வியாழன், 21 ஜூலை, 2011

Elloraa.

.முகப்புபுத்தகங்கள்.எல்லோரா My Photo


இளங்கோ கல்லானை
பயணம்

வேலையை விடுவது என்பது இப்பொழுது அடுத்த வேலையைத் தேடுவதற்கு என்பதற்கு மாறாக, அடுத்த இடத்தைத் தேடுவது என்றாகி விட்டது. வேலையைப் பெறுவது எவ்வளவு இன்பமோ அதைவிடப் பல மடங்கு இன்பம் வேலையை விடுவது என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். சத்தீஸ்கர் மாநிலம் கொடுத்த அனுபவம் தந்த தைரியத்தில் எங்கு வேலை கிடைத்தாலும் சுற்றிப் பார்க்கலாம் என்ற நம்பிக்கை. அதுவும் தகவல் தொழில்நுட்பத் துறையில் சக குமாஸ்தாக்களின் பாவனைகளையும், அவர்கள் அமெரிக்கா செல்ல நகர்த்தும் காய்களையும் கடந்த ஆறு வருடங்களாகப் பார்த்துப் பார்த்துச் சலித்தாகிவிட்டது. அமெரிக்கா அமெரிக்கா என்று மூச்சு விடும் கூட்டத்திற்கு மத்தியில் வாழ்வது பெரும் வேதனை. அப்படி மூச்சு விடுவதன் பலன்களைப் பற்றி பதஞ்சலி யோக சூத்திரத்திலோ அல்லது திருமூலரின் மந்திரத்திலோ என்ன சொல்லப்பட்டிக்கிறது என்று வாழும் கலையறிந்த யாராவது சொன்னால் நல்லது.



எனக்கு இருப்புக் கொள்ள முடியாத கொழுப்பு வேறு. ரொம்ப நாள் தாங்கக்கூடிய வேலை ஒன்றும் கிடைக்கவில்லை. இரண்டே இரண்டு டப்பாக்கள் தான் எல்லா இந்திய தகவல் தொழில் நுட்ப வல்லுனர்களையும் நகர்த்துகிறது. ஒன்று அடுக்குமாடி வீடுகளில் ஒரு வீடு எனும் டப்பா, இன்னொன்று சொகுசு கார் எனும் டப்பா. வட்டிக் கணக்கை பற்றியே பேசும் பள்ளிக்கூட வாத்தியார்கள் இவர்களை விட மேல் என்ற எண்ணம் உருவாகி விட்டது. Eat shop and be happy என்று நகரெங்கும் விளம்பரங்களைப் பார்க்கும் போது, ஆகா என்னே ஒரு உன்னத அறிவு நிலையை அடைந்து விட்டோம் என்று ஆனந்தக் கூத்து ஆடாமல், கிடைத்த வேலையில் நிலைக்கத் தெரியாமல் ஓடத் தயாரான நிலையிலேயே இருந்தேன். எங்களூரில் சித்திரை மாதம் பிறந்தால் பண்ணைகளை மாற்றி வேறு வேலைக்குச் செல்வார்கள் பண்ணை வேலைக்காரர்கள் .அப்பொழுது கணக்கு முடிக்கப்படும். வேலையை விடுவதை சித்திரை விடுவது என்று சொல்லுவார்கள். தகவல் தொழிலில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் அதாவது சித்திரை திறன்களை மதிப்பிடும் காலமும் கூட. எனக்கு சித்திரை மாதம் தலைக்குள் வழக்கம் போல மின்னலடித்தது. நமக்கு என்ன ஒரு ஐந்து சதவீதம் சம்பள உயர்வோ அல்லது அடுத்த மேலாளர் பதவியோ தருவார்கள். வேறு ஒன்றும் நடக்காது. நானும் சித்திரை விடலாம் என்று முடிவெடுத்தேன். அலுவலகத்தில் சொல்லிவிட்டு ஒரு மாதக் காலக்கெடுவையும் கொடுத்துவிட்டு வீடு திரும்பினேன். அடுத்து எந்த இடம் என்று யோசிக்கக்கூட இல்லை. ஆனால் எனக்கு ஒரு சங்கடம் அதில் இருந்தது.



பூனாவில் நாங்கள் சென்ற ஆண்டு குடியேறிய பொழுது ஒரு பெண் வேலை கேட்டு வந்தார். வீட்டு வேலைக்கு ஆள் தேவை இல்லை என்றாலும், சில வேலைச்சுமைகள் குறைவது என்னவோ சரிதான் என்று பட்டது . சரி என்று ஒப்புக் கொண்டு அவரை வேலைக்கு அமர்த்திக் கொண்டோம். எனது மனைவிக்கு சுற்றத்துடன் சமூகஉறவு உருவாவதில் உற்ற துணைவியாக மாறினார் அந்தப் பெண். என் மனைவியை பாபி என்றும் என்னை பையா என்றும் அழைத்தார். எனது மகன் அவரை அத்தை என்று அழைத்தான். மராத்தியிலும் அத்தை தான். அவருடைய தம்பியின் திருமணத்திற்கு எங்களைத் தயங்கித் தயங்கி அழைத்தார். என்ன காரணம் என்று இந்தியாவில் பிறந்த எவரும் யூகிக்கக் கூடியதுதான். அவர் ஒரு தலித். மகாராஷ்டிரம் வந்த பின்பு எங்களுக்குக் கிடைத்த முதல் அழைப்பு. எனக்கும் திருமணங்கள் எப்படி நிகழ்கின்றன என்று பார்க்க ஆர்வம். நாங்கள் திருமணத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்ற பொழுது ஒரு வெள்ளைப் புடவை வாங்கித்தரச் சொன்னார். நமது மங்களகர நிறக் கருத்துக்களுக்கு இப்படி ஒரு சோதனையா என்று கொஞ்சம் நெருடலாக இருந்தது உண்மைதான். அப்புறம் ஒருவழியாக விளக்கினார். தாங்கள் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள், போதி சத்துவர், அம்பேத்கர் உருவப் படங்களின் முன்னிலையில் அனைவரும் வெள்ளுடை அணிந்து திருமண உறுதி ஏற்றுக் கொள்வோம் என்றார். நாங்கள் திருமணத்திற்குச் சென்றோம்.



