செவ்வாய், 3 ஜூலை, 2012

La.Sa.Raa.

“நேற்றைய நினைவின் மணத்துடன் உதிர்ந்து கொண்டிருக்கிறேன்” – லா.சா.ரா
1
கனவுகள், காதல், கிளர்வுகள் மற்றும் இதம்தரு மென்னுணர்வுகளாலும் தனிமையாலும் நிரம்பியிருக்கிற பதின்மவயதுகளின் நடுப்பகுதியில் லா.சா.ராவின் பிரதிகள் எனக்கு அறிமுகமாகின. தற்செயலாய்க் கைக்குக் கிட்டிய இந்தியாடுடே இலக்கிய ஆண்டுமலரில்(1994) இரண்டு கதைகள் பிடித்திருந்தன: ஒன்று வாசந்தியினுடைய நல்ல கதைகளில் ஒன்றான ‘கொலை’ மற்றது லா.சா.ராவின் வழக்கமான பாணியிலமையாத மிகவும் மனோரதியமான கதையான ‘அலைகள்’. இந்தக் கதைகளுக்குப் பின்னர்தான் நூலகத்தில் லா.சா.ராவையும், வாஸந்தியையும் தேடத் தொடங்கினேன். வாசந்தியின் ‘நான் புத்தனில்லை’ எனும் நாவல் அடுத்து வந்த வாரங்களில் என் ஆதர்ச நூலாக இருந்தது. லா.சா.ராவின் அபிதாவையும் எடுத்து வந்திருந்தேன்; ஆனாலும் அபிதாவின் மொழி ‘அலைகள்’ சிறுகதை போலன்றி விளங்கிக் கொள்ள மிகவும் கஷ்டமாக இருந்தது. லா.சா.ராவுக்கு முன்பு நா.பாவின் ‘மணிபல்லவம்’, கல்கியின் புனைவுகள் எனக்குப் பிடித்தமானவையாக இருந்து கொண்டிருந்தன. சமஸ்கிருதத்தன்மையும் ஒருவித தொன்மம் கலந்த குறியீடுகளும் விளங்காதுபோயினும் சரித்திரப்புனைவுகளை வாசிப்பது போன்ற உணர்வு இருந்தது. ‘அபிதா’வின் பூடகமான மொழிவேறு ஒரு விடுகதையின் மர்மக் கிளர்ச்சியை உண்டுபண்ணியிருந்தது. இருண்மையான அந்த மொழிக்கும் எனக்கும் நடந்த ஒருவித போராட்டத்தில் லா.சா.ரா வெகு சீக்கிரத்தில் நான் தேடிப்படிக்கிற பெயராயிற்று.
இன்றைக்கு, ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், லா.சா.ராவின் (பௌதீக)மரணிப்பின் பின்னராக, இழப்பின் வலியென்பது உசுப்புகிற நினைவடுக்கில் ‘அபிதா’வின் மீது, அந்த மொழியின் மீது பித்துப் பிடித்துக் கிடந்த நாட்களை நினைவுக்குக் கொண்டு வருகிறேன். நிச்சயமாய் அந்த நிலை இப்போது நினைக்கும் போது ஆச்சரியமூட்டுகிற ஒன்றுதான். அந்த நாட்களில் லா.சா.ராவைக் கிறக்கத்துடன் வாசித்ததற்கும் இப்போது வாசிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இந்த கட்டுடைப்புக்கருவிகளுடனான வாசிப்பு, விமர்சனப்புத்தி என்கிற எல்லாவற்றுக்கும் அப்பால் லா.சா.ராவின் மரணம் வலிதருவதாயிருக்கிறது என்பதுவே நான் பகிர விரும்புவது.
2
முதன்முதலில் நான் வாசிக்க நேர்ந்த லா.சா.ராவின் சிறுகதையான ‘அலைகள்’ மனோரதியமான சிறுகதையென்பதை முதலிலேயே சொல்லியிருக்கிறேன். ஆனால் ‘அபிதா’ மிகவும் இருண்மையானது. விடுகதையின் மாயக்கவர்ச்சி நிரம்பிய அப்பிரதியை ஒரு ஒழுங்கில் வாசித்தேனில்லை. அப்படி வாசிப்பது கடினமாகவிருந்தது. மூச்சுத்திணறவைக்கிற மொழிதல்களுக்கிடையில் அங்குமிங்குமாய் அலைந்து கொண்டிருந்தேன், அந்த அலைதலின் சுவாரசியம் பிடித்துப் போக மூன்றுதடவைகளுக்கு மேலாக நூலகத்தில் புத்தகத்தைத் திகதி மாற்றம் செய்து என்னுடனேயே வைத்திருந்தேன். உணர்வுகளின் மிதமிஞ்சிய பெருக்கத்தில் மொழி நீர்மையானதாக மாறிப் பாய்ந்துகொண்டிருக்க அதனடியில் இழையும் சம்பவக் கோர்வைகளைக் கண்டெடுத்தல் நீண்ட நாட்களுக்குப் பின்னரே சாத்தியமாயிற்று.
