புதன், 29 பிப்ரவரி, 2012

s.sakthi.

shobasakthi.


ரூபம்

Print this Page



இவன் வீட்டின் வாசற்படியை அடைந்த போது வீட்டின் உள்ளே தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ச உரையாற்றிக்கொண்டிருந்தார். இவன் வாசற்படியின் ஓரமாக உட்கார்ந்துகொண்டு தலையைச் சாய்த்துத் தொலைக்காட்சியைப் பார்த்தான். “உங்களைக் கவுரவமாகவும் சுயமரியாதையுடனும் வாழ வைப்பது என்னுடைய பொறுப்பு, நான் இந்த நாட்டு மக்கள் அனைவரதும் தலைவன் ” என ராஜபக்ச தமிழில் பேசிக் கொண்டிருந்தார். அந்த அகலமான தொலைக்காட்சித் திரை முழுவதையும் ராஜபக்சவின் முகம் நிறைத்திருந்தது. அவ்வளவு பெரிய தொலைக்காட்சியை இவன் இப்போதுதான் பார்க்கிறான். தட்டையாகவும் நவீனமாகவும் துல்லியமான ஒலியமைப்புடனும் அது இருந்தது. வீட்டுக்காரரின் மகன் அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியைச் சவூதியிலிருந்து அனுப்பி வைத்திருக்கலாம். இவன் முகத்தைத் திருப்பி வீதியைப் பார்த்தான். வீதியில் இருள் மண்டியிருந்தது.



இவன் சிறுவனாய் இருந்தபோது அம்மாவிடம் தொலைக்காட்சியொன்று வாங்கும்படி இடைவிடாமல் நச்சரித்திருக்கிறான். இறந்து போன அப்பாவின் சொற்ப பென்ஷன் பணம் மட்டுமே இவர்களிற்கு வருமானம். அந்தப் பணத்தில் தான் அம்மா இவனையும் இவனது அக்காவையும் பட்டினியில்லாமல் பள்ளிக்கூடம் அனுப்பிக்கொண்டிருந்தார். அப்போது இந்த வீட்டில் ஒரு சிறிய கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சியிருந்தது. இவனும் அக்காவும் இரவு நேரத்தில் இங்கே தொலைக்காட்சி பார்க்க வருவார்கள். அக்காவிற்குத் தொலைக்காட்சி பார்ப்பதில் ஏனோ ஆர்வமில்லை. ஆனால் இருளில் தனியாக வருவதற்கு இவன் பயப்படுவான். அதனால் அக்காவைத் துணைக்கு அழைத்து வருவான். தரையில் அமர்ந்து இவன் கண்கொட்டாமல் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பான். சிறிது நேரமானதுமே அக்கா “வீட்ட போகலாமா” என முணுமுணுப்பாள். அது இவனது காதில் விழாது. அக்கா பொறுக்க முடியாமல் இரகசியமாக இவனது தொடையைக் கிள்ளும்போது, இன்னும் கொஞ்ச நேரம் என இவன் அக்காவிடம் மன்றாடுவான். வீட்டுக்காரர்கள் தேனீரும் அவித்த பனங்கிழங்கும் தருவார்கள். அக்கா வெட்கப்படுவாள். அவற்றை வாங்காவிட்டால் தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்க மாட்டார்களோ என்ற பதற்றத்திலேயே இவன் அவற்றை வாங்கிக்கொள்வான்.



th



இவன் வீட்டில் வெறும் தீப்பெட்டியின் மீது வெள்ளைத்தாளை ஒட்டி நடுவே கத்தரித்து பக்கவாட்டில் வர்ணம் தீட்டித் தொலைக்காட்சிப் பெட்டி செய்து விளையாடிக் கொண்டிருப்பான். பள்ளிக்கூடம் எடுத்துச் செல்லும் பையில் எப்போதும் சில தீப்பெட்டித் தொலைக்காட்சிகள் இருக்கும். கொஞ்சம் வளர்ந்ததும் தொலைக்காட்சி பார்ப்பதற்காக இவன் கிராமத்துக் கடைத் தெருவுக்குப் போகத் தொடங்கினான். அங்கேயிருந்த ‘மீனா கபே’யில் எப்போதும் வண்ணத் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும். தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது இவன் வசியத்தில் விழுந்தவன் போலிருப்பான். அந்த நேரங்களில் இவனது கண்கள் ஒளிர்ந்துகொண்டேயிருக்கும். எந்த நிகழ்ச்சியும் அவனுக்கு அலுப்பூட்டியதேயில்லை. அலைவரிசைக் குழப்பத்தால் அடிக்கடி தொலைக்காட்சியில் வெறும் புள்ளிகள் மட்டுமே தோன்றும். அந்தப் புள்ளிகளை ஆயிரக்கணக்கான மனிதர்கள் ஓடி வந்துகொண்டிருப்பது போல கற்பனை செய்துகொள்வான். தொலைக்காட்சியில் சிலசமயங்களில் படம் மட்டும் வரும், ஒலி வராது. படத்துக்கு ஏற்ற ஒலிகளை இவனாகவே கற்பனை செய்து ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருப்பான். ஒலி மட்டும் வந்தாலும் படக்காட்சிகளை இவனால் கற்பனையில் உருவாக்கிக்கொள்ள முடியும். மின்சாரம் துண்டிக்கப்படும் போது வெறுமனே இவனால் தொலைக்காட்சியைக் கண்ணிமைக்கால் பல நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருக்கவும் முடியும். தொலைக்காட்சிப் பெட்டியொன்று தான் இவனுக்குத் தேவையானது. அதிலிருந்து படங்களையும் ஒலிகளையும் இவனால் உருவாக்கிக்கொள்ள முடியும். கடை மூடப்படும் போதுதான் இவன் வீட்டுக்குத் திரும்பி வருவான்.



பக்கத்து வீட்டிற்கு இவன் தொலைக்காட்சி பார்க்கப் போவது குறைந்திருந்தது. இரண்டு நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையின் ஓரத்தில் இவனின் கிராமம் அமைந்திருந்தது. அந்த நெடுஞ்சாலையை ஒட்டித்தான் கடைத்தெரு இருந்தது. அந்த நெடுங்சாலையால் இராணுவம் ரோந்து செல்லும் நாட்களில் கடைத் தெரு வெறிச்சோடிவிடும். இராணுவ வாகனங்கள் துரத்தில் வரும் ஒலி கேட்டவுடனேயே கடைகள் சடுதியில் மூடப்படும். கடைத் தெரு மனிதர்கள் நெடுஞ்சாலையிலிருந்து விலகி ஓடிவிடுவார்கள். இராணுவம் கடை வீதியைக் கடந்து செல்லும் போது சில வேட்டுக்களைத் தீர்க்காமல் செல்வதில்லை. அது வெறுமனே எச்சரிக்கை வெடியாகத்தானிருக்கும். இராணும் ஒருபோதும் நெடுஞ்சாலையிலிருந்து விலகிக் கிராமத்திற்குள் நுழைந்ததில்லை.



கடைத்தெரு மூடிக் கிடக்கும் நாட்களில் இவன் பக்கத்து வீட்டிற்குத்தான் தொலைக்காட்சி பார்க்கப் போவான். அவர்கள் இப்போது ஒரு சிறிய வண்ணத் தொலைக்காட்சியை வாங்கியிருந்தார்கள். இவன் ஆள் கொஞ்சம் வளர்ந்துவிட்டதால் இப்போது இவனை நாற்காலியில் உட்காருமாறு அவர்கள் வற்புறுத்துவார்கள். நொறுக்குத் தீனிகளும் தேனீரும் கொடுப்பார்கள். அவற்றை வாங்கத்தான் இவன் கொஞ்சம் வெட்கப்படுவான். இவ்வளவுக்கும் இவனது தாயாரும் இந்த வீட்டுக்காரியும் நெருங்கிய சிநேகிதிகள் தான். அவசரத்துக்குச் சீனி, தேயிலை என இருபக்கமும் கைமாற்றும் நடப்பதுண்டு. ஆனால், இவனுக்குத்தான் யாரிடமும் எதுவும் வாங்கிக் கொள்ளவதென்றால் கூச்சமாயிருக்கும். தொலைக்காட்சி விசயத்தில் மட்டும் தான் இவன் கூச்சத்தையும் மீறி நடந்துகொண்டான்.



தீப்பெட்டித் தொலைக்காட்சி வைத்து விளையாடும் வயது கடந்து போன போது உண்மையாகவே இவனது வீட்டுக்கு ஒரு சிறிய வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வந்தது. அக்கா ஆசிரியப் பணியில் சேர்ந்து பெற்ற முதலாவது சம்பளப் பணத்துடன் கையிலிருந்த சேமிப்புப் பணத்தையும் போட்டு அம்மா இவனுக்கு அதை வாங்கிக் கொடுத்தார். இவன் அக்காவிடம் கேட்டு ஓர் அழகிய துணியுறையைத் தைக்கச் செய்து அதனால் தொலைக்காட்சியைப் பத்திரம் செய்தான். பள்ளிக்கூடத்துப் பைக்குள் இப்போது தீப்பெட்டிகள் இல்லை. அதற்குப் பதிலாகத் தொலைக்காட்சியை இயக்க வழிகாட்டும் விபரக்கொத்தை இவன் பைக்குள் எப்போதும் வைத்திருந்தான்.



பள்ளிக்கூடத்தால் வந்ததும் தொலைக்காட்சியின் முன்னால் உட்கார்ந்துவிடுவான். ஆட அசைய மாட்டான். சிலைபோல தொலைக்காட்சியைப் பார்த்தவாறே உட்கார்ந்திருப்பான். சாப்பிடுவதற்கு அம்மா பத்துத் தடவைகள் கூப்பிட்ட பின்பே குசினிக்குள் ஓடிச் சென்று தட்டை எடுத்துக்கொண்டு ஓடிவந்து தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் உட்கார்ந்து விடுவான். இதனால் ஒன்றும் அவனது படிப்புப் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. வகுப்பில் எப்போதும் அவன் முன்னணி மாணவனாகவேயிருந்தான். அக்காவிடம் ஒரு நாள் தொலைக்காட்சியைச் சுட்டிக்காட்டி ‘எங்கிட வாத்திமார விட இது பிரயோசனமானது’ என்றான்.



பல்கலைக்கழக அனுமதி சொற்ப மதிப்பெண்களால் தவறிப் போனது. கொஞ்சம் மனம் சோர்ந்து போனான். பகல் முழுவதும் தீவிரமாகப் படித்தான். இரவானதும் அறையிலிருந்த விளக்கை அணைத்துவிட்டு இருளில் நடுநிசி வரை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பான். அம்மா அவ்வப்போது வந்து ‘இருட்டுக்குள்ளயிருந்து பார்க்காத தம்பி, கண் பழுதாப் போகும்’ என்பார். அது இவனின் காதில் ஏறாது.



இவனுக்கு இருபது வயதானபோது அந்தக் கிராமத்திற்குள் இராணுவம் முதற்தடவையாக நுழைந்தது. இராணுவம் வரும் செய்தி கேட்டுச் சனங்கள் வீடுகளிலிருந்து கையில் அகப்பட்டவற்றை எடுத்துக்கொண்டு உயிர் தப்பச் சிதறியோடினார்கள். அக்கா அப்போது நகரத்தில் அறை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்து நகரத்துப் பாடசாலையில் வேலை செய்ததால் இவனும் அம்மாவும் நகரத்திற்குப் போவதென்று முடிவெடுத்தார்கள். இவர்களது உடமைகள் இரு பெட்டிகளிற்குள் அடங்கிவிட்டன. சைக்கிளின் பின்னால் தொலைக்காட்சியை வைத்துக் கட்டிக் கொண்டான். நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று நகரத்திற்குச் செல்லும் வாகனமொன்றில் அம்மாவையும் பெட்டிகளையும் ஏற்றி விட்டு இவன் வாகனத்தைச் சைக்கிளில் பின் தொடர்ந்தான்.



நகரத்திற்கு வந்ததும் கிடைத்த விலைக்கு தொலைக்காட்சியை விற்றான். மிகச் சொற்பமான பணமே கிடைத்தது. நகரத்திலிருந்த உறவினரின் கடையொன்றிற்குச் சென்று அங்கே சைக்கிளை நிறுத்திவிட்டு, சற்று நேரத்தில் வருவதாகக் கூறிவிட்டு நடந்து பஸ் நிலையம் வந்து பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தான். நான்கு மணிநேரப் பயணத்தில் இருபது சோதனைச் சாவடிகளைக் கடக்க வேண்டியிருந்தது. நெடுஞ்சாலையின் ஓரத்தில் இறங்கியவன் அங்கிருந்து வயல்வெளிகளுக்குள்ளால் காட்டை நோக்கி நடந்தான். இடையிடையே எதிர்ப்பட்டவர்களிடம் வழியை விசாரித்துக்கொண்டான். இரவாகிக்கொண்டிருந்தாலும் காட்டின்மீது நிலவு வெளிச்சம் போட்டது. இரவு முழுவதும் காட்டுப் பாதையால் நடந்து ஒரு கிராமத்தை அடைந்தான். அங்கே விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இருந்தது.



இவன் காட்டிற்குள்ளால் நடந்துவந்து இயக்கத்தில் சேர்ந்ததாலோ என்னவோ இவனுக்குக் கானகன் என்று இயக்கத்தில் பெயர் வைத்தார்கள். ஆனால், தோழர்கள் இவனை ‘யங்கிள்’ என்றே அழைத்தார்கள். தாக்குதலின் முன்னணி அணியில் யங்கிள் நின்றால் அந்தத் தாக்குதல் வெற்றிதான் என்று இயக்கத்திற்குள் கதை இருந்தது. போரிடவே பிறந்தவன் போல அவன் இருந்தான். அவனது இடது கண்ணிற்கு திட்டமிடல் என்றும் வலது கண்ணிற்கு துணிச்சலென்றும் பெயர். அவனது இடது காலிற்கு நிதானம் என்றும் வலது காலிற்கு வேகமென்றும் பெயர். எத்தனையோ முற்றுகைகளை முன்னணியில் நின்று முறியடித்திருக்கிறான். அவனது அணி முழுவதுமாகச் சிதைக்கப்பட்ட நிலையிலும் தனியாளாகப் போராடித் தளம் திரும்பியிருக்கிறான். கடைசியில் விமானக் குண்டு வீச்சொன்றில் வேகமெனப் பெயரிடப்பட்ட கால் துண்டிக்கப்பட்டது. நிதானம் எனப் பெயரிடப்பட்ட கால் எஞ்சியிருந்தது.



ஊன்றுகோலின் உதவியுடன் அவன் முகாமில் நிதானமாக நடந்து திரிந்தான். அம்மாவிற்கோ அக்காவிற்கோ தான் காலிழந்த செய்தி தெரியாமல் பார்த்துக் கொண்டான். யுத்த நிறுத்தம் வந்தபோது கூட இவன் அம்மாவைப் பார்க்கப் போகவில்லை. இவன் இருக்குமிடமும் அம்மாவிற்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டான். ஒரு வருடத்திற்குப் பின்பு புலிகளின் தொலைக்காட்சியில் தான் அம்மா இவனைப் பார்த்தார். அடுத்த வாரமே அம்மாவும் அக்காவும் இவனைத் தேடி வந்தார்கள். இவன் பயந்தது போல எதுவும் நடக்கவில்லை. அம்மா இவனது கால் துண்டிக்கப்பட்ட பகுதியை மட்டும் தடவிக்கொடுத்தார். உற்சாகமாகப் பேசிவிட்டுத் திரும்பிச் சென்றார்கள்.



