புதன், 27 ஜூலை, 2011

Yuvaa.

அசோகர் கல்வெட்டு
My Photo

July 21, 2011



எங்கள் தெருவில் ஒரு பெந்தகொஸ்தே சர்ச் இருக்கிறது. அதற்குப் பக்கத்தில் ஓர் ஐயர் வீடு. ஐயர் கொஞ்சம் வயதானவர். அவர் வீட்டுத் தோட்டம் சரியாகப் பராமரிக்கப் படாமல் எப்போதும் புல்லும் பூண்டும் மண்டிக்கிடக்கும். இன்று காலை நான் அலுவலகத்துக்கு வரும்போது, அந்தத் தோட்டத்தை நடுத்தர வயதுடைய ஒருவர் கடப்பாரை, மண்வெட்டிகொண்டு, ஒழுங்குசெய்துகொண்டு இருந்ததைப் பார்த்தேன். கொஞ்சம் கூன் விழுந்த அந்த நடுத்தர வயது மனிதரை எங்கோ பார்த்த தாக நினைவு. பைக்கை சைடு ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, அவரைப் பார்த்து லேசாகப் புன்முறுவல் செய்தேன்.



யாரோ ஒருவர் சம்பந்தம் இல்லாமல் நின்று சிரிப்பதைப் பார்த்த அந்த நபர், 'இன்னா சார்... உங்க வூட்ல ஏதாச்சும் வேலை இருக்கா?'' என்று திக்கித் திக்கிப் பேசினார். குரலைக் கேட்டதுமே அடையாளம் கண்டுகொண்டேன். அது அமல்ராஜேதான்!



அமல்ராஜ் யார் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.







பரங்கிமலை ஒன்றியத் துவக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே உண்டு. ஐந்தாவதுக்குப் பிறகு, தந்தை பெரியார் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்தேன். பையன்களுக்கு 'ஏ’ செக்‌ஷன். பெண்களுக்கு 'பி’ செக்‌ஷன். 'ஏ’ செக்‌ஷனில் மட்டுமே 106 பேர். முதல் வரிசையில் நான் அமர்ந்து இருந்தேன். எனக்கு அருகில் கொஞ்சம் கூன் போட்ட ஒரு பையன் உட்கார்ந்து இருந்தான். அவனை அது வரை பார்த்தது இல்லை. அவன் மடிப்பாக்கம் பஞ்சாயத்துப் பள்ளியில் இருந்து வந்திருந்தான். பார்த்ததுமே தெரிந்துகொள்ளலாம், அவனுக்கு வயதுக்கு ஏற்ற போதுமான மூளை வளர்ச்சி கிடையாது என்பதை.



சீருடை என்கிற விஷயம் ஏற்படுத்தப்பட்டு இருப்பதே, மாணவர்களுக்குள் வேற்றுமை இருக்கக் கூடாது என்பதற்காகத்தான். ஆனால், அதில் கூட நுண்ணிய அளவில் வேறுபாடு இருப்பதை அரசுப் பள்ளிகளில் தெரிந்துகொள்ளலாம். ஏழை மாணவர்கள் காட்டன் சட்டை போட்டு இருப்பார்கள். கொஞ்சம் நடுத்தர வர்க்கத்துப் பையன்கள் டெரிகாட்டன் அணிந்து இருப்பார்கள். வசதியான வீட்டுப் பையன்கள் பாலியஸ்டர் அல்லது சைனா சில்க் அணிந்து இருப்பார்கள்.



அமல்ராஜ், சைனா சில்க் சட்டை அணிந்து இருந்தான். நான் வெள்ளை டெரிகாட்டன் சட்டையும் பிரவுன் நிற டவுசரும் அணிந்து இருந்தேன். ஆறாம் வகுப்பு படிக்கும்போதே, அவனுக்கு 16 வயது இருக்கும். வகுப்பில் பேன்ட் அணிந்து வந்தவன் அவன் மட்டும்தான். அவனுடைய அப்பா, அப்போது ஊரில் பெரிய ஆள். நிலம் நீச்சு, பரம்பரைச் சொத்து என்று கொஞ்சம் தாராளமாகவே இருந்தது. அவருக்கு இரண்டு மனைவிகள். மூத்த தாரத்தின் மூத்த மகன் நம்ம அமல்ராஜ்.



புதிய நோட்டையும் புத்தகங்களையும் முகர்ந்து பார்த்தபோது வந்த வாசனையும், முதல் நாள் வகுப்பு தந்த மகிழ்ச்சியும் இன்னமும் மனதில் ஓரமாக இருக்கிறது. சொர்ணாம்பிகை மிஸ்தான் கிளாஸ் டீச்சர். முதல் நாள் என்பதால், பாடம் எதுவும் எடுக்கவில்லை. டேபிளில் இருந்த நொச்சிக் குச்சிக்கும் வேலை இல்லை.





கதைக்கு இடையே சின்ன இடைச் செருகல்...





நொச்சி என்பது மரமாகவும் வளராமல், செடியாகவும் குறுகிப்போகாமல் வளரக்கூடிய ஒரு தாவரம். நொச்சிக் குச்சி வளைந்து கொடுக்கும் தன்மைகொண்ட, உறுதியான கொம்பு. எருமை மாடு ஓட்டு பவர்கள் நொச்சிக் கொம்பைப் பயன்படுத்து வதைக் கிராமங்களில் காணலாம். இந்தக் குச்சியைவைத்து நுங்கு சைக்கிள் தயாரித் தால், பலன் அமோகம். நொச்சியின் இலை நல்ல வாசனைகொண்டது. காய்ந்த நொச்சி இலைகளை நெருப்பில் எரித்தால் யாகங்களில் வருவதுபோல வெண்மையான புகை வரும். இந்தப் புகை, கொசுக்களையும் பூச்சிக்களையும் அழிக்கவல்லது.

அப்போது எல்லாம் வகுப்பறை டேபிளில் தினமும் ஒரு புதிய நொச்சிக் குச்சிதயாரித்து வைக்க வேண்டும். இதற்காக வாத்தியார் களின், டீச்சர்களின் அல்லக்கை மாணவர் யாராவது வகுப்புக்கு ஒருவர் இருப்பர். அந்த அல்லக்கை வேலையை எட்டாவது வரை நான் செய்து வந்தேன். எட்டா வதுக்குப் பிறகு, பொறுக்கிப் பசங்க பட்டியலில் நான் சேர்ந்துவிட்டதால், பத்மநாபனோ வேறு யாரோ டீச்சருக்கு அல்லக்கையாகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்கள். நொச்சிக் குச்சிக்கு டிமாண்ட் ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக, நுணா மரத்தின் கிளையை உடைத்து, பிரம்பு தயார் செய்துவைக்க வேண்டும். கறு நிற நுணாம்பழம் சுவையாக இருக்கும். ஆனால், வாசனை அவ்வளவு சிலாக்கியமாக இருக்காது!







ஓ.கே. கமிங் பேக் டு தி பாயின்ட்...





சொர்ணாம்பிகை டீச்சரின் வகுப்பு முடிந்ததுமே ஒல்லித் தமிழய்யா வந்தார். ஒல்லித் தமிழய்யா ரொம்ப ஜாலியான ஆள். டைமிங் கமென்ட்கள் அடிப்பதில் கில்லாடி. கோபம் வந்துவிட்டால் மட்டும், நொச்சிக் குச்சி பிய்ந்துபோகும் அளவுக்கு விளாசிவிடுவார். குச்சியே பிய்ந்துவிடும் என்றால், அது பிய்யக் காரணமான முதுகின் கதி என்னவென்று சொல்ல வேண்டியது இல்லை.



அன்று வகுப்புக்கு வந்த ஐயா எல்லோரையும் உயிரெழுத்து, மெய் எழுத்து எழுதச் சொன்னார். உயிர் எழுத்துக்களை வரிசையாக எழுதிவிட்டேன். மெய்யெழுத்து எழுதும்போது, மட்டும் கொஞ்சம் திணறிப்போனேன். எல்லார் நோட்டுக்களையும் வரிசையாக நடந்தவாறே கவனித்து வந்த ஐயா, அமல்ராஜின் நோட்டைப் பார்த்து உலகையே வெறுத்து விட்டார். அவன் எழுதியதில் ஒன்றுகூட சத்தியமாகத் தமிழில் இல்லை. அது எந்த மொழி என்று ஐயாவால்கூடக் கண்டு பிடிக்க இயலவில்லை.



''என்னய்யா இது? அசோகர் கல் வெட்டை அப்படியே பார்க்குறது மாதிரி இருக்கே?'' என்றார்.



அமல்ராஜ் அமைதி காத்தான். அவனுக்கு லேசாகத் திக்குவாய். வேகமாகப் பேச முடியாது.



''ஏன்டா, கேட்டுக்கிட்டு இருக்கேன். உன்னால பதில்கூடச் சொல்ல முடியாதா... வாய்ல என்ன கொழுக்கட்டையா?'' என்றவாறே நொச்சிக் குச்சியை எடுத்தார். பக்கத்தில் இருந்த பையன், ''ஐயா, அவனுக்குச் சரியாப் பேச வராது'' என்றான்.



''சரி... உன்னோட பேரை நோட்டுல எழுது!'' என்றார், ஐயா கண்டிப்பான குரலில்.



அமல்ராஜ் எழுதியது மீண்டும் அசோகர் கல்வெட்டு மாதிரியே இருந்தது. அமல்ராஜால் அவன் பெயரைக்கூட எழுத முடியவில்லை என்பதுதான் சோகம்.



''நீயெல்லாம் எப்படிடா ஆறாம் கிளாஸ் வந்தே?'' என்று கோபமாகக் கேட்டவாறே நொச்சிக் குச்சியால் அடித்து விளாசிவிட்டார் ஐயா. முதுகிலும் உள்ளங்கையிலும் ஏராளமான அடிகளைப் பொறுமையாக வாங்கிய அமல்ராஜ், ஒரு சின்ன எதிர்ப்புக்கூடத் தெரிவிக்கவில்லை. சிலை மாதிரி உணர்ச்சிகளைக் காட்டாமல் மௌனமாக வந்து அமர்ந்தான். அவனது கையைப் பிடித்துப் பார்த்தேன். சிவந்து போய் ரத்தம் கட்டியிருந்தது. அமல்ராஜைப் பார்க்க ரொம்பப் பாவமாக இருந்தது.



மறு நாள் காலையில் ஹெட்மாஸ்டர் ரூம் அல்லோலகல்லோலப்பட்டது. அமல்ராஜின் அப்பா அவரது உறவினர்களோடு வந்து, மகன் அடிபட்டதற்காக நீதி கேட்டுக்கொண்டு இருந்தார். அவனால் அ, ஆ என்றுகூட எழுத முடியவில்லை என்று சொன்ன தமிழய்யாவின் நியாயம் சுத்தமாக எடுபடவில்லை. ''அதைச் சொல்லிக் கொடுக்கத்தான் உங்ககிட்டே அனுப்புறேன்!'' என்று அமல் ராஜின் அப்பா அழும்பு செய்தார். ''ஆறாம் கிளாஸ்ல எப்படிங்க அ, ஆ, இ, ஈ கத்துக் கொடுக்க முடியும்?'' என்று ஐயாவின் கேள்வியை அவர்கள் தயவு தாட்சண்யம் பார்க்காமல் நிராகரித்தார் கள். கடைசியாக, தமிழய்யா நொந்துபோய் மன்னிப்பு கேட்டதாக நினைவு.



அன்று முதல் அமல்ராஜை எந்த வாத்தியாரும், டீச்சரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அவன் பாட்டுக்கு வகுப்புக்கு வருவான். கடைசி வரிசையில் மந்தமாக உட்காருவான். ஏதோ எழுதுவான். பரீட்சைகூட அசோகர் கல்வெட்டு மொழியில்தான் எழுதுவான். எப்போதுமே எல்லா பேப்பரிலுமே மார்க் 'ஜீரோ’தான். ஓரிரு டீச்சர்கள் பரிதாபப்பட்டு ஐந்தோ, பத்தோ ரிவிஷன் டெஸ்டில் தந்ததும் உண்டு.



மற்ற பையன்களைப்போல விளையாட்டிலும் அமல்ராஜுக்கு ஆர்வம் இல்லை. அவனுடைய சைனா சில்க் வெள்ளைச் சட்டையில் மட்டும் ஒருநாள்கூட நான் அழுக்கைக் கண்டது இல்லை. பாட்டா செருப்புதான் அணிவான். கையில் கோல்டு கலர் வாட்ச் கட்டி இருப்பான். கழுத்தில் தடிமனான செயின். விரல்களில் மோதிரம் என்று மிருதங்க வித்வான் கெட்-அப்பில் அசத்துவான்.



தமிழய்யா அவனது எழுத்தை 'அசோகர் கல்வெட்டு’ என்று விமர்சித்து இருந்ததால், அவனை மற்ற மாணவர்களும் 'அசோகர் கல்வெட்டு’ என்றே பட்டப் பெயர் வைத்து அழைத்தோம். அமல்ராஜ் என்று அட்டெண்டென்ஸில் அழைப்பதோடு சரி. தமிழய்யா அட்டெண்டன்ஸ் எடுத்தால் அமல்ராஜ் என்று சொல்ல வேண்டிய நேரத்தில்கூட 'அசோகர் கல்வெட்டு’ என்றுதான் குசும்பாகச் சொல்வார். அமல்ராஜால் உடனே 'உள்ளேன் ஐயா’ சொல்ல முடியாது. கையை மட்டும் தூக்கிக் காட்டுவான்.



ஆறாம் வகுப்பில் 105 பேர் தேர்ச்சி பெற்றார்கள். வெற்றி வாய்ப்பை இழந்த ஒரே மாணவன் அசோகர் கல்வெட்டு மட்டுமே. காரணம், சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.



நான் ஏழாம் வகுப்புக்குப் போன பின்பு, அசோகர் கல்வெட்டைப் பார்ப்பது குறைந்துபோனது. எப்போதாவது பார்த்தால் சினேகமாகச் சிரிப்பதோடு சரி. அவனுக்கு மூடு இருந்தால், பதிலுக்குச் சிரிப்பான். இல்லை என்றால், உர்ர் என்று போய்விடுவான்.



பள்ளிக் கட்டடம் கட்ட நிதி திரட்டிய போது அமல்ராஜின் அப்பா பெருத்த தொகை ஒன்றை அளித்தார் என்று கேள்விப்பட்டேன். வகுப்புகள் மாற மாற, அசோகர் கல்வெட்டையே சுத்தமாக மறந்துவிட்டோம். ஓரிரண்டு ஆண்டுகளில் பள்ளியைவிட்டு, அவன் நின்றுவிட்டான் என்று நினைக்கிறேன்.





ஃப்ளாஷ்பேக் ஓவர்





என்னோடு ஆறாம் வகுப்பு படித்த அதே அமல்ராஜ்தான் இன்று காலை ஐயர் வீட்டில் தோட்ட வேலை செய்துகொண்டு இருந்தவன். அழுக்கான லுங்கி அணிந்து இருந்தான். சட்டை இல்லை. வியர்வையில் உடல் நனைந்து இருந்தது. உழைப்பின் பலனால் ஆர்ம்ஸ் கொஞ்சம் வெயிட்டாக இருந்ததுபோலத் தெரிந்தா லும், கூன் போட்ட முதுகால் சுத்தமாக அவன் தோற்றத்துக்குக் கம்பீரம் இல்லை.



''நான்தான்டா குமாரு... உங்கூட ஆறாவது படிச்சேனே?''



அவனால் நினைவுபடுத்திப் பார்க்க இயலவில்லை. பொத்தாம் பொதுவாகச் சிரித்தான். அவனுக்கு வயது இப்போது 33 அல்லது 34 ஆக இருக்கலாம். ஆனால், 45 வயது மதிக்கத்தக்க தோற்றத்தில் இருக்கிறான்.



'ஞாபகமில்ல!''



'பரவாயில்லை அமல். நல்லா இருக்கியா?'



'ம்ம்ம்... நல்லாத்தான் இருக்கேன். கட்டட வேலை பார்க்குறேன். வேலை இல்லாத நாள்ல இதுமாதிரி தோட்ட வேலையும் செய்வேன்.'



முன்பைவிட இப்போது திக்கு கொஞ்சம் பரவாயில்லை. தொடர்ச்சியாகப் புரியும்படி பேசுகிறான்.

வேறு எதுவும் பேசாமல், ''வர்றேன்டா!'' என்று சொல்லிவிட்டு, விடைபெற்றேன். அவனுக்கு இப்போதாவது அவன் பெயரை எழுதத் தெரியுமா என்று கேட்க ஆவல். கேட்காமலேயே கிளம்பிவிட்டேன்.



அவன் அப்பா இருந்த இருப்புக்கு இவன் இந்த நிலைக்கு வந்திருக்க வேண்டி யதே இல்லை. விசாரித்துப் பார்த்தால் ஏதோ ஒரு கதை நிச்சயம் இருக்கும். அவன் தம்பி, தங்கைகள் எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டால், அந்தக் கதை யின் அவுட்லைன் கிடைத்துவிடும்.



அமல்ராஜ் மாதிரி பசங்களைப் பார்க் கும்போதும், அதே கனம்!இடுப்பிலும் கையிலும் குழந்தையோடு... கூடப் படித்த கவிதா மாதிரி பெண்களை எங்காவது ரேஷன் கடையிலோ, மருத்துவமனையிலோ காண நேர்ந்தால்... எனக்கு லேசாக மனசு கனக்கும்.



(நன்றி : ஆனந்த விகடன் 20.07.2011 இதழ்)

செவ்வாய், 26 ஜூலை, 2011

Raguvaran.

அருவி நீர் போல் வாழ்வின் கணங்கள் அத்தனை வேகமாக கடந்து போகிறது. விழும் ஒவ்வொரும் நீரும் புதிது.அருவிக் குளியலின் அனுபவத்தை என்னால் நிமிடத்துளிகளாக வர்ணிக்க இயலாது. மொத்த துளிகளையும் மணிநேரமாக தொகுத்து கூறவே இயலும்.






ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு நினைவு கூறப்படும் வாழ்வும் அங்கனமே உள்ளுமோ.





பதிவுகள் மட்டுமே வாழ்க்கையாகும் காலம் வரும். நினைவூஞ்சலாடி பின்னுக்குப் பதிவில் போய், முன்னுக்கு நிகழ்வில் போய், எங்கு நிறுத்த என்று அறியாமல் அரிக்கும் நரையின் கரை சேராதவர்களின் மரணம் இனிதே....









கவிதையும்,வாழ்வும் எவ்வளவு சிறியாக உள்ளதோ அவ்வளவு அழகாக இருக்கும். சான்றுகளுண்டு நிறைய...இருப்பினும் ஒப்புக்கொள்ளாது மனம்..எனக்கு அது வாய்க்கும்வரையில்...





வானவில் போல வந்து வண்ணங்களாகி நிறையும் மனிதர்களை,என் ஞாபகக் கூட்டிற்குள் பொத்திவைத்தல் என்பது தவிர்க்க இயலாத வழக்கமாகிவிட்டது எனக்கு.





ஆசானின் வார்த்தையைப் போல் சரியையும்,உண்மையையும் சொல்வதல்ல என் எழுத்து,நான் சரியென நம்புவதையும்,உண்மையென எனக்குப்படுவதையும் கூறுவதே.





அதே போல் எனக்குப் பிடித்தவைகளைப் பகிர்வதிலேயே எனக்கு மகிழ்ச்சி.





கண்களினால் சிரிப்பவர்களின் முகங்களை மறப்பதோ அல்லது அவர்களின் பிரியங்களைத் தவிர்ப்பதோ அத்தனை எளிதான காரியமல்ல..





அத்தகைய ஒரு மனிதர்தான் திரு.ரகுவரன். ”இது ஒரு மனிதனின் கதை” என்ற அவருடைய தூர்தர்ஷன் தொடர் முதல் சமீபத்தில் கடைசியாக அவர் நடித்த அல்லது நான் கடைசியாகப் பார்த்த “யாரடி நீ மோகினி” வரையில் நான் அவரைத் தொடர்ந்திருக்கிறேன்.









ஒரு கதாபாத்திரமாக வெளித்தெரியாமல், அந்த கதாபத்திரமாகவே தன்னை மாற்றிக்கொள்கிறவனே நல்ல நடிகன்.





அதுபோல எந்த கள்ள கபடமுமின்றி தொடங்கும் வாழ்க்கை காற்றின் திசைக்கேற்ப அலைகழிக்கப்படும் பாய்மர படகென சூழ்நிலை அலைகழிப்புகளால் மாற்றம் பெறும் வாழ்கைதான் “ இது ஒரு மனிதனின் கதை”.





அந்த தொடரில் அவருடைய குடிகார வேடம் புகைப்படகருவியை அவருடைய வீட்டில் ஒளித்துவைத்து படம் பிடித்தது போன்று இயல்பாகயிருந்தது.





அந்தத் தொடரிலிருந்துதான் நான் அவரின் அபிமானியானேன்.





சுமார் 13 பக்களவிலான வசனத்தை வெறும் ஒற்றை ஆங்கிலச் சொல்லாக(I KNOW-புரியாத புதிர்) மாற்றி, ஏற்ற இறக்கங்களோடு (modulation??) வெவ்வேறு முகபாவங்களோடு, உண்மையான உளவியல் கோளாறு உள்ளவனின் சிரிப்போடு அந்த பாத்திரத்தை நம் கண் படைத்துக்காட்டிய அந்த கலைஞனை அவ்வளவு சுலபமாக மறப்பதற்கியலுமா..





எந்த ஒரு சிறிய பாத்திரமெனினும் முதல் படத்தைப் போன்ற சிரத்தை அவருடைய தனிக்குணாம்சம்.





யாருடைய தழுவலையும் போலன்றி, தனக்கு வழங்கப்படும் எந்த ஒரு பாத்திரத்தையும் தன்னிலிருந்து மலரச்செய்யும் இவருடைய உழைப்பு வியப்பிற்குரிய ஒன்று.இன்று எல்லாராலும் அனிச்சைசெயல் போல் உச்சரிக்கப்படும் “ஹோம் ஒர்க்” என்ற சொல்லை இவர் மூலமே நான் முதலில கேட்டறிந்தேன்.சிவாஜியிடம் நான் கேட்ட சொல் கூட ஒத்திகையென்பதே.அது அவருடைய மரபு வழித் தொடர்ச்சி.





படப்பிடிப்பிற்குச் செல்வதற்கு முதல் நாளும்,படப்பிடிப்பின் அதிகாலை-யிலும் கடற்கரைக்குச் சென்று தன் மனவார்ப்பை ஒரு முறை பரிசோதித்துக்கொள்ளல் என்பது இவருடைய வழக்கம் என்று நேர்காணலில் ஒருமுறை குறிப்பிட்டார்....





