடிந்தது.
சாப்பாட்டு
மேசையைச் சுற்றி இருக்கும் நேரங்களில் சம்பாஷணை மிக முக்கியம். அது
முழுக்க சுத்தமான ஆங்கிலத்திலேயே நடந்தது. ஒரு வார்த்தை தமிழோ, மலையாளமோ
மருந்துக்கும் இல்லை. அவளோ ஆற்றிலும் வேகமாக கதைப்பாள். என்னுடையதோ
இருட்டில் நடப்பது போல தயங்கி தயங்கி வரும். ஆகவே வார்த்தை சிக்கனத்தைப்
பேண வேண்டிய கட்டாயம் எனக்கு. அப்படியும் பேசும் பட்சத்தில்
வார்த்தைகளுக்கு முன்பாக மூச்சுக்காற்றுகள் வந்து விழுந்தன.
இன்னுமொன்று,
பீங்கான் தட்டையே பார்த்துக்கொண்டு சாப்பிடுவது இங்கே
தடுக்கப்பட்டிருந்தது. சாப்பாட்டு வகைகள் மேசையில் பரவியிருந்தபடியால்
“இதைத் தயவுசெய்து பாஸ் பண்ணுங்கள்”, “அந்த ரொட்டியை இந்தப் பக்கம்
நகர்த்துங்கள்” என்று சொல்லியபடியே சாப்பிடுவார்கள். இதுவும் எனக்குப்
புதுமையே.
அவியல் என்ற புதுவிதமான பதார்த்தத்தின்
சுவையில் நான் மூழ்கியிருந்தேன். அப்போது ஜோர்ஜ் மாஸ்ரர் ஏதோ ஆங்கிலத்தில்
கேட்டார். அதற்கு அவள் சிறு குரலில் பதில் சொன்னாள். அந்த வார்த்தைகளின்
முக்கியத்துவம் முன்பே தெரிந்திருக்காததால் நான் காது கொடுத்து கவனிக்கத்
தவறிவிட்டேன்.
திடீரென்று தட்டையான வெள்ளைக்கூரை
அதிரும்படி ஜோர்ஜ் மாஸ்ரர் கத்தினார். நான் நடுங்கிவிட்டேன். கிளாஸில்
தண்ணீர் நடனமாடியது. அவள் சற்று முன்பு குறும்பாக கண்களைத் தாழ்த்தி,
பிளேட்டை பார்த்தபடியே இருந்தாள். கண் ரப்பைகளில் ஒன்றிரண்டு முத்துக்கள்
சேர்ந்து ஜொலித்தன.
மிஸஸ் ஜோர்ஜ் நிலைமையைச் சமாளிக்க
கண்களால் சாடை காட்டிப் பார்த்தாள். முடியவில்லை. அப்படியும் ஜோர்ஜ்
மாஸ்ரர் முகத்தில் கோபம் சீறியது. சாந்தம் வருவதற்குப் பல மணி நேரங்கள்
எடுத்தன.
அன்றிரவு நான் வெகுநேரம் புரண்டு
கொண்டிருந்தேன். காற்றின் சிறு அசைவுக்கும் கதவு திறக்கிறதா என்பதை
உன்னிப்பாகக் கவனித்தேன். திறக்கவில்லை.
எப்படியோ
அயர்ந்து பின்னிரவில் திடீரென்று விழிப்பு ஏற்பட்டது. கண்ணுக்கு இருட்டு
இன்னும் பழக்கமாகவில்லை. காதுகளைக் கூர்மையாக வைத்துக் கொண்டேன். ஒரு
கிசுகிசுப்பான பெண்குரல், “கொஞ்சம் முயற்சி செய்யுங்கள், ப்ளீஸ்” என்றது.
ஆண்குரல் ஏதோ முனகியது. மறுபடியும் நிசப்தம். சிறிது நேரம் கழித்து அதே
பெண்குரல் “சரி விடுங்கள்” என்றது எரிச்சலுடன். பிறகு வெகு நேரம்
காத்திருந்தும் ஒன்றும் கேட்கவில்லை.