அப்பொழுதுதான் மகாராஷ்டிர மாநில தலித்துக்களை ஓரளவு பௌத்த மதத்தின் வழியாக ஒருங்கிணைக்க முயன்றிருக்கிறார் அம்பேத்கர் என்று புரிந்தது. திருமணம் முடிந்த பின்பு எல்லோரா கோவில்களுக்கு புனிதப் பயணம் செய்வது வழக்கம் என்று சொன்னார்கள். புத்த மதக் கலாசாரம் வேரூன்றிய மண்ணாக மராட்டியம் இருந்தது என்பதைத் தொடர்புபடுத்தியும் அம்பேத்கர் யோசித்திருக்கலாம் என்று பட்டது.புத்த மதம் வழியாக சாதியைக் கடக்க முயன்றிருக்கிறார் அம்பேத்கர். ஆனால் என்ன, உலகின் முக்கிய கலைச் சின்னங்களாக அஜிந்தா (இப்படித்தான் மராட்டியில் சொல்ல வேண்டும்) மற்றும் எல்லோரவை கருத மக்களுக்கு உரிமை இருக்கிறது. கலையைக் கண்டவருக்கு அவர் இன்பம், கடவுளைக் கண்டவருக்கும் அவ்வாறே.



இந்தப் பெண்ணும் நாம் சித்திரை விட்டதால் வேலையை விட வேண்டியதிருக்குமே என்று கொஞ்சம் வருத்தம் இருந்தது. பெரிய முடிவுகளைச் சிறிய முடிவுகள் பாதிக்கத் தானே செய்யும் என்றாலும் ஒரு மாற்று ஏற்பாட்டைச் செய்து விடலாம் என்று முடிவெடுத்து வேறு வேலை வாங்கித் தந்து விட்டேன்.



நண்பர்களை அழைத்து வேலையே விட்ட விஷயத்தை தெரிவித்தேன். மகாராஷ்டிரத்தை சுற்றலாம் என்ற யோசனையைத் தெரிவித்தேன். அழகேச பாண்டியனும், வசந்தகுமாரும் பயணம் என்றால் சளைக்காதவர்கள். நெடு நாட்களாக நான் பார்க்க நினைத்த இடங்கள் அஜிந்தாவும் எல்லோராவும். 1997 இல் ஒரு முறை சைக்கிள் பயணமாகச் செல்ல முடிவெடுத்து அது தோல்வியில் முடிவுற்றது. இப்பொழுது வாய்ப்பு. அழகேசன் தனது வாகனத்தை தயார் செய்தார். வசந்தகுமார் நண்பர்களைத் தயார் செய்தார். பயணத்திட்டம் இனிதே தொடங்கியது. வசந்தகுமார், அழகேசன், சு.வேணுகோபால், செல்வ புவியரசன் புனே வந்து சேர்ந்தனர். ஆடு வளர்ப்பு தொடர்பாக ஒரு பண்ணையில் சில கேள்விகள் கேட்க விரும்பி பாராமதி மாவட்டம் போய் அங்கிருந்து ஔரங்கபாத் சென்று சேர்வதாகத் திட்டம். காலையில் கிளம்பினோம்.



அதிகாலை கிளம்ப நினைத்து ஒன்பது மணி ஆகிவிட்டது. ஐந்து பேர் என்பது நல்ல கையடக்கமான எண்ணிக்கை தான். காலையில் பூனாவில் இருந்து சாஸ்வத் மலை வழியாகக் கிளம்பினோம். சாஸ்வத் எனும் ஊர் பூனாவைச் சுற்றி இருக்கும் மலைகளில் ஒன்றின் மேல் அமைந்திருக்கும் சிறு ஊர். நீரா வழியாகச் சென்றடைய வேண்டிய ஊர் வட்ஜல். அங்கு ஆடு வளர்ப்பு ஆராய்ச்சி மையம் உள்ளது. நானும் அழகேசனும் ஆடு வளர்ப்பு பற்றி இரண்டு வருடமாக திட்ட அளவில் முயன்று வந்துள்ளோம். அதைப் பற்றிய முறையான தகவல்கள் ஆவணகளையும் சேகரித்து வருகிறோம். ஒருங்கினைந்த பண்ணை அமைப்பதற்குத் தேவையான மூலப்பொருட்களில் ஆட்டு உரமும் ஒன்று.