தனக்கு முன் தடம்பதித்தவர்களை விட்டு விலகி மற்றாருடைய பாதிப்புமின்றி தனக்கென ஒரு தடம் வகுத்துக்கொள்ளல் அத்தனை எளிதான காரியமல்ல...உலகநாயகனிடத்தில் கூட பாலச்சந்தர்,நாகேஷ் மற்றும் நடிகர்திலகத்தின் சாயல் ஏதேனும் ஒரு மூலையில் வெளிப்படவே செய்கிறது என்பது என் தனிப்பட்ட கருத்து.





என் சிற்றறிவுக்கெட்டிய வரையில் இவருடைய நடிப்பில் நான் யாருடைய பாதிப்பையும் கண்ணுற்றதில்லை.





இவருடைய புகைபிடிக்கும் அல்லது மது அருந்தும் நளினம் பார்த்து இன்னும் அந்த பழக்கம் என்க்கு ஒட்டிக்கொள்ளாதது வியப்பே.செயல் தவறெனினும் செய்நேர்த்தி சில சம்யம் நம்மை நெக்குருக வைத்துவிடுகிறது.





பெரிய மற்றும் வித்தியாசமான ஒப்பனைகள்,பேச்சு வழக்கில் மாற்றம் ஏதுமின்றி வெறும் உடல்மொழியாலேயே தன்னுடைய கதாபாத்திரங்களை துலங்கச் செய்திடுவதில் அவருக்கு நிகர் அவரே.





புரியாத புதிர்,பூவிழி வாசலிலே,என் பொம்முக்குட்டியம்மாவுக்கு, அஞ்சலி, சம்சாரம் அது மின்சாரம், ஆஹா,கூட்டுப்புழுக்கள்,முதல்வன்,துள்ளித்திரிந்த காலம்,கன்னுக்குள் நிலவு,முதல் உதயம்,காதலும் கற்று மற முதலானவகள் என் ஞாபகவெளியில் இப்போதைக்குத் தெறிக்கும் சில படங்களாகும்.





பொதுவாகவே மம்முட்டியைப் போலவே தன்னுடைய ஆளுமையை கம்பீரமாகவே நிறுவிக்கொண்டவர்.





அவருடைய அந்தக் கம்பீரமான நடிப்பிற்காகவே பிடித்து சில,பிடிக்காமல் பல படங்கள் பார்த்திருக்கிறேன்.





“BROKEN AERROW" என்ற படத்தில் ஜான் டிரவோல்டா (JHON TRAVOLATA) ஒரு ஸ்டைலிஷ் ஆன வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். அவ்வளவு ஸ்டைலிஷ் ஆன நடிகர் தமிழில் யாரென்று யோசித்தால் என் கண்முன்னே உடனே நிழலாடுவது இவருடைய முகமே. அவ்வளவு அருமையான நடிகர்.





என்னை அதிகம் கவர்ந்தது அவருடைய அந்த உயரமும், அற்புமான அந்த சிரிப்பும்.வில்லத்தனத்திறக்கென்று ஒரு சிரிப்பும், வில்லங்கமில்லாதனத்-திற்கு என்று ஒரு சிரிப்பும் என நிறபேதங்களுடன் கூடியது அவ்ருடைய சிரிப்பு.





”என் சுவாசக் காற்றே” என்ற படத்தில் ரகுவரனுக்கும், பிரகாஷ் ராஜ்க்கு-மிடையேயான காட்சிகளின் சுவராஷ்யம் அத்தனை அலாதியானது. விழியில் நீர் வர யோசித்து யோசித்து நானும் என் நன்பனும் நகைத்த காட்சிகள் நிறைய உண்டு.





ஒரு கலைஞனாக மட்டுமல்லாமல் தனிப்பட்ட ஒரு சாதரன மனிதன் என்ற நிலையிலும் எனக்கவர் மிகுந்த விருப்பத்திற்கும், நேசத்திற்குரிய- வருமாகவே இருக்கிறார்.





அவருக்குள்ளும் ஒரு காதல் சோகமுண்டு. காதலைப் பற்றி அவருடைய சில வரிகள் என்னைக் கவர்ந்தது...அவை:





’மனசுக்குப் பிடிச்ச விஷயத்தை ஆரதிக்கிறதுக்குப் பேர்தான் லவ்.நம்மை மாதிரி பசங்களுக்குத் தேவையான ஆறுதல்,ஆதரவு,அன்பு எல்லாமே ஒரே ஒரு பொன்னுகிட்டே கிடைச்சடறது (அ) கிடைச்சதா நாம பீல் பன்றதுதான் லவ்.





இருபது வயசுப் பையன் இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தைப் பற்றி யோசிக்கிறதவிட இன்னிக்கு என்ன பூ பூக்குன்னுதான் பார்ப்பான். எனக்கப்போ இருபது வயசு.





அவளை நேர்ல பார்க்கும்போது எதுனா கிறுக்கிட்டு இருக்கப் பிடிக்கும்.ஆனா ஒரு நாள் பார்க்கலைனாக் கூட கிறுக்குப் பிடிக்கும்’





கடைசியா தன்னோட காதல் தோல்வியை பதிவு செய்யற விதம் :





” நான் ஒரு பறவையை நேசிச்சேன்.எனக்கு அது உயிர் மாதிரி.அதுக்காக அதை ஒரு கூண்டுக்குள்ள அடச்சுவச்சுப் பார்க்கிறதுல அதுக்கே சம்மதமில்லை.நான் அதை நேசிச்சேன்.எங்கோ வானத்துல அது சிறகடிச்சுப் பறக்குதுங்கற நினைப்பே போதும்.பறவயை நேசிக்கிறவன் அதுதான் செய்வான்.”





இதற்கப்புறம்தான் இவருடைய திரைப்பட பிரவேசமே நடந்தது.





ரோகினியை காதல் மனைவியாக கைப்பிடித்தார்.அன்பின் நிறைவாய் ஒரு மகன். ரகுவரன் தீவிர சாய்பாபா பக்தனாகவும் இருந்திருக்கிறார்.





சில விசயங்களுக்கு காரணம் சொல்ல முடியாததுபோல அல்லது சில விஷயங்களின் அடர்த்தியை அளவிட நமது வாழ்பனுவம் போதாது போல்

அவர் தன் காதல் மனைவியை பிரிந்து வாழ்ந்தார்.







அவர் அடிக்கடி தனிமைப் படும்போதெல்லாம் அவரை ஒரு சிலர் (விஜ்ய் கூட) மீட்டிடுக்கிறார்கள்.





அவருடைய தளர்ச்சியை நான் க்ண்கூடாக கண்டது “யாரடி நீ மோகினி” படத்தில்தான்.நிச்சயமாக அது வழக்கமான ரகுவரனில்லை. அதில் எந்த இடத்திலும் அவருடைய கண் சிரிக்கவேயில்லை.தனகுகு மட்டும் பில் கிளிண்டனுடைய சிரிப்பு மட்டுமிருந்தால் போதும் இந்த உலகையே வென்று காட்டுவேன் என்று ஒரு நேர்காணலில் அவர் சொன்னது இன்றுமெனக்கு நினைவிலிருக்கிறது.





பெருமழைகள் ஒயும்போது உண்டாகும் அமைதியை வெறும் வார்த்தை-களைக் கொண்டு நிரப்பிட முடியாது. திரு.ரகுவரனுடைய மரணமும் அப்படித்தான்.





சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரு.ரோகினி சொல்லியிருக்கிறார் “ "எல்லாவற்றிற்கும் மேலாக.. எல்லோரிடமும் அன்பை வெளிப்படுத்துங்கள்... ரகு உடல் நலம் குன்றியிருந்த பொழுது நான் கொஞ்சம் கவனித்திருக்கலாமோ? என்ற எண்ணம் வருகிறது. இதை இங்கே அமர்ந்துள்ள என் மகன் முன்பு கூறுகிறேன்" ஆகவே ஒரு நல்ல கணவனாகவும்,கலைஞனாகவும்,மனிதனாகவும் அவர் ஒரு நிறை வாழ்க்கை வாழ்திருக்கிறார் என்றே கொள்கிறேன்.

இடுகையிட்டது சு.சிவக்குமார்

Sugirtharani kavithigal...

My Photoதீண்டப்படாத முத்தம்












சுகிர்தராணியின் கவிதைகள் பற்றி அவ்வப்போது எழுதியிருக்கிறேன். அவருடைய கவிதைகள் பற்றி இரண்டாவது முறையாக ஒரு பொது மேடையில் பேச நிற்கிறேன். இது ஒரே சமயம் மகிழ்ச்சியையும் ஏமாற்றத்தையும் தருகிறது.



கவிதை பற்றிப் பேசக் கிடைக்கும் எந்த வாய்ப்பும் மகிழ்ச்சியளிப்பது. அந்த வகையில் இதுவும் மகிழ்ச்சிகரமானது. ஆனால், கவிதை வாசிப்பவர்களை விடக் கவிதை எழுதுபவர்கள் அதிகமாக இருக்கும் ஒரு சூழலில் சக கவிஞரின் கவிதைகள் பற்றிப் பேச புதிதாக ஒருவர் முன்வராதது பற்றிய ஏமாற்றம். ஒரு கவிதை ஆர்வலனாகவே இந்த ஏமாற்றத்தை முன் வைக்கிறேன்.





இது சுகிர்தராணியின் நான்காவது தொகுப்பு. எட்டு ஆண்டுகளுக்குள் நான்கு தொகுப்பு என்பது அவருடைய இயக்கத்தைக் காட்டுகிறது. தொடர்ச்சியாகவும் அதிக எண்ணிக்கையிலும் எழுதுபவராக இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. இந்தத் தொகுதியில் ஐம்பது கவிதைகள் இருக்கின்றன. எல்லாமும் முந்தைய தொகுப்பான 'அவளை மொழி பெயர்த்த'லுக்குப் பின்னர் எழுதப்பட்டவை. கடந்த நான்கு ஆண்டுகளில் எழுதப்பட்டவை.இந்த நான்கு தொகுப்புகளையும் ஒருசேர வைத்துப் பார்க்கும்போது தன்னுடைய கவிதைக்கான தரத்தை சுகிர்தராணி அடைந்திருக்கிறார் என்பது புலப்படுகிறது. அதற்குப் பொருந்தும் உதாரணமாக இருப்பது இந்தத் தொகுப்பு. தொடர்ச்சியையும் தரத்தையும் எட்டியிருக்கும் ஒரு கவிஞரை சலுகைகள் எதுவுமின்றி நவீன கவிதையின் பொதுப் போக்கின் பிரதிநிதியாகக் கருதுவதுதான் சரி என்று எண்ணுகிறேன். அந்த வகையில் சுகிர்தராணியின் கவிதைகளை எங்கே வைப்பது என்று பார்க்க விரும்புகிறேன்.





தமிழில் பெண்கள் எழுதும் கவிதைகள் பற்றி இரண்டு வகையான கருத்துகள் நிலவுகின்றன. ஒன்று - பெண்கள் எழுதுவதெல்லாம் சாரமில்லாதவை. இலக்கியப் பெறுமானம் கற்பிக்கத் தகுதியானவையல்ல. இது பெண் எழுத்தின் மீது தீண்டாமை கற்பிக்கும் சிலரின் வாதம். இதில் முக்கியமான கவிஞர்களும் இடம்பெறுகிறார்கள். சமீபத்தில் ஓர் இலக்கிய இதழில் பிரபல எழுத்தாளர் ஒருவர் எழுதியிருந்தார். அழகான பெண்கள் அழகைப்பற்றியும் அழகில்லாத பெண்கள் யோனியைப்பற்றியும் கவிதைகள் எழுதும் மரபு கடைப் பிடிக்கப்படுகிறது என்று இலக்கியக் கோட்பாடுகளைப் பகடி செய்து எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். இரண்டாவது கருத்து - பெருந் தன்மையாளர்களுடையது. யாரெல்லாமோ கவிதைகள் எழுதுகிறார்கள். பெண்களும் எழுதிவிட்டுப் போகட்டுமே. இது மேம்போக்கானது. இவ்விரு கருத்துக்களும் இலக்கியத்தின் அடிப்படைகளுக்கு எதிரானது. ஒரு புதிய போக்கை ஏற்றுக் கொள்ள முடியாத மனப்பாங்கு இலக்கியத்தை அடுத்த கட்ட வளர்ச்சி நோக்கிச் செலுத்த இயலாது என்ற விதியை ஒப்புக் கொண்டால் இந்தக் கருத்துக்களின் வெறுமையை நாம் உணர முடியும். இந்த விதியைச் சார்ந்தே இலக்கியம் புதிய களங்களைக் கண்டிருக்கிறது. இந்த இடத்தில்தான் சுகிர்தராணியின் கவிதைகள் பொருத்தப்பாட்டைக் காண்கின்றன.





பெண் கவிதைகள் உடலைச் சார்ந்த ஆரவாரமாக எழுதப்படுபவை என்ற பொதுக் கருத்தும் புழக்கத்தில் இருக்கிறது. பெண்ணின் அங்கங்களைப் பற்றிய குறிப்புகள் அப்பட்டமாகக் கவிதைகளில் இடம் பெறுவது பலரையும் மிரட்சிஅடையச் செய்துமிருக்கிறது. சுகிர்தராணியின் இந்தத் தொகுப்பு அவர்களை இன்னும் மிரட்சியடையச் செய்யலாம். உடல் தொடர்பான வலிகளை, வாதைகளை,ஆனந்தத்தை வேறு எந்தச் சொற்களால் குறிப்பிட முடியும்? பெண் கவிதை மொழியே உடலும் உடலின் உபாதைகளும் வேட்கைகளும் சார்ந்தது என்று ஜூலியா கிறிஸ்தவா குறிப்பிடுகிறார்.இது ஒரே சமயத்தில் மறுப்பும் படைப்புமாகிறது.இதுவரை தன் உடல் மேல் பதிந்திருக்கும் ஆண்மையச் சித்தரிப்பை உதறும் மறுப்பு.தன் உடல் தன்னுடைய உரிமைப் பொருள் என்று உணரும் சுதந்திரம்.இந்த நோக்கில் வெறும் வஸ்துவாக சுட்டிய சொற்கள் பெண்ணால் உச்சரிக்கப்படும்போது உடலைக் கடந்த இயக்கமாகின்றன.





ஆண் மையக் கருத்தாக்கங்கள் ஆயத்தம் செய்து வைத்திருக்கும் பெண் என்ற படிமத்தை பெண்களே எழுதும் மொழி நிராகரிக்கிறது.சாதி,இன,பால் வேற்றுமைகள் கொண்ட கலாச்சாரம் முன்வைக்கும் நிபந்தனைகளையும் சலுகைகளையும் மறுக்கிறது.ஒரு சமயம் இது மொழியின் சிக்கல்.அதேசமயம் இது கலாச்சாரத்தின் சிக்கலும் கூட.இவற்றை எதிர்கொள்ள உருவாக்கப்படும் சுதந்திரம் கவிதையின் சுதந்திரமும் கலாச்சாரத்தின் சுதந்திரமும் ஆகிறது. விரிவான தளத்தில் யோசித்தால் இந்த சுதந்திரம் பெண்ணை பெண்ணுக் குள்ளேயே சிறைப்பட அனுமதிக்காது என்று கருதலாம். மேற் சொன்ன இயக்கத்தையும் சுதந்திரத்தையும் வெளிப்படுத்தும் கவிதைகள் சுகிர்தராணியுடையவை என்பதற்கு இந்தத் தொகுப்பு சாட்சியம்.





மையப் பொருளைச் சார்ந்து சுகிர்தராணியின் கவிதைகளை மூன்றாகப் பகுக்கலாம். ஒன்று: இந்தக் கவிதைகள் எல்லாவற்றிலும் ஒலிப்பவை ஒடுக்கப்பட்டவர்களின் குரல்கள். அவை சாதி சார்ந்த ஒடுக்குமுறையாகவோ இனம் சார்ந்த ஒடுக்குமுறையாகவோ பாலினம் சார்ந்த ஒடுக்கு முறையா கவோ இருக்கின்றன. அவை குமுறல், சீற்றம், பழி வாங்கும் ஆவேசம், தமது வரலாற்றின் வெற்றிகள் பற்றிய கர்வம், எல்லாம் வெளிப்படும் குரல்கள் அவை.



இரண்டாவது: பெண்ணின் காமமும் காதலும் சித்தரிக்கப்படும் கவிதைகள். சுகிர்தராணியின் கவிதைகளைப் பொருத்தவரை காமமும் காதலும் ஒன்று தான். அதன் ஆதாரம் உடலின் சமிக்ஞைகள்தாம். காமமோ காதலோ மனம் சார்ந்தது என்ற ரொமாண்டிக்கான கருத்தை இந்தக் கவிதைகள் உதாசீனப் படுத்துகின்றன; புறக்கணிக்கின்றன. ஒரு கவிதையின் மையப்பாத்திரம் தன்னைக் 'காமத்தின் புராதனக் கோவில்' என்றே சொல்லுகிறது. சுகிர்த ராணியின் இரண்டாவது தொகுப்பான 'இரவு மிருக'தில் ஒரு கவிதை இருக்கிறது. 'உலகத்து மொழிகளின்/ அத்தனை அகராதிகளிலும்/ தேடித் தேடி/ கடைசியில் தெரிந்துகொண்டேன்/உன் பெயரில் காதலுக்கு/ நிகரான இன்னொரு சொல்லை.' இந்த மென்மையான கற்பனைகளை புதிய தொகுப்பில் காண்பது அரிது. மூன்றாவது கூறு: இந்தக் கவிதைகளில் இடம் பெறும் இயற்கை. சமீப காலத்தில் அதிக அளவுக்கு மனிதவயப்படுத்தப்பட்ட இயற்கை அல்லது இயற்கையை ஒட்டிச் சித்தரிக்கப்பட்ட மானுடக் கூறுகள் கொண்ட கவிதைகள் இவை என்று சொல்லலாம். மனித சரீரம் இயற்கையின் பகுதியாகவோ இயற்கையின் அம்சங்கள் மனித உடலின் விரிவாகவோ சித்தரிக்கப் படுகின்றன. 'முதல் கூடலுக்கு முன் நிகழ்ந்தவை' (பக் 39 ) என்ற கவிதையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்த மூன்று பகுப்பையும் ஒன்றிணைப்பது



கவிதையாக்கத்தில் சுகிர்தராணி பின்பற்றும் அரசியல். ஒரு அர்த்தத்தில் இது ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல்.இன்னொரு அர்த்தத்தில் பெண்நிலை அரசியல். ஒடுக்கப்பட்ட ஆணும் பாலின வேற்றுமையால் கீழானவளாகச் சித்தரிக்கப்படும் பெண்ணும் ஒரே தளத்தில் இருப்பவர்கள். அவர்கள் ஒரே துயரத்தை ஒரே கோபத்தை ஒரே விதியைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அண்மைக் காலத்தின் மாபெரும் மானுட அவலங்களான கயர்லாஞ்சியிலும் முள்ளிவாய்க்காலிலும் கொல்லப்பட்டவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்தத் தொகுப்பு அந்தச் சம்பவங்கள் பற்றியும் பல கவிதைகளில் பேசுகிறது.





பொதுவாக சுகிர்தராணியின் கவிதைகளில் விவிலியக் குறிப்புகள் அங்கங்கே காணப்படும். இந்தத் தொகுப்பில் அவற்றின் செல்வாக்கு அதிகம். கூடுதலாக புத்தனைப் பற்றிய சிந்தனைகள் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. அதற்கான காரணம் வெளிப்படையானது. 'காட்டு வேர்' என்ற கவிதையை இங்கே சொல்லலாம். பக் - 38.





இந்தத் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கும்போது தென்பட்ட சில விஷயங்கள் சுவாரசியமானவை. தொகுப்பில் ஐம்பது கவிதைகள் இருக்கின்றன. அவற்றில் தலைப்புக் கவிதை உட்பட ஏழு கவிதைகள் முத்தம் பற்றியவை. தீண்டப்படாத முத்தம். முதல் முத்தம்,கடைசி முத்தம், சபிக்கப்பட்ட முத்தம்,விலக்கப்பட்ட முத்தம்,சாம்பல் பூக்காத முத்தங்கள், உறையிடாத முத்தம் என்று போகிறது இந்தப் பட்டியல். இவை தவிர 14 கவிதைகளுக்குள் முத்தம் இடம்பெறுவதையும் குறிப்பிட வேண்டும். இதில் எந்த முத்தமும் மகிழ்ச்சியின் அடையாளமல்ல; வலியைச் சொல்பவை. தனிஆள் என்ற வகையிலும் சமூகம் சார்ந்தும் அது பரவசத்தை அல்ல; ஓர் இனத்தின் வஞ்சினத்தைச் சொல்லுகிறது. உடல் ஓர் ஆயுதமாக மாறும் அரசியலைப் பேசுகின்றன சுகிர்தராணியின் கவிதைகள். அவருடைய கவிதை இடம் இது என்று தோன்றுகிறது. மிக அதிகமான விமர்சனங்களை வரவழைக்கும் இடம்.



(2 ஜனவரி 2011 அன்று சென்னையில் நடைபெற்ற காலச்சுவடு நூல் வெளியீட்டு விழாவில் சுகிர்தராணியின் ‘தீண்டப்படாத முத்தம்’ தொகுப்பை வெளியிட்டு நிகழ்த்திய உரை)



@

















இடுகையிட்டது சுகுமாரன்.

Manam kotthi paravai...!