புலிகளின் தொலைக்காட்சியில் இவன் மூன்று நிகழ்ச்சிகளிற்குத் தொகுப்பாளராயிருந்தான். அவற்றில் ‘விடுதலை கீதங்கள்’ என்ற அரை மணிநேர நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. சாந்தன், தேனிசை செல்லப்பா, சுகுமார், சிட்டு போன்றோரின் புகழ்பெற்ற பாடல்களை இவன் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்குவான். பாடல்களிற்கு முன்பு இவன் சொல்லும் கவிதை வரிகளும் இவனது உணர்ச்சி துள்ளும் ஏற்ற இறக்கமான கம்பீரமான குரலும் மக்களைச் சொக்கச் செய்தன. சாந்தன் ஒருமுறை இவனிடம் ‘என்னைவிட உங்களுக்குத்தான் கனக்க ரசிகர்கள்’ எனச் சொல்லிச் சிரித்தார்.



வழிதெருவில் இவனை மக்கள் காணும் போது இவனைச் சூழ்ந்து கொண்டார்கள். இவன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றும் போது உட்கார்ந்துகொண்டிருப்பதால் இவனிற்கு ஒரு கால் இல்லை என்பது பலருக்குத் தெரியாது. அந்தக் கம்பீரக் குரல் ஊன்றுகோலோடு தடுமாறி நடந்து வருவதை அவர்கள் நேரில் பார்த்தபோது அவர்களது கண்கள் இருண்டு போயின. சில தாய்மார்கள் இவனை அணைத்து உச்சி மோர்ந்தார்கள். இழந்து போன குழந்தைகள் அவர்களிற்கு ஞாபகம் வந்திருக்கலாம்.



இவனுக்கு ஏராளமான நேயர் கடிதங்கள் வந்தன. அவற்றில் காதல் கடிதங்களும் இருந்தன. அந்தக் கடிதங்களை இவன் தனிமையில் புன்னகையோடு படித்துவிட்டுக் கிழித்துப் போடுவான். ‘ இயக்கத்துக்கே காதல் கடிதம் எழுத எங்கிட பெட்டையள் துணிஞ்சிற்றாளவ’ என அவனது உதடுகள் முணுமுணுக்கும்.



சமாதான காலத்தில் வன்னியிலிருந்து இசைக்குழுவொன்று அய்ரோப்பாவிற்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இசை நிகழ்ச்சிகள் நடத்தச் சென்றபோது நிகழ்ச்சித் தொகுப்பாளராக இவனும் அவர்களுடன் சென்றான். இவன் தான் அவசியம் வர வேண்டுமென நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கேட்டிருந்தனர். விமானத்தில் மது வழங்கப்பட்ட போது இவனுக்கு அருகிலிருந்த பாடகன் ‘ கன நாளாப் போச்சுது, ஒண்டு எடுக்கவா” என இவனிடம் பகடி மாதிரிக் கேட்டான். இவன் முறைத்த முறைப்பில் பாடகன் “குடிக்கிறதில ஒண்டுமில்ல ஆனால் குரலுக்குக் கூடாதெல்லா” என முனகிவிட்டு இருக்கையில் சாய்ந்துகொண்டான்.



அய்ரோப்பிய நகரங்களில் பெருந்தீனியால் இவனுக்கு வயிற்று வலியே வந்துவிட்டது. தங்களது வீட்டிற்குச் சாப்பிட வரவேண்டும் என மக்கள் அடிக்காத குறையாக இவனைத் தங்களது வீட்டிற்கு முறை வைத்துக் கடத்திச் சென்றார்கள். நிகழ்ச்சிகளின் போது இவன் மேடைகளில் தோன்றும் போதெல்லாம் இளைஞர்கள் ஆரவாரித்துக் கூக்குரலிட்டார்கள். அங்கிருந்து திரும்பும் போது விலையுயர்ந்த பரிசுப் பொருட்களால் இவனது பெட்டி நிரம்பி வழிந்தது. கொழும்பு விமான நிலையத்தில் சோதனையின் போது பரிசுப் பொருட்களில் ஒன்றைக் கையிலெடுத்து “இதை எனக்குத் தருவாயா” என அதிகாரி கேட்ட போது, அதை அதிகாரியே எடுத்துக் கொள்ளுமாறு புன்னகையுடன் கைகாட்டினான்.



முகாமுக்குத் திரும்பியவுடனேயே எல்லாப் பரிசுப் பொருட்களையும் தோழர்களிற்குப் பகிர்ந்து கொடுத்தான். அவனுக்கென்று எஞ்சியவை காதலைத் தெரிவிக்கும் மூன்று வாழ்த்து அட்டைகள் மட்டுமே. பாரிஸ் நகரத்தில் இரண்டு அட்டைகளும் சுவிஸில் ஓர் அட்டையும் கிடைத்திருந்தன. பாரிஸ் அட்டைகள் இரண்டும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தன. சுவிஸ் அட்டையில் மழலைத் தமிழில் ஒரு மட்டமான காதல் கவிதை எழுதப்பட்டிருந்தது. அவற்றில் எழுதப்பட்டிருந்தவற்றுக்காக அல்லாமல் அந்த அட்டைகளின் அழகிற்காக அவற்றைக் கிழித்துப் போட மனமற்றவனாய் எடுத்து வந்திருந்தான். முகாமில் வைத்து அவற்றையும் கிழித்துப் போட்டான். முகாமிலிருந்த தோழர்களிற்கு விடிய விடிய அய்ரோப்பியப் பயணக் கதைகளைச் சொன்னான். புலம் பெயர்ந்த தமிழர்கள் இருக்கும் வரை போராட்டத்தை எவராலும் அழித்துவிட முடியாது என நம்பினான்.



நந்திக் கடலின் ஓரத்தில் இவனது அணி சரணடையும் முடிவை எடுத்த போது இவன் அந்த இடத்திலேயே சயனைட் குடித்துவிடலாம் என்றான். சாவதால் ஆகப்போவது எதுவுமில்லை எனப் பொறுப்பாளர் சொன்னார். துப்பாக்கிகள், சீருடைகள், இலக்கத் தகடுகள், சயனைட் குப்பிகள் எல்லாம் மணலில் புதைக்கப்பட்டதும் அணி சிதறி மக்களுக்குள் கரைந்து போனது. இவனுக்கு சயனைட் குப்பியைப் புதைக்க விருப்பமில்லை. அதை மடியில் செருகிக் கொண்டு நந்திக் கடலோரமாக நடந்து வந்தான். கடல் நீரேரியைக் கடந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் செல்ல ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக ஒரு படகில் இருபது பேர் வரை தயாராக இருந்தார்கள். இராணுவத்திடமிருந்து வரும் ஷெல் வீச்சுகள் குறையும் போது படகு புறப்படுவதாகத் திட்டம். இவன் செயற்கைக் காலைக் கழற்றிக் கரையிலேயே வைத்து விட்டு ஊன்றுகோலுடன் அந்தப் படகில் ஏறிக்கொண்டான். ஷெல் வீச்சு நின்றிருந்த ஒரு தருணத்தில் படகு புறப்பட்டது. இவன் சயனைட் குப்பியைக் கடல் நீரில் எறிந்தான்.



படகு கரையை அடையும் போதுதான் கரையிலேயே வரிசையாக இராணுவீரர்கள் படகை எதிர் நோக்கித் துப்பாக்கிகளைக் குறிவைத்துக் கரையோடு கரையாகப் படுத்துக் கிடந்தது தெரிந்தது. இவர்கள் படகை விட்டு இறங்கியதும் “ஆடைகளைக் களைந்து விட்டு வாருங்கள்!” என்ற உத்தரவு வந்தது. இவர்கள் ” அய்யா நாங்கள் பொது மக்கள்” எனக் கூக்குரலிட்டார்கள். ஆடைகளைக் களையுமாறு மறுபடியும் உத்தரவு வந்தது. இவர்கள் தயங்கி நின்றபோது கரையிலிருந்து சரமாரியாக வெடிகள் கிளம்பின. கடல்நீர் துடித்துச் சிதறியது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோருமே ஆடைகள் முற்றாகக் களையப்பட்டு அவர்களது உடல்களிலே வெடிப்பொருட்கள் கட்டப்பட்டிருக்கின்றனவா எனப் பரிசோதிக்கப்பட்டனர். அந்த மனிதர்களை முழு நிர்வாணமாகவே ஒரு கிலோமீற்றர் நடத்திச் சென்ற இராணுவம் அங்கிருந்த பஸ்ஸில் ஏற்றியதன் பின்பாகத்தான் அவர்களை ஆடைகள் அணிந்துகொள்ள அனுமதித்தது. இவன் தலையைக் குனிந்தவாறேயிருந்தான். எவரையும் ஏறிட்டுப் பார்க்க இவன் விரும்பவில்லை. மணிக்கணக்காக பஸ் ஓடிக்கொண்டிருந்தது. குழந்தைகள் தாகத்தாலும் பசியாலும் வெப்பத்தாலும் அழுதபோது அவர்களது தாய்மார்களால் ‘பளாரென’ அறையப்பட்டு அடக்கப்பட்டன. வவுனியா தடுப்பு முகாமில் பஸ் நின்றபோது இவன் தலையைக் கவிழ்ந்தவாறே இறங்கினான். பூமியைத் தவிர இவனது கண்கள் எதையும் பார்க்கவில்லை. வரிசையில் உட்கார்ந்திருந்தபோது இவனது தோளைத் தொட்டு ஒரு இரகசியக் குரல் ‘கானகன்’ என அழைத்தது. சடுதியில் இவன் தலை நிமிர்த்திப் பார்த்தபோது ஓர் இராணுவ அதிகாரி இவனைப் பார்த்து இளித்துக் கொண்டு நின்றான். தரையில் கிடந்த ஊன்றுகோலைக் கையில் எடுத்தவாறே மறுகையால் இவன் எழுந்திருக்க அதிகாரி உதவினான். இவன் எழுந்ததும் ஊன்றுகோலைக் கொடுத்து விட்டு இவனது தோள் பற்றி அதிகாரி அழைத்துச் சென்றான்.



தகரங்களால் அடைக்கப்பட்டிருந்த அந்தச் சிறிய அறைக்குள் தான் விசாரணை தொடங்கியது. இவனது உண்மையான பெயரைக் கேட்ட போது ரவிக்குமார் என்றான். இயக்கப் பெயர் கானகன் என்றான். “உனக்கு யங்கிள் என்று இன்னொரு பெயரும் இருக்கிறதே’ எனச் சொல்லி அதிகாரி சிரித்தான். எந்த உண்மையை மறைத்தும் பலனில்லை என்பது இவனுக்குத் தெரிந்தது. ஆனால், முடிந்தவரை உண்மைகளைப் பேசிவிடாமலிருப்பது தனது கடமை என்று இவன் நினைத்தான். ஆனால், விசாரணையின் போக்கில் மறைப்பதற்கு எந்தத் தகவல்களும் இவனிடம் இல்லாமற் போயின. விசாரணை ஒரு பேரேட்டில் பதிவாகிக்கொண்டிருந்தது. சுற்றி நின்ற இராணுவத்தினரில் சிலர் இவனை செல்போன் வீடியோவில் பதிவு செய்தவாறிருந்தார்கள். இவன் தலையைக் குனிந்தபோதெல்லாம் ஒரு சிங்கள வசைச் சொல்லுடன் இவனது தலை அவர்களால் தூக்கி நிறுத்தப்பட்டது. “கானகன் தான் சங்கடப்படுகிறாரே, படம் பிடிப்பதை நிறுத்துங்கள்” என அதிகாரி புன்னகையுடன் உத்தரவிட்டதும் படம் பிடிப்பது நிறுத்தப்பட்டது. இவன் எதிர்பார்த்த மாதிரியே பிறகு சம்பவங்கள் நிகழ்ந்தன.



தரையோடு தரையாக நகர முடியாது கிடக்கும் ஒரு முயலை அடிப்பதுபோல சுற்றிநின்று தடிகளாலும் துப்பாக்கியின் பின்புறங்களாலும் இவனை அடித்துக்கொண்டேயிருந்தார்கள். அவர்களது கேள்விகளிற்கு இவனுக்கு உண்மையிலேயே பதில் தெரியாது. இவனை உட்கார வைத்து விட்டு அசையவிடாமல் பிடித்துக்கொண்டே இவனது துண்டிக்கப்பட்ட காலின் தொடைப் பகுதியிலிருந்து மிக நிதானமாகவும் திருத்தமாகவும் ஒரு துண்டுத் தசையைக் ‘கேக்’ போல கத்தியால் வெட்டி எடுத்து இவனது கையில் கொடுத்து அதைச் சாப்பிடச் சொன்னார்கள். இவன் மயங்குவது போல பாவனை செய்து கண்களைச் சுழற்றிக் கீழே சரிந்தான். இவனின் வாய்க்குள் அந்தச் சதைத்துண்டு இரத்தம் வடிய அப்படியே திணிக்கப்பட்டது. அது தொண்டைக்குள் வழுக்கிக் கொண்டு போனது.



அடுத்த மூன்று நாட்களும் இவன் வாந்தி எடுத்தபடியே இருந்தான். உடலிலிருந்த இரத்தம் வாந்தியாக வெளியேறிக் கொண்டிருந்தது. இவன் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்ட பின்பும் அடிக்கடி வாந்தி எடுத்தவாறேயிருந்தான். சாப்பிடும் போது இறைச்சியையோ மீனையோ பார்த்தால் ஓங்காளித்து வாந்தி எடுப்பான். மாமிசம் சாப்பிடுவதை நிறுத்திக்கொண்டான். இந்தப் புனர்வாழ்வு முகாமில் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட இருநூறு சரணடைந்த போராளிகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். நோயால் இறந்த ஆறுபேருக்கும், தற்கொலை செய்துகொண்ட இருவருக்கும் பதிலாக புதியவர்கள் முகாமில் சேர்க்கப்பட்டார்கள். இருநூறு என்ற எண்ணிக்கை குறையாமல் இராணுவத்தினர் பார்த்துக்கொண்டார்கள்.



இவன் எப்போதும் மனச் சோர்வுடனேயே காணப்பட்டான். முகாமில் இருவருக்கு மனநிலை முற்றாகச் சரிந்திருந்தது. அவர்களில் ஒருவன் தனது ஆடைகளைக் கழற்றி வீசுவதிலேயே குறியாயிருந்தான். அதற்காக இராணுவத்தினரிடம் ஒவ்வொரு நாளும் உதைபட்டான். அவன் அங்கிருந்து விடுதலையாவதற்காக நாடகம் போடுகிறான் என இராணுவ அதிகாரி சொன்னான்.