கோடை தொடங்கி இருந்ததால் சாஸ்வத் மலைகளில் மலைகளில் உள்ள புற்புதர்களுக்கு தீ வைத்து கருக விட்டிருந்தனர். இது ஒரு நவீன விவசாய முறை. குறிப்பிட்ட அளவு ஏறியவுடன் சமதரை வரக் கூடிய உயரமான மலைகள். பச்சையாகவும் இல்லாமல் பாறையாகவும் இல்லாமல் தூரத்தில் இருந்து மணல் மேடு போல் தோற்றமளிக்கும் மலைகள். இன்னும் கூட அதிகமாக மாட்டு வண்டிகளைப் பயன்படுத்தக்கூடிய குறுகலான சாலைகள் தான். ஆனால் பூனாவில் இருந்து வட்ஜல் செல்லும் வழியில் பெரிய நெரிசல் ஒன்றும் இருக்காது. ஜெஜூரி என்ற ஊர் வரும் வரை கொஞ்சம் பசுமையான விவசாயம் தென்பட்டது. பச்சைக் காய்கறிகள் அதிகம் கிடைக்காது. எங்கும் மாதுளைச் செடிகள். மாதுளம் பழங்கள் குறைந்த விலையில் கிடைக்கும். இங்கே உள்ள மாதுளை இனிப்பாக இருக்கக் காரணம் ஒன்றைச் சொன்னார் தோட்டக்கலை நிபுணர் ஒருவர். அதாவது பகலில் அதிகமான வெயிலும் இரவில் நேர்மாறான குளிரும் இருக்கும் பகுதியில் பழங்களும் அதிக இனிப்புடன் இருக்கும் என்பது ஒரு மரபியல் விதி. நிலம் மேடும் பள்ளமாக ஏறி இறங்கிச் செல்வதை இரு சக்கர வாகனத்தில் உணருவதைப் போல காரில் உணர முடியாது. இதே மலைகள் ஆனி மழைக் காலத்துக்குப் பின்பு அப்படியே பசுமையாக மாறிவிடும். பச்சைப் புல் ஆறடி வரை உயர்ந்து விடும். இடையிடயே சோளம் கரும்பு, தக்காளி, கீரை விவசாயம் தென்பட்டது. வசந்தகுமார் மகாராஷ்டிர கிராமப்புறங்கள் எதிர்பார்த்திருந்ததை விட ஏமாற்றம் அளிப்பதாகச் சொன்னார். பொட்டல்களும் விளைநிலமாகத் தகுதியில்லாத மேடுபள்ளங்களும் நிறைய. இங்கே மாற்றுத்தொழில் பாலைவன மிருகம் என்றழைக்கப்படும் ஆடு வளர்ப்புதான்.



நீரா என்ற ஊர் சென்றடையும் வரை எங்கும் பச்சையைக் காண முடியவில்லை. நீராவில் ஒரு கால்வாய் நிறைந்து ஓடியது. அருகில் அரை உயிருடன் ஓடும் ஆறும் உண்டு. எனக்குத் தெரிந்த இந்தியிலும் மராத்தியிலும் வழி கேட்டு வட்ஜல் சென்றடைந்தோம். அரசியல் கேலிகளுடன் மகாராஷ்ட்ராவின் சமூக அமைப்பைப் பற்றி எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். வழி கேட்கும் நாம் பதிலளிப்பவரின் பரிவைக் கண்டு உள்ளூரில் இருப்பதாகவே உணரலாம். மக்கள் தனித்து நம்மிடம் உரையாடுவதைப் போன்ற உணர்வுதான் எல்லோருக்கும் கிடைக்கும். ஆப்கானிஸ்தானிலோ, பாலஸ்தீனிலோ அமெரிக்கர் ஒருவர் வழி கேட்டாலும் ஒரு சாதாரண மனிதர் இப்படித்தான் பரிவுடன் பதில் சொல்வார் என்று பட்டது. மராட்டியம் மிகவும் இணக்கமான ஒரு இடமாகவே எனக்கு எப்போதும் தோன்றுவதுண்டு. அண்டை மாநில நீர், நிலத் தாவாக்களில் கூட பெரிதாக அரசியல் கோஷங்கள் கிடையாது. இப்படிப்பட்ட மாநிலத்தில் செல்வாக்கைச் செலுத்தும் சரத் பவார் போன்றவர்களுக்கு உலக ஊழல் வரைபடத்தில் மிக முக்கியமான இடம் உண்டு. விவசாயிகளின் தற்கொலைக்கு புதிது புதிதாக பொய்களைக் கண்டுபிடித்து உலகுக்குச் சொல்வார்கள். இவர்களின் பேராசையால் மக்கள் என்ன கஷ்டப்பட்டாலும் இவர்களுக்குக் கவலை இல்லை. இவற்றைப் பேசுவது இந்த நிலத்தைப் பற்றி பேசுவதுதான். மக்கள் மிகுந்த பேராசைக்காரர்கள் என்று கூட அரசியல்வாதிகள் சொல்லிச் சமாளிக்கிறார்கள்.



வட்ஜல் செல்லும் முன்பாக ஒரு இடத்தில் சுங்க வரி செலுத்தினோம். இவற்றைப் பற்றிய பேச்சுகளில் எனக்கும் அழகேசனுக்கும் கடுமையான வாதங்கள் நடந்தது. காரில் வந்த அழகேசன் கர்நாடகத்துக்கும் மகாராஷ்டிரத்துக்கும் இடையில் மட்டும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் toll வரி கட்டியிருந்தார். ஒரு பெரிய ஊரில் நுழையும் போது வரி, பின்பு வெளியேறும் போது வரி என்று எங்கெங்கும் வரி. toll என்பது தொல்லை என்ற தமிழ்ச் சொல்தான். இந்தோ ஐரோப்பிய மொழிகளில் எங்கும் இல்லாது தமிழில் மட்டுமே உள்ளது. திராவிட வேர்ச்சொல் அகராதியில் உள்ளது இந்தச் சொல். தொல்லை வரி தான். வாகனம் வாங்கும் போது ஆயுள் சாலை வரி, பின்பு ஒவ்வொரு லிட்டர் எரிஎண்ணை நிரப்பும் போதும் சாலை வரி. இவ்வளவு வரியையும் வாங்கி சாலை அமைக்காதவர்கள், பராமரிப்புக்கும் ஆக்கத்துக்கும் உபரியாக வரி வாங்குகிறார்களே என்ற கோபம் எனக்கு.