மனக்கதவைத் தட்டும் மரங்கொத்திகள்


எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா





ஒரிய மொழி குழந்தை இலக்கியத்தில்,மரங்கொத்திப் பறவைகளின் பங்கீடு மிகுந்திருக்கும். கதாநாயகனாக, நாயகியாக, தோழியாக, தூது செல்வோனாக, ஆபத்துக் காலத்தில் திடீரென்று தோன்றி காப்பாற்றும் தேவ தூதனாக, பாப்பாவின் கண்ணீரைத் துடைக்கும் சக தோழனாக என விதவிதமான வேடங்களை அணிந்து நம்மை மகிழ்விக்கும்.பொதுவாக குழந்தைக் கதைகளை நான் பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரிக் கதவுகளைத் தட்டும் போது, விடாமல் படித்திருக்கிறேன். இப்போதும் கூட அவ்வப்போது படிப்பதுண்டு. தன்னந்தனியாக ஒருவயல் வெளியில்,ஓடைக்கரையில், தோப்பில் என இயற்கைசார் இடங்களில் காலை மாலை நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது கரீக் என சப்தமிட்டு ஓடும் ஒரு பறவை இதுவாகவோ அல்லது மீன்கொத்தியாகவோ இருக்கும். கதவைத் தட்டும் ஓசை, மரங்களை செதுக்கும் ஓசை, பாறையில் சிற்பம் செதுக்கும் போது உருவாகும் உளியின் ஓசை என பல ரூபங்களை ,இது தன் அலகால் மரங்களைக் கொத்தும்போதும் ஏற்படும் ஓசையை நம் மனம் ஒப்பிடுகிறது. ஒரு முறை கும்பகோணம் செல்லும்போது ஒரு இடத்தில் சிற்பக் கலைக்கூடத்திற்கு அருகில் சில மணி நேரம் தங்க நேர்ந்தது. அது மரச்சிற்பக் கூடம். அங்கு ஒரு கலைஞன் கதவில் சிற்பங்களைச் செதுக்கியவாறு இருந்தான். அங்கு எழும்பிய ஒலி ,மரங்கொத்திப் பறவைகளை நினைவுபடுத்தியது. அவனும் அழகான ஒரு சிலையைச் செதுக்கிய வண்ணம் இருந்தான்.......



ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தூந்திரப் பிரதேசம் தவிர்த்து எங்கும் வாழும் ஒரு பறவையினமாக அடையாளம் காணப்படுகிறது. மரம் மட்டுமல்லாது, கள்ளி, புதர், புல், பாறை இடுக்கு என அனைத்தையும் தனது வசிப்பிடமாக மாற்றிக் கொள்ளும். இதனாலேயே அடர்ந்த காடுகளில் மட்டுமல்லாது, பாலைவனத்தில் கூட பார்க்க முடியும். 250 க்கும் மேற்பட்ட உள்வகுப்புகள் கொண்ட மரங்கொத்திகளில் பல ,இன்று அழிந்து விட்டன. சில அழிவின் விளிம்பில் உள்ளன. மிகக் குறிப்பாக சந்தன மூக்கு மற்றும் இம்பீரியல் வகை மரங்கொத்திகள் கிட்டத்தட்ட அழிந்தே போயிருக்கலாம் என்ற சந்தேகம் பறவை ஆய்வாளர்கள் மத்தியில் நிலவுகிறது.



மரங்கொத்திகளைப் பொறுத்தவரை,அதன் உடலமைப்பு மிகுந்த கவனத்தைப் பெறுகிறது. குட்டையான ,தட்டையான நடுவுடல் ,கடினமான அலகு, விறைப்பான குறிப்பிட்ட சாய்மானத்தில் அமையப்பெற்ற வால், சப்பையான அடிப்பகுதி கொண்ட கால்கள், தேவைப்படும்போது தன்னை மூடிக்கொள்ளும் வசதி கொண்ட ரோமக்கால்கள் என ஒவ்வொரு அங்கமும் முக்கியத்துவம் பெறுகிறது. 10 கிராம்-----450 கிராம் வரை பல்வேறு நிலைகளைக் கொண்ட இதன் உடல் வளர்ச்சி, பெண் இனத்தில் முக்கிய பங்காற்றுகிறது. பெண்ணே பெரிய உடலைப்போடு இருக்கும். பல நிறங்களை உடலில் கொண்டிருக்கும். இவ்வண்ணங்களை, எதிர்பாலைக் கவர்ந்திழுக்கவும், தான் பருவ நிலையில் இருப்பதையும், ஆபத்துக்களை அறிவிக்கும் சமிக்ஞையாகவும் பயன்படுத்துகிறது.



இவைகளின் அலகு மிகுந்த கடினத்தன்மை கொண்டது. நீளமான நாக்கை உள்ளடக்கிய இதன் வாய் அலகால் மூடப்பட்டிருக்கும். மூக்கின் நுனி, கூர்மையாய் இருக்க அவ்வப்போது ஏதாவது ஒரு பொருளைக் கொத்தியவாறே இருக்கும். புழு பூச்சிகள், வண்டுகள், சிலந்திகள், பிற பறவையினங்களின் பச்சிளங் குஞ்சுகளைக் கண்டால் மிகுந்த வேகத்தோடும், அழுத்தத்தோடும் கொத்தும். கண் இமைக்கும் நேரத்தில் இரையைச் செயலிழக்கச் செய்து, மடக்கி, சுருட்டி, விழுங்கிவிடும். இரை பெரியது எனில், வேறோர் இடத்திற்கு எடுத்துச் சென்று சாவகாசமாக அமர்ந்து கொத்தித் தின்னும். சில வாரங்கள் இவை அலகைத் தீட்டாமல் விட்டுவிட்டதெனில் ,அதன் நுனி மழுங்கி தட்டையாகிவிடும்,பின் உணவைப் பிடிக்க முடியாமல் போய் இறப்பிற்கு வழிவகுத்துவிடும். மிகச் சிறிய குஞ்சுகள் கூட நீண்ட அலகைக் கொண்டிருக்கும்.



2004ம் ஆண்டு ஐரோப்பியப் பறவை ஆய்வாளர்களுக்கு ஒரு சந்தேகம் மேலிட்டது. இதன் அபரிதமான கொத்தும் தன்மையால் மூளைக்கு பாதிப்பு வராதா என்பதுதான் அது. நீண்ட ஆய்விற்குப்பின், மூளை மிகச்சிறியதாக உள்ளதாகவும், அதனைப் பாதுகாக்கும் மண்டைஓடு, நடுவே அமைந்த நீர், ஜவ்வுப்படலங்கள், கொத்தும்போது ஏற்படும் அதிர்வைத் தாங்கிக் கொள்வதையும் ,மேலும் கண்ணிற்குச் செல்லும் நரம்பு மண்டலத்தைப் பாதுகாப்பதை கண்டறிந்தனர். கண்ணை, மற்றொரு ஜவ்வுப்படலம் வெளியேயிருந்து பாதுகாக்கிறது. கொத்தும் போது, இப்படலம் விரிந்து கண்ணை மூடுவதோடல்லாமல், அதிர்வுகளையும் தாங்குகிறது. கொத்தி முடித்தவுடன் சுருங்கிக் கொள்ளும்.



மரங்களில் ஓணான், பல்லி போன்று செங்குத்தாக நடக்கும் திறன் கொண்டவை இவை. அப்போது உடலைத் தாங்கிக் கொள்ளும் வகையில் இதன் வால் அமைப்பு உள்ளது. அதற்கேற்ப கால்களும் உள்ளன. இதன் குட்டையான கால் பாதம் 4 விரல்களைக் கொண்டது. நடுப்பகுதியிலுள்ள ஜவ்வு ஷாக் அப்சர்வர் போல் செயல்படும். அதோடு மரங்களைக் கவ்விப் பிடித்துக் கொள்ளவும் பயன்படுகிறது. மரங்களின் தன்மைக்கேற்ப தங்களின் சார்பு வாழ்க்கையை மாற்றிக் கொள்ளும். பிசாந்தியம் சார்ந்த குழுவினங்கள் உண்டு. அதில் உள்வகுப்புகளும் உண்டு. தொடர் மழை காலத்தையோ,குளிர் காலத்தையோ அவை விரும்புவதில்லை. மழைக் காடுகளில் வாழ்பவை அவ்வப்போது தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டேயிருக்கும். அத்தகைய காலங்களில் கிடைத்த உணவைத் தின்று வாழும் இயல்பு கொண்டவை. இடப்பெயர்ச்சிக் காலங்களில் குழுவின மோதல் ஏற்பட்டு உயிரிழப்பில் முடிகிறது. குறிப்பாக, ஆப்பிரிக்காவில் வாழும் தரையின மரங்கொத்திகள் நிலத்தில் குழி அமைத்து கூட்டை உருவாக்குகின்றன. அதற்காக,முள், கல், பாறைகள், புதர்களை நாடுகின்றன. தாங்கள் வாழ்ந்த பழைய இடத்திற்கு ஒருமுறையாவது திரும்பி வந்து முட்டையிடுவது தான் இவற்றின் சிறப்புக் குணம்.



பயண காலங்களில்,இடத்தை தேர்ந்தெடுத்தால் அங்கு குறைந்தது 1 வருடமாவது வாழும். அப்போது ஆணும்--- பெண்ணும், பருவ காலத்தில் காதலில் மயங்கி, கலவி கொள்கின்றன. கலவி ,பொதுவான முறையிலேயே ,பெண் கீழே படுத்து தன் பின்புறத்தைத் தூக்கி காட்டியபடியும், ஆண் மேலே அமர்ந்தும் உடலுறவு கொள்கின்றன. பல முறை உடலுறவு கொள்ளும்.இந்நிகழ்வு சில மணித் துளிகளே நீடிக்கும். இரண்டும் சேர்ந்து கூட்டை அமைக்கும். அதில் வௌ்ளை நிறத்தில் 3--5 முட்டைகளை இடும். பெரும்பாலும் காலை நேரத்திலேயே முட்டையிடும். 10--14 நாள் அடைகாப்பிற்குப்பின் குஞ்சுகள் வெளிவருகின்றன. முதல் 18---35 நாட்களுக்குப் பெற்றோரின் பராமரிப்பில் இருக்கும் குஞ்சுகள் பின் தனியே செல்ல எத்தனிக்கும். 8 வார காலத்திற்குப்பின் தனியே இயங்கும். இவ்வினத்தில் பெண்ணே பிரதான தீர்மானிப்பாளனாக இருக்கின்றன. முட்டையை அடைகாப்பதில் துவங்கி, உணவிடல், பராமரிப்பு,பாதுகாப்பு என அனைத்திலும் பெண் பெரும்பங்காற்றுகிறது. ஆணின் சிறப்பு ,இரவு நேரத்தில் கூட்டையும், குஞ்சையும் பாதுகாப்பது. பெண் ஏதோ ஒரு காரணத்தால் வெளியில் செல்லும் போது, ஆண் அடைகாக்கும். அந்தி மயங்கும் வேளையில் குஞ்சிற்கு இரையூட்டும். பருவ காலங்களிலும் சக தோழர், தோழிகளுடன் கலவியில் ஈடுபடும். கம்யூன் கலாச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. பெற்றோரை இழந்த குஞ்சுகள் கூட்டத்தின் தலைவனால் பாதுகாக்கப்படுகிறது. அவை பெரும்பாலும், பதவிப்போரிலோ அல்லது வேறு ஏதாவது காரணத்தாலோ கொல்லப்படுகின்றன.



மலைப்பாம்பு, கழுகு, காக்கை போன்ற பறவைகள் இவைகளை வேட்டையாடும். இவை பிரதேச பற்று கொண்டவை என்பதால் உள் குடும்ப தகராறுகள் அதிகம் உண்டாகின்றன. இதனைத் தவிர்க்க பருவ காலம் தவிர்த்து சற்று முதிர் பருவத்தில் உள்ளவை தனித்தே வாழ விரும்புகின்றன. ஒன்றை ஒன்று சந்திக்கும்போது மூர்க்கத்துடன் சண்டையிட முயல்கின்றன. இதனால் இவைகளின் உடலில் ஆழமான காயங்கள் ஏற்படுகின்றன. இது இவைகளை இறப்பிற்கு இட்டுச் செல்கின்றன. பல கலவி கலாச்சாரம் இருப்பதால் குஞ்சு பொரித்துப் பாதுகாக்கும் காலத்தில் மட்டும் அமைதி காக்கின்றன. ஆணும் பெண்ணும் கலவியில் கூடி ,குஞ்சு பொரித்த பின் பேதமின்றி பாதுகாக்கும் பாங்கு ஆச்சரியமானது.



பூமியில் தற்போது நிலவும் அதிகபட்ச வெப்ப ஏற்ற இறக்கம் ,அதிக பூச்சி மருந்து தெளிப்பு போன்ற காரணங்களால் மரங்கொத்திகள் மட்டுமின்றி பல பறவையினங்கள் பேரழிவிற்கு ஆளாகி உள்ளன. வயல் வெளிகளைத் தாக்கும் பூச்சிகளை அழிப்பதிலும், வனத்தில் உருவாகும் ஒட்டுண்ணிகளை அழிப்பதிலும் மரங்கொத்திகள் பெரும் பங்காற்றுவதை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். கடந்த 2006ம் ஆண்டு மழைக் காலத்தில் அமேசான் காடுகளில் தோன்றும் பச்சை நிற வண்டுகளால் அங்கு வாழும் ஒரு வகை தவளை பயங்கர தோல் நோயால் பாதிக்கப்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். மரங்கொத்திகள் அவ்வண்டுகளை உண்பதால் தற்போது தவளைகள் தோல் நோய் பாதிப்பின்றி இருப்பதையும் அவர்கள் அறிக்கையில் தெரிவிக்கின்றனர். அவ்வகை வண்டுகளை உண்டு செரிமாணம் செய்யும் சுரப்பிகள் மரங்கொத்திகளுக்கு மட்டுமே உள்ளதையும் கண்டறிந்தனர் ஆய்வாளர்கள்.





suvai...!

ஐதராபாத்தை தலைநகரமாகக் கொண்ட ஆந்திர மாநிலம் பரப்பளவில், இந்தியாவின் நான்காவது இடத்தையும், மக்கள் தொகையில் ஐந்தாவதுயும் இடத்தை பெற்றுள்ளது. இரண்டாவது நீளமான கடற்கரையாக 972 கி.மீ.  கொண்டுள்ளது. தெலுங்கு முதல் ஆட்சிமொழியாகவும், உருது இரண்டாவது ஆட்சி மொழியாகவும் விளங்குகிறது. 4ம் நூற்றாண்டில் மௌரியர்கள், இப்பகுதி வரை தங்களது எல்லையை விரிவுபடுத்தினர். பலதரப்பட்ட வம்சத்தினரின் ஆட்சிக்குப்பின், காகதாயர்களால் வாரங்கல்லின் அருகில் ஒருங்கிணைக்கப்பட்டது. 1323 சி.இ.யில் டில்லி சுல்தான் கியாத் அல் தின் துக்ளக், உலூகான் தலைமையில் மிகப் பெரிய சேனையை அனுப்பி தெலுங்கு ராஜ்யத்தைக் கைப்பற்றினான்.




இந்திய உணவுகளிலேயே மிகவும் காரச்சுவை கொண்டு விளங்குவது ஆந்திர மாநில உணவுகள். ஊறுகாயும், சட்னிகளும் பச்சடி என்ற பெயரில் வழங்கப்படுகிறது. தக்காளி, கோங்குரா, கத்தரிக்காய் போன்ற பல வகைப்பட்ட பொருட்களிலிருந்தும் ஊறுகாய் தயாரிப்பது இவர்களுக்கே உரித்தானது. ஆவக்காய் ஊறுகாய் இவர்களது பிரத்யேக தயாரிப்பு. 14ம் நூற்றாண்டில் முகலாயர்களின் வருகைக்குப்பின் ஹைதராபாத் உணவுகள் பிரசித்தி பெறத் துவங்கின. இது பெரும்பாலும் அசைவ உணவாகும். அதில் நெய்யும், மசாலாப் பொருட்களும் தாராளமாகச் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. பிரியாணி புகழ்பெற்ற உணவாகும்.



பெசரெட்டும் இஞ்சித் துவையலும்







தேவையானவை:

2 கப் முழு பாசிப்பயறு, 1கைப்பிடி பச்சரிசி, வெங்காயம் ---3 சீரகம் --சிறிது,இஞ்சி ---சிறு துண்டு, பச்சை மிளகாய்---4, உப்பு --ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையானது.

பாசிப்பயறு, அரிசியை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். (குறைந்தது 7 மணி நேரம்). ஊறவைத்த பொருட்களுடன், இஞ்சி, பச்சை மிளகாய் , சீரகம் சேர்த்து நைஸாக அரைக்கவும். உப்பு சேர்க்கவும். தோசைமாவு பதம் இருக்க வேண்டும். பின் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணை விட்டு சிறிதளவு சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய் 2, வெங்காயம் நறுக்கியது சேர்த்து லேசாக வதக்கி மாவில் சேர்க்கவும். தோசைக் கல்லை வைத்து, அதில் இந்த மாவை ஒரு கரண்டி ஊற்றி தோசை போல் திரட்டி சுற்றிலும் எண்ணெய் விட்டு சிவந்து வரும்போது திருப்பி விட்டு இருபுறமும் வெந்ததும் எடுக்கவும். சூடாக இஞ்சித் துவையல், வேர்க்கடலை துவையல் அல்லது சாம்பாருடன் சாப்பிடவும்.



இஞ்சித் துவையல்



2ஸ்பூன் உளுத்தம்பருப்பு, 1 காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல் --அரை கப் இஞ்சி சுத்தம் செய்து நறுக்கியது. அரை கப் வெல்லம். சிறிது புளி ஒரு சிறு கோலி அளவு, உப்பு தேவையானது. 

கடாயில் எண்ணெய்விட்டு உளுத்தம் பருப்பு , மிளகாய் சேர்த்து சிவக்க வறுக்கவும். அதோடு, இஞ்சி, தேங்காய் துருவல், புளி, வெல்லம், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். கடுகு ,கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.



முத்திரை---24



வெள்ளி, 22 ஜூலை, 2011

story

My Photo
Caste & Class2

நான் ஓர் வெள்ளாளன்

நான் ஓர் பிராமணன்

நான் பள்ளிக்கூடம் போற பெடியன்.

-ஹரிஹரஷர்மா-

முன் பள்ளி வகுப்பில் கல்வி கற்க நான் அனுமதிக்கப் பட்டிருக்கவில்லை. எந்தப் பஞ்சமர்களுடனும் நான் சேர்ந்து விடக்கூடாதென்ற முன்னெச்சரிக்கையாலும், வேறு சில குடும்ப பொருளாதார சூழ்நிலைகளாலும் அம்மா என்னை அங்கு சேர்க்கவில்லை. பனங்கிழங்குகளை கிண்டியபடி வேர்க்க விறுவிறுக்க அவள் சொல்லித்தந்த ஆனா ஆவன்னா தான் எனது முன்பள்ளிப் பாடங்கள். அம்மாவிடம் தன்னைக் கைவிட்டுச் சென்ற அய்யனுக்கெதிராக (அப்பாவுக்கு) என்னை வளர்த்து ஓர் பிராமணனாக-பத்ததி (சமஸ்கிருதத்திலும் குருகுலக் கல்வியிலும் உயர்தகுதி பெற்ற பிரம்மஸ்றீ பிராமணர்கள் மாத்திரம் சொல்லக்கூடிய பிரார்த்தனை) வாசிக்கிற பிராமணனாக-எடுத்துவிட வேண்டுமென்ற வெறி இருந்தது. அப்போதெல்லாம் அம்மா எனக்கு முன்னுதாரணங்களாய்க் கூறியது கோப்பாய் சிவம் என்கிற ஒரு பிராமணரின் புத்தகங்கள், இலங்கை வனொலியில் கடமையாற்றிக் கொண்டிருந்த ஹரிஹரஷர்மாவின் குரல் என்பவற்றைத்தான். வேறெந்தக் கனவுகளையும் என்னுள் கிளர அம்மா அனுமதித்ததில்லை. பனங்கொட்டைகளை பொறுக்கி கடகத்திலிட்டபடி, புகையும் அடுப்பை ஊதியபடி, இடியப்பம் புழிந்தபடி இவர்களைப் பற்றிய உயர்வான புனைவுகளை அம்மா சொல்லிக் கொண்டிருப்பாள். கயத்ரி மந்திரத்தை சொல்லிமுடித்த மாலைப் போதொன்றில் அவள் கூறினாள்; 'நாளைக்கு உனக்குப் பள்ளிக்கூடம். ரயில்வேப் பொடியள், நளச்சிணியள் (எங்கேயோ இருந்து இடம்பெயர்ந்த வந்த பஞ்சமர்கள், கைவிடப்பட்ட பாழடைந்த ரயில்வே குவார்ட்டர்ஸ்களில் தஞ்சமடைந்திருந்தனர். அவர்களது பாவனைக்கு கோவில் கிணறு மறுக்கப்பட்ட பின்னர் அசுத்தமான ரயில்வே கிணற்று நீரை அவர்கள் பருகினர்.) எல்லாம் வருவாங்கள். அவங்கள் ஆரோடயேனும் சேந்தாயெண்டு கதை வந்துது... அம்மா உனக்கு இல்லை சரியோ, நீ கோமதி மாமின்ர பொடியனோட மாத்திரம் சேர். சாப்பிடேக்க சாப்பாட்டுப் பெட்டிமூடியால மறைச்சு வைச்சுத் தான் சாப்பிட வேணும்-நீ பிராமணன்! ஏதாவது திருகுதாளம் பண்ணினாய், எனக்கு வந்து சொல்ல ஆக்கள் இருக்கினம் சரியே.'





