மாயா |
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் பல காலமாக பூட்டி வைக்கப்பட்டிருந்த நிலவரையிலிருந்து குவியும் பொக்கிஷங்களின் மதிப்பு, ஸ்பெக்ட்ரம் ஊழலில் நாடு அடைந்ததாக கணிக்கப்படும் நஷ்டத்திற்கு இணையான தொகையாக இருக்கும் போல் தெரிகிறது. இந்த இணைய இதழுக்கான கட்டுரை எழுதப்படும் சமயத்திலேயே அதன் மதிப்பு ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டி வளர்ந்துகொண்டிருந்தது. வைரங்கள், தங்க நகைகள், தங்க நாணயங்களின் மேலோட்டமான இந்த மதிப்பைவிட அவற்றின் நிஜமான மதிப்பு இரு மடங்கு இருக்கும் என கணிக்கப்படுகிறது.
அந்தக் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டவை அனைத்தும் கோவிலின் சொத்து என்பதால் அதை எதன் பொருட்டும் கைவைக்கக்கூடாது; அவை கடவுள் பத்மநாப சுவாமிக்குச் சொந்தமானவை என்று பக்திமிகுதியில் சொல்பவர்களின் குரலில் தெரியும் உறுதியைப் பார்க்கும் போது இது ஒரு பிரச்சனைக்குரிய தலைப்பு என்பதை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. திருப்பதி ஏழுமலையானைவிட திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி பணக்காரராகிவிட்டார் என்று எழுதும் பத்திரிகைகள் இத்தகைய மேலோட்டமான பார்வைக்கும் கடும் சர்ச்சைகளுக்கும் தூபம் போடுகின்றன.மன்னராட்சிக் காலத்தில் கோவில்கள், குறிப்பாக தென்னிந்திய கோவில்கள், வெறும் ஆன்மீக மையமாக இருந்ததில்லை என்பதை ஏராளமான ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள். அது செல்வத்தின், அதிகாரத்தின் மையமாகவும் இருந்திருக்கிறது. மன்னராட்சிக் காலத்தில் மக்களை கசக்கிப் பிழிந்து வாங்கப்பட்ட வரிப் பணத்தால் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட கோவில்கள் அரசாங்கத்தின் கஜானாவாகவும் இருந்திருக்கின்றன. தற்போதைய குஜராத்தில் உள்ள சோம்நாத் கோவிலை கஜினி முகமது கொள்ளையடித்தது செல்வத்தை களவாடுவதற்காக மட்டுமல்ல என்ற பார்வை உள்ளது. அன்றைய இந்திய மன்னர்கள் மீண்டும் வலுப் பெற விடாமல் நிலைகுலையச் செய்வதும் கஜினி முகமதுவின் நோக்கம் என்று கூறப்படுகிறது. தங்க நாணயங்களே முக்கியமான பண்ட மாற்றுப் பொருளாக இருந்த காலக் கட்ட்த்தில் ஒரு கோவிலைக் கொள்ளையடிப்பது என்பது இன்றைய ரிசர்வ் வங்கியை வழித்துத் துடைத்து அள்ளிச் செல்வதற்குச் சமம்.
இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு தமிழக பகுதிகளை ஒரு காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானம் கட்டுப்படுத்தியுள்ளது. பத்மநாபசுவாமி கோவிலிலிருந்து கிடைக்கும் சொத்துக்களில் நமது மூதாதைய தமிழர்களின் வரிப் பணமும் அடங்கியிருக்கலாம். "ஆண்களின் தாடி, மீசைக்கும், பெண்களின் மார்பக வளர்ச்சிக்கும்" அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானம் வரி வசூலித்தது என்று அகிலத் திரட்டு நூலில் (அய்யா வைகுண்டர்) குறிப்பிடப்படுகிறது. " "அடிப்படை உரிமைகள், சொந்த நிலங்கள், உணர்வுகள் எல்லாமே பறிக்கப்பட்ட இவர்களுக்கு (இன்றைய குமரி மாவட்ட பிற்படுத்தப்பட்ட தமிழர்கள்) கொடுக்கப்பட்ட மிகக் குறைந்த கூலியும் ‘வரி’ என்ற பெயரில் அடக்குமுறையை பிரயோகப்படுத்தி பிடுங்கப்பட்டது" என்று திருவிதாங்கூர் ஆட்சி நிர்வாகம் பற்றி குறிப்பிடப்படுகிறது.
ஒன்றைக் கொடுத்துவிட்டு அதற்கான "பரிசாக மதப் பற்றாளர்கள் பாவ மன்னிப்பை (கடவுளிடம்) கோருகிறார்கள். தங்களின் தாராள உள்ளத்தை அதிலேயே வீணடித்துவிடுகிறார்கள்" என்று மத நம்பிக்கையாளர்கள் பற்றி 15ஆம் நூற்றாண்டில் குருநானக் முன்வைத்த வாதம் 21ஆம் நூறாண்டிலும் மாறாமல் தொடர்வது இந்த தேசம் சமூக-அரசியல் மறுமலர்ச்சிப் பாதையில் நத்தை வேகத்திலேயே முன்னேறுகிறது என்பதைக் காட்டுகிறது.
மதம் மனிதர்களை மதம் பிடிக்கச் செய்வது என்பதால் கேரள அரசு சட்டப்படி, நியாயப்படி தனக்கு உரிய சொத்தின் மீது கைவைக்கத் தயங்குகிறது. ஆனால் அரசின் கைகளில் இந்த சொத்துக்கள் விரைவாக சென்று சேராவிட்டால் நம் சமூகத்திற்குள்ளேயே இருக்கும் கஜினி முகமதுகள் காலப் போக்கில் இந்த பொதுச் சொத்துக்களை தங்களின் தனிச் சொத்துக்களாக்கிவிடுவார்கள்.