சனி, 20 ஆகஸ்ட், 2011

Prabanchan- Agavan.

கல்வி செத்து புனைவு தோன்றும் கவி வெளி






சங்க இலக்கியம் என்று இன்று அறியப்படும் பிரதிகள், பாட்டும் தொகையுமான பதினெட்டுத் தொகுப்புகளின் கவிதைகள் எழுதப்பட்ட காலம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் முடிவுறுகிறதாகப் பெரும்பான்மை ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அதாவது சுமார் ஐநூறு ஆண்டுகள் அவகாசத்தில் சங்க இலக்கியக் கவிதைகள்/பாட்டுகள் எழுதப்பட்டிருக்கின்றன.



கமில் ஸ்வலபில், சங்க இலக்கியக் காலத்தை இப்படியாக வரையறை செய்திருக்கிறார். ÔÔகி.மு.150 அளவில் ஆதிப் பாணர்கள் பாடல்கள். இவை பெரும்பாலும் கிடைக்கவில்லைÕÕ என்கிறவர் கி.பி. 350-400 கால அளவில் பாணர் மரபு மறைவு என்று கருத்துரைக்கிறார். இந்தக் காலக் கணக்கில் எந்தக் கருத்து வேறுபாடும் எழவில்லை. சுமார் முன்னூறு ஆணடு கால மரபு மறைந்து, புலமை மரபு எனப்படும் புலவர் அல்லது கிழார் மரபு அல்லது விவசாயம் சார்ந்த ÔÔமேலோர்ÕÕ மரபு உருவாகிறது.

சங்க இலக்கியப் புலமை தோற்றிய கவிதைகளைப் படிக்க நேர்கிற தொடக்க நிலை வாசகரும் கூட அதன் ஆச்சரியம் தரும் நுட்பங்களிலும், மனதின் அடி ஆழத்தைத் துழாவும் கவிப்பயணத்திலும் கவனம் குவிக்காமல் இருக்க முடியாது என்றால், பாணர் மரபு மறைந்துவந்த காலகட்டத்தில் உருவாகி வளர்ந்த புலமை மரபு உடனடியாக இத்தகைய செழுமையான விளைச்சலைத் தரமுடியாது. பெரிதும் வாய்மொழி மரபினவாகிய பாண் மரபுக் கவிதைகள் இன்னும் நீண்ட காலம் வழக்கத்தில் இருந்திருக்க வேண்டும். ஒரு பெரும் மரபாக நிலைத்திருந்த பாணர் மரபு, சிறந்திருந்த நிலைக்கும் பசியே உடம்பாகத் தேய்ந்த நிலைக்கும் சில நூறு ஆண்டுகளாவது இருக்க வேண்டும். அதோடு, பாணர் மரபின் சத்தான பகுதிகளைச் செரித்துக்கொண்டே, புலமை மரபு தோன்றியிருக்க வேண்டும்

பாணர்கள் காலத்துப் பாடல்கள் என்று சங்க இலக்கியப் பெரும்பரப்பில் எதையும் திட்டவட்டமாக எடுத்துச்சொல்ல முடியவில்லை. அனுமானங்கள் துணைகொண்டே மறைந்துபோன இந்த வரலாற்றைக் கட்டமைக்க வேண்டி இருக்கிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் பல சரடுகள், அனுமானம் கொண்டே நிறுவ வேண்டியவையாக இருக்கின்றன.



ஆய்வாளர் அம்மன்கிளி முருகதாஸ், புலவர்களைக் கூறும் இடங்கள்தோறும் பாணர்களையும் சேர்த்தே உரைக்கிறார். சங்கப் பாடல்களில் பண்பாட்டுக்கும் புலவர் பாட்டுக்கும் வித்தியாசம் தெரியாத நிலையில் இல்லாது சொல்வதே நியாயம். மட்டுமின்றி, பாணர் குழாத்தையும் தொகுத்து ஆராய்ந்த சிறப்பும் அம்மன் கிளிக்கு உண்டு.

பாடுநர் குழாம்களாக அவர் (சங்கக் கவிதையாக்கம், மரபும் மாற்றமும்) எட்டே பேரை அடையாளம் காண்கிறார். 1. பாணர், 2. புலவர். 3. கோடியர் 4. வயிரியர் 5. கண்ணுளர் 6. கிளைஞர். 7. பொருநர் 8. அகவுனர். கூத்துக் குழுவினரும் இதில் உண்டு. கிளைஞரும் பொரு நரும் பாணர்குழுக்களுடன் சேர்த்துப் பேசப்பட, அகவுனர் மந்திரச் சடங்குகளுடன் இணைந்தவராகக் காணப்படுகின்றனர் என்கிறார் அவர்.