பாடசாலையில் முதல்நாள் எனக்கு நன்றாகவே ஞாபகம் இருக்கிறது-நான் பயப்பிட்டுக் கொண்டிருக்கவில்லை. எல்ல ஆசிரியர்களும் நான் அப்பாவைப் போலவே இருப்பதாய் அம்மாவிடம் கூற அவள் 'கைப் புண்ணுக்கு கண்ணாடி வேணுமோ' எனக் கேட்டுக் கொண்டிருந்தாள். அம்மாவும் மூன்று நான்கு வெள்ளாளப் பெண்மணிகளும் நின்றுகொண்டிருந்தனர், பென்ச் அழுக்கானது என என்னையோ அல்லது அவர்களது பிள்ளைகளையோ அப்பக்கம் அண்டவிடாது பார்த்துக் கொண்டிருந்தாள் அம்மா. பெத்தா அதில் தான் உட்கார்ந்திருந்தாள். அவள் வீ.சீயில் துப்பரவு வேலை செய்பவள். அவர்கள் கதைத்துக் கொண்டிருந்தார்கள்; 'பெத்தான்ர பிள்ளையும் பள்ளிக்கூடத்தில சேருதே....! கடவுளே கலிகாலம்'. பெத்தாவை நான் பார்த்தேன் - கறுப்பு. 'எவனுக்கோ ஈணப்போறாள், வயித்தப் பார்..' சிரித்தார்கள். ஊத்தை பென்ச்சில் அமர்த்திருந்த பெத்தா ஒருமுறைதானும் இப்பக்கம் திரும்பிப் பார்த்தாளில்லை.. அளவுக்கதிகமாக நீலம் போடப்பட்டு ஊத்தைகள் வடிவாக எடுபடாமல் இருத்த சீருடையை பெத்தாவின் மகன் அணித்த்ருத்தான். அவன் என்னைபோல சப்பாத்து அணித்திருக்கவில்லை. கால்களை அடிக்கடி சொறிந்த படி மூக்கில் புல்லாக்குப் போல தொங்கும் சளியை தாயின் சீலைத்தலைப்பில் துடைத்தபடி நின்றிருந்தான். அர்வருப்பாய் இருந்தது. அம்மா எல்லா படிவ நிரப்பல்களும் முடித்து என்னைக்கொண்டு போய் வகுப்பில் விடும் போது நான்கு பளபளப்பான மணவர்களைக் அறிமுகப் படுத்தினாள். என்னைப் போல மிகு வெண்ணிறச் சேட்டையும் மடிப்புக் குலையாத காற்சட்டையையும் அவர்கள் அணிந்திருத்தனர். வெளிநாட்டில் இருவருடைய அப்பாக்கள் இருந்தனர். அவர்கள் அழகான புத்தகப் பைகளை வடிவான பொம்மைக்குட்டி தண்ணீர்ப் போத்தல்களை வைத்திருந்தனர். நான் வட்ட வடிவிலான சாப்பாட்டுப் பெட்டி ஒன்றை வைத்திருந்தேன். எனது பளபளப்பான வெள்ளாள நண்பர்களும் விதவிதமான வடிவ சாப்பாட்டுப் பெட்டிகளை வைத்திருந்தனர். பஞ்சமர்கள் பெரும்பாலும் சாப்பாடு கொண்டுவருவதில்லை. அப்படியே ஓரிருவர் கொண்டுவந்தாலும் வனிதாமணி ரீச்சரிடம் வாழையிலைக்கும் பூவரசம் இலைக்கும் பேச்சு வங்குவார்கள். (அவர்கள் பூவரசம் இலைகளை வெகுநுட்பமாக உதயன் பேப்பரில் விரித்து அதன் மேல் புட்டையோ பாணையோ வைத்துப் பார்சல் கட்டிக் கொண்டுவருவார்கள். வனிதாமணி மிஸ் வகுப்பறைச் சுத்தம் பற்றிப் பெரிதும் அக்கறை கொண்டிருந்தவராதலால் அவருக்கு வாழையிலைகள் பூவரசம் இலைகள் வீசப்பட்டு அவற்றுக்கு காக்கைகள் வட்டமிடுவது குறித்து பெரும் அதிருப்தி இருந்தது.)

நாங்கள் (வெள்ளாள மாணவர்களையும் என்னையும்) முன்வாங்கில் இருந்தோம். பெண்பிள்ளைகளுக்காக ஒதுக்கப் பட்ட மறுபிரிவின் முன்வாங்கில் சுஹாசினி, யசோதரா, நிர்மலா போன்றோர் அமர்ந்திருக்க பின்வாங்குகளில் றபீக்கா, சொர்ணா, மேரி போன்றோர் அமர்ந்திருந்தனர். முன்வாங்கு பின்வாங்கு ஒழுங்கு ஆசிரியர்களால் மிகக்கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டது. கிறிஸ்தவம் படிப்பவர்கள் மாமர நிழலுக்குப் போய்விட வேண்டும். கிறிஸ்தவ ஆசிரியையின் தலையில் காகம் எச்சமிட்ட சம்பவம் பாடசாலை முழுதும் தெரியவந்த பின்னரும் கூட.

பவளம் ரீச்சரை கோயில்லில் சந்திக்கும் நேரமெல்லாம் அம்மா என்னைப் பற்றி விசாரிப்பாள். ' என்ன பவளம், பின்வாங்குப் பெடி பெட்டையளோட ஆள் கொண்டாட்டமே?'

பின்வாங்குப் பெடியள் கதைத்துக் கொண்டிருப்பதற்காக, குழப்படிகளுக்காக ரீச்சர்களிடம் அடிவாங்கியபடியே இருந்தார்கள். எங்களுக்கு அடியே விழுவதில்லை. ஏனெனில் நாங்கள் குழப்படி விடுவதில்லை. ஏனெனில் நாங்கள் முன்வாங்கில் இருந்தோம். அவர்கள் பிழைவாங்கியபடியே இருந்தார்கள். ஏனெனில் அவர்கள் பின்வாங்கில் இருந்தார்கள். நாங்கள் சரிகளையே அதிகம் வாங்கவும் விரும்பவும் செய்தோம். ஏனெனில் நாங்கள் முன்வாங்கில் இருந்தோம். ஏனெனில் நாங்கள் முன்வாங்கில் இருந்தோம். ஏனெனில் நாங்கள் இந்து உயர்வேளாள குலத்தினராகவும் பிராமணர்களாகவும் இருந்தோம்.

என்னைக் கள்ளப் பிராமணி என அழைக்கும் பழக்கத்தை பின்வாங்கு மாணவர்கள் கொண்டிருந்தனர். காரணம் இல்லாமலில்லை. அவர்கள் பக்கம் நியாயம் இருந்தது. அவர்கள் அடி வாங்கும் போதெல்லாம் நானும் என் வெள்ளாள நண்பர்களும் மிக மோசமாகப் பகிடி (பகிடியை விட வேறு ஏதாவது மோசமான வார்த்தைகளிருப்பின் அதை இவ்விடத்தில் ஒட்டி வாசிக்கவும்) செய்வோம். அய்ந்தாம் ஆறாம் ஆண்டுகளில் படிக்கும் போது இக்கிண்டல்கள் அதிகமும் பாலியல் சார்ந்தவையாக இருந்தன. 'பனைமரத்தில ஏறியிருந்த உன்ர கொப்பன்ர கு censored / 'உன்ர கொம்மா ஆமை றைச்சி திண்டிட்டு ஆமிக்காரனோட படுக்கிற வேcensored' என்ற வகையான கிண்டல்கள். அவர்களால் எங்களை -முக்கியமாக நோஞ்சானான என்னை- அடித்து நொறுக்கி விட முடியும். ஆனால் தவறுதலாய்க் கூட அவர்கள் என்மீது தொட்டதில்லை. வெள்ளாளச் சிறுவன் ஒருவனது பொன்மூக்கை இடைவேளையின் போது அவர்கள் உடைத்த சம்பவம் இன்றும் என் நினைவிலிருக்கிறது. இராணுவத்தினருடன் பஞ்சமர்களின் தாய்மாரை இணைத்துப் பேசியதாலேயே அது நடந்தது. ஆசிரியரிடம் அப் பனையேறிச் சிறுவனின் நியாயங்கள் எடுபடவேயில்லை. 'திருப்பிக் கதையாத' ஆசிரியர் திருப்பித் திருப்பி அவனுக்கு கூறிக்கொண்டிருந்தார். முதலில் அவனது விரல் மொளியைப் பதம் பாத்த வாத்தி பின்னர் மேசைக்குக் கீழாய் அவனைக் குனியச் செய்து பின்புறமாய் விளாசினான் - அவனிடமிருந்து எந்த அழுகையொலியும் வராதது வாத்த்யின் கோபத்தை மேலும் கூட்டிக்கொண்டிருந்தது. பெண்பிள்ளைகள் பேசாமல் இருந்தார்கள். ஆனால் நானும் எனது முன்வாங்கு நண்பர்களும் வாத்தியின் கிண்டல்கள் ஒவ்வொன்றுக்கும் உரக்கச் சிரித்துக் கொண்டிருந்தோம். தன்னுடைய பாடம் முழுதும் குறித்த மாணவனை முட்டுக்காலில் நிற்கும் படி வாத்தி கூறினான். நான் அவ்ன்பக்கம் ஒருமுறை பார்த்து நைக்காட்டினேன். அந்தக் கண்களை வாழ்நாள் பூராவும் நான் மறக்கமுடியாது. நீர் தளும்பி அழுகையை அடக்கும் கண்ணும் துடித்துக் கொண்டிருக்கும் சொண்டும்....

மறுநாள் இடைவேளையின் போது அவனை வீட்டிற்கு அழைத்துச் செல்ல உறவினர்கள் வந்திருப்பதாய் ஆசிரியரொருவர் அழைத்துச் சென்றார். அவனது தாயார் அவனைப் பாடசாலைக்கு அனுப்பி வைத்து விட்டு மண்ணெண்ணை ஊற்றி தன்னைத் தானே எரித்துக் கொண்டதாய் பள்ளிக் கூடத்தில் பேசிக் கொண்டார்கள். பிறகு ஒருபோதும் நான் அவனைக் கண்டதில்லை.

***



2001 இடப்பெயர்வு என்னை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியில் சேரும்படி செய்தது. அம்மாவுக்கு வேதக்காரப் பள்ளிக்கூடம் என்பதில் பல அதிருப்திகள் இருந்தன தான் என்றாலும் வேறுவழியிருக்கவில்லை. ஆங்கிலம் கற்க மிக ஏதுவான இடம் எனவும் பஞ்சமர்கள் அதிகம் படிப்பது வட்டு சென்றல் போன்ற பள்ளிக்கூடங்களில் தான் எனவும் இங்கு அதிகம் கல்வி கற்பது கிறிஸ்தவ வெள்ளாளர்கள் தான் என்பதையும் உறுதிப்படுத்திய பின்னரே அரைகுறை மனதுடன் அம்மா அங்கு படிக்க அனுப்பினாள்.

"What was your school?"

"Palai Central College, Sir"

"Temporary Admission, No?"

"yes sir"

" What is your name?"

" My name is Hariharasharma sir"

"ஓ! அய்யராக்களா?'

'ஓம் சேர்'

'அய்யா, அப்ப சொல்லுங்கோ, பூணூல் போட்டாச்சே,'

வகுப்பறையில் சலசலப்பு ஏற்பட்டது. ஆசிரியர் டஸ்டரை கமில்ரனை நோக்கி வீசினார். ' டேய் கமில்ரன், நாயே.. எந்த நேரம் பார் கதை. கொப்பரும் கொம்மாவும் என்ன கத்திக் கொண்டே ஓcensored. வகுப்பறை சிரித்தது. எனக்கு உண்மையிலேயே விளங்கவில்லை. எனது முகக்குறியிலிருந்து அதைப் புரிந்து கொண்ட வாத்தி 'அய்யாவுக்கு விளங்காதுதான்' என்றான். பிறகும் 'அய்யா' எண்டான். எழுந்து நின்றேன். 'இருங்கோய்யா, இருந்து பதில் சொல்லுங்கோ' 'பூணூல் போட்டாச்சே'

'ம்ஹூம்.'

'ஏனய்யா? ஏழு வயசில போடவேணுமெண்டு சொல்லுவினம்?.."

'பதினேழு வயசிலயும் போடலாம் சேர். இனித்தான் போடோணும்' (பொய் சொன்னேன். உண்மையிலேயே 'அய்யா' அங்கீகாரம் எனக்குப் பிடித்திருந்தது. அதைக் குலைக்க நான் விரும்பவில்லை. உண்மையில் அப்பா-அம்மா கலப்பு மணம் குறித்த இரு சமூகங்களின் அங்கீகாரத்தினின்றும் என்னை புறந்தள்ளியிருந்தது. வெள்ளாளர்களும் ஒருவித வேற்றுமை உணர்வோடேயே என்னை ஏற்றுக் கொண்டனர். பிராமணர்கள் என்னை அங்கீகரிக்கவேயில்லை. அப்பா அம்மாவைக்கைவிட்ட போது அவரைப் பிரமச்சாரி என்று அக்கினிசாட்சி கூறிக் மறு கல்யாணம் பண்ணிவைக்கத் தயாராயிருந்த பிராமணிகள் எனக்குப் பூணூல் போட்டுவிடத் தயாராயிருக்கவில்லை - மனுநீதி என்னை பிராமணி என்று ஏற்றுக் கொண்டும்)



***



அம்மா யாழ்ப்பாணக் கல்லூரியில் எனது இருப்புக் குறித்து மிகவும் அதிருப்தியடைந்திருந்தாள். அவளது அதிருப்தி என்னை கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு மாற்றியது. கொகுவில் இந்துக் கல்லூரி அம்மாவை மிகவும் கவர்ந்த ஒன்றாக இருந்தது. மஞ்சவனப்பதி கோயில் - இரண்டு கட்டடத் தொகுதிகளுக்கு நடுவில் இன்னொரு முருகன் கோயில் - நல்ல சாதி பெடியள் படிக்கிற இடம் என அப் பாடசாலை குறித்து அலட்டிக் கொள்ள நிறைய விடயங்கள் இருந்தன. எனது ஆங்கிலம், நடை, உடை பாவனைகள் கொக்குவில் இந்துவில் என்னைச் சுற்றி ஒரு உயர்ந்த பிம்பத்தைக் கட்டமைக்க உதவின. திருநீறு பூசிக்கொண்டு போகவேண்டிய கட்டாயம் இருந்தது. தினம் தினம் பிரார்த்தனைக் கூட்டங்களில் தேவாரம் பாடிக் கொண்டிருந்தேன். பிரேயரில் கிறிஸ்தவ மாணவர்கள் எங்களது ஒன்றுகூடல் மண்டபத்தின் மூலையில் வந்து நிற்கும்படி விதிக்கப் பட்டிருந்தார்கள். சமயப் பாடத்தின் போது அவர்கள் லைபிறறிக்கு அனுப்பப் படுவார்கள்.

தமிழ்த்தினப் போட்டிகள் என்றால் எனக்கும் ஏனைய இந்து மாணவர்களுக்கும் சரியான வாசிதான். தலைப்புகள் எல்லாம் சமய இலக்கியங்கள் சார்ந்தே கொடுக்கப் பட்டிருக்கும் . விவாதமென்றால் அது மணிமேகலையா கண்ணகியா, சீதையா கண்ணகியா என்ற வட்டத்துள்ளேயே சுழலும். எப்பவாவது, தொழில்னுட்ப முன்னேற்றம் நம் சமூகத்துக்கு நல்லதைப் பண்ணுகிறதா இல்லையா தொனியில் ஏஎதாவது தருவார்கள். அதற்குக் கூட திருக்குறளில் இருந்தும் அங்கிருந்தும் இங்கிருதுமாய் மேற்கோள் காட்டி வென்றுவிட முடியும். தமிழ்த்தினப் போட்டியென்றால் இந்துக் கல்லூரிகளின் கும்மாளம் சொல்லிமாளாது. ஆங்கில தினப் போட்டிகளின் போது கூட யாழ் இந்துவும் வேம்படியும் கொக்குவில் இந்துவும் எப்படியோ பல முதலாமிடங்களை சுவீகரித்து விடுகின்றன. ஏனெனில் ஆங்கில தினப் போட்டிகளில் விவிலியம் சார்ந்த எந்தக் கட்டுரைகளும் கோரப் படுவதில்லை.

மிகக் கஷ்டமான உடல்செயற்பாடுகளைக் கோரிநிற்கும் ஒப்படைகளுக்காக நான் கோகுலனை வைத்திருந்தேன். சரியான விதத்தில் சேர்கிட்டுகளைப் பொருத்தி மின்னோட்டத் தொகுதி தயாரிப்பது. மோட்டாரில் இயங்கும் விளையாட்டு சுழலி செய்வது போன்ற விஞ்ஞானப்பாட ஒப்படைகளுக்கும் அவனை நம்பியிருக்க வேண்டிய காலம் வந்து விட்டதால் அவனை வீட்டு வரவேற்பறையினுள் அனுமதிக்க வேண்டிய அவலம் அம்மாவுக்கு வந்தது. மஞ்சள்த் தண்ணி கரைத்து ரெடியாய் இருக்கும் மாலைப்போதுகளில் அவன் வருவான். அவன் என்னிடம் ஆங்கிலம் கற்றுக்கொள்வதாக இருந்தது. அம்மா ஏதோ பெருமையில் அதற்கு ஒத்துக்கொண்டிருந்தாள். அதுவே ஒவ்வொருநாளும் அவனது வருகைக்கு வித்திட்டது. அம்மா மூக்குப்பேணிகள் இல்லாது போய்விட்டமைக்கு மிகவும் வருத்தப்பட்டாள். கோகுலனுக்கான ரம்ளர் சமயலறையின் மூலையில் கிடக்கும். பளையில் இருந்தபோது அம்மா இரண்டு மூக்குப்பேணிகளை வைத்திருந்தாள். அவற்றிலொன்று வேலிப்பூவரசம் கெட்டில் கவிழ்க்கப்பட்டிருக்கும். அது பன்ம்பாத்தி கிண்டவரும் பனையேறிக்குடியைச் சேர்ந்த முதியவளுக்கானது. மற்றையது மாதத்தில் மூன்று நாட்கள் தான் பாவிப்பதற்கு.



***

உயர் தரத்தில் எனது பாடத்தேர்வு (ஆங்கில இலக்கியம்) சார்ந்த காரணங்களால் யாழ்.மத்திய கல்லூரிக்கு மாறவேண்டி வந்தது. ஏகப்பட்ட பஞ்சமர்கள் கற்கும் (வெள்ளாளப் பாஷையில் 'காவாலிப் பள்ளிக்கூடம்'), ஒரு பஞ்சமரே அதிபராய் இருக்கும் பாடசாலை என்பதில் அம்மாவுக்கு படு எரிச்சல் இருந்தது. அம்மாவுக்கு எனது பாடங்களை வழங்கக் கூடிய யாழ் இந்து விருப்பமான ஒன்றாக இருந்த போதும் அதன் டொனேஷன் தொகை அப்பக்கமும் தலை வைக்க விடவில்லை.

நான் சேர்ந்த வருடத்தில் அதிபராய் இருந்து பின்னர் கொலையுண்ட அதிபர் இராசதுரை ஒரு பஞ்சமர். பல முற்போக்கான நடவடிக்கைகள் அவரால் பாடசாலையினுள் செய்யப் பட்டிருந்தன. முஸ்லிம் மாணவர்கள் மிகக்குறைந்த அளவிலேயே படித்த போதும் காலைப் பிரார்த்தனையில் அவர்களது பிரார்த்தனையும் இடம்பெறும். இஸ்லாமியப் பிரார்த்தனை, ஒளிவிழா, நவராத்திரி என சகல மதங்களுக்கும் அங்கீகாரம் வழங்கப் பட்டிருந்தது. மிகுந்த கண்டிப்புடைய வன்முறையாளரான அவர் என்னை ஒருபோதும் 'நீ' போட்டுக் கதைத்ததில்லை. (அவரால் கதைக்க முடிந்ததில்லை எனப்து மேலும் பொருத்தமானது) என்னை அவர் ஆங்கில யூனியனுக்கு தலைவராகப் பிரேரித்த போது 'அய்யாவோட ஸ்கில்ஸ் வந்து மார்வெலஸ். ஹி டிஸர்வ்ஸ் திஸ்' என்றார். எனது ஆங்கிலமும் சாதியும் அவரது அணுகுமுறைக்குக் காரணமாயிருக்கலாம் என்பது எனது ஊகம்.

'சர்மா, முந்தி எந்தப்பள்ளிக்கூடம்? ஏன் இஞ்ச வந்தனீங்கள்? இங்கிலிஷ்க்கு என்ன றிசல்ஸ். தமிழ் வாசிக்கிறது போல உங்களுக்கு இங்கிலிஷ் விளங்கும் என்ன?' இது தான் மாணவர்கள் என்னை எதிர்கொண்ட விதம். ஒ.எல் இல் கணிதத்துக்கு விசேடசித்தி வைத்துக் கொண்டு கலைப்பிரிவிற்கு வந்தது வேறு அவர்களிடம் விநோதமான மதிப்புணர்வைத் தோற்றுவித்திருந்தது. எனக்கு இதெல்லாம் வேடிக்கையாக இருக்கும். 'மச்சான் அந்தச் சரக்கு செம கட்டையடா... கோழி..' அது இதென்று கதைத்துக் கொண்டிருப்பவர்கள் என்னைக் கண்டதும் நிறுத்திக் கொள்வார்கள். நானே என்னைச் சுற்றிக் கட்டமைத்துக் கொண்ட இந்த ஒளிவளையம் மீது குற்ற உணர்வுடன் கூடிய அதீத பிரியம் இருந்ததைக் கட்டாயம் ஒத்துக்கொள்ள வேண்டும். மாணவர்களிடம் என்னைக் குறித்து ஆயிரம் கேள்விகள் இருந்தன. புறனிலையாளனாய் நின்று என்னையும் மாணவர்களையும் விளையாட்டாய் அவதானித்துப் பதிந்து கொண்டிருந்தேன் டயரியில். 'இரவில எத்தினை மணிகாணப் படிக்கிறநீர்' போன்ற கேள்விகளே அவர்கள் என்னிடம் கேட்க முடிந்த கேள்விகள். எனது உள்புதைந்த ஆளுமை காரணமாயும் குறைந்தளவிலான பாடசாலைப் பிரசன்னம் காரணமாயும் அவர்களுடன் நெருங்கித் தொடர்புற முடிந்ததில்லை. பாடசாலைக்கு சமூகமளிக்கும் நாட்களிலும் எதையாவது எழுதிக்கொண்டிருப்பேன். நான் ட்ரிப்பிள் எக்ஸ் பார்க்கிற ஆளா இல்லையா, வயதுக்கு வந்தவனா வராதவனா என்பதெல்லாம் அவர்களது முக்கியமான இடைவேளை அலசல்கள். சாடைமாடையாக மாத்திரமே அவர்கள் என்னைக் கிளறியதுண்டு. ஒருதடவை செல்போனில் பதிவுசெய்யப்பட்ட நீலப்படத் துண்டுகளைப் பின்வாங்கில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் வாசித்துக் கொண்டிருந்தேன். ஒருத்தன் 'என்ன ஐயா, எப்ப ஆம்பிளையாகிறது' என்று கத்தினான். நான் மையமாகச் சிரித்து விட்டு வாசிப்பது போன்ற பாவனையைத் தொடர்ந்தேன். அன்று விட்டுவிட்டார்கள். முன்திட்டமிடப்பட்ட அணுகல்களை அவர்கள் என்னிடம் நிகழ்த்தியதுண்டு. எனக்கு இவையெல்லாம் ஆர்வமிக்க விளையாட்டொன்றின் அங்கங்களாகத் தோன்றியபடியால் புதிர்மிக்க ஒருவனாய் என்னைக் கட்டமைத்த படியிருந்தேன். எனது உள்வாங்கல்களின் படி அம்மாணவர்கள் என்னை அணுகமுடிந்ததில்லை என்பதே முடிவாய் இருக்கிறது.