தர்க்கங்களுக்கு அப்பால்பட்ட, புலனுணர்வுகளாய் மாறிவிடுகிற இசைத்தன்மை கொண்ட மொழி லா.சா.ராவினுடையது. நுட்பமான இசைக்கோர்வையொன்றின் கட்டமைப்பை லா.சா.ரா பிரதிகளில் காண்முடியும். 1989 சாகித்ய அக்கடமி விருது ஏற்புரையில் musical effectஐ எழுத்தில் கொண்டுவருதல் குறித்து லா.சா.ரா விரிவாகப் பேசுகிறார்.
இத்தகைய இசையுடன் ‘அபிதா’வில் இருந்த பிடித்தாட்டும் வேட்கை, வெளிப்படுத்தப்பட முடியாத தாபங்களின் பெரும் ஓலம் என்பன நடுங்க வைப்பதாய் இருந்தன. அர்த்தங்களைத் தேடுதல், தேடுதல் மேலும் தேடிக்கொண்டேயிருத்தலின் இன்பம் அக்காலங்களில் என் வாசிப்பிலிருந்த பிரதியாளர்கள் பட்டியலில் லா.சா.ராவிடம் மட்டுமே சாத்தியமாகிற்று.
லா.சா.ராவின் பிரதியுலகம் மர்மமான சங்கேதங்கள், குறியீடுகளாலானது. இவற்றால் பின்னப்படுகிற அவருடைய மொழி போதையும் லயிப்பும் தருகிற கவித்துவமிக்க ஒன்று. இந்த மொழிக்குள் வைக்கப்படும் கதையென்பது துண்டுகளாலானது(fragments). துண்டுகளாக்கப்பட்ட கதைசொல்லல் முறையில்(fragmented narration) கதைகளைக் கண்டெடுக்க முடிவது என்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
அந்நாட்களில் எனது குறிப்புப் புத்தகம் லா.சா.ராவின் வார்த்தைகளால் நிரம்பியிருந்தது. உக்கிரமான உணர்வுகளால் நான் காவிச்செல்லப்படுகிற போதெல்லாம் அந்த மூர்க்கத்தை, தகிப்பை சில சமயங்களில் உறைந்து போதலைப் பகிரக் கூடிய பிரதிகளாய் லா.சா.ராவினுடைய பிரதிகள் இருந்தன. எப்போதெல்லாம் ஒருவித metaphysical train of thought (அபௌதீகச் சிந்தனைத் தொடர்ச்சி?) மனதில் ஆரம்பிக்கிறதோ அப்போதெல்லாம் லா.சா.ராவின் வார்த்தைகளில் சிந்திக்கப் பழகியிருந்தேன். இப்படியான ஒரு உத்தியை மிகவும் physicalஆன எனது அந்நாளைய பிரச்சனைகளைக் கடந்து செல்கிறதற்குப் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். (எனதல்லாத இன்னொருத்தரின் வார்த்தைகளில் என்னைப்பற்றிச் சிந்திப்பது குறித்த சிக்கலின் உக்கிரத்தைத் தணிக்க உதவிற்றுப் போலும்.)
லா.சா.ராவைப் புரிந்து/உணர்ந்து கொள்வதும் சரி, புரியாமல் தவிப்பதும் சரி மிகவும் இன்பமான அனுபவங்கள் தான். புரியாது/உணரமுடியாது போய்விடின் அந்த நிலமை தருகிற அந்தரிப்பு, தவிப்பு, அலைக்கழிப்பு என்பன ஒருபுறம்; புரிந்து/உணர்ந்து கொண்டால் அந்தப் புரிதலின் வலி, தன்னை உணர்தலில் ஏற்படுகிற சுயபச்சாத்தாபம் என்பன மறுபுறம்… இப்படியாக லா.சா.ராவின் பிரதி தருகிற இன்பம் விநோதமான ஒன்று.