பாராமதிக்கு சென்று, அங்கிருந்து அஹமத் நகர் சென்று இரவு ஔரங்காபாத் செல்வதாகத் திட்டம். ஆனால் அதிக நேரமாகிவிட்டால் அஹமத் நகரிலேயே தங்கிவிடலாம் என்று எண்ணிக் கொண்டோம். பாராமதி சரத் பவாரின் மாவட்டம். கரும்பு வட்டம் என்றழைக்கப்படுகிறது. உழவு கடிகட்டியாக கரிசல் மண்ணைப் பெயர்த்துப் போட்டிருந்தார்கள். காளைகள் ஓங்குதாங்காக வண்டிகளில் கரும்பு ஏற்றிச் சென்றன. இது தவிர டிராக்டர்களும் லாரிகளும் கரும்பைச் சுமந்து செல்கின்றன.தரமில்லாத கரும்புக்கு அதிக விலை வாங்கித் தரும் ஒரு தரகராகவே அரசியலில் சரத் பவாரை நியமித்து விட்டார்கள் மராட்டியர்கள். கரும்பு வெட்டுக்கு வந்த கூலிகள் ஆங்காங்கே கூடாரம் அமைத்திருந்தார்கள். குழந்தைகள் வைக்கோல் பிரியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வைக்கோல் பிரியில் தான் முழுக் கூடாரமும். சில இடங்களை பச்சையாகவும், சில இடங்களில் நீலமாகவும் கால்வாய்களில் நீர் ஓடிக்கொண்டிருந்தது. இரண்டு ஆசைகள் பற்றிப் பேசிக் கொண்டோம். ஒன்று கால்வாயில் நீந்திக் குளிப்பது, இன்னொன்று சாலையோரக் கடைகளில் கரும்புச் சாறு வயிறும் முட்டக் குடிப்பது என்று. முதல் ஆசை நிறைவேற வில்லை, காரணம், கால்வாய்களில் இறங்குவதற்கான படித்துறைகள் இல்லை. இருக்கும் இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகம். கரும்புச்சாறு குடித்தோம். அதன் பின்பு வேணுகோபால் அவ்வளவு போதை நிலையை அடைவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அஹமத் நகர் வரும் வரை படப் பாடல்களை பாவனையுடன் பாடிக்கொண்டு வந்தார். துணைக்கு செல்வ புவியரசனும் சேர்ந்து கொண்டார். அவரின் பாவனைகள் மாணவிகள் மத்தியில் பிரபலம் என்று சொன்னபோது ஒப்புக்கொள்ளத் தோன்றியது. கலைஞனுக்கு பாவனைதான் முக்கியம் போல. வேணுகோபாலின் கதைகளில் வரும் சோகம் முற்றிலுமல்லாத உற்சாகமான வேணுவைப் பார்த்தோம். இவ்வளவு சுதந்திரம் இல்லாத ஒரு மனிதனுக்குள் கலை எதுவும் நுழைய முடியாது என்பதற்கு அவர் நல்ல உதாரணம்.



மாலை முழுவதும் அதிகமான தொல்லை வரியைச் செலுத்தியும் மோசமான சாலைகளிலேயே பயணித்தோம். அஹமத் நகரில் ஒரு விடுதியில் அடைந்து கொள்ளலாம் என்று தேடி ஒரு மட்டமான இடத்துக்கு அதிகமான வாடகை கொடுத்தோம். மராட்டியத்தில் விடுதி வாடகை பகல்கொள்ளை. அறைகளைச் சுத்தம் செய்யும் பழக்கமில்லை என்பது கூடுதல் கொடுப்பினை.



காலைப் பயணம் கொஞ்சம் இதமாக இருந்தது. மிசால் பாவ், வடை பாவ் பற்றி பேசிக்கொண்டே வந்தேன். வசந்தகுமார் மிளகாயை எப்படி மராட்டிய பாணியில் இடது கையில் வைத்துக் கடித்துச் சாப்பிட வேண்டும் என்று சொல்லிக்கொண்டு வந்தார். புத்தர் பத்மபாணி. மக்கள் மிளகாய் பாணியர். செல்வ புவியோ எந்த இடத்திலும் எதற்கும் தயார் என்ற பாவனையில் முகத்தை வைத்துக் கொள்வார். அவருக்கு இனிப்பு மிட்டாய்களைக் கண்டடைவதில் தான் ஆனந்தம். சாரதி அழகேசன் எங்கும் அரிசிச் சோறு என்று தேடி அலைந்தார். மகாராஷ்டிரத்தில் அரிசி உணவு மிகவும் குறைவு. இதற்கு நேர்மாறாக உத்தரபிரதேசத்திலும் பீகாரிலும் வங்கத்திலும் சத்திஸ்கரிலும் அரிசி உணவே அதிகம். காலை உணவாக காரமான மசாலுடன்(பாசிப் பயறு கூட்டு) பாவ் ( பண் ரொட்டி) உண்டோம். இந்தப் பகுதிகளில் உணவு காரம் அதிகம் என்றாலும் ருசி நன்றாக இருக்கும், ஆந்திரத்தைப் போலவே. இதற்குப் பின் சாப்பிட்ட எல்லா இடங்களுமே மிகுந்த சோதனையைத் தந்தது. நான் எச்சரித்தும் கேட்காமல் தாளி (அரை வேக்காட்டு அரிசியும் (சோறு அல்ல) சப்பாத்தியும் காய்கறிகளும்) உணவு வேண்டும் என்று சொல்லிப் பல இடங்களில் மாட்டிக் கொண்டோம்.