நான் கடந்துவந்த எல்லா ஆசிரியர்களுக்குமே எனது கதைக்கும் தொனி மீதான மோகம் இருந்து வந்திருப்பதை நான் உள்ளுணர்ந்திருக்கிறேன், இவற்றுள் ஸ, ஹ, ஷ, ஜ உச்சரிப்புகள் அளித்த பங்கு முக்கியமானது. (எல்லோராலும் தினேஸ் என்று அழைக்கப்படும் ஒருவனை நான் தினேஷ் என்பேன்)

பள்ளிக்கூடத்துக்கு சாப்பாடு கொண்டுவரும் மாணவர்கள் மிக சொற்பமானவர்களே. அவர்களிலும் மாமிச உணவு கொண்டுவர்வோர் யாரும் கிடையாது. பொரித்த முட்டை போன்ற காலை உப உணவுகள் எப்போதாவது வருவது வழக்கம். எனக்கு மூன்று கதிரைகள் தள்ளி முட்டைப்பொரியல் பார்சலை விரித்து வைத்திருந்த மாணவன் ஆசிரியை ஒருவரால் பின் வரிசையில் சென்று சாப்பிடும் படி விரட்டப்பட்டான். என்னுடன் வேறு சில விடயங்களை அலசியபடியிருந்த ஆசிரியை விடயம் மாறி, தான் சுனாமியின் பின்னர் மீன் சாப்பிடுவதை விட்டுவிட்டதாயும் இறைச்சி சாப்பிடுபவர்களைத் தனக்குப் பிடிப்பதில்லையென்றும் பிள்ளைகளுக்காக முட்டை சமைப்பதாகவும் அதுவும் பாம் முட்டையே கொடுப்பதாகவும் கூறத் தொடங்கினார். இதையெல்லாம் கூறும் போது ஒருவிதமான சங்கடம் அவருக்கிருந்தது. மீண்டும் வெள்ளைக்காரர்கள் இப்போதெல்லாம் மரக்கறிகளை அதிகம் விரும்பும் போக்கு அதிகரித்து வருவதாக கூறி மரக்கறி உணவுப்பழக்கத்தின் நன்மைகளை வகுப்பிலிருந்த பிறருக்கு கூறத் தொடங்கினார். எனக்கு இதெல்லாம் மூன்று கதிரைகள் தள்ளி இருந்த முட்டைப் பொரியலுக்கான பிராயச்சித்தமாகவே தோன்றிற்று.

நாடக வகுப்புகள் மிக சுவாரசியமானவை. 1947க்குப் பிற்பட்ட தமிழ் நாட்டு அரங்க செயற்பாடுகளை என்முன்னிலையில் கற்பிக்கும் போதெல்லாம் ஆசிரியரிடம் ஒருவித அசௌகரியம் தொற்றிக் கொள்ளும். ஆரிய பார்ப்பனீயத்துக் கெதிராக திராவிட உணர்வுகள் வெடித்துக் கிளர்ந்த வரலாறு என்ன்முன்னிலையில் கற்பிப்பதற்கு அவருக்கு பல மனத்தடைகள் இருந்தன. சிறிதாய் சிரித்தபடி ஆரம்பிப்பார் 'சர்மா.. குறைநினைக்கக் கூடாது' .

அர்சியல் கற்கும் போதுகூட ஆசிரியர்களிடம் இதை நான் உணர்ந்திருக்கிறேன். பாரதிய ஜனதாவை, ஆர்.எஸ்.எஸ்-இனை விமர்சிக்க நேரும் போதெல்லாம் அவர்கள் என்னைப் பார்த்து சமாளிப்புப் புன்னகை சிந்தத் தவறுவதில்லை. என்னை நோக்கி அவர்கள் கூறும் ச்மாதானப் பிற்குறிப்பு கீழ்க்கண்டவாறு அமைந்திருக்கும்: 'எவ்வளவுதான் பார்ப்பனீயம் கொடூரமானதாய் இருந்தாலும் அது இந்தியாவின் சமூகக்கட்டுமானங்களை முன்னேற்றியிருக்கிறது.' புரிந்து கொண்டதாய்ப் புன்னகைப்பேன். அவர்கள் தொடர்வார்கள் ' அதேபோல முற்போக்குச் சிந்தனை கொண்ட நம்பூதிரிபாடு ஒரு பிராமணர் தானே'. இந்த சமாதானங்களை எனக்கு வழங்கிவிட வேண்டும் எனத் துடிக்கும் ஓர் மனதில் ஊறிப்போயுள்ள பார்ப்பனீய அரசியலை வடிவமைத்தது எதுவாய் இருக்கக் கூடும்?



***

ஷோபா சக்தியின் 'விலங்குப்பண்ணை'

சிறுகதையிலிருந்து சில பகுதிகள்

· // ஒருமுறை பசி மயக்கத்தில் இருந்த ம.அன்ரனியை எட்டு ஸ்ரீ அடித்த அடியில் ம.அன்ரனி மயங்கி விழுந்துவிட்டான். இன்னொரு தடவை விஞ்ஞான டீச்சர் மிஸிஸ் இராசையா பிடித்து அவனை உலுக்கி “ஏனடா நித்திரை கொள்ளவா இங்கே வருகிறாய்?” என்று கேட்டபோது ம.அன்ரனி மரமாய் நின்றிருந்தான். “போய் உங்கள் சாதித்தொழிலைப் பார், உனக்கு எதற்கு சயன்ஸ்?” என்று மிஸிஸ் கந்தையா கேட்டார். வகுப்பில் இருந்த எல்லோருடைய சாதி விபரங்களையும் மிஸிஸ் கந்தையா விரல் நுனியில் வைத்திருந்தார். எப்படி இந்த சாதி விபரங்களை திரட்டினார் என்பது தெரியவில்லை. விஞ்ஞான டீச்சர்! அவருக்க தெரியாத விதிகளா? பரிசோதனை முறைகளா? ஏதாவது ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்திருப்பார். //



· // அதாவது A B C D எனப் பிரிக்கப்படடிருந்த எட்டாவது வகுப்பில் நான்கு பரிவுகளிலும் நாங்கள் இருவர் மட்டுமே வேதக்காரர்கள். //



· // கொடுமை, கொடுமையென்று கோயிலுக்குப் போனால் அங்கே இரண்டு கொடுமை அவிழ்த்துப் போட்டு ஆடிய கதையாய் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் “வைட் அண்ட் வைட்” போட்டுக்கொண்டு வரவேண்டும் என்றொரு அவசர சட்டம் பாடசாலையில் கொண்டுவரப்பட்டது. என்னுடைய முதற் சற்பிரசாதத்துக்காகத் தைக்கப்பட்ட எனது வெள்ளைச் சட்டை எனக்கு இப்போது அளவாக இராது. அதை என் தம்பி போட்டிருக்கிறான். அவனிடம் கெஞ்சி மன்றாடி வெள்ளிக்கிழமைகளில் அச்சட்டையைப் போட்டுக்கொண்டேன். அந்த வெள்ளைச் சட்டை தொப்புள் வரைதான் வரும். அடிக்கடி கீழே இழுத்துவிட்டு சமாளிக்க வேண்டியிருந்தது. வெள்ளைக் காற்சட்டை கிடைக்கவில்லை. அதற்குப் பப்பா கொழும்பிலிருந்து வரும் வரை பொறுத்திருக்கவேண்டும்.வெள்ளிக்கிழமை காலைகளில் ஒரு வெறிநாயின் மூர்க்கத்துடன் அதிபர் பாடசாலையின் முன்வாசலில் நின்றிருப்பார். “வைட் அண்ட் வைட்” போட்டு வராத மாணவர்களின் குண்டிகள் அவரின் பிரம்பால் பழுத்தன. நான் வெள்ளிக்கிழமைகளில் பாடசாலைக்கு மட்டம் போடத் தொடங்கினேன். என் வீட்டு நிலைமை தெரியாத மாணவர்கள் திங்கட்கிழமை காலையில் “பள்ளிக்குக் கள்ளம் பழஞ்சோத்துக்குக் காவல்” என்று பொருத்தமில்லாமல் என்னைப் பழிக்கத் தொடங்கினர். ஆனால் ம.அன்ரனி வெள்ளிக்கிழமைகளிலும் பாடசாலைக்கு போனான். அவனிடமும் “வைட் அண்ட் வைட்” கிடையாது. ஆனால் அவன் அதிபரின் அடியை ஏற்றுக்கொண்டான். அவனுக்கு எதையும் நேருக்கு நேர் சந்தித்துத்தான் பழக்கம். இப்படியான சில விறுமத்தடியன்களை அடித்தும் உதைத்தும் பார்த்துத் தோல்வி கண்ட அதிபர் இறுதியில் அவர்களை “வைட் அண்ட் வைட்” போடும்வரை வெள்ளிக்கிழமைகளில் பாடசாலைக்கு வரக்கூடாது எனத் தீர்ப்பிட்டார். //



· // வகுப்புகள் தொடங்கிய அன்று முதலாவது பாடம் சமயம். இந்து சமய ஆசிரியர் ஜெகசோதி வகுப்புக்குள் வந்துவிட்டார். வந்தவரத்தில் பாடத்தையும் ஆரம்பித்துவிட்டார். எங்கள் வகுப்பில் மிக அழகாகப் பாடக்கூடிய பெண்ணொருத்தியிருந்தாள். அவளுக்கு நாங்கள் கே.பி.சுந்தராம்பாள் என்று பட்டம் கூட வைத்திருந்தோம். அவளை அழைத்து வாத்தியார் ஒரு தேவாரம் பாடச் சொன்னவுடன் அவள் பாட ஆரம்பித்தாள். ம.அன்ரனியின் பெயரில் இருந்து அவனும் கிறிஸ்தவன்தான் என்பது எனக்குத் தெரியும். அவனைப் பார்த்தேன். அவன் கண்களை மூடிக்கொண்டிருந்தான். முன்னைய வருடங்களின் அனுபவங்களின் போது முதல்நாள் சமய வகுப்பில் இந்து சமய வாத்தியார் “வகுப்பில் யாராவது வேதக்காரர்கள் இருக்கிறார்களா?” எனக் கேட்பார். நான் எழுந்து நிற்பேன். “போய் அசெம்பளி ஹோலில் இரு கிறிஸ்தவ சமயத்தைக் கற்பிக்க ஆசிரியர் வருவார்” என்பார். நானும் மூன்று வருடங்களாக தட்டத் தனிய அசெம்பிளி ஹோலில் காத்திருக்கிறேன். வேதக்கார வாத்தியார் வந்தபாடில்லை. இவ்வளவுக்கும் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த ஒரு வாத்தியார் எங்கள் பாடசாலையில் இருந்தார். அவர் சமூகக் கல்வியும் ஆங்கிலமும் கற்றுக் கொடுத்துவந்தார். மற்றைய நேரங்களில் புகைப்படம் பிடிப்பது தபால் தலைகள் விற்பது போன்ற உபதொழில்களையும் மேற்கொண்டு வந்தார். நான் எழுந்து ஜெகசோதி வாத்தியாரிடம் “சேர் நான் கிறிஸ்தவ சமயம்” என்று அறிவித்தேன். “வேறு யாராவது கிறிஸ்தவர்கள் வகுப்பில் இருக்கிறார்களா?” என வாத்தியார் கேட்டார். ம.அன்ரனியும் எழுந்து நின்றான். வாத்தியார் எங்கள் இருவரையும் அசெம்பிளி ஹோலுக்கு அனுப்பினார். //



· // நாங்கள் இருவரும் அசெம்பிளி ஹோலில் போய் ஒரு மூலையில் இருந்தோம். சற்று நேரத்தில் அவ்வழியால் சென்ற அதிபர் ‘ஏன் இங்கு இருக்கிறீர்கள்?” எனக் கேட்டார். “கிறிஸ்தவ சமயப் பாடம்” என்றேன். “இருங்கள் மாஸ்டர் வருவார்” என்று கூறிவிட்டுச் சென்றார். நான் அந்தப் பள்ளிக்கூடத்தில் இருந்து விலகும் வரை கிறிஸ்தவ சமய ஆசிரியர் வரவேயில்லை. //

Posted by Team@muranveli

Eezham..Tamil;

My Photoகுசினி மூலையில் வருபவர்களுக்குத் தேத்தண்ணி போடும் சாக்கில் நேரத்தைக் கடத்திக்கொண்டு நின்றாள் கௌசி. நினைவு மைவிழியையே சுத்திச் சுத்தி வந்துகொண்டிருந்தது. “தலைக்கு வாருங்கோ” எண்டு அண்ணா கூப்பிட்டுவிட ஆயாசத்தோடு மனம் நிறைய தண்ணியை அள்ளி அள்ளி வார்த்தாள் கௌசி “சரி காணும்” கிண்ணியைப் பிடுங்கி அண்ணியின் அக்கா அடுத்த பொம்பிளையிடம் குடுத்தாள்.


கன்னங்கள் சிவக்க முகத்தில வடிந்த தண்ணியை சிரித்த படியே வாங்கிக் கொண்டு, மைவிழி கௌசியின் கைய வருடி விட்டாள். சிலிர்த்த உடம்பு அடங்க முதல் அவளை கட்டிப்பிடித்து ஈரம் சீலையில் ஊறியதும் உணராமல் கொஞ்சிக் கண்கலங்கி “என்ர குஞ்சு” எண்டாள். உருண்ட முகத்தில், விரிந்த கண்களால் கௌசியைப் பாத்து வெட்கத்துடன் சிரித்தாள் மைவிழி.



மைவிழியின் ஒவ்வொரு அசைவையும் பாக்க ஆசைப்பட்டவளாய் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த கௌசியிடம் “அண்ணி வாறாக்களுக்குப் பாத்துப் பலகாரம் குடுக்கிறீங்களே, அண்ணி வாறாக்களுக்குப் பாத்து தேத்தண்ணி குடுக்கிறீங்களே” கைக் குழந்தையோடும் பட்டோடும் வேர்க்க விறுவிறுக்கப் பறந்து கொண்டிருந்தாள் அண்ணி.



“என்ன கக்காத் துணி தோச்சனீரே” பெட்டைகள் பின்னேர நேரத்தில அரட்டையடிக்க கிணத்தடியில சந்திக்கேக்க கேக்கிற போது கையையும், சட்டையையும் மணந்து மணந்து பாப்பாள். தோள் பட்டையில எப்பவுமே ஒரு புளிச்ச மணம் நிரந்தரமாய் வீசும். கௌசி தலையச் சரிச்சுச் சரிச்சு மணந்து பாப்பாள். ஒருவித சுகம் அவளை அணைத்துக் கொள்ளும். சட்டை திட்டுத் திட்டாய் அங்குமிங்கும் விறைத்துக் கிடக்கும். பிரசவத்தின் முழு மோகனங்களுடனும் அலைந்து கொண்டிருப்பாள் அவள்.



“நல்லா பால் மண்டீட்டாள் ஒருக்கா ஏவறைக்குத் தட்டுறீரே” குழந்தையைக் குடுத்து விட்டுப் போவாள் அண்ணி. நிமித்தி தோளோட சேத்து அணைத்து முதுகை மெல்ல மெல்லத் தட்ட, நெளிந்து தலையத் தூக்கித் தூக்கி மோதி, தோளைச் சூப்பி பெரிதாகச் சத்தமாய் ஏவறை விட, தோள் ஈரமாகத் திரைஞ்ச பால் பின் சட்டையில் வடியும். வாய் துடைத்து இறுக அணைத்துக் கொஞ்ச, அவள் மார்போடு முகம் தேச்சு முலையை வாயால் கௌவ முயலும் குழந்தை “ச்சீ போடி கெட்ட பெட்டை என்னட்டைப் பால் இல்லை, அம்மாட்டக் குடிச்சது காணாதே குடிகாறப் பெட்டை” கன்னத்தில் செல்லமாய் அடிக்க, சின்னதாய் துடித்து வீடிட்டுக் கத்த இறுக அணைத்துக் கொள்ளுவாள்.



“கக்கா இருந்திட்டாள் போல” அண்ணி கை நீட்ட “நான் மாத்திறனே” கட்டிலில் துணி விரிச்சு குழந்தைய நிமித்திக் கிடத்த அது சிணுங்கும். “எண்ட செல்லமெல்லோ, எண்ட குஞ்செல்லோ” சொன்ன படியே முகத்தோடு முகம் தேச்சுக் கொஞ்ச குழந்தை சிரிக்கும்.

“எண்ர செல்லம் சிரிக்குதோ, ஆ.. என்ர ராசாத்தி சிரிக்குதோ” கண்ணுக்குள் பாத்துக் கேட்டபடியே உடுப்பைக் கழற்றி துணிக்குக் குத்தியிருக்கும் பின்னை ஆட்டாமல் கழற்றுவாள். “சீ கக்காப் பெட்டை, என்னடி செஞ்சு வைச்சிருக்கிறாய்?” கேட்டபடியே மூக்கைச் சுளிச்சு துணியை அகற்றி, சின்னத் துவாயை ஈரமாக்கி உடம்பைத் துடைப்பாள். கால்களை அகற்றி பௌடர் போட்டு “இப்பிடியே கிடந்து கொஞ்ச நேரம் விளையாடு காத்துப் படட்டும்” பக்கத்தில படுத்திருப்பாள்.



“சின்னப்பாப்பா எந்தன் செல்லப் பாப்பா

சொன்ன பேச்சைக் கேட்டாத்தான் நல்ல பாப்பா-

சின்னப் பாப்பா எந்தன் செல்லப் பாப்பா



தின்ன உனக்குச் சீனி மிட்டாய் வாங்கித்தரணுமா

சிலுக்குச் சட்டை சீனாப் பொம்மை பலூண் வேணுமா

கண்ணாமூச்சி ஆட்டம் உனக்குச் சொல்லித் தரணுமா

அப்போ கலகலலெண்டு சிரிச்சுக் கிட்டு

என்னைப் பாரம்மா…”



குழந்தை அவள் பாட்டை ரசிச்ச படியே “ங்க ங்க” எண்டு சேர்ந்து பாடும்.



“அண்ணி அண்ணி இஞ்ச ஓடிவாங்கோ” பதறியடிச்சு ஓடிவந்த அண்ணியிடம் மைவிழிக் குட்டி உடம்பு பிரட்டப்பாக்கிறாள்” எண்டு பரவசமாய்ச் சொல்லுவாள். “போடி அடுப்பில கறி, நீ கத்த நான் பயந்திட்டன்.” அண்ணி கொஞ்ச நேரம் நிண்டு பாத்துவிட்டு போய் விடுவாள். “என்னடி குட்டி ஏமாத்தீட்டாய்.. இஞ்ச இப்பிடி இப்பிடித் திரும்பு” எண்டு குழந்தைக்குப் பக்கத்தில் கிடந்து தன் உடம்பை பிரட்டிப் பிரட்டிக் காட்டுவாள். அண்ணா அண்ணியைக் கூப்பிட்டு “இஞ்ச எங்கட கௌசிக் குட்டி உடம்பு பிரட்டுறாள் படம் எடுப்பம் கமெராவைக் கொண்டு வாரும்” முகம் சிவக்க சட்டையை இழுத்து விட்டு எழும்பி இருப்பாள்.



“நடவடி சக்கை மாதிரி இருக்கிறாய்.. உன்ர வயசில எல்லாம் ஓடித்திரியுதுகள்” மைவிழியின் கையைப் பிடித்து எழுப்பி, நிப்பாட்டி தன் கைகளோடு அவள் கைகளைப் பிணைத்து, பின்பக்கமாய் தான் நடந்து சின்னச் சின்ன அடியாய் அவளை நடக்கச் செய்வாள். “என்ர குஞ்செல்லே நடவம்மா.. ஆ.. கெட்டிக்காறி அப்பிடித்தான் அப்பிடித்தான்..” கௌசிக்கு முதுகு பிடித்துக் கொள்வதுதான் மிச்சம். முதலாவது பிறந்தநாளுக்கு மைவிழி நடக்காமல் போனது கௌசிக்கு வெக்கக் கேடாய் இருந்தது. “என்ர அக்கான்ர மகள்.. என்ர அண்ணான்ர மகன்.. பெட்டைகள் சொல்லிக் கொண்டே போவார்கள்..



“கௌசிமாமி அந்த ராஜாக்கதை.. கௌசிமாமி பொரியல் தாங்கோ.. கௌசிமாமி எனக்குக் காச்சல் நான் பள்ளிக்கூடம் போகேலை.. கௌசிமாமி..கௌசிமாமி..”



மைவிழியைக் குளிக்கவார்த்தபடியே “சின்னச் சின்னக் கை, சின்ன மூக்கு, சின்ன வாய்” கௌசி அடுக்கிக் கொண்டு போக “இதென்ன கௌசிமாமி, சின்னப் பாப்பா” தன்ர மார்பைத் தொட்டுக் கேட்டுச் சிரிப்பாள். “போடி கள்ளப் பெட்டை” கன்னத்தைத் தட்டுவாள் கௌசி. “உங்களுக்கு மாதிரி எனக்கும் பெரிசாகுமா” கண்கள் அகல கௌசியின் உடம்பைப் பார்த்த படியே கேட்பாள் மைவிழி. அவளின் உடம்பில் சவுக்காரத்தைத் தேச்ச படியே “ஓம் கொஞ்சம் கொஞ்சமாப் பெரிசாகும், அப்ப மைவிழிக் குட்டி பெரிய பொம்பிளையா வளந்து வளந்து வருவாள்.. கௌசி மாமி மைவிழிக் குட்டிக்குச் சீலை கட்டி, தலையெல்லாம் பூ வைச்சு, நகைகளெல்லாம் போட்டு வடிவா வெளிக்கிடுத்தி விடுவன், மைவிழிக் குட்டி ராசாத்தி மாதிரி இருப்பாள் என்ன?” மைவிழியின் கண்கள் கனவில் மிதக்க ஒரு கணம் எங்கோ சென்று திரும்புவாள். “கனக்க ஆக்களெல்லாம் வருவீனமே.. நிறம்ப பிரசெண்ட் எல்லாம் கிடைக்குமே”, “ம்..போடி உனக்கு பிரசெண்ட்தான் முக்கியம்” அவள் துடையில் அடிப்பாள். “ஆ..ஆ” அழுவது போல் நடிக்கும் மைவிழியின் தலையில்

“ஒரு குடம் தண்ணி – நூறாண்டு

ரெண்டு குடம் தண்ணி – நூற்றிப் பத்தாண்டு

மூண்டு குடம் தண்ணி – நூறு நூறு நூறாண்டு

ஐயோ தண்ணி முடிஞ்சுதே” சோகமாக முகத்தை வைத்துக் கொள்ளுவாள்..