அகவுனர் என்கிற மந்திரச் சடங்கோடு சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில் குறைவாகவே காணப்படுகிறது. சமூக வளர்ச்சிப் போக்கில் இந்த அகவுனர் என்கிற மந்திரச் சடங்காளர்கள் முக்கியத்துவம் இழப்பது இயல்பேயாகும். மலை சார்ந்த இடங்களிலும் மற்றும் காடு, சமதளம், ஆற்றுப்படுகை, கடல்சார் மண்வெளி என்பது பழந்தமிழர் வாழ்வாதாரங்கள். காடும், அதன் செறிவும், இருண்மையும், தீ முதலான அபாயங்களுமாக வாழ்ந்த மக்கள், அதன் உருவமாகவே காளியை, காடுகிழானைப் படைத்து வணங்கினார்கள். ஐவகை நிலத்தும் வாழ்ந்த மானுடக் குழுக்கள், அந்தந்த நிலப்பகுதிக்கும் தாங்கள் வாழ்வாதாரங்களுக்கும் ஏற்பத் தெய்வங்களைப் படைத்துக் கொள்கிறார்கள் எனில், அதற்கான மந்திரமும் சடங்குகளும் தேவைப்படுகிறது. மனித மனதின்ஆதார சக்திகளுள் ஒன்று அச்சம்: காற்றும், தீயும், பெருமழையும், இடியும், மின்னலும், புரிபடா நோயும் அவர்களை அலைக்கழிக்கும்போது அவர்களுக்குத் தம்மைக் காக்கும் புறச்சக்தி தேவைப்படுகிறது. அந்தச் சக்திக்குத்தாம் உண்ணும் உணவையும் தாம் அரிதில் பெற்ற பொருளையும் தந்து சாந்தி செய்து கொள்வதில் இந்த மந்திரச் சடங்குகள் தோன்றி இருக்கின்றன. இவைகளை முன்னிறுத்திய சடங்காளர்களே அகவுனர்கள்.



அகவன் மகளை அழைத்து தன் தலைவன் குன்றத்தைப் பாடச் சொல்லிக் கேட்டுக் கொள்கிறாள் ஒரு தலைவி.



அகவன் மகளே! அகவன் மகளே!

மனவுக் கோப்பன்ன நல்நெடுங் கூந்தல்

அகவன் மகளே! பாடுக பாட்டே;

இன்னும், பாடுக, பாட்டே- அவர்

நல்நெடுங்குன்றம் பாடிய பாட்டே.

(குறுந்தொகை :23)



தெய்வாம்சத்தை அல்லது முருகாம்சத்தைத் தம் உடலில் ஏற்றிக் குறி சொல்வது அகவர்கள் தொழில். அத்தொழிலில் ஈடுபட்ட அகவன் மகள், தன் தலைவனின் குன்றைப் பாடினால் தலைவனுக்கும் தலைவன் குன்றுக்கும் நன்மைகள் விளையும் என்பது தலைவியின் எண்ணமாகலாம்.

பாடுநர் குழாம்களின் ஊடாக அகவுனர்களைச் சேர்த்த காரணம், மந்திரச் சொற்களை உச்சரிக்கும் பழக்கத்தின் ஊடாகச் சொற்களுக்கு வந்து சேரும் ஒருவித இசைச் சேர்க்கையைக் கணக்கில் கொண்டு, பின்னர் தழைத்து வளர்ந்த இசையைக் கைக்கொண்ட பாணர்களுக்கு முன்தலைமுறையினர் அவர்கள் என்கிற காரணமாய் இருக்கலாம்.