அக்காலப்பகுதியில் பிடித்தமாயிருந்த பெண்னுடல், தாபம், காமம் பற்றிய விபரிப்புகளை லா.சா.ராவிடம்(ஓரளவுக்கு ஜானகிராமனிடத்திலும்) நான் லயிப்புடன் அனுபவித்திருக்கிறேன். ஜானகிராமனின் பெண்ணுடல் பற்றிய விபரிப்புகள் யதார்த்தமானவை, உலர்ந்து மரக்கட்டையாகிவிட்ட ‘மோகமுள்’ ஜமுனாவின் உதடுகள் யதார்த்தமானவைதான் என்றாலும் பதின்மவயதின் கனவுகளை அது குலைப்பதாய்த் தான் இருந்தது. லா.சா.ராவின் பெண்ணுடல் பற்றிய விபரிப்புகள் இப்படியான இடையூறுகளைத் தந்தது இல்லை. அது ஒரு fantasy. அன்றைய மனோநிலைக்கு யதார்த்தநீக்கம் செய்யப்பட்ட பெண்ணுடல் அவசியமானதுதானில்லையா? மிகவும் physicalஆன Sensualityயாக தி.ஜா இருக்க லா.சா.ரா ஆணின் fantasyகளுக்கான பெண்ணுடல்களை தனது பிரதிக்குள் வைத்திருந்தார். இதனால்தான் தமிழ் எழுத்துப்பரப்பில் ஆண்மொழியைச் (masculine language) என்பதைச் சாத்தியமாக்கிக் காட்டியவரென லா.சா.ரா குறிப்பிடப்படுவது உண்டு. (இங்கு தி.ஜாவின் விபரிப்புகளின் வலிமையை நான் குறைக்கிறேன் என்றில்லை, அவை வலிமையானவைதான் ஆனால் ஒரு பதின்ம வயது இளைஞனுக்கல்ல.)
லா.சா.ரா தனது நேர்காணலொன்றில் பின் வருமாறு கூறுகிறார்: “I live in terms of music, I speak in terms of music.” இந்த இசையின் மாபெரும் ரசிகனாய், அடிமையாய் அல்லது லா.சா.ராவின் வார்த்தைகளில் சொல்வதானால் ‘அந்த சௌந்தர்யத்தின் மாபெரும் உபாசகனாய்’ மாறிப்போய்விட்டிருந்தேன். “பொதுவாக ஒரு தத்துவ விசாரமும் உக்கிரமான ஆத்மதாபமும்” தன் எழுத்தின் உள்சரடாக ஓடிக்கொண்டிருப்பதாய் கூறுகிறார் லா.சா.ரா. அவரது பிரதிகள் குறித்த மிகச்சரியான மதிப்பீடு இதுவாய்த்தான் இருக்க முடியும்.
பதின்மங்களில் லா.சா.ரா பிரதிகளில் வேட்கையை, அவர் குறிப்பிடுகிற ஆத்மதாபத்தை வாசிக்க முடிந்ததே தவிர லா.சா.ராவின் ‘தத்துவ சாரத்தையோ’ அதற்கிருக்கக் கூடிய அரசியலையோ இனம்கண்டு வாசிக்க முடிந்தது இல்லை. ‘தொனி’ என்கிற தமிழ்ப்பதிலி இருக்கும்போது லா.சா.ரா ஏன் ‘த்வனி’ என்கிற சமஸ்கிருதச் சொல்லைக் கையாளவேண்டும் என்கிற மிகச்சிறு விடயம், திராவிட இயக்கங்கள் இத்யாதி இத்யாதி எல்லாம் அப்போது உறைக்காமல் போய்விட்டதற்கு என்ன காரணம்?
3
யாழ்.பொது நூலகம் திறக்கப்பட்டதையொட்டி லா.சா.ரா., தி.ஜானகிராமன், ஜெயகாந்தனுக்கப்பால் நகர முடிந்தது. காலச்சுவடு, உயிர்மை எல்லாம் அங்குதான் முதன்முதலில் கண்டது. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் என வாசிக்கத் தொடங்கி கோணங்கி, பிரேம்-ரமேஷ் எனப் பலரது பிரதி உலகங்களுக்குள் மூழ்கிப்போனதில் லா.சா.ரா போன்ற பழைய ஆதர்சங்களின் மீதான ஈர்ப்புக் குறைந்து போய்விட்டிருந்தது. ஆனால் கோணங்கியின் மொழியை அவ்வளவு சீக்கிரம் உணர்ந்துகொள்ள முடிந்ததில் லா.சா.ராவின் மொழியுடனான பரிச்சயம் உதவி புரிந்தது என்பதைச் சொல்லவேண்டும்.