துவாயை உதறி தலையைத் துடைச்சு, உடம்பை சுத்தி நடுங்கும் மைவிழியைத் தன் உடலோடு அணைத்துத் தூக்கி அறைக்குள் ஓடி வந்து, உடம்பைத் தேய்த்துத் துடைத்து, பௌடர் போட்டு, தலைக்கு ஓடிக்கொலோன் பூசி, சுருங்கியிருக்கும் கைகளைத் தன் கையோடு சேர்த்துத் தேச்சுச் சூடாக்கி, பொக்கிள் மேல் வாயை வைத்து ஊதிவிட்டு, மைவிழி கூசி நெழிந்து கலகலவென்று சிரிப்பாள்..





கௌசியின் முதலிரவன்று மைவிழி நித்திரை கொள்ளவில்லை. “எனக்குக் கௌசிமாமியோட படுக்க வேணும்” குரலெடுத்துக் கத்தியவளை இரவிரவாகக் கொண்டு அலைந்ததாய் அண்ணி இப்பவும் சொல்லிச் சிரிப்பாள்.

“கௌசி மாமி ஒருக்கா வீட்டை வாறீங்களே” காலம வெள்ளணை போன் வந்தபோது பயந்து போனாள் கௌசி. “என்னம்மா என்ன நடந்தது” கேட்டவளிடம் “நீங்க இப்ப உடன இஞ்ச வாங்கோ” விசும்பினாள். “என்னடா அம்மா எங்கை? என்ன நடந்தது? சொல்லனம்மா” “அம்மாவும், அப்பாவும் நித்திரை, எனக்கு உங்களோட கதைக்க வேணும்” கௌசிக்கு கொஞ்சம் விளங்கியது, கணவனிடம் சொல்லி விட்டு மனம் குதூகலிக்க “உடன மாமி வாறன் நீங்கள் போய் அறைக்குள்ள இருங்கோ சரியே” அண்ணி எழும்பு முதல்லே மைவிழிக்கு நப்பிண் பாவிக்கச் சொல்லிக் குடுத்தாள் கௌசி.



“பதின்மூண்டு பொம்பிளைகள் வேணும் தட்டுத் தூக்க கூப்பிடுங்கோ நேரம் போகுது” அண்ணியின் அக்கா பெரிய குரலில் கத்தினாள். “இஞ்ச உதில இருந்து கொசிப்படிக்காமல் தட்டுத் தூக்க வரட்டாம் பொம்பிளைகளே போங்கோ” பட்டும், நகையுமாய் ஜொலித்த பொம்பிளைகளைக் கிண்டலாய் கூப்பிட்டு குசினிக்குள் வந்து “இஞ்ச என்ன செய்யிறாய் தட்டுக் கொண்டு வரக் கூப்பிடீனம் போ” அண்ணா சொல்லி விட்டுப் போனான். “கௌசி மைவிழி கூப்பிடுறாள், தன்னோட உங்களையும் வரட்டாம்.. அவளுக்குப் பக்கத்தில தட்டோட வாங்கோ” அழுத மகனைத் தோளில போட்டு ஆத்திய படியே அண்ணி வந்து கையைப் பிடித்து இழுத்தாள். “இல்லை அண்ணி உவனை என்னட்டத் தந்திட்டு நீங்கள் போங்கோ”, “இஞ்ச நேரம் போகுது, மைவிழி உங்களத்தான் வேணுமெண்டு கேக்கிறாள் போங்கோ” பிடிச்சுத் தள்ளாத குறையாச் சொல்லிவிட்டுப் போய் விட்டாள் அண்ணி.

வரிசையாகப் போன பெண்களோடு தானும் சேர்ந்து கொண்ட கௌசியைப் பார்த்து கண்களால் சிரித்துத் தலையாட்டினான் அவள் கணவன். கௌசிக்கு வெட்கமாக இருந்தது. “இண்டைக்கு இரவைக்கு இருக்கு உங்களுக்கு” அவளும் கண்களால் சொல்லிவிட்டுப் போனாள்.



“இந்தாங்கோ பலகாரத்தட்டு, இந்தாங்கோ பழத்தட்டு, இந்தாங்கோ பூத்தட்டு..” தட்டுகளைத் தூக்கித் தூக்கிப் பெண்களிடம் குடுத்துக் கொண்டிருந்தாள் அண்ணியின் அக்காள். கௌசியில் தோள் மேலால் தட்டுகள் பின்னேறிப் போய்க் கொண்டேயிருந்தன. கௌசி மௌனமாக நின்றாள். சுவர்கள் ஒடுங்கி நீள, மூச்சு முட்டுவதுபோல் சுவாசமின்றித் தடுமாறினாள். தலையில் சடைநாகத்துடன், மூக்கு மின்னியும், நெத்திப் பொட்டும், சீலையுமாய் மைவிழி யாரை ஞாபகப்படுத்துகின்றாள். மைவிழி அவளைக் கட்டிப்பிடிச்சு மார்போடு முகம் வைத்துக் கண்கள் கலங்க கைகளை இறுக்கினாள். “நீர் இப்பவும் சின்னப்பிள்ளையில்லை தெரியுமோ? பெரியபிள்ளை மாதிரி ஃபிகேவ் பண்ணும் பாப்பம், மேக்கப்பெல்லே குழம்பீடும்” கையைப் பிடித்து மைவிழியை இழுத்து விட்டாள் லண்டனிலிருந்து வந்திருந்த அண்ணியின் அக்காள்.

தொண்டைக் குழி இறுக, தொடைகள் நடுக்கம் கண்டன. கௌசியின் கால்கள் இயங்க மறுத்தன. பெரிதாய் நாதஸ்வரம் அலறியது. சிரிப்பும் சிங்காரமுமாய் பெண்கள், ஆண்கள், குழந்தைகள், முதியவர்கள்..



எங்கோ காட்டில் தனித்து விடப்பட்டவள் போல் கௌசியின் மனம் பயம் கண்டது. கணவனை இறுக அணைத்து உடலுறவு கொள்ளவேண்டும் போல் வேகம் கொண்டது உடம்பு. உன்னை நான் இறுக அணைத்துக் கொள்கின்றேன். என் கருப்பைக்குள் உன் விந்தைக் கொடு, அது கருக்கட்டி உருப்பெற்றுக் குழந்தையாக மாறட்டும்.. என் அடிவயிறு நோக் காண கால்கள் வலிக்கட்டும். என் வயிற்றைக் காலால் சிசு எட்டி உதைக்கட்டும், என் பெருத்த வயிறுடன் உன் தோள் தாங்கி நெடுந்தூரம் நடந்து வருகின்றேன். பிரவச வலி எனக்கும் வேண்டும். என்னைத் தாங்கு உன்னுடன் பிணைத்துக் கொள்.. உலகின் எல்லா நோவும் என்னைத் தாக்கட்டும்.. என் யோனி கிழித்து உலகை குழந்தை ஒன்று எட்டிப் பார்க்கட்டும்;, என் முலையின் கட்டிப் போன பாலை அது சப்பி உறிஞ்சிக் குடிக்கட்டும்... என் உடலிலிருந்து உதிரம் வழிந்து தெருவெங்கும் ஓடட்டும்.. நானும் தாயாக எனக்கும் ஒரு வரம் கொடு.. எனக்கும் ஒரு வரம் கொடு.. எனக்கும் ஒரு வரம் கொடு..



“தட்டுத் தூக்க ஒரு ஆள் குறையுது கூப்பிடுங்கோ” அண்ணியின் அக்கா குரல் எங்கோ தொலைவில் கேட்டது.

Posted by கறுப்பி

வியாழன், 21 ஜூலை, 2011

timepass..

14.7.11பராக்குப்பார்த்தல் - ராமநாதபுரத்து நாட்கள்


கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஓடிவிட்டது. சாத்தூரிலிருந்து பெயர்த்தெடுத்துக் கொண்டுபோய் ராமநாதபுரத்தில் ஒரு விடுதி அறையில் என்னை நட்டுவைத்து. சுற்றிச்சுற்றி வந்து பார்க்கிறேன். வாழ்க்கை புது நாத்துப்போல துவண்டு நிற்கிறது. அதைத்தூக்கி நிறுத்த புத்தகங்களையே கதியெனத் தேடி ஓடவேண்டியதிருக்கிறது. வாங்கிவைத்து படிக்கமுடியாமல் போன புத்தகங்கள் தனிமைக்கான அருமருந்தாய் வந்துசேர்கிறது. படிக்கப் படிக்க வியப்பை அதிகரிக்கிறது ஒருபொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம். அந்த எழுத்துக்கள் நாம் பார்க்கும் மேலோட்டமான உலகத்தையும் செய்திகளையும் அரசியலையும் அப்படியே குப்புறக்கவுத்தி தெருவில் வீசுகிறது.அணைகள், மேம்பாலங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் பளபளப்புக்குப் பின்னாடி அமெரிக்க கழுகின் எச்சில்வடியும் நாக்குகள் தொங்கிக் கொண்டிருப்பதைச் சொல்லுகிற புத்தகம் தான் பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம். எதையெதையோ தோண்டித் துருவிக்கண்டுபிடிக்கிற இந்திய உளவுத்துறை இதுபோன்ற உலகளாவிய சதிவலைப் பின்னல்களின் பக்கம் திரும்பிப் பார்க்கவே பயப்படுகிறது. அது பயமா மரியாதையா இல்லை ஊரில் வட்டிக்கு கொடுத்து வாங்குகிறவர்களைப்பார்த்து ஓடி ஒளிந்துகொள்கிற உதறளா என்று தெரியவில்லை.



சகோதரர் கோணங்கியின் கல்குதிரை கிடைத்தது. அவரது எழுத்துக்கள் குறித்து இருபதுவருடங்களுக்கு மேலான பயம் இன்னும் தெளிந்த பாடில்லை. ஆனாலும் அவரது கல்குதிரை இதழ்களில் வரும் சில எழுத்துக்கள் பிரம்மிப்பாக இருக்கும். அப்படித்தான் பிரம்மிக்க வைத்தவர் தோழர் மு.சுயம்புலிங்கம்.அதே போல இந்த வேனிற்கால இதழில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு கதை ச.விஜயலட்சுமியின் பாராசூட் மனிதர்கள் சிறுகதை. சென்னை நமக்கு கடற்கரையையும்,நெரிசலையும் ஆட்டோக்களையும்,சுடசுட சினிமா போஸ்டர்களையும், ரெங்கநாதன் தெருவையும்,பண்டிபஜாரையும் இன்னும் பல ஈர்ப்புகளை செய்துவைத்திருந்தாலும் அந்த எழும்பூர் ரயில் நிலையத்துக் கருகில் வசிக்கும் கூவம் நதிக்கரை மனிதர்கள் கட்டாயம் மனிதாபிமானமுள்ள யாரையும் ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு விடுவார்கள். அவர்கள் குறித்தான நமது மௌனக் கேள்விகளுக்கு ஒரு பகுதி விடை சொல்லுகிறது பாராசூட் மனிதர்கள்.



புத்தகங்கள் பற்றியென்பதனால் ராமநாதபுரம் புத்தகக்கடையில் நடந்த ஒரு உரையாடலைச்சொல்லாமல் இருக்கமுடியாது. அது ஒரு விரிவடைந்த பாடப்புத்தகங்கள் விற்கிற கடை. இது பள்ளிகள் ஆரம்பிக்கும் காலமாதலால் அங்கே ஒரு மாணவன் அவனின் பெற்றோர்கள் என்கிற கணக்குப்படி விலக இடமில்லாத கூட்டம். அங்குதான் கதைப்புத்தகங்களும் சிற்றிதழ்களும் கிடைக்கும் என்று நண்பர் சொன்னதை நம்பிக்கொண்டு போயிருந்தேன்.அவர் சொன்னதில் ஏதும் தவறும் இல்லை. பத்தடி அலமாரியில் எல்லாம் ரமணிச்சந்திரன் நாவல்கள், கண்ணதாசன் கட்டுரைப்புத்தகங்கள்,ராஜேஷ்குமார் போன்றவர்களின் படைப்புகள் அம்பாரமாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தது. நெடுநேரம் புத்தகங்களுக்கிடையில் ஊற்றுப்பர்த்துக்கொண்டிருந்த என்னிடம் சிப்பந்தி என்னவேண்டுமெனக்கேட்டார்.



சாண்டில்யன்,லேனா தமிழ்வாணன்,கண்ணதாசன் என சில புத்தகங்கள் பற்றி சின்னதாக அறிமுகமும் செய்துவைத்தார். அவை வேண்டாமென்று சொல்லிவிட்டு ஒரு சில புத்தகங்களைச் சொன்னேன் என்னை அவர் பார்த்த பார்வையை எப்படி விவரிப்பதென்று தெரியவில்லை. அங்கிருந்து வெளியேறி வர நகர்ந்த போது அப்பாவின் விரல்பற்றியிருந்த சிறுவன் ஜெயாமோகன் அப்படின்னா யாருப்பா என்று கேட்டான்.அவனைப்பார்த்தால் ஒரு சிபிஎஸ்இ பள்ளியின் மாணவனாக அல்லது குறைந்த பட்சம் அதிகபட்சம் பணம் கட்டிப்படிக்கும் ஆங்கிலப் பள்ளி மாணவனாகவாவது இருக்கவேண்டும். அவனது பொறுப்புள்ள அப்பா இப்படிச்சொன்னார் ''ஷி இஸ் எ ஸ்டோரி ரைட்டர்'' என்று. என்னை முறைத்துப் பார்த்த அந்தச் சிப்பந்தியே பரவாயில்லை எனத் திரும்பிப் பெருமிதத்தோடு பார்த்துவிட்டுவந்தேன்.







Elloraa.

.முகப்புபுத்தகங்கள்.எல்லோரா My Photo


இளங்கோ கல்லானை
பயணம்

வேலையை விடுவது என்பது இப்பொழுது அடுத்த வேலையைத் தேடுவதற்கு என்பதற்கு மாறாக, அடுத்த இடத்தைத் தேடுவது என்றாகி விட்டது. வேலையைப் பெறுவது எவ்வளவு இன்பமோ அதைவிடப் பல மடங்கு இன்பம் வேலையை விடுவது என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். சத்தீஸ்கர் மாநிலம் கொடுத்த அனுபவம் தந்த தைரியத்தில் எங்கு வேலை கிடைத்தாலும் சுற்றிப் பார்க்கலாம் என்ற நம்பிக்கை. அதுவும் தகவல் தொழில்நுட்பத் துறையில் சக குமாஸ்தாக்களின் பாவனைகளையும், அவர்கள் அமெரிக்கா செல்ல நகர்த்தும் காய்களையும் கடந்த ஆறு வருடங்களாகப் பார்த்துப் பார்த்துச் சலித்தாகிவிட்டது. அமெரிக்கா அமெரிக்கா என்று மூச்சு விடும் கூட்டத்திற்கு மத்தியில் வாழ்வது பெரும் வேதனை. அப்படி மூச்சு விடுவதன் பலன்களைப் பற்றி பதஞ்சலி யோக சூத்திரத்திலோ அல்லது திருமூலரின் மந்திரத்திலோ என்ன சொல்லப்பட்டிக்கிறது என்று வாழும் கலையறிந்த யாராவது சொன்னால் நல்லது.



எனக்கு இருப்புக் கொள்ள முடியாத கொழுப்பு வேறு. ரொம்ப நாள் தாங்கக்கூடிய வேலை ஒன்றும் கிடைக்கவில்லை. இரண்டே இரண்டு டப்பாக்கள் தான் எல்லா இந்திய தகவல் தொழில் நுட்ப வல்லுனர்களையும் நகர்த்துகிறது. ஒன்று அடுக்குமாடி வீடுகளில் ஒரு வீடு எனும் டப்பா, இன்னொன்று சொகுசு கார் எனும் டப்பா. வட்டிக் கணக்கை பற்றியே பேசும் பள்ளிக்கூட வாத்தியார்கள் இவர்களை விட மேல் என்ற எண்ணம் உருவாகி விட்டது. Eat shop and be happy என்று நகரெங்கும் விளம்பரங்களைப் பார்க்கும் போது, ஆகா என்னே ஒரு உன்னத அறிவு நிலையை அடைந்து விட்டோம் என்று ஆனந்தக் கூத்து ஆடாமல், கிடைத்த வேலையில் நிலைக்கத் தெரியாமல் ஓடத் தயாரான நிலையிலேயே இருந்தேன். எங்களூரில் சித்திரை மாதம் பிறந்தால் பண்ணைகளை மாற்றி வேறு வேலைக்குச் செல்வார்கள் பண்ணை வேலைக்காரர்கள் .அப்பொழுது கணக்கு முடிக்கப்படும். வேலையை விடுவதை சித்திரை விடுவது என்று சொல்லுவார்கள். தகவல் தொழிலில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் அதாவது சித்திரை திறன்களை மதிப்பிடும் காலமும் கூட. எனக்கு சித்திரை மாதம் தலைக்குள் வழக்கம் போல மின்னலடித்தது. நமக்கு என்ன ஒரு ஐந்து சதவீதம் சம்பள உயர்வோ அல்லது அடுத்த மேலாளர் பதவியோ தருவார்கள். வேறு ஒன்றும் நடக்காது. நானும் சித்திரை விடலாம் என்று முடிவெடுத்தேன். அலுவலகத்தில் சொல்லிவிட்டு ஒரு மாதக் காலக்கெடுவையும் கொடுத்துவிட்டு வீடு திரும்பினேன். அடுத்து எந்த இடம் என்று யோசிக்கக்கூட இல்லை. ஆனால் எனக்கு ஒரு சங்கடம் அதில் இருந்தது.



பூனாவில் நாங்கள் சென்ற ஆண்டு குடியேறிய பொழுது ஒரு பெண் வேலை கேட்டு வந்தார். வீட்டு வேலைக்கு ஆள் தேவை இல்லை என்றாலும், சில வேலைச்சுமைகள் குறைவது என்னவோ சரிதான் என்று பட்டது . சரி என்று ஒப்புக் கொண்டு அவரை வேலைக்கு அமர்த்திக் கொண்டோம். எனது மனைவிக்கு சுற்றத்துடன் சமூகஉறவு உருவாவதில் உற்ற துணைவியாக மாறினார் அந்தப் பெண். என் மனைவியை பாபி என்றும் என்னை பையா என்றும் அழைத்தார். எனது மகன் அவரை அத்தை என்று அழைத்தான். மராத்தியிலும் அத்தை தான். அவருடைய தம்பியின் திருமணத்திற்கு எங்களைத் தயங்கித் தயங்கி அழைத்தார். என்ன காரணம் என்று இந்தியாவில் பிறந்த எவரும் யூகிக்கக் கூடியதுதான். அவர் ஒரு தலித். மகாராஷ்டிரம் வந்த பின்பு எங்களுக்குக் கிடைத்த முதல் அழைப்பு. எனக்கும் திருமணங்கள் எப்படி நிகழ்கின்றன என்று பார்க்க ஆர்வம். நாங்கள் திருமணத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்ற பொழுது ஒரு வெள்ளைப் புடவை வாங்கித்தரச் சொன்னார். நமது மங்களகர நிறக் கருத்துக்களுக்கு இப்படி ஒரு சோதனையா என்று கொஞ்சம் நெருடலாக இருந்தது உண்மைதான். அப்புறம் ஒருவழியாக விளக்கினார். தாங்கள் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள், போதி சத்துவர், அம்பேத்கர் உருவப் படங்களின் முன்னிலையில் அனைவரும் வெள்ளுடை அணிந்து திருமண உறுதி ஏற்றுக் கொள்வோம் என்றார். நாங்கள் திருமணத்திற்குச் சென்றோம்.



அப்பொழுதுதான் மகாராஷ்டிர மாநில தலித்துக்களை ஓரளவு பௌத்த மதத்தின் வழியாக ஒருங்கிணைக்க முயன்றிருக்கிறார் அம்பேத்கர் என்று புரிந்தது. திருமணம் முடிந்த பின்பு எல்லோரா கோவில்களுக்கு புனிதப் பயணம் செய்வது வழக்கம் என்று சொன்னார்கள். புத்த மதக் கலாசாரம் வேரூன்றிய மண்ணாக மராட்டியம் இருந்தது என்பதைத் தொடர்புபடுத்தியும் அம்பேத்கர் யோசித்திருக்கலாம் என்று பட்டது.புத்த மதம் வழியாக சாதியைக் கடக்க முயன்றிருக்கிறார் அம்பேத்கர். ஆனால் என்ன, உலகின் முக்கிய கலைச் சின்னங்களாக அஜிந்தா (இப்படித்தான் மராட்டியில் சொல்ல வேண்டும்) மற்றும் எல்லோரவை கருத மக்களுக்கு உரிமை இருக்கிறது. கலையைக் கண்டவருக்கு அவர் இன்பம், கடவுளைக் கண்டவருக்கும் அவ்வாறே.



இந்தப் பெண்ணும் நாம் சித்திரை விட்டதால் வேலையை விட வேண்டியதிருக்குமே என்று கொஞ்சம் வருத்தம் இருந்தது. பெரிய முடிவுகளைச் சிறிய முடிவுகள் பாதிக்கத் தானே செய்யும் என்றாலும் ஒரு மாற்று ஏற்பாட்டைச் செய்து விடலாம் என்று முடிவெடுத்து வேறு வேலை வாங்கித் தந்து விட்டேன்.



நண்பர்களை அழைத்து வேலையே விட்ட விஷயத்தை தெரிவித்தேன். மகாராஷ்டிரத்தை சுற்றலாம் என்ற யோசனையைத் தெரிவித்தேன். அழகேச பாண்டியனும், வசந்தகுமாரும் பயணம் என்றால் சளைக்காதவர்கள். நெடு நாட்களாக நான் பார்க்க நினைத்த இடங்கள் அஜிந்தாவும் எல்லோராவும். 1997 இல் ஒரு முறை சைக்கிள் பயணமாகச் செல்ல முடிவெடுத்து அது தோல்வியில் முடிவுற்றது. இப்பொழுது வாய்ப்பு. அழகேசன் தனது வாகனத்தை தயார் செய்தார். வசந்தகுமார் நண்பர்களைத் தயார் செய்தார். பயணத்திட்டம் இனிதே தொடங்கியது. வசந்தகுமார், அழகேசன், சு.வேணுகோபால், செல்வ புவியரசன் புனே வந்து சேர்ந்தனர். ஆடு வளர்ப்பு தொடர்பாக ஒரு பண்ணையில் சில கேள்விகள் கேட்க விரும்பி பாராமதி மாவட்டம் போய் அங்கிருந்து ஔரங்கபாத் சென்று சேர்வதாகத் திட்டம். காலையில் கிளம்பினோம்.