காலையில் தௌலதாபாத் கடந்து எல்லோராவை அடைந்தோம். தெலைதாபாத் இந்தியாவிலேயே மிகப் பாதுகாப்பான மலைக் கோட்டை இதுதான் முன்னாள் தேவகிரி. யாதவ அரசின் தலைநகர். யாதவர்களை வென்று இதைக் கைப்பற்றிய பின் இந்நகரால் கவரப்பட்ட துக்ளக் தனது தலைநகரை டெல்லியிருந்து இங்கு மாற்றினார். வேனில் வியாதிகளில் சிக்கி பயணத்திலேயெ பல்லாயிரம் பேர் மாண்டனர். கோடை நீர் வறட்சி காரணமாக உயிர் சேதத்துடன் துக்ளக் மீண்டும் டெல்லியையே தலைநகராக்கினார். தௌலதாபாத்தை மாலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று மேலேறிச் சென்றோம். அங்கிருந்து ஐந்து கிலோ மீட்டரில் எல்லோராவிற்கு (வேருள் என்று மராத்தியில் அழைக்கப்படுகிறது) குன்றுச் சாலையில் ஏறிச் செல்ல வேண்டும். காலையிலேயே வெய்யில் ஏறி விட்டிருந்தது. சாலையின் இரு புறங்களிலும் சிறிது பச்சை இருந்தாலும் வெயில் பட்டுத் தெறிக்கத்தான் செய்தது. சென்று சேர்ந்தவுடன் உணர்ந்தது, அவ்வளவாக வியாபாரிகள் தொல்லை இல்லை என்பது. ஆம் கோவில், சுற்றலாத் தளங்களில் நம்மைப் பணிய வைக்கும் தோரணையில் வந்து கெஞ்சி தொல்லை செய்வார்கள். இது பெரிய தர்ம சங்கடம். வியாபாரம் என்றால் வெறி இருக்க வேண்டும் போலிருக்கிறது. இந்தக் குகைகளில் நுழைய கோவில் நுழைவுப் போராட்டமெல்லாம் நடத்த வேண்டிய அவசியம் எப்பொழுதும் இருந்ததில்லை. காலமெல்லாம் திறந்தே கிடந்திருக்கிறது. எல்லோருக்கும் குறைந்த கட்டணம் தான் என்றாலும் கோடை விடுமுறையில் அதுவும் ஞாயிற்றுக் கிழமைக்கான கூட்டம் அங்கு இல்லை. உலக வரைபடத்தில் ஒரு முக்கியமான இடத்தில நிற்கிறோம் என்ற எண்ணம் உள்ளே நுழையும் வரையில் ஏற்பட வில்லை. முதலில் வலமிருந்து பார்க்கலாம் என்று திட்டம். குறிப்பாக எங்களில் யாரும் வலதுசாரியே கிடையாது. மொத்தம் முப்பத்தி நாலு குகைகள். இதில் பன்னிரண்டு புத்த குகைகள், பதினேழு இந்துக் குகைகள், ஐந்து சமணக் குகைகள்.



முதலில் புத்த குகைகளைக் காணச் செல்லலாம் என்று கிளம்பினோம். ஒவ்வொரு குகையின் வாசலிலும் குகையின் எண்ணை வெள்ளை பெயிண்டில் எழுதி இருந்தார்கள். முதல் குகை வலது ஓரத்தில் இருந்தது. முதலில் நீர் தொட்டியைப் பார்த்தோம். உள்ளே இருந்த எட்டு அறைகளைப் பார்க்கும் பொழுது எவற்றையோ சேமித்து வைக்கும் அறைகளைப் போல் இருந்தன. அவற்றின் குளுமையும் சாந்தமும் குடைவரைக் கோவில்கள், சமணப் படுகைகளில் மட்டுமே உணரக் கூடியது.



இரண்டாவது குகையில் பன்னிரண்டு தூண்கள் புத்தர் சிலைகளுடன் மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது குகையின் நுழைவாயிலிலேயே பத்மபாணி பெரிதாகக் காட்சி தருகிறார். அதுவும் தவிர, மைத்ரேயனைச் (எதிர்கால புத்தன் ) சுமந்து சிம்மாசனத்தில் காட்சி தருகிறார். மூன்றாம் நான்காம் குகைகளும், இரண்டாம் குகையின் வடிவிலேயே உள்ளன, ஆனாலும் கொஞ்சம் சேதம் அதிகம். இங்குதான் வசந்தகுமார் சொன்னார், பயலுகளுக்கு கல் அமையவில்லையே; தமிழகத்தைப் போல கல் அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று. ஆம், கொஞ்சம் கருங்கல்லும் மாக்கல்லும் கூடியது போன்ற கற்சிலைகள் உடைய ஆரம்பித்து விட்டன. இதில் அரசியல் சதி ஏதும் இல்லை.அபூர்வமாக முஸ்லிம் படைகளின் கைங்கர்யம் ஏதுமில்லை. எல்லோராவின் சிலைகளில் வண்ணப் பூச்சு இருந்திருந்ததற்கான அடையாளங்களும் தென்பட்டன. அதிலும், அதிகமாக வெள்ளை, நீலம், சிவப்பு வண்ணங்கள். உதிர ஆராம்பித்து பல நூற்றாண்டுகள் ஆகியிருக்கலாம்.



காலத்தால் எந்தக் குகை முன்னது என்பதில் சில சர்ச்சைகள் இருந்தாலும் பௌத்தக் குகைகளில் ஆறாம் எண் குகை தான் முதலாவது என்று அறியப்படுகிறது. கால வரிசைப்படி அடுக்கப்பட்டிருக்கிறது என்பதில் அறிஞர்களிடையே சர்ச்சை உள்ளது. ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து எட்டாம் நூற்றாண்டு வரை பௌத்தக் குகைகள் குடையப் பட்டிருக்கின்றன. பத்து விஹாரங்களை அதாவது தங்கிப் படிக்கும் அறைகளை, படிப்பதற்கும், தியானம் செய்வதற்கும், உண்ணவும் உறங்கவும் அமைத்திருந்தார்கள். இதில் உள்ள புத்தர் தாமரை மலர்களுடன் காட்சி தருகிறார். புத்தர் பாதம் என்பதே பரவசமான சொற்றொடராக மாறிய உணர்வு ஏற்பட்டது. மராட்டியர்கள் சிலர் கோவில் வழிபாடு போல புத்தரின் சிலையை வணங்கினர். அந்தக் குகை எதிரொலியில் புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி கேட்டுக் கொண்டிருப்பது போல காலம் தாண்டிய மனப் பிரமை வந்து போனது. பத்தாம் எண் குகை தான் பௌத்தக் குகைக் கோவில்களிலேயே மிகவும் பிரமாண்டமானது. அங்கிருந்த யாரோ என்னிடம் சேப்பல் என்ற கிறிஸ்தவ தேவாலயத்தின் வார்த்தையை உபயோகித்தார்கள்.புவியரசன் வஜ்ரபாணி, பத்மபாணி என்பதைப் பற்றி தகவலறிவோடு சிலாகித்துக் கொண்டிருந்தார்.



