செவ்வாய், 5 ஜூலை, 2011

Kal maram..!

My Photoகல்லாகிப் போன மரங்கள்
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா

ஜோசப் இருதயராஜ் என் பள்ளியின் ஓவிய ஆசிரியர். பள்ளியோ அல்லது அவரது இல்ல உறுப்பினர்களோ அவரை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை. அதைப்பற்றிய கவலையோ, அக்கறையோ இல்லாத ஒரு அபூர்வ மனிதர். தன்பால் அளப்பறிய நம்பிக்கையும், பிறர் பால் சிறிதளவேனும் குரோதமும் இல்லாத பிறவி.மிகச்சிறந்த தைல ஓவியர். திரைச்சீலைகளை வரைவதில் வல்லவர். அவரின் அந்தரங்க சிஷ்யனான எனக்கு,அவரின் அபரிமிதமான திறமைகளைக் கண்டு சற்று பொறாமை கூட உண்டு. பள்ளி மதிக்காவிட்டாலும் ,என் தலைமை ஆசிரியர் ஃபாதர் மத்தாய் அவர்கள் மிகுந்த அன்பு பாராட்டினார். அவரது அறையை அழகுபடுத்தும் உரிமை இருதயராஜுக்கு மட்டுமே உண்டு. இவரது இல்லத்தில் மேல் மாடி அறை ,இவருக்கென ஒதுக்கப்பட்டது. அங்கு நானும், அவரும் ஓவியங்களுமாக இருப்போம். நிறைய தத்துவார்த்த கருத்துக்களைக் கூறுவார். நல்ல கலைஞனுக்கு பார்க்கும் இடமெல்லாம் பிறிதொரு பிம்பம் தெரிய வேண்டும் ,அது கல், மண், மரம் என எதுவாகவும் இருக்கட்டும் என்பார்.அந்த வழியிலேயே பல்வேறு ரூபங்கள், நிறங்கள், தன்மைகள் கொண்ட பாறைகள் அவர் அறையை அலங்கரித்தன. வெட்டிப்போட்ட மரத்துண்டங்களும் ,குச்சிகளும் அவர் கைபட்டு சற்று மாறுதலுக்குப் பின் பல்வேறு உருவங்களை சுமப்பதை நான் கண்டு வியந்திருக்கிறேன். பாறைகளைக் குடைந்து அதில் கள்ளிகள் வளர்ப்பார். பல்வேறு நிற மண்களைக் குடுவைகளில் நிரப்பி அழகு பார்ப்பார்.இவ்வாறான குணம், அவரது குடும்பத்தினரை வெறுப்பில் ஆழ்த்தியது.அவர்களின் கோப இலக்காக நான் மாறிப்போனேன். இயற்கையை, இயற்கையாய் நேசிப்பதே ஒரு கலைஞனின் உன்னத நிலை என்ற அவரது கருத்துக்களெல்லாம் அப்போது விளங்கவில்லை. என் மனதுள்ளும், பல்வேறு வடிவ பாறைத்துண்டங்கள் மேல் காதல் மெல்லமெல்ல வரத்துவங்கியது. அதை ஊக்குவிப்பதில் பெருமுனைப்பு காட்டினார். இன்றும் குறையாத எண்ணமாய் உள்ளது. ஒரு மாலைப்பொழுதில், ஓவியம் வரைந்த நிலையிலேயே, இறந்து போனார். என்னைத் தவிர அவ்விடத்தில் யாருமே இல்லை. மாபெரும் கலைஞன், இவ்வுலகத்தால் அவமதிக்கப்பட்டும், அலைக்கழிக்கப்பட்டும் இறந்து போனார். காலடிச்சுவடுகள் அழுந்தப்பதிந்த என் இதயம். இன்றும் பாறைகளைக் கவனிக்கும் போதெல்லாம் அவரை நினைக்கத் தவறுவதில்லை.