மக்கள் அடர்த்தி கூடக்கூட, நெருப்பை உருவாக்கிச் சமைக்கும் அறிவும், ஆயுதங்களைச் செய்துகொள்ளும் அனுபவம் வாய்த்த பிறகும், மந்திரங்களின் இடம் மற்றும் அதன் வாழ்க்கை வியாபகம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டிருக்கிறது என்பதையே சங்க இலக்கியங்கள் அகவுனர்கள் பற்றி அதிகம் பேசாமைக்குக் காரணம். என்றாலும், பெண்களின் காதல் நோயைப் புரிந்துகொள்ளாத மூத்த தலைமுறையினரான செவிலித் தாய்கள் மற்றும் தாய்கள் மந்திரம் ஆடிகளை அழைத்துக் கொண்டிருந்தார்கள். தெய்வம் ஏறி இசைத்தலும், பிறகு ஆடலும் பிறகு தோன்றிய இசை நடனங்களுக்கு ஆதாரம் என்ற வகையில் பாணர்கள் அவர்களுக்குக் கடன்பட்டுள்ளார்கள்.



பாணர்களோடு வயிர் என்னும் இசைக்கருவியை இசைத்தவர்களும், கோடு என்னும் வாத்தியத்தை இசைத்தவர்களும், சேர்ந்தே பார்க்கப்பட வேண்டியவர்கள். ஆக, பாணர்கள் என்று பொதுவாகப் பேசும்போது ஆடற்குழுவினரும், இசைக்குழுவினரும் இணைந்தே இருக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். இதன் பொருள், இவர்கள் கூட்டம் கூட்டமாக இசைக் குழுவோடு பயணம் செய்து தொழில் செய்கிற இயல்புடையவர்கள் என்று ஆகிறது.



பாணர்கள் தங்கள் கவிதை அல்லது பாடல் இயற்றும் ஆற்றலை எங்ஙனம் கொண்டார்கள், அவர்களின் கல்வி எத்தகையது, எழுத்தறிவு எத்தன்மையது, புரவலர்களிடம் அவர்கள் தங்கள் பாடலை/கவிதையை எழுதிப் பாடினார்களா என்றால் அந்த எழுதப்பட்ட கவிதைகள் எங்கு போயின என்பது போன்ற பல கேள்விகளை ஆய்வாளர்கள் எழுப்பி விடை காண முயல்கிறார்கள்.



வரலாற்றுக்கு முந்தைய அல்லது வரலாறு அமைந்த காலத்து விஷயங்கள் குறிப்பாக இலக்கியம் குறித்த கருதுகோள்களுக்கு நாட்டார் மரபே பதில் உரைக்கும் ஒரே சாத்தியமாக இருக்கிறது. நாட்டுப்புற மக்கள், அக்காலத்தில் கல்வி அறிவும், எழுத்தறிவும் பெற்றவர்களாக இருக்கச் சாத்தியம் இல்லை. இன்றுவரை, பல கூத்துக் கலைஞர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்களே. ஆனால் கேள்வி மூலம் இராமாயண, பாரதக் கதைகளின் கிடங்குகளாக அவர்கள் இருக்கிறார்கள். தங்களிடம் வந்து சேர்ந்த கதைகளை அவர்கள் தங்களின் புனைவுகளைச் சேர்த்துப் புதுக் கதைகளைப் புனைகிறார்கள். கற்பனைக்கும் புனைவுக்கும் கல்வி அறிவு தேவையில்லை. இன்னும் கேட்டால் பெரும் புலமைகள், கவித்துவம் இழந்த சக்கைகளாகவே இருக்கின்றன என்பது கண்கூடு.



கோவலன் கண்ணகி கூத்தும், இளங் கோவின் சிலம்பும் வேறுவேறானவை. நான் பார்த்த தென் ஆற்காடு கூத்து ஒன்றில், கண்ணகி கோவலனிடம், Ôஎங்கடா வந்தே? உன் கூத்தியாளுக்கு நகை வாங்கிப்போக வந்தியா? இந்தா, எடுத்துக்கிட்டு ஓடுÕ என்று கம்மலைக் கழற்றிக் கோவலனிடம் எறிந்தாள். அமைதியாகக் குனிந்து அந்தக் கம்மல்களை எடுத்துக்கொண்டு கோவலன் வெளியேறுவான். அவன் முதுகுப் பக்கம், பலமாகக் காறித்துப்புவாள் கண்ணகி. மக்கள் கரகோஷம் செய்வார்கள்.