தம்மம் என்ற சொல் எதிரொலிக்கும் என்று எதிர் பார்ப்பு கூட எழுந்தது. பத்தாம் எண் குகையை விஸ்வகர்மா குகை என்று அழைக்கிறார்கள். அப்படியே புத்தரின் தலைக்கு பின்னே போதி மரத்தை வடித்திருந்தார்கள். கல்லிலே மர வேலைப்பாடு போல வரி வரியாக வளைவுகள் செய்திருந்தார்கள். வளைத்து நிறுத்திய உத்திரங்கள், மரச்சட்டங்கள் போல பாறைகளில் வடிவமைத்துள்ளார்கள். அரங்கு போல மேல் மாடம் அமைத்து இருந்தார்கள். அங்கிருந்து கீழ் உள்ளவற்றைப் பார்ப்பதும் ஒருவிதமான அனுபவம். இசை அரங்கம் என்று அழைத்தார்கள். ஆனால் இசையை பௌத்தம் போஷித்ததா என்ற சந்தேகத்துடன் வெளியே வந்தோம். பதினோராவது குகை இரண்டு தளங்கள் கொண்டது. தோ தள் என்று அழைக்கிறார்கள். பன்னிரெண்டாவது குகையை தீன் தள் அதாவது மூன்று தளங்கள் உள்ள குகை என்று சொல்கிறார்கள். சுவர்களில் ஐந்து, ஏழு போதிசத்வர்களின் உருவங்களை செதுக்கியிருந்தார்கள்.



குகைகள் உள்ளே அமர்ந்தும் படுத்தும் நகர்ந்தும் ஒவ்வொரு குகையாக பயணித்தோம்.வசந்தகுமாரிடம் சொன்னேன், இந்த குகைகளைக் குடைந்து சிலை செய்வதற்கு முன்பு புத்தரிடம் சென்று அந்தக் கலைஞன் என்ன கேட்டிருப்பான்? அதற்கு புத்தர் என்ன சொல்லியிருக்கக் கூடும் என்று ஒரு காலத் தொடர்புகளற்ற கற்பனையை எண்ணிப் பார்த்தால் ஒன்று சொல்லலாம் என்றேன். ஆம் தர்மம் எவ்வளவு பெரிது என்று அந்தக் கலைஞன் கேட்டிருக்கக் கூடும். அதற்கு புத்தர் நீ எவ்வளவு செயல் செய்கிறாயோ அவ்வளவு பெரிது என்று சொல்லியிருக்கலாம். அதன் விளைவு தான் இந்தக் குகைக் கலை. கலைஞனின் தர்மம் அவன் ஆயுளை விடப் பெரிதாக காலத்தை வென்று அங்கேயே நின்று கொண்டிருப்பதைத்தான் புத்தர் தம் சொல்லில் தர்மம் என்று சொல்லியிருக்கக் கூடும் என்றேன். நண்பர்கள் உற்சாகமாக ஆமோதித்தனர். செல்வ புவியரசனோ வைதீக எதிர்ப்பாளி, சமூகப் புரட்சியாளன் என்ற புத்தரின் அம்சம்தான் தன்னைக் கவர்ந்துள்ளதாகச் சொன்னார். வேணுகோபாலோ இங்கும் அங்கும் சென்று ஒளியைக் குகைக்குள் எவ்வாறு செலுத்தி காட்சியாக்க யூகித்துள்ளான் கலைஞன் என்று வியந்து கொண்டிருந்தார். அழகேசன் தன்னுடைய காமிராவில் குகைச் சிலைகளை மட்டும் கணக்கிடாமல், அதனூடாக மக்களின் நகர்வையும் சேர்த்துப் படம் எடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கு மனிதர்களின் பங்கு இல்லாமல் தூய இடமாகவோ பொருளாகவோ காண்பிப்பதில் நம்பிக்கை இல்லை போல.