பெட்ரி ஃபைடு என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மரங்கள் கல்லாகிப் போதல், அபூர்வ இயற்கை நிகழ்வின் ஆதாரமாகும். படிமங்களின் சிறப்புவகை கல்மரங்கள் என்கின்றனர் அகழ்வாராய்ச்சி மற்றும் புவியியல் தொடர்பான ஆய்வறிஞர்கள். சிலிகேட், குவார்ட்ஸ் போன்ற தாதுப்பொருட்கள், இயற்கையிலேயே மரத்திலிருக்கும் தனிமங்களை அகற்றும்போது நடக்கும் வினையே மரங்கள் கல்லாகிப் போதல். இதை அறிவியல் ,பர்மினரலைசேஷன் என்கிறது. இவ்வகையான நிகழ்வுகள் பூமிக்கடியில் மிக நீண்ட நாட்களாகப் புதையுண்டிருக்கும் மரங்களிலேயே இருக்கும். நீரினாலோ அல்லது பிற இயற்கை நகர்த்தலினாலோ இவ்வகையான புதையுறுதல் நடைபெறுகிறது. அப்போது ஏற்படும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மரங்களை மக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபடும். இது வேதிவினையின் முதல்படி. இரண்டாவதாக ,தாதுப்பொருட்கள் அதிகம் கலந்த நீரானது, மழையின் மூலம் பாய்ச்சப்படும்போது, மரத்தில் உள்ள செல்கள் மற்றும் அதிலுள்ள பிற தனிமங்கள் படிப்படியாக அகன்று மரத்தைக் கல்லாக்கும் வினைக்குத் தள்ளுகிறது. குறைந்தது 100 வருடங்கள், வேதிவினைக்கு உட்பட்ட மரங்களே கல்லாகின்றன. குறிப்பாக மிக முக்கியமாக அவ்வாறான நிகழ்வுகளுக்கு மாங்கனீசு, இரும்பு, மற்றும் தாமிரம் கலந்த சகதி நீர் தேவைப்படும். இந்த தாது நீரே மரப்படிமங்களுக்கு வண்ணத்தை அளிக்கிறது. சுத்தமான குவார்ட்ஸ் கலக்கும்போது மஞ்சள், சிவப்பு வண்ணத்தையும், கார்பன் கலக்கும்போது கறுப்பு நிறமும், கோபால் பச்சை, நீல நிறத்தையும், இரும்பு ஆக்ஸைடு ,சிவப்பு, பழுத்த மஞ்சள் நிறத்தையும் தரும். இந்தியாவில்,தமிழ்நாட்டில் திருவக்கரை கிராமத்தில் மரப்படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவையே மிகச்சிறந்த படிமங்களாக கருதப்படுகிறது. இங்கு 247 ஏக்கர் பரப்பளவில் படிமங்கள் சிதறிக்கிடக்கின்றன. ஆனால் மிகச்சிறிய பரப்பளவே மக்கள் பார்வைக்கு உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் ,சென்னை --திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்குக் கிழக்கே அமைந்துள்ளது சாத்தனூர் கிராமம். நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் இந்தியப் புவியியல் துறையால் பாதுகாக்கப்படும் கல் மரப்பூங்கா நம்மை ஆச்சரியமுற வைக்கிறது. இதற்கான அழைப்பு போர்டுகள், சாலையின் இடவலங்களில் அமையப்பெற்றுள்ளது. 12 கோடி ஆண்டுகளுக்கு முன் சாத்தனூருக்கு மேற்கே அன்று கடல் மட்டம் 8 முதல் 10 கி.மீ. தொலைவில்தான் இருந்ததாம். இதைப் புவியியல், கிரிடேஷஸ் காலம் என அழைக்கிறது. அக்காலத்தில், கடல் பிராணிகள் அதிகம் வாழ்ந்ததாகவும் ,இறந்த அவைகளின் உடல்கள் கடல் அலையாலும், பிற ஆறுகளில் ஏற்பட்ட வௌ்ளப் பெருக்கால் ,மணல் ,களிமண் இவற்றுடன் அடித்துவரப்பட்டு , கடலோரக் கிராமங்கள், கரையோர மரங்கள் அதனுடன் மூடப்பட்டதாகவும் கருதப்படுகிறது. அந்த வகையில் இன்று மிக நீண்ட உயரம் கொண்ட இக்கல்மரம், 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி பகுதி பாறையிடுக்குகளில் சிக்கி அமிழ்ந்து போயிருக்கலாம்.
ஆங்கியோஸ்பிரம்ஸ் என்றழைக்கப்படும் பூக்கள் பூக்காத தாவரயினம், பூக்கள் பூக்காத காலத்தில் தோன்றிய கோனிபரஸ் வகைச் செடிகளிலிருந்து பரிணாம மாற்றம் அடைந்தது. இங்கு காணப்படும் நீண்ட மரம் இவ்வாறான கோனிபரஸ் வகையைச் சேர்ந்தது என்கிறது தகவல்பலகை. இம்மரம் 10 மீ. நீளம் கொண்டது. இங்கு கட்டப்பட்டுள்ள அறையில் பல சிதிலங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. 1940ல் இக்கல்மரங்களின் இருப்பை இந்திய புவியியல் துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.எஸ். கிருஷ்ணன் கண்டுபிடித்தார். இன்றும் இக்கல்மரங்கள் போதுமான பாதுகாப்பின்றி இருக்கிறது. திறந்த வெளியில், மேற்கூரையின்றி உள்ளதால், மழை வெயில், போன்றவைகளால் பாதிக்கப்பட்டு சிதைவுண்டு அழிந்து போகும் அபாயம் உள்ளது. தவிர மூங்கில், காட்டு கருவேலம், வேம்பு போன்ற மரங்கள் அவ்வளாகத்தில் நிறைந்து காணப்படுகிறது. இவைகளின் வேர் ஊடுருவலாலும் இவை பிளவுண்டு சிதைவுறலாம். அங்கே வசிக்கும் மக்கள் மத்தியில், இதன் பெருமை குறித்தோ அல்லது அது தொடர்பான விழிப்புணர்வோ காணப்படவில்லை.