ஒரு பாரதக் கூத்தில், பாஞ்சாலியின் துகிலை உரியப் போகும் துச்சாதனன் அதற்கும் முன்பாக, ஒரு தட்டில் கற்பூரம் ஏற்றி, பாஞ்சாலிக்கு முன்பு வந்து, Ôஅம்மாதாயே, தப்பு பண்ணப் போறேன். கதைப்படி நான் செய்தாகணுமே, என்ன பண்றது? மன்னிச்சுக்கோ. என்மேல் கோபம் வேணாம். என் குலத்தை வாழ வையிÕ என்று சொல்லியபடி கற்பூர ஆரத்தி காட்டி, வணங்கிச் சேவித்துக்கொண்டு அதன் பிறகே வஸ்திர அபகரணத்தை ஆரம்பிப்பார். அதுவரை உறக்கத்தில் இருந்த பார்வையாளர்கள் எழுந்து கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள். இது ஒரு சமூகத்தின் கூட்டு நிகழ்வு. அறம் என்பதன் கலை வெளிப்பாடு இது.



ஒரு காதலன்-காதலி உரையாடல் இப்படி நிகழ்கிறது

ஒரு மரம் ஏறி

ஒரு மரம் பூசி

ஒரு மரம் பிடித்து

ஒரு மரம் வீசிப்

போகிறவன்-

“பெண்ணே உன் வீடு எங்கே?”

“பாலுக்கும் பானைக்கும் நடுவிலே

ஊசிக்கும் நூலுக்கும் அருகிலே.”

“நான் எப்போ வரட்டும்.”

“இந்த ராஜா செத்து

அந்த ராஜா பட்டம் கட்டிக் கொண்டு

மரத்தோடு மரம் சேர்ந்த

பிறகு வந்து சேர்."



ஒரு காதலன் காதலியைத் தனிமையில் சந்திக்க அலாவுகிறான். அவன் எப்படி இருக்கிறானாம். ஒரு மரத்தில் செய்த பாதக் குறடில் ஏறி நிற்கிறான். தோல் செருப்பு மாதிரி கால் கட்டைகள என்று சொல்லப்பட்ட குறடுகள் அந்தக் காலத்தில் இருந்தன. ஒரு மரம் பூசி என்றால் சந்தனம் பூசி இருக்கிறான் என்று பொருள்.



ஒரு மரமாகிய பனை மரத்தால் ஆனபனை ஓலை விசிறியை வீசிக்கொண்டு, ஒரு மரமாகிய கைத்தடி வைத்துக் கொண்டு இருப்பவன், உன் வீடு எங்கே என்று கேட்கிறான். அதற்கு அவள் "பால் விற்கும் இடையர் வீட்டுக்கும், பானை செய்யும் குயவர் வீட்டுக்கும் நடுவில் இருக்கிறது என் வீடு. ஊசி செய்யும் கொல்லர் வீட்டுக்கும், நூல் நெசவு செய்யும் நெசவாளர் வீட்டுக்கும் அருகில் என் வீடு” என்கிறாள். இப்போது அவன் Ôநான் எப்போது வரட்டும்" என்கிறான். மிக உண்மையானதும் நேர்மையானதுமான பதிலை இப்போது அவள் சொல்கிறாள். “இந்த ராஜா- சூரியன் அஸ்தமனமாகி, அந்த ராஜாவாகிய சந்திரன் பட்டம் கட்டிக்கொண்டு வரும் இரவு வேளையில் மரக்கதவு, மரத்தால் ஆன நிலைப்படியோடு (மரத்தோடு மரம்) சேர்த்து மூடப்பட்டிருக்கும். நேரமாக வந்து சேர்" என்கிறாள் அந்தக் காதலி. கதவு மூடப்பட்டிருக்கும், தாழிடப்பட்டிருக்காது என்பது குறிப்புப் பொருள். மூடப்படுவது மக்களுக்காக. திறக்கப்படுவது உனக்காக என்பது மறைபொருள்.



நல்லவேளையாக நாட்டார் பள்ளி, கல்லூரிகளுக்குப் போனதில்லை. ஆகவேதான் இந்த வகைக் கற்பனைகள் தோன்றுகின்றன. இந்த நாட்டார் மரபு போன்றது தான் பாணர் மரபும். இந்தச் சொல் முறைகளைப் பாணர்கள் தங்கள் வாழ்வனுபவத்திலிருந்தே பெறுகிறார்கள். இந்தக் கற்பனையுடன் தாங்களே உருவாக்கிக் கொண்ட இசையோடும், உடல் அசைவுகளோடும் புரவலர்களிடம் சென்று அரங் கேற்றுகிறார்கள். இந்த மக்களைக் கல்வியும் எழுத்தும் அற்ற புலவர் மரபு 'கல்லா மாந்தர்' என்று கேலி, இழிவு செய்கிறது. உரிய இடத்தில் அந்தப் பாடல்களையும் காண்போம்.