சொன்னபடி
அதிகாலையிலேயே செல்வநாயகம் மாஸ்ரர் வந்து விட்டார். பதிவு வேலைகளைச்
சீக்கிரமாகவே கவனித்து எனக்கு செபரட்டினம் விடுதியில் இடம் பிடித்துத்
தந்தார். எல்லோரும் அது சிறந்த விடுதி என்று ஒத்துக்கொண்டார்கள். எனக்கு
ஒதுக்கப்பட்ட அறைக்கு இன்னும் இரண்டு மாணவர்கள் வருவார்கள் என்றார். உடனேயே
ஒரு அந்நிய நாட்டு சைனியம் போல நான் எல்லைகளைப் பிடித்து
வைத்துக்கொண்டேன்.
நான் பெட்டியை எடுக்க திரும்பவும்
ஜோர்ஜ் மாஸ்ரர் வீட்டுக்குப் போனபோது அது திறந்திருந்தது. ஒரு வேலைக்காரப்
பெண் வெளி மேடையில் ஒரு பெரிய மீனை வைத்து வெட்டிக்கொண்டிருந்தாள். அதன்
கண்கள் பெரிதாக ஒருபக்கமாகச் சாய்ந்து என்னையே பார்த்தன. ஆனால் அவள் என்
பக்கம் திரும்ப வில்லை.
என் அறைக்கதவு கொஞ்சம்
நீக்கலாகத் திறந்திருந்தது. என்றாலும் நான் அங்கே பழகிக்கொண்ட முறையில்
ஆள்காட்டி விரலை மடித்து டக்டக் என்று இருமுறை தட்டிவிட்டு உள்ளே
நுழைந்தேன். படுக்கை அப்படியே கிடந்தது. என்னுடைய பெட்டியும் புத்தகப்
பையும் வைத்த இடத்திலேயே இருந்தன. அவற்றைத் தூக்கிய பிறகு இன்னொருமுறை
அறையை சுற்றிப் பார்த்தேன். என் வாழ்நாளில் இனிமேல் எனக்கு இங்கே வரும்
சந்தர்ப்பம் கிடைக்காது என்பது தெரிந்தது.
திடீரென்று
ஒரு ஞாபகம் வந்து மரப்பெட்டியை எட்டிப்பார்த்தேன். நாலு குட்டிகளே
இருந்தன. தாய்ப்பூனை மறுபடியும் குட்டிகளைக் காவத் தொடங்கிவிட்டது.
கறுப்புக்குட்டி போய் விட்டது. மற்ற நாலும் தங்கள் முறைக்காகக்
காத்திருந்தன. அவை மெத்தென்றும், வெதுவெதுப்புடனும் இருந்தன. ரொ-ஸ-லீ-ன்
என்று சொல்லியபடியே ஒவ்வொரு அட்சரத்துக்கும் ஒரு குட்டியைத் தொட்டு
வைத்தேன்.
திரும்பும் வழியிலே அவள் பேசிய முதல்
வார்த்தை ஞாபகம் வந்தது. ‘பயந்திட்டியா?’ எப்படி யோசித்தும் கடைசி வார்த்தை
நினைவுக்கு வர மறுத்தது.
மழைவிட்ட பிறகும் மரத்தின்
இலைகள் தலைமேலே விழுந்து கொண்டிருந்தன. பிரம்மாணடமான தூண்களைக் கட்டி
எழுப்பிய அந்தப் பள்ளிக்கூடங்களிலும், அதைச் சுற்றியிருந்த கிராமங்களிலும்,
அதற்கப்பால் இருந்த நகரங்களிலும் இருக்கும் அவ்வளவு சனங்களிலும் எனக்கு,
என் ஒருவனுக்கு மட்டுமே அந்தக் கறுப்புப் பூனைக்குட்டியின் பெயர்
அரிஸ்டோட்டல் என்பது தெரியும். அந்த எண்ணம் மகிழ்ச்சியைத் தந்தது.