உலகில் சில இடங்களில் கடல் மட்டம் திடீரென உயர்வதால் ,அருகிலுள்ள வனங்கள் மூழ்கடிக்கப்பட்ட ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இங்கிலாந்தில் இவ்வாறு மூழ்கடிக்கப்பட்டு படிமமாகிப் போன கல்வனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவிலும் இதுபோன்ற வனத்தைக் கண்டறிந்துள்ளனர்.மரப்படிமங்கள் குறித்த ஆய்வு பேலே ஆக்ஸிலாலஜி என பெயரிடப்பட்டு அழைக்கப்படுகிறது. இது மரம் தவிர்த்த உயிரினப் படிமங்கள் ,பிற படிமங்கள் குறித்த ஆய்வுக்கும் நம்மை இட்டுச் செல்லும். எல்லா மரங்களும், இவ்வாறு முங்கிப்போவதால் கல்லாகிப் போய்விடும் என்ற கருத்தியலுக்கு வருவது தவறு. அவ்வாறு நிகழாமல், அவை மண்ணோடு மக்கி கரைந்து போவதும் உண்டு. அதனால் இவ்வாறு கல்லாகிப் போன மரங்களை பெட்ரி ஃபைடு என்ற ஆங்கில வார்த்தையின் துணையோடு அழைக்கிறார்கள். இது கிரேக்க மொழியில் இருந்து தருவிக்கப்பட்ட வார்த்தை. கல் என்ற அர்த்தம் தொனிக்கும் இவ்வார்த்தை கல்லாகிப் போன மரங்கள் குறித்த ஆய்வில் அதிக உபயோகத்திலுள்ளது.
அமெரிக்கா போன்ற நாடுகள் செயற்கையாகத் தயாரிக்கபட்ட கல் மரங்களை விற்பனை செய்து வருகின்றன. அழகு, ஆர்வம், அந்தஸ்து கருதி, பல டாலர் செலவழித்து இதை வாங்கிச் செல்கின்றனர். சிறிய பைன் மரத்துண்டுகளை அமிலத்தில் 2 நாட்கள் மூழ்க வைக்கிறார்கள். பின் சிலிகன் திரவத்தில் மீண்டும் 2 நாட்கள் மூழ்க வைத்து ஆர்கன் வாயு சூழ்ந்த அறையில் 1400 சென்டிகிரேட் வெப்பத்தில் பதப்படுத்துகின்றனர். இந்நிகழ்வு 2 மணி நேரம் நடைபெறும் இதற்குப்பிறகு அம்மரத்துண்டு சிலிகன் கார்பைடாக உருமாற்றம் கொள்கிறது. அதை டங்கஸ்டன் கலவையில் 2 நாட்கள் ஊற வைக்க செயற்கை கல்மரத்துண்டங்கள் உருவாகின்றன.
சோனோரெட் என்ற ஐரோப்பிய புவியியல் ஆய்வாளரே 1781ல் முதன் முதலாக மரங்கள் கல்லாகிப்போனதைக் கண்டறிந்து உலகிற்கு அறிவித்தார். சிறந்த பொக்கிஷம் இது. மக்கள் எப்படி அறியப்போகிறார்களோ தெரியவில்லை என தனது டைரிக்குறிப்பில் எழுதியும் வைத்தார். அமெரிக்க, ஐரோப்பியர்கள் இதன் சிறப்பு அறிந்து மிகச் சிறந்த முறையில் பாதுகாக்கிறார்கள். செயற்கை கல்மரங்களைக் கூட அவர்கள் அதிக கவனத்துடன் கண்ணாடிப் பேழையில் வைத்து அழகு பார்க்கிறார்கள். ஆனால் நாமோ, நமது தொன்மங்கள், பாரம்பரியம், குறித்த போதுமான விழிப்புணர்வும், அக்கறையுமின்றி இருப்பது வருத்தமுற வைக்கிறது.