பின்னர் நிறப்பிரிகையின் பழைய இதழ்களையும், அப்பிரதிகள் சுட்டுகிற பிரதிகளையும் படித்ததில் கிடைத்த மிகவும் சுவாரஸ்யமான வாசிப்புக் கருவிகளுடன் எனது முன்னாள் ஆதர்சங்களின் பிரதிகளுக்குள் மீள நுழைந்த போது முதலில் இற்று வீழ்ந்தவர் க.நா.சு. லா.சாராவைப் பொறுத்தவரை, பின்-நவீன புரிதல்களினடியாய் அவரது ‘தத்துவ சாரத்தை’ அபாயகரமான ஒன்றாக இனம்கண்ட போதும், அவருடைய பிரதிகளின் கவர்ச்சியை, ஈர்ப்பை என்னால் மறுக்கவோ/மறைக்கவோ முடிந்தது இல்லை. லா.சா.ரா எனக்குப் பிடித்த பிரதியாளராகத் தொடர்ந்தும் இருப்பதில் சிலகாலம் பயங்கரமான குற்ற உணர்வு இருந்தது.
லா.சா.ராவின் ‘அகம் சார்ந்த தேடல்’ என்பது இந்திய இந்துத்துவப் பெருமரபைச் சேர்ந்த ஒன்று. அது தனது பண்பாட்டு எல்லைகளை மீறுகிற முனைப்புடன் எங்குமே இருந்தது இல்லை. உண்மையில் நான் ‘அபிதா’வில் இருந்த உணர்ச்சிக்குவிப்பு, மூர்க்கமிக்க அலைக்கழிக்கும் விபரிப்புகளில் ஊறிப்போய், ‘இறுதிவரை அம்பி, அபிதாவின் விரல்நுனியைக் கூடத் தீண்டாமல் இருந்தான்’ என்பதற்கு இருக்கும் மரபார்ந்த அற உணர்ச்சிசார் பொறுப்புணர்வைக் கவனிக்கவில்லை. அபிதா நாவலின் முன்னுரையின் ‘அபிதா’ என்பதை ‘உண்ணாமுலையம்மன்’ என்கிற அர்த்தம் வரும்படிக்கு விளக்கியிருப்பார் லா.சா.ரா. வேட்கை, காமம் பற்றிய விபரிப்புகள் கூட எல்லை மீறாமல் ஒருவித புனிதப்படுத்துகையுடன் இடப்படுத்தப்பட்டிருப்பதையும், அதன் மூலம் கிரேக்கக் கதார்ஸிஸ் ஒன்று நிகழ்த்தப்பட்டு மனதை நிர்மலமாக்குகிற ஆன்மீகநோக்கமே இயங்குகிறது என்பதையும் அதிர்ச்சியுடன் உணர நேர்ந்தது.
தனது பிரதியாக்கமுறை பற்றி எழுதுகிற லா.சா.ரா Mysticismஉடன் தன்னை இனம்காட்டிக்கொள்ள விரும்புவதைக் காணலாம். லா.சா.ராவின் mysticismஉம் பின்நவீனம் ஆதரிக்கிற சிறுமரபுசார் தொன்மங்களின் mythopoetic textsஉம் வேறுவேறு. லா.சா.ராவின் Mysticism ஆன்மீகத்தன்மையான சங்கேதங்கள், புனிதக் குறியீடுகள், மர்மம், ஆன்மவிசாரத்தைச் சாத்தியமாக்குகிற கவிதையியல், கதார்ஸிஸைக் கொணரும் அழகியல் விபரிப்பு என்பதையே தனது கூறுகளாய்க் கொண்டியங்குகிறது. இந்தவகை எழுத்து முறையை லா.சா.ரா இந்துத்துவக் கூறுகளுடன் இணைக்கும்போது அவரது பிரதி ஓர் இந்துத்துவ அரசியல் பிரதியாக மாறி விடுகிறது.