அதிகாலை கிளம்ப நினைத்து ஒன்பது மணி ஆகிவிட்டது. ஐந்து பேர் என்பது நல்ல கையடக்கமான எண்ணிக்கை தான். காலையில் பூனாவில் இருந்து சாஸ்வத் மலை வழியாகக் கிளம்பினோம். சாஸ்வத் எனும் ஊர் பூனாவைச் சுற்றி இருக்கும் மலைகளில் ஒன்றின் மேல் அமைந்திருக்கும் சிறு ஊர். நீரா வழியாகச் சென்றடைய வேண்டிய ஊர் வட்ஜல். அங்கு ஆடு வளர்ப்பு ஆராய்ச்சி மையம் உள்ளது. நானும் அழகேசனும் ஆடு வளர்ப்பு பற்றி இரண்டு வருடமாக திட்ட அளவில் முயன்று வந்துள்ளோம். அதைப் பற்றிய முறையான தகவல்கள் ஆவணகளையும் சேகரித்து வருகிறோம். ஒருங்கினைந்த பண்ணை அமைப்பதற்குத் தேவையான மூலப்பொருட்களில் ஆட்டு உரமும் ஒன்று.



கோடை தொடங்கி இருந்ததால் சாஸ்வத் மலைகளில் மலைகளில் உள்ள புற்புதர்களுக்கு தீ வைத்து கருக விட்டிருந்தனர். இது ஒரு நவீன விவசாய முறை. குறிப்பிட்ட அளவு ஏறியவுடன் சமதரை வரக் கூடிய உயரமான மலைகள். பச்சையாகவும் இல்லாமல் பாறையாகவும் இல்லாமல் தூரத்தில் இருந்து மணல் மேடு போல் தோற்றமளிக்கும் மலைகள். இன்னும் கூட அதிகமாக மாட்டு வண்டிகளைப் பயன்படுத்தக்கூடிய குறுகலான சாலைகள் தான். ஆனால் பூனாவில் இருந்து வட்ஜல் செல்லும் வழியில் பெரிய நெரிசல் ஒன்றும் இருக்காது. ஜெஜூரி என்ற ஊர் வரும் வரை கொஞ்சம் பசுமையான விவசாயம் தென்பட்டது. பச்சைக் காய்கறிகள் அதிகம் கிடைக்காது. எங்கும் மாதுளைச் செடிகள். மாதுளம் பழங்கள் குறைந்த விலையில் கிடைக்கும். இங்கே உள்ள மாதுளை இனிப்பாக இருக்கக் காரணம் ஒன்றைச் சொன்னார் தோட்டக்கலை நிபுணர் ஒருவர். அதாவது பகலில் அதிகமான வெயிலும் இரவில் நேர்மாறான குளிரும் இருக்கும் பகுதியில் பழங்களும் அதிக இனிப்புடன் இருக்கும் என்பது ஒரு மரபியல் விதி. நிலம் மேடும் பள்ளமாக ஏறி இறங்கிச் செல்வதை இரு சக்கர வாகனத்தில் உணருவதைப் போல காரில் உணர முடியாது. இதே மலைகள் ஆனி மழைக் காலத்துக்குப் பின்பு அப்படியே பசுமையாக மாறிவிடும். பச்சைப் புல் ஆறடி வரை உயர்ந்து விடும். இடையிடயே சோளம் கரும்பு, தக்காளி, கீரை விவசாயம் தென்பட்டது. வசந்தகுமார் மகாராஷ்டிர கிராமப்புறங்கள் எதிர்பார்த்திருந்ததை விட ஏமாற்றம் அளிப்பதாகச் சொன்னார். பொட்டல்களும் விளைநிலமாகத் தகுதியில்லாத மேடுபள்ளங்களும் நிறைய. இங்கே மாற்றுத்தொழில் பாலைவன மிருகம் என்றழைக்கப்படும் ஆடு வளர்ப்புதான்.



நீரா என்ற ஊர் சென்றடையும் வரை எங்கும் பச்சையைக் காண முடியவில்லை. நீராவில் ஒரு கால்வாய் நிறைந்து ஓடியது. அருகில் அரை உயிருடன் ஓடும் ஆறும் உண்டு. எனக்குத் தெரிந்த இந்தியிலும் மராத்தியிலும் வழி கேட்டு வட்ஜல் சென்றடைந்தோம். அரசியல் கேலிகளுடன் மகாராஷ்ட்ராவின் சமூக அமைப்பைப் பற்றி எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். வழி கேட்கும் நாம் பதிலளிப்பவரின் பரிவைக் கண்டு உள்ளூரில் இருப்பதாகவே உணரலாம். மக்கள் தனித்து நம்மிடம் உரையாடுவதைப் போன்ற உணர்வுதான் எல்லோருக்கும் கிடைக்கும். ஆப்கானிஸ்தானிலோ, பாலஸ்தீனிலோ அமெரிக்கர் ஒருவர் வழி கேட்டாலும் ஒரு சாதாரண மனிதர் இப்படித்தான் பரிவுடன் பதில் சொல்வார் என்று பட்டது. மராட்டியம் மிகவும் இணக்கமான ஒரு இடமாகவே எனக்கு எப்போதும் தோன்றுவதுண்டு. அண்டை மாநில நீர், நிலத் தாவாக்களில் கூட பெரிதாக அரசியல் கோஷங்கள் கிடையாது. இப்படிப்பட்ட மாநிலத்தில் செல்வாக்கைச் செலுத்தும் சரத் பவார் போன்றவர்களுக்கு உலக ஊழல் வரைபடத்தில் மிக முக்கியமான இடம் உண்டு. விவசாயிகளின் தற்கொலைக்கு புதிது புதிதாக பொய்களைக் கண்டுபிடித்து உலகுக்குச் சொல்வார்கள். இவர்களின் பேராசையால் மக்கள் என்ன கஷ்டப்பட்டாலும் இவர்களுக்குக் கவலை இல்லை. இவற்றைப் பேசுவது இந்த நிலத்தைப் பற்றி பேசுவதுதான். மக்கள் மிகுந்த பேராசைக்காரர்கள் என்று கூட அரசியல்வாதிகள் சொல்லிச் சமாளிக்கிறார்கள்.



வட்ஜல் செல்லும் முன்பாக ஒரு இடத்தில் சுங்க வரி செலுத்தினோம். இவற்றைப் பற்றிய பேச்சுகளில் எனக்கும் அழகேசனுக்கும் கடுமையான வாதங்கள் நடந்தது. காரில் வந்த அழகேசன் கர்நாடகத்துக்கும் மகாராஷ்டிரத்துக்கும் இடையில் மட்டும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் toll வரி கட்டியிருந்தார். ஒரு பெரிய ஊரில் நுழையும் போது வரி, பின்பு வெளியேறும் போது வரி என்று எங்கெங்கும் வரி. toll என்பது தொல்லை என்ற தமிழ்ச் சொல்தான். இந்தோ ஐரோப்பிய மொழிகளில் எங்கும் இல்லாது தமிழில் மட்டுமே உள்ளது. திராவிட வேர்ச்சொல் அகராதியில் உள்ளது இந்தச் சொல். தொல்லை வரி தான். வாகனம் வாங்கும் போது ஆயுள் சாலை வரி, பின்பு ஒவ்வொரு லிட்டர் எரிஎண்ணை நிரப்பும் போதும் சாலை வரி. இவ்வளவு வரியையும் வாங்கி சாலை அமைக்காதவர்கள், பராமரிப்புக்கும் ஆக்கத்துக்கும் உபரியாக வரி வாங்குகிறார்களே என்ற கோபம் எனக்கு.



பாராமதிக்கு சென்று, அங்கிருந்து அஹமத் நகர் சென்று இரவு ஔரங்காபாத் செல்வதாகத் திட்டம். ஆனால் அதிக நேரமாகிவிட்டால் அஹமத் நகரிலேயே தங்கிவிடலாம் என்று எண்ணிக் கொண்டோம். பாராமதி சரத் பவாரின் மாவட்டம். கரும்பு வட்டம் என்றழைக்கப்படுகிறது. உழவு கடிகட்டியாக கரிசல் மண்ணைப் பெயர்த்துப் போட்டிருந்தார்கள். காளைகள் ஓங்குதாங்காக வண்டிகளில் கரும்பு ஏற்றிச் சென்றன. இது தவிர டிராக்டர்களும் லாரிகளும் கரும்பைச் சுமந்து செல்கின்றன.தரமில்லாத கரும்புக்கு அதிக விலை வாங்கித் தரும் ஒரு தரகராகவே அரசியலில் சரத் பவாரை நியமித்து விட்டார்கள் மராட்டியர்கள். கரும்பு வெட்டுக்கு வந்த கூலிகள் ஆங்காங்கே கூடாரம் அமைத்திருந்தார்கள். குழந்தைகள் வைக்கோல் பிரியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வைக்கோல் பிரியில் தான் முழுக் கூடாரமும். சில இடங்களை பச்சையாகவும், சில இடங்களில் நீலமாகவும் கால்வாய்களில் நீர் ஓடிக்கொண்டிருந்தது. இரண்டு ஆசைகள் பற்றிப் பேசிக் கொண்டோம். ஒன்று கால்வாயில் நீந்திக் குளிப்பது, இன்னொன்று சாலையோரக் கடைகளில் கரும்புச் சாறு வயிறும் முட்டக் குடிப்பது என்று. முதல் ஆசை நிறைவேற வில்லை, காரணம், கால்வாய்களில் இறங்குவதற்கான படித்துறைகள் இல்லை. இருக்கும் இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகம். கரும்புச்சாறு குடித்தோம். அதன் பின்பு வேணுகோபால் அவ்வளவு போதை நிலையை அடைவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அஹமத் நகர் வரும் வரை படப் பாடல்களை பாவனையுடன் பாடிக்கொண்டு வந்தார். துணைக்கு செல்வ புவியரசனும் சேர்ந்து கொண்டார். அவரின் பாவனைகள் மாணவிகள் மத்தியில் பிரபலம் என்று சொன்னபோது ஒப்புக்கொள்ளத் தோன்றியது. கலைஞனுக்கு பாவனைதான் முக்கியம் போல. வேணுகோபாலின் கதைகளில் வரும் சோகம் முற்றிலுமல்லாத உற்சாகமான வேணுவைப் பார்த்தோம். இவ்வளவு சுதந்திரம் இல்லாத ஒரு மனிதனுக்குள் கலை எதுவும் நுழைய முடியாது என்பதற்கு அவர் நல்ல உதாரணம்.



மாலை முழுவதும் அதிகமான தொல்லை வரியைச் செலுத்தியும் மோசமான சாலைகளிலேயே பயணித்தோம். அஹமத் நகரில் ஒரு விடுதியில் அடைந்து கொள்ளலாம் என்று தேடி ஒரு மட்டமான இடத்துக்கு அதிகமான வாடகை கொடுத்தோம். மராட்டியத்தில் விடுதி வாடகை பகல்கொள்ளை. அறைகளைச் சுத்தம் செய்யும் பழக்கமில்லை என்பது கூடுதல் கொடுப்பினை.



காலைப் பயணம் கொஞ்சம் இதமாக இருந்தது. மிசால் பாவ், வடை பாவ் பற்றி பேசிக்கொண்டே வந்தேன். வசந்தகுமார் மிளகாயை எப்படி மராட்டிய பாணியில் இடது கையில் வைத்துக் கடித்துச் சாப்பிட வேண்டும் என்று சொல்லிக்கொண்டு வந்தார். புத்தர் பத்மபாணி. மக்கள் மிளகாய் பாணியர். செல்வ புவியோ எந்த இடத்திலும் எதற்கும் தயார் என்ற பாவனையில் முகத்தை வைத்துக் கொள்வார். அவருக்கு இனிப்பு மிட்டாய்களைக் கண்டடைவதில் தான் ஆனந்தம். சாரதி அழகேசன் எங்கும் அரிசிச் சோறு என்று தேடி அலைந்தார். மகாராஷ்டிரத்தில் அரிசி உணவு மிகவும் குறைவு. இதற்கு நேர்மாறாக உத்தரபிரதேசத்திலும் பீகாரிலும் வங்கத்திலும் சத்திஸ்கரிலும் அரிசி உணவே அதிகம். காலை உணவாக காரமான மசாலுடன்(பாசிப் பயறு கூட்டு) பாவ் ( பண் ரொட்டி) உண்டோம். இந்தப் பகுதிகளில் உணவு காரம் அதிகம் என்றாலும் ருசி நன்றாக இருக்கும், ஆந்திரத்தைப் போலவே. இதற்குப் பின் சாப்பிட்ட எல்லா இடங்களுமே மிகுந்த சோதனையைத் தந்தது. நான் எச்சரித்தும் கேட்காமல் தாளி (அரை வேக்காட்டு அரிசியும் (சோறு அல்ல) சப்பாத்தியும் காய்கறிகளும்) உணவு வேண்டும் என்று சொல்லிப் பல இடங்களில் மாட்டிக் கொண்டோம்.



காலையில் தௌலதாபாத் கடந்து எல்லோராவை அடைந்தோம். தெலைதாபாத் இந்தியாவிலேயே மிகப் பாதுகாப்பான மலைக் கோட்டை இதுதான் முன்னாள் தேவகிரி. யாதவ அரசின் தலைநகர். யாதவர்களை வென்று இதைக் கைப்பற்றிய பின் இந்நகரால் கவரப்பட்ட துக்ளக் தனது தலைநகரை டெல்லியிருந்து இங்கு மாற்றினார். வேனில் வியாதிகளில் சிக்கி பயணத்திலேயெ பல்லாயிரம் பேர் மாண்டனர். கோடை நீர் வறட்சி காரணமாக உயிர் சேதத்துடன் துக்ளக் மீண்டும் டெல்லியையே தலைநகராக்கினார். தௌலதாபாத்தை மாலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று மேலேறிச் சென்றோம். அங்கிருந்து ஐந்து கிலோ மீட்டரில் எல்லோராவிற்கு (வேருள் என்று மராத்தியில் அழைக்கப்படுகிறது) குன்றுச் சாலையில் ஏறிச் செல்ல வேண்டும். காலையிலேயே வெய்யில் ஏறி விட்டிருந்தது. சாலையின் இரு புறங்களிலும் சிறிது பச்சை இருந்தாலும் வெயில் பட்டுத் தெறிக்கத்தான் செய்தது. சென்று சேர்ந்தவுடன் உணர்ந்தது, அவ்வளவாக வியாபாரிகள் தொல்லை இல்லை என்பது. ஆம் கோவில், சுற்றலாத் தளங்களில் நம்மைப் பணிய வைக்கும் தோரணையில் வந்து கெஞ்சி தொல்லை செய்வார்கள். இது பெரிய தர்ம சங்கடம். வியாபாரம் என்றால் வெறி இருக்க வேண்டும் போலிருக்கிறது. இந்தக் குகைகளில் நுழைய கோவில் நுழைவுப் போராட்டமெல்லாம் நடத்த வேண்டிய அவசியம் எப்பொழுதும் இருந்ததில்லை. காலமெல்லாம் திறந்தே கிடந்திருக்கிறது. எல்லோருக்கும் குறைந்த கட்டணம் தான் என்றாலும் கோடை விடுமுறையில் அதுவும் ஞாயிற்றுக் கிழமைக்கான கூட்டம் அங்கு இல்லை. உலக வரைபடத்தில் ஒரு முக்கியமான இடத்தில நிற்கிறோம் என்ற எண்ணம் உள்ளே நுழையும் வரையில் ஏற்பட வில்லை. முதலில் வலமிருந்து பார்க்கலாம் என்று திட்டம். குறிப்பாக எங்களில் யாரும் வலதுசாரியே கிடையாது. மொத்தம் முப்பத்தி நாலு குகைகள். இதில் பன்னிரண்டு புத்த குகைகள், பதினேழு இந்துக் குகைகள், ஐந்து சமணக் குகைகள்.



முதலில் புத்த குகைகளைக் காணச் செல்லலாம் என்று கிளம்பினோம். ஒவ்வொரு குகையின் வாசலிலும் குகையின் எண்ணை வெள்ளை பெயிண்டில் எழுதி இருந்தார்கள். முதல் குகை வலது ஓரத்தில் இருந்தது. முதலில் நீர் தொட்டியைப் பார்த்தோம். உள்ளே இருந்த எட்டு அறைகளைப் பார்க்கும் பொழுது எவற்றையோ சேமித்து வைக்கும் அறைகளைப் போல் இருந்தன. அவற்றின் குளுமையும் சாந்தமும் குடைவரைக் கோவில்கள், சமணப் படுகைகளில் மட்டுமே உணரக் கூடியது.



இரண்டாவது குகையில் பன்னிரண்டு தூண்கள் புத்தர் சிலைகளுடன் மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது குகையின் நுழைவாயிலிலேயே பத்மபாணி பெரிதாகக் காட்சி தருகிறார். அதுவும் தவிர, மைத்ரேயனைச் (எதிர்கால புத்தன் ) சுமந்து சிம்மாசனத்தில் காட்சி தருகிறார். மூன்றாம் நான்காம் குகைகளும், இரண்டாம் குகையின் வடிவிலேயே உள்ளன, ஆனாலும் கொஞ்சம் சேதம் அதிகம். இங்குதான் வசந்தகுமார் சொன்னார், பயலுகளுக்கு கல் அமையவில்லையே; தமிழகத்தைப் போல கல் அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று. ஆம், கொஞ்சம் கருங்கல்லும் மாக்கல்லும் கூடியது போன்ற கற்சிலைகள் உடைய ஆரம்பித்து விட்டன. இதில் அரசியல் சதி ஏதும் இல்லை.அபூர்வமாக முஸ்லிம் படைகளின் கைங்கர்யம் ஏதுமில்லை. எல்லோராவின் சிலைகளில் வண்ணப் பூச்சு இருந்திருந்ததற்கான அடையாளங்களும் தென்பட்டன. அதிலும், அதிகமாக வெள்ளை, நீலம், சிவப்பு வண்ணங்கள். உதிர ஆராம்பித்து பல நூற்றாண்டுகள் ஆகியிருக்கலாம்.



காலத்தால் எந்தக் குகை முன்னது என்பதில் சில சர்ச்சைகள் இருந்தாலும் பௌத்தக் குகைகளில் ஆறாம் எண் குகை தான் முதலாவது என்று அறியப்படுகிறது. கால வரிசைப்படி அடுக்கப்பட்டிருக்கிறது என்பதில் அறிஞர்களிடையே சர்ச்சை உள்ளது. ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து எட்டாம் நூற்றாண்டு வரை பௌத்தக் குகைகள் குடையப் பட்டிருக்கின்றன. பத்து விஹாரங்களை அதாவது தங்கிப் படிக்கும் அறைகளை, படிப்பதற்கும், தியானம் செய்வதற்கும், உண்ணவும் உறங்கவும் அமைத்திருந்தார்கள். இதில் உள்ள புத்தர் தாமரை மலர்களுடன் காட்சி தருகிறார். புத்தர் பாதம் என்பதே பரவசமான சொற்றொடராக மாறிய உணர்வு ஏற்பட்டது. மராட்டியர்கள் சிலர் கோவில் வழிபாடு போல புத்தரின் சிலையை வணங்கினர். அந்தக் குகை எதிரொலியில் புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி கேட்டுக் கொண்டிருப்பது போல காலம் தாண்டிய மனப் பிரமை வந்து போனது. பத்தாம் எண் குகை தான் பௌத்தக் குகைக் கோவில்களிலேயே மிகவும் பிரமாண்டமானது. அங்கிருந்த யாரோ என்னிடம் சேப்பல் என்ற கிறிஸ்தவ தேவாலயத்தின் வார்த்தையை உபயோகித்தார்கள்.புவியரசன் வஜ்ரபாணி, பத்மபாணி என்பதைப் பற்றி தகவலறிவோடு சிலாகித்துக் கொண்டிருந்தார்.



தம்மம் என்ற சொல் எதிரொலிக்கும் என்று எதிர் பார்ப்பு கூட எழுந்தது. பத்தாம் எண் குகையை விஸ்வகர்மா குகை என்று அழைக்கிறார்கள். அப்படியே புத்தரின் தலைக்கு பின்னே போதி மரத்தை வடித்திருந்தார்கள். கல்லிலே மர வேலைப்பாடு போல வரி வரியாக வளைவுகள் செய்திருந்தார்கள். வளைத்து நிறுத்திய உத்திரங்கள், மரச்சட்டங்கள் போல பாறைகளில் வடிவமைத்துள்ளார்கள். அரங்கு போல மேல் மாடம் அமைத்து இருந்தார்கள். அங்கிருந்து கீழ் உள்ளவற்றைப் பார்ப்பதும் ஒருவிதமான அனுபவம். இசை அரங்கம் என்று அழைத்தார்கள். ஆனால் இசையை பௌத்தம் போஷித்ததா என்ற சந்தேகத்துடன் வெளியே வந்தோம். பதினோராவது குகை இரண்டு தளங்கள் கொண்டது. தோ தள் என்று அழைக்கிறார்கள். பன்னிரெண்டாவது குகையை தீன் தள் அதாவது மூன்று தளங்கள் உள்ள குகை என்று சொல்கிறார்கள். சுவர்களில் ஐந்து, ஏழு போதிசத்வர்களின் உருவங்களை செதுக்கியிருந்தார்கள்.



குகைகள் உள்ளே அமர்ந்தும் படுத்தும் நகர்ந்தும் ஒவ்வொரு குகையாக பயணித்தோம்.வசந்தகுமாரிடம் சொன்னேன், இந்த குகைகளைக் குடைந்து சிலை செய்வதற்கு முன்பு புத்தரிடம் சென்று அந்தக் கலைஞன் என்ன கேட்டிருப்பான்? அதற்கு புத்தர் என்ன சொல்லியிருக்கக் கூடும் என்று ஒரு காலத் தொடர்புகளற்ற கற்பனையை எண்ணிப் பார்த்தால் ஒன்று சொல்லலாம் என்றேன். ஆம் தர்மம் எவ்வளவு பெரிது என்று அந்தக் கலைஞன் கேட்டிருக்கக் கூடும். அதற்கு புத்தர் நீ எவ்வளவு செயல் செய்கிறாயோ அவ்வளவு பெரிது என்று சொல்லியிருக்கலாம். அதன் விளைவு தான் இந்தக் குகைக் கலை. கலைஞனின் தர்மம் அவன் ஆயுளை விடப் பெரிதாக காலத்தை வென்று அங்கேயே நின்று கொண்டிருப்பதைத்தான் புத்தர் தம் சொல்லில் தர்மம் என்று சொல்லியிருக்கக் கூடும் என்றேன். நண்பர்கள் உற்சாகமாக ஆமோதித்தனர். செல்வ புவியரசனோ வைதீக எதிர்ப்பாளி, சமூகப் புரட்சியாளன் என்ற புத்தரின் அம்சம்தான் தன்னைக் கவர்ந்துள்ளதாகச் சொன்னார். வேணுகோபாலோ இங்கும் அங்கும் சென்று ஒளியைக் குகைக்குள் எவ்வாறு செலுத்தி காட்சியாக்க யூகித்துள்ளான் கலைஞன் என்று வியந்து கொண்டிருந்தார். அழகேசன் தன்னுடைய காமிராவில் குகைச் சிலைகளை மட்டும் கணக்கிடாமல், அதனூடாக மக்களின் நகர்வையும் சேர்த்துப் படம் எடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கு மனிதர்களின் பங்கு இல்லாமல் தூய இடமாகவோ பொருளாகவோ காண்பிப்பதில் நம்பிக்கை இல்லை போல.