இவர்களில் தெரிவு செய்யப்பட்ட அய்ம்பது பேர்களிற்கு பயிற்சியளிக்க ஒரு மனநல மருத்துவர் வந்தார். அவர் மனச் சோர்விலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக இருப்பது எவ்வாறு என உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே இவன் குறுக்கிட்டு “இங்கிருந்து விடுதலையாகி வீட்டுக்குப் போனால் மகிழ்ச்சியாயிருப்போம் என நினைக்கிறேன்’” என்றான். மருத்துவர் எது சொன்னாலும் இவன் விட்டேற்றியாக அவரைத் தட்டிக்கழித்தான். கடைசியில் மருத்துவர் மனச் சோர்வுக்கு ஆளாகிவிட்டார் போலிருந்தது. அடுத்த பயிற்சி வகுப்பை இராணுவத்தினருக்கு எடுக்கவிருப்பதால் முன்னாள் போராளிகளிற்கான முதல்நாள் பயிற்சி வகுப்பை இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் சொன்னார்.



சரியாக ஒன்றரை வருடங்கள் கழித்து அங்கிருந்து விடுதலையான முதலாவது அணியில் இவனுமிருந்தான். அந்த அணியில் அவயங்களை இழந்திருந்தவர்கள் மட்டுமேயிருந்தனர். புதிய வேட்டியும் சட்டையும் இராணுவத்தினரால் வழங்கப்பட்டன. முகாமில் விழா நடத்திப் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் முன்னாள் போராளிகள் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவனை அழைத்துச் செல்ல அம்மா வந்திருந்தார். அம்மாவின் முகம் முழுவதும் சிரிப்புத் தொற்றியிருந்தது.



அக்காவுக்கு கல்யாணமாகி அவள் நகரத்தில் குடியிருந்தாள். இவ்வளவு நாட்களும் அம்மா அக்காவுடனேயே தங்கியிருந்தார். அம்மா தன்னை அக்காவின் வீட்டுக்குத்தான் அழைத்துச் செல்வதாக இவன் எண்ணினான். ஆனால் அம்மா இவனைக் கிராமத்து வீட்டிற்கு அழைத்து வந்தார்.



வீடு உருக்குலைந்திருந்தது. கதவுகளையும் நிலைகளையும் கூடத் திருடிச் சென்றிருந்தார்கள். வாசலுக்கும் ஜன்னல்களிற்கும் அம்மா துணியால் திரை செய்து போட்டார். இவனது அறைக்குள் ஒரு மேசையும் நாற்காலியும் படுக்கையும் வாங்கிப் போட்டார். இவன் அந்த அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தான். வீட்டுக்குப் போனால் மகிழ்ச்சி உருவாகும் என மனநல மருத்துவரிடம் சொன்னதை அடிக்கடி நினைத்துப் பார்த்தான்.



கடைத் தெருவே மாறியிருந்தது. முன்பு இவன் தொலைக்காட்சி பார்க்கச் செல்லும் ‘மீனா கபே’ இப்போது ‘லங்கா கபே’ ஆகியிருந்தது. அதை இராணுவத்தினர் நடத்திக்கொண்டிருந்தனர். இப்போதும் அங்கே இடையறாது தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது. இவன் தலையைக் கவிழ்ந்தவாறே அதைக் கடந்து சென்றான். கடைத் தெருவில் எல்லோருமே தன்னைப் போலவே தலையைக் குனிந்தவாறே நடந்துகொண்டிருப்பதாக இவனுக்குத் தோன்றியது. தற்செயலாகச் சந்தித்த கண்களில் அச்சத்தை மட்டுமே இவன் பார்த்தான்.



அம்மா இவனுக்குச் செயற்கைக் கால் பொருத்துவதற்காகப் பணம் திரட்டிக் கொண்டிருந்தார். காலைப் பொருத்தி நான் எங்கே போகப் போகிறேன், அந்தப் பணத்தில் ஒரு தொலைக்காட்சி வாங்கினாலாவது அறைக்குள்ளிருந்து பார்த்துக்கொண்டிருக்கலாமென நினைத்தான். ஆனால், அவ்வாறு கேட்பது அம்மாவைப் புண்படுத்தக் கூடுமென்பதால் இவன் வெறுமனே அறைக்குள் அடைந்து கிடந்தான். வாரம் ஒருமுறை இராணுவச் சாவடிக்குச் சென்று கையெழுத்திட வேண்டியிருந்தது. அந்த நாட்களில் மட்டுமே வெளியே போனான்.



அன்று மாலையில் பக்கத்து வீட்டிலிருந்து பாட்டுச் சத்தம் வந்து கொண்டிருந்தது. மகிழ்ச்சி என்பது நாம் உருவாக்கிக் கொள்வதே என மனநல மருத்துவர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தான். பொழுது பட்டதும் ஊன்றுகோலை எடுத்துக்கொண்டு வெளியே நடந்தான். அவன் பக்கத்து வீட்டு வாசற்படியில் தட்டுத் தடுமாறி ஏறிய போது உள்ளேயிருந்த தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ச உரையாற்றிக்கொண்டிருந்தார். சற்று நேரத்தில் தொலைக்காட்சி திடீரென நிறுத்தப்பட்டது.



வீட்டுக்காரர் வாசலுக்கு வந்து இவனைப் பார்த்தார். இவன் தொலைக்காட்சி பார்ப்பதற்காக வந்ததாகச் சொன்னான். வீட்டுக்காரர் தலையைக் குனிந்து நிலத்தைப் பார்த்தவறே அவர்கள் சாப்பிடப் போவதாகச் சொல்லிவிட்டு வாசலிலேயே நின்றார். இவன் கையை வாசற்படியில் ஊன்றித் தட்டுத் தடுமாறி எழுந்து சுவரில் சாய்த்து வைத்திருந்த ஊன்றுகோலையும் எடுத்துக்கொண்டு படியிறங்கும் போது வீட்டுக்காரர் ‘கானகன் நீ இஞ்ச வந்து போனால் ஆமியால எங்களுக்கும் பிரச்சினை வரும்’ என்று முணுமுணுத்தது இவனுக்குத் தெளிவாகக் கேட்டது.



வீதியில் நின்று சட்டைப் பையிலிருந்து பீடியை எடுத்துப் பற்றவைக்க முயன்றான். கை நடுங்கிக் கொண்டிருந்தது. நான்காவது தீக்குச்சியிலேயே பற்ற வைக்க முடிந்தது. இந்தப் பழக்கம் தடுப்பு முகாமிலிருந்தபோது வந்திருந்தது. அம்மா காலையில் ஒரு கட்டு பீடி வாங்கிக் கொடுப்பார்.



வாயில் பீடியை வைத்தவாறே நடந்தான். இவனது ரவி என்ற பெயரை வீட்டுக்காரர் மறந்து இவனைக் கானகன் என அவர் அழைத்தது இவனுக்கு ஆச்சரியமாயிருந்தது. பீடியை இழுத்துக் கொண்டே நடந்தான். விடுதலையாகி வந்து இவ்வளவு நாளாகியும் அக்காவோ அத்தானோ தன்னை இதுவரை வந்து பார்க்காதது திடீரென இவனுக்கு உறைத்தது.



நடுநிசியில் அம்மா எழுந்து கை விளக்கையும் எடுத்துக் கொண்டு மெதுவாக நடந்து இவனது அறையை நோக்கிப் போனார். ஒவ்வொரு நாளும் அம்மா இவ்வாறு சென்று பார்ப்பார். இவன் தூங்கிக்கொண்டிருப்பது அவருக்கு நிம்மதியாகயிருக்கும்.



அம்மா இவனது அறையின் வாசலில் நின்று இவனது படுக்கையிருந்த திசையில் விளக்கைப் பிடித்தபோது படுக்கை காலியாயிருந்தது. அம்மா பதற்றத்துடன் அறையின் மூலையொன்றிற்கு வெளிச்சத்தைத் திருப்பினார். அங்கே அவன் சுவரோடு சாய்ந்து தரையில் ஆடாமல் அசையாமல் சிலைபோல உட்கார்ந்திருந்தான். அம்மா அவனது முகத்திற்கு வெளிச்சத்தைத் திருப்பியபோது அவனது கண்கள் மேசையையே உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார். அம்மா மேசைக்கு வெளிச்சத்தைத் திருப்பியபோது மேசையில் ஒரு தீப்பெட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அம்மா திடீரென வெடித்துப் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினார். இவன் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தான். இவனது கண்கள் ஒளிர்ந்துகொண்டிருந்தன.

வியாழன், 19 ஜனவரி, 2012

Puthumaipitthan.