அவளைப்
பற்றி அறியும் ஆசையிருந்தது. ஆனால் எனக்கிருந்த கூச்சத்தினால் நான்
ஒருவரிடமும் விசாரிக்கவில்லை. யாரிடம் கேட்பது என்பதையும் அறியேன். நான்
மிகவும் சிரமப்பட்டு இடம் பிடித்த யாழ்ப்பாணம் அமெரிக்கன் மிஸன்
பள்ளிக்கூடத்தில் அவள் படிக்கவில்லை என்பதை விரைவில்
கண்டுபிடித்துவிட்டேன். ரொஸலின் என்ற அவளுடைய அற்புதமான பெயரை Rosalin
என்று எழுதுவதா அல்லது Rosalyn என்று எழுதுவதா என்ற மிகச் சாதாரணமான
விஷயத்தைக் கூட நான் அறியத் தவறிவிட்டேன்.
வெகு காலம்
சென்று அவள் கேரளாவில் இருந்து கோடை விடுமுறையை கழிக்க வந்திருந்தாள்
என்றும், பிறகு படிப்பைத் தொடருவதற்குத் திரும்பப் போய்விட்டாள் என்றும்
ஊகித்துக் கொண்டேன். வழக்கம்போல மிகவும் பிந்தியே இந்த ஊகத்தையும்
செய்தேன்.
நான் புதிதாகச் சேர்ந்த அந்தப்
பள்ளிக்கூடத்தில் வேதியியல் ஆசிரியன் வில்லியம்ஸின் கொடுங்கோலாட்சி நடந்து
கொண்டிருந்தது. மெண்டலேவ் என்ற ரஸ்யன் செய்த சதியில் நாங்கள் தனிமங்களின்
பட்டியலை மனப்பாடம் செய்யவேண்டும் என்று அடம்பிடித்தான். அப்பொழுது 112
தனிமஙக்ள் இல்லை; 92 தான். இருந்தும் அவற்றை என்னால் மனனம் செய்ய
முடியவில்லை. எடையில் குறைந்தது ஹைட்ரஜின் என்பதோ, கூடியது யூரேனியம்
என்பதோ ஞாபகத்தில் இருந்து வழுக்கியபடியே இருந்தது. முன்பாகவே பேர் வைத்து
பின்னால் கண்டுபிடிக்கப்பட்டது ஜெர்மேனியம் என்பதும் என் நினைவுக்கு வர
மறுத்தது. இப்படி இரண்டு வருடங்கள் அவன் முழு அதிருப்தியாளனாகவே இருந்தான்.
இரக்கப்பட்டோ, அல்லது பெருந்தன்மையாக மறந்தோ எனக்கு E-க்கு மேலான ஒரு
மதிப்பெண்ணை இவன் தர முயற்சிக்கவில்லை. இந்தக் கொடுமைகளின் உச்சத்தினால்
இரண்டொரு முறை நான் படுக்குமுன் அவளை நினைக்காமல் இருந்ததுகூட உண்டு.
இது
நடந்து மிகப்பல வருடங்கள் ஓடிவிட்டன. பல தேசங்கள் சுற்றி விட்டேன். பல
வரைபடங்களை பாடமாக்கினேன். பல முகங்களை ரசித்தேன். பல காற்றுக்களை
சுவாசித்தேன். பல கதவுகளைத் திறந்தேன்.
ஆனாலும் சில
சமயங்களில் கடித்தவுடன் கரையும், மெல்லிய சீனி தூவி மொரமொரவென்று
ருசிக்கும், ஒன்பது சிறு துளைகளை கொண்ட நீள்சதுர பிஸ்கட்டை சாப்பிடும்போது
ஒரு கித்தாரின் மணம் வருவதை என்னால் தவிர்க்க முடியாமல் இருக்கிறது.
*******