லா.சா.ராவின் பிரதியாக்க நுட்பத்தை ‘நனவோடை உத்தி’(Stream of consciousness) எனக் குறிப்பிடுவார்கள். ஆங்கிலத்தில் இந்த உத்திக்காக அறியப்படுகிற ஜேம்ஸ் ஜொய்ஸையும் லா.சா.ராவையும் ஒருசேரப் படிப்பவர்கள் லா.சா.ராவின் பிரதிகளில் இயங்குகிற ‘புனித ஒழுங்கை’ உணர முடியும்.
ஜேம்ஸ் ஜொய்ஸ் குறித்து லா.சா.ராவிடம் கேட்கப்பட்ட போது யுலிஸிஸ் நாவல் ‘அப்பட்டம், வக்கிரம், குப்பை, ஆபாசம், சாக்கடை கலந்தது’ எனக் கூறி நிராகரிக்கிறார். அந்த நேர்காணலிலேயே தனது பிரதிகளில் கையாளுகிற நனவோடை உத்தியை ஜேம்ஸ் ஜொய்ஸிடமிருந்து வேறுபிரித்து அணுகும்படியும் லா.சா.ரா கேட்டுக்கொள்கிறார்: “நீங்களெல்லாம் எண்ணுகிற நனவோடை அல்ல அது. எண்ணத்திலேயே பரிசுத்தமாக அதை நான் கையாண்டு இருக்கிறேன். குதிரை பசும்புல்லைத்தான் தின்னும், வைக்கோலைத் தின்னாது. அது போலப் பசும்புல்லை மேயவிட்டிருப்பேன்.”
இக்கூற்றிலிருந்து லா.சா.ராவின் பிரதிகளில் வைக்கோலைத் தின்னுகிற கழுதை, மலத்தை உண்கிற பன்றி அன்னபிற விலங்குகளுக்கு வழங்கப்படுகிற இடத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். தலித்துக்கள், விளிம்புநிலை மனிதர்கள், மனப்பிறழ்வுற்றோர், வன்முறையாளர்கள் எல்லாம் லா.சா.ராவின் நனவோடையின் புனித எல்லைகளுக்கப்பால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். லா.சா.ரா கூறுவதுபோல அங்கு பசும்புற்கள் தான் உண்டு, கருகிய புற்களின் கதியென்ன? இதனடியாக லா.சா.ரா தனது பிரதிகளை, அவற்றின் அழகியலை எந்த வர்க்கத்தின்/சாதியின் சொல்லாடல்களுடன் இணைக்கிறார் என்பதை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது.
[இடதுசாரி விமர்சகர்களின் கண்டனத்துக்குள்ளான சௌந்தர்ய உபாசகம்Xவியட்னாம் நிலமைகள் சிக்கலில் லா.சா.ராவின் சாய்வே எனக்கு இப்போதும், அதில் அவர் ஒரு நேர்மையான மனிதராய் நமக்குத் தெரிகிறார். அன்றாடம் கொலை நடக்கிற இந்தச்சூழலிலும் எமது அதிகாலைத் தேநீரை ரசித்துக் குடிக்க முடிகிறதே அது போலத்தான்.]
லா.சா.ராவின் மறைவையொட்டி நான்காவது பரிமாணம் தொலைக்காட்சி நிகழ்ச்சியின்(Nov.03 ‘ஐ’ அலைவரிசை) உரையாடலில் கலந்துகொண்ட எஸ்.எல்.எம் ஹனீபாவின் கருத்துக்களைக் கேட்ட போது லா.சா.ரா பிரதிகளின் மரபுவாத/பழமைவாதக் கூறுகளை மேலும் தீவிரமாய் உணர முடிந்தது. எஸ்.எல்.எம்.ஹனீபா லா.சா.ராவின் மொழி, பிரதிநுணுக்கங்கள் பற்றிக் கவனம் குவிக்கவேயில்லை; மாறாகா லா.சா.ராவிடமிருந்து இக்காலத்திய இளைஞரொருவர் ‘கற்றுக்கொள்ள’ வேண்டிய விடயங்களைப் பட்டியலிடுகிற காரியத்தையே அவர் (மிகவும் உவப்புடன்) செய்தார். லா.சா.ராவின் பிரதிகள் வலியுறுத்துகிற கூட்டுக்குடும்ப மரபுகள், அவர்களின் பண்பாட்டு ஒழுங்கமைப்பு, வாழ்தல் நோக்கங்கள் ஆகியவற்றின் உயரிய தன்மை என்பன சிலாகிக்கப்படுகையில் குறித்த குடும்ப நிறுவனத்திற்குள் சிக்குண்டு மூச்சுவிடவே திணறிக்கொண்டிருக்கிற ஒரு சிறு பொடியனாய்/பெட்டையாய் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறவர்களிடம் லா.சா.ரா பற்றி உருவாக்கியளிக்கப்படுகிற சித்திரம் எதுவாயிருக்கக் கூடும்?