கண்மணி கமலாவுக்கு புதுமைப் பித்தன் (ஒரு வாசிப்பு அனுபவம்)
உஷாதீபன்
வாழ்க்கையின் அர்த்தத்தைச் சொல்லுவது தத்துவம். வாழ்க்கையைச் சொல்லுவது, அதன் இரசனையைச் சொல்லுவது இலக்கியம் என்றார் புதுமைப்பித்தன்.
அந்த அளவுக்கான ஆழ்ந்த ரசனையோடுதான் தனது ஒவ்வொரு படைப்பினையும் வடித்தெடுத்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும். அதனால்தான் இலக்கியம் என்பதன் முழு அர்த்தத்தை உள்ளடக்கியதாக நம்மை பிரமிக்க வைக்கிறது அவரது ஒவ்வொரு படைப்புக்களும்.
இல்லையென்றால் தனது மனைவிக்கு எழுதும் கடிதங்களைக் கூட இத்தனை ரசனையோடும், பிடிப்போடும், உள்ளார்ந்த அனுபவச் செறிவோடும் அன்பையும், பாசத்தையும், பொறுப்புணர்ச்சியையும், கடமையுணர்ச்சியையும் நுணுகி நுணுகி உணர்ந்து, அனுபவித்து அதன் ஆழமான உட்பரிமாணங்களில்  மனமுவந்து பயணித்து, தனக்கு ஊனாகவும், உடலாகவும் இருந்து பரிமளித்திடும் தன் மனையாளிடம் அதன் மொத்த சாரத்தையும் வடித்துக் கொடுத்துக் கடிதங்கள் எழுதியிருப்பாரா?
கண்மணி கமலாவுக்கு புதுமைப்பித்தன்  இதுதான் புத்தகம். இத்தனை கடிதங்களைத் தொகுக்கும் பணி என்ன சாதாரணமா? என்ன விலையோ அதைத் தயங்காமல் கொடுத்து, ஆர்வமாகப் படித்து முடித்து விடுகிறோம். ஆனால் அந்தப் புத்தகத்தை உருவாக்குவதற்கு அந்தத் தொகுப்பாளர் என்ன ஒரு உழைப்பையும், முனைப்பையும் காட்டியிருப்பார்? திரு இளையபாரதி அவர்கள் நிரம்பவும் பாராட்டுக்குரியவர்தான்.
இதுதான் புத்தகம்இத்தனை கடிதங்களைத் தொகுக்கும் பணி என்ன சாதாரணமாஎன்ன விலையோ அதைத் தயங்காமல் கொடுத்துஆர்வமாகப் படித்து முடித்து விடுகிறோம்ஆனால் அந்தப் புத்தகத்தை உருவாக்குவதற்கு அந்தத் தொகுப்பாளர் என்ன ஒரு உழைப்பையும்முனைப்பையும் காட்டியிருப்பார்திரு இளையபாரதி அவர்கள் நிரம்பவும் பாராட்டுக்குரியவர்தான் நாமெல்லாம் என்ன வாழ்க்கை வாழ்கிறோம் என்றுதான் தோன்றுகிறது நமக்கு. முணுக்கென்றால் முன்னூறு முறை கோபித்துக் கொள்ளும், முகத்தைத் திருப்பிக் கொள்ளும், சண்டைக்கு சதிராய்ப் பறக்கும் சாதாரண மானிடப் பிறவியாய் அன்றாட வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறோம்.
இத்தனைக்கும் பொருளாதாரத் தேவை என்பது நிறைவடைந்திருக்கும் நிலையில், எதடா சாக்கு என்று ஒன்றுமில்லாததற்கெல்லாம் முறுக்கிக் கொண்டு அலைகிறோம். என்னதான் புத்தகங்கள் படித்தாலும், உணர்ந்தாலும், மனிதனின் இயல்பான கோணல் புத்தி என்ன அத்தனை சீக்கிரமாகவா தன்னை மூடி மறைத்துக்கொள்கின்றன? அல்லது எல்லா முரண்களிலிருந்தும் விலகிக் கொள்கின்றனவா?
அன்றாட வாழ்க்கையே பிரச்னையாக இருந்த நிலையில், பொருள் ஆதாரத்தை முற்றிலுமாக நம்பி நின்ற பொழுதில்,  ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அவரவருக்கான மனச் சங்கடங்களைக் கூட நேரில் பகிர்ந்து கொள்ள முடியாது வெகு தூரம் பிரிந்து நின்ற வேளையில், எத்தனை கரிசனத்தோடும், அன்போடும், கருணையோடும், பாசத்தோடும், பரஸ்பரம்  எப்படியெல்லாம் உறவாடியிருக்கிறார்கள்? மனதுக்குள்ளே எப்படி ஆரத் தழுவியிருக்கிறார்கள்? இதுதான் உண்மையான அன்பு என்பதோ?
மூத்த தலைமுறையினரின் அடிப்படையான விழுமியங்கள் அவர்கள் வாழ்க்கையை எப்படியெல்லாம் செழுமைப் படுத்தியிருக்கின்றன! ஒழுக்கமும், பண்பாடும், கடமையுணர்ச்சியும், கட்டுப்பாடும், இந்த வாழ்க்கையை இப்படித்தான் வாழ்ந்து காட்ட வேண்டும் என்றல்லவா நமக்குப் பாடம் கற்பிக்கின்றன! சொல்லும் ஒவ்வொரு சொல்லும் அட்சர லட்சம் பெறும் என்கிற உண்மை இங்கே எப்படியெல்லாம் பரிணமிக்கின்றன!
பொருளீட்டுவதற்கான நமது உழைப்பு  என்பது எங்ஙனம் இருக்க வேண்டும், ஈட்டிய பொருள் எத்தனை அர்த்தபூர்வமாய்ப் பயன்படுத்தப்பட வேண்டும், பொருள் ஆதாரம் என்பது அதற்கான தேவைகளை நீட்டித்துக் கொண்டே போகாமல் அவசரம், அவசியம் என்பவைகளை அடிப்படையாகக் கொண்டு தவிர்க்க முடியாதவைகளாயும், தவிர்க்கக் கூடியவைகளாகவும் எப்படிப் பொறுப்போடு  உணரப்பட வேண்டும், என்பதாக வாழ்க்கையின் நிகழ்வுகளை எத்தனை அக்கறையோடு போதிப்பதாக உள்ளன!.
வாழ்க்கையில் மனிதனுக்கு எல்லாவிதமான அனுபவங்களும் கிட்டி விடுவதற்கு வாய்ப்பே இல்லை. காரணம் ஒருவனுடைய வாழ்க்கை எல்கை மிகக்  குறுகிய அளவிலானதாக இருப்பதுதான். வீடு, அங்கிருந்து பொருளீட்டும் நிறுவனம் வரையிலான தூரம். வீடு, அங்கிருந்து பணியாற்றும் அலுவலகம் வரையிலான தூரம். இடைப்பட்ட மற்றும் பணியாற்றும் இடங்களில் பழகும் மனிதர்கள், அவர்களின் குணாதிசயங்கள், அவர்களின் நடத்தைகள், பழக்க வழக்கங்கள், அனுபவங்கள் என்று மிகக் குறிப்பிட்ட அளவிலான மனிதர்களின் சந்திப்புகளோடு பெரும்பாலும் முடிந்து போகின்றனவாய் அமைந்து விடுகின்றன.
அப்படியானால் ஒரு மனிதன் முழுமையான அனுபவம் வாய்ந்தவனாக, இந்த சமூகத்தை, அதன் நிகழ்வுகளை முற்றிலுமாகப் புரிந்து நடந்துகொள்பவனாக ஒரு முழு மனிதனாக எப்பொழுது, எப்படி உலா வருவது?
அதற்குத்தான் வாசிப்பு அனுபவம் என்பது பெரிதும் உதவுகிறது எனலாம். வாசிப்பு ஒரு மனிதனைப் பக்குவப்படுத்துகிறது. அவனது சளசளப்பைப் போக்கி அவனை அமைதியானவனாக்குகிறது. வாசிப்பனுபவத்தினால் மிகப்பெரிய விவேகியானவர்கள் பலர் என்று கூறுகிறார் திரு சுந்தரராமசாமி அவர்கள்.   இதுதான் சத்தியமான உண்மை.
மேற்கண்ட புத்தகத்தின்பால் ஏற்பட்ட வாசிப்பனுபவம்தான் இந்த அளவுக்கான தொகையறாவை முன்னே வைக்கும் அவசியத்தை ஏற்படுத்தி விட்டது.
திரு இளையபாரதி அவர்கள் தொகுத்து புதுமைப்பித்தன் அவர்கள் தனது துணைவியாருக்கு எழுதிய கடிதங்கள்தான் கண்மணி கமலாவுக்கு என்கிற பெயரில் அற்புதமான ஒரு இலக்கியப் பெட்டகமாக இங்கே மிளிர்கிறது.
வாழ்வதாகச் சொல்கிறோம். ஆனால் உண்மையில் வாழ்கிறோமா? என்று கேட்ட கலைஞனின் வாழ முடியாமல் போன வாழ்வு அவன் வாக்கு மூலமாய் இங்கே ஒலிக்கிறது என்று தனது முன்னுரையில் முன் வைக்கிறார் திரு இளையபாரதி அவர்கள். புதுமைப்பித்தன் என்கிற மகாகலைஞனின் இன்னொரு பரிமாணம் இந்தக் கற்பூர ஆரத்தியில் தரிசனமாகிறது என்கிறார்.
ஆம்! அவர் சொன்னது போல் தன் இருதயத்தை, அதன் தவிப்பை, தணலைக்கொட்டி முழக்கியிருக்கிறார் புதுமைப்பித்தன்.
வாழ்க்கை எப்படியெல்லாம் நீண்ட காலத்திற்குப் பிரிந்து நின்றது, எப்படியெல்லாம் சிதைந்து போனது, தேவைகள் எங்ஙனமெல்லாம் குன்றிப் போயின, சுயபூர்த்தியில்லாமலே நாட்கள் எத்தனை வேதனையாய்க் கழிந்தன, அவற்றினூடே மனம் தன்னை, தன் எண்ணங்களை அகல விரித்து எப்படியெல்லாம் ஆறுதல் தேடிக் கொண்டன என்பனவாக விரிந்து செல்லும் கண்மணி கமலாவுக்கு என்னும் இந்த இலக்கியப் பெட்டகம் நம் மனதைப் பிழிந்து எடுத்து விடுகிறது என்பது சத்தியமான உண்மை.  
இலக்கியத்தை ஆதாரமாகக் கொண்ட ஒருவனின் வாழ்க்கை எப்படித்தான் சிதைந்தாலும், அந்தக் கனவின்பால் ஏற்பட்ட பிடிப்பு ஒருவனை எங்ஙனம்  ஆட்டிப் படைக்கிறது என்பதைத் தன் மனைவிக்கான ஒவ்வொரு கடிதம் மூலமாக அப்படியே வடித்தெடுத்திருக்கிறார் பு.பி. அவர்கள்.
பழைய திரைப்படங்களிலும், நாவல்களிலும், கடிதம் எழுதும் முறைமையில் கண்டவற்றை தன் மனைவிக்கான முதல் அழைப்பின் வாயிலாக பு.பி. அவர்கள் முன் வைக்கும்போது இம்மாதிரியெல்லாம் விளித்து நாம் எழுதியதேயில்லையே என்று தோன்றத்தான் செய்கிறது. அப்படி எழுதியிருந்தால் அது ஒரு செயற்கையான விஷயமாகத்தானே பட்டிருக்கும். எல்லோராலும் விரும்பப் பட்டிருக்குமா, மனைவியால் கூட விரும்பத் தக்கதாக இருந்திருக்குமா என்றெல்லாம் கூடத் தோன்றினாலும், பு.பி. அவர்கள் கடிதத்திற்குக் கடிதம் அப்படியே தன் மனைவியை விளித்து, தன் ஆழமான அன்பை, பாசத்தை, தன் குடும்பத்தின்பாலான தன் நேசத்தை நிலைநிறுத்தும்போது ஒரு மனிதன் முதலில் தன்னை நேசித்தால்தான் தன் நெருக்கமான சொந்தத்தை, சுற்றத்தை இப்படி நேசித்து, அரவணைக்க முடியும் என்கிற மன நியாயம் நம்மைக் கட்டுப்படுத்தி நிலை நிறுத்தி விடுகிறது.
கண்மணி கமலாவுக்கு….
எனதாருயிர்க் கண்ணாளுக்கு
எனதாருயிருக்கு
கமலாளுக்கு
எனது கட்டிக் கரும்பான ஆருயிர்க் கண்ணாளுக்கு,
என் கண்ணம்மா
கண்ணா
கண்ணாளுக்கு
எனது கண்ணாளுக்கு
கண்ணான எனது உயிருக்கு
எனது கண்ணுக்குக் கண்ணான கட்டிக் கரும்புக்கு
எனது உயிருக்கு உயிரான கட்டிக் கரும்புக்கு
எனது கண்ணான கட்டிக் கரும்புக்கு
எனது அருமைக் கண்ணாளுக்கு….
கடிதத்தின் முதல் அழைப்பே எவ்வளவு அன்பைப் பொழிந்து நிற்கிறது?
பொருளை மட்டுமே ஆதாரமாக வைத்து வாழும் தற்போதைய வாழ்க்கையில் விழுமியங்களான விஷயங்கள் எங்கிருந்து எடுபடும்?
பழைய மதிப்பு மிக்க விஷயங்கள் இன்றும் அந்த மூத்த தலைமுறையினரால் மட்டுமே உணரப்படுகிறது என்றால் அதுதான் உண்மை. இவற்றையெல்லாம் நாம் நம் வாரிசுகளுக்குச் சொன்னோமா? அப்படியே சொல்லப் புறப்பட்டால்தான் யார் காதைத் தீட்டிக் கொண்டு கேட்கத் தயாராயிருக்கிறார்கள்?
1938 களிலிருந்து 1948 வரையிலான சுமார் பத்தாண்டு கால கடிதப் போக்குவரத்துகள் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இக்குறிப்பிட்ட பத்தாண்டு கால இடைவெளியில் புதுமைப்பித்தன் அவர்கள் சென்னையில் வெவ்வேறு முகவரிகளில் மாறி மாறி இருந்திருக்கிறார். மதுரை, புனே, பெங்களுர், என்று பல இடங்களுக்கும் சென்றிருக்கிறார். அதுவே அவரின் வாழ்க்கைப் போராட்டத்தின் ஆரம்ப அடையாளங்களாக, காரண காரியங்களை முன்னிறுத்தியதானதாய் நமக்குத் தோன்றி மனதை மிகவும் கஷ்டப்படுத்தி விடுகிறது.  


மனிதன் வறுமையோடு போராடுவது என்பது மிகக் கொடுமை. பொருளாதாரக் கஷ்டத்தினால் ஒருவனின் அன்றாட வாழ்க்கைப் பாடுகளே சீர்குலைந்துதான் விடுகிறது. கையில் கிடைக்கும் பணத்தைக் கண்ணும் கருத்துமாகக் கணக்கிட்டு, கவனமாகச் செலவு செய்து, விரயங்களைக் கட்டாயமாகத் தவிர்த்து, குடும்பத்திற்கு என்று கரிசனத்தோடு அனுப்பி வைத்து மன நிறைவு கொள்ளுதலும், கடிதத்திற்குக் கடிதம் அன்பையும், ஆறுதலையும், அரவணைப்பையும்  தந்து பக்கத்தில் இல்லாத குறையைப் போக்க முயலுதலும், அருகில் இல்லாவிட்டாலும் என் கடிதங்கள் கட்டாயம் உன்னை ஆறுதல்படுத்தும் என்கிற நம்பிக்கையில் ஒவ்வொரு கடிதத்தையும் அவர் வடித்திருக்கும் பாங்கு….பின்னால் இது இலக்கியமாகப் பேசப்பட வேண்டும் அல்லது பேசப்படும் என்கிற எதிர்பார்ப்பிலா எழுதப்பட்டது? மன ஆழத்திலிருந்து உண்மையான அன்பின், பாசத்தின் வெளிப்பாடல்லவா அவைகள்! அதிலும் குழந்தை குஞ்சு இறந்து போய்விட அவர் அந்தத் துயரத்தை மறக்க தன் மனைவிக்கு எழுதும் வரிகள் நம் நெஞ்சத்தை அறுத்து எடுக்கின்றன.
தொலைபேசி வசதி கூட இல்லாத அந்தக் காலத்தில் வெறும் கடிதங்கள் மட்டுமே தொடர்பு படுத்துபவை என்கிற அளவில், கடுமையான வேலைகளுக்கு இடையில் அடுத்தடுத்து விடாமல் அவர் தன் மனைவிக்கு எழுதியுள்ள கடிதங்கள், வீட்டின் தொடர்ந்த  நடவடிக்கைகளை சென்னையிலிருந்தே எவ்வளவு பொறுப்பாக இயக்க முடியுமோ அந்த அளவுக்குக் கட்டுப்பாட்டோடு இயக்கி, மனைவியையும் ஆறுதல்படுத்தி, தான் இல்லாத குறையைப் போக்க அவர் எடுத்திருக்கும் முயற்சிகள், மனிதர்கள் எவ்வாறு தங்கள் வாழ்க்கையை சீர்பட நடத்திச் செல்ல முயற்சித்திருக்கிறார்கள் என்பதற்கான அற்புதமான அடையாளங்களாகப்  பரிணமிக்கின்றன.
எப்படியும் வாழலாம் என்பது எந்தக் காலத்திலும் எவருக்கும் பொருந்தியதாக இருந்ததில்லை. நமது குடும்ப அமைப்பு கற்றுக் கொடுத்த பாடங்கள் அவை. இப்படித்தான் வாழ்ந்தாக வேண்டும், அதுதான் ஒரு மனிதனின், அவன் சார்ந்த குடும்பத்தின் நன்னடத்தைகளின் அடையாளங்களாகக் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்பதுதான் சத்தியமான உண்மை.
அம்மாதிரியான விழுமியங்களை அவற்றின் அடையாளங்களை வறுமையும், பொருளாதாரப் பற்றாக்குறையும் குலைக்க முயலும்போது மனிதன் முரண்படாமல், அந்தப் பேரலையில் அடித்துச் செல்லப்படாமல்,  அவற்றை எப்படிச் சமாளித்து முன்னேறுகிறான் என்பதுதான் வறுமையிற் செம்மை என்ற தத்துவ நிகழ்வாகக் காலத்துக்கும் இருந்து வந்திருக்கின்றன. இந்த அடையாளங்களின் பிரதிநிதியாய் பு.பி. அவர்கள் இந்தப் புத்தகத்தில் தான் வரைந்த கடிதங்களின் மூலம் நம் மனக் கண்ணில் திகழ்கிறார்.
கமலா கண்ணே! கட்டிக் கரும்பே! மறந்து விடாதே. உனக்கு ஏற்படும் துன்பம் எனக்கும்தான். நாம் இருவரும் சேர்ந்தே அனுபவிக்கிறோம். அதனால் உனக்கென்று ஒரு வழி என்னும் அசட்டு யோசனைகளை விட்டுவிடு. மனசை மாத்திரம் தளர விடாதே! அது எனக்கு எவ்வளவு கவலை கொடுக்கிறது தெரியுமா? உன்னுடன் தவிக்கும். உனது சொ..வி.
விடாமல் கடிதத்திற்குக் கடிதம் அவர் தன் மனைவிக்கு ஆறுதல் சொல்லும் விதம், அடக் கடவுளே, ஒரு அற்புதமான படைப்பாளிக்கு வாழ்க்கைப் போராட்டம் எத்தனை கொடுமையாக அமைந்து விட்டது என்று நம்மைப் பிழிந்து எடுத்து விடுகிறது.
மனைவியை ஊக்கப்படுத்தும் நிமித்தம், அவர் எழுதும் கதைகளைத் தனக்கு அனுப்பிவைக்கச் சொல்கிறார். அடுத்தடுத்து விடாமல் எழுது என்று உற்சாகப்படுத்துகிறார். உன் கதைகள் நன்றாகவே உள்ளன, ஓரிரு வார்த்தைகளை மாற்றிப் போட்டால் போதும். அவற்றை நான் சரி பண்ணி, பிரசுரத்திற்குக் கொடுத்து விடுகிறேன் என்று கூறி, இன்னும் ஏதாவது எழுதியிருந்தாயானால் உடன் எனக்கு அனுப்பிக் கொடு என்று கேட்கிறார்.
1947 ஆரம்ப வரையிலான காலங்கள் சென்னையிலேயே கழிந்து விடுகின்றன. பிறகுதான பட விஷயமாக என்று மதுரைக்குப் பயணிக்கிறார். சூழ்ந்திருந்த இருள் விலக ஆரம்பித்து விட்டது என்று மகிழ்ச்சியை மனைவியோடு பகிர்ந்து கொள்கிறார். மதுரை சித்திரகலா ஸ்டுடியோவில் பட வேலைகளைக் கவனிக்க என்று கிளம்புகையில் அவர் மனம் பெரிதும் உவகை கொள்கிறது. அப்பொழுது கூட அங்கிருந்து உன் மனக் கவலை தீர்க்கும் தகவலை உனக்கு அனுப்ப முடியும் என்று நினைக்கிறேன் என்று மனைவிக்குத் தெரிவிக்கிறார்.