பாறைகளை களிமண்ணைப் போல வெட்டியும் வளைத்தும் செய்திருக்கும் விளையாட்டு ஒருபுறம் பிரமிப்பைத் தந்தது என்றால், இன்னொரு புறம் புத்தன் என்ற புரட்சியாளனின் ஆன்ம ஞானம் காலங்களினூடாக எப்படியெல்லாம் மதம் கலைகள் இலக்கியம் என்று மனித முயல்வில் விரித்துக் கொண்டே போகிறது என்று மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. பசிக்கக் கூடாது என்று மனதில் நினைத்துக் கொண்டேன். தொடர்ந்து ஒவ்வொரு பௌத்த குகையிலும், மாடத்தில் ஏறியும் குறுகலான பாறைப் பாதைகளில் நுழைந்தும் வெளியே வந்து கொண்டிருந்தோம். ஒவ்வொரு முறையும் மேலும் மேலும் என்று சவால் விடும் வண்ணம் குகை பிரம்மாண்டமாக வந்து கொண்டிருந்தது. சில குகைகளில் வௌவால் பறந்ததும் அவற்றின் எச்ச வீச்சமும் எங்களுக்கு எந்த சோர்வையும் தரவில்லை. நீர் தேக்கி வைக்கப்பட்டிருந்த பாறைத் தொட்டிகளும் நீர் நிழலின் குளுமையான உணர்வே போதும் பருகத் தேவையில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. நிச்சயமாக இப்படிப்பட்ட பள்ளியறைகளில் கல்வி கற்றிருந்தால் யாரும் இந்த அளவுக்குக் கல்வியைக் கசப்பானதாக உணர்ந்திருக்க மாட்டார்கள். தர்மம் என்ற பேரியக்கத்தை காலத்தால் அளக்கும் உணர்வு நிறைவாக இருந்தது. பௌத்தக் குகைகள் பொதுவாக வகுப்பறைகள் அல்லது சங்கம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியதற்குக் காரணம், புத்தர் என்ற மகா குருவின் சிலைகள்தான் என்று தோன்றுகிறது. நியாயம் சரியாகவே வழி நடத்துகிறது என்று எண்ணிக் கொண்டேன். செயல்கள் வழியாகவே கலைஞன் எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபித்து இருந்தான். ஐந்து நூற்றாண்டுகள் தொடர்ச்சியான செயல்பாட்டில் இவ்வளவு பெரிய கலைப் பாரம்பரியம் உருவாகியுள்ளது என்று அறிய முடிகிறது. அவன் என்ன உண்டான், என்ன சம்பளம் பெற்றுக் கொண்டான், அவனை யார் ஆதரித்தார், நல்லவர்களா, கெட்டவர்களா என்பதெல்லாம் பொருள் இழந்து ஒரு பெருநிகழ்வை நிகழ்த்தி சென்றிருக்கும் கலைஞன்தான் எத்தனை மகத்தான செயல்களை கனவு கண்டிருப்பான். எத்தனை நூற்றாண்டுகளை கற்பனை செய்திருப்பான். இல்லை அவன் மரணமின்மையை மட்டுமே நம்பி வாழ்ந்திருப்பான்.



எங்கே தொடங்கி எங்கே முடியும் என்று வேணுகோபால் பாடிக் கொண்டிருந்தார். ஒளி வரும் திசையைப் பற்றிய கணிப்புகள், ஒலியைக் கட்டுப்படுத்தும் தந்திரங்கள் என்று பலவற்றிலும் மூளையும் ஆன்மாவும் சரிவிகிதத்தில் கலந்து விளையாடியிருக்கிறது. அவற்றுடன் முழு உடல் பலமும் இசைந்திருக்க வேண்டும். பனை மரத்தை வேரோடு பிடுங்க முடியுமா என்று அந்தக் கலைஞனிடம் கேட்டால் முடியும் என்று செயலால் நிரூபித்திருப்பான்.







கி பி அறுநூறிலிருந்து எண்ணூறு வரை குடையப்பட்ட சைவ வைணவக் குகைகளுக்குச் செல்வதற்கு தயாரானோம். பதிமூன்றாம் எண் குகை எங்களைக் கவராததற்குக் காரணம் பெரும்பாலும் வெற்று கட்டிடங்கள் போல் அரங்கமும் ஆங்காங்கே சிலைகளும் இருந்தது தான் என்று நினைக்கிறேன். இது தவிர அடுத்து என்ன இருக்கப் போகிறது என்று கொஞ்சம் மந்தமாக இருந்து விட்டோம். பதினாலாம் குகையில் என்ன இருக்கிறது என்று ஆரம்பித்த போது தான் விஷயம் இனிமேல்தான் துவங்குகிறது என்று தெரிந்து கொண்டோம். கங்கை யமுனையின் பெண் உருவச் சிலைகள் நுழைவாயிலில் வரவேற்கும் விதமாக இருந்தன. உள்ளே சப்த கன்னிகளின் உருவங்களும் அவர்களின் மடிகளில் தவழும் மழலைகளும் உயிரோட்டம் என்றால் என்ன என்பதை காட்ட ஆரம்பித்தன. வளமான முலைகளும் நலமிக்க குழந்தைகளும் வரலாற்றின் மறுபக்கம் என்று தோன்றியது. பதினைந்தாவது குகைத் தாழ்தளம் வெறும் தளமாக இருந்தாலும் மேல் அடுக்கில் உள்ள தசாவதாரச் சிலைகள் மிகப் பிரமாண்டமாக இருந்தன. இந்தக் குகைகள் பெரும்பாலும் சிவனுக்கு என்றாலும், பதினைந்தாவது குகை மட்டும் முழுவதுமாக விஷ்ணுவுக்கு என்று தனியாக இருக்கிறது. இந்தக் குகை முடிக்கப்படாத பௌத்த குகைகளில் இருந்து ஆரம்பித்திருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். இதில் நடராஜரின் பெரிய நாட்டியச் சிலையும் உண்டு.



பதினாறாவது குகை என்பது குகையே அல்ல. மலையைக் குடைந்து ஒரு கோவில் வளாகம் அமைத்திருக்கிறார்கள். கைலாசநாதர் ஆலயம் என்றழைக்கப்படும் இந்தக் கோவில் உலக அதிசயம் என்றுதான் சொல்வேண்டும். இது போன்ற ஒரு கற்பனையை எவ்வாறு தொடங்கியிருக்கக் கூடும் என்று கூட யோசிக்க முடியவில்லை. ராஸ்திரகூட மன்னன் கிருஷ்ணன் 756-773 இல் துவங்கியிருக்கலாம் என்று சொல்கிறார்கள். 250,000 டன் பாறையை குடைந்தெடுத்து நூறு வருட உழைப்பைச் செலுத்தியுள்ளார்கள். இடது புற முதல் தளத்தில் அதிகக் கூட்டம் வந்து சென்றது. பாறை கொஞ்சம் வழுக்கலாக இருந்ததால் கீழே விழுந்தேன். அழகேசன் கிழவிகளை விரட்டி விரட்டி படம் எடுத்துக் கொண்டிருந்தார். பெரும்பாலும் ஆந்திரத்தில் இருந்து மக்கள் வந்திருந்தார்கள். இது தவிர, சீரடி சென்று திரும்பும் கூட்டமும் ஒரு மோது மோதிச் செல்கின்றனர். கோவிலன் பின் புற மலை உச்சியில் ஏறி நின்று சில இளைஞர்கள் எட்டிப் பார்த்தார்கள். அந்த உயரம் அச்சம் தருவதாகவும் ஆபத்தானதாகவும் பட்டது. இஸ்லாமியர்கள் சிலர் இயல்பாக உள்ளே சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். தௌலதாபாத் அவுரங்கபாத் இஸ்லாமிய நகரங்கள் என்பதே காரணம். வெள்ளைப் பூச்சு எல்லாச் சிலைகளிலும் உதிர்ந்து விட்டன. ஆனாலும் கற்களில் உள்ள விவரணையே முழுமையாக இருந்தது. இது ஒன்றே உச்சம் என்று சொல்லலாம். வளாகத்தின் தென் பகுதியில் நிறைய சேதாரம். யானைகள் தும்பிக்கை இழைந்து நிற்கும் காட்சி கொஞ்சம் வலிக்கத் தான் செய்கிறது.



இருபத்தி ஒன்றாம் எண் குகை தான் கி பி ஐநூறின் இறுதி பகுதில் செய்யப்பட்டிருக்கலாம் என்று கணக்கிடுகிறார்கள். நதிப் பெண் தெய்வங்களும் மிதுன உருவங்களும் பொறிக்கப்பட்ட வாயில்களும் உள்ள இந்தக் குகை கொஞ்சம் பழமையாகத் தான் தோன்றியது.



குகை இருபத்தி ஆறும் இருபத்தி ஏழும் அடைக்கப் பட்டு விட்டன. இருபத்தி எட்டு, இருபத்தி ஒன்பதாம் குகையில் தான் இதற்கு வழி அமைத்திருந்தார்கள். அங்கு செல்வது ஆபத்தானது என்று சொன்னார்கள். பாறைகளில் பெரிய தேனீக் கூடுகள் கரும்பந்து போல இருந்தன. ஆனால் என்ன, குகை இருபத்தி ஒன்பது வந்த பின்பு சிவனாதிக்கம் என்பதைக் கண்டு கொண்டோம். சிவ பார்வதி விளையாட்டு, சூரர் வதம், காளை அடக்குதல் என்று முழுவதும் தென்னிந்தியாவின் சிற்பப் பாணிகளே இருந்தன. ஒரு விசேசத்தை வசந்தகுமார் சொன்னார். எலும்புக்கூடு உடலுடன் வயோதிகத் தலையுடன் காதில் சவுடித் தோடு அணிந்திருந்த ஒரு பெண்ணைப் பார்த்துச் சொன்னார், இது காரைக்கால் அம்மையார் என்று. உறைந்து விட்டோம். ஆம், கலாரசிகரும் தமிழ் எழுத்தாளருமான கி.அ. சச்சிதானந்தம் இதை முதன் முதலில் கண்டு சொன்னதாகவும் இப்பொழுதும் எல்லோராவின் கலை விமர்சகர்களுக்கு இது தெரியவில்லை என்றும் சொன்னார். காரைக்கால் அம்மையாரைப் பார்த்த இன்பம் மேலும் மேலும் என்று ஆவலைத் தூண்டியது. மாலை வெயில் சிலைகளின் மார்புகளில் பட்டு தெறித்துக் கொண்டிருந்தது.



பின்பு சமணக் குகைகளுக்குச் சென்றோம். இந்திரசபை மற்றும் மகாவீரரின் சிலைகள் அற்புதமாக இருந்தன. இந்தக் குகைகள் சிறிதாக இருந்தாலும் சிலைகளில் உள்ள தெளிவு மற்றும் ஒளியூட்டம் விசேசம்.



திரும்பி வந்து என் மனைவியிடம் புகைப் படங்களைக் காட்டிய போது சொன்னாள், இந்தியாவில் இஸ்லாமியர் வருகைக்குப் பின்பு முக்காடு போடும் வழக்கம் வந்து இந்தியப் பெண்களின் அழகு குறைந்து விட்டது என்று. அதைவிட, இப்பொழுது வந்திருக்கும் மேற்கு மோகம் என்பதில் ஆண் தன்மையுடையவர்களாக செயற்கையாக பெண்ணை மாறுவது பற்றி மிகவும் வருத்தப் பட்டாள்.



வகைகள்

அரசியல் கலைச் சொற்கள் கானியல் கிளிவாதில் சமச்சீர் கல்வி சமூகவியல் சிறுகதை சுற்றுச்சூழல் சொற் பிறப்பியல் தமிழக வேளாளர்களின் வரலாறு தமிழறிஞர் வரிசை தலையங்கம் திரையாளுமைகள் நகுதற் பொருட்றன்று பசுமைப் புரட்சி பயணம் மனநிழல் முகப்பு மொழியியல் மொழியும் முன் வணிகம் Uncategorized

எழுத்தாளர்கள்

அ.கா. பெருமாள்அபராஜிதன்அழகேச பாண்டியன்ஆசிரியர்இராசேந்திர சோழன்இராம கிஇளங்கோ கல்லானைஇளவேனில்எம்.கோபாலகிருஷ்ணன்எஸ்.ஆனந்த்எஸ்.இராமச்சந்திரன்கரு.ஆறுமுகத் தமிழன்கே.ஜெயராம்செல்வ புவியரசன்ஜெயமோகன்பாதசாரிபாமயன்மகுடேசுவரன்.© 2011 தமிழினி

Log in . 60 queries. 0.221 seconds.

புதன், 20 ஜூலை, 2011

Kazhumaram.

கழுமரம் My Photo




கழுமரம் என்பது ஒரு கொலைக்கருவி. கூர்மையாக செதுக்கபட்ட மரம் ஒன்றினில் குற்றாவளியின் ஆசனவாயை சொருகி விடுவார்கள்; அவன் கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள்ளேறி இறந்து போவான். வலி தாங்காமல் அவன் இரவெல்லாம் கூப்பாடு போடுவதும் செத்த உடலை பறவைகள் கிழித்து உண்பதையும் பற்றி நிறைய கேள்விபட்டிருக்கிறேன்.









இது போன்ற தண்டனை முறை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்திருக்கிறது. இதை Impalement என்று சொல்வார்கள். கவுண்ட் விளாட் நிறைய ஆட்களை கழுவேற்றியதால் அவர் விளாட் தி இம்பேளர் (Vlad the Impaler ) என்று அழைக்கபட்டார். அவர் தான் பின்னாளில் டிராகுலாவாக உருமாறினார்.









கழுவில் ஏற்றுதல் என்ற தண்டனையை பற்றிய சிறுவயதில் நிறைய கதை சொல்வார்கள். கழுமரம் பூத்தது என்றும் கழுமரத்தில் நெருப்பு பற்றிக் கொண்டது என்றெல்லாம் விந்தையான செய்திகள் கூட அறிந்திருக்கிறேன்

திருடர்கள் பிடிபட்டால் அவர்களை கழுவில் ஏற்றுவார்கள் . அப்படி பிடிபட்டு செத்து திருடனின் உடலை தின்ன கழுகுகள் வந்து சேரும் என்றும் அவன் உடலை யாரும் எடுக்கவே முடியாது என்ற கிராமிய கதைகள் சொல்கின்றன.









கழுகுமலை கோவிலில் சேவலை கழுவில் ஏற்றுவதை சடங்காக செய்வதை கண்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் எட்டாயிரம் சமணர்கள் கழுவில் ஏற்றி கொல்லப்பட்டார்கள் என்று சரித்திர குறிப்புகள் கூறுகின்றன. ஆவுடையார் கோவில் ஒவியம் ஒன்றில் கழுவேற்றம் சித்திரமாக வரையப்பட்டிருக்கிறது. கழுமரத்தை பற்றி கி.ராஜநாராயணன் தனது கதையில் மிக விரிவாக எழுதியிருக்கிறார்.









இப்படி அங்கும் இங்கும் கழுமரம் பற்றி அறிந்த ஆசையில் ஒருமுறையாவது கழுமரத்தை நேரில் பார்த்துவிட வேண்டும் என்று தோன்றிக் கொண்டேயிருந்தது. ஆனால் எங்கேயும் கழுமரம் இருப்பதாக எவரும் சொல்லியதேயில்லை. மதுரை திருமங்கலத்தில் ஒரு கழுமரம் முன்பு இருந்ததை கண்டிருப்பதாக ஒரு நண்பர் சொன்னார். இன்னொருவர் சிவகரியில் ஒரு கழுமரம் இருந்து முறிந்துபோய்விட்டது என்றார்.









சமீபத்தில் ஈரோடு சென்றிருந்த போது வரலாற்று அறிஞர் புலவர் இராசுவை தேடிச்சென்று நண்பர்களுடன் சந்தித்தேன். கொங்குமண்டலத்தின் நூற்றாண்டுகால வரலாற்றை துல்லியமாக அறிந்தவர். சிறந்த கல்வெட்டு ஆய்வாளர். அவரிடம் உள்ள சரித்திர சான்றுகளும் ஆவணங்களும் கொங்கு வரலாற்றினை ஆய்வதில் பெரும்பங்கு வகித்திருக்கின்றன. கொங்கு மண்டலம் குறித்த அவரது ஆய்வேடுகள், புத்தகங்கள் சிறப்பானவை. அவரை நேரில் சந்தித்து பேசுவது மிகுந்த சுவாரஸ்யமானது. எண்ணிக்கையற்ற தகவல்கள், வியப்பூட்டும் செய்திகள், உண்மைகள் அறிந்தவர். எளிமையான மனிதர்.









அவரோடு பேசிக் கொண்டிருந்த போது விஜயமங்கலத்தில் உள்ள சமண கோவில் பற்றி விரிவாக எடுத்து சொல்லிக் கொண்டிருந்தார். பேச்சின் ஊடாக அவர் தன் சேமிப்பில் இருந்த ஒரு பழைய புகைப்படம் ஒன்றை காட்டி கழுமரம் பாத்திருக்கிறீர்களா என்று கேட்டார். எங்கேயிருக்கிறது என்று ஆர்வத்துடன் கேட்டேன். இங்கே ஈரோட்டில் தான் உள்ளது. அநேகமாக நான் அறிந்தவரை தமிழ்நாட்டில் இங்கே மட்டுமே கழுமரம் இருக்கிறது என்று சொன்னார்









உடனே காணவேண்டும் போலிருந்தது. இரண்டு மணி நேரம் புலவர் ராசுவோடு பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பி காளியங்கராயன் கால்வாயின் அருகில் வளையல்கார தெருவில் உள்ள அய்யனாராப்பன் கோவிலில் இருந்த கழுமரத்தை காண்பதற்காக சென்றோம்.









நாங்கள் சென்ற நேரம் அந்த பகுதியில் ஒரு வீட்டில் வயதானவர் இறந்து போயிருந்ததால் கோவிலை மூடியிருந்தார்கள். இவ்வளவு தூரம் வந்து கழுமரத்தை பார்க்காமல் போகக் கூடாது என்று வெயிலில் நின்றபடியே இருந்தோம். நண்பர் பாபுவும் கிருஷ்ணனும் யாரிடமோ போனில் பேசினார்கள். அரை மணி நேரத்தில் எங்கிருந்தோ சாவியுடன் ஒருவர் வந்து கோவிலை திறந்து காட்டினார்.









ஒரு பீடத்தில் இருந்த அந்த கழுமரம் பனைமரத்தால் ஆனது. ஆறடிக்கும் குறைவான உயரம். பனஞ்செதில்கள் தேய்ந்து போயிருக்கின்றன. சிலுவை போன்ற வடிவில் குறுக்கு சட்டம் போடப்பட்ட அந்த கழுமரத்தில் இரண்டு இரும்பு சங்கிலிகள் இணைக்கபட்டிருந்தன. கழுமரத்தை இப்போது காத்தவராயன் என்று வணங்குகிறார்கள்.









நாங்கள் உச்சி வெயிலில் கழுமரத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்ததை கண்டு கோவில் நிர்வாகி இது உங்க குலசாமியா என்று கேட்டார். இல்லை இதை பார்க்க வந்திருக்கிறோம் என்று சொல்லி அதன் அருகில் நெருங்கி சென்று வியப்போடு பார்த்தபடி இருந்தோம்









கைகளால் கழுமரத்தை தொட்டு பார்த்தேன். பனைமரம் செதுக்கபட்டு அப்படியாக்கபட்டிருப்பது புரிந்தது. எந்த மனிதன் அதில் கழுவேற்றப்பட்டான். இதன் முன்பு எங்கேயிருந்தது. எத்தனை ஆண்டுகளாக இந்த மரம் இருக்கிறது என்று ஏதேதோ யோசனைகள் பீறிட்டபடியே இருந்தன









சந்தனம் குங்குமம் வைக்கபட்ட போது அந்த கழுமரத்தில் படிந்த கண்ணுக்கு தெரியாத குருதிக்கறையை உணர முடிந்தது.









தண்டனைகளுக்கும் குற்றங்களுக்கும் உள்ள தொடர்பை கவனிக்கும் போது உடலை ஒடுக்குவது அல்லது உடலை வதைப்பது தான் தண்டனைகளின் ஆதாரம். குற்றங்களுக்கும் தண்டனைக்கும் நேரடியான தொடர்பு எதுவுமில்லை. பலநேரம் தண்டனை குற்றத்தை விடவும் கொடூரமானது. மனித உடல் எப்படி போகத்திற்கான கருவியாக இருக்கிறதோ அது போலவே வதைக்கான நிகழ்வெளியாகவும் உள்ளது. எந்த இடத்தில் எப்படி அடித்தால் மனிதன் உச்சபட்ச வலி கொள்வான் என்பதை தண்டனை முறைகள் அறிந்திருக்கின்றன.









கொலைக்கருவிகளின் வரலாற்றை வாசிக்கையில் மனிதமனதின் புரிந்து கொள்ள முடியாத குருரங்களையும் விசித்திரங்களையும் காண முடிகிறது.









புலவர் ராசு 800 வருடங்களுக்கு முன்பாக உள்ள கழுமரம் அது என்றார். கொலைக்கருவிகள் கடவுளாவது உலகெங்கும் நடைபெற்று வரும் தொடர் நிகழ்வு. கழுமரமும் அப்படிதான் கடவுளாகியிருக்கிறது.









நாங்கள் பார்த்து கொண்டிருந்த போது ஒருவர் அந்த கழுமரத்தை வணங்கியபடியே அடுத்த சாமியை தேடிச் சென்றார்.









ஆயுதங்களை சொல்லி என்ன செய்வது தண்டனையை முடிவு செய்வதும் செயல்படுத்துவதும் மனிதன் தானே.