பாறைகளை களிமண்ணைப் போல வெட்டியும் வளைத்தும் செய்திருக்கும் விளையாட்டு ஒருபுறம் பிரமிப்பைத் தந்தது என்றால், இன்னொரு புறம் புத்தன் என்ற புரட்சியாளனின் ஆன்ம ஞானம் காலங்களினூடாக எப்படியெல்லாம் மதம் கலைகள் இலக்கியம் என்று மனித முயல்வில் விரித்துக் கொண்டே போகிறது என்று மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. பசிக்கக் கூடாது என்று மனதில் நினைத்துக் கொண்டேன். தொடர்ந்து ஒவ்வொரு பௌத்த குகையிலும், மாடத்தில் ஏறியும் குறுகலான பாறைப் பாதைகளில் நுழைந்தும் வெளியே வந்து கொண்டிருந்தோம். ஒவ்வொரு முறையும் மேலும் மேலும் என்று சவால் விடும் வண்ணம் குகை பிரம்மாண்டமாக வந்து கொண்டிருந்தது. சில குகைகளில் வௌவால் பறந்ததும் அவற்றின் எச்ச வீச்சமும் எங்களுக்கு எந்த சோர்வையும் தரவில்லை. நீர் தேக்கி வைக்கப்பட்டிருந்த பாறைத் தொட்டிகளும் நீர் நிழலின் குளுமையான உணர்வே போதும் பருகத் தேவையில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. நிச்சயமாக இப்படிப்பட்ட பள்ளியறைகளில் கல்வி கற்றிருந்தால் யாரும் இந்த அளவுக்குக் கல்வியைக் கசப்பானதாக உணர்ந்திருக்க மாட்டார்கள். தர்மம் என்ற பேரியக்கத்தை காலத்தால் அளக்கும் உணர்வு நிறைவாக இருந்தது. பௌத்தக் குகைகள் பொதுவாக வகுப்பறைகள் அல்லது சங்கம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியதற்குக் காரணம், புத்தர் என்ற மகா குருவின் சிலைகள்தான் என்று தோன்றுகிறது. நியாயம் சரியாகவே வழி நடத்துகிறது என்று எண்ணிக் கொண்டேன். செயல்கள் வழியாகவே கலைஞன் எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபித்து இருந்தான். ஐந்து நூற்றாண்டுகள் தொடர்ச்சியான செயல்பாட்டில் இவ்வளவு பெரிய கலைப் பாரம்பரியம் உருவாகியுள்ளது என்று அறிய முடிகிறது. அவன் என்ன உண்டான், என்ன சம்பளம் பெற்றுக் கொண்டான், அவனை யார் ஆதரித்தார், நல்லவர்களா, கெட்டவர்களா என்பதெல்லாம் பொருள் இழந்து ஒரு பெருநிகழ்வை நிகழ்த்தி சென்றிருக்கும் கலைஞன்தான் எத்தனை மகத்தான செயல்களை கனவு கண்டிருப்பான். எத்தனை நூற்றாண்டுகளை கற்பனை செய்திருப்பான். இல்லை அவன் மரணமின்மையை மட்டுமே நம்பி வாழ்ந்திருப்பான்.



எங்கே தொடங்கி எங்கே முடியும் என்று வேணுகோபால் பாடிக் கொண்டிருந்தார். ஒளி வரும் திசையைப் பற்றிய கணிப்புகள், ஒலியைக் கட்டுப்படுத்தும் தந்திரங்கள் என்று பலவற்றிலும் மூளையும் ஆன்மாவும் சரிவிகிதத்தில் கலந்து விளையாடியிருக்கிறது. அவற்றுடன் முழு உடல் பலமும் இசைந்திருக்க வேண்டும். பனை மரத்தை வேரோடு பிடுங்க முடியுமா என்று அந்தக் கலைஞனிடம் கேட்டால் முடியும் என்று செயலால் நிரூபித்திருப்பான்.







கி பி அறுநூறிலிருந்து எண்ணூறு வரை குடையப்பட்ட சைவ வைணவக் குகைகளுக்குச் செல்வதற்கு தயாரானோம். பதிமூன்றாம் எண் குகை எங்களைக் கவராததற்குக் காரணம் பெரும்பாலும் வெற்று கட்டிடங்கள் போல் அரங்கமும் ஆங்காங்கே சிலைகளும் இருந்தது தான் என்று நினைக்கிறேன். இது தவிர அடுத்து என்ன இருக்கப் போகிறது என்று கொஞ்சம் மந்தமாக இருந்து விட்டோம். பதினாலாம் குகையில் என்ன இருக்கிறது என்று ஆரம்பித்த போது தான் விஷயம் இனிமேல்தான் துவங்குகிறது என்று தெரிந்து கொண்டோம். கங்கை யமுனையின் பெண் உருவச் சிலைகள் நுழைவாயிலில் வரவேற்கும் விதமாக இருந்தன. உள்ளே சப்த கன்னிகளின் உருவங்களும் அவர்களின் மடிகளில் தவழும் மழலைகளும் உயிரோட்டம் என்றால் என்ன என்பதை காட்ட ஆரம்பித்தன. வளமான முலைகளும் நலமிக்க குழந்தைகளும் வரலாற்றின் மறுபக்கம் என்று தோன்றியது. பதினைந்தாவது குகைத் தாழ்தளம் வெறும் தளமாக இருந்தாலும் மேல் அடுக்கில் உள்ள தசாவதாரச் சிலைகள் மிகப் பிரமாண்டமாக இருந்தன. இந்தக் குகைகள் பெரும்பாலும் சிவனுக்கு என்றாலும், பதினைந்தாவது குகை மட்டும் முழுவதுமாக விஷ்ணுவுக்கு என்று தனியாக இருக்கிறது. இந்தக் குகை முடிக்கப்படாத பௌத்த குகைகளில் இருந்து ஆரம்பித்திருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். இதில் நடராஜரின் பெரிய நாட்டியச் சிலையும் உண்டு.