மதுரையில் மேலமாசி வீதியில் இருந்த உடுப்பி Nஉறாட்டலில்தான் அந்தக் காலத்தில் எழுத்தாளர்கள் வந்தால் தங்குவார்கள் என்று கேள்விப் பட்டதுண்டு.  அங்கு அறை எண் 13ல் பு.பி. வந்து தங்கியிருக்கிறார் என்கிற தகவல் இன்று பெரிய ஜவுளி நிறுவனமாயும் வேறு பல கடைகளாயும் இருக்கும் அவ்விடத்தைப் பார்க்கும்போது நம் மனதை கனக்க வைக்கிறது. எல்லாவிதமான பழைய அடையாளங்களும்தான் பணம் என்கிற புள்ளியில் இங்கே படிப்படியாக அழிக்கப்பட்டு விட்டனவே! காலத்தின் வேக ஓட்டத்தில் விரட்டியடிக்கப்பட்டுவிட்டனவே!
1948 களில் புனாவிற்கும் பிறகு பெங்களுருக்கும் செல்லும் வாய்ப்புக் கிட்டிய பு.பி. அவர்கள் பெங்களுரிலிருந்து எழுதும் ஒரு கனமான கடிதத்தோடு இப்புத்தகம் நிறைவு பெறுகிறது.  நம் மனதையும் அது நிறைத்து கனக்க வைத்து விடுகிறது.


அங்கே நிபுணர்கள் என்னைப் பரிசோதனை செய்து இரண்டு சுவாசப் பையிலும் துவாரம் விழுந்து விட்டதினால் இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்று சீட்டுக் கிழித்து விட்டார்கள். இனி அவர்களைப் பொறுத்தவரை மரணம்தான் முடிவு. என்பதாக அந்தக் கடிதத்தின் வரிகள்  விரிகின்றன.
முக்கியமான செய்தி ஒன்றைத் தரும் ஒரு கடிதத்தையும் நாம் இங்கே கவனித்தாக வேண்டும். அது புனேயிலிருந்து எழுதப்படுகிறது. 5.2.48 என்று தேதியிட்ட அந்தக் கடிதத்தில் மகாத்மாவைச் சுட்டுக் கொன்றுவிட்ட செய்தியைப் பெரும் அதிர்ச்சியோடு தெரிவித்து, அதன் தொடர்பான கலகங்களைச் சுருக்கமாக விவரிக்கிறார்.
கொன்றது உறிந்து, புனா நகரத்து ஆள் என்று சொன்னார்கள். புனாவில் உறிந்து மகாசபை பத்திரிகை நடத்தியவன் என்று தெரிந்ததும், நகரம் கொந்தளித்துப் போயிற்று. உறிந்து மகா சபைக்காரர்களைக் குத்தி அவர்கள் வீடுகளை எரித்தார்கள். காந்தியைச் சுட்டவன் பத்திரிகாலயத்தை  ஜனங்கள் எரிக்கும்போது நெருப்பு அணைக்கும் யந்திரம் வந்தது. அணைக்கக் கூடாது என்று ஜனங்கள் தடுக்க, ராணுவம் துப்பாக்கி பிரயோகித்து எட்டுப் பேர் மரணம். எங்கு பார்த்தாலும் பிராமணர்களை அடித்துக் கொல்லுவது அவர்கள் வீடுகளைக் கொளுத்துவது என்ற காரியம் நாலு நாட்களாக நடந்து வருகிறது. காந்தி மாண்டதற்காகச் சர்க்கரை கொடுத்த ஒருவன்ய கடை தீ. வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலை. நான்கு நாட்கள் எனக்கு வெற்றிலை இல்லை என்றால் நிலை எப்படி என்று யோசித்துக் கொள் என்று முடிக்கிறார். இருக்கும் அதிரடியைச் சொல்லி அவருக்கான வெற்றிலையோடு முடிக்கும் பாங்கு எத்தனை சரளமும் யதார்த்தமும் நிறைந்தது. நல்லிலக்கியம் என்பது தானே கூடி வருவதாய்த்தானே இருக்க வேண்டும். காலம் பின்னால் உணரும் என்று அவர் நினைத்திருப்பாரா? அவரது உள்ளக் கிடக்கை அத்தனை தத்ரூபமாய்ப் பரிணமித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
பெரு முயற்சி செய்து இந்தக் கடிதங்களைத் தொகுத்தளித்த திரு இளையபாரதி மிகவும் பாராட்டுக்குரியவர்.
இந்தக் கடிதங்களில் காணக் கிடைக்கும் புதுமைப் பித்தன் நமக்கு முற்றிலும் புதியவர். ரொம்பவும் நெகிழ்ச்சியானவர். தமிழ் இலக்கியத்தின் எல்லாவிதமான பரிசோதனைகளுக்கும் என்னிடம் வாருங்கள் என்று களம் அமைத்துக் கொடுத்த பெருமை பு. பி. அவர்களைச் சாரும். அவரைத் தொடாமல் இந்த இலக்கிய வானுக்குள் எவரும் சஞ்சாரம் செய்ய இயலாது. தன் மனைவிக்கு  அவர் எழுதிய இக்கடிதங்கள் காலத்தால் இலக்கியமாகப் பரிணமிக்கும் என்ற நினைத்தெல்லம் அன்று அவர் எழுதவில்லை. ஆனால் இன்று அவையும் அந்தத் தகுதியைப் பெற்று தலை நிமிர்ந்து நிற்கின்றன. நாம்தான் அவற்றை உணர்ந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இலக்கியத்தை விரும்பும் ஒவ்வொருவர் நூலகத்திலும் கட்டாயம் இருக்க வேண்டிய அரிய பொக்கிஷம் இது!
.வு.சி. நூலகம், ஜி-1, லாயிட்ஸ் காலனி, இராயப்பேட்டை,சென்னை-14 ன் அற்புதமான வெளியீடு இது. இந்தப் பதிப்பகம் எத்தனையோ நல்ல நூல்களைத் தேடித் தேடி வெளியிட்டு வருகிறது. அதில் இது அதி முக்கியமானது.

செவ்வாய், 27 டிசம்பர், 2011

Sukumaran.Bharathimani

வாழிய நிலனே! --சுகுமாரன் உயிர்மையின் நூல் வெளியீட்டு விழா.

by Bharati Mani on Monday, December 26, 2011 at 7:02pm
டிசம்பர் 25-ம் தேதி உயிர்மை நூல் வெளியீட்டு விழாவில் சுகுமாரன் எழுதிய வாழிய நிலனே! கட்டுரைத்தொகுப்பை வெளியிட்டு நான் பேசியதன் சுருக்கம்:


வாழிய நிலனே!

முதலில்,  உயிர்மை பதிப்பகம் நேற்றும் இன்றும் வெளியிடும் புத்தகங்களின் ஆசிரியர்களுக்கும், 2012 சென்னை புத்தகச்சந்தைக்காக வெளியிடப்படும் எல்லா நூல்களின் ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுக்களும்! ’உயிர்மை’ பதிப்பாளர் மனுஷ்ய புத்திரன் வெளியிடும் எல்லா புத்தகங்களும் சந்தையிலேயே விற்றுத்தீர்ந்து பணமாகக்கொட்ட நான் வணங்கும் ஆண்டவன் அருள்வானாக!

நண்பர் சுகுமாரன் எழுதிய வாழிய நிலனே! புத்தகத்தை வெளியிட மனுஷ்ய புத்திரன் கேட்டபோது, ‘சார்! முக்கியமானவங்களையெல்லாம் கூப்பிட்டாச்சு. பிரபலங்கள் யாரும் இல்லே. அதனாலே உங்க பெயர் போட்டிருக்கேன்!’ என்று சொன்னபோது அதிலிருந்த உட்குத்து எனக்கும் புரிந்தது. அவர் என்னை நன்றாக தெரிந்துவைத்திருக்கிறார்! மனுஷ்ய புத்திரனுக்கு என் நன்றி!

’இந்தப்புத்தகம் நேற்றுத்தான் வந்தது….அதனால் படிக்கமுடியவில்லை’யென்று பொய் சொல்லி தப்பித்துக்கொள்ள நான் விரும்பவில்லை. இப்போதெல்லாம் வாசிக்கும் பழக்கம் அறவே நின்றுவிட்ட போதிலும், சுகுமாரனின் 29 சிறிய கட்டுரைகள் கொண்ட வாழிய நிலனே! புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். வாசிக்க வாசிக்க அவரது பரந்த ஆளுமை இந்தப்புத்தகத்தில் வெளிப்பட்டது. சுகுமாரன் எனக்கு… தூரத்து உறவினர் என்பது போல ‘தூரத்து நண்பர்’. பார்க்கும்போதெல்லாம் ‘வணக்கம்’ சொல்லியிருக்கிறேனே தவிர நெருங்கிப்பழகியதில்லை. மாறாத புன்சிரிப்புக்குப்பின் இவரைப்போன்ற அறிவுஜீவிகள்,  நெருங்கிப்பழகினால்,  ஒரே வார்த்தையால் நம்மை ஆயுசுக்கும் மறக்காத  சந்தோஷத்துக்கோ அல்லது ஒரே வார்த்தையில் எப்போதும் வலிக்கும் காயத்துக்கோ ஆளாக்கிவிடுவார்களென்ற தேவையற்ற பயம் எனக்குண்டு! மலையாளத்தில் சொன்னால் ’அயாள் ஒரு அமுக்கனாணு’ என்பது எனக்குப்புரிந்தது.

முதல் கட்டுரையிலேயே ‘ஒரு கலைப்படைப்பை ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு பெயர்ப்பதென்பது திருமணமான பெண்ணைக்காதலிப்பது போல. அதை அவள் கணவனின் நேரடி மேற்பார்வையில் செய்யமுடியாது!’ என்பது எனக்குப்பிடித்தமான வரி. ஒரு இடத்தில், ‘கவிதை வாசிப்பில் சிற்பி பாலசுப்பிரமணியம் ஒரு கவிதை வாசித்தார். அதில் கவிதை காற்பங்கு, சாதுரியம் முக்காற்பங்கு. இதை சிற்பியும் ஒப்புக்கொள்வார்’ என்று பூத்தாப்போலெ ஒரு வெடியை கொளுத்தி போட்டுவிட்டுப் போகிறார்.

இன்னொரு கட்டுரையில் அதிகம் பிரபலமாகாத புல்லாங்குழல் வித்வான் குடமாளூர் ஜனார்த்தனன் இவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, தியாகராஜர் ராமனைத்தேடி, நெக்குருக வேண்டிக்கொள்ளும் ஒரு கீர்த்தனைக்கு ஏன் நீண்ட ராக ஆலாபனை, விஸ்தாரமான நிரவல், ஸ்வரம்? என்று கேட்கும் கேள்விக்கு நம்மிடமும் பதில் இல்லை. அவரது இன்னொரு கேள்வி: ‘உலகத்தில் எங்காவது நூற்றுக்கணக்கான கலைஞர்கள் ஒரே சமயம் அபஸ்வரத்தில் பாடுவதைக்கேட்டிருக்கிறீர்களா?’ விடை தெரியாத சுகுமாரனுக்கு ஜனார்த்தனன் சிரிக்காமல் சொன்ன பதில்: ‘திருவையாறு ஆராதனை என்பது வேறு என்ன?’ அந்தக்கலைஞர் சொன்ன பொன்மொழி எனக்கும் பிடித்திருந்தது: “எவருடைய பாராட்டுக்கும் அல்லது குற்றச்சாட்டுக்கும் நான் அக்கறை காட்டுவதில்லை. என்னுடைய உணர்வுகளை மட்டுமே பின்தொடர்கிறேன்.”  புத்தகத்திலிருந்து இன்னொரு வரி: ‘பத்துக்கிணறுகள் ஒரு குளத்துக்கு சமம். பத்துக்குளங்கள் ஓர் ஏரிக்கு சமம். பத்து ஏரிகள் ஒரு மகனுக்கு சமம். பத்து மகன்கள் ஒரு மரத்துக்கு சமம்.”

’கடவுளில் நித்திரையான நாத்திகம்’ கட்டுரையில், ஒரு பசுவுக்கும் கொக்குக்குமான அழகான நட்பை விவரிக்கும்போது, அந்தப்பசுவுக்கு சொந்தக்காரர் பெயர் சோமன் என்றிருக்கிறது. இரண்டு பாரா தள்ளி அவர் சார்ங்கதரன் ஆகிறார். அதற்கடுத்த பாராவில் மீண்டும் சோமனாகவே மாறி பசுவை மேய்ச்சலுக்கு கொண்டுவருகிறார். இந்த செப்பிடுவித்தை சுகுமாரன் கட்டுரையில் ஏன்….எப்படி நிகழ்ந்தது?

இவரது கட்டுரைகளில், நிறைய Names Dropping ... பல பெயர்களை உதிர்த்துக்கொண்டே போகிறார். இளைய ராஜாவிலிருந்து, ஜாஃபர் பனாஹி, சியாட்டில் மூப்பன், ஞானபீட விருது பெற்ற ஓ.என்.வி. குறுப், ஷெஹ்ரியார், விர்ஜீனியா உல்ஃப், ஸல்மான் ருஷ்டி,  புற்றுநோயால் இறந்துபோன சூஸன் சாண்டக், கேளிக்கை கலைஞன் மைக்கெல் ஜாக்ஸன், பாப்லோ நெரூதா, சிறுமி ஜீனத், நோபல் பரிசு பெற்ற சீன எழுத்தாளர் காவ் ஜிங்ஜியானிலிருந்து கதகளி மகாபாரதக்கதை மூலம் விசித்திரமான பெயர் தேடிக்கொண்ட, இரண்டு காலும் இல்லாத ரயில் பிச்சைக்காரர் கலலன் வரை இவருக்கு கதைமாந்தர்கள். திருவனந்தபுரத்தில் பாளையம் பள்ளிவாசலுக்குப்போய், மாதவிக்குட்டி, கமலா தாஸ், கமலா சுரய்யா என்று பலபெயர் கொண்டவரின் சமாதியைத்தேடி பார்த்துவிட்டு வருகிறார்.

என்னை அறிந்தவர்கள் ‘ஸார்! உங்ககிட்டே அந்த ’வயோதிகக்குசும்பு’ கொஞ்சம் இருக்கு!’ என்று சொல்வார்கள். சுகுமாரனிடம் ’இளமைக்குசும்பு’ நிறையவே இருக்கிறது.

இவர் அசோக மித்திரனையும் விட்டுவைக்கவில்லை. நண்பர் தேவிபாரதியோடு, காலில் அடிபட்டு, சிகிச்சையிலிருந்த அசோக மித்திரனை அவர் வீட்டில் பார்க்கப்போகிறார். வாசலில் நின்று வரவேற்ற எழுத்தாளரிடம் பேசிவிட்டு விடைபெறும்போது, வழியனுப்ப வந்த அசோக மித்திரன் சொன்னார்: ‘ஒடம்பு சரியில்லாத ஒரு ஆளைப்பார்க்க வந்தா, அந்த ஆளே வாசல்லே  வரவேற்கிறது உங்களுக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும்……..ஸாரி!’ இப்படி யார் சொல்லமுடியும் அசோக மித்திரனைத்தவிர?