லா.சா.ராவை இவற்றுக்காக நிராகரித்துவிடுதல் சாத்தியமில்லை. அவரது பிரதிகளில் மிக இளம் தலைமுறையினர் வாசிக்க வேண்டிய நிறைய வேறு விடயங்கள் உண்டு. எஸ்.எல்.எம் கூறிய விடயங்களை/ அல்லது லா.சா.ராவின் பேட்டிகள் வலியுறுத்துகிற விடயங்களைத் தான் நாம் அப்பிரதிகளில் வாசிக்க வேண்டுமென்பது இல்லை.
இன்றைக்கு லா.சா.ராவை நான் வாசிக்கும்போது முன்புபோல் அவரது மொழியின் போதையேற்றலில் மயங்கிக் கிடப்பதில்லை. அவரது பிரதியின் சொல்லப்படாத பக்கங்களைச் சேர்த்து வாசிக்க முடிகிறது. இதுவும் கூட இன்பம் தருவதுதான். மொழிபுகளின் லாவகமான நெளிவு சுளிவுகளில் வழுக்கியபடி லா.சா.ராவின் அரசியலை வாசிப்பது இன்னொருவித கிறக்கத்தைத் தருகிறது. இதுகூட அவரது மொழியின் அசாத்தியமான தன்மையால்தான் என நினைக்கிறேன். ஏனெனில் க.நா.சு, சி.சு.செல்லப்பா போன்றவர்களிடத்து கட்டுடைப்பு வினையென்பது அவ்வளவு சுவாரஸ்யமாய் இருந்ததில்லை. ஏனெனில் அங்கு மொழிவிளையாட்டுக்கு, அர்த்தங்களை ஊகித்துச் செல்வதற்கு இடமேயில்லை. இங்கு அர்த்தங்களைச் சந்தேகப்படுத்தி, வேறுவேறு சூழமைவுகளில் இடப்படுத்தியணுகிற ஒரு தன்மை இருக்கிறது. இந்த நிலமையைத்தான் ‘நல்ல இலக்கியத்துக்கான’ தகுதியாக ரோலன் பார்த் குறிப்பிடுவது வழக்கம்.
இந்த மொழியை நாம் லா.சா.ராவிடத்து இன்னும் ஆழமாய் புரிந்து வாசிக்க முயல வேண்டும். அதே போல இந்த ஆண்மொழி முக்கியமானது. தி.ஜானகிராமன், நகுலன்(சுசீலா), லா.சா.ரா(அபிதா, ஏகா, ஜனனி) போன்றவர்களிடம் masculine language என்பது இயங்குகிற விதம், அதில் ‘பெண்மை’/”பெண்’ ஆகியவை எங்கனம் மற்றும் எவ்விதத்தில் இடப்படுத்தவும் இடமழிக்கவும் பட்டிருக்கின்றன என்பதை வாசிப்புச் செய்ய வேண்டும். இப்படியாக லா.சா.ராவை முன்வைத்து உரையாட ஏராளம் விடயங்கள் உண்டு; அவரது பிரதிகளுக்கும் கர்நாடக சங்க்கிதக் கட்டுமானத்துக்கும் இடையேயிருக்கிற இசைவிணைவுகள், அவரது பிரதிகளில் கையாளப்பட்ட நனவோடை உத்தியில் Continuity of conscience (பிரக்ஞையின் தொடர்ச்சி) மற்றும் Conscience of continuity (தொடர்ச்சி குறித்த பிரக்ஞை) எனுமிரண்டும் ஒன்றையொன்று குறுக்கீடு செய்கிற விதம், இப்படியான குறுக்கீட்டால் அமைக்கப்படுகிற அவரது narrative installments, இந்தக் கதைசொல்லல் துண்டுபடுத்தப்படுகிற விதம், இந்தத் துண்டுகள் தமக்கிடையிலாகப் பேணிக்கொள்கிற ஒருவித அதீத ஒழுங்கு(meta-structure of fragmented narratives)… இவை பற்றியெல்லாம் லா.சா.