சங்க காலத்தும் சங்க காலத்து ஒட்டியும் பரவலான எழுத்தறிவு சமூகத்தின் சகல தரப்பார்களிடமும் இருந்ததாக அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆதாரமாக, கிடைத்திருக்கும் பானை ஓடுகளின் மேல் பொறித்திருக்கும் உரிமையாளர்கள் பெயர்களையும் அவர்கள் ஆதாரம் காட்டுகிறார்கள். அப்பெயர்கள், மக்களே எழுதியது என்பதற்கு ஆதாரம் இல்லை. சரவணா ஸ்டோர்சின் வாசலில் அமர்ந்து தொழிலாளி ஒருவர் பாத்திரங்களில் உரிமையாளர் பெயர் பொறிப்பது இன்று நடப்பது போல அன்றும் நடந்திருக்கலாம். தவிரவும் கல்வி அறிவும், எழுத்தறிவும் அன்றைய வாழ்க்கை முறைக்குத் தேவைப்படவில்லை. சங்க மனிதர்கள் குமாஸ்தா வேலைக்குச் செல்லவில்லை. விவசாயம், அது சார்ந்த வேலைகள், இரும்பு மற்றும் மண்பானை வேலைகள், தேவைப்பட்டால் போருக்குச் செல்வது போன்ற தொழில்களுக்கு மேலாகச் சமூகத்தில் வேறு ஒன்றும் இருக்கவில்லை. காதல் செய்யவும், சண்டை செய்யவும், நாற்று நடவும், பானை வனையவும், கல்லூரியில் யாரும் சொல்லித் தந்ததாக வரலாறு இல்லை.



மலைமுகடுகள், பனி வெண்மேகம் வந்து தங்கிப் போகும் குன்றின் பக்கச் சாரல்கள், பூக்கள், யானைகள், தேன் அடைகள், கருத்த காடுகள், முல்லைப்பூக்கள், தேர்கள், குதிரைகள், எருமைகள், ஆறுகள் என்று வாழ்ந்த தலைமுறை பாணர்களுடையது. ஆறுகள், நதியின் ஓடை, நாற்றின் அசைவுகள், மழை, பாலை வெம்மை ஆகியவைகளில் இருந்து கற்றுக் கொண்டவர்களாகவே பாணர்கள் இருந்தார்கள். அவர்கள் ஓலையில் அல்லது செம்பில் எழுதி வைத்துப் பாட்டு படித்தவர்கள் அல்லர். அந்தச் சமயத்து முன் நிற்கும் மனிதர்கள், சூழல்களே அவர்களுக்கு உந்துதல் தந்தன. மனதுக்குள் அவர்களுக்கு வார்த்தைகள் இருந்தன. அனுபவங்களை இசையாகப் பொருத்திக் கொள்ளும் கற்பனையும் இருந்தது. அவர்கள் பண் இசைத்துப் பாடினார்கள்.



பாணர்கள் பாடல்கள் ஒன்றும் கிடைக்கப் பெறவில்லை. இவை பாணர்களுடையதாக இருக்கலாம் என்று சில பாடல்களைச் சங்கப் பாடல்களில் அறிஞர்கள் இனம் கண்டிருக்கிறார்கள்.

பாணர் பாடல்களாகிய இசைப் பாடல்கள், எதிரில் இருப்போரை விளித்துச் சொல்லும் தன்மை பெற்றவை என்கிற தொ.பரமசிவம், சங்க இலக்கியத்தில் சில பாடல்களை அடையாளம் கண்டு இவை பாணர் பாடல்களாக இருக்கலாம் என்று கருத்துரைக்கிறார். பெயரையும், பனையையும் மூன்று நான்கு முறை திரும்பத் திரும்பச் சொல்லி இசைக்கும் பாட்டு முறையைக் கொண்டு அவர் அடையாளம் கண்ட பாணர் பாடல்கள் இவை. அகவன் மகளே என்கிற பாடலை முதலில் கண்டோம்.



பார்ப்பன மகனே பார்ப்பன மகனே

செம்பூ முருக்கின் நல்நார் களைந்து

தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துப்

படிவ உண்டிப் பார்ப்பன மகனே...

எழுதாக் கற்பின் நின் சொலுள்ளும்

பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்

மருந்தும் உண்டோ? மயலோ இதுவே.