தில்லி சாகித்ய அகாதெமியின் கவியரங்கில் சந்தித்த மராத்தியக்கவிஞர் அருண் கொலாட்கர் மாதிரி தானும் ஒரு தான்தோன்றிக் கவிஞனாக இருக்கமுடியுமாவென்று ஏங்கியிருக்கிறார் சுகுமாரன். அங்கே சந்தித்த மூத்த அசாமியக்கவிஞர் ஹிரேன் பட்டாச்சார்யா இவரிடம் கேள்வி கேட்கிறார்: ‘நீ எந்த மொழியில் எழுதுகிறாய்?.... தமிழில்……சரி!..... அதை எவனாவது படிக்கிறானா? ....தெரியாது!.....உனக்கு எத்தனை வாசகர்கள் இருக்கிறார்களென்று தெரியாமல், நீ யாருக்காக எழுதுகிறாய்?’ என்று கேட்டுவிட்டு, சுகுமாரன் கவிதைகளின் ஹிந்தி மொழிபெயர்ப்பை சிலாகித்து படித்துப்பார்த்துவிட்டு, ‘அரே பையா! உனக்கு நிச்சயம் மூன்று வாசகர்கள் இருக்கிறார்கள்…….. உறுதி……. ஒன்று…நீ………இரண்டாவது உன் மனைவி………மூன்றாவது அசாமியக்கவிஞனான ஹிரேன் பட்டாச்சார்யா!’ என்று கூறி இவரை ஆரத்தழுவிக்கொள்கிறார். அதோடு விடவில்லை…. இந்தக்குசும்பன். ’அந்தக்கிழவர் நெருக்கத்தில் வந்தபோது, முந்தியநாள் அருந்திய மதுவின் நெடியும், சற்றுமுன் புகைத்த சாக்லேட் புகையிலையின் மணமும் என் மூக்கில் பரவியது!’ என்று முடிக்கிறார்! ஹிரேன் தாவும் என்னைப்போல் பைப் பிடிக்கும் நல்ல பழக்கத்தை வைத்திருந்தார்!

கட்டுரைகளில், இவரைத்தொடர்ந்து பயணித்தால் மட்டுமே, அவர் என்ன சொல்ல விழைகிறார் என்பது புலப்படும்.

அடூர் கோபாலகிருஷ்ணன் பற்றிய ஒரு கட்டுரையில், அவர் நடிகர்களின் ‘உடல் மொழி’க்கு கொடுக்கும் முக்கியத்தை விளக்கியிருப்பார். ‘நிழல் குத்து’ படப்பிடிப்பின்போது, காந்தி வழியில் வந்த முத்துவாக பாத்திரமேற்ற நடிகர் நரேனை, சரியான உடல் மொழிக்காக, பத்து நாட்கள் தொடர்ந்து சர்க்காவில் நூல் நூற்க பயிற்சியளித்தாராம்! இவ்வளவுக்கும் படத்தில் இந்தக்காட்சி இடம்பெறவில்லை. அடூரிடம் இதைப்பற்றி கேட்டதற்கு, ‘ராட்டை நூற்கும்போதுள்ள  உடல்மொழி….அதை வேறு எப்படித்தான் கொண்டு வருவது?’ நாடக நடிகனான எனக்கும் உடல்மொழி முக்கியம். பல தமிழ்ப்படங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம்…..ஷாட்டுக்கு முன்னால், கதாநாயகன் கையில் ஒரு வயலினை திணித்து வாசிக்கச்சொன்னால், நளினமாக வலதுகை மூன்று விரல்களால் வில்லை பிடிப்பதற்கு பதிலாக, ஏதோ திருப்பாச்சி அருவாளை சாணை தீட்டுவதுபோல ஐந்து விரல்களாலும் அழுந்தப்பிடித்து, வயலின் குறுக்காக – கிச்சுக்கிச்சு தாம்பாளமாக -- ஒரே சீரில் அறுப்பார்கள். ஆனால் பின்னணியில் லால்குடி ஜெயராமன் வாசித்த வசந்தபைரவி சுநாதமாக காதில் விழும்! இதுவாவது பரவாயில்லை….சில சமயங்களில் Interlude-ல் நம் ஹீரோ திரையில் அறுக்கும் வயலினுக்கு பின்னணியில் ஸிதார் ஒலி கேட்கும்! வயலினுக்கும் சித்தாருக்கும் வித்யாசம் தெரியாத இயக்குநர் திலகங்கள்!.........ஒரு பழைய படத்தில் எம்.ஆர். ராதா கடம் வாசிப்பார்……ஆனால் திரையில் நாம் கேட்பது மிருதங்க ஒலி! என்ன கொடுமை……..சரவணா!

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்! ஆனால் என் பேச்சை நிறுத்துமாறு சீட்டு வருவதற்குமுன், நான் முடித்தாகவேண்டும்.

சுகுமாரனின் வாழிய நிலனே! புத்தகத்தில் நிறைய விஷயங்கள் புதைந்திருக்கின்றன. நான் படித்து ரசித்தேன். நீங்களும் அவசியம் படியுங்கள்.

நன்றி……வணக்கம்! 

பாரதி மணி 
25 டிசம்பர், 2011.

ஞாயிறு, 27 நவம்பர், 2011

Jayamohan..Aram.