பதினாறாவது குகை என்பது குகையே அல்ல. மலையைக் குடைந்து ஒரு கோவில் வளாகம் அமைத்திருக்கிறார்கள். கைலாசநாதர் ஆலயம் என்றழைக்கப்படும் இந்தக் கோவில் உலக அதிசயம் என்றுதான் சொல்வேண்டும். இது போன்ற ஒரு கற்பனையை எவ்வாறு தொடங்கியிருக்கக் கூடும் என்று கூட யோசிக்க முடியவில்லை. ராஸ்திரகூட மன்னன் கிருஷ்ணன் 756-773 இல் துவங்கியிருக்கலாம் என்று சொல்கிறார்கள். 250,000 டன் பாறையை குடைந்தெடுத்து நூறு வருட உழைப்பைச் செலுத்தியுள்ளார்கள். இடது புற முதல் தளத்தில் அதிகக் கூட்டம் வந்து சென்றது. பாறை கொஞ்சம் வழுக்கலாக இருந்ததால் கீழே விழுந்தேன். அழகேசன் கிழவிகளை விரட்டி விரட்டி படம் எடுத்துக் கொண்டிருந்தார். பெரும்பாலும் ஆந்திரத்தில் இருந்து மக்கள் வந்திருந்தார்கள். இது தவிர, சீரடி சென்று திரும்பும் கூட்டமும் ஒரு மோது மோதிச் செல்கின்றனர். கோவிலன் பின் புற மலை உச்சியில் ஏறி நின்று சில இளைஞர்கள் எட்டிப் பார்த்தார்கள். அந்த உயரம் அச்சம் தருவதாகவும் ஆபத்தானதாகவும் பட்டது. இஸ்லாமியர்கள் சிலர் இயல்பாக உள்ளே சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். தௌலதாபாத் அவுரங்கபாத் இஸ்லாமிய நகரங்கள் என்பதே காரணம். வெள்ளைப் பூச்சு எல்லாச் சிலைகளிலும் உதிர்ந்து விட்டன. ஆனாலும் கற்களில் உள்ள விவரணையே முழுமையாக இருந்தது. இது ஒன்றே உச்சம் என்று சொல்லலாம். வளாகத்தின் தென் பகுதியில் நிறைய சேதாரம். யானைகள் தும்பிக்கை இழைந்து நிற்கும் காட்சி கொஞ்சம் வலிக்கத் தான் செய்கிறது.



இருபத்தி ஒன்றாம் எண் குகை தான் கி பி ஐநூறின் இறுதி பகுதில் செய்யப்பட்டிருக்கலாம் என்று கணக்கிடுகிறார்கள். நதிப் பெண் தெய்வங்களும் மிதுன உருவங்களும் பொறிக்கப்பட்ட வாயில்களும் உள்ள இந்தக் குகை கொஞ்சம் பழமையாகத் தான் தோன்றியது.



குகை இருபத்தி ஆறும் இருபத்தி ஏழும் அடைக்கப் பட்டு விட்டன. இருபத்தி எட்டு, இருபத்தி ஒன்பதாம் குகையில் தான் இதற்கு வழி அமைத்திருந்தார்கள். அங்கு செல்வது ஆபத்தானது என்று சொன்னார்கள். பாறைகளில் பெரிய தேனீக் கூடுகள் கரும்பந்து போல இருந்தன. ஆனால் என்ன, குகை இருபத்தி ஒன்பது வந்த பின்பு சிவனாதிக்கம் என்பதைக் கண்டு கொண்டோம். சிவ பார்வதி விளையாட்டு, சூரர் வதம், காளை அடக்குதல் என்று முழுவதும் தென்னிந்தியாவின் சிற்பப் பாணிகளே இருந்தன. ஒரு விசேசத்தை வசந்தகுமார் சொன்னார். எலும்புக்கூடு உடலுடன் வயோதிகத் தலையுடன் காதில் சவுடித் தோடு அணிந்திருந்த ஒரு பெண்ணைப் பார்த்துச் சொன்னார், இது காரைக்கால் அம்மையார் என்று. உறைந்து விட்டோம். ஆம், கலாரசிகரும் தமிழ் எழுத்தாளருமான கி.அ. சச்சிதானந்தம் இதை முதன் முதலில் கண்டு சொன்னதாகவும் இப்பொழுதும் எல்லோராவின் கலை விமர்சகர்களுக்கு இது தெரியவில்லை என்றும் சொன்னார். காரைக்கால் அம்மையாரைப் பார்த்த இன்பம் மேலும் மேலும் என்று ஆவலைத் தூண்டியது. மாலை வெயில் சிலைகளின் மார்புகளில் பட்டு தெறித்துக் கொண்டிருந்தது.



பின்பு சமணக் குகைகளுக்குச் சென்றோம். இந்திரசபை மற்றும் மகாவீரரின் சிலைகள் அற்புதமாக இருந்தன. இந்தக் குகைகள் சிறிதாக இருந்தாலும் சிலைகளில் உள்ள தெளிவு மற்றும் ஒளியூட்டம் விசேசம்.



திரும்பி வந்து என் மனைவியிடம் புகைப் படங்களைக் காட்டிய போது சொன்னாள், இந்தியாவில் இஸ்லாமியர் வருகைக்குப் பின்பு முக்காடு போடும் வழக்கம் வந்து இந்தியப் பெண்களின் அழகு குறைந்து விட்டது என்று. அதைவிட, இப்பொழுது வந்திருக்கும் மேற்கு மோகம் என்பதில் ஆண் தன்மையுடையவர்களாக செயற்கையாக பெண்ணை மாறுவது பற்றி மிகவும் வருத்தப் பட்டாள்.



வகைகள்

அரசியல் கலைச் சொற்கள் கானியல் கிளிவாதில் சமச்சீர் கல்வி சமூகவியல் சிறுகதை சுற்றுச்சூழல் சொற் பிறப்பியல் தமிழக வேளாளர்களின் வரலாறு தமிழறிஞர் வரிசை தலையங்கம் திரையாளுமைகள் நகுதற் பொருட்றன்று பசுமைப் புரட்சி பயணம் மனநிழல் முகப்பு மொழியியல் மொழியும் முன் வணிகம் Uncategorized

எழுத்தாளர்கள்

அ.கா. பெருமாள்அபராஜிதன்அழகேச பாண்டியன்ஆசிரியர்இராசேந்திர சோழன்இராம கிஇளங்கோ கல்லானைஇளவேனில்எம்.கோபாலகிருஷ்ணன்எஸ்.ஆனந்த்எஸ்.இராமச்சந்திரன்கரு.ஆறுமுகத் தமிழன்கே.ஜெயராம்செல்வ புவியரசன்ஜெயமோகன்பாதசாரிபாமயன்மகுடேசுவரன்.© 2011 தமிழினி

Log in . 60 queries. 0.221 seconds.