குறுந்தொகை: 156



பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே. புரசமரத்துக் கோலினைக் கையில் பிடித்து, கரகம் ஏந்தி விரத உணவு உண்ணும் பார்ப்பன மகனே. நீ படித்த வேதத்துக்குள் காதலித்துப் பிரிந்தாரைப் பிறகு சேர்த்து வைக்கும் மருந்து போன்ற சொற்கள் ஏதேனும் உண்டோ, சொல். இன்னொரு பாடலையும் பார்க்கலாம்.



மெல்லிய லோயே! மெல்லிய லோயே

நல் நாண் நீத்த பழிதீர் மாமை

வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பின்

சொல்ல கிற்றாம் மெல்லிய லோயே

சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே

நாள் இடைப் படாஅ நளிநீர் நீத்தத்து

இடிகரைப் பெருமரம் போல,

தீது இல் நிலைமை முயங்குகம் பலவே

(குறுந்தொகை : 368)



மெல்லிய இயல்பை உடைய என் தோழியே. ஊர் எல்லாம் என் காதலைப் பற்றி தூற்றுகிறது. என் மேனி அழகு (மாமை) நீங்கிவிட்டது. இருந்தாலும் என்ன, காதல் அனுபவம் இல்லாத சின்னப் பையன்களும், காதல் மறந்துபோன கிழவர்களும் கொண்ட ஊருக்குச் சொல்கிறேன். குளக்கரையில் செழிப்புடன் நிற்கும் மரம் போல, நான் என் காதலனுடன் சேர்ந்து வாழும் நாள் வெகு தூரத்தில் இல்லை.



இதேபோன்று ஐங்குறுநூற்றுப் பாடல்களான 'வாழி ஆதன் வாழி அவினி’ என்று தொடங்கும் பாடல்கள், பாணர்த்தன்மை பெற்றன என்று கொள்வதில் தவறில்லை. சங்க இலக்கியக் கவிதை மரபில் இருந்து விலகிச் சென்றிருக்கும் குறுந்தொகை, ஐங்குறு நூறு மற்றும் கலித்தொகை பரிபாடல் போன்றவை அதிகமும் இசைத் தன்மையும், நாடகத் தன்மையும் பெற்று இருக்கின்றமை சிந்திக்கத்தக்கதாகும்.



சங்க இலக்கியத்தில் பாணர்ப் படைப்புகள் இவை போல்வன என்று அடையாளம் காணக் கூடும். பெரும் பாலும் எழுதி வைத்துப்படிக்கப்படாத இந்தப் பாடல்கள், சில வேளைகளில் பாணர்களாலும் பல வேளைகளில் புரவலர்கள் பக்கம் இருந்தோராலும் எழுதி வைக்கப்பட்டிருக்கக்கூடும். சங்க இலக்கியத் தொகுப்புக் காலத்து அரசியல் அவைகளைப் புறக் கணித்திருக்கும்.

கி.மு. 3-ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 2- ஆம் நூற்றாண்டு வரையிலும் சுமார் 500 ஆண்டுகள் நீடித்த சங்க இலக்கியப் புலவர் கவிதைகள் இயற்றப்பட்ட காலத்துக்கும்முன், சில நூறு ஆண்டுகளில் பாணர் கவிதைகள் இயற்றப்பட்டிருக்கலாம். சங்க இலக்கியம், எழுதப்பட்ட காலத்திலிருந்து அவை தொகுக்கப்பட்ட காலம் சில நூறு ஆண்டுகள் தள்ளிப் போய் இருக்கிறது என்கிறார்கள் அறிஞர்கள்.



மன்னர்களே இவைகளைத் தொகுக்கச் சொல்லி இருக்கிறார்கள். புலவர்கள் தொகுத்துள்ளார்கள். தொகுப்பின்போது செயல்பட்ட அரசியலில் பாணர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். புலமை மரபு ஏற்பட்ட பின், பாணர்களைக் Ô கல்லா வாய்ப்பாணர்Õ என்று புறக்கணித்தார்கள். இப்புறக்கணிப்புக்கு முக்கிய காரணம், பார்ப்பன மேலாண்மை, பூணூல் அணியாத பிராமணர்களாகிய Ôகிழார்Õ அல்லது விவசாயத் தலைவர்கள் உருவாக்கம் ஆகும்.



நாட்டுப்பாடல்கள் உதவி : திருவள்ளுவன்

ஓவியங்கள் : செல்வம்