கோவை முருகன் விடுதி அறையில் அதிகாலையில் ஐந்துமணிக்கு  எங்கள் குழுவின் கமாண்டராக தன்னை தானே நியமனம் கொண்டிருந்த கிருஷ்ணன் எழுந்து படாரென்று கழிப்பறை கதவைத் திறந்து, பெரியபடாராக அதை மூடி, அனைவரையும் பதறி எழச்செய்தார். அவர் துண்டை உதறிய ஒலியில் அந்த விடுதி அலறி எழுந்திருக்கும். வேறுவழியில்லை, ஈரோடு அழைக்கிறது. இருந்தாலும் நான் அரைமணிநேரம் கண்மூடி படுத்திருந்தேன்.
எல்லாரும் குளித்து முடித்ததும் கிளம்ப ஆரம்பித்தோம். ஆறரைக்கு கிளம்ப கமாண்டர் போட்டிருந்த திட்டம் ஏழாகியும்  ஆரம்பிக்கவில்லை. ஆகவே நாஞ்சில்நாடனையும் மரபின்மைந்தன் முத்தையாவையும் கிளம்பி ஈரோட்டுக்கே செல்லும்படி சொல்லிவிட்டார். செந்தில் நிதானமாகவே குளித்தார். பாட்டுபாடாமல் இத்தனைநேரம் குளிப்பவராக அவரை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன்.
நான், கிருஷ்ணன், தங்கமணி, அரங்கசாமி ,செந்தில் ஆகியோர் ஒருவழியாகக் கிளம்பி ஈரோட்டுக்கு செல்லும் வழியில் கோவைக்கு வெளியே ஒரு உணவகத்தில் அவர்களைச் சந்தித்தோம். நாஞ்சில்நாடன் புதிதாக இருந்தார். எனக்கு எப்போதுமே அவரைப்போல நேர்த்தியாக உடையணியும் ஆசை உண்டு. மிகையாகவும் போகாமல், குறைவாகவும் ஆகாமல் உடையணிவதென்பது ஒரு கலை. அதற்கு நாம் அவரைப்போல விற்பனைமேலாளராக கொஞ்சநாள் பணியாற்றியிருக்கவேண்டும்போல.
ஈரோட்டுக்கு செல்லும் வழி முழுக்க விதவிதமான நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் பேசிக்கொண்டிருந்தோம். சென்றுசேர்ந்தபோது தாமதமாகிவிட்டது. சாலையோரமாக என்னுடைய முகம் கொண்ட வினைல்போர்டு. உள்ளே போனால் சாயரசாயன விற்பனையாளர் சங்கத்தின் புதிய அரங்கில் வாசலில் வசந்தகுமார் கடைவிரித்து தம்பியர் புடைசூழ அமர்ந்திருந்தார்.
பத்துமணிக்கு நிகழ்ச்சி. ஒன்பது ஐம்பதுக்கு அமைப்பாளர் தவிர யாருமே இல்லை. பத்துமணிக்கு ஒரு பத்துபேர் தேறினார்கள். பத்து என்றால் பத்துக்கே ஆரம்பிக்கவேண்டும் என்றார் பாபு. அது ஈரோடு பசுமைபாரதத்தின் கொள்கை என்று சொல்லப்பட்டாலும் உண்மை என்பது சரியான நேரத்தில் ஆரம்பிக்கப்படாத பிற நிகழ்ச்சிகளில் சென்று கலாட்டா செய்த இறந்தகாலம் குறித்த அச்சம்தான்.
அமைப்பாளர் விஜயராகவன் காய்ச்சல்கண்ட முகத்துடன் இருந்தார். ‘என்ன விஜயராகவன்’ என்றேன் ”ஏமாத்திட்டாங்களே சார்…யாருமே வரல்லியே’ என்றார். ‘வந்தவங்க போரும்…இப்ப என்ன?” என்றேன்.
ஆரம்பித்தோம். காலி நாற்காலிகளை நோக்கி பேசுவது எழுத்தாளர்களுக்கு ஒன்றும் புதியவிஷயம் அல்லதானே? முதலில் ஈரோடு வாசிப்பியக்கத்தைச் சேர்ந்த பாபு பம்மிப்போய் வரவேற்புரை அளித்தார். விமரிசகர் க.மோகனரங்கன் ஜெயில்சிங் போன்ற அதிநிதானத்துடன் மேடைக்கு வந்து மென்மையான குரலில் – பாலியல் வழக்கில் சிக்கியவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுப்பது போல குனிந்த தலையுடன் – விழாவை அறிவித்தார். ‘இன்றையகாந்தி’  நூலை நாஞ்சில்நாடன் வெளியிட இராசு பெற்றுக்கொண்டார்.
தலைமையுரையாக ஜீவானந்தம் சுருக்கமாகப் பேசினார். தன்னை காந்தியில் ஆர்வம்கொண்டவரே ஒழிய காந்தியவாதி என்று சொல்லிவிடமுடியாது என்றார். காந்தியம் என்பது ஒரு பெரிய பொறுப்பு. இடைவிடாத சோதனைகள் கொண்டது. தன் சூழலில் செயல்பட காந்தியம் ஒரு வழிகாட்டு நெறியாக இருந்தது, அவ்வளவுதான் என்றார்.
அடுத்து நாஞ்சில்நாடன் பேசினார். காந்தியின் பாலியல் சோதனைகள் குறித்த விவாதத்தை மையமாக்கிய உரை அவருடையது. காந்தியின் சோதனைகளை கிறுக்குத்தனமானவை என்று நூலாசிரியர் சொல்வதை தான் ஒப்புக்கொள்ளவில்லை என்றார் நாஞ்சில்நாடன். பாலியலை அவதானிப்பதும் அதை கடந்துசெல்ல முயல்வதும் எந்த மனிதனுக்கும் இயல்பான விஷயமே. காந்தி அந்த விஷயத்தில் அப்பட்டமானவராக வெளிப்படையானவராக இருந்திருக்கிறார்.
அடுத்துப்பேசிய செ.இராசு தமிழகத்தில் ஈரோட்டில்தான் முதன்முறையாக காந்திக்குச் சிலை வைக்கப்பட்டது என்று சொல்லி அந்தப்படத்தைக் காட்டினார். 1932ல் காந்தி உயிருடன் இருக்கும்போதே சிலை வைக்கப்பட்டுவிட்டது. காந்திக்கும் ஈவேராவின் குடும்பத்திற்கும் உள்ள உறவைப்பற்றி விரிவாகப்பேசினார். காந்தி ஈரோட்டுக்கு இருமுறை வந்திருக்கிறார். முதன்முறை ஈவேரா அவர்களின் இல்லத்தில் தங்கினார். மறுமுறை கிட்டப்பா மறைவால் பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருந்த கெ.பி.சுந்தராம்பாளைப் பார்த்து பொதுப்பணிக்கு வரச்சொல்லுவதற்காக வந்தார் என்றார்.
‘நாஞ்சில்நாடன் என் காதில் ‘ என்ன, கூட்டம் ஒருமணிநேரத்திலே முடிஞ்சிரும் போல இருக்கே’ என்றார். ஆனால் அடுத்து மரபின் மைந்தன் முத்தையா  பேச ஆரம்பித்தபோது மெல்லமெல்ல கூட்டம் அரங்கை நிறைக்க ஆரம்பித்து, பதினொருமணிக்கு அரங்கு முழுமையாக நிரம்பியிருந்தது. ஈரோட்டில் பத்து என்றால் பதினொருமணி என்றுதான் அர்த்தமாம்.
முத்தையா காந்தியின் மகன்களைப்பற்றி பேசினார். காந்தி தன் புதல்வர்களை சரியாக வளர்க்கவில்லை என்ற பொதுநம்பிக்கை சூழலில் உள்ளது. ஆனால் காந்தி அவர்களை போராளிகளாக, அதிகாரத்துடன் சமரசம்செய்துகொள்ளாதவர்களாக வளர்த்தார். அதை ஆசிரியர் விரிவாக விளக்குகிறார்
காந்தியின் எல்லைகளையும் நாம் கவனிக்கவேண்டும், ஆகவே தனக்கு காந்தி மீது வழிபாட்டுணர்வு ஏதும் இல்லை என்றார் முத்தையா.காந்தி இந்திய அரசியலில் பதவி இல்லாத அதிகாரமையமாக விளங்க விரும்பினார். பதவியில் இல்லாத அவர் இந்திய அரசை பாகிஸ்தானுக்கு கஜனாவை பங்கிட்டுக்கொடுக்க நிர்ப்பந்தித்தது உதாரணம்.
காந்தியின் பிள்ளைகள் என்னும்போது இன்றைய இந்தியர்களையே அப்படிக் குறிப்பிடலாம். இந்தியாவுக்கு காந்தி ஒரு இலட்சியத்தையும் அதை அடைவதற்கான வழிமுறையையும் அளித்தார் என்று ஆசிரியர் சொல்கிறார். காந்தி ஒரு கனவை அளித்தார், ஆனால் அவர் காட்டிய வழி குழப்பமானது. அதுவே இந்தியா சிக்கல்களில் ஆழ்ந்தமைக்கு வழிவகுத்தது என்றார் முத்தையா.
தந்தை பழ.கருப்பையா அவர்களின் குரல், உடலசைவுடன் பேசினார் ஆறுமுகத்தமிழன். காந்தி ஓர் அடையாளமாகவே தனக்குக் கிடைத்தார் என்றவர் அந்த அடையாளம் இன்று செலவேறியதாக ஆகிவிட்டிருக்கிறது என்றார். அவரது தந்தையின் காந்திய நோக்கு காரணமாக அவர் சிறுவயது முதலே கதர் அணிபவர் என்றார். ஆனால் தினம் பத்து ரூபாய் இல்லாமல் கதரை சலவைசெய்து அணிய முடியாது, அது உயர்தர உடையைவிட செல்வேறியது….
இத்த¨கைய அடையாளங்களில் இருந்து காந்தியை விடுவிக்கும் முயற்சியாக  இன்றைய காந்தி நூலை தான் காண்பதாக ஆறுமுகத் தமிழன் சொன்னார். காந்திய வழி என்பது தனக்கு ஏற்புடையதாக இருந்தாலும் தன்னால் பிரபாகரனையும் விட்டுவிட முடியாது. காந்தி தந்தை என்றால் பிரபாகரன் அண்ணன் போல. இருவருடைய வழிமுறைகள் வேறு ஆனால் அர்ப்பணிப்பும் தியாகமும் சமம்தான். ஈழப்போராட்டம் வன்முறையால் வெல்ல முடியவில்லை, அது காந்தியவழியால் வென்றிருக்கலாம். ஆனால் அதனால் பிரபாகரனின் தியாகம் அர்த்தமற்றது என்று ஆகிவிடாது.
இன்றையகாந்தி நூலில் தேசியம் குறித்து சொல்லப்படும் ஆசிரியரின் கருத்துக்களில் தனக்கு உடன்பாடில்லை என்றார் ஆறுமுகத்தமிழன். ஆசிரியர் மொழிவழித்தேசியத்தை பிளவுவாதம் என்று எதிர்க்கிறார், அதை உணர்வுபூர்வமாக ஏற்பவன் நான் என்றார். மொழிவழித்தேசியம் சிலரை அன்னியராக்கும் என்றால் அவர் பேசும் பண்பாட்டுத்தேசியமும் அதேபோல வேறுசிலரை அன்னியர்களாக்க்கும். இந்திய தேசியம் என்பது செயற்கையானது, மொழிவழித்தேசியமே இயற்கையானது என்றார்.
அடுத்துப்பேசிய முருகானந்தம் இன்றையகாந்தி நூல் இளைய தலைமுறைக்கு காந்தியை மீட்டளித்திருக்கிறது என்றார். இன்றைய இளைஞன் காந்தியை இன்றைய வாழ்க்கையில் பொருத்திப்பார்க்க ஆசைப்படுகிறான். அவனுடைய வினாக்களுக்குப் பதிலாக அமையும் நூல் இது. ஆனால் இதில் சில விஷயங்கள் தவறாக உள்ளன. காந்தியின் அழகியலுணர்வின்மை குறித்து ஆசிரியர் சுட்டும் பகுதிகள் உதாரணம். காந்தி  இலக்கியம், இசை குறித்த உணர்வில்லாதவரல்ல. அவர் அவற்றைப்பற்றி விரிவாகவே பேசியிருக்கிறார்.  அவர் போராட்டக்களத்தில் இருந்தார். இந்தியாவையே போராட்டத்தில்  நிறுத்தினார். ஆகவே அவர் கலையிலக்கியங்களை ஊக்குவிக்கவில்லை என்று முருகானந்தம் சொன்னார்.
பவா செல்லத்துரை ஒரு மார்க்ஸியச்சூழலில் வளர்ந்த தனக்கு படத்தில்கூட காந்தி கவரக்கூடியவராக இருந்ததில்லை என்றார். ஆனால் இந்த நூல் காந்தியைப்பற்றிய ஒரு சித்திரத்தை அளிக்கிறது. காந்தியை சாமானிய மக்களுடன் பேசிய ஒரு மக்கள்தலைவராக இது காட்டுகிறது. காந்தியின் எளிமையும் மக்களுடன் அவர் கொண்டிருந்த தொடர்பையும் இந்நூலில் ஒரு கட்டுரையில் கூறும் ஆசிரியர் இன்றைய மார்க்ஸிய தலைவர்களிடம் காண்பதாகச் சித்தரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.ஆசிரியர்  காந்தியத்தாக்கம் கொண்ட தலைவராக சொல்லும் ஈ.எம்.எஸ் குறித்து அவர் ஒரு நல்ல நூல் எழுதவேண்டும் என்று கோருவதாக பவா சொன்னார்.
கடைசியாக நான் பேசினேன். ‘மூன்று சந்திப்புகள், மூன்று அவதூறுகள்’ என அவ்வுரையை சுருக்கலாம். காந்தியை நானும் எதிர்மறையாகவே புரிந்துகொண்டிருந்தேன். மூன்று சந்திப்புகள் வழியாக காந்தியை புரிந்துகொள்ள முடிந்தது.
முதல் சந்திப்பு, எம்.கோவிந்தன். மலையாளச் சிந்தனையாளரான கோவிந்தனைச் சந்தித்தபோது அண்டோனியோ கிராம்ஷி பற்றி சொன்னார். இப்போது ஆளும் ஆட்சியாளர்களை அதிகாரிகளை ஒட்டுமொத்த அதிகாரவற்கத்தை கொன்றழித்தால் என்ன ஆகும்? அதே அதிகார அமைப்பு மீண்டும் உருவாகி வரும். புல்லை வெட்டினால் மீண்டும் முளைப்பதுபோல. அதாவது வேர், உண்மையான அதிகாரம் கண்ணுக்கு தெரியாமல் உள்ளே இருக்கிறது. அது மக்களிடம் கருத்தியல்வடிவில் உள்ளது.
மக்கள் அரசுக்கு அளிக்கும் ஆதரவில் இருந்தே அரசு அதிகாரத்தை பெறுகிறது என்று கிராம்ஷி சொல்வதைச் சொன்னார் கோவிந்தன். அந்த ஆதரவு கருத்தியல்ரீதியானது. அன்றைய பிரிட்டிஷ் அரசின் உண்மையான அதிகாரம் அன்றிருந்த மக்கள் அதற்கு அளித்த ஆதரவில் இருந்தது. காந்தி அந்த மக்களை நோக்கி பேசியது அதனாலேயே. அரசை வீழ்த்த அவர் முயலவில்லை, மக்களை மாற்றவே முயன்றார். அதுவே காந்தியப்போராட்டம். மக்களுக்கு பிரிட்டிஷ் அரசு அளித்த நல்ல நிர்வாகம்மீது மதிப்பிருந்தது. அதன் மாபெரும் சுரண்டல் தெரிந்திருக்கவில்லை. அதை மக்களுக்குத் தெரிவிக்கவே காந்தி உப்புசத்தியாக்கிரம் போன்ற போராட்டங்களை உருவாக்கினார்.
காந்தியைப்பற்றிய புதிய பார்வையை உருவாக்கியது அந்த கருத்துதான். காந்தியை பிரிட்டிஷ் அரசை ‘பிளாக்மெயில்’ செய்பாவ்ர் என்றே நானும் எண்ணியிருந்தேன். அந்த எண்ணம் மாறி அவரை புதிய கோணத்தில் பார்க்க ஆரம்பித்தேன்.
இரண்டாவது சந்திப்பு லாரிபேக்கர். நவீன கட்டிடவரைகலை நிபுணர் அவர். அவர் கார்ட்டூன் வரைவதற்காக காந்தியைப் பார்க்கச் சென்றார். காந்தி அவரிடம் ‘சிறந்த கட்டிடம் என்றால் என்ன?’ என்றார். விடையாக அவரே ‘குறைந்த அளவுக்கு சரக்குப் போக்குவரத்துச் செலவு உடையது’ என்றார். அந்த வரி பேக்கரை மாற்றியமைத்தது. இந்தியாவில் தங்கி ‘தேசிய வீடு’ என்ற கருத்தை உருவாக்க வைத்தது
அப்படி காந்தி அவரைச் சந்தித்த எத்தனையோ பேரை பாதித்திருக்கிறார். சந்தித்தவர்களை எல்லாம் புரட்சிகரமாக மாற்றி அமைத்திருக்கிறார். அவர்களெல்லாம் மாமனிதர்களாக ஆனார்கள். காந்தி வாழ்நாள் முழுக்க காந்திகளை உருவாக்கிக்கொண்டே இருந்தார். வெரியர் எல்வின், ஜெ.சி.குமரப்பா என எத்தனையோ பேரைச் சொல்லலாம்.
மூன்றாவது சந்திப்பு ஈ.எம்.எஸ். வாழ்நாள் முழுக்க காந்தியக் கோட்பாடுகளுக்கு எதிரான அரசியலை நடத்தியவர் அவர். ஆனால் தனிவாழ்க்கையில் காந்தியின் எளிமையை அர்ப்பணிப்பை தானும் கொண்டிருந்தார். எதிரிகளிடம் கூட ஆழமாக ஊடுருவும் காந்தியை அவரிடம் கண்டுகொண்டேன்.
பின்னர் மூன்று அவதூறுகள். ஒன்று ரயிலில் ஒருவர் காந்தி தன் மூத்தமகனை பாரிஸ்டர் படிப்புக்கு அனுப்பாத காரணத்தால் அவன் குடிகாரன் ஆனான் என்றார். மீண்டும் மீண்டும் மேடையில் சொல்லப்படுகிறது அது. ஆனால் ஹரிலால் மெட்ரிகுலேஷனை நான்குமுறை எழுதி தோற்றவர் என்பதை நானே வாசித்து தெரிந்துகொண்டேன்.
காந்தி தகுதியிருந்தும் பட்டேலை விட்டுவிட்டு நேருவை தலைவராக்கியது தனிப்பட்ட விருப்பு வெறுப்பினால் என்ற அவதூறை அடுத்து கேட்டேன். ஆனால் இந்தியா மதவெறுப்பால் அழிந்துகொண்டிருந்த நாட்களில் முற்றிலும் மதச்சார்பற்ற ஒருவர் இந்தியாவை வழிநடத்தவேண்டுமென காந்தி விரும்பியதை வரலாற்றில் இருந்து புரிந்துகொண்டேன்.
கடசியாக, காந்தியின் மூன்றாம் வகுப்பு ரயில்பயணம் முதல்வகுப்பு பயணத்தைவிட செலவேறியது என்று சரோஜினிநாயிடு சொன்ன அவதூறை எதிர்கொண்டேன். அது சொல்லப்பட்ட தருணத்தை அன்றைய சூழலை தேடி அறிந்தேன். லட்சக்கணக்கான தொண்டர்கள் காந்தி பேச்சை கேட்டு எளிமையிலும் எளிமையான வாழ்க்கக்கு சென்று தொண்டாற்றியது காந்தியும் எளிமையாக இருந்தமையாலேயே. அந்த எளிமை ஒரு பதாகை. ஒரு முன்னுதாரணம். எந்த பாதுகாப்பும் இல்லாமல் தனியாக இந்தியாவைச் சுற்றி வந்த காலத்தில்கூட காந்தி மூன்றாம்வகுப்பிலேயே பயணம்செய்திருக்கிறார்
அந்த அவதூறில் இருந்து காந்தியை பற்றி எழுத ஆரம்பித்ததே இந்நூல். இதில் சமகாலத்தில் காந்தியை எப்படி புரிந்துகொள்வதென்ற தேடல் உள்ளது. இத்தனை அவதூறுகள் ஒரு சிந்தனையாளரைப் பற்றி ஏன் எழுகிறதென்ற கேள்வியே என்னை காந்திக்குள் செல்ல வைத்தது.
இந்திய தேசியம் குறித்த என் கருத்துக்களை நான் பதிவுசெய்திருக்கிறேன். நான் சொல்லும் தேசியம் நேற்றில் இருந்து எடுக்கும் அடையாளங்களால் ஆனதல்ல. இந்தமண்ணில் இப்போது வாழும் அனைவரும் நாளை குறித்த ஒரு கனவை உருவாக்கிக் கொள்வதனால் வரும் தேசியம் அது. எவரையுமே விலக்குவதல்ல.
இந்திய மண்ணில் இரண்டாயிரம் வருடங்களாக போர்களால், பண்பாட்டுக்காரணங்களால், கடைசியாக பஞ்சங்களால், மக்கள்ப்பரிமாற்றம் நிகழ்ந்து இன்று இந்த நிலம் ஒரே பண்பாட்டு வெளியாக உள்ளது. மக்கள் எங்கும் கலந்து வாழ்கிறார்கள். ஆகவே இவர்கள் சேர்ந்து வாழ்ந்தாகவேண்டும். இது வரலாற்று நிர்ப்பந்தம். அதற்கான தேசியமே நம் தேவை.
எல்லைப்பிரிவினை இந்தியாவில் 1948ல் ஐந்து லட்சம்பேரை பலிகொண்டது. சின்னஞ்சிறு இலங்கையில் ஒரு பிரிவினை லட்சம்பேரை காவுகொண்டது.இந்திய மக்கள்தொகையில் 20 சதவீதம் பேராவது இன்று மாற்றுமொழி நிலங்களில் நூற்றாண்டுகளாக குடியேறி வாழ்கிறார்கள். கிட்டத்தட்ட இருபதுகோடிப்பேர்! இந்தியாவில் எங்குமாக ஒருகோடி தமிழர்கள் அப்படி குடியேறி வாழ்கிறார்கள். யாரோ எதற்கோ பேசும் பிரிவினைவாதம் கோடிக்கணக்கான மக்களை இடம்பெயரச்செயும். பரஸ்பர வெறுப்பை கிளறும்.  அவர்களை அர்த்தமற்ற அழிவுக்கே கொண்டுசெல்லும். அந்த மனுடப்பேரழிவு நடந்தபின்னும் அதைப் பேசியவர்கள் அதற்குப் பொறுப்பேற்க மாட்டார்கள்.
தேசியம் மயிர் மட்டை என்று கொள்கை பேசி உயிர்களுடன் விளையாடாதீர்கள். அதிகாரவெறியால் உயிர்வாழ மட்டுமே விரும்பும் எளிய மக்களை கொன்றழித்துவிட்டு எண்ணிக்கைக் கணக்கையும் கோட்பாட்டையும் சேர்த்துப்பேசும் திமிரை அறிவுஜீவிகள் இனிமேலாவது கைவிட வேண்டும் என்றேன். ஈ.எம்.எஸ்.குறித்து ஒரு நூல் எழுதும் எண்ணம் உண்டு என்று சொல்லி முடித்துக்கொண்டேன்.
ஈரோட்டுக்கும் வெளியூரில் இருதெல்லாம் வாசகர்கள் வந்திருந்தார்கள். பெங்கலூரில் இருந்து கார்த்திகேயன் வந்திருந்தார். அனைவரிடமும் தனியாக நிறையவே பேசமுடிந்தது
விழா சரியாக ஒரு மணிக்கே முடிந்தது. மாடியில் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடாகியிருந்தது. கூட்டத்துக்கு வந்தவர்களே பரிமாறியது உற்சாகமாக இருந்தது. விஜயராகவன் முகமலர்ச்சியுடன் ”ஈரோடு காப்பாத்திடிச்சு சார்” என்றார்.
மாலை ஐந்து மணிவரைக்கும் அங்கேயே அறையில் அமர்ந்து நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். பின்னர் இருகார்களிலும் இருசக்கரவண்டிகளிலுமாக வள்ளிபுரத்தான்பாளையம் சென்றோம். எட்டுமணிவரை அங்கே பேசிக்கொண்டிருந்துவிட்டு திரும்பினோம். நான் இரவு பத்து மணிக்கு நாகர்கோயில் ரயிலை பிடித்தேன். நண்பர்கள் வந்து வழியனுப்பி வைத்தார்கள். படுத்ததுதான் தெரியும். காலையில் நாகர்கோயில்.
http://erodetamizh.blogspot.com/2010/01/blog-post_24.html

வெள்ளி, 25 நவம்பர், 2011

vairamuthu sanga kavithaigal

 கவிஞர் வைரமுத்துவின்கவிதைகள் ? இசை
.
   * * * * *
துளைகள் கொண்டது மனிதமனது
எறும்பின் கண்ணினும் நுண்ணிய துளைகள்
விழியினும் சவ்வினும் மெல்லிய துளைகள்
ஆயிரம் லட்சம் கோடித் துளைகள்

பல துளைகள்
பிறந்தது முதலாய்ப் பூட்டிக் கிடப்பவை
இறக்கும் வரைக்கும் திறக்காதவை

அத்தனை துளைகளும்
திறத்தல் அரிது

அத்தனை கோடித் துளைகளையும்
ஒரே கணத்தில் திறந்துவைக்கும்
விசை எங்கு கண்டாய்
இசையே!