ரா பிரதிகளை முன்வைத்து உரையாட வேண்டும்; குறிப்பாகப் பெண்ணியர்கள் மற்றும் பின்நவீன பிரதியாளர்கள். எமது முன்னைய தலைமுறை லா.சா.ராவை நிராகரித்தது(கைலாசபதி), விளங்கவில்லை என்று அப்பால் வைத்தது. நாம் லா.சா.ராவை மீள வாசிக்க வேண்டும். மேலும் மேலும் சிக்கலடைந்து செல்கிற பிரதிகளை விளங்கிக் கொள்ள இதுபோன்ற மீள்வாசிப்புகள் அவசியமானவை. லா.சா.ராவின் பிரதிகள் பற்றிய உரையாடல் தமிழில் உரிய காலகட்டத்தில் நடந்திருந்தால் இன்றைக்குக் கோணங்கியை, பிரேம்-ரமேஷை விளங்கிக் கொள்வதில் நாம் இவ்வளவுக்குப் பின்நிற்கத் தேவையில்லை. மாறாக இன்னும் தீவிரமாக இவர்களது பிரதிகளை வாசிப்புச் செய்வதற்கான தகமைகளை பெற்றுக்கொண்டிருந்திருப்போம்.
லா.சா.ராவை வாசிப்பதென்பது அவ்வளவு கடினமான, சுமையான விடயமில்லை. அந்த அனுபவம் அலாதியானது. அதிலும் லா.சா.ராவும் அவரது பிரதிகளை வியாக்கியானப்படுத்துகிற பழைய தலைமுறையினரும் சொல்கிற மாதிரித்தான் லா.சா.ராவை நாமும் வாசிக்க வேண்டும் என்பது இல்லை. தலைமுறைகள், கோட்பாடுகள், வியாக்கியானங்கள், விமர்சனங்கள் கடந்து, அவற்றை மீறி லா.சா.ராவின் மொழிக்கு இருக்கிற அந்த அரூபமான, மௌனமான இசை என்னை மிகவும் வசப்படுத்தி அலைக்கழித்தது. இப்போது அரசியல் புரிந்திருக்கிற நிலையிலும் அப்பிரதிகளை வாசிப்பது இன்பம்தருகிற ஒன்றாகவே இருக்கிறது. அந்த இசை ஓய்ந்து போய்விடவில்லை.
நகுலன் இறந்த போது ‘நகுலன் இறந்த பின்னும் ஒலிநாடா ஓடிக்கொண்டிருக்கிறது’ எனும் வாக்கியத்தை கோணங்கியின் ‘பொம்மைகள் உடைபடும் நகரம்’ தொகுப்பிலிருந்து எடுத்து முகப்பில் பிரசுரித்திருந்தது உயிர்மை இதழ். லா.சா.ரா இறந்துபோய்விட்ட செய்தியைக் கேள்விப்பட்டவுடன் இந்த ஒலிநாடா வாக்கியம்தான் உடனடியாய் நினைவில் வந்தது. இதை எழுதுவதற்காய் லா.சா.ராவின் பிரதிகள் சிலதை மீள வாசிக்கும்போது அப்போதெல்லாம் கேட்ட, நான் உபாசித்த, ரசிகனாயிருந்த அதே இசை கேட்கிறதா எனக் கவனித்தேன்: மௌனம், மௌனம் மேலும் குளிர்கிற மௌனம். எதிர் இருக்கையில் இருந்து உரையாடிக்கொண்டும் இசைத்துக்கொண்டும் இருந்த, பல காலம் பழகிய ஒருத்தர் எழுந்து போய்விட்டிருக்கிறார். அந்த இருக்கை வெறுமையாகவே இருக்கிறது, அப்படியான ஒரு வெறுமையை பிரதிகளை-குறிப்பாக அபிதாவை வாசிக்கும் போது மிகவும் பௌதீகமாகவே உணரக்கூடியதாய் இருந்தது. லா.சா.ரா என்கிற மனிதருடன் இவ்வளவு காலமும் உரையாடிக்கொண்டா இருந்திருக்கிறேன்?! அப்படியானால் ‘பிரதியாளரின் மரணம்’?? சொல்லத் தெரியவில்லை.