   * * * * *

காற்றை நுரைக்க வைக்கிறாய்
காயப்பூக்கள் பூப்பிக்கிக்கிறாய்
வெறுமை நிரப்புகிறாய்
மாயைக்குள் மெய்யாகிறாய்

கடவுளர்க்கு நிஜம் சொல்கிறாய்
மிருகங்களுக்குக் கனவு தருகிறாய்
தாவரங்களின் தலை கோதுகிறாய்
மேகங்கள் பீச்சுகிறாய்

மூங்கிலில் வண்டு செய்த
புண்ணில் பண்ணிசைக்கிறாய்
பிறையை வளர்ப்பிக்கிறாய்
விண்மீன்கள் தூங்கவைக்கிறாய்

எங்கள்
மனப்பாறை இடுக்குகளில்
தேன்கூடு கட்டுகிறாய்

உன் வருகைக்கு எங்கள்
கண்ணிமைகள் தாழ்ந்து
கம்பளம் விரிக்க

கண்ணீர் ஆங்காங்கே
திரவமலர் தெளிக்க

புல்லரிக்கும் உரோமங்கள்
எழுந்து நின்று வரவேற்க

உனக்குத்தான் எத்தனை
ராஜமரியாதை இசையே!

   * * * * *
நாவுக்குச் சிக்காத அமிர்தம்
நீ நாசிக்குச் சிக்காத வாசம் நீ
கண்ணுக்குச் சிக்காத நிறப்பிரிகை நீ
ஸ்பரிசம் இல்லாத தீண்டல் நீ

 
 
நீயே சொல் இசையே
ி ?
ி?
 
மரக்கிளை அசைவில் மணிகளின் ஒலியில்
பறவையர் பாட்டில் அலைகளின் அதிர்வில்
மாறுவேடம் போட்டபடி
நீயே எங்கும் நிறைந்துள்ளாய் இசையே!
 
   * * * * *
நதி -
நடந்துபோகும் சங்கீதம்

மழை -
அவரோகண சங்கீதம்

மழலை -
பிழைகளின் சங்கீதம்

மெளனம் கூட
உறைந்துபோன சங்கீதம்

பூமி சுற்றிக் காற்று
காற்று சுற்றி இசை
இசைக்குள் மிதக்குகம்
ஜீவராசிகள்
 
   * * * * *
இசையே!
தூங்கவை எங்களை

உன் மயிற்பீலி விரல்கொண்டு
மனசு தடவு

இரத்தக் குழாய்களின்
துருக்கள் துலக்கு

உள்ளிருக்கும் விலங்குத்தோல்
உரி

மென்குணங்கள் மேம்படுத்து

நாங்கள்
இறுகி இறுகிக்
கல்லாகும்போது
இளகவிடு

குழைந்து குழைந்து
கூழாகும்போது
இறுகவிடு

நீயில்லாத பூமி
மயானம்

மன்னித்துவிடு
மயானத்திலும் இசை உண்டே.

vairamuthu sanga kavithaigal

கவிஞர் வைரமுத்துவின் கவிதைகள் ? காலந்தோறும் காதல
.
 
ஈராயிரம் ஆண்டு நீண்டு கிடக்கிறது தமிழ் இலக்கியப் பரப்பு. காதல் என்ற உள்ளடக்கம் மட்டும் மாறாமல் தொடர்கிறது வடிவங்களை மாற்றிக்கெண்டு. அந்தந்தக் காலங்களில் மேலோங்கி விளங்கும் இயக்கங்களில் காற்றெடுத்துக் கொண்டுதான் காதல் சுவாசித்து வந்திருக்கிறது. இதை உணர்த்தவே - இந்தக் கவிதைகளில் அந்தந்தக் கால உள்ளீடுகளையும் வடிவங்களையும் சொல்லாட்சிகளையும் கையாண்டிருக்கிறேன்.

   * * * * *
 1. சங்க காலம்
ஆற்றுத் தூநீர் ஆரல் உண்டு
குருகு பறக்கும் தீம்புனல் நாடன்

கற்றை நிலவு காயும் காட்டிடை
என்கை பற்றி இலங்குவளை ஞெகிழ்த்து

மேனி வியர்ப்ப மெல்லிடை ஒடித்து
வாட்கண் மயங்க உண்டதை மீண்டும்
பசலை உண்ணும் பாராய் தோழி

   * * * * *
 2 காவிய காலம்
பொன்னங் கொடியென்பார் போதலரும் பூவென்பார்
மின்னல் மிடைந்த இடையென்பார் - இன்னும்
கரும்பிருக்கும் கூந்தல் சுடர்த்தொடிஉன் சொல்லில்
கரும்பிருக்கும் என்பார் கவி.

* * * * *
 3 சமய காலம்

வெண்ணிலவால் பொங்குதியோ
விரக்தியால் பொங்குதியோ
பெண்ணொருத்தி நான்விடுக்கும்
பெருமூச்சாற் பொங்குதியோ
பண்ணளந்த மால்வண்ணன் பள்ளிகொண்ட பான்மையினால்
விண்ணளந்து பொங்குதியோ
விளம்பாய் பாற்கடலே!
 
   * * * * *
 4 சிற்றிலக்கியக் காலம்

தூக்கி நிறுத்திவைத்த கொண்டையாள் - மனம்
துள்ளி ஓடும்விழிக் கெண்டையாள் - நெஞ்சைத்
தாக்கி மறுநொடியில் தவிடுபொடியாக்கும்
சண்டையாள் - வெள்ளித் தண்டையாள்
முலை அதிரும்படி மணி உதிரும்படி
மனம் பதறும்படிஆடும் பாவையாள் - வில்
மாரன் பகைமுடிக்கத் தேவையாள்
 
   * * * * *
 5 தேசிய காலம்

சின்னஞ் சிறுகமலப் பூவினாள் - என்
சித்தத்திலே வந்து மேவினாள்
கண்ணில் ஜோதிஒன்று காட்டினாள் - என்
கவியில் காதல்ரசம் ஊற்றினாள்
விண்ணில் நிலவெரியும் வேளையில் - பொன்
வீணை கரம்கொண்டு மீட்டினாள்
மண்ணில் விண்ணகம் காட்டியே - அவள்
மறைந்தகதை எங்கு சொல்குவேன்?
 
   * * * * *
 
 6 திராவிட காலம் - 1

இல்லாத கடவுள் போன்ற
இடைகொண்ட பெண்ணே உந்தன்
பொல்லாத அழகு பாடப்
பூவாடும் கூந்தல் பாட
சல்லாப விழிகள் பாடத்
தனித்தமிழ் கொண்டு வந்தேன்
நில்லாமற் போனால் கூட்டில்
நிற்குமோ எந்தன் ஆவி?
 
   * * * * *
 7 திராவிட காலம் - 2

விண் - அப்பம் போன்ற நிலவுவந்து - காதல்
விண்ணப்பம் எழுதுகின்ற இரவு
முத்தமென்ற சொல்போல - நான்
இதழ்சேர வரும்போது
உதடுஒட்டாத குறள்போல - நீ
தள்ளியா நிற்பது?
விடையாட வேண்டும் வாடிஎன் கண்ணே
விடிவெள்ளி கண்ணயரும் முன்னே
 
   * * * * *
 8 புதுக்கவிதைக் காலம் - 1

ஏப்ரல் சூரியன்
டீசல் புகை
பேருந்து நெரிசல்
அலுவலக எரிச்சல்
இவையெதிலும் வாடாமல்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
உனக்குத் தெரியாமல் உதிர்ந்து
யாருக்கும் தெரியாமல் நான் கவர்ந்த
உன் கருங்கூந்தற் சிறுபூவை
 
   * * * * *
 9 புதுக்கவிதைக் காலம் - 2

உன்வீட்டு ஆன்ட்டனாவிலும்
என்வீட்டு நைலான் கொடியிலும்
தனித்தனியே காயும்
நேற்று
ஊருக்கு வெளியே நாம்
ஒன்றாய் அழுக்குச் செய்த உள்ளாடைகள்.
 
   * * * * *

Vairamuthu..Sangakavithaigal

வியாழன், 24 நவம்பர், 2011

Uyirin osai...

நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகமும், தேசமும் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது எனும் பின்பத்தை இந்திய தேசியம் கட்டமைத்துக் கொண்டிருக்கும் தருணத்தில், பிச்சையெடுக்கும் குடிகளிடம் பிச்சையெடுத்து அப்படியான பின்பும் போலியானது என்று உடைத்தெறிந்துள்ளார்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பேய்க்குப் பயந்து சாத்தானிடம் மாட்டிக்கொள்ளும் தமிழாளர்கள்  வழக்கம்போல் இம்முறையும் கொள்ளைக் கூட்டத்திடமிருந்து தமிழகத்தைப் பாதுகாக்க சர்வாதிகாரியின் கைகளில் மாட்டிக்கொண்டிருக்கின்றனர். மூன்று தமிழர் உயிர்காக்க சட்டப்பேரவையில் தீர்மானமேற்றி சிறிது  நம்பிக்கை தந்த புது ஆட்சியாளர், சமச்சீர் கல்வியில் ஆரம்பித்தார் தனது பழைய செயல்பாடுகளை.
பரமக்குடி படுகொலைகள்,சமச்சீர் கல்வி, கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவாய் எதுவும் செயல்படாமல் மௌனம் காப்பது, சட்டமன்றத் தீர்மானத்தை முழுமையாய் முரண்கொண்டு மூன்று தமிழர்களுக்கு எதிராய் நீதிமன்றதில் பதில்தந்தது, அண்ணா நூலகத்தை இடமாற்ற முனைந்தது, இறுதியாய் அடிப்படைத் தேவைகளின் விலையேற்றம். 6.25 காசுகள் உயர்த்தப்பட்டிருக்கும் பால்விலை, உயரப்போகும் மின்சார கட்டணம், உயர்ந்துபோன பேருந்துக் கட்டணங்கள். விலைஉயர்வுக்குக் கொடுக்கப்பட்டுள்ள காரணம் அரசுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்பதுவே. பொது நிறுவனங்கள் என்பவை மக்களுக்கான சேவை செய்பவையே அன்றி லாபமீட்டத் தொடங்கியவையன்று.
அவை லாபத்தில் இயங்க ஏழை எளியவர் குருதியை சுவைக்கக் கூடாது என்பதை புரியாத ஆட்சியாளர்கள் இருக்கும் தேசத்தில் எதன் மீதும் நம்பிக்கையில்லை. இருக்கின்ற ஏரி குளங்கள் அனைத்தையும் குப்பைகளால் நிரப்பி வானளவு கட்டிடங்கள் காட்டி பன்னாட்டு நிறுவனங்களுக்கும், டாடாவுக்கும், ரிலையன்சுக்கும் சேவகம் செய்யும் ஆட்சியாளர்களுக்கு இந்த தேசத்தில் இன்னும் நாற்பது கொடி மக்கள் உறங்க வீடின்றி வீதிகளில் உறங்குவதையோ, சுகாதாரமில்லாத வாழ்க்கை குறித்தோ, தினமும் உண்ணும் ஒருவேளை உணவு குறித்தோ எந்த அக்கறையுமேயில்லை.
பன்னாட்டு எசமானர்களுக்கு சேவகம் புரியும் பத்துக் கோடி பேருக்கு மட்டுமே இந்த தேசம் சுருங்கிக் கிடக்கிறது, தமிழக ஆட்சியாளர்களும் முந்தய ஆட்சி சீர்கேடுகள், மைய அரசு நிதி தராமை எனும் பல காரணங்களைக்  கொண்டு இப்பணிகளை செவ்வனே செய்கின்றனர் . ஆறு ரூபாய் விலை உயர்வு என்பது ஆட்சியாளர்களின் பிள்ளைகளையோ, இருக்கும் சிறுஅளவு மேல்வர்க்கத்துக்கோ எந்த பாதிப்புமில்லை ஆனால் மிகுதியான மக்கள் வறுமையில் வாழ்வது என்பதே நிசம்.
பேருந்து பயணக் கட்டண உயர்வென்பது கார்களில் பவனி வருபவரையும், குளிரூட்டப்பட்ட சொகுசு தனியார் பேருந்துகளில் செல்பவரை எந்த அளவிலும் பாதிக்கப்போவதில்லை ஆனால் எதார்த்தத்தில் தினமும் இரண்டு ரூபாய் கட்டணத்தில் பிதுங்கி வழியும் பேருந்துகளில் பயணிக்கும் மனிதர்களே முழுமையான தாக்குதலுக்கு ஆட்படுகின்றனர்.
முந்மைய ஆட்சியினர் இருக்கும் சாதாரணப் பேருந்துகளை டீலக்ஸ் , அல்ட்ரா டீலக்ஸ்  எனும் வழியில் இயக்கி ஒரு தாக்குதலைத் தொடுத்தனர், இன்றைய ஆட்சியாளர்கள் கட்டணங்களை உயர்த்தி அடுத்த தாக்குதலைத் தொடுத்துள்ளனர். என் நண்பனொருவன் சொன்னதைப்போல் பேருந்துக் கட்டணங்கள் விமானக் கட்டணங்களுடன் போட்டியிடுகின்றன. சாதிய அடக்குமுறை, அறிவு அடக்குமுறை, பொருளாதாரத் தாக்குதல் என்று அனைத்து வகையிலும் இன்றைய ஆட்சியாளர்கள் சர்வாதிகார ஆட்சி புரிகின்றனர்.
நாமும் நம் மீது கட்டவிழ்க்கப்படும் அடக்குமுறைகள், கலாசார இருட்டடிப்புகள் என்று எதையும் உணராமல் உன்ன சோறு கிடைக்கின்ற ஒரே காரணத்துக்காய் எதையும் கண்டுகொள்ளாமல் சிறந்த அடிமைகளாய் எதையும் எதிர்த்துப் போராடத் துணிவின்றி வாழ்கிறோம். ஆட்சியாளர்கள் தம்சுயலாபத்துக்காய் நம் நிலத்தை கொலை பூமியாய் மாற்றுவர்.
நாம் நம் நிலத்தை விட்டே துரத்தப்படுவோம். உறவுகளின்றி, நிலமின்றி ஏதோ ஓர் தேசத்தில் நம் தலைமுறைகள் அகதிகளாய் அலைந்துகொண்டிருக்கும் காலம் தொலைவிலேயில்லை. இதைத் தமிழ்பெருமை பேசும் முன்னாள் ஆட்சியாளர்களும், ஆர்ய புகழ் பாடும் இன்றைய ஆட்சியாளர்களும் செவ்வனே செய்வர். பேய்க்குப் பயந்து சாத்தானிடம் மாட்டிக்கொண்ட கதை முடியும்போது தமிழகம் எனும் தேசம் வரலாறுகளின் நீண்டதூரத்தில் புதையுண்டு கிடக்கும்.
சில நாட்களுக்குமுன் ஈழத்து நண்பன் இப்படிச் சொன்னான் " நாங்கள் நிலத்தை, லட்சக்கணக்கான மக்களை இழந்திருக்கலாம். ஆனால் தமிழகத் தமிழர்களைப் போல் தன்மானமற்ற அடிமைகளில்லை."